Friday 17 April 2020

சிங்கை தமிழவேள் கோ. சாரங்கபாணியும் இதழியலும் - அஷ்வினி செல்வராஜ்

சிங்கை தமிழவேள் கோ. சாரங்கபாணியும் இதழியலும் - அஷ்வினி செல்வராஜ்

மிழ் முரசு நாளிதழின் நிறுவனர், சிங்கையில் அனைவரும் நன்கறிந்த தமிழ்த் தலைவர், சிங்கையில் தமிழ் ஆட்சி மொழியாக இடம்பிடிக்க அயராது பாடுபட்டவர் என பல பரிமாணங்களில் போற்றிப் புகழப்படுபவர் தமிழவேள் கோ.சாரங்கபாணி. சிங்கையின் தமிழ் இதழியல் துறைக்கு அவர் ஆற்றிய பங்கு இன்றியமையாதது.
இக்கட்டுரைக்காக தகவல்களை திரட்ட முனைந்தபோது, சில புத்தகங்களை புரட்டிப் பார்க்க நேரிட்டது. அதில், அவர் 1973ல் ஆற்றிய ஓர் உரையின் சில வரிகள் பின்வருமாறு:

இது ஜே.எம்.சாலி அவர்களின் புத்தகத்திலிருந்து எடுத்த வரிகள் - சிங்கப்பூர் குடியரசு திராவிட முற்போக்குக் கழகத்தினர் நடத்திய முத்தமிழ் விழாவில் தலைமை வகித்து தமிழவேள் கோ.சாரங்கபாணி ஆற்றிய உரை. அந்த நிகழ்வே அவர் கலந்துகொண்ட இறுதிப் பொது நிகழ்வாகவும் இருந்தது.

சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் தமிழ்ப் பிரிவு ஒன்று தனியாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு தமிழ் மக்கள் சென்று புத்தகம் எடுத்துப் படிப்பது மிகவும் குறைவு. இப்படி ஆதரவு குறைவாகப் போன காரணத்தால், சென்ற ஆண்டில் அதற்கென அரசாங்கம் அளித்த 10 ஆயிரம் வெள்ளி மானியம், பயன்படுத்தாமல் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது.”

அரும்பாடுபட்டு, பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பிரிவு ஒன்றை ஏற்படுத்த ஏற்பாடு செய்தோம். ஆனால், அதைப் பயன்படுத்திக் கொள்வாரில்லை. இந்த ஆண்டு இரு மாணவர்கள் மட்டுமே தமிழ்ப்பிரிவில் படிக்க முன்வந்துள்ளனர்.”

தமிழ்-தமிழ் என்று பேசுவதும், தமிழை வளர்ப்பதற்காக விழா எடுக்கும் ஆர்வமும், அந்த ஒரு நாளோடு நின்றுவிடக்கூடாது. அந்த உணர்வும், ஊக்கமும், செயல்பூர்வமாக ஆக்கப்படவேண்டும்.”

அன்று அவர் சொன்னது, இன்றும் உள்ளது. தமிழ்ச் சமூகத்தின் நிலையில் மேம்பாடுகளும் மாற்றங்களும் ஏற்பட்டுள்ள போதிலும், அன்று நிலவிய சில அடிப்படை பிரச்சனைகளின் எதிரொலி இன்றும் இங்கு ஒலித்துக்கொண்டிருக்கின்றது. ஆதலால், தமிழ்ச் சமூகத்தின் ஆணிவேரை நன்கறிந்த, தொலைநோக்குப்பார்வையுடைய ஒரு சமூகத்தலைவராக கோ சாரங்கபாணி செயல்பட்டுள்ளார்.

1973ல் இப்பிரச்சனைகளைக் குறித்து அவர் உரையாற்றியிருக்கிறார் என்றால், சமூக முன்னேற்றம் குறித்த சிந்தனைகளையும் செயல்திட்டங்களையும் கிட்டதட்ட ஒரு இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்னராகவே அவர் இங்கு விதைத்துவிட்டார். ஐம்பது ஆண்டுகள் கழித்தோ நூறு ஆண்டுகள் கழித்தோ தமிழ்ச் சமுதாயம் இங்கு நிலைத்திருக்க, எவை அத்தியாவசியம் என்பதில் அவர் அதிக அக்கறையையும் காட்டியுள்ளார் என்பதை, அவரின் உரையிலிருந்து நமக்கு புலப்படுகின்றது.

ஆகவே, அவர் மேற்கொண்ட பல இதழியல் பணிகளுக்கு அவர் அடிப்படையில் கொண்டிருந்த இந்த சமூக அக்கறைதான் காரணம். இதன் தொடர்பாக, பால பாஸ்கரன்கோ. சாரங்கபாணியும் தமிழ் முரசும் - இன்றைய பார்வைஎனும் நூலில்தலைவர்கள் எல்லாரும் பத்திரிக்கை நடத்தியவர் அல்லர். அப்படிப் பார்க்கும்போது, முரசு எனும் ஊடகம் இல்லாமல் கோ.சா முனைப்பாக செயல்பட்டிருப்பாராஎன்ற கேள்வியை வாசகர்களுக்கு முன்வைக்கிறார். தலைவர்கள் அனைவரும் பத்திரிக்கை நடத்தியவர்கள் அல்லர் என்பது உண்மை.

எனினும், தமிழவேள் அவர்களின் பின்னணியை ஆராய்ந்தால் அவர் சிங்கையில் தொடக்கக்காலத்தில் கணக்காளராக பணிபுரிந்தவர். பல தலைவர்களைப் போல, பொதுக்கூட்டங்களிலும் சபைகளிலும் பேசுவதன் வாயிலாக மட்டுமே அவர் தனது சமூக அக்கறையை வெளிப்படுத்தியிருக்கக்கூடும். இருப்பினும் அவர் விரும்பி தொடர்ந்து ஈடுபட்டு வந்தது இதழியலில்தான். நாம் அனைவரும் பரவலாக அறிந்த நாளிதழ் தமிழ் முரசாக இருந்தாலும், அவர் பற்பல நாளிதழ்களுக்கு ஆசிரியராகவும் துணையாசிரியராகவும் பணியாற்றி பல தலையங்கங்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். மிகவும் குறிப்பிடதக்க வகையில், முன்னேற்றம் எனும் இதழின் துணையாசிரியராகவும் அவர் ஒரு காலகட்டத்தில் பணியாற்றி வந்தார். அக்காலத்தில் தந்தை பெரியார் அவர்கள் இங்கு வருகை புரிந்தபோது, ‘நான் இந்நாட்டிற்கு வந்து போனதற்கு ஒரு ஞாபகம் இருக்கவேண்டுமானால் முன்னேற்றம் சிரஞ்சீவியாய் வாழவேண்டும்என்று உருக்கமாகவும் அழுத்தமாகவும் அந்த பத்திரிகைப் பற்றி கூறியுள்ளார். அதுமட்டுமல்ல, பெரியார் மலேயாவிற்கு வருவதற்கான ஏற்பாடுகளுக்கு, அக்காலத்திலேயே 6000 டாலர்கள் (பதினாயிரம் ரூபாய்கள்) செலவு செய்து அவர் இங்கு வருவதை உறுதிசெய்ததில் பெரும்பங்கு கோ. சாரங்கபாணிக்கு உண்டு.

இதழியலை அவர் அதிகம் பயன்படுத்தியது, எழுத்து வழி, கல்வி வழி தமிழ்ச் சமூகம் மேம்பட வேண்டும் என்ற ஆசையை பிரதிபலிக்கின்றது. எழுத்தறிவின் பலத்தை அதிகமாக நம்பியவர் அவர். இந்த நம்பிக்கை அவரது பல தலையங்களின் வழியாகவும் நமக்கு வெளிப்படுகின்றது. 1940களில் அவர் எழுதிய தலையங்களைப் படிக்கும்போது அவருடைய நோக்கத்தை நம்மால் புரிந்துகொள்ள இயலும்.

தலையங்கம்: தமிழ் முரசின் கொள்கை அறிவியக்கத்தை அடிப்படையாய்க் கொண்டுள்ளதால் பழைய பழக்க வழக்கங்களில் பழக்கப்பட்டிருப்பவர்களுக்கு தமிழ் முரசின் கொள்கையை ஆதரிப்பதற்கு கூச்சமாக இருக்கலாம்)

அறிவு வளர்ச்சிக்கு பத்திரிகை பெருஞ்சாதனம் என்பது நமது மக்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் பசுமரத்தாணிபோற் பதியவேண்டும்...6 லட்சத்திற்கதிகமான தமிழர் வாழும் இந்நாட்டுப் பத்திரிகைகள் இன்னும் பல ஆயிரக்கணக்கில் வெளிவரவில்லை என்றால் தமிழ்ச் சமூகம் எப்படி முன்னேற முடியும்

கோ. சாரங்கபாணி அவர்களின் காலத்தில் சமூக இதழியலானது, ஒரு சமூகத்தினரின் கண்ணோட்டங்களை, வழக்கங்களை, நம்பிக்கைகளை, அடையாளத்தை பெருமளவில் மாற்றக்கூடிய தன்மையைக் கொண்டிருந்தது. இதை நன்கு அவர் அறிந்திருந்ததால்தான், தன்னுடைய இதழியல் பணிகள் யாவும் சிங்கைத் தமிழ்ச் சமூகத்தின் தேவைகள் எவையோ அவற்றை நிறைவேற்றும் முதன்மை நோக்கத்தையே கொண்டிருப்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

கோ.சா அவர்களின் இதழியல் பணிகளை ஆராய நாம் அக்காலத்துத் தமிழ்ச் சமுதாயத்தின் நிலமையை சற்று அலசி ஆராயவேண்டும். தமிழ்நாட்டிலிருந்து குடியேறிய முதல் தலைமுறைத் தமிழர்கள் இங்கு இருந்தனர். குறிப்பாக 1965க்கு முன்னர் தமிழர்கள் அனைவரும் மலாயா நாட்டு தமிழர்கள் என்று பொதுப்படையான ஒரு பெயரின் கீழ் அழைக்கப்பட்டனர். புலம்பெயர்ந்த சமூகங்களில் தமிழரின் பங்கு பெரிதளவில் இருந்தாலும், கடல் கடந்து அக்காலத்தில் வாழ்ந்த தமிழர்களின் நிலை பிரதிநிதித்துவமற்றுதான் பெரும்பாலும் இருந்தது. ஆதலால், தமிழவேள் ஐயா அவர்களின் இலக்கை இரண்டு விதமாக நான் பார்க்கிறேன். முதலாவது, சமூகத்தின் உள்கட்டமைப்பை மாற்றியமைப்பது. இரண்டாவது, ஒரு சமூகமாக வளர்ந்து மற்ற சமூகத்தினருக்கு இணையான ஒரு நிலையில் நம்மை முன்நிறுத்துவது.

ஒரு சமூகத்தின் உள்கட்டமைப்பை மாற்றியமைத்தால் மட்டும்தான், அந்த சமூகத்தினால் முன்னேற இயலும். தமிழ்ச் சமுதாயத்தில் மாற்றங்களைக் கொண்டுவர, தமிழர் சீர்திருத்த சங்கத்தின் வழி கோ.சாரங்கபாணி அயராது பாடுபட்டார். ஆனால், அவரது உழைப்பிற்கு பக்கபலமாக நின்றது இதழியல்துறை. அதுவும் அக்காலத்தில் தமிழர் சீர்திருத்த சங்கத்திற்கெனவே தொடங்கப்பட்ட ஒரு இதழ்தான் இன்று நம் கைகளில் தவழும் தமிழ் முரசு.  

பெரியாரின் வருகையின் தாக்கத்தினால் சமூகத்தில் சமத்துவத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கபட்ட தமிழர் சீர்திருத்த சங்கம் 1932ல் அதிகாரப்பூர்வமாக பதிவுசெய்யப்பட்டது. பெரியாரின் கொள்கைகளை, குறிப்பாக சிங்கப்பூர்ச் சூழலுக்கு ஏற்ற அவரது கொள்கைகளை இதழியல் மூலமாக பரப்பி செயல்படுத்துவதில், தமிழ் முரசு முதன்மை பங்கு வகித்தது.

தமிழர் சீர்திருத்த சங்கம் தொடங்கப்பட்டபோது, அதற்கு நான்கு முக்கியமான நோக்கங்கள் இருந்தன. தமிழர் ஆண் பெண் இருபாலரின் நன்மையை வளர்த்தல், பிறப்பின்வழி ஏற்பட்ட பாகுபாடுகளைப் போக்கி சமத்துவத்தை ஏற்படுத்துதல், தமிழ் பெண்களின் சமூக நிலையை உயர்த்தி அவர்கள் சமத்துவ உரிமைகளையும் சுதந்திரங்களையும் அடையச் செய்தல், மற்றும் தமிழர்களிடையே சிக்கனத்தையும் மதுவிலக்கையும் போதித்தல்.

இந்த நான்கு நோக்கங்களுமே நிறைவேற இதழியலின் துணைகொண்டு கோ.சாரங்கபாணி அயராது பாடுபட்டு வந்த போதிலும், அவர் எழுதிய பல தலையங்கங்களை படித்ததன் வழி, அதிகமாக அவர் போராடி வாதிட்டது சாதி ஒழிப்பிற்காகதான் என்பதை உணரமுடிகிறது. ஏனெனில், பெண் உரிமை குறித்தும், மதுவிலக்கு குறித்தும் பொதுவாக அரசாங்கத்தினால் சட்டங்களை இயற்றி அமல்படுத்தமுடியும். ஆனால், சாதிப் பிரிவினைகள் அத்தகையப்பட்டதல்ல. அவை தனிப்பட்ட ஒரு சமூகத்தில் ஆழ வேருன்றிவிட்ட வழக்கமாக இருந்தது. அந்த வழக்கத்தின்வழி விளைபவற்றை மாற்ற இதழியலின் வழி சமத்துவத்தைத் தொடர்ந்து எடுத்துக்கூறவேண்டும் என்பதை அவர் நன்கறிந்திருந்தார்.

சிங்கையில் சாதி வேறுபாடுகள் இருந்ததா என்று இன்றைய தலைமுறையினர் வியப்புடன் எண்ணலாம்; ஆனால் 1930களில் ஆதி திராவிடர்கள் கோவில்களுக்குள் அனுமதிக்காத வழக்கம் இருந்துள்ளது. தமிழ்நாட்டில் பெரியாரின் சுயமரியாதையின் இயக்கம் சாதி வேறுபாடுகளைக் களைய முனைந்ததைப் போல, இங்கும் அத்தகைய ஒரு இயக்கம் எழவேண்டியிருந்தது. புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தில் அனைவரும் சமமே என்பதை வலியுறுத்தும் வண்ணம் கோ. சாரங்கபாணி பல தலையங்கங்களை தமிழ்முரசில் எழுதி வெளியிட்டார். அவற்றில் இடம்பெற்ற கருத்துகள் அனைத்துமே வெளிப்படையாகவே சாதி எனும் அமைப்பை உடைத்து தள்ளுவதாக இருந்தன.

பால பாஸ்கரன் இதைக் குறித்து பதிப்பித்த கருத்தொன்று இத்தருணத்தில் குறிப்பிடத்தக்கது. தமிழவேள் இத்தகைய தலையங்கங்களை எழுதிய காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்ததைப் போல சாதிப் பிரிவினைகள் இங்கில்லை என்று கூறியுள்ளார்.

எனினும், உழைக்கும் வர்க்கத்தை பெரும்பான்மையினராக கொண்ட அன்றைய தமிழ்ச் சமூகத்தின் குரலாக அவர் ஒலிக்க முனைந்தார். அதுவே பிற்காலத்தில் அவருக்கு மிகப்பெரிய தொண்டர் கூட்டத்தை உருவாக்கிக்கொடுத்தது. தமிழ் முரசு யாருக்கான குரல் என்பதைக் குறித்து எழுதும்போது இத்தகைய நோக்கத்தை வெளிப்படையாகவே ஐயா கோ.சாரங்கபாணி சில இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.

1940ஆம் ஆண்டு டிசம்பர் இரண்டாம் தேதி வெளியான தலையங்கத்தில்பாட்டாளி மக்களின் குறை தீர்க்க தமிழ் முரசு முன்னணியில் நிற்கும்என்று பிரசுரித்தவர் அவர்.

இவற்றைத் தவிர்த்து, தமிழர் சீர்திருத்த சங்கம் நடத்தி வந்த பல சீர்திருத்த திருமணங்களின் அழைப்பிதழ்களும், அறிக்கைகளும் தமிழ் முரசில் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டன. குறிப்பாக, நஷ்டத்தில் ஓடக்கூடிய பல சாத்தியங்கள் இருந்த காலகட்டத்திலும் அவர் தனது பத்திரிக்கைத் தர்மத்தை கைவிடவில்லை. நஷ்டங்களைத் தவிர்க்க விளம்பரங்கள் தேவை என்று 1935ல் முடிவான போதும், அதே வருடத்தில் செப்டெம்பர் 14ஆம் தேதியன்றுவிளம்பரங்கள் அதிகமாக வருவதால் செய்திகள் குறைந்துவிட்டன. இது வருத்தமளிப்பதால் அடுத்த வாரம் முதற்கொண்டு முரசு 16 பக்கங்களாக வரும்என்று அவர் தனது தலையங்கத்திலேயே வெளிப்படையாக குறிப்பிட்டிருந்தார். மேலும், தமிழ் இதழியல்துறையில் பல நாளிதழ்கள் மறந்தும் மறைந்தும் போன காலத்தில், வெளியீடு ஒன்றுக்கு 6000 பிரதிகள் வரை தமிழ் முரசு 1930களிலேயே பிரசுரமானது. இதில் ஆச்சரியத்தை அளிப்பது 6000 பிரதிகள் என்ற எண்ணிக்கை அல்ல, மாறாக முனிசிபல் ஊழியர்களின் வேலை நிறுத்தம் நடைபெற்றபோதும் தமிழ் முரசு அவர்களுக்கு ஆதரவாக எழுதி அவற்றை விற்றதுதான். தமிழ் முரசுக்கு நட்டம் ஏற்பட்டாலும் பொது மக்களுக்கு அது எப்போதும் பயனுள்ளதாய் அமையவேண்டும் என்ற அவருடைய எண்ணமே நட்டத்திலும் தொடர்ந்து முனைப்புடன் இதழியலைச் சார்ந்து செயல்பட ஊக்குவித்தது.

சமூகத்தின் குரலாக பல இடங்களில் தட்டிக்கேட்டல்

ஒரு பத்திரிக்கை என்பது சமூகத்தின் தேவைகளை பிரதிபலிப்பதோடு, அதன் குரலாக ஒலிக்கவேண்டியது என்பதில் கோ.சா திண்ணமாக இருந்ததால், பல இடங்களில் தமிழ்ச் சமூகத்திற்கு நேர்மாறான விளைவுகள் ஏற்படும் முன்னர் அதை எதிர்த்து தட்டிக்கேட்கும் பணியையும் செய்தார். அந்த எதிர்ப்பை வெற்றிகரமாக முன்னெடுக்க அவருக்கு இதழியல் எனும் கருவி பெரும் துணைபுரிந்தது.

1935ஆம் ஆண்டு, 26ஆம் தேதி டிசம்பர் அன்றுஇந்நாட்டில் இந்தியர்கள் குடியேறுவதைத் தடுத்துவிட வேண்டுமென்ற எண்ணம் இவ்வூரின் ஸ்டிரைட்ஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு தினந்தோறும் வளர்ந்து வருகிறதுஎன்று வாதிடும் தமிழவேள் அவர்கள், “இந்திய தொழிலாளிகள் மலாய் நாட்டுக்கு இன்றியமையாதவர்கள் தானாம், ஆனால் நடுத்தர நிலையிலுள்ள கூட்டத்தினரின் குடியேற்றம் தடுக்கப்பட வேண்டுமாம்என்றும் தனது தலையங்கத்தில் எழுதினார். குறிப்பாக, உலகமெல்லாம் வேலையற்ற திண்டாட்டத்தில் அவதியுறும்போது, மலாய்நாட்டில் மட்டும் நிலமை எவ்வாறு விதிவிலக்காக இருக்கும் என்ற கேள்வியை முன்வைக்கிறார். அத்துடன், இந்தியர்கள் இங்கு குடியேறுவதன் நன்மைகளைப் பற்றியும் விளக்கி இந்திய சமூகத்தினரை, குறிப்பாக சிறுபான்மை சமூகத்தினரை தற்காத்து பேசியுள்ளார்.

இருமொழிக்கொள்கையின் பிரதிபலிப்பு

சிங்கப்பூரில் தனித்துவம் வாய்ந்த இருமொழிக்கொள்கை, 1966ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்டது. ஆனால், இருமொழிகளிலும் தமிழர்கள் செய்திகளை வாசிக்க வேண்டும் என்பதிலும், இருமொழிப் பயன்பாடு சமூக வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்பதிலும், கோ.சா திண்ணமாக இருந்தார். இவற்றை பிரதிபலிக்கும் வண்ணம், “Indian Daily Mail” என்ற ஆங்கில நாளிதழை நடத்தி வந்தார். ஆங்கில நாளிதழில் எழுதிய தலையங்கங்களை அவர் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் வழக்கமும் இருந்துவந்தது. இருமொழிக் கொள்கை சிங்கப்பூரின் கல்வி அமைப்பிற்குள் சட்டமாக கொண்டுவரப்படுவதற்கு முன்னரே, அதன் முக்கியத்துவத்தை அவர் அறிந்து வைத்திருந்தார்.

குறிப்பாக, 1941ஆம் ஆண்டில், தமிழ் முரசு ஏழாண்டு இதழியல் பயணத்தைப் பற்றிய தன்னுடைய தலையங்கத்தில், “தமிழர் நலனைக் காக்க இந்நாட்டில் ஆங்கில மொழியில் ஒரு பத்திரிகை எவ்வளவு அவசியமென்பதை விஷயம் அறிந்தவர்களுக்கு விவரித்துக் கூற தேவையில்லை. தமிழர் நலன்களை அரசியலார்களும், மற்ற சமூகத்தார்களும் எளிதில் அறிந்துகொள்ள செய்வதற்கு, ஆங்கில மொழி பத்திரிகை ஓர் இன்றியமையாத சாதனம்,” என்பதைத் தெள்ளத்தெளிவாக தெரிவித்து இருந்தார். அரசியல் மொழியாகத் தமிழ் இருக்கலாம், எனினும் அம்மொழியைப் பேசுபவர்கள் எதிர்நோக்கும் சவால்களும் சிக்கல்களும் மற்றவரையும் ஆணித்தரமாக சென்றடைய வேண்டுமெனில் அதற்கு ஆங்கிலம் அவசியம், குறிப்பாக ஆங்கில இதழியல் மிகவும் அவசியம் என்பதை அவர் உணர்ந்தவர். இங்கும் பிறமொழியிலும் கோ.சா அவர்கள் இதழியலைக் கொண்டே தமிழ்ச் சமூகத்தின் குமுறல்களை வெளிக்கொணர்ந்துள்ளார்.

ஆனால், ஆங்கில நாளிதழை நடத்தியதால் அவர் தமிழ் மொழியையோ சமுதாயத்தையோ புறக்கணிக்கவில்லை. இரண்டிலும் புலமைப் பெற்றிருந்த காரணத்தினால் தான் தமிழ் சமுதாயத்தின் பிரதிநிதியாக அவரால் சிறப்பாக இயங்க முடிந்தது.

தமிழர் திருநாள்

அத்தகைய ஒரு சிறந்த தமிழ்த் தலைவராக இருந்ததால்தான், 1950களில் தமிழர் திருநாள் தொடங்கலாம் என்ற எண்ணத்தை அவர் தனது தலையங்கத்தில் எழுதி வெளியிட்டபோது, மறுநாளே அவ்விழாவை நடத்துவதற்கான நன்கொடைகள் வந்து குவிந்தன. இதன் மூலம் 1930களில் தொடங்கப்பட்ட தமிழ் முரசின் வாசகர் தளம் எவ்வளவு பெரியது, எத்தகைய விரிவானது என்பதை நம்மால் நன்கு அறிந்துகொள்ள முடிகிறது. கோ.சா இதழியல் மூலமான தமிழ்ச்சமுதாயத்துடனான தனது தொடர்பை இருவழி தொடர்பாக அமைத்திருந்தார். இது அவருடைய இதழியலுக்கு கிடைத்த வெற்றியாகும். சிங்கையின் தமிழ்ச் சமுதாயத்திற்கு பிரதிநிதித்துவம் வேண்டுமென்றால், அது மொழியின் மூலமாக அமைந்தாலே வலுவாக நிலைத்து நிற்கும் என்பதை மீண்டும் மீண்டும் அவர் வலியுறுத்தி வந்த காரணத்தினால்தான், இதழியலின் வழி ஐயா கோ.சாரங்கபாணி அவர்கள் தமிழ் மக்களிடையே ஏற்படுத்திய தாக்கமும் இதில் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. தமிழர் திருநாளின் தொடக்கம், தமிழ்ச் சமூகத்தை ஒருங்கிணைப்பதற்கு எவ்வளவு இன்றியமையாததாக அமைந்ததோ, அதே அளவிற்கு பிற சமுதாயங்களுக்கு இணையான ஒற்றுமையுடன் நம்மை முன்நிறுத்தும் வாய்ப்பாக நமக்கு அமைந்தது.

ஒன்றுபட்ட தமிழ்ச் சமுதாயமாக நம்மை முன்நிறுத்திக்கொள்ள இயன்றதால் மட்டுமே, தமிழ்மொழி இன்று நமக்கு ஆட்சிமொழியாக உள்ளது. ஏனெனில், தமிழர் திருநாளை வரவேற்று நமது முன்னாள் பிரதமர், அமரர் திரு லீ குவான் யூ அன்று தமிழைக் கட்டிக்காப்போம் என்றளித்த வாக்குதான், 1959ல் மக்கள் செயல் கட்சி பதவியேற்றபோது, தமிழ் ஆட்சிமொழியாக இடம்பெற உறுதுணையாக இருந்தது. ஆகவே, தமிழர் திருநாள் என்ற ஒன்று இல்லாமல் போயிருந்தால், இன்று நமது நிலை கேள்விக்குறியாக இருந்திருக்கும்.

இதனைக் குறித்து அவர் எழுதிய தலையங்கத்தில்,

தமிழர்கள் கொண்டாடும் விழாக்கள் பல. தமிழர் சமுதாயத்தின் கட்டுக்கோப்பை விளக்கும் விழா எது என்ற கேள்விக்கு விடை அறிதல் முடியாத காரியம். மலாயா தமிழர் கட்டுக்கோப்பை நிலைநாட்டும் விழா ஒன்றை நிர்ணயிக்க வேண்டுமென்பது பலருடைய நீண்ட நாள் அவா”  என்று கூறுவதோடு,

தமிழர்கள் தனி உரிமையோ, தனிச்சலுகையோ இத்திருவிழாவின் மூலம் கோரவில்லை. தமிழர்களின் அந்தஸ்து இந்திய சமூக அமைப்பில் உரிய இடத்தைப் பெற்றாக வேண்டும். உதாசீனம் செய்யப்படக்கூடாது என்பதே லட்சியம்என்றும் இயம்புகிறார்.

மலாய பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை - தமிழ் எங்கள் உயிர் இயக்கம்

இந்திய சமூக அமைப்பில் வேண்டிய இடத்தை பெறவேண்டுமெனில், ஆட்சி மொழியாக மட்டும் தமிழ் இருப்பதோடு நில்லாமல், கல்வி நிலையங்களிலும் தமிழானது தழைத்தோங்க வேண்டும் என்பதை அறிந்தவர் தமிழவேள் கோ.சா ஐயா. கல்வி நிலையத்தில் தமிழ் வளர்ந்தால், தமிழ் மாணவர்களும் வளருவார்கள் என்பதை உணர்ந்ததோடு, அதற்கான வாய்ப்புகளை நாம்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருந்தார்.

இதழியலைப் பயன்படுத்தி கோ.சா தமிழ்ச் சமூகத்துடனான இருவழித் தொடர்பை ஏற்கனவே நிலைநாட்டிவிட்டிருந்ததால், மலாய பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வியல் துறையில் முதன்மொழியாக சமஸ்கிருதமே இருக்கவேண்டும் என்ற பரிந்துரையை எதிர்த்து, தனது தமிழ் முரசு தலையங்களில் குரல் கொடுத்தார். ஒரு கை தட்டினால் ஓசை எழாது. ஆனால், அன்று அவருக்கு துணையாக பல கைகள் தட்டின. ஏனெனில் அந்த பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட காலக்கட்டத்தில், இங்கு வாழ்ந்த இந்தியர்களில் எண்பது விழுக்காட்டினர் தமிழர்களாக இருந்தனர். தமிழவேளுக்கு அன்றிருந்த இதழியல் எனும் கருவி, தனிமனித எதிர்ப்பை சமூக எதிர்ப்பாக மாற்ற உதவியது, தமிழும் பல்கலைக்கழகத்தில் வளர்ந்தது.

மாணவர் மணி மன்றம் - அடுத்த தலைமுறை எழுத்தாளர்களை உருவாக்குதல்

இவ்வாறு பல சமுதாய மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு, ஐயா கோ.சா அவர்களின் இதழியல் பணி பலவாறாக துணைநின்றுள்ளது. தேசிய சேவைக்கு பதிவுசெய்வது, சிங்கையில் குடியுரிமையைப் பெறுவது, என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு, ஒரு சமூகத் தலைவராக அடுத்த தலைமுறையினரிடையே மொழிப்பற்றும் புழக்கமும் நீடித்தால்தான் சமுதாயம் வருங்காலத்தில் தன்னுடைய அடையாளத்தைக் கட்டிக்காக்கும் என்ற உணர்ச்சியின் வெளிப்பாடாக தமிழ் முரசிலேயே மலர்ந்ததுதான், மாணவர் மணி மன்றம்.

செய்திகளைத் தொகுத்து வழங்கி சமூகப் பிரச்சனைகளுக்கு கருத்துரைப்பதோடு தமிழ் முரசும் கோ.சா அவர்களும் நின்றுவிடவில்லை. இதழியலின் பிரசுரிக்கும் ஆற்றலை பயன்படுத்தி, சமூகத்திற்கு மட்டுமல்ல, மொழிக்கும் இலக்கியத்திற்கும் பெரும் தொண்டாற்றினார். அக்காலத்தில் கவிதை தொகுப்புகளும் சிறுகதை நூல்களும் விலையுயர்ந்ததாக இருந்தனவா என்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை. ஆனால், இலக்கிய படைப்புகளை முரசில் பிரசுரிப்பதன் மூலம், குறைவான விலையில் அவை அனைவரையும் சென்றடைந்தன என்பது உறுதி. இவ்வாறு வெளிவந்த இலக்கிய படைப்புகளைப் பார்த்து ஊக்கமடைந்து உந்துதல் பெற்று பலர் எழுத்தாளர்களாக வளர்ந்தும் இருப்பர் என்பதையும் நம்மால் உறுதியாக கூற இயலும்.

பல எழுத்தாளர்களின் படைப்புகளை உள்ளிட்ட ஆண்டு மலர்களை 1940ஆம் ஆண்டு தொடங்கி கோ.சா வெளியிட்டு வந்தார். அதுமட்டுமல்லாமல், படைப்பாளர்களை ஊக்கப்படுத்தும் வண்ணம்எழுத்தாளர் வரிசைமற்றும்எழுத்துலகில் என்னைப் பற்றிபோன்ற அனுபவப் பகிர்வு அங்கங்களையும் அவர் சேர்த்து வெளியிட்டார். மேலும், சிங்கையின் தமிழ் நாடகத்துறையின் முன்னோடியான திரு வரதன் அவர்கள், கோ.சா ஐயா குறித்து கூறும்போது, “எந்த நாடகக்குழு உதவிக் கேட்டாலும் செய்வார். தமிழ் முரசில் அவரே இலவசமாக விளம்பரம் செய்வார்,” என்பதையும் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.

தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களின் தமிழ்ப்பணிக்கும், சமுதாய பணிக்கும் இதழியலானது பல வகைகளில் அவருக்கு துணைநின்றுள்ளது. சுருங்கக் கூறினால், தமிழவேள் சிங்கைத் தமிழர்களுக்காக கொண்ட முன்னேற்ற கனவை இதழியலானது முரசு கொட்டி நிறைவேற்றியது, இன்னும் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது, வருங்காலத்திலும் நிறைவேற்றும்.

-    ஷ்வினி செல்வராஜ்
No comments:

Post a Comment