Tuesday 31 March 2020

நெருக்கடி நிலை காலத்திலும் நிலை குலையாத அன்னையார்! - கவிஞர் கலி.பூங்குன்றன்

பார்ப்பனர்கள் திருந்திவிட்டனரா? உள்ளத்தில் மாற்றம் பெற்று விட்டனரா? என்கிற கேள்விக்கு நெருக்கடி காலம் நமக்குப் பதில் சொல்லும்.

அந்தக் காலம் - ஆரிய ஆட்சி மீண்டும் அரங்கேறிய காலம்! மனு தர்மம் மீண்டும் மகுடம் சூட்டிக் கொண்ட பருவம்!

ஆரியம் அடங்கி விடவில்லை; அடங்கியது போலப் பாசாங்கு செய்கிறது; சந்தர்ப்பம் கிடைத்தால் தன் சுய ரூபத்தைக் காட்டத் தயங்காது என்பதை நெருக்கடிக் காலம் நெற்றியடியாக நிரூபித்துக் காட்டியது!

திருமதி இந்திரா காந்தி தேர்தல் செல்லாது என்று அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வரிகளை 12.6.1975 அன்று எழுதியது. அடுத்த ஆறு ஆண்டு காலம் தேர்தலில் நிற்கவும் நீதிபதி சின்கா தடை செய்து விட்டார்.

உச்சநீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்தார். நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண அய்யரோ, இந்திரா பிரதமராக நீடிக்கலாம்; அதே நேரத்தில் நாடாளுமன்றத்தில் ஓர் உறுப்பினர் என்கிற தகுதியில் வாக்களிக்க உரிமை கிடையாது என்று அடிக்கோடிட்டு விட்டார். (24.06.1975)

விளைவு,
இந்தியா முழுமையும் அவசர நிலைப் பிரகடனம்! 26.06.1975 காலை 7:00 மணிக்கு குடியரசுத் தலைவர் ஆணை பிறப்பித்தார். ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய், அசோக் மேத்தா, சந்திரசேகர் போன்ற தலைவர்கள் எல்லாம் சிறைச் சாலைகளில் அடைக்கப்பட்டனர்.

பத்திரிகைகள் தணிக்கைக்கு ஆளாகும் என்று அந்தப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இயக்கத்தைத் தலைமை தாங்கி நடத்திச் சென்ற அன்னை மணியம்மையார் சீறும் நெருக்கடி நிலைப் பாம்பைக் கண்டு நிலை குலைந்து போனாரா?
இயல்பாகவே போர்க் குணம் கொண்டவராகிய அன்னையார் அவர்கள் புரட்சி எழுத்துகளால் தலையங்கம் தீட்டினார் (8.7.1975).
நமது நாட்டுக்குச் சுதந்திரம் வந்து 28 ஆண்டுகள் ஆன பிறகும், காட்டுமிராண்டித்தனமான இழிவுச் சின்னமாகக் கருதப்படுகின்ற ஜாதி இன்னமும் ஒழிந்தபாடில்லை. அதற்கு நேர்மாறாக, முன்பை விடப் புது முறுக்கும், தெம்பும் ஆணி அடித்தது போல் உறுதியும், பலமும் கொண்டதாகவே, அது நமது சுதந்திரத்தின் கீழ் ஆகியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
வறுமையும், ஏழ்மையும் ஒழியாமல், இன்னமும் இருந்து வருகிறது - மக்களில் இன்னும் நூற்றுக்கு அறுபது பேர் எழுதப் படிக்கத் தெரியாத தற்குறிகளாகவே இருக்கின்றனர்.
சோஷியலிசம் என்பது ஆட்சியின் கொள்கையென்று பிரகடனப்படுத்தப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் அது இன்னும் கானல் நீர் வேட்கையாகவே இருந்து வருகிறது.

இரண்டு அவசர காலச் சட்டங்கள் பத்திரிகை சென்சார் எல்லாம் செய்து பொருளாதாரத் திட்டங்களை அறிவிக்கும் நிலை இருக்கிறது என்றால், இது மகிழ்ச்சி அடையக் கூடிய நிலையா? அல்லது வெட்கமும், வேதனையும் அடையக் கூடிய நிலையா? என்று புயல் போல் எழுந்து நொறுக்கினார் அன்னையார்.
நெருக்கடி நிலைமையைப் பயன்படுத்தி பார்ப்பன ஆளும் வர்க்கம் சிண்டை அவிழ்த்துவிட்டு இங்குக் கூத்தாடியது. தவே என்கிற ஒரு பார்ப்பானும்,  ஆர்.வி.சுப்பிரமணியம் என்கிற ஒரு பார்ப்பானும் ஆளுநரின் ஆலோசகராக இருந்து தமிழகத்தில் அட்டகாசம் செய்தனர்.
பட்ட மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு இல்லை என்றனர்.

சமூக நீதி என்பது திராவிடர் கழகத்தின் சத்தான பகுதி - குருதி ஓட்டம்! நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி நீர்த்துப் போகச் செய்திடலாம் என்கிற நினைப்பு அவர்களுக்கு!
ஆனாலும் அன்னையார் அஞ்சவில்லை; துஞ்சவில்லை!
எப்படியாவது தட்டிப் பறித்திட வேண்டும் என்று எல்லாவற்றையும் தன் கைக்குள் போட்டு ஆதிக்கம் செலுத்திக் கொண்டு வந்த ஒரு கூட்டம் திட்டமிட்டுச் செயல்பட்டு வந்தது.
காற்றுள்ளே போதே தூற்றிக் கொள் என்னும் மொழிப்படி இன்றைக்கு அதைச் சாதித்துக் கொண்டு விட்டார்கள்.
இந்திய அரசியல் சட்டமே ஏற்றுக் கொண்டு ஒப்புக் கொண்டிருக்கிற உரிமையைத் தட்டிப் பறிப்பது, சட்டப்படியும் தவறு. நியாயப்படியும் தவறு! என்று மிக அழுத்தமாகவே சுட்டிக் காட்டினார் அன்னையார். (விடுதலை 9.5.1976)
இப்படி நெருக்கடி காலம் நெடுக, சமுதாயத்துக்கு நெருக்கடி கொடுக்கப்பட்ட நேரத்தில் எல்லாம் நிலை குலையாது நெடுங்குன்றமாக நிமிர்ந்து நின்று சவால்களைச் சமாளித்த சான்றாண்மை அன்னையாருக்கு உண்டு!
நெருக்கடி நிலை காலத்திலே தஞ்சையில் சுயமரியாதை இயக்கப் பொன்விழாவைப் புதிய எழுச்சியோடு நடத்திய பெருமையும் அவர்களுக்கு உண்டு (22, 23, 24.1.1976)
31.1.1976 மாலையில் திண்டிவனத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு, நள்ளிரவு சென்னை - பெரியார் திடலில் வந்து இறங்கினர் அன்னையாரும், கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்களும்.
பெரியார் திடலில் காவல் துறையினர் தயாராக இருந்தனர். ஆம்! இன்று இரவுதான் தி.மு.க. அரசைக் கலைத்து தமிழ்நாட்டுக்குக் குடியரசுத் தலைவர் ஆட்சியை இந்திரா காந்தி கொண்டு வந்திருந்தார்.
கழகப் பொதுச் செயலாளரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். தொலைபேசியைத் தொடக் கூட எங்களுக்கு அனுமதி இல்லை. அதன் பக்கத்தில் ஒரு போலீஸ்!
அழைத்துச் செல்லப்பட்ட பொதுச் செயலாளரும், தோழர்களும் எங்கு இருக்கிறார்கள்? அவர்களின் நிலை என்ன? பல நாள்கள் வரை கேள்விக்குறியாகவே இருந்தது.
கைதிகளின் பாதுகாப்புக்கு உரிய சிறைச்சாலை, கசாப்புக் கடையாகி அடித்துத் துவம்சம் செய்யப்பட்ட அநீதி என்றென்றைக்கும் வரலாற்றில் மோசமான அத்தியாயமே!
1.2.1976 முதல் விடுதலைக்குத் தணிக்கை!
நாள்தோறும் சென்னை சாஸ்திரி பவனுக்கு தயாரிக்கப்பட்ட மாதிரி விடுதலை (ஞசடிடிக) ஏட்டை ஒருவர் எடுத்துக் கொண்டு போக வேண்டும். அங்கே தணிக்கை அதிகாரிகள் யார்? அத்தனைப் பேரும் பூணூல் திருமேனிகள்! நண்டைச் சுட்டு நரியைக் காவலுக்கு வைத்த ஏற்பாடு!
சவுமிய நாராயணன் என்னும் ஒரு பார்ப்பனர்; ஓய்வு பெற்று வீட்டிலே சாய்வு நாற்காலியிலே கிருஷ்ணா இராமா என்று காலத்தைக் கடத்திக் கொண்டிருந்த கிழத்துக்குத் தணிக்கையாளர் பதவி!
ஓய்வு வயதை அடையுமுன்பே தமிழர்களுக்குக் கட்டாய ஓய்வு! ஓய்வு பெற்று வீட்டிலே சாய்ந்து கிடந்த கிழட்டுப் பார்ப்பனர்களுக்கோ புது உத்தியோகம் - இதற்குப் பெயர்தான் பார்ப்பன இந்திரா காந்தி அம்மையாரின் நெருக்கடி கால ஆட்சி!
விடுதலையைத் தணிக்கை செய்து விட்டு, ஆத்துக்குச் சென்றவுடன் நான் செய்யும் முதல் காரியம் ஸ்நானம் செய்வதுதான் என்று வெளிப்படையாகவே கூறியவர்தான் அந்த சவுமிய நாராயணன்.
பார்ப்பன எதிர்ப்பு மத எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு பகுத்தறிவுக் கருத்துகள் இல்லாமல் விடுதலையை எப்படி நடத்த முடியும்?
தணிக்கை விதிகள் என்று இருந்தாலும் விடுதலையைப் பொறுத்தவரை அவை எல்லாம் ஒன்றும் கிடையாது! சகட்டு மேனிக்கு அடித்தல்தான் - திருத்தல்தான்!
கடவுள்கள் திருட்டு என்று விடுதலை செய்தி வெளியிட்டால் கடவுள் சிலைகள் திருட்டு என்று திருத்துவார்கள். கடவுள் சிலையைக் கும்பிட்டார் கவர்னர் என்று எழுதினால், கடவுளைக் கும்பிட்டார் என்று திருத்துவார்கள்.
கைவல்யம் கட்டுரை ஒன்றில் பார்ப்பனர் என்ற சொல்லுக்குப் பதிலாகப் பண்டிதர் என்று மாற்றினார்கள் (விடுதலை 8.6.1976). பார்ப்பனர் என்னும் சொல்லுக்குப் பண்டிதர் என்னும் சொல் எப்படி பொருளாகும்?
வழித்தால் மொட்டை, சிரைத்தால் குடுமி என்கிற அளவுக்குத்தான் தணிக்கைக் கத்தரிக்கோலைத் தூக்கிக் கொண்டு நின்றார்கள்.

உலக வரலாற்றிலே இத்தகைய ஓர் உன்னதத்  தலைவரைக் கண்டதும் கிடையாது; கேட்டதும் கிடையாது. ஆம்! அந்த ஒப்பாரும் மிக்காரும் இல்லாத அருந்தலைவரை, தந்தை பெரியார் அவர்களை தலைவராகப் பெற்றதால் இந்த இனம் பெருமை கொள்கிறது (விடுதலை 11.4.1976).

இதில் என்ன சொல் குற்றம் - பொருள் குற்றம் பொங்கி வழிகிறது?
தணிக்கை அலுவலரின் கத்தரிக்கோல் சீறிப் பாய்ந்து குதறுகிறது என்றால், பார்ப்பனர்களின் கொலை பாதக நெஞ்சத்தை இளைய தலைமுறையினர்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.
எல்லாவற்றையும் பொறுமையாகக் கவனித்துக் கொண்டிருந்தார் அன்னையார் அவர்கள்.

சங்கராச்சாரி என்று விடுதலையில் இருந்ததை சங்கராச்சாரி யார் என்று மரியாதை விகுதியைச் சேர்த்தார்கள். (விடுதலை 13.6.1976). மரியாதையாக அத்தோடு நின்றிருக்க வேண்டும் அல்லவா?

22.6.1976 நாளிட்ட விடுதலையில் தந்தை பெரியார் அவர்கள் என்பதில் உள்ள அவர்களை நீக்கினார்கள்.

அதுவரை பொறுத்திருந்த அன்னையார் அவர்கள் எரிமலை ஆனார்கள்.

தணிக்கை அலுவலகத்துக்கு நீயே, போ! சம்பந்தப்பட்ட  தணிக்கை அதிகாரியை நீயே நேரில் கேள்! எந்த விதியின் கீழ் இந்தத் தணிக்கையை செய்தீர்கள் என்று கேள்!

கடைசியாக ஒன்றை சொல்! இது பெரியார் வீட்டுப் பணத்தில் பெரியார் கொள்கையைப் பரப்புவதற்காக நடத்தப்படும் ஏடு! இதில் பெரியாரின் சிறப்பைக் குறைக்கும் வகையில் தணிக்கை செய்ய நீ யார்? தந்தை பெரியார் அவர்கள் என்றுதான் மீண்டும் மீண்டும் போடுவோம்; என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து கொள்!

காலம் இப்படியே போய்க் கொண்டிருக்காது என்று எச்சரித்து விட்டுவா! அரசு வேலை போனால் போகட்டும்! நீதான் போக வேண்டும்! உனக்கு அதில் சங்கடம் என்றால் சொல் - நானே போகிறேன்! உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அந்தத் தாய் அனல் மொழியால் ஆணையிட்டார்கள். அதற்கு மேல் அட்டி என்ன?

தலைவர் அன்னையார் சொன்னதற்கு மேலும் போகாமல், கீழும் போகாமல் அப்படியே சொல்லிவிட்டு, அவர்களின் தணிக்கையைச் சட்டை செய்யாமல் வெளியிட்டோம்!
கெஞ்சினால் மிஞ்சுவான், மிஞ்சினால் கெஞ்சுவான் பார்ப்பான் என்பதுத் நமக்குதான் நன்றாகத் தெரியுமே! அந்தத் தணிக்கை மீறலை கடைசிவரை அவர்கள் கண்டு கொள்ளவேயில்லை.

நெருக்கடி நிலை காலம் எவ்வாறு இந்துத்வா காலமாக இருந்தது - சங்கர மடம் காலமாக இருந்தது என்பதற்கு இன்னும் எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு விபூதி, பிரசாதம் வழங்குவதற்கு இந்துமத அறநிலையத் துறை ஆணையர் மூலம் அரசே அதிகாரப்பூர்வமாக ஆணை பிறப்பித்தது.

அரசு அலுவலகங்களில் இடம் பெற்றிருந்த தந்தை பெரியார் படங்கள் அகற்றப்பட்டு, காந்தி, நேரு, இந்திரா காந்தி தமிழகக் கவர்னர் படங்கள் மட்டுமே இடம் பெறச் செய்ய வேண்டும் என்று ஆரிய ஆட்சி 29.10.1976 அன்று ஆணை பிறப்பித்தது.
அரசு அலுவலகங்களில் தந்தை பெரியார் படம் வைக்கப்படலாம் என்கிற ஆணை நெருக்கடி காலம் நீக்கப்பட்டதற்குப் பிறகுதான் மீண்டும் பிறப்பிக்கப்பட்டது. (22.9.1977).

நெருக்கடி நிலை காலத்தில் சர்தார் சுவரண்சிங் தலைமையில், அரசியல் சட்டத் திருத்தங்களுக்காகக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழுவுக்கு அன்னை மணியம்மையார்  அவர்கள், ஜாதி ஒழிப்புக்கு வகை செய்ய அரசியல் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்தார்கள் - ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
20.2.1977 அன்று சென்னையில் கூட்டப்பட்ட திராவிடர் கழகத்தின் நிருவாகக் குழுக் கூட்டத்தில் இதனைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் தீண்டாமை ஒழிப்பைப் பற்றி மக்களிடையே நல்ல அளவு பிரச்சாரம் செய்தால்தான் வெற்றியடைய முடியும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
அதைப்பற்றி அன்னை மணியம்மையார் அவர்கள் விடுதலை 24.4.1976இல் பின்வரும் கருத்தினை வெளியிட்டார்கள்:
இப்பொழுது அவரவர்களும் அவரவர்களின் நெஞ்சிலே கையை வைத்துச் சொல்லட்டும். கடந்த அரை நூற்றாண்டு காலமாக எங்கள் இயக்கம் இந்த அறிவுப் பிரச்சாரப் பணியைத்தானே செய்து வருகிறது? தந்தை பெரியார் அவர்கள் தமது 95 வயது வரையிலும் தாம் கண்மூடும் கடைசி நாளுக்கு மூன்று நாள்கள் முன்புவரை கூட மக்களின் மனமாற்றப் பணியாகிய பகுத்தறிவுப் பிரச்சாரப் பணியைத் தானே செய்து கொண்டிருந்தார்கள்?
இவ்வளவு அரிய, உயர்ந்த சமுதாயப் பணியை ஆற்றி வரும் ஒரு சமுதாய இயக்கத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது. அந்த இயக்கத்திற்கு அனுசரணையாக இருந்து தாராளமாக அந்த இயக்கத்தின் பிரச்சாரம் நடைபெற வாய்ப்பு வசதிகளைத் தடையின்றித் தரவேண்டியதுதானே ஒரு முற்போக்கு ஆட்சியின் கடமையாக இருக்க முடியும்?
எங்கள் இயக்கத்தின் பகுத்தறிவுப் பிரச்சாரம் எவ்வளவுக்கெவ்வளவு தங்குதடையின்றி நடைபெறுகிறதோ, அவ்வளவுக்கவ்வளவுதான் முற்போக்கான காரியங்களை எந்த அரசும் செய்ய முடியும்.

பெரும் கஷ்ட நஷ்டங்களுக்கிடையே சமுதாய அடிப் படைப் பணியைச் செய்துவிட்டு, அதற்காகப் பதவியிலோ, ஆட்சி லாபங்களிலோ பங்கு கேட்பவர்களும் நாங்கள் அல்லர். இன்னும் சொல்லப் போனால், நன்றியைக் கூட எதிர்பார்த்து, பொதுத் தொண்டு செய்பவர்களல்லர் நாங்கள், இப்படி ஓர் இயக்கத்தை உலக அரங்கில் கண்டதுண்டா? கேள்விப்பட்டதும் உண்டா?
நாங்கள் விரும்புவது எல்லாம், எதிர்பார்க்கும் உதவி எல்லாம் எங்கள் இயக்கப் பிரச்சாரம் தங்கு தடையின்றி நடைபெற விசாலமான பாதை திறக்கப்பட வேண்டும் என்பதுதான். அந்த உதவியும்கூட எங்களுக்காகவோ எங்கள் இயக்க நலனுக்காகவோ அல்ல. எங்கள் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற நடைபெறத்தான் நாட்டுக்கும், ஒரு முற்போக்கு ஆட்சிக்கும் நல்ல அளவில் அனுகூலம் ஏற்படும் என்பதால் தான்.
எங்கள் கழகப் பிரச்சாரம் ஒரு மணி நேரம் தடைப் படுமானாலும் கூட அதனால் நாட்டுக்குத்தான் பெரும் நஷ்டம். நஷ்டக்கணக்கை நாட்டின் ஏட்டிலே ஏற்றிக் கொண்டே போகாதீர்கள்.

நாடு எங்களிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கிறது. நாங்களும் நாட்டுக்கு ஏராளமான பணி செய்யத் துடித்துக் கொண்டிருக்கிறோம்.

பகுத்தறிவுப் பிரச்சாரம் கரைபுரண்டு ஓடி, நாட்டு மக்களின் அறிவை வளப்படுத்த வகை செய்யுங்கள்; உடனே வழிவகை செய்யுங்கள்.

இது முக்கியம் - மிக முக்கியம் - மிக மிக முக்கியம் என்று அறிக்கை விடுத்தார் அன்னையார்.

இராவண லீலா வழக்கில் தீர்ப்பு
தந்தை பெரியாரின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை - பெரியார் திடலில் இராவண லீலா என்கிற இன எழுச்சித் திருவிழாவை நடத்தினார்கள். அன்னையார், கழகப் பொதுச் செயலாளர் உள்பட தோழர்கள்மீது தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட வழக்கு, நெருக்கடி நிலை கால கட்டத்தில் சென்னை - எழும்பூர் அய்ந்தாவது பெருநகர மாஜிஸ்டிரேட் திரு.பஞ்சாட்சரம் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வழக்கறிஞர்கள் துணிந்து வாதாடுவதற்குத் தயங்கிய கால கட்டம். ஓய்வு பெற்ற மாஜிஸ்டிரேட் திரு.ஏகாம்பரம் அவர்கள் வாதாடினார்.


குற்றப்பிரிவு 143, 295 (ஏ) இவற்றின் கீழ் அன்னையார் உள்பட அனைவருக்கும் 6 மாத கடுங்காவல் தண்டனை விதித்தார் நீதிபதி. தீ வைத்ததற்காக ரூ.500, கட்டத் தவறினால் ஆறு மாதக் கடுங்காவல்; சட்டவிரோதமாகக் கூடியதற்காக ரூ.200 அபராதம்; கட்டத் தவறினால் ஆறு வாரக் கடுங்காவல்; ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்புக் கூறினார்.
தன்னந்தனியே இருந்த அன்னையார் அவர்கள் இவற்றை எல்லாம் சமாளித்து மாவட்ட நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்து, இறுதியில் வெற்றியும் பெற்றார்கள் என்பது சாதாரணமானதல்ல!
பெரியார் திடலின் நுழைவு வாயிலில் கம்பீரமாக எழுந்து நிற்கும் ஏழு மாடிக் கட்டடம் நெருக்கடி கால கட்டத்தில்தான் உருவாக்கப்பட்டது. அன்னையார் அதனைச் செய்து முடித்தார்கள்.
தந்தை பெரியார் பிறந்த நாளையும் கட்டடத் திறப்பு விழாவினையும் செய்யத் திட்டமிட்டார்கள்.
பத்து நாள்களுக்கு முன்பே சென்னை மாநகராட்சி காவல்துறை ஆணையாளரிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தும்கூட 15.9.1976 இரவு 10 மணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று காவல்துறை கடிதம் தந்தது.

விழா நிறுத்தப்பட்டது - ஒத்தி வைக்கப்பட்டது என்று வெளியூர்த் தோழர்களுக்குத் தகவல் தெரிவிக்கக் கூட அவகாசம் அளிக்கவில்லை - நெருக்கடி நிலை பார்ப்பன ஆதிக்கத்தின் நிர்வாகம்!
அத்தோடு தன் அற்பப் புத்தியை நிறுத்திக் கொண்டதா?
16ஆம் தேதி அதிகாலை 5:30 மணிக்கு தலைவர் அம்மா அவர்களையும், அய்யா அவர்களுக்கும், அம்மா அவர்களுக்கும் நிழலாக இருந்து பணியாற்றிய மானமிகு புலவர் கோ.இமய வரம்பன் அவர்களையும் காவல்துறையினர் கைது செய்து 15 நாள் ரிமாண்டு என்று சொல்லி சென்னை மத்திய சிறைச் சாலையில் அடைத்தனர்.
அப்படிக் கைது செய்யப்பட்ட செய்தியையும்கூட விடுதலையில் வெளியிட தணிக்கைப் பார்ப்பனர்கள் அனுமதிக்கவில்லை.

வெளியூரிலிருந்து ஏராளமாகத் தோழர்கள் அய்யா பிறந்த நாளில் வந்து குவிந்து விட்டனர். அப்படி வந்த கழகக் குடும்பத்தினர் பெரியார் திடலில் தங்கக் கூடாது. உடனே வெளியேற வேண்டும் என்று காவல் துறையினர் கெடுபிடி செய்தனர். பார்ப்பனக் கொடுங்கோன்மையை  இன்று நினைத்தாலும் குருதி கொப்பளிக்கும்!

18.9.1976 மாலை திடீரென்று அம்மா அவர்களையும், புலவர் அவர்களையும் விடுதலை செய்தனர்.
தந்தை பெரியார் நினைவு நாளன்று கூட்டம் நடத்திட மீண்டும் அனுமதி கோரப்பட்டது. அந்த (திச.24) நிகழ்ச்சியை நடத்திட அனுமதிக்காமல் 26-ஆம் நாள் நடத்திட அனுமதி தந்து தனது அற்பபுத்தியை அரங்கேற்றியது ஆரியம்!
சென்னை - பெரியார் திடலில் நடைபெற்ற அக்கூட் டத்திற்கு மறைந்த வில்லிவாக்கம் பெரியார் பெருந்தொண்டர் அ.தியாகராசன் தலைமை வகித்தார். அன்னை மணியம்மையார், சைதை எம்.பி.பாலு, ஆவடி ஆர். திருநாவுக்கரசு, சென்னை வி.எம்.நாராயணன், சேலம் எம்.எஸ். அழகரசு, கலி.பூங்குன்றன் ஆகியோர் உரையாற்றினார்கள்.
பதினொரு மாத இடைவெளிக்குப் பின் நடத்தப்பட்ட முதல் பொதுக் கூட்டம் அது!
இந்தக் கூட்டத்தில் தந்தை பெரியார் பற்றிய பாடல்கள் அடங்கிய இசைத் தட்டு ஒன்றும் வெளியிடப்பட்டது.
தந்தை பெரியார் அவர்களின் காலத்தில் ஆமைபோல் கிடந்த வருமான வரித்துறை, நெருக்கடி கால நிலையில் கழகப் பொதுச் செயலாளர் போன்றவர்கள் மிசா கைதிகளாக இருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பெருந்தொல்லையைக் கொடுக்க ஆரம்பித்தது.

பெரியார் திடல் ஏழு மாடிக் கட்டட வருவாயை முடக்கியது. ஈ.வெ.கி. சம்பத் சாலையில் டாம் டாம் அடித்து பொதுமக்களுக்கு அறிவித்து மனத்தளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும்; பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி விடுதலை வெளி வருவதை நிறுத்த  வேண்டும் என்கிற சதியில் ஈடுபட்டார்கள். நீடாமங்கலம் காளாச்சேரி கிராமத்தில் பெரியார் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலம் - அதன் விளைச்சலை தன் வயப்படுத்த முனைந்த சக்திகளை - அம்மா அவர்களே நிலத்தில் இறங்கி முறியடித்ததும் சாதாரணமானதல்ல!
உடல் நலம் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த அன்னையார் அய்யாவிடம் முறையாகப் பெற்ற பயிற்சி உரத்தின் வலிவால் எல்லாச் சூழ்ச்சிப் பொறிகளையும் சுக்கல் நூறாக்கிக் கம்பீரமாக வெளியில் வந்தார்கள்!
நெருக்கடி நிலையிலும் நம் மக்களுக்குக் கல்வித் தொண்டு செய்ய வேண்டும் என்கிற அக்கறையில், எழும்பூர் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏழை - எளிய குடும்பங்களைச் சேர்ந்தபிள்ளைகளுக்கு இலவசக் கல்வி அளிக்க வேண்டும் என்று திட்டமிட்டு, பெரியார் திடலில் பெரியார் - பிரைமரி பள்ளி ஒன்றைத் தொடங்கி (7.6.1976) நடத்தினார்கள்.
பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை; கழகப் பிரச்சாரம் முடக்கப்பட்ட அந்த நிலையில் தலைவர் அம்மா அவர்கள் கலந்துரையாடல் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி, அத்தகைய கூட்டங்களில் கலந்துகொண்டு தோழர்களை உற்சாகப்படுத்தினார். 22.8.1976-இல் புதுச்சேரியில் தொடங்கி கும்பகோணம், திருச்சி, ஆத்தூர் (சேலம்), அரூர், கோயம்புத்தூர், பழனி, காரைக்குடி என்று ஒரு நீண்ட பயணம் மேற்கொண்டார்கள் - உடல் நலச் சீர்கேட்டிலும்!
மிசா சிறையில் இருந்த தோழர்களின் வீடுகளுக்கெல்லாம் சென்று குடும்பத்தினர்க்குத் தைரியம் சொல்லி, வேண்டிய உதவிகளைச் செய்து வந்தார்கள்.
24.1.1977 அன்று மிசா சிறையில் வாடிய நம் கழகத் தோழர்கள் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள் உள்பட விடுதலை செய்யப்பட்டனர். பெருமிதம் கொள்கிறேன் என்று அன்னையார் அவர்கள் அறிக்கை வெளியிட்டு தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
நெருக்கடி காலம் என்பதன் மூலம், மனித உரிமைகளுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், பார்ப்பனர் அல்லாதாருக்கும், அந்த இயக்கங்களுக்கும் பெரும் நெருக்கடி கொடுத்த காட்டுராணி இந்திரா காந்தி தமிழகம் வருகை தருகிறார் என்கிற செய்தியைக் கேள்விப்பட்டதும், கொடுமையின் வடிவத்துக்குக் கடும் எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்கிற நியாயமான கோபம் அன்னை மணியம்மையார் அவர்களுக்குத்தான் ஏற்பட்டது.
இந்திரா காந்திக்குக் கருப்புக் கொடி காட்டப்படும் என்கிற கருத்தை முதலாவதாக அறிக்கை வாயிலாக வெளியிட்டவர் அவர்கள்தான்! (21.10.1977).
அதன் பின்னர்தான் தி.மு.க. தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களும் இந்திரா காந்திக்குக் கருப்புக் கொடி காட்டப்படும் என்று அறிக்கை விடுத்தார்.
நெருக்கடி காலத்தில் கொடுமைகளுக்கு ஆளான திராவிடர் கழகமும், இந்தக் கருப்புக் கொடிப் பேரணியை நடத்துகிறது.
அண்ணன் அன்றே சொன்னாரல்லவா? திராவிடர் கழகமும், தி.மு.கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று அந்த இரு கழகமும் இணைந்து நடத்துகிற அறப்போர் என்று குறிப்பிட்டார் டாக்டர் கலைஞர்.
மதுரை, திருச்சி, காஞ்சி நகரங்களில் கடுமையான கருப்புக் கொடிக் காட்டுக்கிடையேதான் நெருக்கடி நிலை நாயகியார் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க நேர்ந்தது.
சென்னையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்துக்குத் தடை என்று திடீர் என்று அ.தி.மு.க. அரசு அறிவித்தது.
உடல் நலம் பாதிக்கப்பட்டு திருச்சி மருத்துவமனையில் இருந்த அன்னையார் தடை ஆணையைக் கேட்டுக் களம் புகுந்தார். அன்னையாரும், பொதுச் செயலாளரும், கழகத் தோழர்களும் கைது செய்யப்பட்டனர்.
வெள்ளைச்சாமி என்கிற சார்ஜண்ட் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி அன்னையாரைத் திட்டியதுடன் தாக்கவும் கைத்தடியுடன் ஓடி வந்தான். போலீஸ் அதிகாரி தேவாரமே நமது பொதுச் செயலாளர் அவர்களைப் பார்த்து, I will finish you off  உம்மைத் தீர்த்துக் கட்டுவேன் என்று கூச்சல் போட்டார்.
கழகப் பொதுச் செயலாளரோ ‘Yes, You Can’ என்று மார்பைத் திறந்துக் காட்டினார் என்பதெல்லாம் வீரத்தின் வைர வரிகள்.
188ஆவது பிரிவின்கீழ் அன்னையார், பொதுச் செயலாளர் உள்பட கழகத் தோழர்கள் 15 நாட்கள் காவலில் வைக்கப்பட்டனர். ஜாமீனில் வெளிவர மறுத்துச் சிறை ஏகினார்கள்.
அன்னையார் உடல் நலம் கருதி இரக்கத்தின் அடிப்படையில் அன்னையாரை விடுதலை செய்வதாகத் தமிழக அரசு அறிவித்தது.

அன்னையார் அதற்கும் தக்க பதிலடி கொடுத்தார்:
எனக்குக் கடந்த பல நாள்களாகக் கடுமையான காய்ச்சல், மயக்கம், நெஞ்சு வலி; எனக்கு ஏதாவது திடீர் முடிவு ஏற்பட்டால் அரசு தனக்குப் பழி வந்துவிடுமே என்கிற எண்ணத்தில்தான், அதன் பொறுப்பை நீக்கிக் கொள்ள, இது தந்திர ஏற்பாடே தவிர, நீதி, நியாயம் கருதி செய்யப்பட்டதல்ல என்று அறிக்கை வெளியிட்டார்.
அன்னையார் இயல்பாகவே போராட்டப் பெருங்குணம் கொண்டவர்கள்; அச்சம் அவர்களின் அகராதியில் இல்லை. அய்யாவின் கணிப்பு எவ்வளவு துல்லியமானது என்பதை ஒவ்வொரு அடியிலும் மெய்ப்பித்தார்கள்.
அதுவும் நெருக்கடி நிலை காலத்தில். அது முழுமையான நிலாவாக தமிழக வரலாற்று வானில் நிலை பெற்றது!
வாழ்க பெரியார்!
வாழ்க அன்னையார்!
- கவிஞர் கலி.பூங்குன்றன்

No comments:

Post a Comment