Tuesday 31 March 2020

பெரியார் – மணியம்மை திருமணம்: ஒரு வரலாற்று உண்மை விளக்கம் – நூல் அறிமுகம் ஆக்கம்: வெற்றிச்செல்வன்

பெரியார் – மணியம்மை திருமணம்: ஒரு வரலாற்று உண்மை விளக்கம் – நூல் அறிமுகம் ஆக்கம்: வெற்றிச்செல்வன்


வரலாறு என்பது சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்து, தன்னுடைய பார்வையை வாசகனிடம் முன்வைப்பது என்பதே.ஆனால், இந்த நூலின் தனிச்சிறப்பு வரலாற்று ஆவணங்களை வரிசைப்படுத்தி வைத்துவிட்டு, ஆய்வு முடிவினை வாசகர்களிடமே விட்டுவிடுவது என்பதுதான்.
1943-இல் ‘குடிஅரசு’ ஏட்டில் அன்னை மணியம்மையார் எழுதியது தொடங்கி, பெரியார், அண்ணா, இராஜாஜி, சாமி சிதம்பரனார் உள்ளிட்ட பலரது கட்டுரைகளும், கடிதங்களும் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
தன்னுடைய திருமணம் குறித்த விளக்கங்களைத் தொடர்ந்து பொதுவெளியில் முன்வைக்கிறார், தந்தை பெரியார். தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்து மாறாமல் இருப்பது பெரியாரின் மன உறுதியையும், இயக்கத்தவரிடம் அதற்கான தன்னிலை விளக்கத்தைத் தமது இதழ்களின் வாயிலாக முன்வைப்பது அவரது ஜனநாயகப் பண்பையும் காட்டுகிறது.  ” இயக்கம் எப்படி இருந்தாலும், இயக்கத்துக்கு யார் தலைவராய் இருந்தாலும், என்னுடைய கொள்கைகளும், கொள்கைக்கு ஏற்ற பிரச்சாரமும் எனக்குப் பின்னும் நடந்தேற வேண்டும் என்கின்ற பேராசை எனக்கு உண்டு” (குடிஅரசு 16.07.1949) என்பது பெரியாரின் உறுதி.
பெரியாரின் திருமணம் குறித்த இராஜாஜியின் கடிதத்தில், ‘அந்தரங்கம்’ என்று குறிப்பிட்டதால் கடைசிவரை அதை வெளியிடாத பெரியாரின் பெருந்தன்மை வியக்க வைப்பது.
ஆனால், ”இது திருமணம் அல்ல, திருமணம் என்ற பேரால் ஓர் ஏற்பாடுதான் என்று பெரியார் சாக்குக் கூறுவது எங்கள் பகுத்தறிவைக் கேலி செய்வதாகவே நாங்கள் கருதுகிறோம்” (திராவிட நாடு, 05.07.1949) என்கிறார் அண்ணா.
தேர்தல் அரசியலே பெரியார்-அண்ணா பிரிவினைக்கான உண்மையான காரணம் என்பதை ஆசிரியரின் சொற்கள் உறுதிப்படுத்துகின்றன. “தந்தை பெரியாரின் திருமணம் எங்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. நாங்கள் அரசியலுக்குப் போக வேண்டுமென்று விரும்பினோம். அதற்காக இது பயன்பட்டது என்று பேராசிரியர் அன்பழகன், சுயமரியாதை இயக்கப் பொன்விழாவில் (1975), அன்னை மணியம்மையார் அவர்களது முன்னிலையிலேயே வெளிப்படையாக, பல லட்சக்கணக்கானவர்களிடையே உண்மையை உரைத்தார்; உடைத்தார்” என்கிறார் ஆசிரியர் கி.வீரமணி.
தந்தை பெரியாரின் பிம்பத்தைச் சிதைப்பதற்கு, தொடர்ந்து பொதுப்புத்தியில் கட்டமைக்கப்பட்டு வரும் ஒரு விஷயம், அவரது திருமணம். அவ்வாறு அவதூறு பரப்புபவர்களுக்குத் தக்க பதிலைத் தந்துள்ளது இந்நூல் என்றால் அது மிகையாகாது.


- வெற்றிச்செல்வன்

No comments:

Post a Comment