Saturday, 30 May 2020

அண்ணா நிச்சயம் ஒரு மாபெரும் தமிழ் மகன் தான். - சுமதி விஜயகுமார்

அண்ணா நிச்சயம் ஒரு மாபெரும் தமிழ் மகன் தான்.
- சுமதி விஜயகுமார்
பெரியாருக்கும் கலைஞருக்கும் இடையில் இடைவெளி இருப்பது போலவே எனக்கு தோன்றும். ஒரு புத்தகத்தில் நிரப்பப்படாத பக்கங்களை போல. அண்ணாவை படிக்கும் வரை. அம்மாவிற்கு எல்லா தலைவர்களை பற்றியும் ஒரு கருத்து இருக்கும். கலைஞரை பற்றி கேட்டதில்லை. ஏனென்றால் அவர் ஒரு ஊழல்வாதி என்று பரப்பப்பட்டிருந்தது. பெரியாரை பற்றி கேட்ட போது அவரை பற்றி பெரிதாக தெரியாது என்று சொன்னார். அண்ணாவை பற்றி கேட்டபோது அவரிடம் இருந்த ஒரே ஒரு குறையை மட்டும் சொன்னார். அவருடைய புரிதல் மட்டும் தான் அது என்றெல்லாம் ஒதுக்கி தள்ளி விட முடியாது. அம்மா பெரிய பெரிய அரசியல் புத்தகங்கள் எல்லாம் படித்ததில்லை என்றாலும் அரசியல் இதழ்களை தவறாமல் படிப்பார். அந்த இதழ்களில் பல வருடங்களாக என்ன சொல்லி வந்தார்களோ அதை தான் அம்மா என்னிடம் சொன்னார்.

மக்களுக்காக சுயநலம் பாராமல் உழைத்த எந்த ஒரு தலைவரையும் இன்னொரு தலைவருடன் ஒப்பிடுவது முறையன்று. அவர் சறுக்கிய அல்லது தவறாக கணித்த ஒரு விஷயத்தை இன்னொரு தலைவருடன் ஒப்பிட்டு தாழ்த்துவது என்பது பண்பு இல்லை. ஆனாலும் காங்கிரஸ்க்கு ஒரு காமராஜரையும் கக்கனையும், கம்யூனிஸ்ட்க்கு ஒரு நல்லகண்ணுவையும் முன்னிறுத்தும் ஊடகங்கள் இன்னும் திராவிட கட்சிகளால் தான் நாடு பின் சென்று விட்டது என்று பரப்புரை செய்வது கடைந்தெடுத்த அயோக்யத்தனம் அல்லாமல் வேறில்லை. காமராஜரின் எளிமை நம் அனைவருக்கும் அத்துப்படி. ஆனால் பெரியார் அண்ணாவின் எளிமையை ஒரு போதும் நமக்கு சொல்வதில்லையே.

தமிழ்திசை வெளியீட்டில் வந்த அண்ணாவை பற்றிய 800 பக்க புத்தகத்தில் 600 பக்கம் வரை படித்தாயிற்று. இதுவரையில் இருக்கும் ஒரு உணர்வு, இப்படி ஒரு மனிதர் இருந்தார் என்பதை எப்படி மறைத்தார்கள் என்பது மட்டுமில்லை, மக்கள் எப்படி மறந்து போனார்கள் என்பதும் ஒரு பெரும் கேள்வி. அண்ணாவின் மறைவின் பொழுது கூடிய கூட்டம் வேறு ஒருவருக்கும் கூடியதில்லை என்று அம்மா சொல்ல கேட்டதுண்டு. அந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களின் அடுத்த தலைமுறைக்கு எப்படி கடத்தாமல் விட்டார்கள். இறுதி கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அதிகாரபூர்வமாக 1.5 கோடி மக்கள். அதற்கு தன்னை எப்படி தகுதிப்படுத்தி கொண்டார் அண்ணா என்பதை அறிந்தால் இனி ஒரு போதும் அவரை மறக்க மாட்டோம்.

அப்படி என்னதான் செய்து விட்டார் அண்ணா?

 முதல்வர் பதவியில் இருக்கும் போதே இறப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் முதல்வர் பதவியில் இருக்கும் போது கடனோடு இறந்த முதலமைச்சர்கள் எத்தனை பேர் என்று பட்டியலிட்டால் அவரின் எளிமை புரியும். அண்ணா தமிழ்நாட்டிற்கு வெறும் 20 நாட்களே முதலமைச்சராக இருந்தார். அதற்கு முன்பு இரண்டாண்டுகள் வரை அவர் மெட்ராஸ் மாகாணத்தின் முதலமைச்சர்.

காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று உண்ணா விரதம் இருந்து உயிர் துறந்த சங்கரலிங்கனாரின் விருப்பத்தை நிறைவேற்ற ஒரு அண்ணா தான் தேவைப்பட்டார்.

அண்ணா எத்தனை வேட்டி சட்டைகள் வைத்திருந்தார் என்ற விவரம் இந்த புத்தகத்தில் இல்லை. ஆனால் ஒரு வேட்டியை நான்கு நாட்களுக்கு கட்டுவாராம். முதலில் சாதாரணமாக பின்பு கீழிருக்கும் முனையை மேலே, அடுத்த நாள் வெளிப்புறத்தை உள்புறமாக கட்டுதல், அதற்கு அடுத்த நாள் கீழ் முனையை மேலே கட்டுவது என்று நான்கு நாட்கள் கட்டுவார். பொத்தானை சரியான வரிசையில் போடுவதை கூட காலவிரயம் என்று எண்ணி தாறுமாறாக போட்டு கொண்டு யார் எப்படி பார்த்தால் என்ன என்று விமானத்தில் பயணிப்பதெல்லாம் அண்ணாவிற்கு தான் சாத்தியம். அண்ணாவின் அடையாளம் என்பதே கசங்கிய அழுக்கான வேட்டி சட்டை, கலைந்த கேசம் தான்.

வெறும் எளிமையும் நேர்மையும் மட்டுமே ஒருவரை தலைவன் ஆக்கிவிடாது. மக்கள் வசீகரிப்பு முக்கியம். அதை விட முக்கியம் கொள்கை. அதை விட முக்கியம் அந்த கொள்கை மக்கள் நலன் சார்ந்ததாய் இருப்பது. அதை விட முக்கியம் அதற்கான செயல் திட்டம், அதை விட முக்கியம் அதை எதிர்க்கும் எதிரிகளை தன் பேச்சிலேயே வாயடைக்க செய்வது. இத்தனையையும் தன்னிடம் கொண்டவர் அண்ணா என்பதற்கு அவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்களே சாட்சி.

அவரின் சாமர்த்தியமான பேச்சுக்களை கேட்பதற்காகவே மக்கள் நாள் முழுவதும் காத்துக்கிடந்தார்கள். இருக்காதா பின்னர். 'ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி ' என்று அண்ணா தேர்தல் பிரச்சாரத்தில் கூறிவர, காங்கிரெஸ்ஸோ 'ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி’ என்று திரித்து கூற (அன்றைய பிஜேபி போல) அண்ணாவோ அதை மறுத்து பேசி மக்களிடம் நிரூபித்து கொண்டிருக்காமல் 'மூன்று படி லட்சியம், ஒரு படி நிச்சயம் ' என்று முற்றுபுள்ளியில் திமுகவின் தொடக்க புள்ளியை வைத்தார். பள்ளியில் படிக்கும் போது அண்ணா பற்றிய ஒரு பாடம் இருந்தது. அண்ணாவின் பேச்சை கேட்க வெகுநேரம் காத்திருந்தது கூட்டம். அண்ணா பேசத்துவங்கையில் அனைவரும் தூக்கம் கலங்கிய கண்களோடு சோர்ந்து போய் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களை பார்த்த அண்ணா பேசத்துவங்கியதும் 'மாதமோ சித்திரை, மணியோ பத்தரை. நம்மை தழுவுவதோ நித்திரை' என்று ஆரம்பித்தவுடன் ஆரவாரித்த மக்கள் கூட்டம் கலையும் வரையில் இமைகொட்டாது பார்த்தார்கள் என்றிருக்கும். இத்தனை ஆண்டுகள் கழித்தும் இன்னும் என் நினைவில் அந்த வரிகள் இருக்கிறதென்றால், அண்ணாவை எப்படி மறக்க முடியும். தமிழில் மட்டுமில்லை ஆங்கிலத்திலும் அருமையாய் உரையாற்றும் திறன் கொண்டவர். ஒரு சிறு குறிப்பு கூட இல்லாமல் ஆங்கிலத்தில் 1 மணி நேரம் பேசி இருக்கிறார்.

இருமொழி கொள்கை, ஜமீன்தார் ஒழிப்பு, நில உச்சவரம்பு அரசு போக்குவரத்து கழகம், என்று அடுக்கிக்கொண்டே போனாலும் அண்ணாவின் மாநில சுயாட்சி தான் முத்தாய்ப்பு. தனி நாடு கோரிக்கையை கைவிட்ட அண்ணா அதன் பின் எடுத்த ஆயுதம் தான் மாநில சுயாட்சி. அவர் நினைத்த அந்த மாநில சுயாட்சி மட்டும் தமிழ்நாட்டிற்கு கிடைத்திருந்தால், திராவிட கட்சிகளால் சீரழிந்த தமிழகம் என்று பேசும் வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும்.

அண்ணாவை ஒரு கட்டுரைக்குள் அடக்க நினைப்பதெல்லாம் வரலாறுக்கு நாம் செய்யும் துரோகம். இன்றைய திமுகவையும் ஆதிமுகவையும் வைத்து திராவிட சித்தாந்தத்தை எதிர்ப்பவர்களை அண்ணா சம்மட்டியால் அடித்திருக்கிறார். அண்ணாவை படிக்காமல் திராவிடத்தை விமர்சிப்பது எல்லாம் சிறுபிள்ளைத்தனம்.

அண்ணா நிச்சயம் ஒரு மாபெரும் தமிழ் மகன் தான்.

- சுமதி விஜயகுமார்

No comments:

Post a Comment