Friday 17 April 2020

அம்பேத்கார் ஒரு கற்பகத்தரு - கலைஞர் கருணாநிதி

அம்பேத்கார் ஒரு கற்பகத்தரு - கலைஞர் கருணாநிதி

சென்னை வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசினர் கலைக்கல்லூரிக் கட்டடத்தைத் திறந்து வைத்துத் தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை:

இன்று நம்முடைய அகமெல்லாம் மகிழ்ச்சியால் பூத்துக் குலுங்குகின்ற அளவுக்குப் பெரியதொரு விழாவில் கலந்து கொண்டிருக்கிறோம். மாமேதை அம்பேத்கர் அவர்களுடைய பெயரால் தமிழக அரசின் சார்பில் கலைக்கல்லூரி ஒன்றினை இந்த இடத்திலே நிறுவி, எழில் வாய்ந்த கட்டடத்தை அமைத்து அதைத் திறந்து வைக்கின்ற இனிய திருவிழா இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விழாவில் உணர்ச்சியோடும், மகிழ்ச்சியோடும் இந்த வட்டாரத்து மக்கள் அனைவரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். 

அம்பேத்கர் பெயரில் சட்டக்கல்லூரி

அம்பேத்கர் அவர்களுடைய பெயரால் ஒரு கல்லூரி நிறுவிட வேண்டும் என்கிற தணியாத ஆர்வத்தை என்னிடத்தில் தெரிவித்தனர், நம்முடைய மாண்புமிகு கல்வி அமைச்சர் நாவலரிடத்திலும் இந்தத் தொகுதியினுடைய சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சரவையில் பங்கு பெற்றிருக்கும் அம்மையார் அவர்களும் எடுத்துச் சொல்லியுள்ளனர். அதனைப் படிப்படியாக எப்படி வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கிறார்கள் என்கின்ற சிறப்பை நம்முடைய கல்வியமைச்சர் அவர்களும் மற்ற அமைச்சர் பெரு மக்களும், நண்பர்களும் விளக்கமாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.

அரசியல் சட்டத்தைக் கொளுத்தச் சொன்ன அம்பேத்கர்

இந்தக் கல்லூரிக்குக் கட்டிடத்தினுடைய திறப்பு விழாதா அம்பேத்கர் அவர்களுடைய பிறந்தநாள் விழாவிலே நடைபெறுகிறது. அதன் சிலாக்கியத்தை அனைவரும் வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தார்கள். இந்தக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டிய நாளும் இந்திய நாட்டுச் சரித்திரத்தில் ஒரு முக்கியமான நாளாகும். மத்திய அமைச்சர் அன்புக்குரிய ஜெகஜீவன்ராம் அவர்களும், நானும், அம்மையார் அவர்களும் கலந்துகொண்டோம். இதே இடத்தில் அந்தக் கல்நாட்டு விழாவினைச் செய்த நாள் எந்த நாள் என்றால் இந்திய நாட்டினுடைய சுதந்திரம் பெற்ற வெள்ளிவிழா ஆண்டைக் கொண்டாடுகிற ஆகஸ்டு 15 ஆம் நாள்தான்.

இந்திய நாடு சுதந்திரம் பெற்ற பிறகு அம்பேத்காரோடு எந்த அளவுக்கு இணைந்து இந்திய நாட்டுக்குத் தேவையான சட்டத்தினை இயற்ற வேண்டிய சூழ்நிலை இருந்தது என்பதனையும் ஒருகணம் எண்ணிப்பார்க்கிறேன். இந்தக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டப் பெற்ற நாளும் கட்டடம் ஓரளவுக்கு முடிவுற்று, அதைத் திறக்கப்படுகின்ற நாளும் இந்திய நாட்டு மக்களால் மிகப் புனிதமான பொன்னெனப் போற்றப்படுகிற நாளாக அமைந்திருப்பதை எண்ணியெண்ணி மகிழலாம்.

அம்பேத்கர் அவர்களுடைய சிறப்பியல்புகளை, நாவலர் அவர்களும் அம்மையார் அவர்களும் மற்ற நண்பர்களும் இங்கே எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். இந்தியாவின் அரசியல் சட்டத்தை யாத்துத் தந்த மாமேதை டாக்டர் அம்பேத்கர்; ஆனால், அந்த அரசியல் சட்டத்தால் இந்தியா எதிர்பார்த்த நல்ல விளைவுகளைப் பெறவில்லை. எந்த அடித்தளத்து மக்கள் தளை உடைத்துத் தலைநிமிர்ந்து எழுந்திட வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசியல் சட்டத்தை அம்பேத்கர் அவர்கள் முன் நின்று எழுதினாரோ, எந்த மத மாச்சரியங்கள் அகல வேண்டுமென்று கருதினாரோ எந்தச் சாதி பேய் தொலைய வேண்டுமென்று முழு மூச்சாக முனைந்தாரோ எந்த உரிமைகள் மாநிலத்திற்கு மாநிலம் காப்பாற்றப்பட்டாக வேண்டுமென்று அவர் விழைந்தாரோ, அந்த விருப்பம், அந்தக் கருத்து, அந்த விழைவு, இந்த அரசியல் சட்டத்தின் அடிப்படையில் நிறைவேறாத காரணத்தினால் இறுதி நாளிலே "நான் எழுதியதாக இருந்தாலும் அந்த அரசியல் சட்டம் கொளுத்தப்பட்ட வேண்டும்" என்று அம்பேத்கர் சொன்னார். 

அம்பேத்கர் மனக்குறை

அந்த அளவுக்கு இந்த நாட்டினுடைய மக்கள் தொல்லைப்படுவதை அவர் உணர்ந்தார். இந்தியா எந்த அடிப்படையிலே சுதந்திரம் பெற்றதோ அந்தச் சுதந்திரத்தினுடைய பயனை முழுமையாக அனுபவிக்க முடியாமல் அடித்தளத்து மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் - இவர்களால் எழுந்து நிமிர்ந்து மானத்தோடு, மரியாதையோடு, மதிப்போடு உலவிட முடியவில்லை என்கின்ற மனப்புழுக்கம் அம்பேத்கருடைய உள்ளத்திலே இருந்த காரணத்தினால் தான் அவ்வளவு வேகமான வார்த்தையை அம்பேத்கர் வெளியிட்டார்.

பத்திரிக்கைகளுக்குத் தைரியம் உண்டா?

அரசியல் சட்டத்தைப் பற்றி அப்படிப்பட்ட புரட்சி எண்ணங்கொண்ட அம்பேத்கர் - தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்ட அம்பேத்கர் - இந்திய நாட்டுத் தேசியத் தலைவர்களிலே ஒருவர் என எண்ணத்தக்க அளவுக்குத் தன்னை வளர்த்துக் கொண்ட அம்பேத்கர், அவருடைய பெயரால், அவருடைய நினைவாக எங்கே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, எந்தப் பகுதி மக்களுக்காக அதிகமாக உழைத்தாரோ, அந்த வடபகுதி மக்களால், - தென் பகுதி மக்களால் பாராட்டப்படுகிற அளவுக்குப் பாராட்டப்படவில்லை. அவருக்கு நினைவாலயத்தை எழுப்பவில்லை என்ற செய்தியை அம்மையார் அவர்கள் உருக்கமாக எடுத்துச் சொன்னதை நீங்கள் எல்லாம் கேட்டீர்கள். 

பத்திரிக்கை நிருபர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள். அம்மையார் அவர்கள் பேசிய பேச்சைத் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் திராவிட முன்னேற்றக் கழக அரசு செய்த காரியங்களைப் பட்டியல் போட்டுக் காட்டிய அந்தப் பாங்கை அம்பேத்கரை நினைத்துச் செயற்படுவதேயாகும். தமிழகத்திற்கு அறிமுகப்படுத்திய பெருமையே பெரியாரையும், பேரறிஞர் அண்ணா அவர்களையுமே சேரும் என்று அம்மையார் அவர்கள் எடுத்துச் சொன்ன விளக்கத்தை - நாளைக்குப் பத்திரிக்கையிலேயே போடுவார்களா என்றால் போட மாட்டார்கள். தைரியம் இருந்தால் போடுங்களேன். போட மாட்டார்கள்.
நான் கூடக் காலையிலே பத்திரிக்கையில் பார்த்தேன். அம்மையார் அவர்கள், 'நான் பதவி பட்டமெல்லாம் அனுபவித்து முடித்துவிட்டேன். இனிமேல் கிளர்ச்சிக்குத் தயார்' என்று கூறியதாகப் பத்திரிக்கையிலே வந்தது. நான்கூட அப்படிச் சொல்லியிருப்பார்களா என்று எண்ணினேன். இப்போது அவர்கள் பேசிய பிறகுதான் எனக்கு விஷயமே புரிந்தது. பேசும்போதே சொன்னார்கள் கலைஞர் ஆணையிட்டால் கிளர்ச்சிக்குத் தயார் என்று அவர்கள் சொன்னார்கள்.

ஆகவே பத்திரிகைக்காரர்கள் சாமர்த்தியமாகக் கலைஞர் ஆணையிட்டால் என்பதை மாத்திரம் மறைத்துவிட்டு கிளர்ச்சிக்குத் தயார் என்று அம்மையார் சொன்னதைப் போட்டுவிட்டார்கள். ஆக எந்த விழா நடக்கும், யார் பேசுவார்கள், நமக்கு என்ன கிடைக்கும், அதில் எதையெதைப் புடைத்து, எதையெதை வடித்துப் போடலாம் என்கிற அளவுக்கு, இன்றைக்கு நாட்டிலே இருக்கிற பெரிய பெரிய பத்திரிக்கைகளுடைய தரமெல்லாம் குறைந்துவருகிற நேரத்தில் - நாம் இப்படிப்பட்டவர்களுக்கு விழாக் கொண்டாடுவதே கூட அவர்களுக்குச் சலிப்பாகத்தான் இருக்கும்!

அம்பேத்கர் பெயர் துலங்கக் கழக அரசின் பணி தொடரும் 

அம்பேத்கருக்கு விழாவா? தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த ஒருவருக்கு விழாவா? அவருக்குச் சிலைதிறப்பா? இதில் அமைச்சர்கள் கலந்து கொள்வதா? அவர் பெயரால் ஒரு கல்லூரியா? அதைத் திறப்பதா? அதற்கு 16 லட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசாங்கம் தருவதா? என்ன பாவம்? என்ன அக்கிரமம்? இதற்கு பிராயச்சித்தமே கிடையாதா? இந்த முன்னேற்றக்கழக அரசு ஒழிந்தால் தான் பிராயச்சித்தம் நினைக்கக் கூடாததை எண்ணிக் கொண்டிருக்கிற பத்திரிகைக்காரர்கள் விழாச் சிறப்பை விட்டுவிட்டு அம்பேத்கருக்காகத் திறக்கப்பட்ட சிலையில் உயரமென்ன? அகலம் என்ன? அதன் நிலையென்ன? அதைத் திறந்து வைத்துப் பேசிய பேச்சென்ன? எப்படி அம்பேத்கரைச் சிறப்பித்தார்கள்? என்பதையெல்லாம் விட்டு விடுவார்கள். அதே சமயம் பன்றி ஓடினாள் வந்த பல்லாயிரக்கணக்கான மக்களை விட்டுவிட்டுப் பன்றி ஓடியதை மாத்திரம் பெரிதுபடுத்திக் கொட்டை எழுத்திலே போடுகிற பத்திரிகைக்காரர்களைப் போல் இன்றைய தினம் நல்ல பத்திரிகைக்காரர்களும் நடந்துகொள்ளும் காட்சியை நாம் நாட்டிலே பார்க்கிறோம். அம்பேத்கருக்குக் கல்லூரி வைப்பதோடு நம்முடைய காரியங்கள் முடிந்து விட்டனவா என்றால் இல்லை. நம்முடைய நண்பர் குசேலர் சொன்னார், அரசாங்கம், இதற்குச் செலவழிப்பதாகத் தந்த 16 லட்சம் ரூபாயில் 80 ஆயிரம் ரூபாய் மிச்சமிருக்கிறது. அதில் ஒரு சுற்றடைப்புக் கட்டுங்கள் என்று குசேலர் சொன்னார். சோறு போட்டவர்கள் குழம்பு ஊற்றமாட்டார்களா?

        ஆகவே, சுற்றடைப்பு நிச்சயமாக உண்டு என்பதை நண்பர் குசேலருக்கு நான் சொல்லிக்கொள்ளுகிறேன். பல இலட்சம் ரூபாய் செலவழித்த பிறக்கும் 80 ஆயிரம் ரூபாயையும் செலவழிக்க வேண்டுமென்று குசேலர் கேட்கிறார். பெயரே குசேலர் அல்லவா. ஆகவே, கேட்டார். கண்ணனாக இல்லாவிட்டாலும், நானும் நாவலர் அவர்களும் அம்மையார் அவர்களும் கலந்திருக்கிற அமைச்சரவை இந்த நாட்டிலே தாழ்த்தப்பட்ட பின்தங்கிய மக்களுக்காக என்றென்றும் பாடுபடுகின்ற அமைச்சரவை என்ற முறையில் அம்பேத்கர் அவர்களுடைய பெயர் துலங்க, அவர் பெயர் விளங்க, அவர் பெயர் திகழ, அவர் எடுத்துச் சொன்ன கொள்கைகள் எல்லாம் மணங்கமழ, நம்முடைய மக்களுடைய உள்ளத்திலே பதிய, இன்றைக்குப் பாடுபட்டு வருகிறோம், என்பதை நீங்கள் வெகு நன்றாக அறிவீர்கள்.

அமைச்சர் இராமன் இங்கே பேசும்போது எந்த மாநிலத்திலும் ஒரு சர்க்கார் அம்பேத்கருடைய பெயராலே கல்லூரி அமைத்ததில்லை என்று கூறினார். நான் கூறுவேன், இந்த மாநிலங்களிலே சுதந்திரம் பெற்ற  இந்த 25,26 ஆண்டுகளில் அம்மையார் குறிப்பிட்டதைப் போல், காந்தியடிகள் எந்த கோசத்தைச் சொன்னாரோ, எந்தத் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உழைக்கிறேன் என்று அவர் தன்னுடைய இலட்சியப் பயணத்தை நிறைவேற்றுகின்ற அளவுக்குக் கூடுமான வரையில் - முழுவதும் என்று சொல்ல நான் தயாராக இல்லை - இன்றைக்கு மற்ற எல்லா மாநிலங்களைவிடத் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பனி செய்கின்ற, சாதனை புரிகின்ற அரசு ஒன்று இருக்கிறது என்றால் அது தமிழ்நாடு அடாசு ஒன்றைத் தவிர வேறு எந்த மாநில அரசும் இல்லை.

தாழ்த்தப்பட்டோருக்காகக் கழக அரசின் சாதனை

உங்களுக்குச் சில விவரங்களைத் தர விரும்புகிறேன். 1965-66 ஆம் ஆண்டில் அரிசன நலத்துறைக்காகப் பிற்பட்டோர் நலத்துறையையும் சேர்த்துக் காங்கிரசு அரசு செலவழித்த தொகை 5 கோடியே 38 லட்சம் ரூபாய்தான். ஆனால், இன்றைக்கு அரிசன நலத்துறைக்காக மாத்திரம் திராவிட முன்னேற்றக் கழக அரசு 1974-75 ஆம் ஆண்டு செலவழிக்க ஒதுக்கியிருக்கிற தொகை 1௦ கோடியே 16 இலட்சம்‌ரூபாய்‌என்பதை நான்‌தெரிவித்துக்‌ கொள்ளுவேன்‌. இது மாத்திரமன்று, நண்பர்களே, 1966-67இல்‌தமிழ்நாட்டில்‌ தாழ்த்தப்பட்ட மாணவர்களுடைய எண்ணிக்கை 10,41,238. 1972-73இல்‌தாழ்த்தப்பட்ட மாணவர்களுடைய எண்ணிக்கை 14,214. 786. இது தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்காக இந்த அரசு, அம்மையார்‌ அவர்களைத்‌தலைவராகக்‌கொண்டிருக்கிற துறையின்‌ சார்பாகச்‌ செய்திருக்கின்ற பெரும்‌சாதனையாகும்‌.

தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக 1967ஆம்‌ ஆண்டு இருந்த மொத்த விடுதிகள்‌ 388. இந்த ஐந்தாறு ஆண்டுக்‌காலத்தில்‌கழக அரசின்‌சார்பில்‌, அம்மையார் அவர்களுடைய தாழ்த்தப்பட்டோர்‌ நலத்துறையின்‌சார்பில்‌, இன்றைக்கு இருக்கிற விடுதிகளின்‌ எண்ணிக்கை 529. உதவித்தொகை பெறுகின்ற தாழ்த்தப்பட்ட மாணவர்களுடைய எண்ணிக்கை: 1966-67இல்‌2 இலட்சத்து 70 ஆயிரம்‌. 1972-73ல்‌4 இலட்சத்து 82 ஆயிரம்‌. கேரளத்தில்‌ அரிசன மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனைக்கு மாநில அரசு செய்த செலவு எவ்வளவு தெரியுமா? நான்‌தருகிற கணக்கல்ல நாவலர்‌தருகிற கணக்கல்ல, அம்மையார் ‌தருகிற கணக்கல்ல. இந்தக் ‌கணக்கைத் ‌தருபவர்கள் ‌யார்‌ தெரியுமா? கமிஷனர்‌ ஆஃப்‌ ஷெட்யூல்‌கேஸ்டஸ்‌ அண்ட்‌ ட்ரைப்ஸ் ‌என்கின்ற மத்தியச் சர்க்கார்‌ உயர்‌அதிகாரி வெளியிட்டிருக்கின்ற ஒரு புத்தகம்‌ கூறுகிறது.
இதுவரையில் 20 அறிக்கைகளை அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். இது 71 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கை. அடுத்த அறிக்கை விரைவிலே வரத்‌தயாராக இருக்கிறது. நமக்குக்‌ கிடைத்திருக்கிற அறிக்கையிலிருந்து எடுத்த தகவலின்படி கேரளத்தில் ‌1969-70 ஆம்‌ ஆண்டு அரிசன மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனைக்கு மாநில அரசுக்கு ஏற்பட்ட செலவு 74 ஆயிரம்‌. 1970-71இல் ‌55 ஆயிரம்‌. மைசூரில்‌ ரூ.3 இலட்சம்‌81 ஆயிரம் 1969-70இல்‌; 1970-71 இ‌ல்‌2 இலட்சத்து 32ஆயிரம்‌. ஒரிசாவில் ‌1969-70இல்‌30 ஆயிரம்‌; 1970-71இல்‌. 25 ஆயிரம்.  பாண்டிச்சேரியில் ‌1969-70இல்‌46 ஆயிரம்‌. 1970-71இல்‌2 இலட்சத்து 29ஆயிரம்‌. –
நன்றாக நன்றி காட்டினார்கள் ‌நண்பர்களே,
தமிழ்நாட்டில்‌1969-70இல்‌17 இலட்சத்து 72 ஆயிரம்‌; 1970- 71இல்‌31 இலட்சத்து 8 ஆயிரம்‌!

அன்றே அவர்‌ புகழ்‌ பரப்பினோம்‌

அதே அறிக்கையில்‌கேரளத்தில்‌பயிற்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை - மொத்தம்‌5345 பேரில்‌பயிற்சி பெற்றவர்கள் 539 பேர். அதைப்‌போலவே ஆந்திரத்தில் மொத்தம் 8038 பேரில் பயிற்சி பெற்றவர்கள் 1214 பேர். மைசூரில் 4996 பேரில் 826 பேர். தமிழ்நாட்டில் மொத்தம் 11749 பேரில் 3131 பேர் பயிற்சி பெற்றவர்கள்.

இந்தக்‌கணக்கு நான்‌தயாரித்த கணக்கல்ல. மத்திய சர்க்கார்‌ வெளியிட்டிருக்கிற கணக்கு. இப்படிப்பட்ட பெரிய பட்டியலை என்னால்‌ எடுத்துச்‌சொல்லமுடியும்‌. ஆனால்‌, டாக்டர் அம்பேத்கருடைய பெயரை மாத்திரம்‌ பயன்படுத்திக்‌கொள்கிற சிலர்‌இருக்கிறார்கள்‌அதைத்தான்‌ அம்மையார்‌அழகாக இங்கே குறிப்பிட்டார்‌. காலமெல்லாம்‌போன பிறகு இன்று அம்பேத்கர்‌ பெயரைச்‌ சிலர்‌ பிடித்துக்‌ கொண்டிருக்கக்‌ காரணம்‌; அம்பேத்கார்‌ பெயரால்‌ அரிசன மக்களை ஏமாற்றலாம்‌
என்பதற்காகத் தானே தவிர வேறல்ல.

தி. மு. கழகம்‌, அம்பேத்கருடைய மேதாவிலாசத்தை இன்று, நேற்றல்ல, நீண்ட நெடுநாள்களுக்கு முன்னால்‌பெரியார்‌ அவர்களால்‌, அண்ணா அவர்களால்‌, கழகத்திலே இருக்கிற தலைவர்கள்‌அத்தனை பேராலும்‌இந்த நாட்டிலே இருக்கிற சந்து பொந்துகளில்‌, பட்டி தொட்டிகளில்‌, பட்டணக்‌கரைகளில்‌படிந்த புல்வெளிகளில்‌நடைபெற்ற கூட்டங்களில்‌மாநாடுகளில்‌ அம்பேத்கருடைய புகழைப்‌ பாடியிருக்கிறார்கள்‌. நாங்கள்‌எதிர்க்கட்சியாக இருந்த அந்தக்‌காலத்திலும்‌ எடுத்துச்‌சொல்லியிருக்கிறோம்‌. ஆனால்‌, அவர்‌பெயர்‌நிழலில்‌ நின்று விளம்பரம்‌ தேட அல்ல.
அவர் பெயருக்கு உள்ள சக்தியை அறிவாற்றலை - புரட்சி எண்ணத்தை நாங்கள் எங்கள் உள்ளத்தில் பதிய வைத்துக் கொண்டு வந்த காரணத்தால் தான் அவருடைய மேதாவிலாசத்தைத் தமிழகத்தில் எடுத்துச் சொன்னோம். மாநில சுயாட்சியானாலும்‌, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டுமானாலும்‌, மதமாச்சரியங்கள்‌அகன்ற சமதர்ம சமுதாயம்‌ஏற்பட வேண்டுமென்றாலும்‌, அதற்கெல்லாம்‌ அம்பேத்காரிடம்‌ஆதாரமிருக்குமா என்று தேடினால்‌எதைக்‌ கேட்டாலும்‌தருகின்ற கற்பகத்‌தரு போல்‌அவருடைய கருத்துகள்‌ நமக்குக்‌கிடைத்துக்‌கொண்டே இருந்தன. ஆகவேதான்‌அவருக்கு இந்தச்‌சிறப்பை இங்கே செய்திருக்கிறோம்‌.

இதற்கு அம்மையார்‌அவர்கள்‌தலைமையேற்று, இந்தப்‌பகுதியில்‌ நற்பணியாற்றி, என்னிடமும்‌நாவலரிடமும்‌முதலில்‌ இரண்டரை இலட்சம்‌ரூபாய்தான்‌இருக்கிறது என்று எடுத்துச்‌சொன்ன நேரத்தில்‌எப்படியும்‌ஐந்து இலட்சத்தைத்‌தந்துவிடுவேன்‌ என்று சொன்னபோது, இதைக்‌கேட்டு இன்றைக்கு 16 இலட்சம்‌ ரூபாய்‌சர்க்கார்‌ செலவில்‌ இந்தப்‌பெரிய கல்லூரியை அமைத்த குழுவில்‌ இடம்‌ பெற்றுத்‌ தலைமை வகித்த அன்றைய சென்னை மாவட்ட ஆட்சித்‌தலைவருக்கும்‌ குழுவில்‌ பிரதான இடத்தைப்‌ பெற்றுப்‌பணியாற்றிய ஏ. எல்‌. எஸ்‌. அவர்களுக்கும்‌நன்றி தெரிவித்துக்‌கொள்கிறேன்‌.

நன்றி: முரசொலி, 14.4.1974

புத்தகம்: கல்வி நிலையங்களில் கலைஞர்
தொகுப்பாளர்:  இள. புகழேந்தி.
சீதை பதிப்பகம்
திராவிட வாசிப்பிற்காக தட்டச்சு: ராஜராஜன் ஆர்.ஜெ.

No comments:

Post a Comment