Friday 17 April 2020

Half a day for caste? : புத்தக விமர்சனம் - சுதர்சன் ஹரிபாஸ்கர்

Half a day for caste? : புத்தக விமர்சனம் -
சுதர்சன் ஹரிபாஸ்கர்

ரிரு மாதங்களுக்கு முன்பு மத்திய அரசால் முன்வைக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கை குறித்தும், அதனைத் தொடர்ந்து நாடுமுழுவதும் எழுந்த விவாதங்கள் குறித்தும் ஓரளவு அறிந்திருப்போம். மும்மொழிக் கொள்கை, மூன்று வயது முதலே குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, பல்கலைக் கழகங்களின் உரிமைகளில் மாற்றம், தேசிய அளவிலான திறனறி தேர்வுகள், என நடைமுறைச் சிக்கல் மிகுந்த விஷயங்களை முன்வைத்ததும், கல்வியின் மீது மாநில அரசுகளுக்கு இருக்கிற உரிமைகளை மறுதலிக்கும் வகையிலும் இருப்பதாக சர்ச்சைகளும் கருத்து முரண்களும் எழுந்தன.

ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரின் தொடர் போராட்டங்களுக்குப் பின் இந்தக் கல்விக் கொள்கை வரைவில் சில மாற்றங்களைச் செய்ய மத்திய அரசு ஒப்புக் கொண்டதெனினும், எந்தளவு நடைமுறை படுத்தப்படுமோ அறியோம்.

இந்நிலையில் விடுதலைக்குப் பிறகான இந்தியாவில்முதன் முதலில் நாடு முழுவதும் பெரும் எழுச்சிக்கும் அரசியல் மாற்றங்களுக்கும் வித்திட்ட ஒரு கல்விக் கொள்கையைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

1953 ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வர் ராஜாஜி என்கிற ராஜகோபாலாச்சாரி முன்வைத்ததுதான் குலக்கல்வித் திட்டம்என்று அறியப்பட்ட மாறுபட்ட தொடக்கக் கல்வித் திட்டம்’ (Modified System of Elementary Education - MSEE) .இந்தப் புத்தகம், ராஜாஜி முன்வைத்த கல்வித்திட்டம் குறித்தும் அதற்கு முன்னும் பின்னுமான தமிழகத்தின் அரசியல் சூழல் குறித்தும் விரிவாகப் பேசிய (மறைந்த) பேராசிரியர் D.வீரராகவன் அவர்களின் ஆய்வுக் கட்டுரையை மையமாக வைத்து எழுதப்பட்டது. கட்டுரையையும் இன்னபிற தகவல்களையும் அவை வெளியான காலத்தின் பொருட்டு செப்பனிட்டு சரிபார்த்து தொகுத்து வெளியிட்ட திரு.A.R.வெங்கடாசலபதி அவர்கள், மிக விரிவானதொரு முன்னுரையையும் எழுதியிருக்கிறார்.
முதலில் காலவரிசையில் சில நிகழ்வுகளையும் அவை தொடர்பான சில தகவல்களையும் பார்ப்போம். அதன் பின் புத்தகத்தின் மையமான கல்விக் கொள்கை குறித்து பார்க்கலாம்.

1916 ஆம் ஆண்டு - பிராமணரல்லாதோர் கூட்டறிக்கை (Non-Brahmin manifesto) மதராஸ் மாகாணாத்தில் வெளியிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 'தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ / ’நீதிக் கட்சிநிறுவப்படுகிறது

1917 ஆம் ஆண்டு - சேலம் மாவட்டத்தில் வழக்கறிஞர் ராஜாஜி நகராட்சி மன்ற தலைவராகிறார்

1920 ஆம் ஆண்டு - தனது அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ராஜாஜி சென்னைக்கு குடிபெயர்கிறார்

1924 ஆம் ஆண்டு - விருதுப்பட்டியைச் சேர்ந்த இளைஞர் காமராஜ் வைக்கம் சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்கிறார்

1930 ஆம் ஆண்டு - காந்தியைப் பின்பற்றி ஒத்துழையாமை இயக்கம் உள்ளிட்ட காங்கிரஸ் போராட்டங்களில் தொடர்ந்து முன்நின்று பலமுறை சிறை செல்கிறார் காமராஜர்.

1936 ஆம் ஆண்டு - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக சத்தியமூர்த்தி அவர்களும் செயலாளராக காமராஜரும் பதவியேற்கிறார்கள்

1937 ஆம் ஆண்டு அப்போதைய மாகாணங்களுக்கு தன்னாட்சி (provincial autonomy) வழங்கும் பொருட்டு நடத்தப்பட்ட சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு, ஒருங்கிணைந்த மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சராகிறார் (Premier) ராஜாஜி

அடுத்த பத்தாண்டுகளில் இரண்டாம் உலகப் போர், காந்தி முன்நின்று நடத்திய வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் ப்ரிட்டிஷாருக்கு ஆதரவாக முடிவெடுத்ததன் காரணமாக காந்திக்கும் ராஜாஜிக்குமான கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கின்றன; காங்கிரஸ் கட்சிக்குள்ளும் அவருடைய செல்வாக்கு குறைகிறது. அதே வேளையில் கொஞ்சம் கொஞ்சமாக யார் எந்தப் பதவிக்கு செல்ல வெண்டுமென முடிவு செய்கிற அளவுக்கு காமராஜரின் கை ஓங்குகிறது.

1947 ஆம் ஆண்டு - சுதந்திர நாடாகிறது இந்தியா - பிரிவினைக்குப் பிந்தைய மேற்கு வங்கத்தின் ஆளுநராக நியமிக்கப்படுகிறார் ராஜாஜி.

1948 ஆம் ஆண்டு - மவுண்ட்பேட்டன் பிரபுவுக்குப் பின் 1950ல் குடியரசு நாடாகும் வரை, இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பதவி வகிக்கிறார் ராஜாஜி.

1950 ஆம் ஆண்டு - தொடங்கி 1952 வரை நேருவின் அமைச்சரவையில் இடம்பிடித்தாலும், உடல் நலத்தை காரணம் காட்டி பதவி விலகுகிறார்.

1952 ஆம் ஆண்டு - மொழிவாரி மாநிலங்களுக்கான கோரிக்கையும், மதராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திர மாநிலத்தை பிரித்து தனி மாநிலமாக்கவும் உச்சகட்டமாக பல போராட்டங்கள் வலுப்பெற்ற சூழல் அது. இந்திய குடியரசின் முதல் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாததால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணி ஆட்சி அமைக்கிறது. தேர்தலில் போட்டியிடாத ராஜாஜியை, மேல்சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தபின் முதலமைச்சராகப் பதவியேற்க ஆளுநர் பிரகாசா அழைப்பு விடுக்கிறார். பதவியேற்றபின் நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது பெரும்பான்மையை நிரூபித்து இரண்டாவது முறையாக மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சராகப் பதவி ஏற்கிறார் ராஜாஜி.

// A new class of government servants had to be created and groomed, a class, in the words of Macaulay, of 'interpreters between us and the millions whom we govern; a class of persons, Indians in blood and colors, but English in taste, in opinions, in morals and in intellect'. Macaulay dealt the final blow to whatever native institutions of learning existed and planted modern English education instead, to train up a stratum of docile executants of the English cut off from every type of contact with their people. //
p 68 - Half a day for caste? - By D.Veeraraghavan
கல்வி குறித்தும் கிராம பொருளாதாரம் குறித்தும் காந்தி கொண்டிருந்த நம்பிக்கைகளை சுருக்கமாகப் பேசிச் செல்கிறார் வீரராகவன்.

நவீன தொழில்நுட்பமும், தொழிற்சாலைகளும், மக்களை நுகர்வுக் கலாச்சாரத்தை நோக்கித் தள்ளிவிடும் எனவும், அப்படி இந்திய நாடு தொழில்துறையில் வளார்ச்சி பெற்றால் அது ஏனைய வளரும் நாடுகளை சுரண்ட நேரிடும் எனவும் காந்தி திடமாக நம்பினார். தற்சார்பு கொண்ட கிராம பொருளாதாரத்தை அமைப்பதே சுதந்திர இந்தியாவின் நோக்கம் என்றார். பெண்களுக்கெதிரான அடக்குமுறை, தீண்டாமை, சாதிக் கொடுமைகள், குழந்தைத் திருமணம், இவை ஏதுமற்ற சமூகம் அமைய வேண்டுமெனவும் அவர் விரும்பியதாக வீரராகவன் குறிப்பிடுகிறார். காந்தி முன்வைத்த கல்விக் கொள்கைகளும் அவருடைய இந்த சமூக-பொருளாதார நம்பிக்கையைச் சார்ந்ததாகவே இருந்தது. காந்தியின் இத்தகைய கல்விக் கொள்கைகள் மீது தீவிர பற்று கொண்டவராக விளங்கினார் ராஜாஜி.


//His views on Varnashrama dharma were more conservative than even those of Gandhi. He believed in the continuance of the traditional family apprenticeship. However, unlike Gandhi, Rajaji did not believe in institutional education for children. Schools were prison            houses, where they were imprisoning the pupils too long in the classrooms; he would be content if he could get the Madras teachers to agree only to that part of his scheme cutting down the school hours even if nothing else was possible//
        p-73 - Half a day for caste - By D.Veeraraghavan                      
1952 ஆம் ஆண்டு ராஜாஜி, மதராஸ் மாகாணத்தின் முதல்வராகப் பதவியேற்றபின், அப்போதைய கல்வி அமைச்சர் M.V.கிருஷ்ணாராவ் அப்போதைய கல்விக் கொள்கையிலுள்ள குறைகளைக் களையவேண்டுமானால ஆரம்பப் பள்ளிகளையும் அவை இயங்கும் முறையையும் ஆராய்ந்து மறுசீரமைப்பு செய்ய வேண்டுமெனவும் சொல்லிவிட்டு ஒரு புதிய திட்டத்தினை முன்வைக்கிறார். அந்த திட்டத்தின் படி ஒரு நாளில் இரண்டு ஷிஃப்டுகளில் பள்ளிகள் இயங்கவேண்டுமெனவும், மாணவர்களுக்கு அரை நாள் மாத்திரம் கல்வி கற்கவும், மீதமுள்ள அரை நாள் அவர்களுடைய பெற்றோரின் தொழிலை பள்ளியிலோ அல்லது பள்ளியோடு அமைந்த பட்டறையிலோ கற்றுக் கொள்ளவும் ஏதுவாக இருக்குமென சட்டசபையில் கூறுகிறார். பள்ளிகளில் சத்துணவு வழங்கவும் அரசாங்கம் கருத்தில் கொண்டிருந்தது.
அப்போது பட்ஜெட் தொடர்பாக அவையில் எழுந்த தொடர் விவாதங்களால் இந்த பிரச்சனை அவ்வளவாக கவனம் பெறவில்லை.

ஆனாலும், முதல்வர் ராஜாஜி அப்போதைய மாநில கல்வித்துறை இயக்குநரைத் (Director of Public Instruction - DPI) தொடர்பு கொண்டு மேற்குறிப்பிட்ட திட்டம் தொடர்பாக தீர ஆராய்ந்து ஒரு திட்ட வரைவை உருவாக்க ஆணையிடுகிறார். அதனைத் தொடர்ந்து கல்வித்துறை இயக்குநர் கோவிந்தராஜுலு அப்போதைய இணை இயக்குநர் சுந்தரவடிவேலுவுக்கு உடனடியாக ஒரு கடிதம் அனுப்புகிறார் . முதலமைச்சரின் ஆணையின் பேரில் கிராமப்புற ஆரம்பப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அரை நாள் கல்வி கற்கவும், அரை நாள் அவர்களுடைய பெற்றோரின் தொழிலைப் பழகவும் ஏற்ற வகையில் ஒரு கல்வித் திட்டத்தை வடிவமைக்கப் பணிக்கப்படுகிறார்.

சுந்தரவடிவேலு கடுமையான மனப்போராட்டத்திற்கு ஆளானாலும், இதற்கு முந்தைய அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு  இதே போன்ற திட்டங்களைச்  சிறிய அளவில் செயல்படுத்த முயன்று தோல்வியுற்ற நிகழ்வுகளை விளக்கி பதில் கடிதம் எழுதுகிறார். ஆனாலும் சில மாதங்களுக்குப் பின் முதல்வர் ராஜாஜியின் வற்புறுத்தலின் பேரில் வேறு வழியே இன்றி, திட்ட வரைவை உருவாக்குகின்றார்.

Modified Scheme of Elementary Education (MSEE) - மாறுபட்ட தொடக்கக் கல்வித் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

1. மாணாக்கர்களுக்கான பள்ளி நேரம் நாளொன்றுக்கு மூன்று மணி நேரங்கள் மட்டுமே.

2. அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களை இரு பிரிவுகளாக பிரிக்க வேண்டும். காலையில் ஒரு பிரிவினரும் மாலையில் ஒரு பிரிவினரும் கல்வி கற்கலாம்.

3. இரு பிரிவுகளுக்கும் பொதுவான ஆசிரியர்களே பாடமெடுப்பார்கள்.

4. கல்வி நேரம் அல்லாத அரை நாள் வேளையில் மாணவர்கள் அவர்களுடைய பெற்றோரின் தொழிலை கற்றுக்கொள்ளவேண்டும். பெற்றோர்கள் ஒரு குறிப்பிட்ட தொழில் இல்லாமல் இருந்தாலோ அல்லது குடும்பத்தொழில் ஏதுமில்லாமல் இருந்தாலோ, அந்த மாணவர்கள் ஒரு விவசாயியுடனோ அல்லது ஒரு கைத்தொழில் கலைஞருடனோ பணியமர்த்தப் படுவார்கள்.

திட்டம், இன்னும் பல கூறுகளைக் கொண்டிருந்தாலும் அவற்றுள் முக்கியமானதுஇந்தக் கல்வித்திட்டம் கிராமப்புற தொடக்கக் கல்வி மாணாக்கர்களுக்கு / பள்ளிக்கூடங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், நகர்ப்புற மாணாக்கர்களுக்கும் பள்ளிக்கூடங்களுக்கும் பொருந்தாதெனவும் குறிப்பிட்டதே ஆகும்.

கல்வித்திட்டத்தின் வரைவு தயாரானபின் முதலமைச்சரின் ஆணையின் பேரில், சட்டமன்றத்தில் கலந்தாலோசிக்காமல், பிற உறுப்பினர்களுக்கோ, துறை சார் நபர்களுக்கோ (அப்போதைய கல்வி அமைச்சர் உட்பட)கூட எந்தத் தகவலும் சொல்லப்படாமல் அனைத்து செய்தித்தாள்களுக்கும், நாளிதழ்களுக்கும் இந்தக் கல்வித்திட்டம் குறித்த சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது.

அடுத்த நாளிலிருந்தே சமூகத்தின் பல்வேறு தரப்புகளிலிருந்தும் இத்திட்டத்துக்கு எதிர்ப்புக் குரல்கள் எழத் தொடங்குகின்றது. தென்னிந்திய ஆசிரியர்கள் சங்கம் (South Indian Teacher's Union - SITU) தமது எதிர்ப்பை பதிவு செய்தது மட்டுமல்லாமல் இத்திட்டத்தை ஒரு வல்லுநர் குழு அமைத்து ஆய்வு செய்யுமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்தது. ஆசிரியர்கள், கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இத்திட்டம் குறித்த தங்களுடைய மனக்குறையை வெளிப்படுத்தினர். தமிழகத்தின் அப்போதைய எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட்டுகளும் இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தை சட்டசபையில் விவாதத்திற்கு கொண்டுவராமல் ஜனநாயகத்துக்கு எதிரான வகையில், தன்னிச்சையாக செயல்பட்டமைக்காக ராஜாஜிக்கு தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர்; இத்திட்டத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானமும் கொண்டுவரப்பட்டது.


//Rajaji had always exhibited such supreme confidence in his own wisdom and intellect that he did not even for a moment think it worth consulting stakeholders. J.B Kripalani's remarks on the introduction of Basic Education are relevant here:
"It is not much the matter as the manner of introduction of his schemes that creates misunderstanding and opposition. This process of ushering in before the public. the finished product of one's own labours may be appropriate in art, it is scarcely suited for introducing practical reforms in which merely passive acquiescence is not sufficient but active cooperation and participation are of the essence." //
p-88 - Half a day for caste - By D.Veeraraghavan

தந்தை பெரியார் தமது விடுதலைபத்திரிக்கையில். சேலம் திராவிட ஆசிரியர்கள் கூட்டமைப்பின் செயலாளர் திரு.A.வையாபுரி, ராஜாஜி முன்வைத்த புதிய கல்வித்திட்டத்தின் தீமைகள் குறித்து எழுதிய மிக விரிவானதொரு கடிதத்தைப் பதிப்பிக்கிறார். தொடர்ச்சியாக இந்தக் கல்வித்திட்டம் குறித்து சமூகத்தில் நிகழ்ந்த முக்கியமான உரையாடல்களையும் பலதரப்பட்ட விமர்சனங்களையும் விடுதலையில் பதிவு செய்கிறார். ராஜாஜி முன்வைத்த கல்வித்திட்டத்தை குலக்கல்வித் திட்டம் எனவும் வர்ணாஸ்ரம கல்வித்திட்டம் எனவும் முதலில் குறிப்பிட்டது பெரியார் தான்ராஜாஜி தொடர்ச்சியாக பிராமணரல்லாதோருக்கு எதிராகச் செயல்படுவதைச் சொல்லி முதல்வராக இருந்தபோது அவர் செய்த காரியங்களைப் பட்டியலிடுகிறார் பெரியார்.
·                1937-39 ராஜாஜி மதராஸ் மாகாணாத்தின் ப்ரீமியராக இருந்தபோது கல்விக்கான கூடுதல் வரி நீக்கம் காரணமான தமிழகத்தின் பல மாவட்டங்களில் கல்வித்துறைக்கான நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டு 60 மாணாக்கர்களுக்கு குறைவாக இருந்த உயர்நிலைப் பள்ளிக்கூடங்கள் மட்டுமல்லாது 2500 தொடக்கப் பள்ளிகளும் மூடப்பட்டன.
·                பொருளாதரப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி வனத்துறை கல்லூரி மூடப்பட்டது.
·                கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியலின மாணவர்களுக்கான கல்வி மானியங்கள்/சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
· 1952-54 ஆண்டுகளில் ராஜாஜி தமிழக முதல்வராக இருந்தபோதும் 6000 தொடக்கப் பள்ளிகளுக்கு மேல் மூடப்பட்டன.
· திராவிட முன்னேற்றக் கழகத்தின் மும்முனைப் போராட்டம் தொடங்கியதும் இதே 1953 வருடத்தில் தான்.
·                   மாறுபட்ட தொடக்கக் கல்வித் திட்டத்துக்கான எதிர்ப்பைத் தெரிவிக்க முதல்வர்    ராஜாஜியின் வீட்டை முற்றுகையிடுதல்.
·                கல்லக்குடி ரயில்நிலையத்துக்கு டால்மியாபுரம் என்ற பெயரை சூட்டுவதற்கான எதிர்ப்பைத் தெரிவித்து ரயில் மறியல்.
·                நேரு திமுகவினரின் கோரிக்கைகளுக்கு (ராஜாஜியை முதல்வர் பதவியிலிருந்து நீக்கும்படி கேட்டது) செவிசாய்க்க மறுத்து, ‘நான் சென்ஸ்என சொன்னதை எதிர்த்து ரயில் நிறுத்தும் போராட்டம். இவையே மும்முனைப் போராட்டத்தின் நோக்கங்கள்.
சட்டமன்றத்தில் அத்தனை எதிர்ப்பையும் தாண்டி, எதிர்க்கட்சியின் தீர்மானங்களை மறுதலித்த ராஜாஜிஇந்தக் கல்வித் திட்டம், மாநில அரசின் கொள்கை சார்ந்த முடிவு என்பதாலும், சட்டம் /சட்டத்திருத்தம் அல்ல என்பதாலும் அதனை உடனடியாக செயல்படுத்த ஆணையிடுவதோடு R.V.பாருலேக்கர் தலைமையில் ஒரு வல்லுநர் குழு அமைத்து இத்திட்டத்தை மறு ஆய்வு செய்யவும் பரிந்துரைக்கிறார். இந்த குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வியாளர் ஒருவர் கூட சேர்க்கப்படவில்லை என்பது கூடுதல் தகவல். சில மாதங்களுக்குப் பிறகு பாருலேக்கர் கமிட்டி ஆய்வறிக்கையைச் (PCR - Parulekar Committee Report) சமர்ப்பித்தபின் இந்தப் பிரச்சனை இன்னும் பூதாகாரமாக வெடித்தது.

இதன் பிறகு மாநிலம் முழுவதும் எழுந்த கடுமையான எதிர்ப்பலைகளின் காரணமாக ராஜாஜி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய, முதல்வராகப் பதவியேற்கிறார் காமராஜர். முதல் வேலையாக ராஜாஜி கொண்டுவந்த கல்வித்திட்டம் கைவிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அழகப்ப செட்டியார் தலைமையில் ஒரு வல்லுநர் குழு அமைத்து புதிய கல்வித்திட்டம் ஒன்றை உருவாக்க ஆணையிடுகிறார் காமராஜர்.

அழகப்ப செட்டியார் கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டு முழு மூச்சாக தொடக்கக் கல்வியை வலுப்படுத்தும் முனைப்பிலிருந்தார் காமராஜர். மத்திய அரசின் முதல் ஐந்தாண்டுத் திட்டம் வழங்கிய நிதியைக் கொண்டு கிராமங்களெல்லாம் ஒரு-ஆசிரியர்பள்ளிகள் தொடங்கப்பட்டன. 4267 தொடக்கப் பள்ளிகள் புதிதாக திறக்கப்பட்டன. சராசரியாக 4 லட்சம் மாணவர்களுக்கு மேல் புதிதாக பள்ளிக் கூடங்களில் சேர்ந்தனர். இன்றுவரை பேசப்படும் திட்டமான சத்துணவுத் திட்டமும் அறிமுகப் படுத்தப்பட்டது.

//Between 1956-57 and 1971-72, the number of schools increased from 25,268 to 32,021 and the number of pupils from 30.88 lakhs to 65.77 lakhs.
Every child between 6 and 7 years of age was compulsorily enrolled in school. No child was allowed to withdraw before reaching the fifth standard or attaining 12 years of age, whichever was earlier. As a result of this measure, more than 3 lakh children were additionally enrolled, and about 6,600 more teachers employed. //

// The most spectacular measure was the midday meals scheme. Kamaraj revived the scheme and placed it on a regular footing by subsidizing the costs as part of the Education Plan on a 60:40 basis - 60 percent being the state's share while the rest was
covered by local public voluntary contribution. By 1962, an overwhelming 26,406 schools out of 27,135 were covered by the scheme.
11,80,000 pupils were benefited at a cost of Rs.1.15 Crores. In addition to the midday meals scheme, the Scholl Improvement Scheme was launched all over the state, by which local people were involved voluntarily in the development of school facilities and in providing books, slates, uniforms, etc for poor children. //
 p-137-138 - Half a day for caste - By D.Veeraraghavan 

இன்றைக்கும் மாநிலத்தின் உரிமைகளுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டாலோ, அமைப்புரீதியான ஒடுக்குமுறை கொண்டு நமது மாணவர்களின் கனவுகளைத் தகர்க்கும் வண்ணம் ஏதும் நடந்தாலோ, அடிப்படைக் கல்வியைக் கூட பெற முடியாதவாறு தடைக்கற்களை அரசுகளே முன்நின்று உருவாக்கினலோ

இந்த உரிமைகளுக்குப் பின்னே மறைந்து கிடக்கிற பல மாமனிதர்களின் போராட்டங்களையும், பெருமுயற்சிகளையும், தொலைநோக்குப் பார்வையையும், சிந்தனைத் திறத்தையும் ஒரு பெருமூச்சோடு நினைவு கூர்வதைத் தவிற நம்மால் என்ன செய்து விட முடியும்?

அதே சமயம் ஒரு மாநிலத்திற்கோ அல்லது நாட்டுக்கோ தலைமைப் பதவியை ஏற்கும் ஒருவர், தனது தனிப்பட்ட கொள்கைகளுக்கும்/நம்பிக்கைகளுக்கும் முன்னுரிமையளிக்காமல், தான் சார்ந்திருக்கிற சாதி/மதம் குறித்த மனச்சாய்வுகள் ஏதுமின்று, சமூகத்தின் அனைத்து படிநிலையில் இருக்கிற மக்களையும் அவர்தம் நல்வாழ்வையும் மட்டுமே கருத்தில் கொண்டு தொலைநோக்குடன் செயல்பட வேண்டுமென்பது தெள்ளத் தெளிவாகப் புலப்படுகின்றது

கல்வியாளர்களும், ஆசிரியர்களும், அரசின் கொள்கை முடிவுகள் மாணவர்களின் எதிர்காலத்தை எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து அக்கறை கொண்டவர்களும் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம்


Half a day for caste? (Education and Politics in Tamilnadu, 1952-55)
      By D.Veeraraghavan | Left Word | Rs.250 | ISBN 9788194357902

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க https://www.amazon.in/Half-Caste-Education-Politics-Tamil/dp/819435790X


- சுதர்சன் ஹரிபாஸ்கர்

No comments:

Post a Comment