Friday 17 April 2020

இராசேந்திரப்பட்டிணம் ஊராட்சி மன்ற தலைவர் கவிஞர். சுரேஷ் அவர்களுடன் ஒரு பேட்டி

இராசேந்திரப்பட்டிணம் ஊராட்சி மன்ற தலைவர் கவிஞர். சுரேஷ் அவர்களுடன் ஒரு பேட்டி

1) உங்களைப்பற்றி கூறுங்கள்? அரசியல் ஆர்வம் எப்படி ஏற்பட்டது?

எனது பெயர் சுரேஷ் நான் அண்ணாமலை பல்கலை கழகத்தில் பொறியியல் படித்துள்ளேன் தற்பொழுது கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் இராசேந்திரப்பட்டிணம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளேன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளராகவும் செயல்பட்டு வருகின்றேன். சடையன்பெயரன் என்ற புனைபெயரில் பெத்தவங்க, மீண்டும் சந்திப்போமா, போராளிகளைப் போற்றுவோம் என கவிதை தொகுப்புகளை எழுதியுள்ளேன் எனது பெற்றோர் திரு.திருசங்கு - திரு.பாஞ்சாலை ஆவார்கள் எனது மனைவி திருமதி.எழில்மதி ஆவார். நான் சிறுவனாக இருக்கின்றபோது தொல்.திருமாவளவன் அவர்களைப்பற்றி கேள்விபட்டிருந்தாலும், பத்தாம் வகுப்பு கோடை விடுமுறையின்போது ஓவியர் வீரா என்கின்ற நண்பரின்மூலம் தொல்.திருமாவளவன் அவர்கள் எழுதிய அடங்கமறு என்ற புத்தகத்தை படிக்கின்ற வாய்ப்பை பெற்றேன். அந்த புத்தகம்தான் எனக்குள் ஒரு போராட்ட குணத்தை விதைத்தது அதுதான் எனக்குள் அரசியல் ஆர்வம் எழுவதற்கு காரணமகவும் அமைந்து

2) நீங்கள் ஒரு கவிஞர், நல்ல பேச்சாளர். உங்களுக்கு தமிழார்வம், எழுத்து பேச்சாற்றல் வந்தது எப்படி?

நான் பள்ளியில் படிக்கின்றபோதே தமிழ் பாடத்தில் ஆர்வமாக இருப்பேன் எப்போதும் தமிழ் பாடத்தில் நான்தான் முதல் மதிப்பெண் பெறுவேன் பள்ளி இறுதிவகுப்பு முடித்துவிட்டு இளங்கலை தமிழ் படிப்பதற்குத்தான் விரும்பினேன் பெற்றோர்கள் ஆசைபட்டதால் பொறியியல் படிக்க நேர்ந்துவிட்டது. ஏழாம் வகுப்பு படிக்கும்போது இலக்கிய மன்ற கூட்டத்தில் பேசுகின்ற வாய்ப்பு கிடைத்தது அதில் முதலாவதாய் தேர்வு செய்யப்பட்டேன். எனது பேச்சு சிறப்பாக இருந்ததால் பள்ளி இறைவணக்க கூட்டத்தில் பேசவைத்தார்கள் அதுதான் என்னுடைய பேச்சாற்றலுக்கு அடிப்படையாய் அமைந்தது. அதுபோல ஏழாம் வகுப்பு படிக்கின்றபோது எனது புத்தகத்தில் தாய் என்ற தலைப்பில் நான் நான்கு வரிகள் எழுதிவைத்திருந்தேன் அதனை தற்செயலாக படித்துவிட்ட எனது ஆசிரியர் என்னை பாராட்டியதோடு ஒரு கவிதையை எப்படி எழுதவேண்டும் என்றும் கற்பித்து ஊக்கப்படுத்தினார். அதுதான் மூன்று கவிதை தொகுப்புகள் எழுதும் அளவிற்கு என்னை வளர்த்துள்ளது.

3) தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தின் பணியை எப்படிப்பார்க்கிறீர்கள்?

திராவிட இயக்கத்தின் பணிகள் மட்டும் இல்லாவிட்டால் தமிழகம் ஒரு முற்போக்கான மாநிலமாக இருந்திருக்க வாய்ப்பே இல்லை. திராவிட இயக்கத்தின் தாக்கம் இன்றைக்கும் இந்தியா முழுவதும் எதிரொளித்து கொண்டு இருக்கின்றது. இங்கு அய்யோத்திதாசர் போன்ற தலைவர்கள் சமூகநீதியை பற்றியும், சமத்துவத்தை பற்றியும் திராவிட இயக்கங்களுக்கு முன்பே பேசியிருந்தாலும் திராவிட இயக்கங்களின் செயல்பாடுகளுக்கு பிறகுதான் வெகுமக்களிடையே கருத்தியல் கலந்துரையாடல்கள் நிகழ்ந்து பழைமைவாத கருத்துக்களின் இறுக்கம் தகர்ந்தது. சுயமரியாதை சமத்துவம்  ஆகிய மான்புகளை நிலைநிருத்திட திராவிட இயக்கங்களை நாம் பாதுகாக்க வேண்டும்.

4) அண்ணல் அம்பேத்கரின் இன்றைய தேவை குறித்து

புரட்சியாளர் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் மனிதகுலம் வாழும்வரைக்கும் தேவைபடுவார்கள். மக்களின் சகோதரத்துவத்திற்காகவும், சமத்துவத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் உழைத்த தலைவர்கள் இவர்கள். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் தொலைநோக்கு கருத்துக்கள்தான் இன்றைய நவீன இந்தியாவையும் இயக்கிக்கொண்டு இருக்கின்றது. ஏற்றத்தாழ்வுகளற்ற சமத்துவ சமுதாயம் உருவாகும் வரைக்கும்
இவர்களின் தேவை இருக்கும். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுடைய கருத்துக்கள்தான் மதவாத சக்திகளின் கொட்டத்தினை அடக்குகின்ற அருமருந்தாக உள்ளது மேலும் மதவாத சக்திகளின் பழைமைவாத திணிப்புகளுக்கு அரசியலமைப்பு சட்டம்தான் தடையாக உள்ளது எனவே அதனை மாற்றவேண்டுமென சனாதன சக்திகள் விரும்புகின்றார்கள் அதனால் சனநாயக சக்திகள் அனைவரும் ஓரணியில் திரண்டு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தினை காப்பாற்றுவதற்காக போராடவேண்டும்

5) முழு நேர அரசியல்வாதியாக மாற தூண்டியது எது?

நான் முழுநேர அரசியல்வாதியாக மாறவேண்டுமென திட்டமிட்டு செயல்படவில்லை. சிங்கப்பூரிலிருந்து பணியினை துறந்துவிட்டு வந்தவுடன் இயக்க வேலைகளில் தீவிரமாக செயல்பட்டேன் அதைத்தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் வந்தது எமது தலைவர் எழிச்சி தமிழரின் வெற்றிக்காக ஊர்கள்தோறும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டேன் அப்போதுதான் எளிய மக்களின் வாழ்வுக்கும் அரசு அதிகாரத்திற்கும் தொடர்பில்லாமல் நீண்ட இடைவெளி இருப்பதை உணர்ந்தேன் இதனை மாற்றவேண்டுமென மக்கள் பிரச்சனைகளுக்காக அரசு அதிகாரிகளை சந்திக்க ஆரம்பித்தேன் அது முழுநேர அரசியல்வாதியாக என்னை மாற்றிவிட்டது. மக்கள் நேர்மையான அதிகாரிகளை தேடி ஏங்குவதைப்போல நேர்மையான அரசியல்வாதிகளை தேடியும் ஏங்குகின்றார்கள் எனவே நல்ல தலைவர்கள் உருவாக வேண்டிய தேவை இருக்கின்றது.6) உங்களின் தேர்தல் வெற்றியை எப்படிப்பார்க்கிறீர்கள்?

பணம், மது பாட்டில்கள், அன்பளிப்புகள் என்று மக்களின் வாக்குகளை மலிவுவிலைக்கு எளிதாக வாங்கிவிட முடியாது என்றும் மக்கள் நேர்மையானவர்களையும் திறமையானவர்களையும் தேர்வுசெய்வதற்கு கூர்மையான அரசியல் தெளிவோடு இருக்கின்றார்கள் என்றும்தான் என்னுடைய தேர்தல் வெற்றியின்மூலம் நான் தெரிந்துகொண்டேன். ஏனென்றால் எனக்கு ஊருக்குள் பெரிய பின்புலம் எதுவும் இல்லை சொந்த பந்தங்கள் அதிகமில்லை என்னுடைய பெற்றோர்கள் அன்றாட கூலிகள் என்பதால் அவர்களின் அறிமுகமும் ஊருக்குள் எனக்கு உதவிடவில்லை இதையும் தாண்டி என்னை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சார்ந்தவன் அவனுக்கு வாக்களிக்காதீர்கள் என்று தொடர்ந்து மாற்று சமுதாய மக்களிடம் பிரச்சாரம் செய்தார்கள் ஆனால் மக்களின் முடிவு மிகத்தெளிவாக இருந்தது 106 வாக்குகள் வித்தியாசத்தில் கொள்கையையும் செயல்திட்டங்களையும் மட்டுமே முன்வைத்து வாக்குகேட்ட என்னை வெற்றிபெற செய்தார்கள்.

7) வருங்கால திட்டங்கள் என்ன?

இராசேந்திரப்பட்டிணம் ஊராட்சியை அனைத்து விதத்திலும் தன்னிறைவுபெற்ற ஊராட்சியாக உருவாக்க வேண்டும்.
மக்களுக்கான அடிப்படை வசதிகளையும் பாதுகாப்பான வாழ்வினையும் ஊராட்சியின் மூலமாக உறுதிசெய்திட வேண்டும். எதிர்காலத்திற்கு தேவையான அரசு கட்டமைப்புகளையும் மற்றும் அரசு செயல்திட்டங்களையும் எமது ஊராட்சிக்கு கொண்டுவர வேண்டும் இதுதான் எமது வருங்கால திட்டங்களாக உள்ளது இன்றைய சூழலில் இளைஞர்களின் வேலைவாய்ப்பு மிகமுக்கியமாகும் எனவே ஊராட்சியின் ஏற்பாட்டில் அரசு தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தி அரசு ஊழியர்களை உருவாக்குவதற்கும் நாம் திட்டமிட்டுவருகின்றோம் 

8) இன்றைய அரசியல் சூழலில் நாம் செய்ய வேண்டியது என்ன?

இன்றைய அரசியல் சூழல் மிகவும் ஆபத்தாக உள்ளது மதவாத கருத்துக்களும் மொழிவாத கருத்துக்களும் இனவாத கருத்துக்களும் தீவிரமடைவதோடு தேர்தல் வெற்றிகளையும் பெறுமளவு வளர்ந்து வருகின்றது மதச்சார்பற்ற என்ற வார்த்தையை அரசியலமைப்பு சட்டத்திலிருந்து நீக்க வேண்டுமென வெளிப்படையாய் ஆட்சியாளர்களே பேசுகின்றார்கள் மக்களை பிளவுபடுத்தும் சட்டங்களான குடியுரிமை திருத்த சட்டங்களை நடைமுறைபடுத்துவதற்கு முனைகின்றார்கள், இடவொதிக்கீட்டு உரிமையை முற்றிலும் நீக்குவதற்கு திட்டமிடுகின்றார்கள், மீண்டும் சனாதன காலத்தில் இருந்ததைப்போல புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் குலகல்வி முறையை கொண்டுவந்து திணிக்கின்றார்கள் எனவே இன்றைய அரசியல் சூழலில் சனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து போராட வேண்டும் நாட்டின் ஆபத்தான நிலையை மாற்ற வேண்டும்.


9) சாதி ஒழிப்பு சாத்தியமா? சாதி ஒழிப்பிற்கு நாம் என்ன செய்யவேண்டும்?

சாதி ஒழிப்பு நிச்சயம் சாத்தியமானதுதான்
புரட்சியாளர் அம்பேத்கர் தந்தை பெரியார் போன்றோரின் செயல்படுகளால் சாதிய இறுக்கங்கள் உடைபட்டன என்பதுதான் உண்மை நெடுங்கால புரட்டுகளால் கட்டமைக்கப்பட்ட சாதியத்தை நெடுங்கால களமாடுதல்களால்தான் ஒழிக்க முடியும். சாதியத்தின் சமத்துவமற்ற தன்மையை தொடர்ந்து மக்களிடையே விழிப்பு பிரச்சாரம் செய்ய வேண்டும் சமத்துவத்தை போதிக்கின்ற கல்வியை வழங்க வேண்டும் சாதியை ஏற்றுகொள்ளாத முற்போக்காளர்களை அரசு சலுகைகளை வழங்கி ஊக்குவிக்க வேண்டும் சமூகவலைதளங்கள் உள்ளிட்ட ஊடங்களை சாதிய கருத்துக்களை பரப்பவிடாதவாறு அரசு தனிக்கைபடுத்த வேண்டும் சாதியின் பெயரால் உள்ள அடையாளங்களை மாற்றி அரசு பொதுமை செய்திட வேண்டும் அனைத்து விதத்திலும் நவீன அறிவியல்சார் கட்டமைப்புகளை அரசு கொண்டுவரவேண்டும் இப்படிப்பட்ட தொடர் முன்னெடுப்புகளால்தான் சாதி ஒழிப்பு சாத்தியப்படும்.

நன்றி.

No comments:

Post a Comment