Saturday 30 May 2020

ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்: புத்தக விமர்சனம் – சுபாசினி

ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்: புத்தக விமர்சனம் – சுபாசினி

ழுத்தாளர் இராஜ் கவுதமன் அவர்கள் எழுதிய ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும் என்ற நூலைப் படித்ததை ஒட்டி என் மனதில் எழுந்த எண்ணங்களை இக்கட்டுரை வாயிலாகப் பகிர்ந்து கொள்கிறேன். இதை நான் ஒரு நூல் விமர்சனமாகவோ நூல் அறிமுகமாகவோ எழுதவில்லை, மாறாக அந்த நூல் விட்டுச்செல்லும் செய்திகளையும் கேள்விகளையுமே பகிர்ந்துகொள்கிறேன். ஆம், அந்த நூல் ஏற்கனவே இருந்த சில கேள்விகளுக்கு பதிலையும், பல புதிய கேள்விகளையும் விட்டுச்சென்றிருக்கிறது.

அந்த நூலின் வழி ஆசிரியர் புலவர் மரபில் எழுதப்பட்ட பாடல்கள் வழி பாணர் மரபையும், அவர்கள் வாழ்ந்த பெருங்கற்கால நாகரிகச்சமூகத்தின் வாழ்வையும் மீட்டுருவாக்கம் செய்ய முயல்கிறார். அந்த நூலில் இரண்டு பெரும் தலைப்புகள் இருக்கின்றன, ஒன்று ஆகோள் பூசல் பற்றியது மற்றொன்று பெண்களும் காதலும் பற்றியது.

வெட்சி கரந்தை என்று புறம் பாடியதற்கும், ஆகோள் பூசலைப் பற்றி அகப்பாடல்கள் பாடியதிற்கும் நிறைய வேறுபாடுகளும் முரண்களும் இருக்கின்றன. கல்வெட்டுச்சான்றுகளுக்கும் இலக்கியங்கள் பாடும் ஆகோள் பூசலுக்குமே கூட நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இவற்றை வெறும் முரண்கள் என்று விட்டுவிடாமல், அந்த முரண்களை அலசுகிறார். அதன் மூலம் புலவர் மரபு எப்படி பாணர் மரபின் கருத்துக்களாலும் கவிதைகளாலும் உந்தப்பட்டிருக்கிறது என்பதைப் புலப்படுத்துகிறார்.

இவை வெறும் முரண்கள் அல்ல. புலவர் மரபிற்கு அடித்தளமான சங்க காலச்சமூகத்திற்கும், அதற்கு முந்தைய நிலையில் வாழ்ந்த பாணர் மரபின் அடித்தளமாக அமைந்த பெருங்கற்கால நாகரிகத்துச் சமூகத்திற்கும் உள்ள சமூக அமைப்பிற்கான வேறுபாட்டின் வெளிப்பாடு.

முதற்கட்டுரையைப் படித்த போது நான் புரிந்துகொண்டது என்னவென்றால், சங்க இலக்கிய காலத்தில் பல வகையான இனக்குழுக்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்திருக்கிறார்கள். வேட்டையாடிக் குழுக்கள் தொடங்கி அரச மரபுவரை அனைவரும் வாழ்ந்திருக்கின்றனர். பெருங்கற்கால நாகரிகம் சங்க காலத்திற்கு முந்தைய நிலை சமூகம் என்றாலும், சங்க காலத்துச்சமூகம் காலத்தால் பிந்தையதாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. காரணம், சமூகங்கள் மருத நிலத்து பண்பாட்டுக்கு மாறிக்கொண்டிருந்த போதும் மாற்றத்தை விரைவாக ஏற்காத சமூகங்களும் அதே காலக்கட்டத்தில் வாழ்ந்திருக்கின்றனர்.

இப்படியிருக்க, புலவர் மரபு எழுதிய பாடல்கள் கடந்த காலத்திலும், சம காலத்திலும் வாழ்ந்திருந்த பாணர்களின் பாடல்களில் இருந்து காட்சிகளைக் கடன் பெற்றிருக்கின்றன. Lost in translation போல அப்படிக் கடன்பெறப்பட்ட கருத்தாக்கங்கள் கடன்பெறப்பட்ட சமூகங்களின் கட்டமைப்பிற்காக மாற்றம் பெறும் போது ஏற்பட்டவையே இந்த முரண்கள்

பெருங்கற்கால நாகரிகத்தின் அன்றாட வாழ்க்கையின் பூசலான ஆநிரை கவர்தல், புலவர் மரபில் மன்னர்களின் வீரத்தின் வெளிப்பாடாக உருமாறுகிறது. வறட்சியில் வாடிய சில வேட்டுவ குலத்து மக்களின் கதை, பாலை நோக்கிப் பயணம் செய்யும் காதலனை நினைத்து வாடும் தலைவியின் துயர் சொல்லும் காதல் கவிதைகளாய் மாறுகின்றது.

மறத்தை ஒட்டிய கருத்தாக்கங்களில் மட்டும் அல்ல, காதலை ஒட்டிய கருத்தாக்கங்களிலும், குறிப்பாக பெண்களைப் பற்றிய கருத்தாக்கங்களிலும் இதுபோன்ற முரண்கள் இருப்பதை நம்மால் காண முடியும். அதைத் தான் இந்த நூலின் இரண்டாவது கட்டுரை பேசுகிறது. சங்க இலக்கியக் காலத்தில் பெண்ணடிமைத்தனம் இருந்ததற்கான சான்றுகள் நிறைய இருக்கின்றன, ஆனாலும் பெண்ணடிமைச்சமூகத்தில் நடக்க முடியாத சில காதல் காட்சிகள் சங்க இலக்கியத்தில் நடைபெறுகின்றன. அதற்கு புலவர் மரபு வலிந்து வேறு காரணங்களும் கற்பிக்கின்றனர். அதையெல்லாம் விட்டுவிட்டு அந்த முரண்களை மட்டும் அலசினால் நமக்கு தெரிவது ஒன்று தான்: புலவர் மரபு பாணர் மரபில் இருந்து காதல் காட்சிகளைக் கடன் பெற்று, அதைத் தங்கள் கவிதைகளில் பயன்படுத்தும் போது தங்களின் சமூகத்திற்கான கூறுகளையும் சேர்த்துக் கொடுத்திருக்கிறது.

எலும்பு திண்ணும் ஒட்டகம், கவரிமா, என்று முந்தைய கால நிகழ்வுகளை சங்க இலக்கியங்கள் பதிவு செய்திருக்கின்றன என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அப்படிப் பட்ட செய்திகளில் உள்ள முரண்களின் வாயிலாக பண்டைய சமூகத்தின் நெறிகளையும், நம்பிக்கைகளையும், வாழ்க்கை முறைகளையும் மீட்டிருவாக்கம் செய்ய முடியும் என்று இந்த நூலைப் படித்து உணர்ந்த போது, உண்மையில் வியப்பு தான் ஏற்பட்டது. உடனே, ஏன் பல இலக்கியங்களில், குறிப்பாக பெண்களைப் பற்றி வரும் வர்ணனைகளிலும், உவமைகளிலும் முரண்கள் இருக்கின்றன என்பது எனக்குப் புலப்படத் தொடங்கியது.

இதுவரை, திருக்குறள் போன்ற நூல்களில் இப்படி இலக்கிய முரண்கள் எழும் போது எல்லாம் அவற்றை 'இடைச்சொருகல்களாக இருக்குமோ' என்ற அளவில் தான் பார்க்கிறோம். ஆனால், அப்படி மட்டும் பார்க்கத் தேவையில்லை. அந்த முரண்களை புலவர் மரபிற்கு முந்தைய மரபின் சமூகக் கட்டமைப்பின் எச்சங்களாகவும் பார்க்கலாம்.

சரி, இந்த நூல் பதில்களையும் பதில்களைத் தரக்கூடிய புதுப்பார்வையையும் தானே விட்டுச்சென்றிருக்கிறது, பிறகு ஏன் நிறைய கேள்விகளை விட்டிச்சென்றிருப்பதாக நான் கூறினேன் என்று நீங்கள் வியக்கலாம். அக்கேள்விகள் யாதெனில், சிந்துவெளியில் இருந்து ஏற்கனவே நகரப் பண்பாட்டிற்கு பழக்கப்பட்டிருந்த திராவிட மொழிகளைப் பேசிய மக்கள் தெற்கு நோக்கி நகரும் போதும், அவர்களோடு திராவிட மொழி பேசிய வேட்டையாடி சமூகங்களும் நகர்ந்தார்களா? இல்லை, ஏற்கனவே தெற்கில் இருந்த வேட்டைச்சமூகங்கள் வேறு மொழிகளைப் பேசிக்கொண்டிருந்தார்களா?

இந்த நூல், ஆரியப் புலப்பெயர்விற்கும் முன்பான திராவிடப் புலப்பெயர்வைப் பற்றிய கேள்விகளை என்னுள் விட்டுச்சென்றிருக்கிறது என்றால் அது மிகையல்ல.

-            சுபாசினி (subhashini.mech@gmail.com)

No comments:

Post a Comment