Tuesday 31 March 2020

கருஞ்சட்டை பெண்களின் மணிமகுடம் - தோழர் ஓவியா

கருஞ்சட்டை பெண்களின் மணிமகுடம் - தோழர் ஓவியா

மணியம்மையாரின் சிறப்பியல்பை தோழர் ஓவியா அவரது "கருஞ்சட்டை பெண்கள்" புத்தகத்தில் இப்படி பதிவு செய்கிறார்:
"மணியம்மையார் அளவுக்கு ஒரு மிகப்பெரிய எதிர்ப்பலையை வசவுச் சொற்களை, அபவாதத்தைச் சந்தித்த வேறு ஒரு பெண் தலைவர் திராவிடர் இயக்கத்தில் மட்டுமல்ல, வேறு எந்த இயக்கத்திலாவது இருக்கமுடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.  இல்லையென்றே சொல்லலாம்."
மணியம்மையாரின் கொள்கைப்பற்றை பற்றி பேசுகையில்..
"மணியம்மையார் என்ற பெயரைக் கேட்டவுடன் பெரியாரைத் திருமணம் செய்தபின்னான மணியம்மையார் அவர்களைத் தான் நாம் சிந்திக்கத் தலைப்படுகின்றோம். பெரியாரின் துணைவியார் என்றும், பெரியார் அவர்களுக்குப் பின் இயக்கத்தை வழிநடத்தியவர் என்ற கோணத்திலும் மட்டுமே பார்க்கிறோம். ஆனால், பெரியாரை திருமணம் செய்வதற்கு முன் அவர் எத்தகைய பணிகளை மேற்கொண்டார் என்று பார்ப்பது பல விதங்களில் ஆழ்ந்து நோக்கத்தக்க விசயம். எங்களை எல்லாம் வாரிசாக பெரியாரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லையா என்று மூவலூர் இராமிருதம் அம்மையார் அவர்கள் கூட கேட்டார்கள் என்பதைப் பார்க்கும் போது பெரியார் எதற்காக மணியம்மையாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. அதற்கான பதில் மணியம்மையார் அவர்களின் திருமணத்திற்கு முன்னான பொது வாழ்க்கையில் தான் இருக்கிறது." 
மணியம்மையாரின் திருமணம், வீடு பற்றிய பார்வை எப்படி இருந்தது?
திருமணம்‌ குறித்து இளவயது மணியம்மையாருக்கு இருந்த கருத்துகளாக நாம்‌ அறிந்துகொள்வது யாதெனில்‌, “கல்வி கற்ற பெண்கள்‌ சமையல்‌ வேலைக்குப்‌ போகக்‌ கூடாது. சமையல்‌ வேலைக்கும்‌ குடும்ப நிர்வாகத்திற்கும்‌ என்று படித்த பெண்களை பயன்படுத்த பெற்றோர்கள்‌ கல்யாணம்‌ செய்வார்களேயானால்‌, கண்டிப்பாக படித்த பெண்கள்‌ கல்யாணத்தை மறுத்துவிட வேண்டும்‌. பெற்றோர்கள்‌ கட்டாயப்படுத்தினால்‌ பெண்கள்‌ வீட்டை விட்டு வெளியேறிவிட
வேண்டும்‌' என 1944இல்‌ மணியம்மையார்‌ எழுதுகிறார்‌. அவர்‌ மேலும்‌ தொடர்கிறார்‌, “நாம்‌ படிப்பது நல்ல அடிமையாகவா அல்லது மேன்மையும்‌ விடுதலையும்‌ பெறவா ? இதற்கு மாதர்‌ சங்கங்கள்‌ பாடுபட வேண்டும்‌.'
தனது 30 வயது வரை திருமணத்தை மறுத்த பெண்ணாக வீட்டில் இருந்திருக்கிறார்‌ மணியம்மையார்‌. கொள்கை மீது கொண்ட பற்று தவிர வேறு காரணம்‌ இதற்கு இருந்திருக்க வாய்ப்பில்லை. வீட்டில்‌ திருமணப்‌ பேச்சுகள்‌ இருந்தால்‌ கூட, இவரின்‌ சிந்தனை அதற்கு மாறாக இருந்திருக்கிறது. சுதந்திர வாழ்வை விரும்பும்‌ பெண்கள்‌ திருமண வாழ்வைத்‌ தேர்ந்தெடுக்க முடியுமா என்பது இன்றைய காலகட்டத்தில்‌ கூட மிகப்பெரிய கேள்விக்குறி. இரண்டும்‌ ஒருசேரக்‌ கிடைக்குமா? கிடைத்தாலும் முழுமையானதாக இருக்குமா ? என்னும்‌ கேள்விகளுக்கு இன்றுகூட விடை கிடைப்பது சுலபம்‌ அல்ல.
தன்‌ விடுதலையின்‌ மீது கொண்ட பற்றால்‌, திருமணம்‌ செய்துகொண்டு
ஒருவருக்கு அடிமையாக வாழ வேண்டாம்‌ என்னும்‌ உரிமை உணர்வுப்‌ பெற்ற பெண்ணாக அவர்‌ இருந்திருக்கிறார்‌ என்பதை அவரது பதிவுகளில்‌ இருந்து தெரிந்துகொள்கிறோம்‌. இவ்வளவு தெளிவான பெண்ணைத்‌ தான்‌ தந்தை பெரியார்‌ அவர்கள்‌ தனது சொத்தின்‌ வாரிசு எனப்‌ பல இடங்களில்‌ குறிப்பிடுகிறார்‌. அவரை சட்டப்பூர்வ வாரிசாக்க திருமணம்‌ செய்துகொள்ள பெரியார்‌ முடிவெடுத்த போது, மணியம்மையாரை ஏமாற்றி திருமணம்‌ செய்து கொள்வதாகவும்‌, தவறான நோக்கத்தோடு திருமணம்‌ செய்வதாகவும்‌ காரணங்கள்‌ சொல்லப்பட்டன . பிரச்சாரம்‌ செய்யப்பட்டது. அரசியல் மாற்றங்களுக்கும்  அந்தக்‌ காரணங்கள்‌ முன்வைக்கப்பட்டன.  
பெரியாரை குழந்தையாக  பாவித்த மணியம்மையார்: 
ஐம்பது வயதில் நாகம்மையாரை இழந்த பெரியார் தனது அறுபத்தியொன்பதாம் வயது வரை தன்னை தானே பராமரித்துக்கொள்கிறார். ஆண்களிடம் சுய பராமரிப்பு என்பது .கிடையாது. துணை இல்லாமல் வாழ்வதென்பது பெண்ணை விட ஆணுக்கு கடினமானது. இந்த சூழ்நிலையில் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்ட பெரியாரை கவனித்துக்கொள்வது தமிழ் சமூகத்துக்கு செய்யும் சேவையாக கருதப்பட்டது. மணியம்மையார் ஏற்றுக்கொண்டார். இந்த எண்ணத்தின் வளர்ச்சிப்போக்காக பெரியாரை தன்னுடைய குழந்தையாக பாவிக்க கற்றுக்கொண்டதாக மணியம்மையார் கூறுகிறார்.
ஒரு எழுத்தாளராக, போராளியாக பொதுவாழ்க்கைக்கு வந்த மணியம்மையார், தன்னுடைய எழுத்தாற்றல், நிர்வாத்திறன் போன்றவற்றை ஓரளவுக்கு ஒதுக்கிவைத்துவிட்டு பெரியாரை கவனிப்பதை தனது முழுநேர பணியாக மாற்றிக்கொள்ள தயாராக இருந்தார், அவ்விதமாக தன்னை பெருமளவு மாற்றியும் கொண்டார்.
பெரியாருக்கு மணியம்மையார் மீது எப்படி நம்பிக்கை ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதை தோழர் ஓவியா இவ்வாறு விளக்குகிறார்.
சாதி மதத்தை மட்டுமல்ல அடிப்படை குடும்ப அமைப்பையும் மறுக்கும் இயக்கம் திராவிடர் கழகம், யார் ஒருவர் குடும்பத்தை மறுக்கிறார்களோ, அவர்கள் சாதி மதத்தைப் பெரும்பாலும் ஒதுக்கி விடுவார்கள். அன்னை தெரசா போன்ற சில விதிவிலக்கான மனிதர்களைத் தவிர. இவை அனைத்தையும் துறந்து இயக்கத்துக்கு வந்தவர் மணியம்மையார். அதன் காரணமாகவே மணியம்மையார் பெரியாரின் கண்களுக்கு தனித்துவமாக தெரிந்திருக்கலாம். அவரின் நம்பிக்கைக்குரிய நபராக பார்க்கப்பட்டிருக்கலாம். இயக்கம் என்னும் நிறுவனம் நம்பிக்கையான நபர்களின் கைகளுக்குச் செல்ல வேண்டும் என்று பெரியார் விரும்பினார். தனக்கு நம்புவதற்கு யாருமில்லை என பெரியார் சொன்ன தருணங்களும் உண்டு. அத்தகைய சூழலில் தான் தன்னை இயக்கத்திற்கென்றே முழுமையாக ஒப்புக் கொடுத்த மணியம்மையாரை பெரியார் திருமணம் செய்துக்கொண்டார்.
என்னைப் பலிகொடுத்து…
இதை தான் பெரியார் இப்படிச்சொல்கிறார்.. "நான் என்னைப் பலிகொடுத்து இந்த நிறுவனத்தை காப்பாற்றுவதற்காக ஒரு வேலை செய்யப்போகிறேன்". இன்று வரை கூட அந்த திருமணம் குறித்த ஏதோவொரு அவதூறு வந்துக்கொண்டே தான்  உள்ளது.
பெரியாரின் காரியம் நிறைவேறியதா?
பெரியார் தன்னை பலிகொடுத்து எடுத்த அந்த முடிவு கைகூடியதா என்பதை பெரியாருக்கு பிறகு மணியம்மையார் அவர்களின் வாழ்விலும், செயல்பாட்டில் இருந்தும் அறியலாம். அதை தோழர் ஓவியா எழுதுகிறார்:
சிறந்த நிர்வாகி:
பெண்கள்‌ தலைமைக்குத்‌ தகுதியானவர்களா ? என்கின்ற கேள்வி வருகிறபோதெல்லாம்‌, பெண்கள்‌ உணர்ச்சிவசப்‌ படக்கூடியவர்கள்‌, நிர்வாகத்‌ திறமையற்றவர்கள்‌ என்கின்ற கருத்து முன்வைக்கப்படுவதுண்டு. ஆனால்‌, அம்மையார்‌ அவர்கள்‌ ஒரு பக்கம்‌ போர்க்குணமிக்க தலைவராக இருந்த அதே நேரத்தில்‌, மற்றொரு பக்கம்‌ பல நிறுவனங்களை உருவாக்கி சொத்துகளை நிர்வகிக்க கூடிய தனித்திறன்‌ பெற்றவராக - இருந்திருக்கிறார்‌ என்பது வியப்புக்குரிய விசயமாகும்‌. பெரியார்‌ திடலில்‌ இன்று காணப்படும்‌ 'விடுதலை' பத்திரிக்கை இயங்கும்‌ ஏழு அடுக்கு கட்டடம்‌, நடிகவேள்‌ இராதா மன்றம்‌, பெரியார்‌ சுயமரியாதை இயக்க ஆய்வு நூலகம்‌ இவை அனைத்தும்‌, இன்னும்‌ இன்று நடந்துவரும்‌ கல்வி நிறுவனங்கள்‌ பலவற்றுக்கும்‌ தோற்றுவாயை ஏற்படுத்தியது அன்னை மணியம்மையார்‌ அவர்கள்‌ தான்‌. அவருடைய தன்னலம்‌ கருதா தூய தொண்டிற்கு சாட்சியாக, தமிழ்ச்‌ சமூகத்தின்‌ பல தலைமுறைகள்‌ இன்னும்‌ பலன்பெற, நிற்கின்றன இந்த நிறுவனங்கள்‌.
தனது திருமண ஏற்பாட்டின்‌ நோக்கத்தை நிறைவு செய்யும்‌ பொருட்டு அம்மா அவர்களை அய்யா அவர்கள்‌ பெரியார்‌ சுயமரியாதை பிரச்‌சார நிறுவனத்தின்‌ ஆயுட்‌ செயலாளராக நியமித்தார்‌. அவருடைய எண்ணமும்‌ மதிப்பீடும்‌ எவ்வளவு சரியானது என்பதை வாழ்ந்து மெய்ப்பித்தார்‌ அம்மா. பெரியாருடைய சொத்தைத்‌ தொடர்பு படுத்தி அம்மையார்‌ அவமதிக்கப்பட்டது மிக அதிகம்‌. ஆனால்‌ தனக்கு கொடுத்த சொத்துகளையும்‌ காப்பாற்றி அவருடைய சுயமரியாதை பிரச்சார நிறுவனத்திற்கே எழுதிக்‌ கொடுத்தார்‌ அம்மா. கடைசியாக தியாகராயர்‌ நகர்‌ மீரான்‌ சாயுபு தெருவில்‌ தனக்கு இருந்த வீட்டையும் அன்னை மணியம்மையார்‌ அறக்கட்டளை என ஏற்படுத்தி அதற்கு எழுதி வைத்திருக்கிறார்‌. இப்படிப்பட்ட உதாரணத்தை இந்த உலகத்தில் எத்தனை இயக்கங்களில்‌ நாம்‌ பார்க்க முடியும்‌?

இப்படி அன்னை மணியம்மையார் வாழ்ந்த தொண்டறம் கொண்ட வாழ்வை தோழர் ஓவியாவின் இந்த கட்டுரை மிக விரிவாக  ஆராய்ந்து எழுதப்பட்டிருகிறது. இந்த கட்டுரை இடம்பெற்ற “கருஞ்சட்டை பெண்கள்” புத்தகத்தை நாம் அனைவரும் வாசிக்க வேண்டும்.


No comments:

Post a Comment