Tuesday 31 March 2020

தந்தையை பிரிந்த தனையன் – ஜெகன் தங்கதுரை

தந்தையை பிரிந்த தனையன் – ஜெகன் தங்கதுரை

1949 ஜூலை 09 ல் நடந்த நிகழ்வு திராவிட அரசியலில் தமிழக வரலாற்றில் மட்டுமல்ல இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாகும். பெரியாரும் அண்ணாவும் பிரிந்தது ஏன்? என்ற கேள்வி எழுப்பப்படும் போதெல்லாம் தன் வயதில் பாதி வயதேயான மணியம்மையை பெரியார் திருமணம் செய்து கொண்டார் என்பதை ஏற்காமல் தி.க விலிருந்து பிரிந்து தி.மு.கவை உருவாக்கினார் அண்ணா என்று பதில் தரப்படுகிறது. இது உண்மையா? இது தான் காரணமா?
1949ல் தி.மு.க வினர் பெரியார் மீது வைத்த இந்த விமர்சனம் அவர் மீது தொடர்ந்து சொல்லப்பட்டுக் கொண்டே வருகிறது. பெரியார் திருமணத்திற்கு பதிலாக அவரை தத்தெடுத்து இருந்தால் இந்த பிரிவினை ஏற்பட்டிருக்காது என்றும் சொல்லப்படுகிறது, ஆனால் உண்மை வேறுவிதமாக இருக்கிறது. பெரியார் மணியம்மையைத் தத்தெடுத்திருக்கவே முடியாது என்பதே அது.
பெரியார் இந்து மதத்தையும், வர்ணாசிரம கொள்கைகளையும் எதிர்த்தபோதும் இந்து மதத்தைவிட்டு வெளியேறவில்லை. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பெரியாரைப் புத்தமதத்தை ஏற்கும்படி அழைப்புவிடுத்தபோது வேறுமதத்தில் இருந்து கொண்டு மற்ற மதத்தை விமர்சிப்பது நேர்மையாகாது என்றும், இந்து மதத்திலிருந்தால் மட்டுமே அதில் உள்ள மூடநம்பிக்கைக்கு எதிராகவும், பகுத்தறிவு கருத்துகளையும் பேச முடியும் எனக்கூறி பெரியார் அம்பேத்கரின் அழைப்பை மறுத்துவிட்டார்.
1949 நவம்பர் 26 ஆம் நாள் அன்று இந்திய நாடாளுமன்றத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 1950 ஜனவரி 26 ஆம் நாள் நடைமுறைக்கு வந்தது. அதற்கு முன்பே 1949 ஜூலை 09 ஆம் நாள் அப்போதிருந்த Òஇந்து சிவில் சட்டப்படிÓ ஒரு பெண்ணுக்குத் தத்தெடுக்கும் உரிமையும் கிடையாது, தத்து போகும் உரிமையும் கிடையாது. அவ்வாறு இருக்கும் போது தனக்குப் பின்னால் திராவிடர் கழகத்தை அதன் சொத்துக்களை நிர்வகிக்க மணியம்மையை தேர்ந்தெடுத்த பெரியாருக்கு அவரை திருமணம் செய்வதைத் தவிர வேறு சட்டப்பூர்வமான வழி இருக்கவில்லை.
இத்திருமணத்திற்காகப் பெரியார் விமர்சிக்கப்படுவாராயின் அந்த விமர்சனங்கள் அனைத்தும் பெண்களைச் சமமாக நடத்தாத பிற்போக்கு இந்து மதச்சடங்குகளின் மேல் வைக்கப்பட வேண்டியவையே தவிரப் பெரியார் மீது வைப்பது என்பது அவர்மீதான அவதூறு ஆகும். இந்த நடைமுறைச்சிக்கல்கள் தற்போதைய தலைமுறைக்குப் புரியாததொன்றும் ஆச்சரியம் இல்லை. ஆனால் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும் தெரியாமல் இருந்ததா?
கிழவர் ஒருவர் இளம் பெண்ணை மணந்தார் என்றால் பொதுமக்கள் மத்தியில் கழகத்தின் பெயருக்குக் களங்கம் வந்துவிடும் என்று அண்ணா கருதியதாகவும் விளக்கம் சொல்லப்படுகிறது. மக்களின் பொதுப்புத்திக்கெல்லாம் அச்சப்படுவதாக இருந்தால் திராவிட இயக்கத்தின் சாதனைகளாக நாம் கருதும் பலவற்றை இன்று செய்திருக்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதேசமயம் தொடக்கக்காலத்திலிருந்தே பெரியார் மக்களின் பொதுபுத்தியில் வெறுக்கும் விசயங்களைப் புகுத்தும் போதெல்லாம் அதற்கு எதிராக அண்ணா தனது கருத்தைப் பதிவுசெய்தே வந்திருக்கிறார்.
கருஞ்சட்டை விவகாரம்
திராவிட விடுதலைக்காகப் போராட அமைக்கப்பட்ட திராவிட விடுதலைப் படையை கருஞ்சட்டைப்படையாக மாற்றினார் பெரியார் இதில் உடன்பாடு இல்லாதபோதும் ஆதரித்தே பேசிவந்தார் அண்ணா. ஆனால் கருஞ்சட்டை படையினர் மட்டுமல்ல அனைவரும் கருஞ்சட்டை அணிய வேண்டும் என்று பெரியார் சொன்ன போது அதனை அண்ணா எதிர்த்தார், தமிழர்களின் உடை வெள்ளைவேட்டி, வெள்ளை சட்டை எனும்போது இது மக்களிடமிருந்து கழகத்தை விளகச் செய்துவிடும் என்றார். இந்த ஒருவிவகாரம் மட்டுமல்ல மக்களின் பொதுபுத்திக்கு எதிராக வேலை செய்வதில் அண்ணாவிற்கு எப்போதும் தயக்கம் இருந்தே வந்திருக்கிறது என்பதை அவரது வாழ்வையும், எழுத்தையும் கூர்ந்து கவனித்தால் தெரியவருகிறது.
கலை இலக்கிய முரண்பாடு
கம்பராமாயணத்தை எதிர்த்துப் பேசிவந்த அண்ணா பின்னாளில் கம்பருக்குச் சிலை வைத்தார். பெரியார் தீவிரமான பகுத்தறிவு பேசிவந்த நிலையில் அவரைவிட்டுப் பிரிவதற்கு முன்பாகவே Òஓர் இரவுÓ நாடகத்தில் நேரடி பார்ப்பனிய எதிர்ப்பு குறைந்திருக்கும், அவரது நாடகங்களில், திரைப்படங்களில் ஜமீன்தார்களே வில்லன்களாக மாறியிருந்தனர், ஏனெனில் பார்ப்பனிய எதிர்ப்பைவிட தங்களை நேரடியாக ஒடுக்கும் ஜமீன்தார்கள், பண்ணையார்கள் எதிர்ப்பே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அதிகம் பிடித்திருந்தது. 1947 ஆம் ஆண்டு வெளியான தனது வேலைக்காரி நாடகத்தில் Òஒன்றே குலம் ஒருவனே தேவன்Ó எனப் பிரகடனம் செய்தார் அண்ணா. இந்த சர்ச்சைகளுக்கு முன்பாகவே பெரியாருக்கும், அண்ணாவிற்கும் நாடகம் மற்றும் சினிமா தொடர்பாகக் கருத்து வேறுபாடு இருந்தது.
மக்களை அதிகமாகச் சென்று சேருவதற்கு நாடகம், சினிமா ஒரு எளிய வழி என்று நினைத்தார் அண்ணா. பெரியாருக்கு அதில் நம்பிக்கையில்லை மக்களை அது மழுங்கடிக்கும் என்றே கணித்தார். இந்த நிலையில் 1944 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரபல நாடகக்குழுவான TK சண்முகம் குழுவின் முயற்சியால் தமிழ் மாகான நாடகக்கலை அபிவிருத்தி மாநாடு கூட்டப்பட்டது. அண்ணா சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்டார். ஆனால் பெரும்பாலும் பக்தி நாடக கலைகளையே நடத்தும் இந்தமாநாடு உள்நோக்கம் உடையது என்பது பெரியாரின் கருத்து. மாநாட்டிற்கு முன்பாகவே அதனை எதிர்த்து குடியரசு செய்தி வெளியிட்டு வந்தநிலையில் மாநாடு முடிந்தபின் அதனை படுதோல்வி என்று செய்தி வெளியிட்டது. அண்ணாவின் திராவிட நாடு இதழிலோ மாநாடு வெற்றி என்று செய்தி வந்தது.
இலக்கியத்திலும் பெரியாருக்குப் பெரிய ஈடுபாடு இல்லை, புலவர்கள் மீதும் பெரிய மதிப்பும் இல்லை. எனவே கழகத்தில் நிதி வசதி இல்லை என்றும் ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்து வளர்க்க வேண்டும் எனவும் அதுவரை யாரும் மாநாடுகள் நடத்தி பணத்தைச் செலவழிக்க வேண்டாம் எனவும் கூறியிருந்தார் பெரியார். இந்தநிலையில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 55வது பிறந்த நாளையொட்டி பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார் அண்ணா, அதற்கென தனியாகக் குழு அமைத்தும் இதற்குப் பொருளாளராகத் தானே இருந்து 25ரூபாய் நிதி திரட்டினார். இதை பெரியார் வெளிப்படையாக எதிர்க்கவில்லை என்றபோதும் அந்தக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. பெரியார் இல்லாதது பெரும் குறை என அக்கூட்டத்தில் அண்ணா உரையாற்றினார்.
திராவிட நாடு பத்திரிக்கை
இப்படி அங்கங்கு பெரியார் அண்ணா இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவதாலேயே, இருவரும் ஒரே கழகத்தின் தலைவராகவும் பொதுச்செயலாளராகவும் இருந்து வந்தபோதும் இருவரும் வெவ்வேறு பத்திரிக்கைகள் நடத்திவந்தனர். காரணம் அண்ணா தனிபத்திரிக்கை தொடங்குவதற்கு முன்பாக தலையங்கங்களில் கட்டுரைகளில் இருவருக்கும் கருத்துவேறுபாடுகள் எழும் அப்போது ஏற்படும் சண்டையால் அண்ணா கோவித்துக் கொண்டு காஞ்சிபுரம் சென்றுவிடுவார், பிறகு பெரியார் கடிதம் எழுதி அழைத்தபிறகு வந்து சேர்ந்துகொள்வார். இந்தக் காலகட்டத்தில்தான் 1942ல் தனியாக திராவிட நாடு பத்திரிக்கையைத் தொடங்கினார் அண்ணா.
இந்தியச் சுதந்திரம் இந்தியா, பாகிஸ்தான் பிளவை மட்டுமல்ல பெரியார், அண்ணா பிளவையும் ஏற்படுத்தியது. இருவரும் தங்களது கருத்துகளை வெவ்வேறு ஏடுகளில் சொல்லிவந்தாலும் இந்த விவகாரத்தில் சர்ச்சை உச்சம் தொட்டது. 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரம் கிடைக்கவில்லை வெள்ளைக்காரன் கையில் இருந்து கொள்ளைக்காரர்களான பார்ப்பனர்கள் கையில் செல்கிறது என்பது பெரியாரின் நிலைப்பாடு ஆகையால் அதனை துக்க நாளாக அனுசரிக்க வேண்டுமென்று கூறினார். ஆகஸ்ட் 9 தேதி முதல் 13ஆம் தேதி வரை தென்னிந்தியாவில் உள்ள திராவிடர்கள் அனைவரும் பெரும்கூட்டங்களைக் கூட்ட வேண்டும் திராவிட நாடு பிரியும் அவசியத்தை உணருமாறு செய்யவேண்டும் என்று கூறினார். ஆனால் அண்ணாவிற்கு இதில் உடன்பாடு இல்லை. அதனை எதிர்த்து 18பக்கங்களுக்கு மறுப்பு எழுதினார். அண்ணாவைப் பொறுத்தவரை இரண்டு எதிரிகளில் ஒருவர் ஒழிந்தனர் என்பதால் இன்ப நாள் என்று எழுதினார். காரணம் பிரிட்டிஷ்க்கு ஆதரவானவர்கள் என்கிற பழி தன் மீதும், கழகத்தின் மீதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் அண்ணா தெளிவாக இருந்தார். இதற்காகக் கட்சியிலிருந்து தன்னை நீக்கினாலும் பரவாயில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். 
ஆக, அப்போதே திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறத் தயாராக இருந்தார் அண்ணா. அப்போதே கழகத்தில் இருபிரிவினர் உருவாகியிருந்தனர். இருந்தும் பெரியாரே தங்களை வெளியேற்றட்டும் என்று காத்திருந்தார் அண்ணா. பெரியார் வெளியேற்றவில்லை, இருவருக்குமான கருத்துவேறுபாடும் தீரவில்லை. அதே ஆண்டு அண்ணா கலந்துகொள்ளாத திராவிட நாடு பிரிவினை மாநாட்டில் அவரை மறைமுகமாக தாக்கி பேசப்பட்டது சுயபெருமைக்காகவும், சுயவிளம்பரத்திற்காகவும், சுயநலத்திற்காகவும் மட்டுமே கழகத்திலிருந்துவரும் தோழர்களின் சொல் கேட்டு ஏமாந்து போகவேண்டாம் என்று தூத்துக்குடி மாநாட்டில் பெரியார் பேசினார். இந்த மாநாட்டில் MR.ராதா நேரடியாக அண்ணாவைத் தாக்கிப் பேச 'நடிகவேள் கலந்த நஞ்சு' என்று எழுதினார் கலைஞர். அண்ணாவும் தனது சிறுகதைகள் மூலம் பெரியாருக்கு பதில்கூறி வந்தார். ராஜபார்ட் ரங்கதுரை பாகவதர், இரும்பாரம், மரத்துண்டு ஆகிய மூன்று கதைகள் முக்கிய பங்காற்றின.
ராஜபார்ட் ரங்கதுரை கதையின் இறுதியில் ஒரு குருவும் சிஷ்யனும் பிரிந்துவிடுவார்கள் பிறகு ஒருவர் மற்றொருவரை நினைத்து கண்ணீர்த்துளி வடிப்பதாக முடியும். இந்த ‘கண்ணீர்த்துளி’ என்கிற சொல்லைத் தான் பின்னாளில் பெரியார் தி.மு.கவிற்கு எதிராகப் பயன்படுத்தினார். பெரியாரும் அண்ணாவும் பிரிந்துவிட்டார்கள் என்று கருத்தத்தொடங்கிய போதுதான் பெரியாரும், அண்ணாவும் மீண்டும் ஒரே மேடையில் தோன்றினார்கள். காரணம் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் 1948 ஜூலையில் நடைபெற்ற மாநாட்டில் பெரியார், மறைமலையடிகள், திரு.வி.க, பாரதிதாசன், அண்ணா எனபலரும் கலந்துகொண்டனர். அடுத்த மாதம் இந்தி எதிர்ப்பு அறப்போர் தொடங்கப்பட்டது அதை நடத்தும் முதல் சர்வாதிகாரியாக அண்ணாவை நியமித்தார் பெரியார்.
ஈரோட்டு மாநாடு 
பெரியாருக்கும், அண்ணாவிற்கும் இடையிலான முரண் குறைந்துவிட்டது எனப் பேச்சுகள் உளவ ஆரம்பித்தது. அதனை நிரூபிக்கும் வகையில் இருந்தது வரலாற்றுச் சிறப்புமிக்க 1948 அக்டோபரில் நடந்த ஈரோட்டு மாநாடு. மாநாட்டிற்கு அண்ணாவே தலைமை தாங்கினார். மாநாட்டுத் தலைவர் என்கிற முறையில் ஊர்வலத்தில் காளைகள் பூட்டிய சாரட்வண்டியில் அமரவைத்து பெரியார் நடந்துவந்தார். மாநாட்டில் தனக்குப்பிறகு அண்ணாதான் தலைவர் எனத் தெரிவித்து அண்ணா ஒருவர் போதும் நமது கழகத்தை நடத்திச் செல்ல என்று பேசினார். வயதான தந்தை தன் பொறுப்புகளை தன் மகனிடம் ஒப்படைத்துவிட வேண்டியதுதான் நியாயம் என்றும் பேசினார். எல்லாவற்றிற்கும் மேலாக பெட்டி சாவியை அண்ணாவிடம் கொடுக்கிறேன் என்று கூறிய பெரியார் தனக்குப்பிறகு அண்ணா தேர்தல் பாதையைத் தேர்ந்தெடுத்து சமரசத்திற்கு ஆட்பட்டுவிடுவார் என்ற எண்ணம் உறுதியாகவே அம்முடிவைக் கைவிட்டார்.
இதன் பிறகு தன் வாரிசாக ஈ.வெ.கி.சம்பத்தை நியமிக்க முயன்று அவரை தேர்ந்தெடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். ஆனால் சம்பத்தும் அண்ணாவின் சீடராக இருப்பதைக்கண்டு அதையும் பாதியிலேயே நிறுத்திவிட்டார். இதுதவிர அர்ஜுனன் என்பவரைத் தத்தெடுக்க திட்டமிட்டிருந்த நிலையில் அவர் 1946ஆம் ஆண்டே உயிரிழந்துவிட்டிருந்தார். இதனையடுத்து மணியம்மையைத் தவிர வேறுயாரும் நம்பிக்கைக்குரியவர்களாகத் தெரியவில்லை. என்னை சுற்றியிருக்கும் தோழர்கள் சிலரிடம் நான் எவ்வளவு சகிப்புத்தன்மையுடன் இருந்தாலும் அவைகளை அவர்கள் எனது பலவீனம், ஏமாந்ததனம் என்று கருதிக்கொண்டு நான் பயப்படும் வண்ணமாய் பெரிதும் அவநம்பிக்கை கொள்ளும் வண்ணமுமாய் நடந்துவருவதை உணர்கிறேன் என்று கூறினார். இது அண்ணாவையே குறிப்பதாகக் கொந்தளித்தனர் அவரது ஆதரவாளர்கள். இந்தச்சமயத்தில் மாவூர் என்கிற இடத்தில் மாணவர்களுக்குப் பிரச்சாரம் செய்யப் போனபோது தனது நண்பர் சர்மா என்கிறவர் வீட்டில் தங்கியிருந்தார் பெரியார். பார்ப்பனர் பங்களாவில் தங்கிக்கொண்டு பார்ப்பனிய எதிர்ப்பு பிரச்சாரம் செய்கிறார் பெரியார் என விமர்சனங்கள் வெளிவந்தன. இதற்கெல்லாம் அண்ணாவின் தம்பிகளே காரணம் எனக்கருதினார்.
அவர் சந்தேகப்பட்ட நபர்களின் பெயர்களைக் கூறி இனி இவர்களை விடுதலையில் போடவேண்டாம் என்றும் திராவிடர் கழகதோழர்கள் இவர்களை நம்ப வேண்டாம் எனவும் எழுதி தனது பத்திரிக்கைக்கு அனுப்பினார். ஆனால் அது அவரது பத்திரிக்கையிலேயே வெளியாகவில்லை. அதற்குக் காரணம் அண்ணாவின் தம்பிகளில் ஒருவரும் பெரியாரின் சகோதரர் மகன் ஈ.வெ.கி.சம்பத். அப்படி பெரியார் குறிப்பிட்ட பெயரில் கலைஞரின் பெயரும் பேராசிரியர் அன்பழகன் பெயரும் இருந்தது.
உடன் இருப்பவர்களுடன் எல்லாம் முரண்பட்ட பெரியார் தனது அரசியல் எதிரியான ராஜாஜியை 1949 மே மாதம் சந்தித்து சுமார் ஒருமணி நேரம் உரையாடினார் என்ன பேசினார் என்பது குறித்த விபரங்கள் வெளியாகவில்லை. இதன்பிறகு அதே மாதம் நடந்த கோவை முத்தமிழ் மாநாட்டில் பெரியாரும் அண்ணாவும் கலந்து கொண்டனர் மேடையில் பேசும்போதே ராஜாஜியிடம் பெரியார் என்ன பேசினார் என்பதை விளக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார் அண்ணா. ஆனால் அது எனது சொந்த விசயம் எனப் பதில் அளித்தார் பெரியார். மேலும் தனக்கு நம்பிக்கையுடையவர்கள் கிடைக்கவில்லை அதனால் எனக்கு வாரிசு ஒருவரைத் தேர்ந்தெடுப்பது குறித்துப் பேசினேன் என்றுகூறினார்.
மணியம்மையார் திருமணம்
தனது வாரிசாக அன்னை மணியம்மையைத் தேர்ந்தெடுத்தார் இதன்மூலம் அவரது பெயருக்கு களங்கம் வரும் எனத் தெரிந்தும் அவர் மணியம்மையாரைத் திருமணம் செய்ய முடிவு செய்தார். பொதுமக்கள் என்ன நினைப்பார்கள் எதிரிகள் என்ன சொல்லுவார்கள் என்பதை பற்றியெல்லாம் சிந்திக்க ஆரம்பித்தால் இயக்க பாதுகாப்பு அடியோடு கெட்டுவிடும் என்று கூறினார்.
ஆகையால் மணியம்மையைத் தத்தெடுக்க முடியாத நிலையில் அவரை திருமணம் செய்ய முடிவெடுத்தார் பெரியார். ஆதலால் மணியம்மை பெரியார் திருமணத்தையே காரணம் காட்டி தனது ஆதரவாளர்களுடன் அண்ணா வெளியேறினார்.
பெரியாரும் அண்ணாவும் சமூகநீதியையும் சமத்துவத்தையும் கொள்கைகளாக வடித்துக்கொண்டவர்கள் என்றபோதும் தொடக்கத்திலிருந்தே இரு வேறு வழிமுறைகளில் நம்பிக்கையுடையவர்களாக இருந்திருக்கின்றனர். பெரியாருக்குத் தேசம், மொழி, இனம் இது எது ஒன்றிலும் பற்றில்லாதவர் இவற்றில் எது மனித சமுதாயத்திற்குச் சுமையாய் தோன்றினாலும் அதனை சுக்குநூறாக உடைக்கவும் அவர் தயங்கியதில்லை. இதற்கு மாறாக அண்ணாவோ தேசம், மொழி, இனம் ஆகியவற்றில் பற்றுடன் இருந்தார், இவற்றை முன்வைத்து மக்களை முன்னேற்ற முடியும் என்பதை அவர் தீர்க்கமாக நம்பினார். ஆக மணியம்மையாரை பெரியார் திருமணம் செய்திருக்காமல் இருந்தாலும் அண்ணா விளக்கியிருப்பார் என்பதே வரலாறு நமக்குத் தரும் முடிவு.
இதைத்தவிரப் பெரியார் அண்ணாவின் பிளவில் முக்கிய பங்காற்றியது ஒன்று இருக்கிறது. மாற்றத்திற்கான சிறந்த வழி எது? தேர்தல் அரசியலா? இயக்க அரசியலா? என்கிற கேள்வி அது.
பெரியார் அண்ணாவைப் பிரித்த தேர்தல் 
பெரியார் அண்ணா பிரிந்ததற்கு அணுகுமுறை மோதல் முக்கியக்காரணமாக்க இருந்ததைப் பார்த்தோம், இந்த அணுகுமுறை மோதல் கலை, இலக்கியம், பண்பாடு ஆகிய தளங்களோடு நின்றுவிடவில்லை அரசியல் தளத்திலும் எதிரொலித்தது. இயக்க அரசியலா? தேர்தல் அரசியலா? பிரிட்டிஷ் இந்தியாவா? சுதந்திர இந்தியாவா? தேர்தல் ஜனநாயகத்தின் மீது பெரியாருக்கு எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது கூட பெரும் ஆபத்தை தவிர்க்கும் நோக்கமே அன்றி மாற்றங்களைக் கொண்டுவரும் என்ற எண்ணத்தில் அல்ல. ஆனால் அண்ணாவோ தேர்தல் ஜனநாயகம் வழியாகத்தான் விரும்பிய சமத்துவ, சமூக அமைப்பை அடையமுடியும் என்று கருதினார். பெரியாரின் சீடராக மாறுவதற்கு முன்பே அண்ணா அந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார், அவருடைய அரசியல் வாழ்க்கையே தேர்தலுடன்தான் தொடங்கியிருக்கிறது.
1934 பெரியாரின் அறிமுகம் அண்ணாவிற்கு இருந்தபோதும் 1935ல் தனது 26வது வயதில் சென்னை நகரசபை தேர்தலில் நீதிக்கட்சி சார்பாகப் போட்டியிட்டார் அண்ணா, அதில் அவர் வெற்றி பெறமுடியவில்லை. அதன்பிறகு 1937 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்திற்குள்ளும் குடியரசு பத்திரிக்கையிலும் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டார். ஆகத் தேர்தல் தோல்விக்குப் பிறகுதான் தேர்தல் பாதையை நீக்கி செயல்பட்டுக் கொண்டிருந்த சுயமரியாதை இயக்கத்தில் இணைகிறார் அண்ணா.
ஆனால் பெரியாரோ தேர்தலில் போட்டியிட்டுவந்த நீதிக்கட்சியின் தலைவரான பிறகு அக்கட்சியைத் தேர்தல் பாதையிலிருந்து வெளியேற்றி திராவிடர் கழகமாக மாற்றினார். இந்த மாற்றத்தை அண்ணா மூலமாகக் கொண்டுவந்தது தான் வரலாற்று முரண்.  
1944ஆம் ஆண்டு சேலம் மாநாட்டில் அண்ணா முன்மொழிந்த தீர்மானங்கள் அடிப்படையிலேயே நீதிக்கட்சி தேர்தல் பாதையைவிடுத்து அரசியல் இயக்கமாக மாறியது. திராவிடர் கழகமாக மாறியபின்னும் அண்ணாவிற்குத் தேர்தல் பாதை மீது நாட்டம் இருந்ததாகவே தெரிகிறது, காரணம் சுதந்திர தினம் இன்பநாள் என்று விளக்கி எழுதிய கட்டுரையில் முஸ்லிம்லீக்கிற்கு பாகிஸ்தான் கிடைப்பதற்குக் காரணம் அக்கட்சி தேர்தலில் போட்டியிட்டதின் மூலமாக மக்கள் தங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்ததால்தான் என்று குறிப்பிட்டிருக்கிறார். அதில் திராவிடர் கழகம் தேர்தலில் பங்கேற்காமல் பலத்தை நிரூபிக்காமல் எப்படி திராவிட நாடு அடைவது என்கிற கேள்வி மறைபொருளாக இருந்தது.
1948ஆம் ஆண்டு காங்கிரசை எதிர்த்துப் பேசிய அண்ணா இந்த ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சியினரே இல்லை என இறுமாந்துள்ளனர், சட்டசபையிலேயே தூங்குபவர்களை தட்டிஎழுப்பகூட ஆட்கள் இல்லை என்று வெற்றிடத்தைச் சுட்டிக்காட்டினார். ஈரோட்டு பெட்டி சாவி கொடுக்கப்பட்ட மாநாட்டில் சின்னகுத்தூசியார் தேர்தலுக்கு ஆதரவாகப் பேசியபோது அதை மறுத்து அண்ணா பேசினாலும் அதேபேச்சில் தேர்தல் வெற்றி ஒன்றும் எட்டாக்கனியல்ல என்ற பொருளும் இருந்தது. அதனைத் தொடர்ந்து பேசிய பெரியார் தலைவரான பின் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும் என்று பேசியது கூட தேர்தல் அரசியலை மனதில் வைத்துத்தான்.
அந்தமாநாடு முடிந்து ஓராண்டுக்குள்ளாகவே திராவிடர் கழகம் உடைந்து திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது. தி.கவை போல தி.மு.கவும் இயங்க அரசியலையே முன்னெடுக்கும் என்று சொன்னார் அண்ணா ஆனால் பெரியார் சொன்னது தான் நிகழ்ந்தது கட்சி தொடங்கிய சில ஆண்டுகளிலேயே தேர்தல் பாதையை தி.மு.க தேர்ந்தெடுத்தது. 
சமூகநீதி சட்டங்கள்
தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகுதான் அண்ணா நினைத்தது போலவே பெரியாரின் சமூகநீதி கொள்கைகள் சட்டமாகின. பெரியார் எச்சரித்தது போலவே தேர்தல் அரசியல் காரணமாகப் பல சமூகநீதி கொள்கைகளை நிறையச் சமரசம் செய்துகொள்ள வேண்டியநிலைக்கு தி.மு.க தள்ளப்பட்டது. இன்றைய நிலையிலிருந்து அலசி ஆராய்ந்து பார்த்தால் கூட இருபெரும் ஆளுமைகளில் யார் பக்கம் சரி ? யார் பக்கம் தவறு? என்பதை கணிப்பது கடினம். மேற்கண்ட நிகழ்வுகள் மூலம் அண்ணா தேர்தல் வெற்றிக்காக வாய்ப்புகளை உருவாக்கி அவற்றை பயன்படுத்திக் கொண்டார் என்று அவரது பரந்த நோக்கத்தையும் ஆளுமைத்திறனையும் சுருக்கிப்பார்க்கும் அபாயம் இருக்கிறது.
சுதந்திர ஜனநாயக இந்தியாவில் தேர்தல் பாதையே சிறந்தது என முடிவெடுத்தார் அண்ணா அது சரியான முடிவு என்றும் கொள்ளலாம் காரணம், அண்ணா தேர்தல் பாதைக்கு வந்திருக்காவிட்டால் தமிழ்நாடு இவ்வளவு வேகமாக சமூகநீதி பாதையில் முன்னேறி இருக்கமுடியாது. எளிதாக கிடைத்த பல சமூகநீதி சட்டங்களை போராடிப் பெறவேண்டிய நிலை இருந்திருக்கும். அப்படி என்றால் இயக்க அரசியல் பாதை தேவையற்றதா?  என்கிற கேள்வி எழலாம், அதற்கு ஆம் என்று சொல்லுவதிற்கில்லை காரணம், தேர்தல் சாராத சமூக இயக்கங்களே பலமுக்கிய போராட்டங்களை முன்னெடுத்து வெற்றி பெற்றிருக்கின்றன. பெரியாரை பொருத்தவரை இந்த அரசு இயந்திரம் சுரண்டலின் வழிமுறையோடு இயங்குகிறது அது எப்போதும் சாதி, வர்க்க அடிப்படையில் மேல்தட்டில் இருப்பவர்களின் நலனுக்காகவே இயங்குகிறது ஆகையால் இந்த அரசால் சாதியால், பொருளாதாரத்தால் ஒடுக்கப்படுபவர்களுக்கு நன்மை செய்யமுடியாது என்கிற கருத்தைக் கொண்டிருந்தார் அது எவ்வளவு உண்மை என்பது நிகழ்கால அரசியலைக் கவனித்தாலே புரியும். தேர்தலை ஒரு ஆயுதமாகப் பெரியார் கருதாமல் தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் மோசமான அரசு அமைந்துவிடக்கூடாது என்பதற்காகக் கேடயமாகப் பயன்படுத்தினார் அதில் பெரியார் தெளிவாகவே இருந்தார்.
தள்ளாடிக் கொண்டிருக்கும் சமூகநீதி காவலர்களுக்கு 
அண்ணாவின் பாதை- கைத்தடி.
பெரியாரின் பாதை- ஒளிவிளக்கு 
காலுக்குக் கீழ்மட்டும் அல்ல அடுத்த பத்தடிகளுக்கும் வழிகாட்டுகிறது.

நன்றி:News7.

-ஜெகன் தங்கதுரை.No comments:

Post a Comment