Tuesday 31 March 2020

அய்யாவும்-அண்ணாவும் - வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

அய்யாவும்-அண்ணாவும் - வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி


அண்ணாவை விமான நிலையத்தில் வழி அனுப்பிய பின் ஓரளவிற்கு நிம்மதியுடன் இருந்ததுடன், அமெரிக்காவில் அண்ணாவுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக டாக்டர் மில்லர் அவர்களால் நடத்தப்பெற்றது என்ற செய்தி அறிந்து மிகவும் மகிழ்ந்தார் அய்யா. திருச்சி கல்வி நிறுவனங்களின் சார்பில் (அங்கு ஆண்டுதோறும் நடைபெறுகிறது) நடைபெற்ற நிறுவனர் நாள் விழாவில் தவத்திரு குன்றக்குடி அடிகளாருடன் கலந்து கொண்ட அய்யா அவர்கள், அண்ணாவிற்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது குறித்து மிகுந்த மகிழ்ச்சியான செய்தி என்று கூறி அண்ணா நலம் பெற தனது விருப்பத்தையும் தெரிவித்தார்!
அய்யாவின் பிறந்த நாள் செய்தி என்று ஆண்டுதோறும் மலருக்கென எழுதி, வாங்கும் முயற்சிகளை, நான் பொறுப்பேற்று மலர் வெளியிடுவதைத் தொடங்கிய 1962 ஆம் ஆண்டிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன். அய்யா மறைந்த ஆண்டான 1973, செப்டம்பர் வரை அவரது ஒவ்வொரு பிறந்த நாளுக்கு முன்னமே அவரது எண்ணக் குவியல், சிந்தனை ஓட்டம், அவர் மக்களுக்குத் தரும் செய்தியை அதில் உள்ளடக்கியே எழுதும் படி வேண்டிட அய்யாவும் மகிழ்ச்சியுடன் அதைச் செய்தார்கள்!
குறிப்பிட்ட அவ்வாண்டுச் செய்தியில் அய்யாவுக்குக் கூட ஓரளவு சலிப்பு, சங்கடமான மனநிலை எப்படியோ ஏற்பட்டு விட்டது.
திருச்சியிலிருந்து கொண்டு அதை எழுதி, அச்சிட எனக்கு அனுப்பி வைத்தார்கள்.
உடல் நோய்த் துன்பங்களை மிக அதிகமாக இருந்ததே அதற்கு மிக முக்கிய காரணமாகும். அதன் பிறகு அடுத்த ஆண்டே வேலூர் மருத்துவமனையில் எனது முந்தைய கட்டுரையில் விரிவாகக் குறிப்பிட்டது போல அய்யாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அந்த ஆண்டு மலரில் அய்யாவின் கட்டுரையைப் படித்துவிட்டு அண்ணா அவர்கள் மிகவும் வருந்தி, அதே நேரத்தில், அய்யா அவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் வழங்கிடதக்க வகையில் அக்கடிதத்தினை எழுதி அனுப்பினார்கள்.
அண்ணா அவர்கள் நியூயார்க் நகர் டவுன்ஸ்டே மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைக்குப் பின் தங்கி, ஓய்வு எடுத்துவரும் வேளையில், அவருக்கு ஏராளமாக நூலகளைப் படிக்கும் வாய்ப்பு – கால அவகாசம் இருக்கும் என்பதாலும், உடனே கிடைக்குமாறு விடுதலை ஆண்டுதோறும் வெளியிடும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மலரை அவருக்கு விமான அஞ்சல் மூலம் விரைவாகக் கிடைக்கும்படி அனுப்பியிருந்தேன்.
அதைப்பெற்று ஒவ்வொரு பக்கத்தையும் ஆழமாக அண்ணா அவர்கள் படித்துவிட்டு, அவரது கைப்பட ஒரு கடிதம் ஒன்றினை ஐயாவுக்கு எழுதினார், அந்தக் கடிதம் ஓர் இலக்கியமாகவே இருந்தது எனலாம்!
அய்யாவின் கட்டுரையும், அண்ணாவின் கடிதமும், இரண்டுமே ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவைகள் என்பதாலும், ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதை இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வாய்ப்பிற்காகவும், அவை இரண்டையும் அப்படியே கீழே தருகின்றேன் :
தந்தை பெரியார் கட்டுரை:
எனது நிலை
எனக்கு வயது 90. உடல் நிலை மிகவும் மோசம். கைகால் நடுக்கம் அதிகம். சிறுநீர் கழிக்கும்போது சப்தம் போட்டுக் கொண்டுதான் கழிக்கிறேன். அதாவது, அவ்வளவு வலி. தூக்கம் சரியாய் வருவதில்லை. நினைத்தபோது உடலில் ஏதாவது ஒரு பாகத்தில் வலியேற்பட்டு சில ஏப்பமோ, காற்றுப் பிரிவோ ஏற்பட்ட பிறகு நோய் விலகுகிறது. உண்ட உணவு சரியானபடி ஜீரணமாவதில்லை. முன்போல் உணவும் சரியாய் உட்கொள்ள முடியவில்லை. எனக்கு இனி பிரச்சாரத்தில் ஆசை இல்லை. ஒரு வாரப் பத்திரிகை துவக்கி அதற்கு ஆசிரியனாக இருந்து எழுதிக் கொண்டிருக்க வேண்டும் என்பதில்தான் ஆசை அதிகமாக இருக்கின்றது. வெளியாக்கப்பட வேண்டிய விடயம் அதிகம் இருக்கிறது. எந்தக் காரியம் பற்றியும் மனதிற்கு உற்சாகம் ஏற்படுவதில்லை. களைப்பு அடிக்கடி ஏற்படுகின்றது.
நெஞ்சில் வலி தீடிரென்று ஏற்படுவதும் ஏப்பம் வந்த பிறகு குறைவதுமாக இருக்கின்றது.
எதைப்பற்றியும் சலிப்பும், வெறுப்பும் ஏற்பட்டு விடுகின்றது.
சுருக்கமாகச் சொல்வதானால் வாழ்வே வெறுப்பாக இருக்கிறது என்றாலும் தற்கொலை செய்து கொள்ள மாட்டேன்.
நினைத்தபடி நினைத்த ஊருக்கெல்லாம் என்னை அழைக்காதீர்கள்.
அந்தப்படி என்னை மக்கள் அழைக்காமல் இருப்பதற்காகவே எனது வழிச் செலவு தொகையை ரூ.100/- இருந்து ரூ. 150/- ஆக ஏற்படுத்திவிட்டேன்.
நூறு ரூபாய் எனக்கு வண்டிச்செலவு, ரிப்பேர் செலவு, வைத்தியச் செலவு, முதலியவைகளுக்கு அநேகமாகச் சரியாய் போய்விடும். சில சமயங்களில் போதாமல் போகும், ஒரு தடவையில் 2,3 பயணம் ஏற்பட்டால் ஒரு அளவு மீதியாகி பிரச்சாரத்திற்கு பயன்படும்.
எப்போது எனக்கு பெரிய வண்டி வரப்போகிறது. செலவு அதிகமாகும். எனக்கு பிரச்சாரத்திற்கு வேறு அநேக செலவு இருக்கிறது.
எதற்காக எளிதில் காண முடியாத ஒரு தனி இடத்திற்குப் போகலாமா அல்லது ஈரோட்டிற்கே போய்விடலாமா என்று கூட எண்ணுகின்றேன்.
இனி என் ஆயுள் எவ்வளவு இருக்க முடியும் என்பதில் எனக்கு கவலை இல்லை. இருந்தவரையில் தொண்டு செய்யலாம் என்று தான் திட்டம் போடுகிறேன்.
ஆனால் எதிர்பாராத சம்பவங்கள் நடப்பதும், ஏற்படுவதும், இயற்கையேயாகும். அது போல் என் முடிவும் இருக்கலாம். பொதுவாக என் மனம் குழப்பமாக இருக்கிறது. துறவி ஆகிவிடுவேனோ என்னமோ?
- 17.9.1968 தேதியில் தந்தை பெரியார் மலரில் எழுதியது.
தந்தை பெரியாரின் இந்த செய்தியை அண்ணா அவர்கள் அமெரிக்க மருத்துவமனையில் இருந்து படித்தார். அங்கிருந்து ஒரு கடிதம் எழுதுகின்றார்.
“தங்கள் பிறந்த நாள் மலரில் தாங்கள் எழுதிய கட்டுரை ஒன்றில் மனச்சோர்வுடன் Òதுறவியாகி விடுவேனோ என்னவோÓ என்று எழுதியிருந்ததைக் கண்டு மிகவும் கவலைக் கொண்டேன்.
தங்கள் பணி, மகத்தான விழிப்புணர்ச்சியைச் சமூகத்தில் கொடுத்திருக்கின்றது. புதியதோர் பாதை மக்களுக்குக் கிடைத்திருக்கிறது. நான் அறிந்த வரையில், இத்தனை மகத்தான வெற்றி, வேறு எந்தச் சமூக சீர்திருத்தவாதிக்கும் கிடைத்ததில்லை. அதுவும் நமது நாட்டிலே. ஆகவே சலிப்போ, கவலையோ துளியும் தாங்கள் கொள்ளத் தேவையில்லை. தமது வாழ்நாளில், தம் கண்ணெதிரே தமது வெற்றி மலர்ந்ததைக் கண்ட வாய்ப்பை பெற்ற சமூகப் புரட்சியாளர் அய்யாவைத் தவிர வேறு எவரும் இல்லை என்பதை அண்ணா அவர்கள் அய்யாவின் தேற்றுதலுக்காக எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
பின் சிகிச்சை பெற்று அண்ணா திரும்பினார். அய்யா நுங்கம்பாக்கம் அவின்யூ சாலையில் அண்ணாவின் வீட்டிற்குச் சென்று நலம் விசாரிதார்கள். அய்யாவிடம் அண்ணா சட்டையைக் கழற்றி அறுவை சிகிச்சை பகுதிகளையும், தையல் போடப்பட்ட பகுதிகளையும் காட்டியபோது, அய்யா தடவிக் கொடுத்து தழுதழுத்த குரலில் ஆறுதல் கூறினார்.
அண்ணா மறைந்தபோது கலைஞரும், எம்ஜியாரும் வந்து Òஅய்யா தங்கள் தலைமகன் போய்விட்டாரே அய்யாÓ என்று கதறினர்.
அய்யா இரவு வெகு நேரம் தூங்கவில்லை. அனுதாபச் செய்தியை கட்டுரை போல் எழுதினார். Òநடக்கக் கூடாதது நடந்து விட்டது.Ó என்று தொடங்கி முடிவு பற்றி எழுதினார்.
அண்ணா மறைந்தார். அண்ணா வாழ்க என்று இலக்கிய வரலாற்றுச் செறிவு கலந்த செய்தியை விடுத்தார். இங்கிலாந்து நாட்டின் மன்னர்கள் மறைந்தால், “The King is dead; long live the king” என்று கூறுவது மரபு.
அதாவது மன்னர் என்பவர் தனி நபர் அல்லர். அவர் ஒரு தொடரும் நிறுவனம் என்பதாக அதன் பொருள் கொள்ளப்படுகின்றது. அதே முறையில் அய்யா அண்ணா அவர்கள் தனி நபராக கருதாமல் அண்ணாவை ஒரு நிறுவனம் என்று புகழ்ந்தார்கள் !!

(ஆதாரம்: அய்யாவின் அடிச்சுவட்டில் É – ஆசிரியர் கி. வீரமணி (பாகம் 1)- வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

No comments:

Post a Comment