Tuesday 31 March 2020

மணியம்மையார் எழுத்துக்கள்

மணியம்மையார் எழுத்துக்கள்


கந்தபுராணமும் - இராமாயணமும் ஒன்றே!
ஈ.வெ.ரா. மணியம்மையாரால் தொகுக்கப்பட்டது

1. கந்தபுராணமும் - இராமாயணமும் வடமொழியில் உள்ள மூலக் கதைகளைக் கொண்டவையாகும்.

2. இரண்டு மூலமும் ஆரியர்களால் உண்டாக்கப்பட்டவையேயாகும்.
3. இரண்டு கதைகளும் ஆரிய சமயக் கொள்கைகளை வலியுறுத்துவதைக் கருத்தாய்க் கொண்டு ஆரியக் கடவுள்களைப் பெருமைப்படுத்த ஏற்படுத்தியவையாகும்.
4. இரண்டு கதைகளும், தேவர்கள் என்பவர்களுக்கும், அசுரர்கள் என்பவர்களுக்கும் நடந்த போராட்டங்கள் என்ற பாவனை வைத்து கற்பிக்கப்பட்டவையாகும்.
 5. இரண்டு கதைகளும், தேவர்கள் என்பவர்களை உயர்த்தியும், அசுரர்கள்/இராக்கதர்கள் என்பவர்களைத் தாழ்த்தியும், இழித்தும் காட்டப்பட்டவைகளாகும் என்பதோடு, இரண்டு கதைகளுக்கும் இந்திரன் பிரதானப்பட்டவனாகிறான்.
6. இரண்டு கதைகளின் தமிழ் மொழி பெயர்ப்புக் காவியங்களும் இரண்டு கோவில் அர்ச்சகர்களால், அதாவது கோவிலில் பூசை செய்யும் பூசாரிகளால் பாடப்பட்டவை யாகும். கந்தபுராணம் கச்சியப்ப சிவாச்சாரி என்னும் அர்ச்சகராலும், இராமாயணம் கம்பன் என்னும் பூசாரியாலும் தமிழில் பாடப்பட்டவை.
7. இரண்டு கதை உற்பத்திக்கும் காட்டப்பட்டக் காரணங்கள் - அசுரர்களின் தொல்லைகள் பொறுக்க மாட்டாமல் தேவர்கள் பிர்மா, விஷ்ணு, சிவன் என்னும் கடவுள்களைப் பிரார்த்தித்துத் தங்களின் துன்பங்களைத் தீர்க்கும்படி வேண்டிக் கொண்டவைகளாகும்.
8. இராமாயணக் கதைக்கு விஷ்ணு இராமனாக அவதரித்து கதாநாயகனாகவும், கந்தபுராணத்திற்கு சிவன் கந்தனாகப் (சுப்ரமணியனாக) பிறந்து கதாநாயகனாகவும் இருக்கிறார்கள்.
9. இரண்டு கதாநாயகர்களுடைய பிறப்பும் அருவெறுக்கும் தன்மையாகவே, அதாவது இராமன் தனது தாய் கவுசலை, யாகத்தின்போது குதிரையுடன் ஓர் இரவெல்லாம் கட்டித் தழுவிப் படுத்திருந்து, பகலெல்லாம் யாகப்ரோகிதனுடன் சேர்ந்து கர்ப்பமாகி இராமன் பிறந்ததாகவும்,

கந்தன், தன் தகப்பன் (சிவன்) தன் தாயைப் (பார்வதியை) பல தேவ ஆண்டுகள் இடைவிடாமல் புணர்ந்து, தேவர்கள் விருப்பப்படி இடைவெளியில் வீரியத்தை விட்டு, அது கங் கையில் சேர்ந்து அங்கு பல பிரிவாகி குழந்தை உருக்கொள்ள, அதை பல பெண்கள் வளர்க்க, அதனால் ஆறுமுகம் பெற்று ஆறுமுகனானான்; கார்த்திகேயனானான் (இந்த சேதிகளை இராமாயணமே கூறுகிறது) என்பதாகவும் இருக்கிறது.
10. இவ்விரண்டு கதாநாயகர்களின் (இராமன் - கந்தன்) மனைவிமார்களும் தங்கள் பிறப்பை அறிய முடியாதவர்கள்.
 அதாவது, இராமனின் மனைவி சீதை யாரோ பெற்று பூமியில் போடப்பட்டு, புழுதியில் மறைந்துகிடந்து ஓர் அன்னிய அரசனால் கண்டெடுத்து வந்து வளர்க்கப்பட்டவள்.
 கந்தன் மனைவி வள்ளியும் யாராலோ ஒரு மானிடம் ஒரு ரிஷியால் சினை ஆகி பெறப்பட்டு, காட்டில் ஒரு குழியில் கிடக்கப்பட்டு, ஒரு வேட அரசனால் கண்டெடுத்துக் கொண்டு போய் வளர்க்கப்பட்டவள்.
11. இராமனுக்கு சீதை (விஸ்வாமித்திரன் என்னும்) ஒரு ரிஷியினால் கூட்டி வைக்கப்படுகிறாள். கந்தனுக்கு வள்ளி  (நாரதன் என்னும்) ஒரு ரிஷியினால் கூட்டி வைக்கப்படுகிறாள்.
12. இராமனுக்கு எதிரி (இராவணன் என்னும்) தேவர்கள் விரோதி, தேவர்களை அடக்கி ஆண்டவன். கந்தனுக்கு எதிரி (சூரபத்மன் என்னும்) தேவர்கள் விரோதி, தேவர்களை அடக்கி ஆண்டவன்.
13. இராமனுக்கு ஆயுதம் வில். கந்தனுக்கு ஆயுதம் வேல்.
14. இராவணனும் மகா தவசிரேஷ்டன். மகா பலசாலி. வீரன். மாபெரும் வரப்பிரசாதி.
 சூரபத்மனும் மகா தவசிரேஷ்டன். மகா பலசாலி. வீரன், மாபெரும் வரப்பிரசாதி.
15. இராமனுக்கு லட்சுமணன் என்கின்ற ஒரு சகோதரன் உதவி செய்கிறான்.
கந்தனுக்கு கணபதி, வீரவாகு என்கிற சகோதரர்கள் உதவி செய்கிறார்கள்கள்.
16. இராவணனுக்கு சூர்ப்பனகை என்ற ஒரு தங்கை இருக்கிறாள்.
சூரபத்மனுக்கு அசமுகி என்கின்ற ஒரு தங்கை இருக்கிறாள்.
17. இராவணனுக்கு இந்திர சித்து என்னும் (மேகநாதன் என்ற) மகன்; இவன் மகாபலசாலி. வீரன்.
 சூரபத்மனுக்கு பானுகோபன் என்கின்ற ஒரு மகன். இவன் மகா பலசாலி.
18. இராவணனுக்கு விரோதமாக இராவணன் தம்பி விபீஷணன் என்பவன் இருந்து கொண்டு, எதிரியைப் புகழ்ந்து, சீதையை விடும் படிக்கூறி, எதிரிக்குக் காட்டிக் கொடுக்க நாட்டை விட்டுப் போய்விடுகிறான்.
சூரபத்மனுக்கு விரோதமாக சூரபத்மன் தம்பி சிங்கமுகன் என்பவன் எதிரியைப் புகழ்ந்து பேசி சயந்தனை சிறை விடும்படிக் கூறி, எதிரிக்கு அனுகூலமாக நாட்டை விட்டுப் போய் விடுகிறான்.
19. இராவணன் மகன் இந்திர சித்து இராமனைப் புகழ்கிறான்.
சூரபத்மன் மகன் பானுகோபன் கந்தனைப் புகழ்கிறான்.
20. இராவணனிடம் தூதனாக அனுமான் சென்று இலங்கையை அழித்துவிட்டு வருகிறான்.
சூரபத்மனிடம் தூதுவனாக வீரவாகு சென்று வீர மகேந்திரத்தைஅழித்து விட்டு வருகிறான்.
21. இராவணன் தங்கையின் மூக்கையும், காதையும் லட்சுமணன், அவள் தலைமயிரை இழுத்துக் கீழேபோட்டு அழுத்தித் துண்டிக்கிறான்.
சூரபத்மன் தங்கை அசுமுகியின் கைகளை மாசானன் என்பவன், அவள் மயிரை இழுத்துக் கீழே போட்டு அழுத்தித் துண்டிக்கிறான்.
22. சூர்ப்பனகை சீதையை இராவணனிடம் சேர்க்க முயற்சிக்கிறாள்.
அசுமுகி இந்திராணியை சூரபத்மனிடம் சேர்ப்பிக்க முயற்சிக்கிறாள்.
23. சூர்ப்பனகை மூக்கு, காது அறுபட்டவுடன் அண்ணன் இராவணனிடம் போய் என்னை இப்படி செய்து விட்டானே, உனக்கு வெட்கமில்லையா? என்று அழுகிறாள்.
அசுமுகி கை அறுபட்டவுடன் அண்ணன் சூரபத்மனிடம் போய் என்னை இப்படி செய்து விட்டானே, உனக்கு வெட்கமில்லையா? என்று அழுகிறாள்.
24. அதற்காக கோபப்பட்டு இராவணன், இராமனுடன் சண்டைக்குப் போகிறான்.
அதற்காக வேண்டியே சூரபத்மன் ஆத்திரப்பட்டு, கந்தனுடன் சண்டைக்குப் போகிறான்.
25. இராமனுக்கு சுக்கிரீவன் அனுமார், அங்கதன், நீலன், சாம்புவந்தன் முதலியவர்கள் உதவி செய்கிறார்கள்.
சூரனுக்கு நவ வீரர்கள் உதவி செய்கிறார்கள்.
இராமனை மூலபலம் எதிர்க்கிறது என்றும், சூரனுக்கு ஓர் அரக்கி வயிற்றில் வெட்ட வெட்ட அசுரர்கள் பிறக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
26. சூர்ப்பனகை உற்றார் உறவினரை ஓலமிட்டு அழைத்தாள். அசுமுகி உற்றார் உறவினரை நினைந்து ஓலமிட்டாள்.
27. சூர்ப்பனகை, வெள்ளிமாமலையை அசைத்த மன்னவா! என் மூக்கறுத்தப் பகைவனை நோக்காயா? என்று இராவணனிடம் ஓலமிட்டாள்.
அசுமுகி, கதிரவனை சிறை செய்த மன்னாவோ! யான் பட்ட குறையினை அறியாயோ? என்று சூரனிடம் அழுதாள்.
28. சூர்ப்பனகை, யான் அடைந்த அவமானத்திற்குப் பழி வாங்க வாராயா? என்று அழுதாள்.
அசுமுகிசூரனிடம், பழி பூண்டு நின்றாயே, என்று அழுதாள்.
29. சூர்ப்பனகை அழுதுகொண்டு இராவணன் சபை புகுந்தாள்.
அசுமுகி அழுதுகொண்டு சூரன் சபை புகுந்தாள். 
30. இராவணன் கோபம் கொண்டு வருந்தி சீதையை அடையக் கருதினான், அடைய துணிந்து விட்டான்.
சூரன் கோபம் கொண்டு மனம் கொதித்து, இந்திராணியை அடையக் கருதினான்.
31. இராவணன் சீதையைத் தூக்கி வந்து சிறை வைத்தான்.
சூரபத்மன், இந்திராணி ஒளிந்து கொண்டதால் அவள் மகன் சயந்தனையும், சுற்றத்தார்களையும் சிறை செய்தான்.
32. சீதை சிறையில் வாடி வதங்கி அழுதாள். சயந்தன் சிறையில் வாடி அழுதான்.
33. சீதை சிறையில், இராமன் வந்து விடுதலை செய்ய வேண்டுமென்று எண்ணினாள்.
சயந்தன் கடவுள் வந்து தன்னை விடுதலை செய்ய வேண்டுமென்று எண்ணினான்.
34. சீதை அழுது எண்ணியதால் இராமன் விற்படை இலங்கைக்கு வந்தது.
சயந்தன் எண்ணி அழுததால் வீரமகேந்திரத்திற்கு வேற்படை வந்தது.
35. இராம தூதனாக அனுமான் இலங்கை வந்தான்.
முருக தூதனாக வீரவாகு வீரமகேந்திரம் வந்தான்.
36. இலங்கை வீரர்களாலும், சூரர்களாலும் கனல் கக்கும் கண்ணர்களாலும் நிறைந்திருந்தது. இலங்கையில் பசி இல்லை. ஏழை இல்லை. பிணி இல்லை. கவலை இல்லை.
வீரமகேந்திரத்தில் உள்ளவர் வரத்தினில் பெரியர். வன்மையில் பெரியர். உரத்தினில் பெரியர். அங்கு, வீரமகேந்திரத்தில் நலிந்து, மெலிந்து, நரை, திரை கொண்டு, பசி கொண்டவர் இல்லை.
37. இலங்கையில் வானவர் பணிந்து பணி செய்தனர். காவல் காத்தனர். பணியாளாய் நின்றனர். இதை அனுமான் பார்த்தான்.
வீரமகேந்திரத்தில் வானவன் வணங்கி ஏவல் புரிந்தனர். மீன் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
38. இராவணனது பெருமையையும், அவனது தவத்தையும் அனுமான் வியந்து போற்றினான்.
சூரனின் தவத்தின் பெருமையை வீரவாகு வியந்து புகழ்ந்தான்.
39. அனுமான், சீதை சிறை இருந்த அசோகவனம் சென்று சீதையைக் கண்டு அவள் சோகத்தைத் தேற்றினான்.
வீரவாகு, சயந்தன் சிறை இருந்த இடம் சென்று அவனைத் தேற்றினான்.
40. அனுமான் இராவணன் முன் அழைத்துச் செல்லப்பட் டான்.
வீரவாகு சூரன் முன் சென்றான்.
41. இங்கே இராமன் பெருமையைச் சொல்லுகிறான்.
அங்கே முருகன் பெருமையைச் சொல்லுகிறான்.
42. அனுமான், இராவணனிடம் ஆதியும் அந்தமும் இல்லாத பரம் பொருளே 
இராமனாய்த் தோன்றினான் என்கிறான்.
வீரவாகு தன்னிகரில்லா இறைவனே முருகனாகத் தோன்றினான் என்று சொல்லுகிறான்.
43. அனுமான் சொன்னது இராவணன் செவியில் ஏறவில்லை.
வீரவாகு சொன்னது சூரன் செவியில் ஏறவில்லை.
44. அனுமான், உன் செல்வம் சிதையாமல், உன் வாழ்வு குலையாமல் இருக்க வேண்டுமானால் சீதையை விட்டுவிடு என்று இராவணனுக்குச் சொன்னான்.
வீரவாகு, நின் சேனையோடு நீ நெடிது வாழ வேண்டு மானால் வானவரைச் 
சிறையினின்று விடுக, ஆறுமுகன் அடிபணிக என்று சூரனுக்குச் சொன்னான்.
45. அனுமான் இலங்கையை எரித்தான்.
வீரவாகு மகேந்திர நகரை அழித்தான்.
46. அனுமான் அரக்க வீரரை அழித்த பின் இராமனிடம் சென்றான்.
வீரவாகு அசுரன் சேனையைச் சிதைத்த பின் அதைவிட்டுச் சென்றான்.
47. இராவணன் மந்திரிசபை கூட்டினான். அனுமான் செய்ததை எடுத்துரைத்து வருந்தினான்.
சூரன் மந்திரிசபை கூட்டினான். வீரவாகுவின் ஜெயத்தை மந்திரிகளுக்குச் சொல்லி வருந்தினான்.
48. இராவணன் சேனைக் காவலன் மகோதரன் எழுந்து வீரம் பேசினான்.
சூரனின் ஆட்களான கால சித்தனும், சூரனின் மகனாகிய பானுகோபனும் வீரம் பேசினார்கள்.
49. இராவணன் மகிழ்ச்சியும், தீரமும் கொள்கிறான்.
சூரன் மகிழ்ந்து ஊக்கம் கொள்கிறான்.
50. இராவணன் தம்பி விபீஷணன் எழுந்து இராவணனுக்குப் புத்தி கூறுகிறான்.
சூரன் தம்பியாகிய சிங்கமுகன் சூரனுக்குப் புத்தி கூறுகிறான்.
51. இராமன் கடவுள் என்றும், நீ வாழ வேண்டுமானால் சீதையை விட்டுவிடு, என்றும் விபீஷணன் கூறுகிறான்.
சிங்கமுகன், முருகன் ஆதிபரம் பொருளென்றும், நீ வாழ வேண்டுமாயின் வானவரை விட்டு விடு, என்றும் சொல்லுகிறான்.
52. இராவணன், எதிரியைப் புகழ்ந்த விபீஷணனைக் கடிகிறான்.
சூரன், எதிரியைப் புகழ்ந்த சிங்கமுகனை வெறுக்கிறான்.
53. இராவணன், இராமனை ஏளனம் பேசி இழிவுபடுத்திச் சொல்லுகிறான்.
சூரன், சுப்ரமணியனை ஏளனம் பேசி அலட்சியமாய்க் கருதிச் சொல்லுகிறான்.
54. இராவணன், விபீஷணன்மீது குற்றம்சாட்டித் திட்டு கிறான்.
சூரன், வீரவாகுவின் மீது குற்றம் சாட்டித் திட்டுகிறான். 
55. விபீஷணன் வருந்தி, நாட்டை விட்டகலுகிறான்.
சிங்கமுகன் வருந்தி, நாட்டை விட்டகலுகிறான்.
56. போர் நடக்கிறது. முதல் நாள் போரில் இராவணன் தோற்று மீளுகிறான்.
போர் நடக்கிறது. முதல் நாள் போரில் சூரன் மகன் பானுகோபன் தோற்று மீளுகிறான்.
57. இராமன் இராவணனை, இன்று போய் நாளை வா, என்கிறான்.
முருகன் பானுகோபனை, இன்று உன்னைப் போக விடுகிறேன் என்கிறான்.
58. இராமன் இராவணனை, இப்பொழுதாவது சீதையை விடுத்துப் பிழைத்துப் போக, என்று எச்சரிக்கிறான்.
முருகன் இரண்டாம் நாள் போரில் சூரனை, இப்பொழுதாவது வானவரை விடுத்தால், உயிர் வாழ்வாய்; இல்லையெனில் மடிவாய் என்று எச்சரிக்கிறான்.
59. இராவணன், மறுமொழி கூறாது அரண்மனை சென்றான்.
சூரன் மறுமொழி கூறாது அரண்மனை அடைந்தான்.
60. இந்திரசித்தன் போருக்குச் சென்று தோல்வி அடைந்து தந்தையிடம் வந்து, இராமனை வெல்ல முடியாது. சீதையை விட்டுவிடு; உயிர் வாழ்வோம் என்கிறான்.
பானுகோபன் போரில் தோற்று, தந்தை இடம் வந்து, வானவரை விட்டு விட; உயிர் வாழலாம் என்கிறான்.
61. இராவணன் மகன்மீது கோபம் கொண்டு, உயிரை விடுவேனே ஒழிய சீதையை விட முடியாது. மானம் பெரிதே ஒழிய உயிர் பெரிதல்ல, என்கிறான்.
சூரன் மகன்மீது கோபித்து, உயிர் விட்டாலும் விடுவேன்; வானவரை விட்டு வசைக்காளாகி வாழமாட்டேன், என்கிறான்.
62. இராவணன் மகன் இந்திரசித்தன் கேடுவரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே என்று கருதி, இலக்குவனோடு போர் தொடுத்து மாண்டான்.
சூரன் மகன் பானுகோபன் போருக்குச் சென்று மடிகிறான்.
63. இராவணன் இராமனுடன் போரிட்டு மடிந்தான்.
சூரன் முருகனுடன் போரிட்டு மடிந்தான்.
64. அவன் மனைவி மண்டோதரி புலம்பி உடன்கட்டை ஏறினாள்.
இவன் மனைவி பதுமை புலம்பி உடன்கட்டை ஏறினாள்.
இப்படியாக இன்னும் பல பொருத்தங்கள் காணலாகுகின் றன. ஆகவே, கந்தபுராணத்தைப் பார்த்து நகல்படுத்திய கதையே இராமாயணம்.

நன்றி: sankar venu 


******

சீதையைப் பற்றிய ஒரு நடுநிலைமை ஆராய்ச்சி: ஈ.வெ. ரா. மணியம்மையார்  
வால்மீகி தனது ராமாயணம் என்னும் காவியத்தில் சீதையை ஒரு கற்புற்ற உயர்குணப் பெண்ணாக சித்தரிக்க வேண்டும் என்று கருதி இருந்திருக்கிறாரா? அல்லது சீதையைக் காம உணர்ச்சிக் காதல் கொண்டு ஒரு சாதாரணப் பெண்ணாகச் சித்தரிக்க வேண்டும் என்று கருதி இருக்கிறாரா என்பது இந்த ஆராய்ச்சியின் கருத்தாகும்.   
இதில் எடுத்துக்காட்டப்படும் விஷயங்கள் எல்லாம் வால்மீகி இராமாயணத்தில் உள்ளவைகளேயாகும். 
1. சீதையின் பிறப்பு வால்மீகியால் இழித்துரைக்கப்பட்டிருக்கிறது. 
(அ) சீதை யாராலோ எப்படியோ பெற்று, கட்டாந்தரையில் போட்டுப் புழுதியினால் மூடப்பட்டு கிடந்திருந்தாள். 
(ஆ) இதனால் சீதையை அவள் பக்குவமடைந்து வெகுநாள் வரையிலும் யாரும் மணக்க வரவில்லை. 
(இ) வளர்த்த தந்தை இதற்கு ஆக வருந்தி இருக்கிறார். 
இந்தச் செய்தியை வாலமீகி சீதையின் வாய்மொழியாகவே ஆரண்ய காண்டத்தில் ரிஷி ஆஸ்ரமத்தில் ரிஷியின் மனைவிக்குச் சீதையை சொன்னதுபோல் சித்தரித்து இருக்கிறார். 
2. சீதையின் குணத்தில் பரதன் அதிருப்திப்பட்டதாகவும் சீதையைப் பரதன் வெறுத்திருப்பதாகவும் சித்தரித்து இருக்கிறார். 
இதையும் வால்மீகி சீதையின் வாய்மொழி யாகவே அயோத்தியா காண்டத்தில் ராமன் வனம் செல்லும்போது, சீதையைத் தன்னுடன் கூட வனத்திற்கு வரவேண்டாம் என்றும், தான் திரும்பிவரும் வரை பரதனிடத்தில் அவனுக்கு நல்லவளாய் நடந்துக்கொண்டு இரு; அதனால் நமக்கு லாபம் கிடைக்கு மென்றும் சொன்னதற்குப் பதிலாக என்னை வெறுக்கும் பரதனிடத்தில் நான் இருக்கமாட்டேன் என்பதாகச் சீதை சொன்னதாகவும், இங்கு உள்ள நாள் எல்லாம் நம்மை அனுபவித்துவிட்டுக் காட்டுக்குப் போகும்போது நம்மைத் தள்ளப்பார்க்கிறான் என்றும் காட்டில் இராமனின் அழகைக்கண்டு வேறு பெண்கள் மோகித்து வசப்படுத்தி கொண்டால் நம் பாடு திண்டாட்டமாகப் போய்விடுமே என்றும் எண்ணியதாகவும்  சித்தரிக்கிறார்.     
அன்றியும் சீதையைப்பார்த்து, "நீ பரதனால் பாராட்டத்தக்கவள் அல்ல" என்று இராமன் வாயால் சொன்னதாகச் சித்தரித்து இருக்கிறார். 
லட்சுமணன் வாயாலும், சீதையை ஒரு சாதாரணப் பெண் என்றும், சீதை கெட்ட நடத்தை உள்ளவள் என்றும் ஆரண்ய காண்டத்தில் சித்தரித்து பேசுகிறார். 
சீதையை அவள் வாய்ப்பேச்சாலேயே "தன் மனைவியைப் பிறருக்குக் கூட்டிக்கொடுக்கும் கூத்தாடி போல் என்னைப் பரதனுக்கு விட்டு லாபம் அடையப்போகிறாயா. பேடியே ஆண்மையற்றவனே" என்றும், அற்பன் என்றும் கூடத் தன் கணவனைக் கேட்டதாக அயோத்தியா காண்டத்தில் சித்தரித்து இருக்கிறார். 
கணவன் சீதையை உன் நகைகளை எல்லாம் கழற்றி வைத்துவிட்டு வா என்று சொல்லியும் ஒரு தடவை கழற்றிவிட்டு மறுபடியும் போட்டுக்கொண்டே, காட்டுக்குப் போனதாகச் சித்தரிக்கிறார். 
கணவன் பல தடவை சொல்லியும் மர உரித்தரிக்காமலே காட்டுக்குப் போனதாய்ச் சித்தரிக்கிறார்.  
அது உண்மை என்று கருத்தும்படியாகவே இராமன் வாயாலும் நான் உன்னைச் சோதித்துப் பார்த்தேன் என்று சொன்னதாக அயோத்தியா காண்டத்தில் சித்தரிக்கிறார். 
மற்றும் பல இடங்களிலும் சீதை கற்பில் சந்தேகப்பட்டதாக இராமன் வாயால் சொன்னதாகச் சித்தரிக்கிறார். 
சீதை தனது மதிப்புக்குரிய கொழுநன் லக்ஷ்மணை, அவனது நல்ல எண்ணத்தையும் அவன் செய்த சேவையையும் சிறிதும் அறியாமலும் நன்றி இல்லாமலும் தன்மேல் லட்சுமணன் ஆசைப்பட்டு, தன்னை அடைந்து அனுபவிக்கக் கருதியதாக வெளியில் சொல்லி, ஒரு சாதாரண இழிகுலப் பெண் நடந்துக்கொள்ளும் குணம் பேச்சைப்போல், சீதை வாயாலேயே எடுத்துக்காட்டி சித்தரிக்கிறார்...

(குடியரசு 10-11-1945) 

****
பாரதி விழா  - மணியம்மை 


என் அருமை திராவிட மக்களே! நீங்கள் இம்மாதம் நடந்த பாரதி விழாவில் சிலர் 
கலந்துகொண்டீர்கள். சிலர் நீங்களே விழாக் கொண்டாட்டத்தை நடத்தினீர்கள். 

உங்களுக்குப்‌பாரதி திராவிடரா? ஆரியரா? என்பது தெரியவில்லை. பாரதி ஆரியப்‌பற்று உள்ளவரா? திராவிடப்‌பற்று உள்ளவரா? என்பதும்‌தெரிந்துகொள்ள முடியவில்லை. தீபாவளி, கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி, சமணர்‌கழுவேற்றப்பட்ட உற்சவம்‌ஆகியவைகளைப்‌ போல்‌பாரதி விழாவும்‌கொண்டாடினீர்கள்‌.
பாரதியின்‌திராவிடப் பற்றும்‌, ஒப்பு நோக்கமும்‌ கீழ்வரும் அவரது பாட்டுகளில்‌காணப்படும்‌குறிப்புகளிலிருந்து உணர்ந்து பாருங்கள்‌.
பிறரும்‌, “அப்படித்தான்‌செய்வோம்‌யார் கேட்பது” என்றால்‌உங்களுக்கு வேறு யார்‌தான்‌மான உணர்ச்சி அளிக்க முடியும்?. பாரதியின்‌உள்‌நிலைமை
தெரிய அவரது பாடல்களைச்‌சற்றுக்‌கூர்ந்து பாருங்கள்‌.
பாரதியின்‌நாட்டுப்பற்று

உன்னத ஆரியநாடெங்கள்‌நாடே
***
பாரதியின்‌இனப்பற்று

முன்னையிலங்கை அரக்கர்‌அழிய
முடித்த வில்‌யாருடைய வில்‌
ஆரிய ராணியின்‌வில்‌
ஆரிய ராணியின்‌சொல்‌
ஆரிய தேவியின்‌தேர்‌
***
பாரதியின்‌நாட்டுப்பற்று

வரலாறு பேரிமய
வெற்புகுதற்‌பெண்குமரி
யீராரும்‌ஆரியநாடென்றேயறி
**
பாரதியின் மகழ்ச்சி

ஆரிய காட்சி பேரானந்தமன்றோ
***
பாரதியின்‌நாட்டுப்பெருமை

ஆதிமறை தோன்றியலாகிய நாடே
***
பாரதியின்‌கடவுள்‌
(இந்திரனைத்‌தேவர்கள்‌வேண்டுவது போலவே)
துதி (கிருஷ்ணன்‌)

ஆரியர்‌தம்‌தர்மநிலை ஆதரிப்பான்‌
ஆரியர்‌பாழாகா தருமறையின்‌உண்மை தந்து
எங்களாரிய பூமியெனும்‌பயில்‌மங்களம்‌பெற
ஆரியர்‌வாழ்வினை ஆதரிப்போனே
ஆரிய நீயுநின்‌அறமறந்தாயோ
வெஞ்செயலரக்கரை வீட்டிடுவோனே
ஆரியர்‌கோனே
***
பாரதியாரின்‌மொழிப்பற்று
(ஆங்கிலம்‌பற்றி)
ஆரியர்க்கிங்குஇருப்பாவதை
பாரதி தமிழ்ப்பற்று

ஆதிசிவன்‌பெற்றுவிட்டான்‌என்னை ஆரிய மைந்தன்‌
அகத்தியனென்றோர்‌வேதியன்‌கண்டு
இலக்கணஞ்செய்து கொடுத்தான்‌
ஆன்ற மொழிகளினுள்ளே உயர்‌
ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்‌
***
பாரதியாரின்‌ஆசை

ஆரிய நாட்டினர்‌ஆண்மை
யோடியற்றும்‌ஏறிய முயற்சிகள்‌

என்றெல்லாம்‌வெளுத்துவாங்கி இருக்கிறார்‌. நாட்டுப்பற்று, இனப்பற்று, மொழிப்பற்று, கலைப்பற்று, கடவுள்பற்று ஆகியவைகளைப்‌பாரதி
பாடல்‌சுவைப்போர்களே பாரதியாரின்‌சுபாவத்தை நன்றாய்ச்‌சுவையுங்கள்‌.

தமிழருக்கு மானமிருந்தால்‌தமிழ்‌நாடும்‌, தமிழ் மொழியும்‌இந்நிலையில்‌இருக்குமா? இங்கு ஆரியர்‌ ஆதிக்கம்‌இவ்வுயர்நிலையில்‌இருக்குமா?

(குடியரசு, 23-9-1944)


****
பிற சமயமும்  இந்து  சமயமும் -  அன்னை மணியம்மையார்                                                          
           இன்றைய தினம் உலகத்திலுள்ள 200 கோடி  ஜனங்களுக்கு முக்கியமாய் நான்கைந்து மதங்களே பெரும் மதங்களாயிருக்கின்றன. அவற்றுள் சுமாராக கிறிஸ்து மதத்திற்கு 60 கோடியும், பவுத்த மதத்திற்கு அதன் உள்பிரிவுகளையும் சேர்த்து 60 கோடியும், இஸ்லாம் மதத்திற்கு 40 கோடியும், இந்து மதத்திற்கு 20 கோடியும், நாஸ்திகர்களுக்கு 20 கோடியும் இருக்கின்றதனாலும் இந்து மதம் தவிர, மற்ற மதங்களில் எல்லாம் வேறு மதங்களிலிருந்து வருகின்றவர்களையெல்லாம் தங்கள் மதங்களில் சேர்த்துக் கொள்வதும், நாளுக்கு நாள் தங்கள் மதங்களை விருத்தி செய்வதும், தங்கள் தங்கள் மதங்களில் உள்ள மக்கள் எல்லோரையும் சமமாகக் கருதி ஒற்றுமைப்படச் செய்வதுமான முயற்சியில் எல்லோருக்கும் சமமான கல்வியும், வாழ்க்கையில் சரி சுதந்திரமும் அளிக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால், இந்து மதம் என்பதில் மாத்திரம் மனிதனை மனிதன் பிரித்துக் காட்டி கீழ் - மேல், உயர்வு - தாழ்வு நிலையை உண்டாக்கி வேறு மதத்திலிருந்து வரும் எவனையும் சேர்க்காமலடித்து - இந்து மதத்திலிருந்து அநேகரை வேறு மதத்திற்குப் போகும்படி நிர்ப்பந்தப்படுத்தி ஜன சமூகம் வருஷத்திற்கு வருஷம் குறைந்துக் கொண்டே வருகிறது.
மதக் கொள்கையைப் பற்றிப் பேசும்போது மாத்திரம் இந்து மதம், அன்பு மதம், சமத்துவ மதம், சமரச சன்மார்க்க மதம் என்று சொல்வது; நடக்கும்போது மாத்திரம் சமரசமில்லை, சன்மார்க்கமில்லை, அன்பு இல்லை, இரக்கமில்லை என்பதும்; மற்றும் மற்ற மதங்களில் இல்லாத தத்துவங்கள், வேதாந்த சாரங்கள், ஞானங்கள் இந்து மதத்தில் இருக்கின்றன என்று பெருமை பேசிக் கொண்டு ஆத்மாவே கடவுள் என்றும், ஒரே ஆத்மா உலகிலெல்லாம் பிரகாசிக்கின்றதென்றும், எல்லா உடல்களிலிருக்கும் ஆத்மா ஒன்றே என்றும், அதற்குப் பற்றில்லை என்றும், அதற்குச் சாவு இல்லை, பிறப்பு இல்லை என்றும், ஆத்மா, கடவுள், தோற்றம் ஆகிய மூன்றும் ஒன்றை ஒன்று பிரியாத தன்மையுடையதென்றும், இன்னும் ஏதேதோ பித்துக்கொள்ளிபோல் பேசி பெருமையடைந்து கொண்டு வாழ்க்கையில் அவை ஒன்றுக்கொன்று சிறிதும் சம்பந்தமில்லாமல் நடந்து, மனித சமூகத்திற்குப் பல கொடுமைகளை இழைத்துக் கொண்டு வருவதாயிருக்கின்றது.
மற்ற சமயக்காரர்களெல்லாம் தாங்கள் செய்யும் தருமங்களையும், புரியும் கர்மங்களையும் இந்த உலகத்திலிருக்கும் மக்களுக்கு, இந்த உலகத்திலேயே நன்மை உண்டாகும்படியும் அதனுடைய பலனை இந்த உலகத்திலேயே அடைவதாகவும் சொல்லி, கஷ்டப்படுகின்ற ஜீவன் யாராயிருந்தாலும், தேவைப்படுகின்ற ஜீவன் யாராயிருந்தாலும் அவர்களுக்கெல்லாம் தங்களால் ஆனதை வித்தியாசமில்லாமல் தங்கள் மத மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் பயன்படும்படியாக உதவி வருகின்றார்கள். மீதியுள்ளதை நாட்டின் முன்னேற்றத்திற்கும் உதவி, பெரிய பெரிய நன்மைகளைச் செய்து வருகிறார்கள்.
ஆனால், இந்து மதக்காரர்களோ, தாங்கள் செய்வது மக்களுக்கு - இந்த உலகத்திற்குப் பயன்படுகின்றதா என்பதைவிட, மேல் உலகத்திலுள்ளவர்கள் திருப்தியடைவார்களா? சந்தோஷ மடைவார்களா? நமக்கு வேண்டியதை அவர்கள் கொடுப்பார்களா? நாம் இந்த லோகத்தை விட்டுப்போன பிறகு மேல் லோகத்தில் நமக்கு நன்மை கிடைக்குமா? இந்த ஜென்மம் போன பிறகு அடுத்த ஜென்மத்தில் நமக்குப் பெருமையும், மேன்மையும் கிடைக்குமா? என்கிற கவலையிலேயே செய்வதுடன், கஷ்டப்படுபவனையும், தேவைப் படுபவனையும் லட்சியம் செய்யாமல் யாருக்குக் கொடுத்தால் மேல் லோகத்தில் பலனுண்டு என்கிற கவலையினால் சுயநல எண்ணங்கொண்டு எவனெவனுக்குக் கொடுத்தால் அதிகமான பலன் மேல் லோகத்தில் கிடைக்குமென்றும், கடவுள் தனக்கே கொடுக்கும்படிச் சொன்னார் என்றும் பித்தலாட்டமாய் அறிவுக்கும், அனுபவத்திற்கும் பொருந்தாததாய் எழுதி வைத்திருக் கின்றார்களோ, அவற்றை எல்லாம் நம்பி அந்தப்படியே செய்கின்றார்கள்.
மற்ற மதக்காரர்கள் எல்லோரும் தங்கள் மதக்காரர்கள் நன்மைக்கும், மற்ற மதக்காரர்கள் நன்மைக்கும் என்று பள்ளிக்கூடம் கட்டி ஏராளமான பொருள் செலவு செய்து உபாத்தியாயர்களை வைத்து, படிப்பு சொல்லிக் கொடுக்கின்றார்கள். இந்துமதக்காரர்கள் கோவில் கட்டி ஏராளமான பொருள் செலவு செய்து பார்ப்பனர்களையும், தாசிகளையும் வைத்து உற்சவங்கள் செய்கின்றார்கள். படிப்பைப் பற்றிய கவலையே இல்லாமலிருக்கின்றார்கள்.
மற்ற மதக்காரர்கள் மக்களின் நோய்களைச் சவுக்கியம் செய்ய ஆஸ்பத்திரிகள் கட்டி வைத்தியம் செய்கின்றார்கள். இந்து மதக்காரர்கள் நோய் வந்தாலும், காசில்லாமல் வேறொருவன் செய்யும் வைத்தியத்தைக் கூட செய்து கொள்ளாமல் அந்த நோய்க்கும் கடவுளை நம்பிக் கடவுளுக்கும் சில்லறை தேவதைகளுக்கும் வேண்டிக் கொள்வதன் மூலமும் கோவில்களுக்குப் போய் படுத்துக் கொள்வதன் மூலமும் காசையும், நேரத்தையும் செலவு செய்து காயலாவைப் பலப்படுத்திக் கொள்கிறார்கள்.
மற்ற மதக்காரர்கள் பெண்களுக்குப் படிப்புக் கொடுத்து அறிவு உண்டாக்கி வாழ்க்கையில் புருஷர்களுக்கு குடும்பக் கஷ்டமில்லாமல் இருக்கும்படியாக பயன் பெறச் செய்கின்றார்கள்.  இந்து மதக்காரர்கள் படிப்புக் கொடுக்காமல் போவதோடல்லாமல் ஏறக்குறைய 100-க்கு 50 பெண்களுக்கு பிசாசு பிடிக்கச் செய்து பேயோட்டுகின்றார்கள்.
கடைசியாக, கடவுள் விஷயத்திலும் 60 கோடி கிறிஸ்தவருக்கு ஒரே கடவுளாகவும், 60 கோடி புத்தர்களுக்கு ஒரு கடவுள் கூட இல்லாததாகவும், 40 கோடி முகம்மதியர் களுக்கும் ஒரே கடவுளாகவும், அதுவும் உருவம், பால் இல்லாததாகவும் இருக்கும்போது இந்துக்களுக்கு மாத்திரம் 20 கோடிப் பேருக்கு, 33 கோடி கடவுள்களும், அவைகளுக்குக் கண்ணு, மூக்கு, கைகால்கள் அதுவும் ஒவ்வொன்றுக்கும் ஆயிரக்கணக்கான கண்கள், இரண்டாயிரக்கணக் கான கைகள், பதினாயிரக்கணக்கான பெண்ஜாதி, பதினாயிரக்கணக் கான தாசி வேசி வைப்பாட்டிகள், பிள்ளை குட்டி, மாமன், மாமி, மைத்துனன், மாமனார், மருமகன், மருமகள், பேரன், பேத்தி, கொள்ளுப் பேத்தி முதலிய பத்து வர்க்கங்களுடன் இருக்கின்றன.
இவை மாத்திரமல்லாமல், மற்ற மதக் கடவுள்களுக்கு பூசையோ, சாப்பாடோ, ஸ்நானமோ, வேஷ்டி துணியோ, கல்யாணமோ, கருமாதியோ, கல்லெடுப்போ இல்லாமல் இருப்பதும், இந்து மதக் கடவுள்களுக்கு மாத்திரம் தினம் ஒரு வேளை, மூன்று வேளை பூசையும், ஸ்நானமும், அபிஷேகமும், ஒவ்வொரு சாமிக்கும் பூசை நாள் 1-க்கு 1 படி, 2 படி, 100 படி, 10 மூட்டை, 20 மூட்டை, 50 மூட்டை அரிசி வீதம் சமைத்து வைத்து ஆராதனை செய்வதும், மற்றும் பலப் பல நைவேத்தியங்கள் செய்வதும், கணக்கில்லாமல் துணிகள் கட்டுவதும், நகைகள் போடுவதுமான செலவுகள் செய்து வருகிறார்கள்.
மதத் தலைவர் அல்லது தெய்வீகத் தன்மை பொருந்தியவர்கள் என்பவர்களிலும், மற்ற மதக்காரருக்கு ஒவ்வொருவரே உண்டு. அதாவது கிறிஸ்து சமயத்திற்கு கிறிஸ்து நாதரும், இஸ்லாம் சமயத்திற்கு முகமது நபியும், பவுத்த சமயத்திற்கு புத்தரும் இப்படி ஒவ்வொருவரே உண்டு. ஆனால், இந்து சமயத்திற்கு முதலில் யார் என்று கண்டுபிடிப்பது கஷ்டமாகும். அப்படிக் கண்டுபிடித்து விட்டால் பிறகு அவர்களைப் போல் நூற்றுக்கணக்காக, ஆயிரக்கணக்காக, லட்சக்கணக்காக அவதாரம், தேவர்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ரிஷிகள், முனிவர்கள் முதலாகிய தெய்வ அவதாரமும் தெய்வ அம்சமும் பொருந்தியவர்கள் கணக்கு வழக்கில் அடங்காத அளவு ஆகிவிடும்.
சமய ஆதாரங்கள் விஷயத்தில் மற்ற சமயக்காரர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆதாரமே உண்டு. அதாவது கிறிஸ்துவருக்கு பைபிள், இஸ்லாமானவருக்கு குர்ஆன், பவுத்தருக்கு திரிபீடகம் என்பவையாகும்.               ஆனால், இந்து சமயக்காரருக்கு 4 வேதம், 6 சாஸ்திரம், 18 புராணம். இவை தவிர, அவர் சொன்னது, இவர் சொன்னது, உதாரணமாக, மனு சொன்னது, பராசரர் சொன்னது, ரிஷிகள் சொன்னது, போதாயனர் சொன்னது, பகவான் சொன்னது, மாடு, குரங்கு, கழுகு, கிளி சொன்னது என்பவை போன்ற கணக்கு வழக்குக்கடங்காத அநேகம் உண்டு.
இந்தவிதமான ஆதாரங்களைப் பார்க்கும் உரிமை விஷயத்திலோ, மற்ற சமயக்காரர்களில் யாரும் அச்சமய ஆதாரம் எதையும் கேட்க - பார்க்க - படிக்க - மனத்தில் இறுத்த - உரிமையுண்டு. ஆனால், இந்து சமயக்காரருக்கோ அச்சமய ஆதாரத்தை நூற்றுக்கு மூன்று பேர் அதிலும் பெண்களை நீக்கிவிட்டால், 100-க்கு ஒன்றரைப் பேர் மாத்திரமே படிக்க - கேட்க - பார்க்க உரிமையுடையவர் களாவார்கள். பாக்கி தொண்ணூத்தெட்டரைப் பேர்கள் அவைகளைப் பார்த்தோ, கேட்டோ, படித்தோ விட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி  ஊற்றுவதும், கண்ணைக் குத்துவதும், நாக்கை அறுப்பதும் முதலாகிய பலவகைத் தண்டனைகள் படிப்படியாயுண்டு.
இப்படியிருக்க, இதுபோலவே இன்னும் அநேக விஷயங்களில் இந்து மதம் வித்தியாசத்தை வைத்துக் கொண்டு அவற்றை நிலைநிறுத்த முயற்சிகளும் செய்து கொண்டு, இதன் பயனாகவே தேசத்தை அன்னிய நாட்டு ஆதிக்கத்திற்கும், நன்மைக்கும் விட்டுக் கொண்டு தேசத்தில் உள்ள மக்களை நாயினுங்கடையாக, கேவலமாய் நடத்தி இழிமக்களாக்கி அடிமைப்படுத்திக் கொண்டிருப்பதை மறந்து அநேகரை உப்புக்கு சிறைக்குப் போகச் சொல்கின்றது.
எனவே, பிற சமயத்திற்கும் நம் (இந்து) சமயத்திற்கும் உள்ள தாரதம்மியத்தையும், அதனால் ஏற்பட்ட பலனையும் எனக்குத் தோன்றிய வகையில் ஒருவாறு எடுத்துச் சொன்னேன். இனி உங்களுக்குப் பட்டபடி முடிவு செய்து நடந்து கொள்ளுங்கள்.

-குடிஅரசு - (9.12.1944)










No comments:

Post a Comment