Wednesday 25 December 2019

குழந்தைகளுடன் நான் – இனியன் (4)


ரு பள்ளியில் மதியம் முதல் குழந்தைகளுடன் மைதானத்தில் விளையாண்டு முடித்து மாலை வெயில் மங்கும் வேளை. பேருந்து வருகைக்காக குழந்தைகள் அனைவரும் மைதானத்தில் காத்திருக்க, அவர்கள் செல்லும் வரை அங்கேயே இருக்கலாம் எனச் சொல்லி நானும் காத்திருந்தேன்.

அப்போது நான்கைந்து பெண் குழந்தைகள் அருகே வந்தனர். அவர்கள் அனைவருமே பத்தாம் வகுப்பும் பதின் பருவத்து துவக்கநிலையிலும் இருந்தனர். முதலில் ஒருவர் “மாமா இவ உங்கக்கிட்டே ஒன்னு பேசணுமாம்” எனச் சொல்ல, அருகே நின்றிருந்தவளிடம் என்னவென்றுக் கேட்டேன். “உங்களை எப்படி வேணாலும் கூப்பிடலாம்னு சொன்னீங்கல, அதனால உங்களை அப்பான்னு கூப்பிடட்டா” என்றாள். தாராளமாக கூப்பிட்டுக் கொள் எனச் சொல்லியவுடன் வெடித்து அழத் துவங்கினாள். அவளை சமாதானம் செய்ய இருவர் சற்று விலக்கி அழைத்துச் செல்ல, அவள் அழுகைக்கான காரணம் கேட்டேன். “அவளது தந்தை இறந்து தற்போது தான் 3 மாதங்கள் ஆகிறது. இந்த மூன்று மாதத்தில் இன்றுதான் அவள் சிரித்தாள், எங்களுடனும் விளையாடினாள்” என்றனர்.

மிக்க நெகிழ்ச்சியும் மகிழ்வாகவும் உணர்ந்து மகளை மீண்டும் அருகே அழைத்து ஆறுதல் கூறி எனது எண்ணைக் கொடுத்து அவ்வப்போது பேசி தொடர்பில் இருக்கச் சொன்னேன்.

அதன் பிறகு அவள் இருமுறை மட்டுமே தொடர்பு கொண்டாள். அந்த இருமுறையும் அழுதபடிதான் பேசினாள். “அம்மா திட்டிகிட்டே இருக்காங்க. வேறு கல்யாணம் செய்துகொள்ளப் போறாங்கலாம். கடை எண்ணில் இருந்து பேசுகிறேன். உங்களுடன் பேசுவது தெரிந்தாலும் என்னை அடிப்பாங்க.” இதுதான் இறுதியாக அவள் பேசியது. பிறகு அவளைப் பற்றி விசாரித்தும் சரியானத் தகவல் பெற முடியவில்லை.

ஏனென்றால் அவள் வீடு நெய்வேலி தாண்டி ஒரு காலனியில் இருக்கிறது அதனால் கண்டுபிடித்து விசாரிக்க தாமதமாகிவிட்டது என்றனர் நண்பர்கள். ஆனால் அந்தக் குடும்பம் தற்போது எங்கோ சென்று விட்டதாம். எங்கு என்று யாருக்கும் தெரியவில்லை என்பதுதான் பதிலாக வந்தது.

இந்தச் சம்பவம் நடந்து ஆகிற்று மூன்று வருடங்கள். ஆனால் இதே போன்ற அழைப்புகள் வெவ்வேறு நிகழ்வுகளில் வந்துக் கொண்டேதான் இருக்கின்றன. ‘உங்களை நான் சித்தப்பா எனக் கூப்பிட போகிறேன்’ என்றாள் பதின் பருவத்து குழந்தை ஒருத்தி. காரணம் தினமும் காலை அவளை அவர்தான் பள்ளிக்கு அழைத்து வருவாராம். அப்படி ஒருநாள் அவளை பள்ளியில் விட்டுச் செல்லும் வேளையில் விபத்தில் சிக்கி இறந்திருக்கிறார். அதிலிருந்து அவள் மீளவே நாட்கள் ஆனது என்றனர்.

இதே பதின் பருவத்து குழந்தை ஒருவன் கடிதம் எழுதியிருந்தபோது “அன்புள்ள இனியன் அப்பாவிற்கு” எனத் துவங்கியிருந்தான். அந்த மகனுக்கு பதிலும் எழுதியிருந்தேன். ஆனால் பதிலுக்கான பதில் தான் கிடைக்கவில்லை இன்று வரை.

இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்துக் கொண்டேதான் இருக்கிறது. ஒருநாள் முழுக்க இவற்றைப் பற்றியெல்லாம் சிந்தித்தபடியும நண்பர் ஒருவருடனும் உரையாடிய போது உணர்ந்த விசையம் ஒன்று இருக்கிறது என்றால் அது பதின்பருவத்தின் துவக்க நிலையில் இருக்கிற குழந்தைகள் சந்தித்துக் கொண்டிருக்கும் பல சிக்கல்களில் முக்கியமான ஒன்றாக உறவுகளைக் கையாள்வதும், உறவுகளிடம் உரையாடுவதிலும் உள்ள சிக்கல்களும், அவற்றை இச்சமூகம் எப்படியெல்லாம் புரிந்து கொள்கிறது என்பதை விட எவ்வாறெல்லாம் புறக்கணித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் விளங்கிற்று.

பதின்பருவத்து குழந்தைகள் பலர் தவறுகள் செய்கிறார்கள். ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். போதைப் பழக்கங்களுக்கு ஆளாகிறார்கள். குற்றச் செயல்களுக்கு துணைப்போகிறார்கள் அல்லது அவர்களே அதனை முன்னின்று செய்கிறார்கள் என்றெல்லாம் பொதுப்படையானக் குற்றச் சாட்டுகளை நாம் அனைவரும் சொல்லிகொண்டிருக்கும் அதேவேளையில் அவை அனைத்துக்குமான அடிப்படையாக உறவுமுறைகள்சார் உரையாடல் மற்றும் நட்பு முறையிலான உரையாடல்களை கையாள்வதற்கு இந்த அமைப்பில் செயல்வடிவத்தை நாம் உருவாக்கி வைத்திருகிறோமா என்றால் அதற்கான பதிலகள் என்பது கேள்விக்குறி தான்.

“அவன் எப்போதும் ரொம்ப மூடியாவே இருப்பாங்க. ஆனால் பாருங்க உங்ககிட்டே இலகுவா ஒட்டிகிட்டு அத்தனை இயல்பாய் விளையாடுறான்” என எட்டாம் வகுப்பு படிக்கும் குழந்தையைப் பார்த்து அப்பள்ளி ஆசிரியர் வருத்தப்பட்டுக் கூறினார்.

“அவனிடம் நீங்கள் ஆசிரியராக பழகுகிறீர்களா? அல்லது அவனுக்கு பிடித்த உறவாக பழகுகிறீர்களா? அவன் உங்களை எப்படி அழைக்கிறான்?” என்றேன்.

“சார் என்றுதான் அழைக்கிறான். அப்படின்னா ஆசிரியராகத்தான் நடந்துக் கொள்கிறேன்” என்றார் ஆசிரிய நண்பர்.

“அப்படியென்றால் இன்றுமுதல் அவன் உங்களை அவனது விருப்படி அழைக்க அனுமதி தாருங்கள். அவனுக்கு மட்டுமல்ல உங்கள் குழந்தைகள் அனைவருக்கும் அப்படியான அனுமதியை தாருங்கள்” என்றேன்.

அவரும் அனுமதி கொடுத்தார். அக்குழந்தை ஆசிரியரை அழைத்தான் தாத்தா என.

அடுத்த சில மாதங்களில் அதே ஆசிரிய நண்பர்,” இப்போவெல்லாம் நிறைய மாற்றங்கள் அவனிடம் படிப்படியாக அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்கிறான். நிறைய சுறுசுறுப்பும் பெற்றுள்ளான். நல்ல முன்னேற்றம்.” என்றார்.

அவ்வளவுதான் புரிதல். இந்தச் சமூகம் எப்போதும் ஏதோவொரு உறவுகளின் உரையாடல் மற்றும் உணர்வுகள், செய்கைகள் என பின்னிப்பிணைந்துதான் இருக்கிறது. அதனை உணர்ந்து, பதின்பருவத்து துவக்கநிலை குழந்தைகளை மையப்படுத்தி செயல்படும் அமைப்பு ஒன்றை அரசாங்க அளவில் கட்டமைக்க வேண்டியத் தேவை நமக்கு இருக்கிறது.

-    பயணங்கள் தொடரும்

No comments:

Post a Comment