Friday 17 April 2020

ஒப்பற்ற கவி! - பேரறிஞர் அண்ணா

ஒப்பற்ற கவி! - பேரறிஞர் அண்ணா
பாரதிதாசன் கவிதைகள் என்னும் புத்தகம் தமிழ் நாட்டுக்கு ஒரு சிறந்த பொக்கிஷமாகும். இது, படிப்போருக்குக் கவியா வசனமா என்று மலைக்கும்படியான ஓர் அற்புதக்கவித் திரட்டு என்றுதான் சொல்ல வேண்டும்.
கவிதைகளின் அமைப்புப் பெருமை இங்ஙனமிருக்க, கவிகள் கொண்ட கருத்துக்களோ முற்றிலும் சமூக சமய சீர்திருத்தக் கருத்துக்களேயாகும். சிறப்பாக மூட நம்பிக்கை களை யகற்றும் தன்மையில் புரோகிதம், பார்ப்பனியம், கடவுள்கள், பெண்ணடிமை, விதவைக் கொடுமை, ஜாதிபேதம், பொருளாதார உயர்வு தாழ்வு ஆகியவைகளைக் கண்டித்தும், மறுத்தும், அவைகளிலுள்ள சூழ்ச்சிகளையும் புரட்டுகளையும் வெளியாக்கியும், மிகமிகப் பாமர மக்களுக்கும் பசுமரத்தில் ஆணி அறைந்ததுபோல், விளங்கும்படியும், பதியும்படியும் பாடப்பட்டிருப்பதுடன், கவி நயமோ புலவர்களுக்கு ஓர் நல்ல விருந்தாகவும் அமைந்துள்ள அரும்புத்தகமாகும்.

தோழர் பாரதிதாசன் அவர்கள் தமிழ்நாட்டிற்குப் புதியவரல்ல. அவர் சென்ற 10 ஆண்டுகளாகச் சுயமரியாதை இயக்கத்தில் தீவிரமாய் ஈடுபட்டு வருகின்றார். மனித சமுதாயத்தின் ஒற்றுமைக்கும், இன்றியமையாத புரட்சியான பல சீர்திருத்தங்களை ஆதரிப்பது மட்டுமின்றி, அவைகளை ஜனசமூகத்தில் பல வழிகளிலும் பரப்பவேண்டுமென்ற ஆசையைக் கொண்டவர். சிறப்பாகவும், சுருக்கமாகவும் கூறவேண்டுமானால் பாரதிதாசன் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தின் ஒப்பற்ற கவி என்றுதான் கூற வேண்டும்.
பெரியார் இராமசாமியின் பெரும்படையின் முன்னணி வீரர் பாரதிதாசன் பெரியார் பெரும்படை பல களங்களிலே, போரிடுவது, அரசியல் அரங்கம் அதிலே மிகச்சாதாரணக் களம், சமுதாய, மத, பொருளாதாரக் களங்களிலேயே, வேலை அதிகம். ஆனால் இவை அத்தனையையும், ஒருங்கே மயக்கி, கள்ளங் கபடமற்றவரைச் சூறையாட, கலைத்துறையிலே புகுந்தனர் கெடுமதியினர், அவர்தம் அகவலும் வெண்பாவும், புராணமும் இதிகாசமும், பாடலும், கதையும், கூத்தும பிறவும், முன்னேறிச் செல்லும் தமிழரைத் தள்ளுவதற்காக வெட்டப்பட்டு, பச்சிலையால் மூடப்பட்ட, படுகுழிகளாயின. சாதிச்சனியன் தொலைய வேண்டும் என்ற சண்டமாருதப் பிரசாரம் ஒருபுறம் நடைபெறும், மற்றோர் பக்கமோ, கலை என்ற பெயர்கூறிச் சாதியை நிலைநாட்டுவர் கபடர்கள். கலைத்துறை தமது ஆதிக்கத்தில் இருக்குமட்டும், பாடுபாடும் தமிழரின் கண்ணில் மண்தூவிக் காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை நயவஞ்சகர்கட்கு இருந்தது. தன் மதிப்பு இயக்கம், தத்தளித்துக் கொண்டிருந்தது. இந்தத் துறையிலே இருந்து வேகமாக வெளிவந்த கணைகளைத் தாங்கமாட்டாமல், ஒரே ஒரு மார்க்கமே இருந்தது கலையை வெறுத்து ஒதுக்குவது, அல்லது கலையின் நிலையை நிந்திப்பது, கலை சுயநலமிகளின் வலை என்று கண்டிப்பது. இது, ஏற்கனவே கள்ள உள்ளம் கொண்டவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. ஆனால் புதியவர்கள், பாதையின் ஓரத்தில் நிற்பவர்கள், தீர்மானத்துக்கு வராதவர்கள் ஆகியோருக்கு, வெறும் பிரச்சாரம் போதவில்லை. அவர்களை, நேர்வழியிலிருந்து திருப்பிவிட கலை இருந்தது. முற்போக்காளரின் எதிரிகளிடம் பொன்னை உருக்கி வார்த்தது போலிருந்தது, என்ற கலைமெருகு காட்டி ஐயருக்குத் தட்சணை கொடுத்துத் தாளில் வீழ்ந்திடும் கட்டத்துக்குக் கலை, தமிழரை இழுத்துச் சென்றது. தமிழ்மொழியிலே ஆர்வம் அதிகரிக்க அதிகரிகக், இந்த ஆபத்தும், உடன் வளரலாயிற்று. ஆரியத்தோடு தன்மான இயக்கம் தொடுத்த போரின் பயனாகக் காளிதாசன் கம்பனுக்கு இடமளிக்க நேரிட்டது பவபூதி இளங்கோவடிகளுக்கு வழிவிட்டு விலகினார், வடமொழிப் புலவர்கள் அவர்தம் காவியங்கள் முன்வரிசையிலிருந்து நீக்கப்பட்டு, தமிழ்புலவர்கள் இங்கு அமர்ந்தனர்.
தன்மான இயக்கத்தவரின் கண்ணும் கருத்தும், களிப்படைந்தன, காட்சி மாறுவதை கண்டு, செந்தமிழ் தழைத்தது. மகா ஜனங்களே! மறைந்துவிட்டது, பெருங்குடி மக்களே! வந்தது. அக்ராசனாதிபதி அவர்களே என்ற வார்த்தை மறைந்து தலைவர் அவர்களே என்ற தமிழ் வந்தது. விவாஹ சுபமுகூர்த்தம், திருமணமாயிற்று, வதூவரவர்கள், மணமக்களாயினர், நமஸ்காரம், வணக்கமாயிற்று, புஸ்தகம், நூல் என்ற தமிழ்மணம் பெற்றது, புஷ்பம் மலராகி ஸ்ரீமதி திருவாட்டியாகி, எங்கும் தமிழ்மணம் பரவிற்று. ஆனால் அகமகிழ்ச்சிக்குக் காரணமாக இருந்த இதே மாறுதல், ஆபத்தையும் கொண்டு வந்து சேர்த்தது, கலை ஆர்வம் பிறந்தது, அந்த ஆர்வத்தை ஆரியம் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டது. என்ன செய்வது? பூங்காவை அமைத்தோம், ஆனால் புன்னமர நிழலிலே நச்சுப்பூச்சிகள் உலவுகின்றன! குளம் வெட்டினோம், முதலை குடியேறி விட்டது! தமிழ் தழைக்க உழைத்தோம்! அதனுடன் சேர்ந்து பழமையை நுழைத்தனர் தமிழ்ப பகைவர்கள் ஒன்று அடியோடு கலையை வெறுத்துத் தள்ளவிடவேண்டும் அல்லது கலைக்கு வயப்பட்டுத் தன்மானக் கருத்தை இழந்து பாழ்படவேண்டும், இந்நிலையிலே, ஐயமுற்றிருந்த போதுதான், கனகசுப்பு ரத்தினம் சஞ்சீவி பர்வதத்தின் சாரல் பக்கம் நம்மை அழைத்துச் சென்றார். கலை, ஒரு கருவி, அதனை நாம், நற்கொள்கைகளுக்காகப் பயன்படுத்த முடியும், என்று நமக்குரைத்தார், கலைக்களம் புகுந்தார், கவிதைகளை வீசினார் திறமையுடன் வெற்றி பெற்றார். இதோ நமக்கு ஓர் மாவீரர் கிடைத்தார், ஆவரிடம் கலைப்பகுதியை ஒப்படைப்போம், கவலையைவிட்டு, நம்பிக்கை பெற்று, வெற்றி நிச்சயம் என்ற உறுதியுடன், தன்மான இயக்கத்தவர் கூறினர். “அந்த உவமை” என்று பழைமை விரும்பி, பெருமூச்சுடன் கூறுவார், யாரோ ஓர் கவியை நினைவிலே கொண்டு, “கண்ணாடிக் கன்னத்தைக் காட்டி ஏன் உள்ளத்தைப் புண்ணாக்கிப் போடாதே! போ! போ! மறைந்துவிடு” என்று இரண்டடி எடுத்து விடுத்தால், கலை உள்ளம் படைத்தவர், கண்களிலே புத்தொளியுடன், நம்பக்கம் திரும்பி, “தம்பி! யார் அக்கவி!” என்று கேட்பார், அப்போது நாம், பெரியார் சொன்னவண்ணமே, “அவரா? அவர், சுயமாரியதை இயக்கத்தின் ஒப்பற்ற கவி. புதுவை புரட்சிக் கவிஞர்” என்று கூறுவோம், பூரிப்புடன்.
புரட்சிக் கவிஞரின் தோற்றம், தன்மான இயக்கத்தின் வரலாற்றிலே முக்கியமான கட்டம், கள்ளி காளானையும், முள்ளையும் கல்லையும், உழைப்பெனும் ஏர்கொண்டு, பெயர்த்தெறிந்த பெரியாருக்கு, உறுதுணைபுரிய, கவிதை மழைபொழிந்து, வயலை வளமாக்கியவர், பாரதிதாசன், கரம்பு வயலானது ஈரோட்டு வீரரால், வயல் வளமானது, புதுவை வீரரால்! ஒரு கொள்கையின் வளர்ச்சிக்கு, நீதி, அதனைத் திறம்பட எடுத்துரைக்கும் திறமை, அந்தத் திறமையை விடாது பயன்படுத்தும் பண்பு, இவை மட்டும் போதாது, இவைகள் யாவும் சேர்ந்தாலும், வைரம் ஒளிவிட்டுக் காட்ட, நன்கு தீட்டப்பட வேண்டும் அதே போல, அந்தக் கொள்கைக்கு கலை அழகு ஏற வேண்டும். அதனைத் தந்தவர், பாரதிதாசன்! நாம் நுழைய முடியாதோ என்று ஐயத்துடன் இருந்த களத்திலே, தன்னந்தனியே சென்று தருக்கரும் தலை கவிழும் வண்ணம், வெற்றிபல பெற்றவர், பத்து ஆண்டுகளுக்கு முன்பே, பெரியாரின் பாராட்டுரையைப் பெற்றார். கலைத்துறையிலே தன்மான இயக்கம் வெற்றிமுரசுடன் நுழைந்தது.

(திராவிடநாடு 21-7-46)
- பேரறிஞர் அண்ணா

No comments:

Post a Comment