Wednesday 25 December 2019

கிண்டில் எனும் இலக்கியப் புரட்சி - சென் பாலன்


லக்கியம், மொழிகள் தோன்றும் முன்னரே தோன்றியது. அது எப்படி மொழிகள் தோன்றும் முன்னரே இலக்கியம் தோன்ற முடியும்? குகை ஓவியங்களாக மொழிகளற்ற ஆதி மனிதன் தான் கண்ட காட்சிகளை வரைந்து வைத்தது இலக்கியம் தான். மொழிகள் தோன்றுவதற்கு முன்னரே சித்திர வடிவில் தன் மனதில் தோன்றியவற்றை வெளிப்படுத்தியவன் தான் உலகின் முதல் இலக்கியவாதி. அப்படி குகை ஓவியங்களாகத் தோன்றிய இலக்கியம் பல பரிமாணங்களை அடைந்து இன்று நவீன சித்திர எழுத்துகளான ஸ்மைலி வரை வந்துள்ளது.

இலக்கியம் என்பது ஒயின் போல. எழுதப்பட்ட காலத்தில் மதிப்பின்றி, சுவையின்றி இருக்கலாம். ஆனால் காலங்கள் செல்லச் செல்ல அதன் மதிப்பும் சுவையும் கூடிக் கொண்டே செல்லும். இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட “ஆதன், குவிரன்” என்ற இரண்டு பெயர்கள் இன்று இலக்கியமாகிவிட்டன.

நம்மிடமுள்ள திராட்சைகளைச் சாறாக மாற்றி உரிய கலத்தில் அடைத்துவிட்டால் போதும். காலங்கள் மாறும் போது ஒயின் போல அவற்றின் சுவையும் மதிப்பும் கூடிக் கொண்டே போகும் என்பது தான் வரலாறு நமக்குச் சொல்லும் உண்மை.

எழுதுவது எல்லாம் இலக்கியமா என்றால்  எழுதுவதில் நிலைப்பது இலக்கியம் எனலாம். உதாரணமாக பெரியாரின் எழுத்துகள் இன்றும் நிலைத்து நிற்கின்றன. திருக்குறள் இன்றும் படிக்கப்படிகிறது. இவை இலக்கியமாகிவிட்டன.

எழுத்துகளை திராட்சை எனக் கொண்டால், நொதித்து ஒயினாக மாறும் திராட்சை இலக்கியம் எனலாம்.

எந்த திராட்சை ஒயினாக மாறும், எது மாறாது என்பதை ஆரம்பநிலையிலேயே கணிக்க முடியாது. அவற்றை கலத்தில் இட்டு கவனித்து வந்தால் மட்டுமே அறியமுடியும்.  எழுத்துகளை இலக்கியமாக்கும் கலமாக புத்தகங்கள் உள்ளன.

காலங்காலமாக நினைப்பதை பதிந்து வைக்கும் ஆசை மனித இனத்திற்கு இருந்து கொண்டே வந்துள்ளது. குகை ஓவியங்களாக, சிற்பங்களாக, கல்வெட்டுகளாக இருந்த அந்த ஆசை பனை ஓலைகளில், காகிதங்களில், கணிப்பொறியில் வெளிப்பட்டுக் கொண்டே உள்ளது. தனது கல்லறை மீது கூட ஏதாவது எழுதப்பட வேண்டும் என மனிதர்கள் ஆசைப்படுகிறார்கள்.

ஓலைச்சுவடி காகிதம் என மாறிவந்த பதிந்து வைக்கும் முறைகளில் சமீபத்திய வரவாக கிண்டில் வந்துள்ளது. எப்படி விமானம் என்ற ஒன்று வந்த பின் பயணம் செய்யும் முறை பெருமளவு மாறியதோ, அப்படி பதிப்புத் துறையில் கிண்டில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்பு ஒரு புத்தகம் வெளியிட வேண்டுமென்றால், அதை முழுவதும் எழுதிமுடிப்பது மட்டும் எழுத்தாளரின் பணியல்ல. அதற்கு ஏற்ற பதிப்பளரைக் கண்டறிய வேண்டும். அவரிடம் நடையாய் நடந்து வெளியிட சம்மதிக்கவைக்க வேண்டும். சம்மதித்து விட்டால் இந்தச் சுழலில் எழுத்தாளரோடு பதிப்பாளரும் மாட்டிக் கொள்வார்.
அதன் பிறகு, பிழைதிருத்தம் செய்வதில் மிகுந்த கவனம் வேண்டும். சிறுபிழை ஏற்பட்டாலும் அதை சரி செய்ய அடுத்த பதிப்பு வரை காத்திருக்க வேண்டும். அதனைத் தவிர்க்க மிகுந்த நேரச் செலவு, பொருட் செலவு செய்ய வேண்டும். சிலநேரம் புத்தகம் வெளியிட பெரும் பணத்தை முடக்க வேண்டி வரும். நல்ல தாளில் சிறந்த வடிவமைப்புடன் வெளியிட்டால் புத்தகத்தின் அடக்கவிலை மலை போல உயரும். 

இத்தனையும் தாண்டி புத்தகம் வெளியிட்டுவிட்டால் அதன் பின்னும் அடுக்கடுக்காய் பிரச்சனைகள் வரிசை கட்டும். அதை வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பது பெரும் பணி. அச்சிட்ட புத்தகங்களைப் பாதுகாப்பாக சேமித்து வைக்க வேண்டும், அதற்கான பொருட் செலவு. இரண்டாம் நிலை நகரங்கள் வரை புத்தகங்களை கிடைக்கச் செய்ய வேண்டும், அதற்கான அலைச்சல் மற்றும் செலவு. விற்பனையகங்கள், ஏஜண்ட்கள் கமிசன். விற்காமல் தேங்கி நிற்கும் புத்தகங்களின் நட்டம் என பல பிரச்சனைகள். எழுத்தாளரும் பதிப்பாளரும் தங்கள் பொருளாதாரத்தையும், மன உறுதியையும், உடல் நலத்தையும் கெடுத்து தான் ஒரு புத்தகம் வெளியிட முடியும்.
அதன்பின் ராயல்டி பிரச்சனை. மரியாதைக்குரிய பதிப்பாளரும் மேன்மை கொண்ட எழுத்தாளரும் தங்களுக்குள் அடித்துப் புரண்டு உருளுவதை நம் கண் எதிரே கண்டுள்ளோம்.

சற்று புகழ் பெற்ற எழுத்தாளர்களுக்கும், பதிப்பாளர்களுக்கும் புத்தகம் வெளியிடுவது எளிது தான். ஆனால் அந்நிலையை அடைய அவர்களும் இந்தத் துன்பங்களை எல்லாம் கடந்து தான் வந்திருப்பர்.

இப்படிப்பட்ட நடைமுறைச் சிக்கல்களால், எழுதிப் பதிப்பிக்கப் படாமல் போன இலக்கியங்கள் எண்ணற்றவை. எழுதப்படாத இலக்கியங்கள் அவற்றை விட அதிகம். ஒயினாக மாற இயலாத திராட்சைகள் அழுகி வீணாகின.

சரி, எழுத்தாளரும் பதிப்பாளரும் தான் இவ்வாறு சிரமப் படுகிறார்கள் என்று பார்த்தால் வாசகரின் நிலையும் சிரமம் தான். சென்னை போன்ற நகரங்களில் வசிப்பவர்களுக்கு நினைத்தவுடன் நினைத்த புத்தகங்களை வாங்கும் வாய்ப்பு ஓரளவு இருக்கிறது. ஆனால் சென்னையைத் தாண்டி இருப்பவர்கள் ஒரு புத்தகத்தை வாங்க வேண்டுமெனில் ஒன்று சென்னைக்கு வரும் போது வாங்க வேண்டும், இல்லையெனில் தனது நகரத்தில் கிடைக்கும் வரை பொறுக்க வேண்டும். நல்ல தரமான தாளில், அழகிய வடிவமைப்பில் உள்ள புத்தகம் எனில், அதன் விலை வாசகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும். மேலும் வாங்கிய புத்தகங்களைப் பாதுகாப்பது, இடம் மாற்றுவது போன்றவையும் சிரமமானவை.

இப்படி எழுத்தாளர், பதிப்பாளர், வாசகர் என அனைவருமே ஒரு மாற்றத்தை எதிர் நோக்கி இருந்த போது புயலென நுழைந்தது கிண்டில்.
அனைவரும் எளிதில் படிக்கும் வண்ணம் இ-ரீடர் கருவியை உருவாக்கும் ஆராய்ச்சி பல காலமாகவே இருந்து வருகிறது. கிண்டில், கோபோ போன்ற பல கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன, தொடர்ந்து மேம்படுத்தப்பட்டன.

ஆனால் ஒரு மின்-படிப்பானின் வெற்றி அதன் ஹார்ட்வேரைப் பொறுத்து மட்டுமல்ல. அது வாசகர்களுக்கு அளிக்கும் சேவைகளையும் சேர்த்து தான்.  அந்த வகையில் கிண்டில், அமேசான் எனும் வியாபார அரக்கருடன் சேர்ந்து பயணிப்பதால் சேவைகளை வழங்குவதில் யாராலும் நெருங்க முடியாத நிலையில் உள்ளது.

கிண்டில் உள்ளிட்ட மின்-படிப்பானின் சாதகங்கள் பல உள்ளன. எழுத்தாளரின் தரப்பில் இருந்து நோக்கினால்,

1. மின் புத்தகங்களை உருவாக்கும் செலவு மிக மிகக் குறைவு
2. பதிப்பிக்கும் செலவு அதை விடக் குறைவு.
3. இணையத்தின் வழி எங்கும் படிக்கலாம் என்பதால், போக்குவரத்து செலவு கிடையாது.
4. புத்தகங்களை அச்சடித்து சேமித்து வைக்கும் தேவையில்லை.
5. எந்நேரமும் பிழைகளை திருத்திக் கொள்ளலாம்.
6. விற்காத புத்தகங்கள் வீணாகி, நட்டமாகி விடுமே என்ற கவலை வேண்டாம்.
7. புத்தகம் வெளிவர பெரும் பணத்தை முடக்க வேண்டாம்.
8. ராயல்டி தொகை மென்பொருள்களால் கணக்கிடப்படுவதால் குழப்பம் ஏற்படுவது இல்லை.
9. இணைய வழியில் புத்தகங்களை விளம்பரப்படுத்துவதும் எளிது.

இதையே வாசகர் தரப்பில் இருந்து நோக்கினால்
1. நினைத்த புத்தகங்களை உடனடியாக வாங்கி, அடுத்த நொடியே படிக்க முடிகிறது.
2. அச்சுப் புத்தகங்களை விட பலமடங்கு குறைவான விலையில், சில சமயம் இலவசமாகக் கூட புத்தகங்கள் கிடைக்கின்றன.
3. வாங்கிய புத்தகங்களை பாதுகாக்கும் தொல்லை இல்லை.
4. கிராமத்தில் இருப்பவர்கள் புத்தகம் வாங்க நகரத்திற்குச் செல்ல வேண்டும் என்ற நிலை இல்லை. இணைய இணைப்பு இருந்தால் போதும்.
5. வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாங்கள் இருக்கும் இடங்களில் இருந்தே தங்கள் நாட்டின் புத்தகங்களை வாசிக்க முடிகிறது.
6. உலக இலக்கியங்களை ஒரு நொடியில் வாங்க முடிகிறது.
7. பயணங்களின் போது படிக்க புத்தகங்களை தனியாகத் தூக்கிச் செல்ல தேவை இல்லை. கையடக்க கருவியில் இலட்சக்கணக்கான புத்தகங்களை சேமித்து எடுத்துச் செல்லலாம்.
8. அலுவலகம், வீடு என வெவ்வேறு இடங்களுக்கு புத்தகங்களை தூக்கிக் கொண்டு அலையத் தேவை இல்லை.
9. குறிப்பு எடுத்தல், அடிக்கோடிடுதல் போன்ற வசதிகள் அச்சுப் புத்தகத்தை விட மேம்பட்டதாக உள்ளன.

இங்கு பட்டியலிடப்பட்ட வசதிகள் குறைவு தான். நடைமுறையில் இவற்றை விட அதிக வசதிகளை மின்-படிப்பான்கள் வழங்குகின்றன.

அமேசான் கிண்டிலின் அசுரப் பாய்ச்சல்

இப்படி மின் படிப்பான்களால் பல நன்மைகள் இருந்தும், அவற்றில் படிக்கக்கூடிய புத்தகங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், வாசகர்களிடம் பெரிய வரவேற்பு இல்லாமல் இருந்தது. இந்நிலையில் புத்தக விற்பனை மூலம் தனது வியாபாரத்தைத் தொடங்கிய அமேசான் இந்தச் சூழ்நிலையை மாற்றி அமைத்தது. உலகெங்கும் இருக்கும் எழுத்தாளர்களை தேடித்தேடி கிண்டிலுக்குள் அழைத்து வந்தது. படிக்கவரும் வாசகர்களுக்கும் பல சலுகைகளைத் தந்தது. ராயல்டி விசயங்களைத் தெளிவாகவும் நேர்மையாகவும் பின்பற்றியது. ஒரு புதிய வாசிப்பனுபவத்தை வாசகர்களுக்கு வழங்கியது. ஒரு இனிய பதிப்பித்தல் அனுபவத்தை எழுத்தாளர்களுக்கு வழங்கியது. மின் படிப்பானில் மட்டுமல்லாமல் மொபைல் போனிலும் படிக்கும் வண்ணம் செயலிகளை அறிமுகப்படுத்தியது. பதிப்பகத் துறையை சில வருடங்களிலேயே தலைகீழாக மாற்றியது.

ஸ்கூட்டி என்ற வாகனம் அறிமுகப்படுத்தப்பட்ட பின் பெண்களுக்கு சிறகு முளைத்தது நினைவிருக்கலாம். அதுவரை வெளியில் செல்ல ஆண்கள் துணையை எதிர்பார்த்திருந்த பெண்கள் அதன் பின் தனியாக கல்லூரிக்கு, வேலைக்கு என்று செல்ல ஆரம்பித்தனர். பெண்கள் முன்னேற்றத்தில் ஸ்கூட்டி எனும் அறிவியல் சாதனத்தின் பங்கு மறுக்க இயலாதது. இப்படி அறிவியல் கண்டுபிடிப்புகள் சமூக அமைப்பிலும் மாற்றம் உண்டாக்க வல்லவை.

அதேபோல கிண்டில், இலக்கிய உலகில் ஒரு புதிய திறப்பை உண்டாக்கியது. இதுவரை பதிப்பிப்பதில் இருந்த  நடைமுறைச் சிக்கல்களால் எழுதத் தயங்கியவர்களும் எழுத முடியாதவர்களும் எழுத ஆரம்பித்தனர். பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளாலும் எளிதாக புத்தகம் வெளியிட முடிவதை நம் கண் எதிரே பார்த்துக் கொண்டு வருகிறோம்.

எழுத்தாளர் ஆக வேண்டுமெனில் ஒரு புகழ் பெற்ற எழுத்தாளருக்கு அடிப்பொடியாக சில வருடங்கள் இருக்க வேண்டும், அவரால் பாராட்டப்பட வேண்டும், பிறகு பதிப்பகங்களின் தொடர்புகளைப் பெற்று தனி ஆவர்த்தனம் செய்ய வேண்டும் என்று இருந்த குருகுல முறையை கலைத்துப் போட்டு விட்டது கிண்டில். எளியவர்களின் கையில் பதிப்பிக்கும் அதிகாரத்தைக் கொண்டு சேர்த்தது. இதனால் பேசப்படாதவை பேசப்படுகின்றன. எழுதப்படாதவை எழுதப்படுகின்றன. படிக்கப்படாதவை படிக்கப்படுகின்றன.

இத்தனை நாட்கள் அதிகாரம் கொண்டு செல்வாக்கு செலுத்திய இலக்கிய சந்நிதான குரு மகாப்பீடங்களை இந்த மாற்றம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தாங்கள் பல இழப்புகளைக் கடந்து பல வருடம் முயன்று அடைந்த உயரத்தை, இந்தத் தலைமுறை சாதாரணமாக கடந்து செல்கிறதே எனும் வருத்தமும் ஏற்பட்டுள்ளது. ஒரு சிலரின் கைகளுக்குள் சிக்கி, சின்னாபின்னமாகி வந்த தமிழ் இலக்கிய உலகம் இன்று கட்டற்ற காட்டாறு போல பாய்ந்து பெருக்கெடுக்கிறது. அதன் கரையில் நின்று, புதிய தொழில்நுட்ப புரட்சியை வரவேற்பதா, அல்லது தங்கள் செல்வாக்கு சரிவதால் எதிர்ப்பதா எனத் தெரியாமல் இலக்கியப் பீடங்கள் குழப்ப மனநிலையில் பல கருத்துகளை வெளியிட்டு வருகின்றன.

இன்னும் சிலர் புத்தக வாசனையோடு அச்சுப் பிரதியில் படிக்கும் சுகம் வராது என்று கூறி வருகின்றனர். மூன்று வயதில் யூட்யூபில் வீடியோ பார்க்கும் குழந்தைகளுடன் ஒப்பு நோக்கையில் அவர்களை ஒரு நூற்றாண்டு பின்தங்கியவர்களாகத் தான் கருத வேண்டியுள்ளது. இனிவரும் காலத்தில் அச்சிப் பிரதிகள் என்பது பழைய பெண்டுலம் கடிகாரம் போல அழகுப் பொருட்களாக மாறும் வாய்ப்பு உள்ளது.

அதிகாரத்தைப் பரவலாக்கி, அனைவருக்கும் உரிமை தருவது தான் புரட்சி. அவ்வகையில் எளியவர்களை எழுத வைத்து, எளிமையாக படிப்பதற்கும் உதவி செய்யும்  கிண்டில் சமகாலத்தின் இலக்கியப் புரட்சி.

இன்னும் சிலர் புத்தக வாசனையோடு அச்சுப் பிரதியில் படிக்கும் சுகம் வராது என்று கூறி வருகின்றனர். மூன்று வயதில் யூட்யூபில் வீடியோ பார்க்கும் குழந்தைகளுடன் ஒப்பு நோக்கையில் அவர்களை ஒரு நூற்றாண்டு பின்தங்கியவர்களாகத் தான் கருத வேண்டியுள்ளது. இனிவரும் காலத்தில் அச்சிப் பிரதிகள் என்பது பழைய பெண்டுலம் கடிகாரம் போல அழகுப் பொருட்களாக மாறும் வாய்ப்பு உள்ளது.

அதிகாரத்தைப் பரவலாக்கி, அனைவருக்கும் உரிமை தருவது தான் புரட்சி. அவ்வகையில் எளியவர்களை எழுத வைத்து, எளிமையாக படிப்பதற்கும் உதவி செய்யும்  கிண்டில் சமகாலத்தின் இலக்கியப் புரட்சி.


 - சென் பாலன்


No comments:

Post a Comment