Wednesday 22 January 2020

ஊடக அறம் - சாந்தி நாராயணன்


ஊடக அறம் - சாந்தி நாராயணன்

          ர்மம், நீதி, ஒழுக்கம், கட்டுப்பாடு, சட்டம் போன்ற முழுமையடையாத, சொற்களுக்கு மத்தியில் தமிழ் தந்திருக்கிற "அறம்" என்ற சொல் பல்வேறு பரிமாணங்களையும் முழுமையையும் தன்னகத்தே கொண்டது.
         வலியவற்கும் ஆதிக்கவாதிகளுக்கும், தங்கள் மேலாண்மைக்கும் வசதிக்கும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில்தான் தர்மமும் நீதியும் ஒழுக்கமும், சட்டமும் கட்டுப்பாடும் இருக்கிறது.
           தர்மம்- எது தேவையோ அதுவே தர்மம் என்ற பொழுதே அந்த தர்மம்,  தர்மசங்கடமானது.
நீதி -சாணக்கிய நீதியானது.மனுநீதியானது.
ஒழுக்கம்- எளியவன் உணர்வை உரிமைக்குரலை மழுங்கடிக்க வந்தது.
கட்டுப்பாடும் சட்டமும் ஆதிக்கத்தை மீறாதிருக்கும் பயத்தை தந்தது.

          அறம் மட்டும்தான் ஒடுக்கப்பட்டவனுக்கும் வீழ்த்தப்பட்டவனுக்குமாக ஊன்றுகோலாக வந்துநின்றது. துணிவும்,உண்மையும்,நேர்மையும் தந்தது.
அந்த வகையில் அறம் சமூகநீதியும் சமத்துவமும் உடைய அழகான உறுதியான ஒரு சொல்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற :
பொருள் : மனம் தூய்மையாக இருப்பதே அறம்;மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
பொருள்: பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.

இந்த இரண்டு குறளுக்கு இடையில் தான் அறம் என்ற சொல்லின் அத்தனை பொருளும் பொதிந்திருக்கிறது.

இந்த எல்லைக்குள்ளே ஊடகங்களைக் கொண்டுவந்தால் ஊடகஅறம் என்ற சொல்லின் வன்மைக்குள்,
இருக்கிற லட்சம் ஊடகங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஊடகங்கள் மட்டுமே உயர்ந்து நிற்கும்.

தமிழகத்தில், துணைக்கண்டத்தில் அதிகம் மக்களை சென்றடையக்கூடிய அச்சு ஊடகங்களாகட்டும்,
காட்சி ஊடகங்களாகட்டும், மக்களின் வாழ்வியலில் முன்னேற்றப்பாதையில் நகர்த்திச் செல்வதற்கு என்ன பங்களிப்பை அளித்திருக்கின்றன என்பதிலிருந்து
அந்த ஊடகங்களின் அறம் சார்ந்த விழுமியங்களை மதிப்பிடலாம்.

செய்திகளில் நடுநிலைமை, அரசுகளின் எதோச்சதிகார செயல்பாடுகளின் மீது கண்டிப்பு,
முற்போக்கு சிந்தனைகள் செயல்பாடுகளுக்கான ஆதரவு, பழமைவாத பிற்போக்குச் செயல்பாடுகளின் மீதான எதிர்ப்பு,
ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஒலித்தல் இவைகளை தொடர்ந்து செய்வதையே ஊடகஅறம் என்று வரையறுக்கலாம்.

ஆட்சியாளர்களின் ஊதுகுழல்கள்
ஆளும் அரசுகளின் ஊதுகுழல்களாய், ஆட்சியாளர்களின் மனம் கோணாதவண்ணம் செய்திகளை திரிப்பது, அரசுகளின் ஊழல்களை பற்றிய செய்திகளை துணுக்குச் செய்திகளாக மாற்றுவது
இவைகளில் ஊடகங்கள் காட்டுகிற ஆர்வம், ஊடகவியலாளர்களின் முதுகெலும்பின் கோணல்களைக் காட்டிவிடுகிறது. எதிர்க்கட்சிகளின் மீதான விமர்சனங்களை எட்டுப்பக்கம் எழுதவும், நாளைக்கு இரண்டுமுறை நான்கு ஆளும் கட்சி ஆதரவாளர்களை வைத்து விவாதிக்கவும் ஊடகங்கள் காட்டுகிற ஆர்வத்தில், துளியும் ஆளும்அரசுகளின் எதோச்சதிகாரப்போக்குகளைக் குறித்து வெளிப்படுவதில்லை.

              அரசுகளுக்கு எதிராக மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களைக் குறித்து வெளியிடக்கூட இன்றைய ஊடகங்கள் துணிவைப் பெற்றிருப்பதில்லை.
             குறைந்த பட்சம் நாடாளுமன்றத்தில் எந்தெந்த அரசியல்கட்சிகள் மசோதாக்களின் மீது அரசுக்கு ஆதரவாக வாக்களித்தன , எத்துணை ஆதரவு, எதிர்ப்பு வாக்குகள் என்கிற எளிமையான உண்மைகளைக் கூட ஊடகங்களில் தேடும் நிலையாகிறது.
            மத்தியஅரசு பலவந்தமாக இராணுவத்தை நிறுத்தி, காஸ்மீர் மக்களுக்கு இருந்த உரிமையைப் பரித்தபின்னர் இந்நாள்வரை அங்கு மக்களின் நிலை, அவர்கள் சந்திக்கிற பிரச்சனைகள் குறித்து நம்பத்தகுந்த செய்திகளை வெளியிட ஜனநாயகத்தின் நான்காவது தூண்களுக்கு உறுதிவரவில்லை.
            ரபேல் ஊழல், சிபிஐ அதிகாரிகள் செயல்பாடுகள் தொடர்பில் பாஜக அரசின் சர்ச்சைக்குரிய செயல்பாடுகள் குறித்து எழுதுவதோ விவாதிப்பதோ தங்கள் வேலையல்ல என்று  முடிவெடுத்துவிட்டன ஊடகங்கள். காஸ்மீர் பிரச்சனை, தேசிய குடியுரிமை மசோதா திருத்தம், நீதித்துறையில் பாஜக அரசின் அதிகாரப்போக்கு, இவைகள் உள்ளிட்ட பிரச்சனைகளில் மத்திய பாஜக அரசை விட, ஊடகங்கள் காட்டுகிற கள்ளமவுனம் ஊடகங்களின் அற விழுமியங்கள் அற்றுப்போனதைக் காட்டுகிறது.
                 இதே ஊடகங்கள்தான் 2ஜி தொடர்பில் உண்மையின் சுவடுகள் எதுவும் இன்றி மை தீரும்வரை எழுதித்தீர்த்தன. தீர்ப்பு வந்து குற்றமற்றவர் என்று நீதிமன்றம் அறிவிக்கப்பட்ட பின்னரும்
ஆ. ராசாவை 2ஜி ஊழலில் தொடர்புடைய என்றே எழுதுகின்றன. ஆனால், ரஃபேல் சர்ச்சை என்றும், ஜெயலலிதாவின் ஊழலை, சொத்து வழக்கு என்றும் குறிப்பிடுகின்றன பல ஊடகங்கள்.

2014, 2019 தேர்தல்களை ஒட்டி மோடிக்கும், அமித்ஸாவுக்கும் பாஜகவின் இன்னபிற ஆளுமைகளும் இந்த ஊடகங்கள் எழுதித்தள்ளிய புகழுரைகளும், கற்பனைகதைகளும்
செத்துப்போன ஊடக அறத்தின் பிணங்களின் மீது மொய்க்கும் ஈக்களாக இன்னமும் அலைகின்றன.

மாநில உரிமைகள் ஒவ்வொன்றையும், பாஜக அரசுக்கு பந்திவைத்துவிட்டு, தங்கள் அதிகாரத்தை காப்பற்றிக்கொண்டிருக்கும் ஆளும்கட்சியினரை , "எடப்பாடியின் ராஜதந்திரம்" என்று வியந்தோதி கட்டுரைகள் வடித்து தங்கள் ராஜ விசுவாசத்தை காட்டுகின்ற ஊடகங்கள். ஒரு அடிமையை இன்னோர் அடிமை புகழ்ந்து இரந்து வாழ்வதே வாழ்வு என்றான பின் ஊடகங்களிடம் அறத்தை எதிர்பார்க்கமுடியுமா?

வெற்றுச் செய்திகளின் திணிப்பு
கோடம்பாக்கத்து குரல்களுக்கு ஊடகங்கள் கொடுக்கிற மிகை கவனம், இன்னோர் வகையில் மக்களுக்கு நஞ்சூட்டும் வஞ்சகம்.
அரசியல் சினிமாத்துறையினரால் கையாளப்படுவதாக அங்கலாய்த்துக்கொண்டே, எப்போது நடிகர் ரஜினியோ கமலஹாசனோ, விஜய்யோ வாய்திறப்பார்கள் என்று காத்திருந்து அவர்கள்
உதிர்க்கிற வெற்று சொற்களுக்கு நாலுபக்க செய்திகளும், பலமணி நேர விவாதங்களும் வைத்து தங்களின் இரட்டை முகத்தை தாங்களே அம்பலப்படுத்திக்கொள்கின்றன ஊடகங்கள்.

இது தவிர முக்கிய நிகழ்வுகளில் ஜோதிட புரட்டாளர்களை வரவழைத்து, அவர்களிடம் அரசியல் பலன்களை கேட்கிற வினோத கோமாளித்தனமும் இப்போதெல்லாம் ஊடகங்களில் அரங்கேற
ஆரம்பித்திருக்கிறது. இன்னோர் பக்கம் மாற்று மருத்துவம் , மாற்று வேளாண்மை என்கிற பெயர்களிலெல்லாம்,  உள்ளீடற்ற, அறிவியலுக்கும் நடைமுறைக்கு ஒவ்வாதமுறைகளை ஊடகங்கள் வியந்து எழுதிவருகின்றன. இதன்மூலம் தடுப்பூசிக்கு எதிராக, உயிர்பலிகளை ஊக்குவிக்கிற வீட்டிலே பிரசவம்,நவீன மருத்துவத்தின் மீது நம்பிக்கையின்மை போன்றவற்றையும் ஊக்குவித்து மக்களை அறிவியலுக்கு எதிரான திசையில் பயணிக்கவும் ஊடகங்கள் தூண்டுவது ஆபத்தான போக்கு.

இந்த வார அறிவியல் என்று, ஒருபக்கம் ஒதுக்காத ஊடகங்கள்,இந்த வார ராசிபலன் என்று இரண்டுபக்கங்கள் கூசாமல் ஒதுக்குகின்றன. மேலைநாட்டு கேமிராக்கள் அடர் காடுகளில் கானங்கங்களை,விலங்குகளை படம் பிடித்து சூழலியல் சொல்லிக்கொடுக்கையில்,  நமது ஊடகங்கள் நாளைக்கு ஒரு ஆன்மீக போதனை, தலபுராணம், தினம் அரைமணி நேரம் எண்கணிதம் ஜோதிட பலன்கள் என்று மக்களை பின்னோக்கி இழுக்கின்றன.

 துணைக்கண்ட அளவில் ஊடகங்கள் இப்படி மக்களுக்கு எதிரான திசையில் தொடர்ந்து பயணிப்பதன் பின்னணியில் ஊடகங்களில் நிர்வாகப்பணிகளில் காணப்படுகிற சமூகநீதிக் குறைபாடுகளே காரணம். 71% உயர்சாதியினர் நிறைந்திருக்கின்ற, இங்குள்ள அனைத்து மக்களுக்குமான உரிய பிரதிநிதித்துவம் இல்லாத ஊடகங்களை, சமூகத்தின் சாபக்கேடு என்றே பெரியார் வர்ணித்திருந்தார். அது இன்று வரை தொடர்கிறது.

இருந்தபோதிலும், சமீபகாலங்களில் நடுநிலையற்ற ஆதிக்க சிந்தனையுடைய, பழமைவாத ஊடகங்களின் உளுத்துப்போன தன்மையை முகநூல், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்கள்

கேள்விக்குள்ளாக்குகின்றன. ஊடகங்களின் போலித்தனங்கள் பாரபட்சமின்றி சமூக ஊடகங்களால் தோலுரிக்கப் படுகின்றன.

ஊடகங்கள் அறத்தின் வழியில் செல்லாதபோது , மக்களிடையே அறம் சார்ந்த புதிய ஊடக வடிவங்கள் தோன்றும். அவை அற்றமற்றவற்றை வீழ்த்தும்.
அறத்தில் இருந்து விலகியோர்க்கும் அறமே கூற்றாகும்

-சாந்தி நாராயணன் முத்துராமானுஜம்

No comments:

Post a Comment