Friday 17 April 2020

குழந்தைகளுடன் நான் – உணவுச் சமத்துவம் இனியன்

குழந்தைகளுடன் நான் – உணவுச் சமத்துவம்
இனியன்
குழந்தைகள் பற்றிப் பேசுகிற பொழுதெல்லாம் பேசப்பட வேண்டிய முக்கியமான விசயங்களில் ஒன்றாக இருப்பது இங்கிருக்கும் உணவு முறைகள் தான். பெரும்பாலும் அது குறித்த உரையாடல்கள் பரவலாக இருப்பது இல்லை என்பதுதான் எதார்த்தம். குறிப்பாகப் பாலியல் வக்கிர சம்பவங்கள் நடைபெறுகிற பொழுதுகளிலாவது பாலியல் கல்வி, பாலியல் சமத்துவக் கல்வி போன்றவை பேசுபொருளாக இருக்கிறது. ஆனால், அன்றாடத் தேவைகளில் அதிமுக்கியமான ஒன்றாக இருக்கும் உணவுகள் பற்றியும், அதன் சமத்துவமின்மைப் பற்றியும் பேசப் படுகிறதா?, எப்போதாவது யாராவது எங்காவது மட்டுமே பேசும் பொருளாக இருக்கிறது. அதேநேரம் பரவலாகத் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க வேண்டிய பெரிய தேவை கொண்ட தலைப்பாக இருக்கிறது.
பள்ளிக்குச் செல்லும் போது முதலில் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று காலை யாரெல்லாம் சாப்பிடவில்லை என்பதுதான். அரசுப்பள்ளியாக இருந்தால் அதிலும் மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளாக இருந்தால் நிச்சயம் 40-60% என்கிற ரீதியில் கை தூக்குவார்கள். தொடக்கப்பள்ளிகளில் இந்த எண்ணிக்கைச் சற்றுக் குறைவாக இருப்பது ஆறுதல் தான். கிராமப்புறத் தனியார்ப் பள்ளிகளில் 5-15% என்ற அளவில் இருக்கிறது. நகர்ப்புறத் தனியார்ப் பள்ளிகளில் இந்த எண்ணிக்கை மிகச் சொற்பமாகத்தான் இருக்கிறது.
ஒருமுறை விளையாட்டுக்கு இடையில் 7ம் வகுப்பு குழந்தையை ஏன் சாப்பிடவில்லை? எனக் கேட்டேன்
அப்பா, அம்மா ரெண்டு பெரும் வெளியூருக்கு மண் வெட்ட போயிருக்காங்க, வாரத்துக்கு ஒருமுறைதான் வருவாங்க, நான்தான் சமைக்கணும், தம்பி, தங்கைகளுக்குக் கொடுக்கணும். அவங்களையும் கிளப்பி விடனும். நான் சாப்பிட்டா அவங்களுக்கு இருக்காது. அதான் மதியம் இங்கே சாப்பிட்டுக்கலாம்ன்னு வந்திடுவேன்.
இரவாவது சாப்பிடுவாயா?
மிச்சம் இருக்கிறத சாப்பிட்டுக்குவேன் என்றாள்.
ஒவ்வொரு குழந்தைகளுக்கும் இம்மாதிரியான காரணங்கள் இருக்கத்தான் செய்கிறது சாப்பிடாமல் இருப்பதற்கு. அதனால் தான் கல்வியையும் உணவையும் ஒருங்கே சமநிலையில் வைத்து முக்கியத்துவம் கொடுத்து இத்தனை ஆண்டுக்காலம் வளர்ந்து வந்திருக்கிறோம் என்றால் அது மிகையல்ல. அந்த வளர்ச்சியும் கூட மதிய உணவில் துவங்கிச் சத்துணவு என உருமாற்றம் பெற்று நடைபெறுகிறது. அதில் அவ்வப்போது ஆங்காங்கே தவறுகளும் அலட்சியங்களும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அவற்றையும் கூடச் சீர் செய்தாக வேண்டியிருக்கும் நிலையில், இங்கு உணவுச் சமத்துவம் கையாளப் படுகிறதா என்னும் கேள்வியும் எழுகிறது.
உணவுச் சமத்துவம் என்றால் என்ன?
அனைத்துக் குழந்தைகளுக்கும் சரியான அளவிலான சரிவிகித ஊட்டச்சத்து கொண்ட உணவு சென்று அடையும் நிலைதான் உணவுச் சமத்துவம்.
அப்படியான உணவுச் சமத்துவம் என்பது இந்திய வாழ்வியல் அமைப்பில் சரியான அளவில் குடும்பங்களில் கூடக் கையாளப்படுவதில்லை. உதாரணமாக ஒரு குடும்பத்தில் இருக்கும் ஆதிக்கம் நிறைந்த மனிதருக்கு உணவு ஒன்று பிடிக்கவில்லை என்றால்ஊட்டச்சத்து நிறைந்த உணவாகவே இருந்தாலும் கூட மற்ற குடும்ப உறுப்பினர்களுக்குப் போய்ச் சேர்வதில்லை. இதுதான் எதார்த்தமாகப் பல குடும்பங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதில் அதிகம் பாதிக்கப்படுவது குடும்பத்தில் இருக்கின்ற குழந்தைகள் தான். இதிலும் கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான விசயமாக இருப்பது, ஆதிக்கம் செலுத்தும் நபர்கள் பெரும்பாலும் சைவ உணவுப் பிரியர்களாக இருப்பவர்கள் தான். உயிர்களிடத்தில் கருணை வேண்டாமா என வாதிடும் அவர்கள் தான் சக உயிர்களிடத்தில் அதீத ஆதிக்கம் செலுத்தி அவர்களுக்குத் தேவையான சத்துக்களைக் கூடப் போய்ச் சேராமல் தடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
முதல்முறையாக மலைப் பிரதேசத்துக் குழந்தைகள் நிகழ்வு ஒன்றில் மதிய உணவு ஏற்பாடு செய்தாக வேண்டிய கட்டாயம். ஏற்பாடுகளுக்கிடையில் அங்கிருந்த குழந்தைகளிடமே கேட்டோம் என்ன உணவு வேண்டும் என. சில குழந்தை  இதுவரை ‘நெய்’ சாப்பிட்டதே இல்லை என்றார்கள். மற்றும் சில குழந்தைகளோ சிக்கன் சாப்பிட்டதில்லை என்றார்கள். நிகழ்வில் நெய் சோறும், கோழி கிரேவியும் செய்தோம் கூடவே கத்திரிக்கா கொஸ்தும், வெங்காய பச்சடியும் தான் செய்திருந்தோம். நிகழ்வும் முடிந்தது. உணவு வேளையில் ஓரிரு பெற்றோர்கள் அவர்களது உணவுப் பழக்கம் காரணமாக அசைவம் உணவு உண்ணும்  குழந்தைகளுடன் தங்கள் குழந்தை சேர்ந்துவிடக் கூடாது எனச் சொல்லி தனியே அழைத்துச் சென்றுவிட்டனர். இதில் இன்னொரு கவனிக்கத்தக்க விசயம் ஒன்று உள்ளது. அது, நெய்யும் கோழியும் கேட்டது 2 மலைவாழ் குழந்தைகள். அவர்களுடன் அமர்ந்து சாப்பிடவிடாமல் அழைத்துச் சென்றவர்கள் பணி நிமித்தம் மலைக்கு வந்தவர்கள்.
இப்படியான குடும்ப அமைப்பின் நிலை என்பது இடையில் திணிக்கப்பட்ட ஒன்றாகவே இருந்தாலும் இதன் நீட்சியாகத்தான் சமூகத்திலும் பிரதிபலிப்பு செய்கிறது. அதனால் தான் மிக இலகுவாகக் காலை உணவு தருகிறோம் என்னும் பெயரில் இஸ்கான் (ISKCON) அமைப்பினர் பள்ளிகளில் நுழைந்து தனது உணவு ஆதிக்கத்தைச் சமூகத்தின் மீது செலுத்தத் துவங்கியிருக்கின்றனர். அதற்கு பன்முகத்தன்மையையும், மக்களின் உணவு முறையையும் பாதுகாக்க வேண்டிய அரசாங்கமும் அனுமதி அளித்து உணவு ஆதிக்கத்தை மறைமுகமாக அல்லாமல் நேரடியாகவே ஆதரிக்கிறது.
பல தனியார்ப் பள்ளிகளும் கூட உணவு ஆதிக்கத்தை மேற்கொண்டு வருகிறது. அதனை எவ்விதக் கேள்விகளும் இன்றி உணவுச் சமத்துவமின்மையை நாமும் ஏற்று கொண்டிருக்கிறோமோ என்னும் எண்ணம் அடிக்கடி வந்துதான் போகிறது.
ஒரு பக்கம் ஒருவேளை உணவு நிச்சயம் என்னும் நிலையில் குழந்தைகள், மறுபக்கம் உணவுகள் கிடைத்தாலும் ஊட்டச்சத்துகள் சரிவரக் கிடைக்காத நிலையில் குழந்தைகள். இதற்குத் தீர்வு காணவேண்டும் என்னும் நிலையில் உலகளாவிய அளவில் எந்தவொரு கொள்கைகளும் இருப்பதாகத் தெரியவில்லை.
மாறாக உணவுச் சமத்துவமின்மையையும், உணவு ஆதிக்க மனோநிலையையும் உருவாக்கிக் கொண்டே இருப்பதற்குப் பெருங்கூட்டமே பரப்புரைகள் செய்துகொண்டு இருக்கிறார்கள். அதில் vegan என்னும் நனி சைவப் பிரியர்களின் குற்றச்சாட்டுகள் மற்றும் ஆதாரமற்ற பிரச்சாரங்கள் பள்ளிகளில் கூட எல்லைகளை மீறி கொண்டிருக்கின்றன.
இங்குக் குழந்தைகளுக்கு மதிய உணவிலிருந்து சத்துணவாக மாற்றம் கண்டதே குழந்தைகளிடம் இருக்கும் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் பொருட்டு வாரத்தில் ஒருநாள் ஒருவேளை முட்டை எனத் துவங்கி இன்று வாரம் 3 நாட்கள் முட்டை என்னும் நிலையை அடைந்து, புரதங்கள் அதிகம் அடங்கிய கடலை வகைகள் வரை சத்துணவில் இடம் பெற்றிருக்கிறது. ஆனால் தொடர்ந்து நடைபெற்று வரும் vegan பிரச்சாரங்கள் மூலம் முட்டையை கூடப் புறக்கணிக்கும் போக்கும் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதன் ஒரு போக்காகத் தற்போது உலகம் முழுக்க ஆட்டிப் படைத்து கொண்டிருக்கும் கொரோனா காவிட-19 வைரசுக்குக் காரணம் எனச் சொல்லி மருத்துவர் ஒருவர் YouTube சேனல் ஒன்றில் இப்படிப் பேசிக்கொண்டு செல்கிறார். "மனிதர்கள் ஆதியில் இலைதழைகள், காய்கறிகள், பழங்கள் மட்டும் சாப்பிட்டு வந்ததாகவும், அப்போதெல்லாம் இது போன்ற வைரசுகள் மற்றும் நோய்கள் உருவாகவில்லை. என்றைக்கு மனிதர்கள் காட்டு விலங்குகளை உண்ண ஆரம்பித்தனரோ அன்று தான் நோய்கள் என்பதே உருவானதாக...”  என்று சொல்லிச் செல்கிறார்.
ஆனால் பரிணாம வளர்ச்சியின் படி இன்று மனித இனம் இவ்வளவு தூரம் தப்பிப் பிழைத்திருப்பதற்கு மிக முக்கிய காரணங்களில் சரிவிகித ஊட்டச்சத்து உணவுமுறையும் ஒரு முக்கியக் காரணி. அந்த மருத்துவர் சொல்வது சரி என்று வைத்து கொண்டாலும் எவ்விடத்தில் மனித இனம் சரிவிகித உணவுக்குள் வந்திருக்க முடியுமென்றால் ஓர் அழிவை நோக்கிய பயணத்தில் தப்பிப் பிழைக்கும் முறைகளிலிருந்துதான் விலங்குகளை உண்ணும் சரிவிகித உணவிற்குள் நுழைந்திருக்க முடியும்.
இவற்றையெல்லாம் உணராது தங்களின் உணவு ஆதிகத்தைக் கலாச்சாரம், கருணை, காலம் என்றெல்லாம் சொல்லி குழந்தைகளின் மீது திணித்துக்  கொண்டிருப்பவர்கள் சிந்திக்க வேண்டியது ஒன்றைத்தான். உங்களின் உணவு ஆதிக்க மனப்பான்மையால் ஒரு குழந்தைக்கு கிடைக்கக் கூடிய சரிவிகித ஊட்டச்சத்தைக் கிடைக்கவிடாமல் செய்து அவர்களின் உரிமையில் விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை மட்டுமே.
அதற்குப் பதிலாகச் சரிவிகித உணவு முறையை அறிமுகப்படுத்த வேண்டும். அதனுடன் சேர்த்து உணவுச் சமத்துவத்தையும் அறிமுகப்படுத்த வேண்டும். அவற்றை செய்யும் பட்சத்தில் ஊட்டச்சத்தும், உணவுச் சமத்துவமும் சரிவிகிதத்தில் அனைத்துக் குழந்தைகளுக்கும் பரவலாகும்.
-பயணங்கள் தொடரும்

- இனியன்

No comments:

Post a Comment