Tuesday 31 March 2020

அன்பு, கருணை, இரக்கம், வீரம், துணிவு மனிதநேயம், கொள்கைப் பிடிப்பின் மறுப்பெயர் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் - முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்

அன்னை மணியம்மையார் - தந்தை பெரியாரைத் தொண்ணூற்று அய்ந்து ஆண்டுகள் வாழவைத்தவர் உலகில் நாத்திக இயக்கத்திற்குத் தலைமையேற்றுப் பாங்குடன் தந்தை பெரியார் போட்டுத் தந்த பாதையில் விட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்றுவதில் உழைத்து உடல் தேய்ந்து அறுபது வயதை எட்டக்கூடிய நிலையில் மறைந்தவர்.

         அவரின் பயன் கருதாத் தொண்டு, வான்வரை உயர்ந்த போற்றுதற்குரிய தொண்டு.

         அவருடைய வாழ்வின் தூயதொண்டின் பக்கங்கள் பலரும் அறிந்திடாதவை அவற்றை அறிவோர் இவ்வளவு சிறப்புமிகு தொண்டில் உயர்ந்த சிறந்த பெண்மணி வாழ்வின் பக்கங்களைக் குறித்து அறியாமல் இருந்துவிட்டோமே என்று வருந்துவர்.

         தந்தை பெரியார் தமிழ்ச் சமூகத்தின் உயர்வுக்கு, வாழ்வு உய்வதற்கு உழைக்கமுடிந்தது எனில் அன்னை மணியம்மையார் தந்தை பெரியார் மறையும் வரையிலான ஏறக்குறைய முப்பது ஆண்டுக் காலப்பணி முதன்மை மாறாதது.

அன்னையாரின் வாழ்க்கை வரலாற்றினை உற்று நோக்குகையில் அன்பு, துணிவு முதலியன பல்வேறு நற்பண்புகளுக்கான சான்றுகள் காண்கிறோம்.

மென்மை உள்ளம்

         அம்மாவின் மென்மை உள்ளத்திற்கு முதலாவது சான்று பகர்கிறார் திருமதி சுந்தரி வெள்ளையன். சுந்தரி வெள்ளையன் குறிப்பிட்டவை இவை.

என் கணவர் பகுத்தறிவாளர் என்ற போதிலும் நான் பொட்டு வைத்துக்கொண்டு வருவேன். திராவிடர் கழகத்தவர்கள் பொட்டு வைத்துக் கொள்வது கிடையாது. எனவே மணியம்மையார் என்னைப் பார்க்கும்போது சில வேளைகளில் எங்களைப் போல் எப்போது பொட்டை அழித்துவிட்டு எங்கள் கூடச் சேரப்போகிறாயோ சுந்தரி என்று கேட்டார்கள்.

         இப்படியிருக்கையில் என் கணவர் 40 வயதில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்ட பிறகு சிறிது காலம் பொட்டு இல்லாமல் அவரை இழந்த அடையாளத்துடன் இருந்தேன்.

         அப்போதெல்லாம் அம்மாவின் மென்மையான இதயம் வருத்தம் அடைவதைப் பார்த்திருக்கிறேன். அப்போது அவர்கள் நான் கொள்கை அடிப்படையில் பொட்டு வேண்டாம் என்று சொன்னது உனக்கு இப்படி ஒருநிலைமை ஏற்படும்படி ஆகிவிட்டதே என்று வருந்துவார்கள்.

தாயாகவே மாறியவர்

         மணியம்மையார் மருத்துவமனையில் சென்று ஆதரவற்ற குழந்தைகளை எடுத்து வளர்த்து ஆளாக்கியது இருக்கிறதே அது மிகப் பெரிய பணி. மிகப் பெரிய குழந்தையாகப் பெரியாரைக் கவனித்துக் கொண்டவர், அப்பிள்ளைகளை மடியில்போட்டுக் குளிப்பாட்டி, உடை உடுத்தி, உணவு ஊட்டி வளர்த்ததால் தொடக்கத்தில் பத்துப் பிள்ளைகளை அம்மாவே தாயாக ஈ.வெ.ரா.ம (நு.ஏ.சு.ஆ.) எனும் இனிஷியல் கொடுத்து வளர்ந்து வந்தார்கள். பிறகு அந்த எண்ணிக்கை நூறுக்கு மேலாகிற்று அவர்கள் எல்லாம் படித்துப் பட்டம் பெற்றுத் திருமணமும் செய்து வைக்கப்பெற்றபின் உலகில் எவரும் செய்திடாதபணி.

         அந்தப் பிள்ளைகள் மீது கொண்டிருந்த பாசமும் பற்றும் ஒப்புக்கோ, உலகம் மெச்சுவதற்கு என்று இல்லை நூறு தாய்க்குச் சமமான அன்பு செலுத்தினார்கள்.

சில வேளைகளில் அவர்களுக்கு அய்ம்பது பேருக்குக் கூடத் தானே சமையல் கட்டில் இறங்கிச் சமைத்துப் போட்டிருக்கிறார். அன்னமிட்ட கை அவர்களை ஆக்கிவிட்டக் கை அவர்களை தூக்கி விட்டகை, அவர்களை உயரவைத்த கை எல்லோரும் வாழவேண்டும், எல்லோரும் வாழவேண்டும் என்று பாடுபட்ட கை அன்னையின் கை.

சிந்தனை அறிவுச் சுரங்கம்

         பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் உள்ள சிந்தனையாளர் அன்னை. ஆனால் தந்தை பெரியாரைப் பேணவேண்டும் என்ற லட்சிய உணர்வு இருந்ததால் எழுத்துத்துறையிலும் சரி, மேடைப் பேச்சுத்துறையிலும் சரி தன்னை முன்நிறுத்திக் கொள்ளாது தொண்டின் இலக்கணமாய் வாழ்ந்தவர் அவர்.

         1944 ஜூலை 8இல் தம் 24ஆம் வயதில் படைத்த முதல் எழுத்தோவியம் இந்த புராணம், இராமாயணம் இரண்டையும் ஒப்பிட்ட படைப்பும் சரி, பெண்கல்வி எனும் தலைப்பில் தோழர் மணியம்மை சொற்பொழிவு எனும் தலைப்பில் 19.04.1944இல் வெளியானதும் சரி கழகக் கொடி குறித்த கவிதை விளக்க உரையும் சரி, சீதையைப் பற்றிய ஒரு நடுநிலைமை ஆராய்ச்சி எனும் ஆய்வோவியமும் சரி, பாரதி விழா பாரதியார் ஆரியப் பற்றாளரா, திராவிடப் பற்றாளரா என ஆய்ந்து ஆய்ந்து எழுதிய ஆய்வுரையும் சரி, பிறசமயமும், நம் (இந்து) சமயமும் எனும் ஒப்பீட்டுப்பரைப்போவியமும் சரி தேவர்களின் காம விகாரம் எனும் கட்டுரையும் சரி காலங்கடந்து இன்றும் போற்றிடத்தக்க சிந்தனை ஆற்றல் கருவூலம் அம்மா வெறும் சாதாரணப் பெண்மணி அல்ல, தோழர், தொண்டர் மட்டுமில்லை, அறிஞர் சிந்தனையாளர் சீர்திருத்தப் படைப்புச் செம்மல் என்று இன்றும் உணர்த்துவன.

         தமிழகத்தில் தோன்றிய மிகச் சிறந்த பெண் அறிஞர் என்று உலகம் உணர்த்திடப் போற்றிடத்தக்கவராகக் கருதும் நிலை எய்தவேண்டியவர் கடமை உணர்வினால் எழுத்து, பேச்சுப் பணியில் கால் ஊன்றாமல் போய்விட்டது.

பயணம், பயணம், பயணம்

         அய்யாவின் நிழலாய்ப் பயணத்தைத் தொடர்ந்தவர் 1943 முதல் 1973இல் அய்யாவுடன் 30 ஆண்டுகள் பயணித்தவரின் பயணம் 1978இல் மார்ச் 16இல் மூச்சு அடங்கும் போதுதான் நின்றது. தந்தை பெரியாராவது ஆண் - உடல் வலிமை தாங்கும். ஆனால், மென்மையான பெண்மணி இரவு 11 மணி 12 மணிவரை விழித்திருந்து, உறங்கி மறுபடியும் தந்தை பெரியாரின் பயணம் நடைபெற்ற வேளைகளில் பயணித்தார் என்பதைப் படிக்கிறபோது கேட்கிறபோது எப்படி எப்படி முடிந்தது இந்தப் பெண்மணியால் என வியந்து போகிறோம். உலகில் அதிகப் பயணம் மேற்கொண்ட பெண்மணி என்பதற்கான விருது ஏதாவது பதிவு இருக்குமானால் அதில் இடம் பெறும் ஒரே பெண்மணி ஆம்! நிச்சயமாக உறுதியாக இடம் பெறுபவர் அன்னை மணியம்மையார் ஒருவர் மட்டும் தான் என்று துணிந்து கூறலாம்.

முதல் கைதும் கொள்கை வெளிப்பாடும்

         விடுதலை ஆசிரியர், வெளியிடுபவர் அச்சிடுபவர் அலங்காரப் அலங்காரப் கூந ஆடினநச சுயவடியேடளைவ எனும் ஆங்கில ஏட்டின் வெளியிடுபவர், அச்சிடுபவர் ஆகிய சிறப்புகளைப் பெற்ற அன்னையார் ஆசிரியர், வெளியிடுபவர் அலங்காரப் பொறுப்புகளாக அவற்றைச் சுமக்கவில்லை, அதனால் காவல்துறை வழக்குகள், நீதிமன்றத் தண்டனை, அபராதம் கடுங்காவல், கார் பறிப்பு ஜாமீன் வழக்கு, ஜாமீன் பறிப்பு ஆகிய அடக்குமுறைகளை ஏற்ற இவர் போன்ற பெண்மணிய்மை எந்தநாட்டு வரலாற்றிலும் காணமுடியாது.

         கும்பகோணம் தடை மீறி இந்தி எதிர்ப்பின் போது கைது ஆனபோது 28 வயதுப் பெண்மணி துணை ஆட்சியாளரின் விசாரணையின் போது அம்மாவின் இரண்டு பதில்கள் அந்த வயதில் எவ்வளவு கொள்கை உறுதிப் பாட்டாளர் என்று காட்டும்.

கேள்வி : கும்பகோணத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருப்பது தெரிந்தும் அத்தடையுத்தரவை மீறி ஊர்வலம் நடத்திச் சென்றது குற்றம்.

அம்மாவின் பதில் : எங்கள் மொழி காக்கும் உரிமைக்கு அமைதியாய்ப் போராடுவது எனது கடமையாகும் மொழிப் பற்றை மறப்பது நாட்டிற்குத் துரோகம் செய்வதாகும்.

கேள்வி : அதற்காகச் சட்டத்தை மீறுவது சரியா?

பதில் : சட்டம் நாட்டின் மொழி வளர்ச்சியைக்கூட ஒழிப்பதாயிருக்கிறது.

கேள்வி : உங்கள் மதம் என்ன?

பதில் : எனக்கு எந்த மதமும் கிடையாது.

கேள்வி : உங்கள் ஜாதி

பதில் : திராவிட ஜாதி

கேள்வி : தடையை மீறிச் சட்டத்தை மீறியுள்ள தங்களை ஏன் தண்டிக்கக்கூடாது? சமாதானமாய் ஏதாவது சொல்கிறீர்களா?

பதில் : நான் சமாதானம் சொல்வதற்காக இங்கு வரவில்லை. சர்க்கார் சட்டத்தை நிறைவேற்றியிருக்கும் தாங்கள் என்ன தண்டனை விதித்தாலும் ஏற்கச் சித்தமாயிருக்கிறேன். தாராளமாய்ச் செய்யுங்கள்.

கேள்வி : தங்களுக்கு இரண்டு மாத வெறுங்காவல் தண்டனையளிக்கிறேன்.

பதில் : மிக்க மகிழ்ச்சி வணக்கம்

         கைதாகிக் கொண்டு போய் நிறுத்திய போது தந்தை பெரியார் சொல்லிக் கொடுத்தோ, வழக்கறிஞர் சொல்லுமாறு அறிவுறுத்தியோ சொல்லிக் கொடுத்து வந்த பதில்கள் இல்லை. உள்ளேயே ஊற்றெடுத்து ஊறியிருந்த கொள்கைச் சிம்மத்தின் முழக்கங்கள் இவை.

பொன்னி பொங்கல் மலரில்

         மணியம்மையார் ஈ.வெ.ரா.மணியம்மையார் என் ஆகியிராத காலத்தில் பொன்னி எனும் ஏட்டில் பொங்கல் மலர்க் கட்டுரை எவ்வளவு துல்லியமாக அம்மாவை அன்றைய நாளில் அவருடைய இளமையில் படம் பிடித்திருக்கிறது என்பது போதும் நம் பார்வை சரி என்பதற்கு.

         அம்மையார் அன்புள்ளம் கொண்டவர் மட்டுமல்ல, அறிஞரும்கூட நல்ல தமிழில் இனிமையாகச் சொற்பொழிவாற்றக் கூடிய திறம் படைத்தவர்கள். அம்மையாரைக் கூட்டங்களில் பேசும்படி எளிதில் செய்துவிடமுடியாது. அப்படிப் பேசவைத்துவிட்டால் செவியெலாந் தேன் பாய்ச்சுந் தீந்தமிழில் பேசுவார்கள்.

அம்மையார் எவ்வளவு இனிமையாகப் பேசுகிறார்களோ அவ்வளவு சுவையாகக் கட்டுரை எழுதுவதிலும் வல்லவர் பெரியார் பேச்சைக் குறிப்பெடுத்து எழுதிகொடுப்பதிலும் திறமையுள்ளவர்கள்.

         அம்மையார் சிறந்த ஆசிரியையும்கூட மாணவ பயிற்சி முகாம் களைதிறம் படநடத்திப் பெரியாரின் பாராட்டுதல்களைப் பெற்று இருக்கிறார்.

         சின்னஞ் சிறு குழந்தைக்கு கல்வி பயிற்றுவிப்பது அவர்களோடு சேர்ந்து விளையாடுவதிலும் அம்மையாருக்கு ஆர்வம் மிக உண்டு.

         இரண்டு மூன்று பேர் பார்க்கக்கூடிய வேலைகளைத் தாம் ஒருவரே பார்க்க முடியுமென்ற உறுதியும் முடித்து வைக்கும் திறமையும் அம்மையாரிடம் உண்டு. பணி செய்வதிலேயே ஈடுபட்ட உள்ளமுடைய அம்மையார் அணிமணிகள் பூணுவதிலும், அழகுசெய்வதிலும் ஈடுபடுவது கிடையாது.

         உண்மையான தொண்டர்களிடத்தில் அம்மையாருக்குப் பரிவும் பாசமும் உண்டு. பெரியார் தொண்டர்களைக் கண்டிக்கும் போது அம்மையார் தம்மையே கண்டிப்பதாக எண்ணிக்கொண்டு கண் கலங்குவார்கள்.

         அம்மையார் மிக இளகிய உள்ளம் படைத்தவர் துக்கத்தையோ, கோபத்தையோ, மகிழ்ச்சியையோ தாங்கிக் கொள்ள முடியாத இயல்புடையவர்கள்.

         தொண்டு ஒன்றே தம் வாழ்வின் குறிக்கோள் என்று கருதும் அம்மையரின் உள்ளம் திராவிட இயக்கத்தின்பால் பற்று வைத்திருப்பது திராவிடர்களின் பெறற்கரிய பேறு.

         அன்னையார் தந்தையாரின் செயலாளர், உதவியாளர், உதவியாளராக வந்தவர்தான் இயக்கத் தலைமை ஏற்றார் என வாய் கூசாது பேசும் புல்லுவிருகள் - அன்னையார் அறிஞர், சிந்தனையாளர் சிறந்தப் பேச்சாளர் - தலைமைப் பண்புடையவர் என்பதை உணரவேண்டும்.

மணியம்மையார் பற்றிக் கைவல்யசாமி

         நாணம், கூச்சம், அசூயை அருவறுப்பு எல்லாம் விட்டு ஆறுவருடம் அந்நியோன்யமாக பழகிய பெண் குமாஸ்தா வேலையிலிருந்து சமையல்காரி வரையிலும் வெறுப்பில்லாமல் பிரியத்தோடு செய்துவருகிற பெண். பெரியாரிடம் வருகிறவர்களை உபசரிப்பதிலும் முகம் சுளிக்காத பெண். பெரியாருடைய செட்டும் சிக்கனமும் தெரிந்து கொண்ட பெண். நாகரிகமும் இல்லை. விருப்பமும் இல்லை. பெரியாரிடம் பற்றும் பிரியமும் இருந்தால் ஒழிய அப்பிராயத்தாலும் நடிப்பாலும் முடியாத காரியம் ஆறு வருடமாக காத்துவருவது சாத்தியமில்லை, குற்றம் காணும் பெரியாரை ஏய்ப்பதும் சுளுவல்ல, ஆனால் இதில் உண்மையான பிரியமும் நட்பும் இருக்கவேண்டும். மறைவும் ஏமாற்றமும் ஒன்றுமில்லை பக்குவமாகிய வருடம் சென்ற பெண்ணிற்கு உலக சங்கதிகளில் எது தெரியாமலிருக்கும் முப்பது எழுபதுமுள்ள கணக்கில் போக சுகங்கள் குறைவு படுமே என்கின்ற விஷயம் ஆறு வருடம்.  அந்நியோன்மயாகப் பழகிய ஆணிற்கும் பெண்ணிற்கும் தெரியாத கணக்கும் திருப்தியும் நமக்கெப்படி தெரியும். வீண் வம்பிற்கு நாங்கள் போக வேண்டும் ............. இருக்கிறார். அதைப் பார்க்கிறோம். எதையோ மனதில் வைத்துக்கொண்டு எதையோ பேசுவது நியாயமா?

தியாக உள்ளம்

         1964இல் தந்தை பெரியார் ஈரோட்டில் தம் பிறந்தநாளில் எனக்கு என்று எந்தச் சொத்தோ பணமோ இல்லை. இருந்ததை எல்லாம் விற்று இந்த ஸ்தாபனத்தில் தான் போட்டு வைத்து உள்ளேன். ஏதோ மணியம்மைக்கு ஒன்றிரண்டு இருக்கின்றன அவ்வளவுதான் ஆகும் என்று பேசத் தொடர்ந்து பேசிய அன்னை அய்யா அவர்கள் எனக்கு என்று வைத்து இருப்பாரேயானால் அதையும் இப்படிப்பட்ட கல்வி நிறுவனங்களுக்குத்தான் செலவிடுவேன் என்று சொன்னார்.

         சொன்னது ஒன்றும் வெற்றுவேட்டு மேடைப் பேச்சு அல்ல. ஈரோட்டில் உள்ள அய்யா பிறந்த இல்லம் அய்யா அம்மாவிற்கு வழங்கிய தனிச் சொத்து அதையும் அம்மா அய்யா - அண்ணா நினைவில்லத்திற்கு வழங்கினார்.

அதைவிடத் தம் தந்தை கனகசபையின் மகளாக வந்த உரிமைச் சொத்துகளையும் உடன் பிறந்தவர்கள் சகோதர சகோதரிகளுக்கென்று ஒதுக்கிக் கொள்ளாமல் அறக்கட்டளைக்கே அளித்த பேருள்ளத்திற்கு சொந்தக்காரர் அன்னை.

சினம் கொண்ட வேங்கை

         அமைதிப் புறாவான அன்னை சிங்கொண்ட வேங்கையாவது உண்டு. தந்தை பெரியார் படம், சிலை அவமதிப்பு செய்யப் பெற்றபோது பெரியார் இல்லாவிட்டால் உமக்கு ஏது இந்த உயர்நிலை என்று எண்ணிப் பார்த்தால் போதும் என்று பொங்கியது இன்று தந்தை பெரியார் சிலை அவமதிப்புச் செய்வோர் செவுளில் விடும் அறை எனலாம்.

         ஜாதி ஒழிப்புப் போரில் சிறைப்பட்டுச் சிறையில் உயிர் நீத்த மூவர் விஷயத்தில் அம்மாவின் தீரம் மிக்க நடவடிக்கைகள் இந்திரா காந்திக்குக் கறுப்புக்கொடி காட்ட சென்றபோது காவல்துறை அதிகாரி தொண்டர் ஒருவரை நையப் புடைத்த வைத்தபோது துணிந்து நியாயம் கேட்ட செயல் துணிச்சலிலும் அன்னையார் சளைத்தவர் அல்ல என்று காட்டும்.

         தியாகத்தின் திரு உருவம், தமிழ்ச் சமுதாயத்தின் நலனுக்குத் தன் இளமை, தன் வாழ்வு, தன் உயிர் அனைத்தும் அளித்த தொண்டில் உயர்ந்த தூயவர் அன்னை தமிழர் நெஞ்சங்களில் என்றும் குடியிருப்பார்.

- தொகுத்தவர் முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்

No comments:

Post a Comment