Wednesday 25 December 2019

வன்புணர்வு தேசம் - பாரதி


மீபத்தில் ஐரோப்பிய நாடுகளில் வெளியிடப்பட்ட பயணங்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை இந்தியாவுக்கு பயணம் செல்லும் பெண்களுக்கென்று சிறப்பு வழிகாட்டுதல்களை கொடுத்திருக்கிறது. என்ன இருந்தாலும் தங்கள் பெண்கள் இல்லையா, வன்புணர்வு தலைநகருக்கு போகும்போது கவலை வரத்தானே செய்யும்?
இந்தியராக பெருமைப்பட்டுக்கொள்வோமா இதற்கு?
வன்புணர்வு எல்லா ஆண்மய்யப்பட்ட சமூகத்திலும் நடைபெறுகிறது. ஆனால் இந்திய சமூகத்தில் அது கொடூரத்தின் உச்சத்தை தொட்டிருக்கிறது. இதற்கு காரணம் சாதியும் ஆணாதிக்கமும் பிணைந்து இறுகிப்போயிருப்பதே. இந்திய ஆணாதிக்கத்துக்கு பெண்ணின் சம்மதம் ஒரு பெரும் பிரச்சினை. அத்துடன் சாதியும் முக்கிய பங்கு வகிக்கிறது. வன்புணர்வு நடந்தால் அதற்கான சமூக எதிர்வினையும் சாதி மற்றும் வர்க்கம் சார்ந்தே இருக்கிறது. திருநராக இருந்தால் அவ்வளவு தான். மாட்டுக்கு கிடைக்கும் மரியாதை கூட கிடைக்காது.

சமீபத்தில் நடந்த சம்பவங்களை ஒப்பிட்டு நோக்கினால், ஏன் இந்திய சமூகத்துக்கு ;எல்லா ரேப்பும் ரேப்பல்ல; என்பது தெரியும். ஹைதராபாதில் ஒரு டாக்டர் பெண்ணை வன்புணர்ந்து எரித்துக் கொலை செய்த வழக்கில், அடுத்த நாளே குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். எப்போதும் சொல்லப்படும் கதையும் சொல்லப்படுகிறது. இங்கே பாதிக்கப்பட்ட பெண் உயர்சாதிக்காரர், வசதிப்படைத்தவர். “பாவத்தின் சம்பளம் மரணம்” என்னும்படியாக, உடனடி நீதி அரசு நிறுவனத்தால் அந்தக் குடும்பத்துக்கு அளிக்கப்பட்டது. அதுபற்றி வெளியில் தெரியவந்த உடனே பொதுசமூகமும், படித்தவர்கள் என்று சொல்லப்படும் கூட்டமும் தலையில் தூக்கிக் கொண்டாடினார்கள் – அனைவருக்கும் தெரியும், இது ஒரு சட்டத்தை மீறிய செயல்.

பொதுவாய் இதை நியாயப்படுத்துவதற்கு வைக்கப்படும் வாதங்கள்; நம் வீட்டுப் பெண்ணை இப்படிக் கொலை செய்தால் விட்டுவிடுவோமா; என்கிற வகையிலே இருக்கும். சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்கள் தனி மனிதரின் கண்ணுக்குக்கண் பழிவாங்கும் எண்ணத்தைத் திருப்திப்படுத்த ஏற்படுத்தப்பட்டவை அல்ல. தனி மனிதரின் ஒரு குற்றச்செயல் அந்தச் சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தீய விளைவுகளுக்கான தண்டனையே குற்றவியல் சட்டம். நாகரிக சமூகம் அத்தகைய மனிதர்களை சமூக நோக்குடனே தண்டிக்க முடியும். தனிப்பட்ட மனிதர்களின் மனதிலிருக்கும் வன்மத்துக்குத் தீனிபோடுவது போல அல்ல.
சரி, நாம் மனிதர்களைக் கொல்வதை ரசிக்குமளவுக்குக் கேடுகெட்ட சமூகமில்லை என்றும், கொடூரமாக எரித்துக்கொல்லப்பட்ட பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து - இந்த சமூகம் அக்கொலைகளைக் கொண்டாடுகிறது என்றே வைப்போம். இதே இந்தியாவில் அதேபோல வன்புணரப்பட்ட ஒரு பெண் உன்னாவில் எரித்துக்கொல்லப்பட்டிருக்கிறார். அந்தப் பெண் வழக்கைப் பதிவுசெய்வதே போராட்டமாக இருந்தது. அதே போலீஸ் தான். அதே “குற்றத்தைப் பொறுத்துக்கொள்ளாத” இந்திய சமூகம் தான். வழக்கு நடந்துகொண்டிருந்தபோது அந்த பெண்ணின் தந்தை போலீஸ் பாதுகாப்பில் கொலைசெய்யப்பட்டார். பெண்ணின் உறவினர்களுக்கு மர்மமான முறையில் அகால மரணங்கள் நேர்ந்தன. கோர்ட்டுக்குப் போகும் வழியில் அந்தப் பெண் எரித்துக்கொல்லப்பட்டார். இந்த தார்மீகம் பொருந்திய கருணைமிகு சமூகம் அதற்கு பொங்கவில்லை.
அந்த வன்புணர்வு மற்றும் கொடூரக்கொலைகளைச் செய்தவர்களுக்கு ஹைதராபாத்தின் நீதி கிடைக்கவில்லை. அந்தப் பெண்ணையும், குடும்பத்தாரையும் கொலைசெய்த அந்த திரிவேதிகள் சுட்டுக்கொல்லப்படுவார்களா? நம் மானமுள்ள சிவில் சமூகம் அதைக் கேள்வியாவது கெட்டதா? இல்லை. ஏனென்றால் பாதிக்கப்பட்டது தாழ்த்தப்பட்ட பெண். குற்றவாளி உயர்சாதி, வசதிபடைத்த ஆண்.
கிடைக்கும் பெண்களையும் குழந்தைகளையும் வன்புணர்ந்து கொலை செய்யுமளவுக்கு என்ன நடக்கிறது இங்கே? ஒருவரின் விருப்பமோ சம்மதமோ இல்லாமல் தன்னுடைய வலிமை மற்றும் அதிகாரத்தைக்கொண்டு மற்றவர்களை;விரும்ப வைத்து; சில செயல்கள் செய்யவைப்பது இந்தியர்கள் எண்ணத்தில், வளர்ப்பில் ஊறிப்போன ஒன்று. ஆனால் அத்தகைய பயன்படுத்திக்கொள்தலை விடுத்து எந்தப் பெண்ணானாலும் தனது வலிமையைச் செலுத்தத் தலைப்படும் எண்ணமும், அவள் - தன் தேவையை நிறைவேற்றித்தான் ஆகவேண்டும் என்கிற எண்ணமும் எங்கிருந்து வருகிறது? இத்தகைய வன்முறைகளைத் தண்டனைகளாலோ, செய்த நான்குபேரைத் தூக்கிலிடுவதாலோ ஏன் தடுக்க முடியாது? அதற்கு முக்கியக் காரணம் - வளர்க்கப்படும் வரை 20-25 வருடங்களாக ஊட்டி வளர்க்கப்படுவது ஒரு குற்றச்செயலுக்கான தண்டனை கிடைக்கும்போது எப்படி மாறும்? எண்ணங்கள் மாறுவதில்லை. பெண் தன்னுடைய அதிகாரத்துக்குட்பட்டவள் என்பது சொல்லிலும் செயலிலும் அமைப்பிலும் காணப்படும்போது ஒரு செயலால் அது எல்லாம்

தலைகீழாக மாறி விடுமா? இல்லை, இதுவரை தண்டனை பெறாதவர்கள் எல்லாரும் யோக்கிய சிகாமணிகளா? இந்திய சமூகம் ஆண்குழந்தைகளையும் பெண்குழந்தைகளையும் நடத்தும் விதத்துக்கு பாரதூரமான வேறுபாடுகள் உள்ளன.

பெண்குழந்தை பிறப்பதே, பிறந்தால் உயிருடன் இருப்பதே பெரும் போராட்டமாக இருக்கிறது. தனக்கு சேவை செய்யவே பெண் பிறந்திருப்பதாக நம்பவைக்கப்படுகிறான் ஆண். குடும்ப அமைப்பு அதை சரியாகச் செய்கிறது. கடந்த சிலபத்தாண்டுகளாக கல்விக்கான வாய்ப்புகளைப் பயன்டுத்தி பெண்கள் ஓரளவு படித்தும் விட்டார்கள். இயல்பாகவே அவர்களின் நுண்ணறிவும் உடனிருக்கும் ஆண்களை விட அதிகமாகவே வெளிப்படுகிறது. ஆண்டாண்டுகாலமாய் அடக்கப்பட்டது அல்லவா? ஆனால் - கல்வி கற்ற, அறிவான பெண்களை எதிர்கொள்ளுமளவுக்கு இந்திய ஆண் சமூகம் வளரவில்லை. வன்புணர்வு எப்போதும் பாலியல் தேவைக்காக நடப்பதில்லை. அது ஒரு மிரட்டுவதற்கான ஆயுதம். தனியாக செல்வாயா? நான் உன் உடலை அத்துமீறுவேன்.

எந்த விதமான கலவரங்களும், போரும் பெண்ணுடலை அத்துமீறுவதாகவே இருக்கிறது. வன்புணர்வு அதிகாரத்தை நிலைநிறுத்தும் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. அதனால், பெண்ணுடலை அத்துமீறுவது பாலியல் தேவைக்காக என்பது முழுப் பொய். வன்புணர்வு என்பது அதிகாரத்தை நிலைநிறுத்தும் செயல். அத்துமீறல் நடந்தாலும் சட்டம் இருக்கிறதல்லவா? அனைவருக்கும் நீதி கிடைக்குமா? இல்லை. அங்கும் அதிகாரப் படிநிலைதான் வேலை செய்யும். உங்கள் சாதிக்கு தக்க நீதியே கிடைக்கும். உன்னாவ் கொலையாளிகளுக்கு தோட்டாக்கள் நீதி வழங்காது. ஏன் கோர்ட்டே நீதி வழங்குமா என்பது தெரியாது. அப்படிதான் சமூகம் வேலை செய்கிறது.

இவ்விரண்டு வழக்குகளும் நம் சமூகத்தின் உண்மை நிலைக்கான இப்போதைய உதாரணங்கள் தான். கோவையில் நடந்த என்கவுண்டர் கொலைகள் ராஜலக்ஷ்மிக்கும் நந்தினிக்கும் தீர்ப்பாய்க் கிடைக்காது. பொள்ளாச்சி சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களைத் தான் காவல்துறை மிரட்டும். அவர்களின் முகத்தைத் தான் வெளிச்சம் போட்டுக் காட்டும். பொதுவில் அவமானப்படுத்தும். ஆனால் ஒரு அறிவார்ந்த சமூகம் என்ன செய்யும்? ஆண்குழந்தையை ஒழுங்காய் வளர்க்க முயலும். சமூகமே வளர்த்தெடுக்கும் குற்றவாளியை சமூகம் தானே சரிசெய்ய வேண்டும்? வன்புணர்வுக்கொலைகள் பெண்கள் பிரச்சினை அல்ல. சமூகத்தின் வியாதி. சமூகம் மொத்தமாய் அழுகிக்கொண்டிருப்பதன் துர்நாற்றம். பார்ப்பனீய ஆணாதிக்கத்துக்கு தீர்வுகாணும் திசையில் பயணிப்பதே விடுதலைக்கு வழி. பார்ப்பனீய ஒடுக்குமுறைக்கான தீர்வு எப்படி சாதி அனுகூலம் பெற்றவர்களால், சுயபரிசோதனை வடிவில் முன்னெடுக்கப்பட வேண்டுமோ, அதுபோல அமைப்பு ரீதியாக, சமூகரீதியாக அனுகூலம் பெற்ற ஆண்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஆண் குழந்தைகளை – அத்தகைய அனுகூலங்கள் தொடர்ந்து கிடைப்பதை சுட்டிக்காட்டி அறிவுறுத்த வேண்டும். “உனக்குக் கிடைத்திருப்பது உன்னுடைய தனியுரிமை அல்ல. அத்தகைய உரிமை பெண்களுக்கும் திருநருக்கும் உண்டு” என்பதைத் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். இது தொடக்கம் மட்டுமே. கடக்கவேண்டிய தூரம் சில தலைமுறைகளுக்கு உண்டு. நமது பங்கை இப்படியாகத் தொடங்கினால், தம்மின் தம்மக்கள் அறிவுடைமை என்பதாக அடுத்த தலைமுறை, அடுத்த கட்டத்துக்கு இந்தச் சமூகத்தை இட்டுச்செல்லும்.No comments:

Post a Comment