Friday, 17 April 2020

அன்றாட வாழ்வில் பெரியாரியல் - பகுதி – 1 [மன உறுதியை பெரியாரிடமிருந்து கற்போம் ] - கனிமொழி ம.வீ

அன்றாட வாழ்வில் பெரியாரியல் - பகுதி – 1 [மன உறுதியை பெரியாரிடமிருந்து கற்போம் ] - கனிமொழி ம.வீ

பெரியார் 19 ஆம் நூற்றாண்டில் தோன்றி 20 ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதி வரை வாழ்ந்து அறிவுப் புரட்சியை எந்தவித வன்முறையோ, ஆயுதங்களோ ஏந்தாமல் நடத்திக்காட்டியவர். கிரேக்கத்து சாக்ரடீஸ்க்கு இல்லாத பெருமை ஈரோட்டுக் கிழவனுக்கு உண்டு. இறுதி வரை நஞ்சு கோப்பையை அவர் முன் நீட்டிவிட முடியாதா?,  என அரசும் , இனப் பகை கொண்டோரும் , துரோகிகளும் கழுகாக அவரை வட்டமிட்டுக் கொண்டிருந்தனர். அரிமாவின் ஆற்றலோடு அவர்களை எதிர்த்து நின்று அவர்கள் மக்களுக்கு வழங்கி வந்த மதம்- கடவுள் - ஜாதி எனும் நஞ்சினை மூளையிலிருந்து விலக்கப் பகுத்தறிவு எனும் நஞ்சு முறிப்பு மருந்தைக் கவனமாகக் கொடுத்து இன்றைய தமிழ் நாட்டின் முன்னேற்றத்திற்கு வித்திட்டவர்.

அவரை மக்களும் , பெரியாரியத் தோழர்களும் எவ்வாறு புரிந்து உள்ளோம்? பொது மக்களுக்கு அவர் ஒரு கடவுள் மறுப்பாளர் - பார்ப்பன எதிர்ப்பாளர். பெரியாரியத் தோழர்களுக்குத் தமிழ்நாட்டு வரலாற்றில் ஆதிக்கபுரியினரை கலங்கடித்த சமத்துவ புரட்சியாளர்.  அதைத் தாண்டி பெரியாரை எப்படிப் புரிந்து வைத்திருக்கிறோம்? அன்றாட வாழக்கையில் பெரியாரியத்தை எவ்வாறு பயன்படுத்துகிறோம் ?

விளையாட்டுத் துறையில் - தற்காப்புக் கலைத் துறையில் அதனைக் கற்றுக் கொள்ளும் போது வெறும் ஒரு கலையாக அதைக் கருதிக் கற்றுத்தர மாட்டார்கள் . என்னென்ன கற்கின்றோமோ அதை நம் வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும்; திடமான உடல் - மனம் - சிக்கலான நேரத்தில் முடிவெடுக்கும் தன்மை - மனதைக் கட்டுப்படுத்தி இலக்கை நோக்கிப் பயணிக்கும் திறன் இதனை வாழ்க்கையில் அன்றாடம் பயன்படுத்தப் பழக வேண்டும்; அதுவே நீங்கள் இந்தக் கலை கற்பதின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கும் ஆசான்களை நாம் பார்த்திருப்போம்

அதே போன்று தான் பெரியாரியல் என்பது ஒரு வாழ்வியல். அவர் காட்டிய     வழியில் பயணிப்பது மட்டுமன்று, அவரின் வாழ்க்கையின் சாரத்தை- அவரின் குணத்தை -அவர் பயன்படுத்திய யுக்திகளை - போராட்டங்களை- அவர் எடுத்த முடிவுகளைப் படிப்பதோடு மட்டுமல்லாமல்  அன்றாட வாழ்க்கையில் எப்படிப் பயன்படுத்துகிறோம் - நம் துறையில் எப்படி பெரியார் நமக்கு வழிகாட்டியாக இருக்கிறார் என்ற எண்ணம் எழுந்தபோது அன்றாட வாழ்வில் பெரியாரியல் என்ற தொடர்க் கட்டுரை எழுதத் தோன்றியது.

பெரியாரின் வாழ்க்கையிலிருந்து ஒன்றை நாம் புரிந்து கொள்ள முடியும் . அவர் மிகுந்த உறுதி படைத்த மனம் கொண்டவர் . சிறு வயதில் புழங்கக்கூடாத ஜாதியினரிடம் இருந்து தண்ணீரோ, தின்பண்டங்களோ வாங்கி திண்ணக் கூடாது என்ற பெற்றோரின் கண்டிப்பையும் மீறி, "அப்படிச் செய்தால் என்ன ஆகிவிடுகிறது பார்க்கலாம்", என்ற எண்ணமே அவரை இயக்கியது. அது மன உறுதியின் வெளிப்பாடு. பெற்றோரைச் சார்ந்து இருக்கும் பருவம் என்றாலும் அவர்களின் பொருளற்ற கட்டளைக்கு அடிபணியத் தேவை இல்லை என்ற உறுதி.

அவர் மனதிற்குச் சரி எனப் பட்டதைப் பெரியார் துணிந்து செய்தார். "Do What you feel in your heart to be right for you will be criticized anyway" என்று Eleanor Roosevelt என்ற அமெரிக்க சமூக செயற்பாட்டாளர் கூறுவார்.

மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ? பெற்றோர் திட்டுவார்களோ ? என்று அவர் எண்ணிக்கொண்டு இருக்கவில்லை. அதனால் தான் அனைவரும் வணங்கும் கடவுள் -மதம் -ஜாதி என அனைத்தையும் அவரால் கேள்விக்கு உட்படுத்த முடிந்தது. உலகமே எதிர்த்தாலும் அவரின் உறுதிப்பாடு அதை விட்டுக்கொடுக்காமல் தர்க்க ரீதியாக, " நான் ஏன் அதை வலியுறுத்துகிறேன்?" என்று வாதிட வைத்தது.

அந்த உறுதிதான் தன் வீட்டார் பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கும் நாகம்மையாரை மணக்க வேண்டாம் என்று தடுத்தபோதும் , அவரைத் தான் மணப்பேன் எனப் போராட வைத்தது. நாகம்மையார் பக்தி -ஆச்சாரம் -கோயில் என்று சுற்றியபோது அவரின் மனவுறுதி தான் அவரை எப்பாடுபட்டேனும் மாற்றியே தீருவது என்று அவரையும் பகுத்தறிவாதியாக மாற்றியது. இந்த நிலைப்பாட்டை, பெரியார் கையாண்ட யுக்திகளை  பெரியாரியத்  தோழர்களே கற்க வேண்டும் என்பதே காலத்தின் கட்டாயம். பெரியாரை ஏட்டில் படித்துவிட்டு அதை வாழ்க்கையில் பொருத்திப் பார்க்கச் சிலர் தவறிவிடுகின்றார்கள்.
குடும்பம் ஒத்துக்கொள்ளாது என்று பெரியாரியத் தோழர்கள் சிலர் கொள்கையில் நெகிழ்வுத்தன்மை கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். அதற்குக் காரணம் அவர்கள் பெரியாரியலை தங்கள் வாழ்க்கையில் கொண்டு வருவதில்லை. பெரியாரின் எழுத்துக்களைச் செய்யுள் போல மனப்பாடம் செய்து ஒப்புவித்தல் அவர் கொள்கைக்குச் செய்யும் துரோகம் . குடும்பத்தில் எவ்வாறு பெரியார் இருந்தார் ; அவரின் மன உறுதி எப்படி இருந்தது என்பதை  அவரின் தங்கையின் மகள் இளமையில் கைம்பெண் ஆனபோது , வீட்டாரை எதிர்த்துக் கொண்டு அவருக்கு மறுமணம் செய்வித்ததை படிக்கும்போது புரிந்துக் கொள்ள முடியும் . அதுவும் அன்றைய காலகட்டங்களில் வீட்டை -உறவினரை எதிர்த்துக் கொண்டு பணியாற்றுவது என்பது எளிதான வேலையா ? பெரியார் நடத்திக்காட்டினார். நாம் இன்னும் நடைமுறைச் சிக்கலின் மேல் பழிபோட்டுக் கொண்டு தவழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

அதே உறுதி தான் காசிக்குப் போகவேண்டும் என்று முடிவு எடுத்துப் புறப்பட்ட போது தன்னோடு சேர்ந்துக் கிளம்பிய இரு நண்பர்கள் (அதில் ஒருவர் தந்தை பெரியாரின் தங்கையின் கணவர்) ஒரு கட்டத்தில் அந்த எண்ணத்தைக் கைவிட்டுத் திருப்பியபோதும் விடாப்பிடியாகத் துறவறம் ஏற்றே தீர வேண்டும் என்று காசிக்கு அழைத்துச் சென்றது. அதே உறுதி தான் இன்று கொரோனா பரவுவது போல அன்றைய காலகட்டத்தில் பிளேக் பரவி மக்களைக் கொத்துக் கொத்தாக கொன்றழித்தபோது, நோய் வந்துவிடுமே என்று கூட அஞ்சாமல் பிணங்களைத் தோளில் சுமந்து கொண்டு போய் அடக்கம் செய்யத் தூண்டியது.

 அந்த உறுதியான மனம் தான் பின்னாளில் ஒரு பெரும் மக்கள் பகுத்தறிவு இயக்கத்தைத் தனியாக நின்று கட்டமைக்க அவரை உந்தியது. அந்த உறுதி தான் , "ஒருவரும் என் இதழை வாங்கவில்லை என்றாலும் நானே அச்சடித்து , படித்துக் கொள்கிறேன்" என்று குடியரசைத் தொடர்ந்து நடத்திட உந்தியது.
     
 இந்த உறுதியான மனம் தான், பெரியாரிடம் இருந்து நாம் கற்க வேண்டியது. நம்   பிள்ளைகளுக்குப் பெரியாரின் இந்தச்  செயல்களைக் கதை போலச் சொல்லி அவரின் மன உறுதி உனக்கும் ஏற்பட வேண்டும் என்ற தாக்கத்தை ஏற்படுத்திட வேண்டும். பெரியாரின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்பவற்றை நம் வாழ்க்கையில் பயன்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒரு முக்கியமான முடிவை அலுவலகத்தில் எடுக்க வேண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு மற்றவர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்களோ என்று எண்ணம் ஏற்படும்போது தயங்காமல் பெரியாரின் உறுதியை நினைத்துக் கொண்டு மனச்சான்று படி அந்த முடிவை எடுக்கலாம்.

நீங்கள்  ஒரு நபரை விரும்புகின்றீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை ; எந்தவித தயக்கமும் இன்றி நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபர் உங்களுக்குச் சரியானவர் என்ற தீர்ப்பு உங்கள் மனசாட்சி தரும் பட்சத்தில் எந்தவித உணர்ச்சி மிரட்டல்களுக்கும்  அடிபணியாமல் அந்த திருமணத்தை நடத்திக் கொள்ளுங்கள் .

வீடுகளில் உங்கள் கொள்கைகளை வீட்டில் ஒத்திவைக்கக் கட்டளையிடுகின்றார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள் , இரட்டை வாழ்க்கை வாழ பெரியாரியம் நமக்குக் கற்றுத்தரவில்லை என்று உறுதியோடு அதை எதிர்த்து ,  பழிச் சொற்களுக்கு அஞ்சாமல் துணிந்து போராடுங்கள்.

"அவர் மற்றவர்களுடைய உணர்ச்சி எவ்வாறு பாதிக்கப்படும் என்பதைச் சிறிதும் நினையாமல் தான் சரியென்று எண்ணியதையே வற்புறுத்தி வரும் ஒரு காரணத்தினாலேயே நான் அவரிடம் மாறாத அன்பு கொண்டேன் "
என்று அன்றைய முதலமைச்சராக இருந்த மருத்துவர். சுப்பராயன் 1928 இல் தந்தை பெரியாரைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பார்.

நாம் சரி என நினைக்கும் ஒரு விடயத்தை ஊருக்காக - உறவினருக்காக மாற்றிக் கொள்ளவேண்டியது இல்லை என்ற அந்த நிலைப்பாடு - மன உறுதி பெரியாரிடம் இருந்து நாம் கற்பதோடு நம் அலுவலகத்தில் - வீட்டில் என எந்த இடத்திலும் பயன்படுத்திட முனைவோம்!!

Let's apply Periyarism in day to day life.             

தொடரும்

No comments:

Post a Comment