Saturday 30 May 2020

யார் இந்த குழந்தைகள்? - இனியன்

யார் இந்த குழந்தைகள்? - இனியன்

கேள்வி ஒன்று நீண்ட நாட்களாக என்னுள் இருந்து கொண்டே இருக்கிறது. தற்போது உலகமே CORONA COVID-19 முற்றடக்கக் காலத்தில் இருக்கும் நிலையில் மேலும் மேலும் அதிகரித்த வண்ணமே உள்ளது அக்கேள்வி.
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே நடைபாதை. ஒருநாள் தாய் ஒருவர் 3 வயதுடைய குழந்தையைச் சாலையோரத்தில் இருந்த மண்ணை தேங்காய் நாரில் தொட்டுக் குழந்தையைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்ததை பேருந்திலிருந்து பார்த்த போது முதன்முதலில் இக்கேள்வி தோன்றியதாக நினைவு. அவ்வப்போது அப்பகுதியில் நின்று கவனித்தது உண்டு. அம்மக்களின் மொழி, உடை முதல் துவங்கி வாழ்வில் வரைக்கும். குறிப்பாகக் குழந்தைகளின் போக்கு மற்றும் வளர்ச்சிகள், விளையாட்டுகள் என அனைத்தையும். அவர்களுக்கு வீடுகள் கிடையாது. நடைபாதைதான் வீடு. ட்ரெங்கு பெட்டிகள் தான் பாதுகாப்புப் பெட்டகம். சிறு தொகை என கிடைப்பது அனைத்துமே வேலைகள் தான். ஒரு சில குழந்தைகளைத் தவிர மற்றவர்கள் யாருக்கும் பள்ளிக்கூடம் படிப்பு என ஒன்றுமில்லை. அவற்றில் சேர்க்கையுமில்லை.
அதன் பிறகு எப்போது தோன்றியது என்றால் ஆம்பூர் அருகே மின்னூரில் இருக்கும் ஈழ தமிழர் முகாமிற்குச் சென்று அங்குள்ள குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த பொழுது தோன்றியது.
ஒற்றையடுக்கு செங்கல் சுவரும், ஆஸ்பெஸ்ட்டாஸ் கூரையும் தான், சிறு பெட்டிகள் போன்ற வரிசை வீடுகளும் தான் இவர்களுக்கு இருப்பிடம். கிட்டத்தட்ட 200 குழந்தைகள் வரை இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் மூன்றாம் தலைமுறையாக இதே அமைப்பிற்குள் வாழப் பழகிக் கொண்டிருப்பவர்கள். இவர்களுக்கு அடையாள அட்டை என்ற ஒன்று ஆதாருக்கு முன்பாக இருந்தது கிடையாது. ஆதாருடன் பிறகு அதனுடன் இணைந்து முகாமுக்கான அடையாள அட்டையுடன் தான் தங்களது வாழ்வியல் பயணத்தைத் துவங்குகிறார்கள் இங்கிருக்கும் மூன்றாம் தலைமுறை குழந்தைகள்.
இக்குழந்தைகள் அனைவரும் இங்குள்ள மருத்துவமனைகளில் தான் பிறக்கிறார்கள். இங்குதான் வளர்கிறார்கள். அருகே இருக்கும் பள்ளிகளுக்குச் செல்கிறார்கள். ஆனால் இவர்கள் தங்களை அடையாள படுத்திக்கொள்ளும் எந்தவொரு செய்கையும் செய்துகொள்ள முடிவதில்லை. முடியவும் முடியாது. முகாம் வாழ்வைத் தவிர இவர்கள் பிற வாழ்வியல் முறைக்குள் தங்களது முதல் 15 வயது வரை எதையுமே அனுபவித்துக் கொள்ளவும் இயலாது என்பது தான் இங்கிருக்கும் கட்டமைப்பு. அவர்களுடன் உரையாடிய பொழுதுகளில் இப்படியான கட்டமைப்பட்டக் கட்டுப்படுத்தப்பட்ட வாழ்வியல் முறைகளால் அவர்கள் எவற்றையெல்லாம் இழந்து வாழ்கிறார்கள் என்பதற்குக் கூடப் பெரும் பட்டியல் உள்ளது.
அடுத்ததாக இந்த 21-ம் நூற்றாண்டில் உலகையே உலுக்கியெடுத்த புகைப்படம் ஒன்று. சிரியா உள்நாட்டு போரின் காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் தஞ்சம் கேட்டுக் கடலில் சென்று துருக்கி கடற்கரையில் பிணமாகக் கரை ஒதுங்கிய 3 வயதுக் குழந்தை அலன் குருதியின் புகைப்படம் கண்டபோது சிந்தனையில் வந்து சென்றது அதே கேள்வி. இதனைத் தொடர்ந்து தேடினால் இதே போன்ற கடல் பயணங்களில் உலகம் முழுவதற்கும் ஏராளமான குழந்தைகள் இதே காரணங்களுக்காக இறந்திருப்பதும் தெரிய வருகிறது.
தற்போதும் சில தினங்களாக அந்தக் கேள்வி மிகத் தீவிரமாக மேலே எழுந்து கொண்டிருக்கிறது. இந்த covid19 முற்றடக்கக் காலம் துவங்கியது முதல் பலநூறு கி.மீ தூரம் நடந்தோ, தந்தையின் தோளிலோ, தாயின் கையிலோ, கழுத்து பையிலோ எனப் பல வடிவங்களில் பயணிக்கும் குழந்தைகள் மற்றும் அப்படியான பயணத்தில் இறந்த குழந்தைகள் என அனைத்தையும் காணும் பொழுதுகளிலும் எழும் அதே கேள்விதான் “யார் இந்தக் குழந்தைகள்?”.
இந்த கேள்விக்குப் பதிலாக விடையினைத் தேடினால் மேற்சொன்ன அனைத்து நிகழ்வுகளுக்கும் ஓர் ஒற்றுமை புலப்படும். அது தான் புலப்பெயர்வு.
உணவு, வருமானம், உயிர், வாழ்வாதாரம் எனப் பல காரணங்களுக்காக மனித இனம் மட்டுமல்லாது அனைத்து உயிரினங்களுக்கும் புலப்பெயர்வு என்பது இயல்பான ஒன்றாகவே தான் இருந்திருக்கிறது. ஆனால் மனிதர்களின் நிலையான வாழ்வு என்னும் அடிப்படை துவங்கிய பிறகுதான் புலப்பெயர்வு என்பது மேற்சொன்ன காரணங்களுடன் இணைந்து போர்கள், ஜாதிய-மத ஒடுக்குதல்கள், நிலத்தின் வறுமை போன்றவற்றால் புலப்பெயர்வுகள் நடைபெறத் துவங்கி இந்த நிமிடம் வரை அவை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
அப்படியான புலப்பெயர்வுகள் அனைத்தும் பெற்றோர்களால் தானே நடைபெறுகிறது, பெற்றோர்கள் சரியாய் இருந்தால் குழந்தைகளுக்குப் பாதிப்பு இல்லைதானே இதில் நீ வருத்தப்படுவது பெற்றோர்கள் மீதுதானே” என்றான் நண்பன் ஒருவன்.
எப்படி பெற்றோர்கள் மட்டுமே காரணமாக ஆகியிருக்க முடியும். அவர்கள் இடம் பெயர்தலுக்கான அடிப்படை காரணங்களைக் கண்டடைந்து களைவதில் அரசின் பங்கு என்ற ஒன்று இருக்கத்தானே செய்கிறது. அதனால் பெற்றோர்களை விட அரசும், ஆளும் வர்க்கங்களும், போர், வன்முறை போன்றவற்றை உருவாக்கும் உலக அமைப்புகளும் தானே காரணமாக இருக்க முடியும் என்றேன்.
அதேநேரம் புலப்பெயர்வு அனைவருக்கும் ஒரே அளவீட்டிலும் ஒரே போன்றதொரு பிரச்சனைகளிலும் இருக்கிறதா என்றால் நிச்சயம் கிடையாது. இவ்விடத்தில் வர்க்கமும் உள்ளே நுழைந்து கொண்டு செயலாற்றத்தானே செய்கிறது. அப்படி வர்க்க ரீதியில் செயலாற்றினாலும் அங்கேயும் உடனடியாக அடையாளச் சிக்கலில் பாதிக்கப்படுவது குழந்தைகள் தானே என்னும் கேள்விகளும் எழாமல் இல்லை.
ஏதோவொரு வகையில் இம்மாதிரியான சூழல்களால் புலப்பெயர்வுகள் நடைபெற்று விட்டாலும் கூட அங்கிருக்கும் குழந்தைகளின் சரிவிகித வளர்ச்சியும் வாழ்வியல் ஆதாரமும் கட்டமைக்கப்படுகிறதா என்றால் நிச்சயம்  கிடையாது. உலகளாவிய அளவில் இதுதான் நிலை. விதிவிலக்காக ஒருசில அரசாங்கங்கள் அம்மாதிரியான கட்டமைப்பை உருவாக்கி வைத்திருக்கின்றன என்பது ஆறுதல்.
மற்றபடி இங்கு என்ன நடைபெறுகிறது. அம்மாதிரியான புலம்பெயர் குழந்தைகளின் நிலை என்னவாக இருக்கிறது எனப் பார்த்தால், நடைபாதையில் வளரும் குழந்தைகளின் வாழ்வாதாரம் மற்றும் அடையாளம் என்பது பெரும்பாலும் நடைபாதையாக மட்டுமே வளர்த்தெடுக்கப்படுகிறது. அவர்கள் ஒரே மொழி, இனம் என்னும் வரையறைக்குள் இருந்தாலும்.
அடுத்ததாக ஈழ தமிழர் முகாம்களில் தற்போது இருக்கும் குழந்தைகள் மூன்றாம் தலைமுறையாக இங்கு இருக்கிறார்கள். அதிலும் நான்காம் தலைமுறைகளும் துவங்கிவிட்டதாக நண்பர்கள் சொல்லி கேள்விப்படுகிறோம். இருந்தும் அவர்களுக்கான அடையாளம் என்பது முகாம் குழந்தைகள் என்பது மட்டுமே. அவர்களால் விளையாடக் கூட முகாமை விட்டு வெளியே வரமுடியாத சூழலில் தான் இந்த மூன்று மற்றும் நான்காம் தலைமுறை குழந்தைகளும் உள்ளனர். இத்தனை தலைமுறைகள் கடந்தாலும் அக்குழந்தைகளால் ஒரு தொலைக்காட்சிப் போட்டிகளில் கூட பங்கேற்று விடமுடியாத அளவிற்கான அடையாளத்துடன் தான் இந்த அரசியல் கட்டமைப்பு உருவாக்கி  வைக்கப்பட்டுள்ளது.
பலநூறு கி.மீ நடையாய் நடந்து கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு இப்போது தெரியப்போவதில்லை நாம் ஏன் நடந்து கொண்டிருக்கிறோம் என. ஆனால் அவர்கள் நடைப்பயணம் முடித்து அவர்கள் இருப்பிடம் என்ற ஒன்றை அடைவார்கள், அங்கு வளரவும் செய்வார்கள். ஆனால், பசி, குறைந்தபட்ச வருமானம் என்றெல்லாம் துவங்கி ஜாதி ஒடுக்குதல், மத வெறுப்பு என்னும் பெயர்களால் அவர்களது வாழ்வியல் சூழல் மீண்டும் அவர்களைப் புலம்பெயர்தலை நோக்கி நகர்த்தத்தான் செய்யும்.
இப்படியான சூழலைச் சந்திக்கிற ஒவ்வொரு குழந்தைகளும் அவர்களின் வாழ்வியலும் யார் இந்த குழந்தைகள் என்னும் கேள்வியோடும் யாரால் இப்படியெல்லாம் இருக்கிறார்கள் என்னும் கேள்வியோடும் மட்டுமே நகர்கிறதே தவிர இயல்பானதாக இருப்பதில்லை.

-பயணங்கள் தொடரும்
- இனியன் (eniyan.blog@gmail.com)

No comments:

Post a Comment