Tuesday 31 March 2020

பாலியல் சமத்துவக் கல்வி – இனியன் (குழந்தைகள் செயல்பாட்டாளர்)

பாலியல் சமத்துவக் கல்வி – இனியன் (குழந்தைகள் செயல்பாட்டாளர்)  

சம்பவம் – 1:
அவள் வந்தாள்
நண்பன் சென்றான்.
அவள் சென்றாள்.
வழுக்கி விழுந்தேன்.
மீண்டும் வந்தான் நண்பன்
தோள் மீது தாங்க.
-XXXXXXXXX (VIII வகுப்பு)
பள்ளி ஒன்றில் ஆண் குழந்தைகளுக்கான கழிவறையில் எழுதப்பட்டிருந்தது.
சம்பவம் – 2:
தோழி ஒருவர் பள்ளியொன்றில் ஆசிரியர்களுக்கான சிறப்புப் பயிற்சியாளராக ஒருநாள் அழைக்கப்பட, உடன் என்னையும் உரையாடலுக்காக அழைத்துச் சென்றார். நாங்கள் அங்குச் சென்ற போது பள்ளியில் பிரச்சினை ஒன்று சென்று கொண்டிருந்தது. பன்னிரண்டாம் வகுப்பு தம்பி ஒருவன் சக வகுப்புத் தோழிக்கு அவள் மீதான தனது காதல் என்னும் எதிர் பாலின அன்பின் உணர்வை வெளிப்படுத்திப் பெரிய Dairy Milk Chocolate ஒன்றைப் பரிசளித்திருக்கிறார். அதனை ஒரு பெண் ஆசிரியர் பார்த்துவிட, விசயம் பள்ளி தாளாளர் வரை கொண்டு செல்லப்படுகிறது. அம்மாணவனை இவ்வருடம் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கக் கூடாது, சாக்லெட்டை வாங்கிக் கொண்ட மாணவியைப் பள்ளியின் முதல் திருப்புதல் தேர்வு  எழுத அனுமதிக்கக் கூடாது, என்னும் முடிவு எடுக்கப்படுகிறது. அதற்கு ஒரு சில ஆசிரியர்களின் கடுமையான எதிர்ப்புகள் காரணமாக, அம்மாணவன் இனி ஆண்டு முழுவதும் வகுப்பின் வாயிலில் தான் அமர வேண்டும், அம்மாணவி வகுப்பின் கடைசி இருக்கையில் அமர வேண்டும், எனத் தண்டனைகள் வழங்கிச் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
அன்றைய தினம் அங்கிருந்த ஆசிரியர்கள் மற்றும் தாளாளருடனான சந்திப்பில் இப்படிதான் துவங்கினேன் Òஉங்கள் அனைவருக்கும் எப்போது எதிர் பாலின ஈர்ப்பு என்கிற வகையிலான காதல் எண்ணம் தோன்றியது? அல்லது எதிர் பாலினத்தினரிடம் எப்போது I LOVE YOU  சொல்லத் தோன்றியது?” 
சற்றே நீள் அமைதி அங்கு நிலவ நானே என்னுள் எப்போது அம்மாதிரியான உணர்வுகள் தோன்றியது எனச் சொல்லி அமைதியைக் கலைத்து விட, வரிசையாக சொல்லத் துவங்கினர். அங்கிருந்ததில் ஆண் ஆசிரியர்கள் பலரும் 10ம் வகுப்பிற்கு முன்னதாகவும், பெண் ஆசிரியர்கள் பலரும் கல்லூரி துவக்கக் காலங்களிலும் தோன்றியது என்றனர். ஓரிருவர் மட்டும் சூழல் காரணமாகத் தற்போது வரை தோன்றவில்லை என்றனர்.
ஆனால், பள்ளித் தாளாளர் மட்டும் – 73  வயதைக் கடந்த ஓய்வு பெற்ற பெண் அரசு தலைமையாசிரியர் – இப்போது வரை எனக்கு எதுவும் தோன்றவில்லை என்றார்கள். அது தோன்றாமல் எப்படித் திருமணம், குழந்தைகள் என்றேன். 31 வயதில் திருமணம் முடிந்த பின்புதான் ஆண் என்னும் ஒருவரின் அறிமுகமே கிடைத்ததாகவும் அதன் பிறகு காலத்தின் கட்டாயத்தின் பெயரில் அவரை ஏற்றுக்கொண்டு வாழப் பழகியதாகவும், அதுவரை படிப்புப் படிப்பு என்றே கழிந்து விட்டதாகவும் கூறினார்.
ஆச்சரியம்! கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு, 31 வயது வரை, திருமணம் செய்துகொள்ளாமல் அல்லது பெரியவர்களால் செய்துவைக்கப்படாமல் படிப்பு மட்டுமே பிரதானம் என்னும் நிலையில் இருந்திருக்கிறீர்கள். அதற்காக ஒரு வாழ்த்துகள். ஆனால் பாருங்கள் உங்களிடம் பணிபுரியும் ஆசிரியர்கள் பலரும் பகிர்ந்து கொண்ட விசயம் கவனித்திருப்பீர்கள். அனைவரும் 1௦ வயதிலிருந்து 20 வயதிற்குள்ளாகவேதான் எதிர் பாலின ஈர்ப்பை அடைந்ததாக சொல்லியிருக்கின்றனர். அப்போது இம்மாதிரியான விசயங்களில் நம் கண்முன் இருக்கும் தற்காலக் குழந்தைகள் ஈடுபடுகிற போது நமது அணுகுமுறைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை மட்டும் சற்று சிந்திக்கவும் எனக் கூறி அடுத்தடுத்த கட்ட உரையாடலுக்குள் சென்றோம்.
சம்பவம் – 3:
நெருங்கிய நண்பர் ஒருவர் அவர் குழந்தைப் பயிலும் பள்ளியில் நடந்தது எனச் சொல்லி இதைச் சொன்னார். 
இந்தச் சம்பவம் நடந்தது ஆறாம் வகுப்பில். Òஒரு ஆண் குழந்தை வகுப்புத் தோழியிடம் I LOVE YOU சொல்ல, முதலில் அப்பெண் குழந்தை மறுக்கவே, தொடர்ந்து தினமும் சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறது. ஒரு கட்டத்தில், இப்படியே செய்து கொண்டிருந்தால் மிஸ் கிட்டச் சொல்லிவிடுவேன் எனச் சொல்ல, மறுநாள் காலை பள்ளிக்கு வரும் போது எலிகள் பிடிக்க வைக்கப்படும் விசம் கலந்த  கேக்கை தின்றுவிட்டு வகுப்புக்கு வந்திருக்கிறான் குழந்தை. மதியத்திற்கு மேல் அவனுக்கு வயிறு உப்பல் துவங்கி, மயக்கம் போட்டு விழவே, மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர். சிகிச்சைகள் துவங்கி, 4 நாட்களுக்குப் பிறகு  இறந்தும் விடுகிறான் அந்தக் குழந்தை. அந்த மாவட்டத்தின் மிகப் பெரிய பள்ளிகளில் அதுவும் ஒன்று என்பதால் இப்பிரச்சினை சில பல லட்சங்கள் கைமாற்றலுடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அப்பெண் குழந்தையின் மீது ஒட்டுமொத்தப் பள்ளியின் பார்வையும் திரும்பியிருப்பதாகவும். ஏதோவொரு குற்ற உணர்வுக்கு ஆளாகித் தவித்துக் கொண்டிருப்பதாகவும். அடிக்கடிப் பள்ளிக்கு விடுப்பு எடுப்பதாகவும், இந்தக் கல்வியாண்டு முடிந்தவுடன் வேறு ஊருக்குச் சென்றுவிடுவாள் என்றும், தன் குழந்தையும் வருத்தப் படுவதாகவும், மேலும் காதல் என்னும் சொல்லை அதிகம் பயன்படுத்திக் கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்பதாகவும்Ó கூறினார்.
மேலே குறிப்பிட்டிருக்கும் சம்பவங்கள் அனைத்திலிருந்தும் நம்மால் பல விசயங்கள் உணர்ந்துகொள்ள முடியும். அதில் மிக முக்கியமான ஒன்று குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு உடலியல் மாற்றங்களால் ஒவ்வொரு வயதிலும் நிகழக் கூடிய எதிர் பாலின ஈர்ப்புகள் பற்றிய தெளிவின்மையை ஒரு சமூகம் ஆண்டாண்டு காலமாகக் கடத்திக் கொண்டே வருகிறது.  அப்படிக் கடத்திக் கொண்டு வருவதிலும் பாலினச் சமத்துவமின்றி ஒற்றைப் பார்வையில் இயல்பாய் அதனை ஏற்றுக்கொள்ளவும் பழக்க பட்டிருக்கிறோம்.
முதல் சம்பவத்தில் கவிதையென இருப்பதைச் சிரித்துவிட்டு இயல்பாய்க் கடக்கத்தான் நாம் அனைவரும் பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோம். ஆனால், எட்டாம் வகுப்பே படிக்கும் குழந்தைக்குள் எத்தனை விதமான வன்மம் குறிப்பாக ஈர்ப்பு, அன்பு செய்தல், நிராகரிப்புகளை ஏற்றுக் கொள்ளுதல் போன்றவற்றில் தெளிவில்லாத் தனத்தினால் கழிவறையில் கிறுக்கி வைக்கும் நிலையினை இங்கு ஏற்படுத்தி வைத்திருக்கிறோம். ஒரு குழந்தைதானே இப்படிச் செய்துள்ளது என்றெல்லாம் ஒதுங்கிச் சென்றுவிட முடியாத படிக்கான செய்கைகளை அனுதினமும் அனுபவித்தும் வருகிறோம்.
மற்ற இரு சம்பவங்களிலும் தினமும் குழந்தைகளுடன் தினமும் பழகிக் கொண்டே இருக்கும் அல்லது இருக்க வேண்டிய நிர்வாகத்தினர் இதுபோன்ற விசயங்களில் எம்மாதிரியான எதிர்மறைகளை குழந்தைகள் மத்தியில் விதைத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதற்கான சான்றுகள்.
இவையெல்லாம் ஒரு பிரச்சினைகளா? இவையனைத்தும் அந்தந்த வயதில் வரக்கூடிய ஒன்றுதான் என்றெல்லாம் கடந்து விட முடியாத அளவிற்கான பிரச்சனைகள்தான் இவை. இதில் இருக்கக் கூடிய பாலியல் சமத்துவமின்மை நாம் உன்னிப்பாகக் கவனத்தில் கொள்ளுதல் அவசியம். மூன்று சம்பவங்களுமே ஆண் அல்லது ஆணாதிக்கப் பார்வையிலிருந்துதான் அணுகப்பட்டிருக்கிறது. ஆனால் மூன்று சம்பவங்களிலும் நேரடியான  பாதிப்புகள் பெண்குழந்தைகளுக்குத் தான் ஏற்பட்டிருக்கிறது என்பதைச் சிந்திக்க மறந்து.
சரி இவற்றிற்கெல்லாம் என்ன மாதிரியான தீர்வுகளை முன் வைக்கலாம் என்றெல்லாம் விவாதித்தால், அந்தந்த வயதிற்கேற்றப் பாலியல் கல்வியும், பாலியல் சமத்துவக் கல்வியுமே ஓரளவுக்கு இவற்றை நெறிப்படுத்திட முடியும். ஓரளவிற்குத் தானா என்றால் – ஆம் –  நிச்சயம் ஓரளவிற்கு மட்டுமே தான் பயனளிக்கும். முழுப் பயனையும் நாம் பெறச் செல்லவேண்டிய பயணத் தூரம் வெகு வெகு தொலைவு.
அந்தத் தொலைவை நீக்கிடக் குடும்பங்களில் முதலில் உரையாடலை நிகழ்த்த வேண்டும். இந்த இந்திய குடும்ப அமைப்பில் – சரியென்று சொல்லிவிட முடியாது, பெரும்பான்மையாகத் தவறுகளாகவே இருந்தாலும் – பெண் குழந்தைகளுக்குக் குடும்பத்தின் மூத்த பெண்களிடமிருந்து உடல், உடல் உறுப்புகளின் தூய்மை/சுகாதாரம்  மற்றும் உணர்வுகள் சார்ந்த உரையாடல்கள் நிகழ்த்தப் படுகின்றன. ஆனால், குடும்பத்தில் மூத்த ஆண்களிடமிருந்து ஆண் குழந்தைகளுக்கு அவ்வாறான உரையாடல்கள் என்பது அரிதிலும் அரிதாகத்தான் நிகழ்த்தப் படுகிறது. அவ்வகையான உரையாடல்கள் அனைத்து குடும்பங்களிலும் நிகழ்த்தப்பட வேண்டும்.
கல்வி மற்றும் கல்வி நிலையங்கள். கல்வியைப் பொறுத்த வரை உடல் தூய்மை என்பதை கை-கால் கழுவுதல், குளித்தல் போன்றவற்றோடு மட்டுமே நிறுத்திக் கொள்ளப்படுகிறது. அதில் இன்றுவரை மானுட அடையாள உறுப்புகளின் தூய்மை என்பது முழுக்க மறைக்கப்பட்டு வருகிறது. உடல் தூய்மை என்ற கற்பிதங்கள் துவங்கும் போதே அடையாள உறுப்புகளின் தூய்மை பற்றிய தகவல்களுடன் துவங்கப் பட வேண்டும். அவை அனைத்துப் பாலினத்தவரும் அனைவரது அடிப்படை உடலமைப்பு பற்றித் தெரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும்.
 கல்வி நிலையங்கள் எப்போதும் பாலினச் சமத்துவத்தைச் சுட்டிக் காட்டிக் கொண்டே, நடைமுறை சாத்தியங்களில் எந்தெந்த வகையிலெல்லாம் முடியுமோ அப்படி விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இவற்றை உள்ளடக்கிய பாடத் திட்டங்களும், இவற்றை உரையாடிக் கொள்ளத் தனித்தனி ஆசிரியர்களும் இருக்க வேண்டும்.
அடுத்ததாக இந்தியச் சமூகத்தின் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்வுகள். அனைத்து விதமான திரைப்படங்களும் இங்குக் குழந்தைகளுக்கு மிக எளிதில் கிடைத்து விடும் நிலையில் தான் இந்த அமைப்பு கட்டிக் காத்து வருகிறது. இங்குப் பெரும்பாலும் குழந்தைகளின் எதார்த்த உணர்வுகளையும், வாழ்வியலையும் பதிவு செய்கின்ற திரைப்படங்கள் என்பது இல்லவே இல்லை என்னும் நிலையில் அவற்றை சரியான கால இடைவெளியில் தொடர்ந்து வெளிக் கொண்டுவருவதற்கான சாத்திய கூறுகளை ஏற்படுத்தி அதற்கான அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.  
திரைப்படங்களுக்காவது தணிக்கைத் துறை என்ற ஒன்று உள்ளது. ஆனால் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் எனச் சொல்லி நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்வுகளுக்கென்று, எவ்விதத் தணிக்கைகளும் இல்லாத நிலையில் தான் அரங்கேற்றம் செய்யப்படுகின்றன. அதேபோல் கார்ட்டூன் நிகழ்வுகள் பெரும்பாலும் உச்சபட்ச மாயையும், ஒற்றை மதத்தையும்  உள்ளடக்கியவையாகவே இருக்கிறது. அவற்றிற்கெல்லாம் கட்டாயத் தணிக்கைகளும், பாலியல் சமத்துவத்தை ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வுகளையும் தயார்ப்படுத்த வேண்டும்.
இவை அனைத்துடன் இணைந்துக் குழந்தைகள் புழங்கும் அனைத்து இடங்களிலும் பாலியல் சமத்துவம், பாலியல் உரிமைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தப் பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
இவையனைத்தும் பெரும் பேராசைதான் என்னும் கசப்பான உண்மை ஒவ்வொரு நிமிடமும் உணர்த்திக் கொண்டேதான் இருக்கிறது. இருந்தாலும் இறுதியாகச் சொல்ல விரும்புவது நம் இன்றைய தேவைப் பாலியல் கல்வியும், பாலியல் சமத்துவக் கல்வியும்தான்.
இங்குப் பாலியல் கல்வியும், பாலியல் சமத்துவக் கல்வியும் கலவியல் கல்வியாகத்தான் பார்க்கப்படுகிறது. ஆனால், அவை சமத்துவமான அன்பை மட்டும் போதிக்கும்  கல்வி. இவை கல்வி மட்டும் அல்ல, இது காலத்தின் கட்டாயம்.
      -பயணங்கள் தொடரும்


– இனியன்

No comments:

Post a Comment