Tuesday 31 March 2020

பெரியார் மணியம்மை திருமணம் - க. திருநாவுக்கரசு

பெரியார் மணியம்மை திருமணம் - க. திருநாவுக்கரசு 

தி.மு. க உருவானதற்கு முக்கிய காரணம் என்று அனைவராலும் பேசப்படுவது மணியம்மையாரைப் பெரியார் திருமணம் செய்துக்கொண்டதால் தான் என்று கூறுகிறார்கள்; எழுதுகிறார்கள். ஆனால் திமுக உருவானதற்கு மணியம்மையார் - பெரியார் திருமணம் தான் காரணமா? என்ற வினாவுக்கு விடை காண்பதற்கு முன்னர் மணியம்மையார் யார்? எனது தெரித்துக்கொள்வதும், அவர் எப்படித் திராவிட இயக்கத்துக்குள் வந்தார் என்பதும் அறிந்துக்கொள்ள வேண்டிய செய்திகளே ஆகும். பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்ததற்கு பிறகு ஊருக்கு ஊர் அவருக்கு முக்கிய நண்பர்களின் தொடர்பு ஏற்பட்டது. பெரியார் அவர்களது அதிரடிப் பேச்சும், கொள்கை விளக்கமும், சுயமரியாதை எழுச்சியும், பார்பனரல்லாதாரின் விழிப்பும் அவருக்கு இயக்க நண்பர்களின் வட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அப்படிக் கிடைத்தவர்களுள் வேலூர் எஸ். கனகசபையும் ஒருவர். இவர்தம் மகள்தான் மணியம்மையார். மணியம்மையாரின் இயற்பெயர் காந்திமதி. எஸ். கனகசபையின் உற்ற நண்பராக விளங்கிய கு.மு. அண்ணல் தங்கோ காந்திமதி எனும் பெயரை க. அரசியல்மணி என்று மாற்றம் செய்தார். மணியம்மையார் 9 ஆம் வகுப்பு படிக்கிறபோதே அவர்தம் தந்தையரால் பெரியாருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.  
மணியம்மையார் 10.3.1920 இல் பிறந்தவர் (1917 என்றும் சில பதிவுகளில் காணக் கிடைக்கிறது) எஸ். எஸ்.எல்.சி வரை படித்ததற்குப் பின் நெல்லை மாவட்டத்திலுள்ள குலசேகரன் பட்டினத்தில் தமிழ்ப் புலவர்க்குப் படிப்பதற்காக சி.டி. நாயகம் தமிழ்க் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். புலவர் படிப்பு கூட முழுமை பெற்றதாகத் தெரியவில்லை. மணியம்மையார் 1942, 1943, 1944 ஆகிய ஆண்டுகளில் எந்த ஆண்டு முதற் கொண்டு பெரியாரின் அணுக்கச் செயலாளராகச் சேர்ந்தார் எனச் சரியாகச் சொல்ல முடியவில்லை. 

(1) மணியம்மையாரின் தந்தையார் கனகசபை பெரியாரோடு தொடர்புள்ளவர். இவர் நலம் விசாரித்து எழுதிய கடிதம் ஒன்றுக்குப் பதில் எழுதிய பெரியார், 'எல்லாரும் தூர இருந்தபடி உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று எழுதுகிறார்கள். ஆனால், கூட இருந்து உதவி செய்வதற்கு யாருமில்லை; என்னமோ என் காலத்தை ஒட்டிக்கொண்டிருக்கிறேன்' எனக் குறிப்பிட்டிருந்தார். அதைப் படித்த கனகசபையார் தம் மகளை வேலூரிலிருந்து அழைத்துச் சென்று பெரியாரிடம், 'இந்தப் பெண் தங்கள் கூட இருந்து தொண்டு செய்யட்டும்' எனக் கூறிப் பெரியாரிடம் பணியாற்ற விடுத்தார் என்று ஒரு குறிப்பு தெரிவிக்கிறது. இக்குறிப்பில் எந்த ஆண்டு எனது தெளிவாகத் தெரியவில்லை.  
(2) பெரியாரின் ஆரம்ப கால நண்பர்களும் ஒருவரான கோவை அய்யாமுத்து அவர்கள் எழுதிய 'எனது நினைவுகள்' என்ற புத்தகத்தில் ஒருமுறை பெரியாரையும் - மணியம்மையாரையும் ஈரோடு இரயில்வே சந்திப்பில் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்த போது இரயில் பெட்டியிலே அவருக்கு விருந்து வைத்த விவரங்களையும் அப்போதுதான் முதன் முதலாக மணியம்மையாரைப் பார்த்த விவரத்தை எழுதி இருக்கிறார். இந்தச் சம்பவத்தின் போது கவி கா.மு. ஷெரீப் உடன் இருந்ததது தெரிவிக்கிறார் அய்யாமுத்து. இந்நிகழ்ச்சி 1943 ஆம் ஆண்டு நடந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
(3) ஒரு சிலர் மணியம்மையார் 1944 ஆம் ஆண்டு சேலம் மாநாட்டில் முதன் முதலாகப் பேசினார். இதிலிருந்து தான் அவர் பெரியாருக்கு அணுக்கச் செயலாளராக இருக்கத் தொடங்கினார் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
நம்மைப் பொருத்தவரை மணியம்மையாரை அவர்தம் தந்தையார் பெரியாரிடம் அழைத்து வந்து சேர்த்த நிகழ்வை அய்யாமுத்து நிகழ்வோடு ஒப்பிட்டுப் பார்த்தால் 1942-43 இல் மணியம்மையார் பெரியாரோடு இணைந்து பணியாற்றத் தொடங்கினார் எனக் கொள்ளலாம். மேலும், பெரியாரிடம் சேர்ந்ததற்குப் பின்தான் புலவர் வகுப்புக்கூட மணியம்மையார் படிக்கத் தொடங்கி இருக்கக்கூடும் எனக் கருத வாய்ப்பு உண்டு. மணியம்மையார் 1943 முதல் பெரியார் இயக்கத்தில் முழு ஈடுபாடு கொள்ளத் தொடங்கினார். இயக்கப் புத்தகங்களை விற்பது, வரவு - செலவுகளைக் கணக்கிடுவது; பெரியார் பேசுகிற போது குறிப்பு எடுப்பது; அவர் பேசுவதற்கான குறிப்புகளைத் தயாரிப்பது; பெரியாரைப் பாதுகாப்பது போன்ற பணிகளில் முக்கியமாகத் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். பெரியார் 24-12-1973 ல் மரணம் அடைந்தவுடன் திராவிடர் கழகத்துக்குத் தலைமையேற்ற இவர் 1978 இல் இயற்கை எய்தினார். மணியம்மையாரின் இயக்க நுழைவே 1949 இல் திமுக தோன்றக் காரணங்களில் ஒன்றாயிற்று.   
அறிஞர் அண்ணா முதல் இயக்கத் தோழர்களில் பெரும் பகுதியினர் பெரியார் - மணியம்மை திருமணம் குறித்துக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர்

- திராவிட இயக்க ஆய்வாளர் க. திருநாவுக்கரசு 
திமுக வரலாறு (பாகம் 1) 

No comments:

Post a Comment