Saturday 30 May 2020

அண்ணல் அம்பேத்கரின் தேசியம் - டாக்டர். ஆனந்த் தெல்தும்ப்டே

அண்ணல் அம்பேத்கரின் தேசியம் - டாக்டர். ஆனந்த் தெல்தும்ப்டே 

ண்ணல் அம்பேத்கர் குறித்து பல்வேறு கட்டுக்கதைகளும் அவதூறுகளும் இந்துத்துவவாதிகளால் தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டுக்கதைகள், அவதூறுகளை தொடர்ச்சியாக அம்பேத்கரியவாதிகளும் மறுத்து எழுதி வருகிறார்கள். அண்ணல் அம்பேத்கரை சரியாக வாசித்தாலே இந்துத்துவத்தை தோலுரிக்க முடியும். ஆனால், அண்ணல் அம்பேத்காரை பற்றிய பொய் தகவல்களையும் அவரது சிலையை ஒரு பிம்பமாக வைத்து வழிபடவைத்து அவரை இந்துத்துவம் செரிக்க பார்க்கிறது. ஆனால், அது என்றும் நடக்காது.

அண்ணல் அம்பேத்கர் குறித்த இந்துத்துவ கட்டுக்கதைகளுக்கு அறிஞர் டாக்டர். ஆனந்த் தெல்தும்ப்டே எழுதிய "முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கர் - கட்டுக்கதைகளும் உண்மை விவரங்களும்" என்ற புத்தகம் முக்கியமானது. 2003 ஆண்டு வெளியான இந்த புத்தகம், இந்துத்துவத்தின் பொற்காலமான இன்றைய மோடியின் காலத்திலும் அப்படியே பொருந்திப்போகிறது. அதுவே இந்த புத்தகத்தின் முக்கியத்துவத்தை காட்டுகிறது.

இந்தப்புத்தகத்தில் அம்பேத்கர் குறித்து இந்துத்துவம் பரப்பிவரும் 11 கட்டுக்கதைகளையும் அதன் உண்மை விவரங்களையும் எடுத்துக்காட்டும் கட்டுரைகள் இடம்பெறுகிறது. அந்த கட்டுக்கதைகளில் ஒன்று அம்பேத்கர் இந்துத்துவம் சொல்லும் பண்பாட்டு தேசியத்தை நம்பினார் என்பதே. அதனை பல ஆதாரங்களுடன் ஆசிரியர் மறுக்கிறார். இதனை வைத்து அம்பேத்கரின் தேசிய பார்வை எப்படி இருந்தது என்பதை நம்மால் ஓரளவுக்கு உணர்ந்துக்கொள்ள முடியும்!   

முதலில் இந்துத்துவம் சொல்லும் "பண்பாட்டு தேசியவாதம்" என்றால் என்ன என்பதை விளங்கிக்கொண்டால் தான் அம்பேத்கார் அதை நம்பினாரா? எதிர்த்தாரா? என்பதை புரிந்துக்கொள்ள உதவும்.

பண்பாட்டு தேசியவாதம் என்பது இந்து தேசியவாதத்தின் - இன்னும் சரியாகச் சொன்னால் பார்ப்பன தேசியவாதத்தின் மென்மையான பெயர் தான் என்பதை நாம் அறிவோம். இந்துத்துவ சொற்றொடர் அகராதியில் உள்ள வேறெந்தத் தொடரையும் போலவே இதுவும் தன் உருவாக்கத்திலேயே மேலாதிக்கத் தன்மை உடையதாகவும், தன் பொருளில் தெளிவற்ற - நம்பமற்ற தன்மை உடையதாகவும் இருக்கிறது.

ஒரு தேசம் - ஒரு மக்கள் - ஒரு பண்பாடு என்பது தான் பண்பாட்டு தேசியவாதத்தின் சாரமாகும் என பாஜக அறிக்கையில் விளக்கம் தரப்பட்டுள்ளது. "நமது தேசியவாத தரிசனம் வெறுமனே பாரதத்தின் புவியியல் அல்லது அரசியல் அடையாளத்துக்குக் கட்டுப்பட்டது அல்ல; மாறாக, காலம்காலமாகவுள்ள நமது பண்பாட்டுப் பாரம்பரியத்தாலேயே அது குறிக்கப்படுகிறது என்கிறது பாஜகவின் தேர்தல் அறிக்கை. மேலும் அது கூறுவதாவது: "எல்லா பிரதேசங்களுக்கும் மதங்களுக்கும் மொழிகளுக்கும் மையமான இந்த பண்பாட்டுப் பாரம்பரியம், ஒரு நாகரிகத்தின் அடையாளமாகும். அதுவே இந்தியாவின் பண்பாட்டுத் தேசியவாதமாகும். அதுவே இந்துத்துவத்தின் அச்சாணியாகும்." சனாதன தருமமும் இந்திய தேசியவாதம் என்பதும் ஒரே பொருளுடையது என்கிறது அது.

ராமஜென்ம பூமி என்பதையும், ராமரையும் இந்த தேசியவாதத்தின் முக்கிய குறியீடாக இந்துத்துவம் கருதுகிறது. "இந்திய உணர்வின் மைய பொருளாக ராமனே இருக்கிறான்" என்கிறது பா.ஜ.க. வின் பண்பாட்டுத் தேசியவாதச் சொல்லாடல்!

கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஆயிரக்கணக்கான உயிர்கள் படுகொலை செய்யப் பட்டதற்கும் இந்தியர்களின் இயல்பான நற்குனம் பற்றிய லட்சக்கணக்கானவர்களின்
நம்பிக்கை ஒழிக்கப்பட்டதற்கும் காரணமான ராமஜென்மபூமி இயக்கமானது, பண்பாட்டு தேசியவாதத்தின் அடித்தளத்தை வலுப்படுத்தி உள்ளது என சங்கப்பரிவாரம் பெருமை பொங்க வருணிக்கிறது. இப்படிப்பட்ட குரூரமான பண்பாட்டு தேசியவாதத்தை டாக்டர் அம்பேத்கர் ஆதரிப்பார் என கற்பனை செய்யவும் முடியுமா?

இனி அம்பேத்கார் இந்த பண்பாட்டு தேசியத்தை எப்படி பார்த்தார் என்பதை பார்ப்போம்.

-     பண்பாடு என்பது ஒரு வாழ்க்கை முறை. அரசியலில் இருந்தும் மிகவும் மாறுபட்ட ஒன்று என்பதை நாம் அறிவோம். பழங்காலத்திலிருந்தே ஒரு ஆற்றோட்டம் போல் அது தொடர்ந்து வருகிறது. தான் வரும் வழியில் பலவற்றையும் உள்வாங்கி கொண்டு வற்றாமல் பாய்ந்து கொண்டிருக்கிறது. பண்பாடு இடையறாதது.

-     இந்த மாதிரியான பண்பாட்டுத் தேசியவாதம் பற்றி டாக்டர் அம்பேத்கார் என்ன கூறுவார்? இந்தியா பல தேசம் மற்றும் பண்பாடுகளின் கூட்டமைப்பு ஆகும் என வாதிடுகிறது அம்பேத்காரிய உலகப் பார்வை (weltanschauung)

-     பண்பாட்டு தேசியவாதம் என்னும் கட்டுமானத்தை அம்பேத்காரிய உலகப்பார்வையின் மீதான கருத்தியல் தாக்குதல் என்றே வரையறுக்க முடியும். எடுத்துக்காட்டாக, பண்பாட்டு தேசியவாதத்தின் சாரமாக அமைந்துள்ளதாகக் கருதப்படும் "ஒரு தேசம் - ஒரு மக்கள் - ஒரு பண்பாடு" என்பதை எடுத்துக்கொள்வோம். இட்லரின் நாஜி முழக்கமான "ஜன் வோக், ஜன் ரைக், ஜன் பியூரர்" (ஒரு இனம், ஒரு   பேரரசு, ஒரு மக்கள்) என்பதை இது எதிரொலிக்கிறது. 

-     டாக்டர் அம்பேத்கர் "இந்துமதத்தின் புதிர்கள்" என்ற தன் நூலில் ராமன் - கிருஷ்ணன் பற்றிய புதிரைப் பற்றி எழுதுகிறார். இந்த நூலை எழுதியதன் நோக்கத்தை விளக்கி முகவுரையில் அவர் எழுதினார் "இந்துமதம் சனாதனமானது (மாற்றமில்லாதது, என்றுமுள்ளது) அல்ல என்பதை மக்கள் அறியும்படிச் செய்ய விரும்புகிறேன். இந்நூலின் இரண்டாவது நோக்கம், பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளை இந்து மக்கள் திரளினரின் கவனத்துக்கு கொண்டு வருவதும், தங்களை பார்ப்பனர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றி தவறாக வழிகாட்டி வந்திருக்கிறார்கள் என்பதை அவர்களே சுயமாகச் சிந்திக்கும்படித் தூண்டுவதும் ஆகும். 

-     தன் சாதியைக் கடந்துவிட்ட ஒரே குற்றத்துக்காகவே சம்பூகன் என்ற சூத்திரரைக் கொன்ற ராமன், இந்தியாவின் மனசாட்சி எனப்படுகிறான். இத்தனைக்கும் இன்றும் இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் சூத்திரர்களும் தலித்துகளுமாகவே இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு ஒழுக்கங்கெட்ட, நன்னடத்தையற்ற, பிற்போக்கான, நியாயமற்ற, சாதிவெறி பிடித்த ஒருவனை நாயகனாகச் சித்தரிக்கும் ராமாயணத்தை வால்மீகி எழுத என்ன தேவை என்று வியக்கிறார் டாக்டர். அம்பேத்கர்.

-     இந்திய அரசியல் சட்ட அமைப்பில், மற்றவர்களுடன் சேர்ந்து, மிகுந்த முயற்சி எடுத்து அவர் சேர்ந்திருந்த தாராளவாத, மதச்சார்பற்ற கட்டுமானங்களை இந்த இயக்கம் தகர்த்துள்ளது. அப்படி இருந்தும் அவரை இந்த கேடுகெட்ட வழிமுறையின் ஆதரவாளர் எனத் தீட்டுகிறார்கள்! அவர்களின் சனாதன - சனாதன சன்ஸ்கிருதியை - அம்பேத்கர் அறவே அருவருத்தார் என்பது அவர்களுக்குத் தெரியாதா? தன் நடை - உடை - வாழ்க்கைப் பாணிகளில் கூட ஒரு நவீன பகுத்தறிவாளராக விளங்கிய டாக்டர் அம்பேத்கர், 'சனாதனம்' (மரபு, பழமை) என்பதற்குள் அடக்கப்படக்கூடிய ஒவ்வொன்றையும் எதிர்ப்பதில் இரும்பு போல உறுதியாக நின்றார்.

-     அவர் எழுதுகிறார் "ஐயம் கொள்வதற்கு பார்ப்பனர்கள் இடமே தரவில்லை. மிகவும் கயமைத்தனமான பிடிவாதக் கருத்தை பொதுமக்களிடையில் அவர்கள் பரப்பி உள்ளார்கள். வேதங்கள் ஒருபோதும் தவறாவதில்லை என்பதே அக்கருத்து. இந்துக்களின் அறிவு நின்றுவிட்டதென்றால், இந்து நாகரிகமும் பண்பாடும் தேக்கமுற்று முடைநாற்றமெடுக்கும் ஒரு குட்டையாக ஆகியுள்ளது என்றால் அதற்கு இந்தக் கருத்தே காரணம். இந்தியா முன்னேற வேண்டுமானால் இந்தக் கருத்தை வேரோடும் மண்ணோடும் சேர்த்து அழித்து ஒழிக்க வேண்டும். வேதங்கள் என்பவை ஒரு உதவாக்கரை நூல் தொகுதி. அவற்றைப் புனிதமானவை என்றோ பிழையற்றவை என்றோ கூறுவதற்கு ஒரு நியாயமும் இல்லை. பிற்காலத்தில் வேதத்துக்குள் செருகப்பட்ட புருஷ - சூக்தம் எனப்படும் பகுதி, பார்பனர்களைப் பூமியின் அதிபதிகள் எனக்குறிக்கிறது. இதனால் மட்டுமே பார்ப்பனர்கள் வேதங்களை புனிதமானவை என்றும் ஒருபோதும் பொய்க்காதவை என்றும் உருஏற்றி வைத்திருக்கிறார்கள்.

-     தேசியவாதத்தை பொறுத்தவரை தேசம் - தேசிய இனம் - தேசியவாதம் என்பவற்றை கூட்டு உணர்ச்சி, உளவியல் உணர்ச்சி என்ற முறையில் தெளிவாக வரையறுக்கிறார் டாக்டர் அம்பேத்கர். இவற்றுக்கான காரணங்கள் எண்ணென்ற காரணிகளில் அமையலாம். பண்பாடு என்பது அவற்றில் ஒன்று மட்டுமாகவே இருக்க முடியும். 'இந்தியாவில் சாதிகள்'என்ற தன் கட்டுரையில் அவர் இந்தியாவின் பண்பாட்டு ஒருமைபாட்டைத் தெளிவாக விவரிக்கிறார்: "அதன் பண்பாட்டு ஒருமைப்பட்டைப் பொறுத்தவரை இந்திய தீபகற்பத்தை விஞ்ச எந்த நாடும் கிடையாது. அது புவியியல் ஒருமுறைப்பாட்டை மட்டும் கொண்டிருக்கவில்லை. மாறாக, எல்லாவற்றுக்கும் மேலாக அதிக ஆழமும் அடிப்படையும் கொண்ட - ஒருமைப்பாட்டை இந்த நாட்டின் ஒரு கோடியிலிருந்து மறுகோடி வரை பரவியிருக்கும் ஐயத்துக்கிடமில்லாத பண்பாட்டு ஒருமைப்பாட்டை - அது பெற்றுள்ளது." ஆனால் உடனடியாகவே, இந்த வெளித்தோற்ற அளவிலான 'ஒரே சீர்மை' யில் சாதிகள் என்ற சிக்கல் நிலவுவதை எடுத்துக்காட்டுகிறார். "ஏற்கனவே ஒருபடித்தாய் இருக்கும் அமைப்பு பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது தான் சாதி" என அவர் குறிப்பிடுகிறார். இவ்வாறு சாதியானது, இந்தியாவின் பண்பாடு ஒருமை/ ஒரே சீர்மை தானாகவே பல கூறுகளாகப் பிரியும் படி செய்கிறது; 'எல்லோரும் ஒன்று' என்ற உளவியல் உணர்ச்சி வளராதபடி செய்கிறது. அனால் அந்த உணர்ச்சி இருந்தால்தானே அது "தேசம்" ஆகும்? 

-     தன் “சாதிகள் ஒழிப்பு"நூலில், "ஒரு சமுதாயத்தை அமைக்கும் அடிப்படைக் கூறுகளை" அவர் ஆராய்கிறார்; "ஒருவர் ஒருவருடன் கலந்து உறவாடுவது தான்" அந்த அடிப்படைக் கூறு எனக் காண்கிறார். ஒரு சமுதாயம் உருவாவதற்கு ஆன அடிப்படைக் காரணி என்பதில் பண்பாட்டை அவர் தெளிவாகப் புறக்கணித்துவிடுகிறார்.

-     மனிதர்கள் அருகருகில் வசிப்பதாலேயே அவர்கள் ஒரு சமுதாயமாக ஆகிவிடுவதில்லை.  அவ்வாறே, சக மனிதர்களிடமிருந்து, நெடுந்தொலைவு சென்று வாழ்வதாலேயே ஒருவர் தான் சார்ந்த சமுதாயத்தின் உறுப்பினராக இல்லாமல் போய்விடுவதும் இல்லை. இரண்டாவதாக பழக்க வழக்கங்கள் - நம்பிக்கைகள் - சிந்தனைகள் ஆகியவற்றில் காணப்படும் ஒத்த தன்மை மனிதர்களை ஒரு சமுதாயமாக ஒன்றிணைக்கப் போதுமானது ஆவதில்லை. செங்கற்களை ஒருவர் மற்றொருவருக்கு கைமாற்றித் தருவதைப் போலவே பழக்கவழக்கங்கள் - நம்பிக்கைகள் - சிந்தனைகள் போன்றவற்றையும் ஒரு கூட்டத்தாரிடமிருந்து மற்றொரு கூட்டத்தார் எடுத்துக்கொள்ளலாம்; இதனால் அவ்விரு கூட்டத்தாருக்கும் இடையில் ஒத்தத்தன்மை இருப்பது தோன்றலாம். எப்புறமும் விரிவுறுதல் மூலமே பண்பாடு பரவுகிறது. அதனால் தான் வெவ்வேறு பழங்குடி இனங்கள் ஒன்றுக்கொன்று அருகருகாக வசிக்காத போதும் அவற்றின் பழக்கவழக்கங்கள் - நம்பிக்கைகள் - சிந்தனைகள் முதலியவற்றில் ஒத்த கூறுகள் காணப்படுவதைப் பார்க்க முடிகிறது. ஆனால், பழங்குடியினரிடையே இந்த ஒத்தத்தன்மை காணப்படுவதால், பழங்குடியினர் எல்லாருமே ஒரே சமுதாயமாக இருப்பதாக எவரும் கூறமுடியாது. குறிப்பிட்ட அம்சங்களில் ஒத்தத்தன்மை பெற்றிருப்பதே ஒரு சமுதாயமாக அமைவதற்குப் போதுமென்று ஆவதில்லை என்பது தான் இதற்குக்   காரணம்.

-     மனிதர்கள் தமக்குப் பொதுவான தன்மைகளைப் பெற்றிருப்பதால்தான் ஒரு சமுதாயமாக உருக்கொள்கிறார்கள். ஒத்த தன்மைகளைப் பெற்றிருப்பது என்பதும் பொதுவான தன்மைகளை பெற்றிருப்பது என்பதும் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்டதாகும். ஆயின், மக்கள் ஒருவரோடொருவர் கலந்து உறவாடுதல் மட்டுமே தமக்குப் பொதுவான தன்மைகளை அடைந்து கொள்ளமுடியும். இதையே இன்னொரு விதத்தில் கூறுவதானால், கலந்துறவாடுவதலையே சமுதாயம் நடைமுறை உண்மையாக ஆகிறது - அதைவிடவும், கலந்துறவாடுவதிலேயே சமுதாயம் நடைமுறை உண்மையாக ஆகிறது எனலாம்.

-     இந்துக்களில் உள்ள வெவ்வேறு சாதியினர் கொண்டாடும் திருவிழாக்கள் ஒரேவிதமாகவே இருப்பது இதற்கு எடுத்துக்காட்டாகும். வெவ்வேறு சாதிகள் ஒரேவிதமான திருவிழாக்களை இணையாகக் கொண்டாடினாலும், அது அவர்களை ஒரே ஒருங்கிணைந்த முழுமையாக ஒன்றுபடுத்தவில்லை.  ஒன்றுபட வேண்டுமானாலும் ஒருவர் ஒரு பொது நடவடிக்கையில் பங்களிப்பதும் பங்கு கொள்வதும் - தேவையாகும் - அப்போது தான் மற்றவர்களைத் தூண்டும் அதே உணர்ச்சிகள் தன்னிலும் எழும்பும். கூட்டு நடவடிக்கைகளில் தனிமனிதர் பங்கு கொள்ளவும் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பு நிலவும் போதுதான், அந்த பொதுநடவடிக்கையின் வெற்றியைத் தன் வெற்றியாகவும் அதன் தோல்வியைத் தன் வெற்றியாகவும் அதன் தோல்வியை தன் தோல்வியாகவும் அவர் உணர்வார். இத்தகைய பொதுச்செயல்பாட்டை சாதிமுறை தடுக்கிறது. இவ்வாறு கூட்டிசெயல்படுவதை சாதிமுறையானது தடுப்பதால், இந்துக்கள் ஒருங்கிணைந்த வாழ்வையும் தமக்குப் பொதுவானதொரு உணர்வையும் கொண்ட ஒரு சமுதாயமாக உருவாவதையும் சாதிமுறை தடுக்கிறது.

-     இந்துத்துவப் பிரபலங்கள், இந்து நாகரிகமும் பண்பாடும் மிகவும் தொன்மையானது எனக் கொண்டாடுகிறார்கள். அண்ணல் அம்பேத்கார் இவர்களுக்கு பதில் சொல்லுகிறார். "தானும் தன் இனத்தாரும் தொடர்ந்து உயிர் பிழைத்திருப்பதில் ஒரு இந்து ஆறுதல் அடைந்து பயனில்லை. தன் பிழைப்பின் தரம் எத்தகையது என்பதைத்தான் அவர் எண்ணிப்பார்க்க வேண்டும். அதை அவர் செய்வதில்லை என்றால் வெறும் உயிர்தரிப்பு பற்றிப் பெருமை கொள்வதை அவர் நிறுத்திவிட நேரும் என்பது உறுதி. ஒரு இந்துவின் வாழ்க்கை தொடர்ச்சியான தோல்விகளைக் கொண்ட வாழ்க்கையாகவே இருந்து வந்துள்ளது. முடிவற்ற வாழ்வாக அவருக்கு காட்சியளிக்கும் வாழ்க்கை, முடிவற்று வாழ்ந்து கொண்டிருப்பதல்ல, முடிவற்று நசிந்து கொண்டிருப்பதே ஆகும். உண்மையை ஏற்க அஞ்சாத சரியான மனம்படைத்த எந்த ஒரு இந்துவும், இப்படிப்பட்ட பிழைப்பைக் குறித்து வெட்கித் தலைகுனியவே செய்வார்.”
   
-     இந்திய தீபகற்பத்தில் பண்பாட்டுப் பொதுத்தன்மை இருப்பதாக 'இந்தியாவில் சாதிகள்' என்ற தன் தொடக்க கால எழுத்துகளில் ஒப்புக்கொண்ட அம்பேத்கர் பின்னர் அந்த முந்திய கருத்தையும் மறுக்கும் நிலைக்கு வருகிறார். "பொதுவான இந்திய பண்பாடு என ஒன்று ஒருபோதும் இருந்ததில்லை என்பதையும் வரலாற்றில் பார்ப்பனிய இந்தியா, பவுத்த இந்தியா, இந்து இந்தியா என மூன்று இந்தியாக்கள் இருந்து வந்துள்ளன. ஒவ்வொன்றும் அதனதன் பண்பாட்டைக் கொண்டுள்ளன என்பதையும் கண்டுணர வேண்டும். இரண்டாவதாக முசுலீம்களின் படையெடுப்புக்கு முற்பட்ட இந்தியாவின் வரலாறு, பார்பனீயத்திற்கும் புத்த சமயத்துக்கும் இடையிலான தீராத மோதலின் வரலாறாகவே இருந்து வந்ததை அறிந்துக்கொண்டாக வேண்டும். இந்து இரு மெய்விவரங்களையும் அறிந்தேற்காதவர், இந்தியாவின் மெய்யான வரலாற்றை - அதனூடாகத் தொடர்ந்து வரும் பொருளையும், நோக்கத்தையும் வெளிப்படுத்தும் வரலாற்றை ஒருபோதும் எழுதமுடியாது


-     இந்துத்துவ சக்திகள், இந்தியாவை ஒரு தேசம் என வலியுறுத்தி வரும் நிலையில் டாக்டர் அம்பேத்கர் அவர்களை ஏளனம் செய்கிறார்: "இந்தியாவை ஒரு தேசமாக மதிப்பிடுவது உண்மையில் ஒரு கற்பனைக் கருத்தை வளர்த்துவிடுவதே ஆகும்" வரலாற்று ரீதியாக இந்த மனிதர்கள் சாதிகளின் இருப்பைக் கண்டுகொள்ளாததன் மூலம், இந்திய தேசம் என்ற கற்பனையை ஊதிப் பெருக்கி வந்திருக்கிறார்கள்.  

-     தேசியவாதத்தை சாதியம் தடுக்கிறது என்பதை வன்மத்துடன் மறுக்கிறார்கள் இந்துத்துவவாதிகள். இந்தியா ஒரு தேசம் என அவர்கள் கற்பித்துக்கொள்கிறார்கள். எனவே இந்திய தேசம் என்று பேசாமல், இந்திய மக்கள் என்று எவரேனும் பேசினால் அவர்கள் மிகவும் வெகுண்டெழுகிறார்கள். இந்த மனப்பான்மையை நன்றாகவே புரிந்துக்கொள்ள முடிகிறது. அரசியல்வாதிகளிலும் வரலாற்றாளர்களிலும் பெரும்பாலோர் பார்பனர்களாய் இருக்கிறார்கள். எனவே இவர்கள் தம் முன்னோரின் குற்றங்களை வெளிப்படுத்தவோ அவர்கள் இழைத்த தீமைகளை ஒப்புக்கொள்ளவோ துணிவுற்றவர்களாக இருக்கமாட்டார்கள்.


-      நடைமுறையில் தீண்டப்படாதவர்களும் சாதி இந்துக்களுக்கும் இடையில் எந்த கலந்துறவாடலும் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பண்பாட்டு தேசியவாதம் என்று சங்கப்பரிவாரத்தின் கோயபெல்ஸ் பாணி புழுகுணித் திட்டங்களுக்கு மட்டுமே சேவை செய்யமுடியும்.

-     பட்டியல் சாதிகள் இந்து சமூகத்தின் மதச் சடங்குகளையே கடைபிடிக்கிறார்கள். இந்துக்களின் மதச்சார்பான - மதசார்பற்ற விதிமுறைகளை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். இந்து திருவிழாக்களையே அவர்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால், இவற்றிலிருந்து அவர்களுக்கு எந்த நன்மையையும் கிடைப்பதில்லை. அதற்கு நேர்மாறாக, அவர்களின் உடல்ரீதியாகவும், வசிப்பிடமாகவும் தள்ளியே வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஊருக்கு நடுவில் அவர்கள் வசிக்க அனுமதிக்கப்படுவதில்லை. ஊருக்கு வெளியே சேரிகளில் - புறம்போக்குகளிலேயே வாழ்கிறார்கள். ஒவ்வொரு சிற்றூருக்கும் தீண்டத்தகாத ஒரு பகுதி இருக்கிறது. அப்பகுதிகள் ஊருடன் இணைக்கப்பட்டிருந்தாலும் ஊரின் பகுதியாக இருப்பதில்லை. இந்து மக்கள் கூட்டத்திலிருந்து ஒதுக்கி - தனிப்பிரித்து அவர்கள் ஒரு நடத்தை முறைக்குள் கட்டுப்படுத்தப்படுகிறார்கள் - அதுவோ ஒரு அடிமை நிலைக்கே பொருந்தக்கூடியது.


-     உண்மையில் வரலாற்றில் வெகு தொடக்கத்தில் இருந்தே புவி முழுவதிலும் பெரும் புலப்பெயற்சிகள் நடந்தேறியுள்ளன. எனவே, நவீன உலகில் புகுந்துள்ள எந்த தேசமும் தனித்தன்மையை கூறமுடியாது. தம் இன்றைய பண்பாட்டின் கூறுகள் தம் மண்ணிலேயே பிறந்தன என்றும் எனவே அவை ஒரு தேசத்திற்குரியவை என்றும் எந்த தேசமும் உரிமை கொண்டாட முடியாது. சங்கப்பரிவாரம் தன் பாணி பண்பாட்டு தேசியவாதத்தை நிறுவவதற்கே இந்தியப்பண்பாட்டின் தனித்தன்மை பற்றி பேசுவதானால், இந்தியரின் தனித்தன்மை என்ன என்பதை அது விளக்கியாக வேண்டும்.

-     நம் பண்பாட்டு மூலவளத்தைப் கூர்ந்து பார்வையிட்டோமானால் அதில் பல வெளிநாட்டுப் பண்பாடுகளின் பங்களிப்புகளைக் காண்போம். நமது எழுத்துகளின் வரிவடிவங்கள், நம் கலைவடிவங்கள், கல்விக்கழகங்கள், சிற்பம், நடனங்கள், உணவு வகை, இசை, மொழி, ஆடை என ஏறக்குறைய எல்லாமே இந்த துணைக்கண்டத்துக்கு வெளியிலுள்ள பகுதிகளில் தோன்றி வந்துள்ளன. அசிரியர், பொனீசியர், கிரேக்கர், ரோமர், பாரசீகர், மத்திய கிழக்கைச் சேர்ந்த ஷகர்கள், துருக்கிய - சீன குஷானர்கள், அகிர்கள். குர்ஜார்கள், ஆப்கனியர், அராபியர், இறுதியாக ஆகிய எல்லோருமே நம் வரலாற்றின் போக்கில் தம் பண்பாட்டைப் பிரிக்க முடியாதபடி ஆழமாக பதிந்து சென்றிருக்கிறவர்கள் தான்; அவர்களில்லாத இந்தியப்பண்பாடு என்பதைக் கற்பனை செய்யவும் முடியாது. இந்த முடிவற்ற பண்பாட்டுபாரம்பரியம் மொத்தத்தையும் முற்றிலும் இந்தியப்பண்பாடு எனது தோன்ற செய்வதற்காக அதை சங்கப்பரிவாரம் தன் "சனாதன தருமத்தின்' முற்றுடைமையாக ஆக்கிக்கொள்ள முயலும் போது அவர்களின் பண்பாட்டுத் தேசியவாதம் என்னும் மேல்கட்டுமானம் முழுவதும் ஏற்றுக்கொள்ள முடியாததாகிறது.    

மீண்டும் சொல்வதானால், அண்ணல் அம்பேத்கரை பொறுத்தவரை தேசியவாதம் என்ற நவீனக் கருத்தாக்கம், மக்களிடையே நம்பிக்கையைத்தூண்டுவதும் அதன்மூலம் தாம் ஒருவருக்கொருவர் உறவுமுறையினர் என்ற கூட்டுணர்வை அவர்களிடத்தில் உண்டாக்குவதுமான சமுதாய - பொருளியல் அமைப்பைச் சார்ந்தே நிலவுகிறது. மனிதத்தன்மையற்ற அதன் (பண்பாட்டு தேசியவாதம்) நடைமுறையைப் பொறுத்தமட்டில் அது, அம்பேத்கர் எந்த கோட்பாடுகளுக்காக உறுதியாக நின்றாரோ அந்த அடிப்படைகளை நேர் எதிரான நிலையிலேயே உள்ளது.

- ராஜராஜன் ஆர். ஜெ
மூலம்: முசுலீம்கள் குறித்து அம்பேத்கர், கட்டுக்கதைகளும் உண்மை விவரங்களும் (ஆனந்த் தெல்தும்ப்டே)  

No comments:

Post a Comment