Tuesday 31 March 2020

சுயமரியாதை இயக்கத்தில் பெண் தலைமைத்துவம் – அஷ்வினி செல்வராஜ்

சுயமரியாதை இயக்கத்தில் பெண் தலைமைத்துவம் – அஷ்வினி செல்வராஜ்


இன்றைய காலகட்டத்தில், பெண்ணிய சிந்தனைகளுக்கும் பாலின சமத்துவம் குறித்த கலந்துரையாடல்களுக்கும், பெண்கள் தலைமைத்துவப் பொறுப்புகளை ஏற்பதன் இன்றியாமை முக்கிய விவாதப்பொருளாக உள்ளது. எல்லாத் துறைகளிலும் பெண்கள் தலைவர்களாகத் திகழ்தல் அவசியம் என்ற கருத்து முன்பை விட இப்போது தீவிரமாகவே ஆமோதிக்கப்பட்டு வருகின்றது. ஆனால், இருபத்தியோராம் நூற்றாண்டிலும் இதை சாதிப்பது பெரும்பாடாக உள்ளது. அதிகளவிலான பெண்கள் இன்று வேலைக்குச் செல்லும் சூழலிலும், வேலையிடங்களிலும், நிறுவனங்களிலும் இந்த மாற்றத்தைக் கொண்டுவருவது அத்தனை எளிதில் நடப்பதில்லை. இதன் அடிப்படையை நாம் ஆழ்ந்து கவனித்தால், உளவியல் ரீதியான, சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட காரணங்கள் உள்ளன என்பது புலப்படும். 
பெண்கள் இயற்கையாகவே மென்மையானவர்கள், எனவே ஒரு நிறுவனத்தைக் கட்டி ஆளும் திறன் குறைந்து காணப்படுபவர்கள் என்ற பொதுப்புத்தி உள்ளது. அதோடு, தவறுகளை சுட்டிக்காட்டித் திருத்தும் ஆண் தலைவர்களை கண்டிப்பானவன் என்றும், அதையே செய்யும் பெண்ணை மட்டும் அகந்தையுடையவள் என்றும், ஆழ்மனதில் (நம்மையே கூட அறியாமல்) தோன்றும் பாகுபாடும் சேர்ந்துகொள்கிறது. இவை இரண்டுமே, பெண்கள் தலைமைப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதற்கும் அப்பொறுப்புகளை சரிவர மேற்கொள்வதற்கும் பெரும் தடையாக உள்ளன. சாதாரண வேலையிடங்களில் தலைமைத்துவத்தை ஏற்பதற்கே இத்தனை முட்டுக்கட்டைகளை பெண்கள் எதிர்கொள்ள வேண்டுமென்றால், அரசியலிலும் சமூக சீர்திருத்த தொண்டுகளிலும் களப்பணியாற்றும் பெண்கள் எவ்வாறு பார்க்கப்படுகின்றனர்? 
தெற்காசியாவின் அரசியல் சூழலில் முரண் ஒன்று உள்ளது; மற்ற கண்டங்களைக் காட்டிலும் அதிகளவில் அரசியல் தலைமைத்துவத்தை இங்கு பெண்கள் ஏற்றுள்ளனர். எனினும், ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானோருக்கு அரசியலுக்கு வருவதற்கான ஒரு குறிப்பிட்ட குடும்பப் பின்னணி இருந்துள்ளது. பாகிஸ்தானின் பெனாசிர் புட்டோ தொடங்கி பங்களாதேஷின் சேக் ஹசினா வரை பெண் அரசியல் தலைவர்கள், ஏற்கனவே அரசியல் பொறுப்புகளை வகித்த ஆண்களின் மகள்களாகவோ, மனைவிகளாகவோ இருந்து வந்துள்ளனர். 
அதற்காக அவர்கள் ஆளும் திறனில் சற்றும் சளைத்தவர்கள் அல்ல. எனினும், இப்பெண்களின் அரசியல், அவர்கள் சார்ந்துள்ள ஆண்களின் பணிகளின் நீட்சியாகத்தான் எடுத்துக்கொள்ளப்படுகின்றது. மேலும், ஆண் அரசியல் தலைவர்களின் மகள்களாகவோ, மனைவிகளாகவோ இருப்பதால், அவர்களுடைய அரசியல் பதவி சடங்காச்சாரமானதாக பார்க்கப்படுகின்றது (Superficial Political Representation); எனவே உண்மையான அரசியல் மாற்றங்களை கொண்டுவருவதற்கான அதிகாரம் மற்றவர்களைவிடவும் அவர்களுக்கு குறைவு என்ற மனப்பான்மையும் நிலவுகின்றது (lacking agency in making political change). 
இதன் தொடர்ச்சியாக, தலைமைப் பொறுப்புகளை வகிக்கும் பெண்களின் வரலாறு ஆவணப்படுத்தப்பட்டிருந்தாலும், அவர்களுடைய கொள்கைகளும் நடவடிக்கைகளும் வெற்றியடைய துணைநின்ற பல பெண்களின் வரலாறுகள் காணடிக்கப்பட்டு விடுகின்றன. எனவே, மேல்மட்ட தலைவர்களிலிருந்து அடித்தள தலைவர்கள் வரை, அரசியல் மற்றும் சமூக இயக்கங்களில் பங்காற்றும் பெண்களைக் குறித்த தகவல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரவேண்டிய தேவை நிலவுகிறது. அவர்களை குறித்த தேடல்களை அதிகமாக மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம் என்று கூறினாலும் அது மிகையாகாது. 
அன்னை மணியம்மையாரின் சிறப்பிதழாக மலரும் இந்த இதழில், அவருடைய வாழ்நாளில் அவர் ஆற்றிய அரசியல் மற்றும் சமூக தொண்டுகளின் பட்டியலை நினைவுகூறுதல் எனது நோக்கமல்ல. 
ஒரு இயக்கத்தின் தொடர்ச்சியாக மட்டுமில்லாமல், தனக்கான பணிகளில் அன்னை மணியம்மையார் எவ்வாறு தனித்தும் தன்னிச்சையாகவும் செயல்பட்டார் என்பதை வலியுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். 
‘பெரியார் வாழட்டும் என்று தன் துடிக்கும் இளமையைப் பெரியார்க்கு ஒப்படைத்த ஒரு பொடிப் பெண்ணை அன்னை என்று புகழாமல் நாம் வேறு என்ன என்று புகழவல்லோம்?’ – பாரதிதாசன்
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரும், சமூக சீர்திருத்தவாதியுமான சாவித்ரிபாய் பூலே அவர்கள் இறந்த தினமான மார்ச் 10 அன்று பிறந்தவர்தான் அன்னை மணியம்மையார். இவருடைய வாழ்க்கை வரலாற்றை அறியாதோர் மிக அரிது. எனினும், இவரை குறித்த முக்கியமான குறிப்புகளை இங்கே நினைவுகூற விரும்புகிறேன். காந்திமதி என்ற இயற்பெயரில் 1920-ல் பிறந்த அன்னை மணியம்மையார், கனகசபை-பத்மாவதி தம்பதியினரின் மகளாவார். கனகசபை திராவிடர் கழகம் என்று 1944ல் பெயர் மாற்றம் பெற்ற அன்றைய நீதிக்கட்சியின் உறுப்பினராக இருந்தார்.  பெரியாரின் தளபதிகளில் ஒருவரான அண்ணல்.தங்கோவால் அரசியல்மணி என பெயர்சூட்டப்பட்டவர் அன்னை மணியம்மையார். 
1943ல் பெரியார் கனகசபைக்கு எழுதிய ஒரு கடிதத்தில், அருகில் இருந்து கவனித்துக்கொள்ள யாரும் இல்லை என ஆதங்கத்துடன் எழுதியதைத் தொடர்ந்து, அவரை கவனித்துக்கொள்வதற்காக அரசியல்மணியை பெரியாரிடம் அழைத்துச்செல்கிறார் கனகசபை. அரசியல்மணிக்கு இதில் உடன்பாடு உண்டு என்பதை கேட்டறிந்த பெரியார் கனகசபையின் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கிறார். பெரியாரின் பேச்சுக்களை குறிப்பெடுத்துக் கொள்வதிலிருந்து, அவருடைய உடல்நலத்தை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்வது வரை பெரியாருக்கு பக்கபலமாக, அவருடைய உதவியாளராக பல வருடங்கள் இருந்தார் அரசியல்மணி. இயக்கத்தின் சொத்துக்களை பாதுகாக்க சட்டப்பூர்வமாக ஒரு துணை வேண்டும் என்று பெரியார் கருதியதாலும், உடன் இருந்த மற்றவர்களின் மீதான நம்பிக்கையின்மையின் காரணமாகவும், 1949ம் ஆண்டு அரசியல்மணியை மணந்தார். 
சுயமரியாதை இயக்கம் பெண்களின் தலைமைத்துவ பங்களிப்பிற்கு என்ன செய்தது?
பெரியார் என்ற சிறப்புப்பெயரே 1938ல் மெட்ராஸில் நடைப்பெற்ற தமிழ்நாடு பெண்கள் மாநாட்டில், பெண்களால் அவருக்கு சூட்டப்பட்டது – அதற்கான காரணங்களும் பல உள்ளன. முக்கியமாக, தெற்காசியாவின் அரசியல் சூழலில் பெண்கள் தலைவர்களாக, தன்னிச்சையாக செயல்படுவதை தடுத்த இரண்டு சவால்கள் – சடங்காச்சாரமான பதவியேற்பும் அதனால் விளையும் அதிகாரமின்மையும். இவை இரண்டையும் தகர்த்தெறிந்ததுதான் சுயமரியாதை இயக்கத்தின் பெரும் வெற்றி எனலாம். அன்னை மணியம்மையாரின் களப்பணி, பெரியாரின் கொள்கைகளின் நீட்சியாக இருக்கலாம், ஆனால் அவரது அதிகாரத்தின் நீட்சியல்ல. 
பெரியார் உயிர் நீத்த பிறகு திராவிட கழகத்தின் தலைவர் பொறுப்பையேற்று, ஐந்தாண்டுகளுக்கு பணியாற்றினார் அன்னை மணியம்மையார். தந்தை பெரியாரின் மறைவுக்கு முன்னதாகவே அன்னை மணியம்மையார் தன்னிச்சையாக களப்பணியில் இறங்கியதைக் காணலாம். 
கட்சி உறுப்பினர்களில் பலர் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கோ அல்லது காங்கிரஸுக்கோ மாற எண்ணிய தருவாயில், மாநிலம் முழுவதுமாக பயணம் மேற்கொண்டு கட்சியின் உறுப்பினர் தளத்தை வலுப்பெறச் செய்தார்.
1958ல் திராவிட கழக தொண்டர்கள் சாதி ஒழிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்டபோது, இருவர் சிறையிலேயே இறந்தனர். இறந்தவர்களின் நல்லுடல்களை சிறைச்சாலையினர் திரும்ப கொடுக்க மறுத்ததால் அன்றைய முதலமைச்சர் காமராஜர் முன்னிலையில் போராடி, இறந்தவர்களின் உடல்களை மீட்டெடுத்து, மறைந்த இருவரின் இறுதிச் சடங்கினை நடத்தினார். பெண்கள் இறுதிச்சடங்குகளில் பங்குபெறுவதை தகாத செயலாக இப்போதும் பார்க்கும் சமூகத்தில் அன்றே இதை செய்திருக்கிறார் அன்னை மணியம்மையார்.
‘இளந்தமிழா புறப்படு போருக்கு’ என்கிற தமிழில் குடியரசு இதழில் கட்டுரையை பதிப்பித்தது இளைஞர்களை வன்முறையைக் கையாள ஊக்குவிக்கின்றது என்பதற்காக பதிப்பாசிரியர் என்கிற முறையில் அன்னை மணியம்மையாருக்கு ரூபாய் 100 அபராதம் விதிக்கப்பட்டது. அதை கட்ட மறுத்து 15 நாள் சிறை தண்டனை அனுபவித்தார். அந்த பணத்தை அவரால் எளிதாகக் கட்டியிருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்வது தன்னுடைய கொள்கை தவறு என்பதை ஒத்துக்கொண்டு அரசுக்கு அடிபணிவதற்கு நிகர் என்று எண்ணியதாலேயே அவர் துணிந்து சிறைக்குச் சென்றார். இப்போது இருக்கும் ஊடகத்துறையில் பெண் பதிப்பாசிரியர்கள் எத்தனைப் பேர் உள்ளனர் என்பதை விரல் விட்டு எண்ணிவிட இயலும். 
தந்தை பெரியாரின் மறைவுக்கு பின்னர்:
அனைத்து சாதியினரும் ஆலய அர்ச்சகர்களாக வேண்டும் என்று 1974ம் ஆண்டு சென்னையில் போராட்டம் நடத்தினார். அவருடைய கோரிக்கையை செவிமடுக்க தவறிய அன்றைய யுனியன் அமைச்சர் திரு. வை.பி.சவனுக்கு கருப்புக்கொடி காட்டப்பட்டது. 
அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி டெல்லியில் ராவணனின் உருவ பொம்மையை எரிக்கும் நிகழ்வான ‘ராம லீலா’வில் கலந்துகொண்டதற்காக கண்டனம் தெரிவிக்கும் வண்ணம் 1974ல் பெரியார் திடலில் ‘ராவண லீலை’யை நிகழ்த்தி ராமனின் உருவபொம்மையை எரித்தார். அதோடு, பிரதமர் இந்திரா காந்தி அந்நிகழ்வில் கலந்துகொள்வதற்கு முன்னரே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு அன்னை மணியம்மையார் எழுதிய கடிதத்தில், பிரதமர் ‘ராம லீலா’வில் கலந்துகொண்டால் தமிழ்நாட்டில் ராமனின் உருவ பொம்மைகள் மட்டுமல்ல, இந்திரா காந்தியின் உருவ பொம்மைகளும் சேர்த்து எரிக்கப்படும் என எழுதியிருந்தார். 
‘…Otherwise we Dravidians would be burning the effigies of Rama and you, on mass level throughout the length and breadth of Tamil Nadu.”
ஆனால், டெல்லிக்கு இது அனுப்பப்படுவதற்கு முன்னர், “and you” என்ற சொற்கள் தந்தித்துறையினரால் நீக்கப்பட்டன. ராவண லீலையின் பிறகு அன்னை மணியம்மையாருடன் 13 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். 
பெரியாரின் சமூகநலன் சார்ந்த பணிகளை அன்னை மணியம்மையார் தொடர்ந்து கவனித்துவந்தார். ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகத்தையும், பெண்கள் விடுதிகளையும் ஏற்படுத்தி அதன் நிர்வாகத்தை மணியம்மையிடம் பெரியார் ஏற்கனவே ஒப்படைத்திருந்தார். அதுமட்டுமல்லாமல், அன்னை மணியம்மையார் இறப்பதற்கு முன்னர் பெண்களின் கல்விக்காக அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி, தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் அதற்கு எழுதிவைத்தார். 1974ல் உருவாக்கப்பட்ட இந்த அறக்கட்டளையின் வழி, ஏறத்தாழ 40 கல்வி நிலையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றுள் பெரும்பாலான நிலையங்கள் பெண்களின் கல்விக்காக மட்டுமே இயங்கி வருகின்றன. 
பொது சமூகத்தில் எளிதாக ஏற்றுக்கொள்ளப்படாத, முரண்பட்ட முடிவுகளை எடுக்கும் பெண்களை சமூகம் மிகவும் கடுமையாகத்தான் நடத்தும். எனினும், தான் மேற்கொண்ட முடிவினால் விளையக்கூடியவற்றை அன்னை மணியம்மையார் நன்கறிந்திருந்ததோடு, பெரியாரின் இறுதி மூச்சுவரை அவர் உடன் நின்றார் என்கிறார் வழக்கறிஞர் அருள்மொழி. 
‘மகள் வயதுடைய சின்னப் பெண்ணை திருமணம் செய்துக்கொண்ட இவரெல்லாம் தலைவரா, இவரின் பெண் விடுதலை என்பது நாடக பேச்சாகிவிட்டதே என குற்றச்சாட்டு வைத்தார்கள் அவரது எதிரிகள். அப்படி பேசுபவர்கள் பெண் இனத்துக்காகவோ அல்லது அந்த சின்ன பெண்ணுக்காகவோ பரிதாபப்படவில்லை. தனக்கு பின் தன் கொள்கைகளை பரப்ப ஒரு வாரிசை சட்டப்படி உருவாக்கிவிட்டு செல்கிறாறே என்கிற ஆத்திரம், விரக்தி, கோபம் தான் அவர்களை பேசவைத்தது.’ 
- ராஜ்பிரியன் (நக்கீரன் இணையத்தளம்)
இன்றுவரை இத்தகைய எதிர்வினைகளை ஏற்படுத்தக்கூடிய முடிவை அவர் அன்று எடுக்காமல் இருந்திருந்தால் சுயமரியாதை இயக்கத்தின் நிலைமை என்னவாகியிருக்கும் என்பதை சற்றும் எண்ணிப்பார்க்க இயலாது. 
சுயமரியாதை இயக்கத்திற்கு தொண்டாற்றிய பிற பெண்கள்? 
சுயமரியாதை இயக்கம் பெண் விடுதலைக்கு எத்தகைய பாதையை உருவாக்கியிருந்தாலும், அந்த இயக்கம் சார்ந்து செயல்பட்ட பெண் போராளிகளைக் குறித்த விழிப்புணர்வு அதிகம் இல்லை என்பதை இக்கட்டுரைக்கு நான் மேற்கொண்ட ஆய்வின்வழியாகத்தான் கண்டறிந்துகொண்டேன். இணையத்தில் வெகு சில இடங்களில்தான் இவர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. அவ்வாறுள்ள குறிப்புகளும் அளவில் மிகச் சிறியதாகவே உள்ளன. 
இருப்பினும், இப்பெண்களின் தொண்டுகள் குறித்த புத்தகம் ஒன்று பதிப்பிக்கப்பட்டுள்ளது என்பதை இக்கட்டுரையில் பதிவுசெய்ய விரும்புகிறேன். கருஞ்சட்டைப் பதிப்பகத்தின் முதல் நூலாக வெளிவந்துள்ள இந்நூலை கருஞ்சட்டைப் பெண்ணான ஓவியா எழுதியுள்ளார். இந்நூலுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, திராவிட முன்னேற்றக் கழக மகளிரணிச் செயலாளர் கனிமொழி, திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் அருள்மொழி ஆகியோர் அணிந்துரை எழுதியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
அன்னை மணியம்மையாரைப் போலவே பெரியாரின் நெறிவழி நின்ற இப்புரட்சிப் பெண்கள் மேலும் அதிகமாக பேசப்படவேண்டும். அவர்களைக் குறித்த ஆய்வுக்கட்டுரைகளுக்கும் விவாதங்களுக்கும் இப்புத்தகம் மட்டுமல்ல, இக்கட்டுரையும் ஒரு தொடக்கப்புள்ளியாக அமையவேண்டும் என்பது என்னுடைய ஆசை. இந்த தொடக்கப்புள்ளி ஒரு தொடர்ச்சியாக உருமாற்றம் பெறுவதே பெண்கள் தினத்திற்கும், அந்நாளை கொண்டாடுவதற்கு வழிவகுத்த அனைத்து பெண்களுக்கும் நாம் செலுத்தும் மரியாதையாகும். 
References
https://countercurrents.org/2018/03/let-nation-know-brave-lady-south-maniammai-shouldered-periyars-legacy
https://scroll.in/article/831180/international-womens-day-remembering-maniammai-the-woman-leader-who-shouldered-periyars-legacy
https://www.forwardpress.in/2016/07/women-called-him-periyar-or-the-great-one/
https://www.nakkheeran.in/special-articles/special-article/periyars-maniammai-birthday
https://www.thenewsminute.com/article/ravana-leela-1974-when-periyarists-slayed-rama-protest-indira-gandhis-ram-leela-51454
https://tinyurl.com/u486xsz (Keetru.com Reference)

- அஷ்வினி செல்வராஜ்
No comments:

Post a Comment