Tuesday 31 March 2020

மங்கையர் திலகம் மணியம்மையார்...! - ஆசிரியர் கி. வீரமணி

மங்கையர் திலகம் மணியம்மையார்...! - ஆசிரியர் கி. வீரமணி



தமிழக வரலாற்றில் அரை நூற்றாண்டு காலம் முக்கிய பங்கு வகித்தவர் ஈ.வெ.ரா பெரியார். 1933-ம் ஆண்டு பெரியாரின் மனைவி நாகம்மையார் காலமானார். அதன்பிறகு 10 ஆண்டுகாலம் குடும்ப உறவு வகையிலோ, மற்ற வகையிலோ எந்தவித உதவியுமின்றித் தனித்து இரவுப் பகலாக பிரசாரம், போராட்டங்களுக்கிடையே பொதுத் தொண்டு ஆற்றி வந்தவர் தந்தை பெரியார். அந்த காலகட்டத்தில், வேலூரில் கழகத் தொண்டராக இருந்த கனகசபை பத்மாவதி ஆகியோரின் மகளான காந்திமதி என்பவர் தந்தை பெரியாருக்கு உதவியாளராக வந்து சேர்ந்தார். பிற்காலத்தில் ஈ.வெ.ரா.மணியம்மையாராகப் பெயர் மாற்றம் பெற்ற இவர், பிறந்தது 1920 மார்ச் மாதம் 10 -ந் தேதியாகும். வேலூரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தார்.

95 ஆண்டு காலம் வரை வாழ்ந்த தந்தை பெரியாரைப் பாதுகாத்து, பத்திய உணவு முதல் எல்லா வகைகளிலும் அளித்து, அவரின் பொதுத் தொண்டு தொய்வில்லாமல் தொடர்வதற்கு உறுதுணையாக இருந்தவர் மணியம்மையார். வயது முதிர்ந்த நிலையில், தனக்குப் பிறகு இயக்கச் சொத்துகளைப் பாதுகாப்பதற்கான ஏற்பாட்டினை சட்டப்படி செய்யவேண்டிய நிலைக்கு ஆளானார் தந்தை பெரியார்.

சட்டப்படி மனைவி என்னும் நிலையில் உள்ளவர்களுக்குத்தான் வாரிசுரிமை உண்டு என்பதால், சட்டப்படியான ஒரு ஏற்பாட்டினை தந்தை பெரியார் செய்தார். இது குறித்து அவர் பத்திரிகையில் எழுதியதாவது:

“இந்த திருமணம் என்பது சட்டப்படியான பெயரே ஒழிய சட்டப்படி எனக்கு வாரிசுதான் எனது உள்பட பொருளுக்குத்தான்” என்று தந்தை பெரியார் எழுதினார். இந்த திருமணத்தை காரணம் காட்டி தாய்க் கழகத்திலிருந்து அண்ணா தலைமையில் தி.மு.க. பிரிந்தது; இது ஒரு காரணமாக சொல்லப்பட்டதே தவிர, அரசியலில் ஈடுபடவேண்டும் என்ற நோக்கம்தான் இதன் பின்னணியில் இருந்தது.



22.1.1976-ம் ஆண்டு மணியம்மையார் தலைமையில் தஞ்சையில் நடைபெற்ற சுயமரியாதை இயக்கப் பொன்விழா மாநாட்டில் உரையாற்றிய தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் பகிரங்கமாகவே இதனை ஒப்புக்கொண்டார்.

ராஜாஜி ஆலோசனையின் பெயரில்தான் பெரியார், மணியம்மை திருமணம் நடந்ததாகவும், பிரசாரம் செய்யப்பட்டது. ஆனால், உண்மை என்னவென்றால், ராஜாஜி அதில் மாறுபட்டுத்தான் இருந்தார் என்பதை கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி பெரியாருக்கு எழுதிய ‘அந்தரங்கம்’ என்ற முறையில் எழுதப்பட்ட கடிதத்தின் மூலம் அறிய முடிந்தது

‘அந்தரங்கம்’ என்று கடித உறையில் குறிக்கப்பட்டு இருந்ததால், அந்தக் கடிதத்தைத் பெரியாரோ, மணியம்மையாரோ வெளியிடவில்லை. பெரியாரும், மணியம்மையாரும் மறைந்த நிலையில், வரலாற்றுக் காரணங்களுக்காக மட்டும் நான் அந்தக் கடிதத்தை வெளியிட நேர்ந்தது. மணியம்மையாரின் தொண்டும், பணியும் அளவிடற்கரியது.

தியாகம் என்ற சொல்லுக்குள் அடங்கிய தன்னல மறுப்பு பலவகைப்பட்டவைதான். ஆனால் ஒரு பெண் தன் இளமையை தான் ஏற்ற சுய மரியாதை லட்சியங்களுக்காக அதன் தலைவருக்குத் தொண்டூழியம் செய்வதற்கென்றே தியாகம் செய்து எல்லையற்ற ஏச்சுகளை, வசவுகளை, அவதூறுகளை ஏற்றுக்கொண்டு எல்லை தாண்டிய சகிப்பு த்தன்மையோடு எவர் எவர் எல்லாம் கடுமையாய் கொடுமையாய் விமர்சித்தார்களோ, தூற்றினார்களோ அவர்களிடமிருந்தே 20 ஆண்டுகளுக்குப் பிறகே பாராட்டையும் பரிவு கலந்த மரியாதையும் பெற்றார் என்பது சரித்திரத்தின் விசித்திரங்களில் ஒன்று அல்லவா?

தந்தை பெரியார் தனக்குப்பிறகு தனது பூர்வீக் சொத்துகளின் மூலம் வரும் ஈவு(வருமானம்) தன்னை நம்பிய மக்களும் கழகத்தோழர்களும் தந்த நன்கொடைகள் அதன் பெருக்கம் எல்லாம் பாதுகாக்கப்பட்டு தனக்குப்பிறகு இயக்க பிரசாரத்துக்கு கொள்கை பரப்பதலுக்கு பயன்பட தனது நம்பிக்கைக்குரிய ஒருவரைத் தேர்வு செய்ய விரும்பினார். பெண்களை வாரிசாக ஆக்க அப்போதைய இந்து சட்டம் இடம் தராது துணைவி என்றால் வாரிசுதாரராக இயல்பாக ஆகலாம் என்ற சட்ட ஆலோசனையை சட்ட வல்லுனர்கள் வழங்கினர். அதன்படியே அவர் தனக்கு உதவிசெய்த பெண்ணையே தனது வாரிசாக சட்டபூர்வமாக்கினார்.

திருச்சியில் 1960-ம் ஆண்டு முதல் ஆதரவற்ற நாகம்மை அனாதைக் குழந்தைகள் இல்லம் தொடங்கப்பட்டு பெரியார் மாளிகையில் இயங்கியது. அவர்களின் பெறாத தாயாக மணியம்மையார் விளங்கினார். மருத்துவமனையில் கைவிடப்பட்ட சில நாள் குழந்தைகளைக்கூட தத்தெடுத்து வளர்த்து, குழந்தைகள் இல்லத்தில் சேர்த்து, படிக்க வைத்தார்.

அக்குழந்தைகளுக்கும் “ஈ.வெ.ரா.ம.” என்று இணைந்த ஈ.வெ.ரா.ம.கலைமணி, ஈ.வெ.ரா.ம. அருள்மணி, ஈ.வெ.ரா.ம.அன்புமணி என்று அய்யா, அம்மா பெயரை இணைத்து அடையாளப்படுத்திய பெரிய மனதை என்ன சொல்லிப் பாராட்டுவது

அவ்வில்லம்தான் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லம். இன்று தமிழ்நாட்டில் குழந்தைகளை வளர்த்து கல்வியளித்துப் பராமரிப்பதில் ஒரு எடுத்துக்காட்டான இல்லம் இயக்கம் என்று மதுரை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளே கூறியுள்ளார்கள்.

தொண்டறத்தில் உயர்ந்த அந்த உத்தமத்தாய் 34 இல்லக் குழந்தைகளை வளர்த்து படிக்க வைத்து 34 பெண்களுக்குத் திருமணமும் செய்து வைத்து மாசற்ற மங்கையர் திலகமாகவே விளங்கினார் 1952 பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனத்தின் ஆயுள் செயலாளராக தந்தை பெரியாரால் நியமிக்கப்பட்டார்.

தந்தை பெரியாரின் மறைவுக்கு பின் மணியம்மையார் திராவிட கழகத் தலைவராகப் பொறுப் பேற்றுக் கழகத்தை வழி நடத்திச் சென்றார்.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வகை செய்ய மத்திய அரசை வற்புறுத்தி சென்னை தலைமை அஞ்சலகம் முன் மறியல் கிளர்ச்சி செய்தார். மணியம்மையாரின் எதிர்காலப் பாதுகாப்பைக் கருதி மணியம்மையாருக்கே தெரியாத நிலையில் தந்தை பெரியார் ஏற்பாடு செய்து வைத்திருந்த சொத்துகளைத் தமக்காகப் பயன்படுத்திக் கொள்ளாமல், மக்களின் பொது நலனுக்கே அவை பயன்படவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் உடல் நலமின்றி, தாம் சென்னைப் பொது மருத்துவமனையில் இருந்தபோது மணியம்மையார் “பெரியார் மணியம்மை கல்வி அறக்கட்டளைக் கழகம்” தொடங்க ஏற்பாடு செய்தார். அந்த அமைப்பு சென்னையில் பதிவு செய்யப்பட்டது. பெரியார் நூலகம் மற்றும் ஆய்வகத்தை நிறுவினார். ‘பெரியார் மணியம்மை பெண்கள் உயர் நிலைப்பள்ளி’யைத் திருச்சியில் ஏற்படுத்தினார்.

பெரியார் மறைந்த பிறகு திராவிடர் கழகத்திற்கு பகுத்தறிவு இயக்கத்திற்கு பெண் ஒருவர் தலைவரான வரலாறு இந்தியாவில் இதுதான் முதல் வரலாறு. அய்யா அம்மாவுக்காக எழுதி வைத்த அந்தச் சொத்துகள் எல்லாவற்றையும் பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் “பெரியார் மணியம்மை கல்வி அறக்கட்டளை”யாகப் பதிவு செய்தார். பெரியார் முன்பு ஏற்படுத்திய பெரியார் அறக்கட்டளை போலவே (டிரஸ்ட்) உருவாக்கி, தனது உற்றார் உறவினர் எவரையும் பொறுப்பாக்காமல், இயக்க உறவுகளையே நம்பி ஒப்படைத்தார்.

தன்னை விமர்சித்த அண்ணா பெயரையும், ஈரோட்டில் பெரியார் நினைவு இல்லத்தோடு இணைக்க இசைவு தந்தார். அவ்வில்லத்திற்கு நிதி தர அரசு தயாராக இருந்தும், அதை ஏற்க மறுத்தார். ‘அய்யா அண்ணா நினைவகம்’ என்று அன்னையார் கூறி, நன்னயம் செய்து உயர்ந்து நிற்கிறார்.

இத்தகைய தொண்டறத்தின் சின்னமான அன்னை மணியம்மையார் 1978-ம் ஆண்டு மார்ச் மாதம் 16-ந்தேதி 58-வது வயதில் காலமானார். தந்தை பெரியாரின் உதவியாளராக, செவிலியராக, இயக்க நூல்களை சுமந்து விற்பனையாளராக, தலைவராகப் பன்முக ஆளுமை மிக்க எளிமையின் சின்னமான, தொண்டறத்தின் தூயஉருவமான மணியம்மையாரின் நூற்றாண்டு விழா நாளை (10-ந்தேதி) அவர் பிறந்த வேலூரில் நடைபெற உள்ளது. ஆண்டு முழுவதும் மாவட்டந்தோறும் கொள்கை ரீதியில் கொண்டாடப்பட்டு நூற்றாண்டு நிறைவு விழா 2020 மார்ச் மாதம் 10 -ந்தேதி மிகப்பெரிய விழாவாக சென்னையில் கொண்டாடப்பட உள்ளது. 



- கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்

நன்றி: தினத்தந்தி

No comments:

Post a Comment