Saturday 25 July 2020

திராவிட வாசிப்பு - ஜூலை 2020 மின்னிதழ்

ணக்கம்.

திராவிட வாசிப்பு மின்னிதழின் பதினொன்றாவது இதழ் இது.

இம்மாத இதழில், பெரியாரிய வாழ்வியலை குறித்து தோழர் கனிமொழி எழுதும் அன்றாட வாழ்வில் பெரியாரியல் தொடரில் உளஉறுதி குறித்து எழுதி இருக்கிறார். தொடரும், குழந்தைகள் செயல்பாட்டாளர் இனியனின் ‘குழந்தைகளும் நானும்’ தொடரில் "பேரிடர் காலத்து குழந்தைகள்" என்ற தலைப்பில், நான் அதிகம் பேசாத, அறியாத விஷயங்களை தொட்டு எழுதி இருக்கிறார். தொடர்ச்சியான உரையாடல்களை தங்களது கட்டுரைகள் மூலம் இவர்கள் நடத்தி வருகிறார்கள்.

கலைஞர் டிவி ஆசிரியர், ப. திருமாவேலன் அவர்கள் எழுதிய "காந்தியார் சாந்தியடைய" புத்தகத்தை வைத்து "காந்தியின் - ராமராஜ்யம்" என்கிற கட்டுரை வெளியாகி இருக்கிறது. அண்ணல் அம்பேத்கர் எழுதிய "ஒரு விசாவுக்கு காத்திருத்தல்" புத்தகத்தின் அறிமுகமும் இந்த இதழில் வெளியாகி இருக்கிறது. கட்டாயம் வாசிக்க வேண்டிய கட்டுரைகள் இவை.

சமூகநீதிக்கதைகள் பகுதியில், Independent Architect ஜெயஸ்ரீ ராமலிங்கம் அவர்களின் வெற்றிக்கதையை படிக்கலாம்.

பல்சுவையும், பல்வேறு தகவல்களையும் தரும் ஒரு இதழாக இது இருக்கும்.

திராவிட வாசிப்பு குறித்த உங்களது மேலான கருத்துகளை, விமர்சனங்களை எதிர்பார்க்கிறோம். கீழ்காணும் மின்னஞ்சலுக்கு உங்கள் கருத்துகளை சொல்லுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி! 

உங்கள் படைப்புகளையும், கருத்துகளையும் இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்: dravidavaasippu@gmail.com

கட்டுரைகளை திராவிட வாசிப்பு ஆன்லைன் பக்கத்திலும் வாசிக்கலாம்: https://blog.dravidiansearch.com/


இப்படிக்கு,
திராவிட வாசிப்பு Editorial Team:
(அருண் ஆஷ்லி, அசோக் குமார் ஜெ, அஷ்வினி செல்வராஜ், தினேஷ் குமார், ஜெகன் தங்கதுரை, கதிர் ஆர்.எஸ்., மனிதி தெரசா, இராஜராஜன் ஆர். ஜெ, யூசுப் பாசித், விக்னேஷ் ஆனந்த், விஜய் கோபால்சாமி)

இதழை வாசிக்க: திராவிட வாசிப்பு - ஜூலை 2020 மின்னிதழ் 

திராவிட காணொலிகள்

திராவிட காணொலிகள்

தகத்தகாய சூரியன் ஆ.இராசா அவர்களுடன் ஓர் நேர்காணல்


OBC Reservation - Failed State of India


திராவிட முன்னேற்ற கழக வரலாறு- பாகம் 1 பேரறிஞர் அண்ணா (1949-1969)


குழந்தைகளும் சமூகநீதியும் - குழந்தைகள் செயல்பாட்டாளர் இனியன் அவர்களுடன் ஒரு உரையாடல்!



திராவிட நாட்காட்டி - ஜூலை

திராவிட நாட்காட்டி - ஜூலை

ஜூலை 1
கூட்டுறவு நாள்/ டாக்டர்கள் நாள்
1906 - “இராவண காவியம்” புலவர் குழந்தை பிறப்பு
1910 - உடையார்பாளையம் ஆசிரியர் வேலாயுதம் பிறப்பு

ஜூலை 2
1778 - ரூசோ மறைவு
1967 - ஆனைமலை நரசிம்மன் மறைவு

ஜூலை 6
1870 - பரிதிமாற்கலைஞர் பிறப்பு
1958 - மன்னார்குடியில் “சுதந்திரத் தமிழ்நாடு” மாநாடு
1994 - உலக நாத்திக அமைப்பில் (IHEU) திராவிடர் கழகத்துக்கு அங்கம்

ஜூலை 7       
1859 - இரட்டைமலை சீனிவாசன் பிறப்பு
1998 - ஜப்பான் - குளோனிங் முறையில் இரு கன்றுக்குட்டிகள் பிறப்பு

ஜூலை 8
1822 - கவிஞர் ஷெல்லி மறைவு

ஜூலை 9
1866 - பனகல் அரசர் பிறப்பு
1949 - பெரியார் மணியம்மை திருமணம் என்ற பெயரில் ஏற்பாடு

ஜூலை 10
1937 - மாயவரம் நடராசன் மறைவு

ஜூலை 14
1789 - பிரெஞ்சு புரட்சி தொடக்கம் (பாஸ்டில் சிறையுடைப்பு)

ஜூலை 15
1876 - மறைமலையடிகள் பிறப்பு
1903 - காமராசர் பிறப்பு (கல்விப் புரட்சி நாள்)

ஜூலை 17
1919 - டாக்டர் டி. எம். நாயர் மறைவு
1976 - டாக்டர் ஏ. இராமசாமி மறைவு

ஜூலை 18
1918 - கருப்பு வைரம் நெல்சன் மண்டேலா பிறப்பு
1967 - சென்னை மாகாணம் “தமிழ்நாடு” என சட்டமன்றத் தீர்மானம்
1997 - இந்தியக் குடியரசுத் தலைவராக முதல் தாழ்த்தப்பட்டவர் கே. ஆர். நாராயணன் வெற்றி

ஜூலை 19
1994 - 31 (சி) சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

ஜூலை 20
1969 - ஆம்ஸ்ட்ராங் நிலவில் முதலடி எடுத்து வைத்த நாள்
1982 - மம்சாபுரத்தில் பொதுச் செயலாளர் கி. வீரமணி தாக்குதலுக்கு உள்ளாதல்

ஜூலை 21
1899 - இங்கர்சால் மறைவு
1929 - ஓ. தணிகாசலம் (நீதிக்கட்சி) மறைவு
1989 - மாயூரம் நீதிபதி வேதநாயகம் மறைவு

ஜூலை 22
1968 - டாக்டர் முத்துலட்சுமி மறைவு

ஜூலை 23
1957 - டாக்டர் வரதராசுலு மறைவு

ஜூலை 24
2011 - தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களுக்கு “ஜஸ்டிஸ் பி. எஸ்.ஏ. சுவாமி” விருது
 வழங்கப்பட்டது.

ஜூலை 25
1983 - குட்டிமணி, ஜெகன், தங்கதுரை உட்பட 37 பேர் இலங்கை - வெலிக்கடை சிறைக்குள் படுகொலை
2017 - ஜெர்மனி பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாடு தொடக்கம் (மூன்று நாட்கள்)

ஜூலை 26
1856 - பெர்னார்ட்ஷா பிறப்பு
1902 - சாகு மகாராஜ் இட ஒதுக்கீடு முதல் ஆணை
1997 - இராமேசுவரத்தில் கச்சத்தீவு மீட்புரிமை மாநாடு

ஜூலை 27
1876 - நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் பிறப்பு

ஜூலை 28
1936 - பெரியாரின் அன்னையார் சின்னத்தாய் அம்மையார் மறைவு
இயற்கை பாதுகாப்பு நாள்

ஜூலை 29
1944 - தந்தை பெரியாருடன் தமிழர் தலைவர் கி. வீரமணி முதல் சந்திப்பு. திராவிடர் இயக்கத்தின் ‘திருஞானசம்பந்தர்’ சிறுவன் வீரமணி என்று அறிஞர் அண்ணா புகழாரம் சூட்டினார்.

ஜூலை 30                                               
1886 - டாக்டர் முத்துலட்சுமி பிறப்பு
1955 - தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படமாட்டாது என்று காமராசர் வாக்குறுதி அளித்த நாள்
1958 - ஜாதி ஒழிப்பு வீரர் நன்னிமங்கலம் கணேசன் மறைவு (கோவை)
1961 - குஞ்சிதம் குருசாமி மறைவு

ஜூலை 31
1985 - கழக நடவடிக்கையால் பிற்படுத்தப்பட்டோருக்கான 50 விழுக்காடு இட ஒதுக்கீடு நீடிப்பு

தொகுப்பு: ராஜராஜன். ஆர். ஜெ

ஒரு விசாவுக்கு காத்திருத்தல் - அண்ணல் அம்பேத்கார்

ஒரு விசாவுக்கு காத்திருத்தல் - அண்ணல் அம்பேத்கார்

ண்ணல் அம்பேத்கர் அவர்களின் புத்தகங்களில் முக்கியமான ஒரு புத்தகம் "ஒரு விசாவுக்கு காத்திருத்தல்". அண்ணல் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாற்று படமான "பாபாசாகேப் அம்பேத்கார்" என்பது மிக முக்கியமான திரைப்படம். இந்திய மக்கள் அனைவரும் பார்க்கவேண்டிய திரைப்படம் அது. அந்த படத்தின் மூலம் அண்ணல் அம்பேத்காரின் வாழ்க்கை வரலாறோடு இந்திய சாதிய மதவாத சமூகத்தையும் நாம் புரிந்துக்கொள்ளலாம்.

பாபாசாகேப் அம்பேத்கார் திரைப்படத்தில் இடம்பெறும் சில காட்சிகளை தான் அம்பேத்கார் இந்த "ஒரு விசாவுக்கு காத்திருத்தல்" புத்தகத்தில் தன் கைப்பட எழுதி இருக்கிறார். இந்த புத்தகம் 1990 தான் வெளியாகிறது. இந்த புத்தகத்தை ஏன் எழுத வேண்டிய தேவை வந்தது? என்பதை அம்பேத்கார் சொல்லும்போது, மேலை நாட்டினார், இந்தியாவில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறார்கள். அவர்களுக்கு, இங்கு நடக்கும் தீண்டாமை கொடுமைகளை புரிந்துக்கொள்வதற்காக, சில அனுபவங்களை பகிர்ந்தால் அவர்களால் புரிந்துக்கொள்ள முடியும் என்ற நோக்கத்தினால் தான் இந்த புத்தகத்தை எழுதியதாக சொல்கிறார்.

இந்த புத்தகத்தில் அண்ணல் அம்பேத்கார் வாழ்வில் இருந்து நான்கு நிகழ்வுகளையும், மற்றவர் வாழ்வில் இருந்து இரண்டு நிகழ்வுகளையும் சொல்கிறார். அனைத்துமே இந்திய சாதிய சமூகத்தின் உண்மை முகத்தை அப்பட்டமாக காட்டுவதாக இருக்கிறது. தீண்டாமை எத்தனை கொடியது என்பதையும் விளக்குகிறது.  

முதல் நிகழ்வு:

அண்ணல் அம்பேத்கார் அவர்களின் 9 வது வயதில் நடந்த ஒரு சம்பவம். 1901 ஆண்டு, அண்ணல் அம்பேத்கார் தன் தந்தையை பார்க்கச்செல்லும் போது ஏற்படும் அனுபவமே இந்த சம்பவம். அண்ணல் அம்பேத்காரின் தந்தை ராணுவத்தில் சுபேதாராக இருந்தார். வசதியான குடும்பமாக தான் அவர்கள் இருந்திருக்கிறார்கள். அவரின் தந்தை பக்கத்தில் ஒரு ஊரில் பணியில் இருக்கிறார். கோடை விடுமுறையில், பிள்ளைகளை அவர் இருக்கும் ஊருக்கு வருமாறு கடிதம் எழுதுகிறார். எங்கு வரவேண்டும், எப்படி வரவேண்டும், எந்த ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும், அங்கிருந்த அழைக்க ஒரு ஊழியரை அனுப்புகிறேன் என கடிதத்தில் குறிப்பிடுகிறார். அதற்கு அண்ணல் அம்பேத்காரின் அண்ணன் ஒரு தேதியை குறிப்பிட்டு வருவதாக பதிலும் எழுதுகிறார். அப்பாவை காணப்போகிறோம், அதிலும் ரயிலில் போகப்போகிறோம் என மிகுந்த ஆவலுடன் கிளம்புகிறார். அண்ணல் அம்பேத்கார், அவரது அண்ணன், அவரது அத்தை மகன்கள் இருவர் என அனைவரும் ரயில்நிலையம் வந்தடைகிறார்கள். ரயிலேறி அவரது தந்தை சொன்ன ரயில் நிலையத்தை மதியம் மூன்று மணிபோல வந்துவிடுகிறார்கள்.

ஆனால், அப்பாவின் கடிதத்தில் குறிப்பிட்ட மாதிரி, எந்த ஊழியரும் அழைக்க வரவில்லை. மணியாகிறது யாருமே வரவில்லை. அங்கே நான்கு சிறுவர்கள் தனியாக இருப்பதைப்பார்த்து அந்த ரயில்நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர் அவர்களிடம் வந்து, யார் நீங்கள் யாருக்காக காத்திருக்கிறீர்கள் என்று கேட்கிறார். அவர்கள் சொல்கிறார்கள். அவர்களுக்கு எதாவது உதவலாம் என நினைக்கிறார். நீங்கள் இந்துக்களாக? இந்துக்களில் யார்? என்று கேட்கிறார். 9 வயதான அம்பேத்கார், நாங்கள் மகர்கள் என்கிறார். உடனே, அந்த ஸ்டேஷன் மாஸ்டரின் முகம் மாறிவிடுகிறது. அதுவரை உதவ நினைத்தவர், உள்ளே சென்று விடுகிறார். சிறுவர்கள் மீண்டும் தனியாக நிற்கிறார்கள். அம்பேத்கார் சொல்கிறார். அதுவரை எனக்கிருந்த அந்த சந்தோச மனநிலை உடனே போய்விட்டது என்கிறார்.

உள்ளே சென்ற ஸ்டேஷன் மாஸ்டர் இன்னும் சில மணிநேரம் கழிந்து மீண்டும் வருகிறார். நீங்கள் எங்கே சொல்லவேண்டும் என்று கேட்கிறார். சிறுவர்கள் சொல்கிறார்கள். அங்கே செல்ல வேண்டும் என்றால் நீங்கள் குதிரை வண்டியில் தான் செல்லவேண்டும். ஆனால், இங்கிருக்கும் குதிரை ஓட்டிகள் யாரும் உங்களை ஏற்றமாட்டார்கள் என்கிறார். அவர்கள் மகர்கள் என்கிற விஷயம் அங்கிருக்கும் அனைவருக்கும் தெரிந்து விடுகிறது. கடைசியாக ஒரு தீர்வை ஸ்டேஷன் மாஸ்டர் சொல்கிறார். உங்களில் யாராவது ஒருவர் குதிரை ஓட்டவேண்டும், குதிரை ஒட்டி உங்களோடு வண்டியில் வரமாட்டார். அவர் தனியாக நடந்து வருவார் என்கிறார்கள். இதற்கு ஒத்துக்கொண்டு சிறுவர்கள் கிளம்புகிறார்கள். ஏற்கனவே நேரமாகிவிட்டது. வண்டி கிளம்பிய சில நேரத்தில், ஒரு இடத்தில் சாப்பிட நிறுத்துகிறார்கள். குதிரைவண்டிக்காரன் கொஞ்சம் காசை வாங்கிக்கொண்டு ஊருக்குள் சாப்பிட செல்கிறான். சிறுவர்கள் கையில் கொண்டுவந்த உணவை சாப்பிடுகிறார்கள். தண்ணீர் தாகம் அடிக்கிறது. கையில் தண்ணீர் இல்லை. பக்கத்தில் ஒரு குட்டை இருக்கிறது. ஆனால், தண்ணீர் மிக அசுத்தமாக இருக்கிறது.

அவர்கள் தண்ணீர் குடிக்காமல் இருக்கிறார்கள். வண்டிக்காரன் திரும்ப வர நேரம் ஆகிறது. ஒருவழியாக வருகிறான். மீண்டும் பயணம் தொடர்கிறது. ஒரு கட்டத்தில் குதிரைவண்டிக்காரனே வண்டி ஏறி ஒட்ட ஆரம்பிக்கிறான். பல மணி நேரம் வண்டி செல்கிறது. ஆனால், கண்ணுக்கு எட்டின தூரம் வரை எந்த வெளிச்சமும் இல்ல. கும்மிருட்டாக இருக்கிறது. சிறுவர்கள் இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது என்று கேட்கிறார்கள். வண்டிக்காரன் பதில் சொல்லவில்லை. ஒரு கட்டத்தில், சிறுவர்கள், நம்மை கடத்தி கொலை செய்யபோகிறானோ? உடம்பில் தங்க நகைகள் இருக்கிறதே என்றெல்லாம் யோசித்து பயந்து அழ ஆரம்பித்து விட்டார்கள் அந்த சிறுவர்கள். பிறகு, அந்த வண்டிக்காரன் சொல்கிறான். கொஞ்சம் பக்கத்தில் ஒரு சுங்கச்சாவடி இருக்கிறது. அதில் தங்கிவிட்டு நாளை காலை செல்லலாம் என்று. பல மணிநேர பயணத்திற்கு பிறகு அவர்கள் அந்த சுங்கச்சாவடியை அடைகிறார்கள். மீண்டும் பசிக்கிறது. இன்னொரு புறம் தண்ணீர் குடிக்காததால் தாகம் அப்படியே இருக்கிறது. அம்பேத்கார் தண்ணீர் கிடைக்குமா என்று அந்த குதிரைக்காரனிடம் கேட்கிறார். நீங்கள் மகர்கள் என்று தெரிந்தால் கொடுக்கமாட்டார்கள். இஸ்லாமியர் என்று சொல்லி கேட்டுப்பார் என சொல்கிறான். அவர் தனக்கு தெரிந்த உருதுவில் பேசி தண்ணீர் கேட்டுப்பார்க்கிறார். ஆனால், தண்ணீர் இல்லை. தண்ணீர் இல்லாமல் சாப்பிடவும் முடியாமல் சிறுவர்கள் தாகத்தோடே அந்த இரவை கடக்கிறார்கள். அடுத்த நாள், அண்ணல் அம்பேத்காரின் தந்தையை அடைகிறார்கள். அவர்கள் அனுப்பிய கடிதத்தை அவருக்கு சேர்க்காமல் விட்ட ஊழியரின் பிழையினால் தான் இந்த குழப்பம் என தெரிகிறது. ஆனால், அண்ணல் அம்பேத்கார் எழுதுகிறார். நான் சிறுவயதில் தீண்டாமையை அனுபவித்து இருக்கிறேன். பள்ளியில் தனியாக சாக்குப்பையில் உட்கார வைக்கப்பட்டிருப்பேன். அந்த சாக்கு பையை தினமும் எடுத்து வந்து வகுப்பை முடித்து மீண்டும் எடுத்து செல்ல வேண்டும். பள்ளியில் வேலை செய்யும் வேலைக்காரன் நான் உட்கார்ந்த சாக்கு துணியை தொடமாட்டான்.

மற்ற குழந்தைகளுக்கு தண்ணீர் தாகமெடுத்தால் ஆசிரியரின் அனுமதி வாங்கினால் போதுமானது. ஆனால், நான் குடிக்கவேண்டுமானால், ஆசிரியரின் அனுமதியுடன், ஓர் தீண்டத்தக்கவர்கள் குழாயை திறக்க வேண்டும். அவர்கள் இல்லாவிட்டால், தாகத்துடன் இருக்கவேண்டியது தான். இந்த மாதிரி வேலைகளுக்கு ஒருவரை ஆசிரியர் பயன்படுத்திவந்தார்.

எங்கள் வீடுகளில் அவரவர் துணிகளை நாங்களே, எங்கள் சகோதரிகளே சலவை செய்வார்கள். எங்களுக்கு வசதி இருந்தாலும், எங்கள் துணிகளை எங்கள் ஊர் சலவை தொழிலாளர்கள் எடுத்துக்கொள்ளமாட்டார்கள். அதே போல தான் முடிதிருத்துவதும். எங்களின் முடியை எங்கள் குடும்பத்தாரே திருந்துவார்கள். ஏனெனில், முடிதிருத்துபவர்கள் தீண்டத்தகாதவர்களுக்கு முடித்திருந்த சம்மதிக்க மாட்டார்கள்.

இப்படியான தீண்டாமை நிகழ்வுகள் எனக்கு தெரிந்திருந்தாலும், எனது ஒன்பதாவது வயதில் தான் தீண்டாமை என்பது எவ்வளவு கொடிய விஷயம் என்பதை தெரிந்துக்கொண்டேன்.

நாங்கள் தீண்டத்தகாதவர்களாக இருந்ததால் எங்களுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை என்பது என் மனதில் ஓர் அழியாத தழும்பை ஏற்படுத்திவிட்டது.

இந்த நிகழ்வுக்கு முன்பு தீண்டத்தக்கவர்களும் தீண்டத்தகாதவர்களும் இருந்து வருவது சாதாரணமான ஒரு விஷயம் தான் என்று எண்ணியிருந்த நான் தீண்டாமையைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினேன்.

இப்போது நேராக இந்த புத்தகத்தில் அம்பேத்கார் சொல்லும் மூன்றாவது நிகழ்வுக்கு செல்வோம்.

இது 1929 ஆம் ஆண்டு. இப்போது அண்ணல் அம்பேத்கார் இந்தியாவிலேயே மிக உயரிய படிப்பை அமெரிக்கா கொலம்பியா பல்கலைக்கழகத்தில், இலண்டனில் படித்தவர். அதுமட்டுமில்லாமல், பம்பாய் அரசின் பாரிஸ்டர்.

பம்பாய் மாகாணத்தின் தீண்டத்தகாதவர்களின் குறைகளைக் குறித்து விசாரிக்க அமைத்த குழுவில் உறுப்பினராக இருக்கிறார். அதையொட்டி ஒரு கிராமத்தில் தீண்டத்தகாதவர்களின் பிரச்சனை ஒன்றை விசாரிக்க செல்கிறார். விசாரித்துவிட்டு பம்பாய் திரும்புவதாக தான் அவரது பயணத்திட்டம் இருக்கிறது. ஆனால், அந்த ஊர் மக்கள், இரவு தங்களுடன் வந்து தங்கி செல்லுமாறு வேண்டுகோள் விடுகிறார்கள். அதனை தட்டாமல், அண்ணல் அம்பேத்கார் வந்த வேலையை முடித்துவிட்டு, மீண்டும் ரயில் நிலையம் வருகிறார். அங்கு அவரை வரவேற்க மக்கள் காத்திருக்கிறார்கள். அவருக்கு மாலையிட்டு மரியாதை செய்கிறார்கள். அந்த இடத்தில் இருந்து அந்த மக்கள் தங்கியிருக்கும் மார்வாடாவிற்கு செல்ல இரண்டு கிலோமீட்டர் தான். நடந்தே சென்று விடலாம். ஆனால், வெகுநேரமாயினும் ஒன்று நடக்காமல், அங்கேயே அவர் நின்றுக்கொண்டு இருக்கிறார். ஒரு வழியாக ஒரு குதிரைவண்டி வந்து நிற்கிறது. அவர் ஏறி உட்காருகிறார். குதிரைவண்டி கிளம்பிய சில நொடிகளில் பெரிய விபத்து ஒன்று நிகழ்வது போல ஒரு வண்டியுடன் மோத செல்கிறது. ஆனால், தப்பித்துவிடுகிறார்கள். அண்ணல் அம்பேத்காருக்கு குழப்பமாக இருக்கிறது. இந்த குதிரை ஓட்டிகள் சாதாரணமாக ஓட்டுவார்களே ஏன் இந்த தடுமாற்றம் என்று.

மகர் வாடாவை சென்று சேர ஒரு வாய்க்கால் பாலத்தை கடக்க வேண்டும். அந்த பாலத்தை கடந்து ஒரு செங்குத்தான பாதையில் திரும்பினால் மார்வாடா வந்துவிடும். அந்த பாலத்தை அடைகிறார்கள். அந்த பாலத்தில், ஓரமாக சுவர்கள் இல்லை. அந்த குதிரை வண்டி, அந்த பாலத்தின் முதல் கட்டையிலேயே இடித்து அண்ணல் அம்பேத்கார் தூக்கி வீசப்படுகிறார். அவரது கால் முறிகிறது. பலத்த காயம் ஏற்படுகிறது. மயக்கம் அடைகிறார். அவரை வண்டியில் ஏற்றி குறுக்கு வழியில் நடந்து சென்றவர்கள், ஊர் மக்கள், பெண்கள் எல்லாம் பதறி அடித்துக்கொண்டு ஓடிவருகிறார்கள். அழுது புலம்புகிறார்கள். அவரை தூக்கிக்கொண்டு சென்று மருத்துவம் செய்கிறார்கள்.

அண்ணல் அம்பேத்கார் என்ன நடந்து என்பதை சில நாட்கள் பிறகு தான் அறிகிறார். ரயில் நிலையத்தில் அவரை வரவேற்க காத்திருந்தவர்கள், அவரை மகர் வாடாவிற்கு அழைத்து செல்வதற்கு குதிரை வண்டியை ஏற்பாடு செய்ய நினைத்திருக்கிறார்கள். தங்கள் தலைவரை நடத்தி அழைத்துச்செல்வது அவருக்கான மரியாதையாக இருக்காது என்பது அவர்களது சிந்தனை. ஆனால், அங்கே இருந்த எந்த குதிரையோட்டியும் ஒரு தீண்டத்தகாதவரை எங்கள் வண்டியில் ஏற்றமாட்டோம் என்று சொல்கிறார்கள்.

அதாவது இந்தியாவிலேயே மிகப்பெரிய படிப்பை படித்தவர், ஒரு மிகப்பெரிய தலைவர், ஒரு மாகாணத்தின் பாரிஸ்டர். இருப்பினும், ஒரு படிக்காத, வருமானமே இல்லாத குதிரை ஓட்டி, அவரை தன்னை விட கீழானவராக நினைக்கிறான். காரணம் சாதி. 

அண்ணல் அம்பேத்கார் எழுதுகிறார்... அந்த குதிரை ஓட்டிகள் யாரும் வரவில்லை என்பதால் தான் தாமதம் ஆகிறது. கடைசியாக ஒரு ஒப்பந்தம் ஆகிறது. குதிரைவண்டிக்கான காசை கொடுத்துவிடுவதும், ஆனால், குதிரை அவர்கள் ஓட்டமாட்டார்கள் என்பதும் தான் ஒப்பந்தம். காசு கிடைக்கிறது என்றதும் குதிரை ஓட்டி சம்மதிக்கிறார். வண்டியை மகர்களில் ஒருவர் ஓட்டுகிறார். அவருக்கு வண்டி ஓட்ட தெரியாது. ஏனெனில், அது அவரது தொழிலில்லை. என்னை நடத்தி செல்வது மரியாதை குறைவு என்று நினைத்தவர்கள், என் உயிருக்கு ஆபத்து என்பதை உணரவில்லை என்று எழுதுகிறார்.

எழுதிவிட்டு, அண்ணல் அம்பேத்கார் இப்படி முடிக்கிறார்...

“அப்பொழுது தான் புரிந்தது ஓர் இந்து டோங்காவாலா (குதிரை வண்டிக்காரன்), ஒரு கடைநிலை வேலைக்காரனைப் போன்ற நிலையிலிருந்தால், தான் மற்ற எல்லா தீண்டாதாகவர்களையும் விட ஏன் பாரிஸ்டரையும் விடக்கூட உயர்ந்தவன் என்ற எண்ணம் கொண்டவன் என்பதைத் தெரிந்துக்கொண்டேன்.  “

இதுபோன்ற இன்னும் நான்கு சம்பவங்கள் இந்த புத்தகத்தில் இருக்கிறது. அது இந்திய சாதிய சமூகத்தின் கொடூர முகத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

 அவசியம் ஒவ்வொரு இந்தியரும் படிக்கவேண்டிய புத்தகம். புத்தகத்தை கிண்டிலில் வாசிக்கலாம்.

லிங்க்: https://amz.run/3PRd

இந்த கட்டுரையை ஒட்டிய விரிவான காணொலிகளை காண:




பாபாசாகேப் அம்பேத்கார் திரைப்படம்: https://www.youtube.com/watch?v=qwjXMrJ_pCQ



காந்தியின் ராமராஜ்யம் - ப. திருமாவேலன்

காந்தியின் ராமராஜ்யம் - ப. திருமாவேலன் 

காந்தியை புரிந்துகொள்ள திருமாவேலன் அவர்கள் எழுதிய "காந்தியார் சாந்தியடைய" என்கிற புத்தகம் முக்கியமானது என நினைக்கிறேன். இதில் காந்தியை இக்காலத்திற்கு ஏற்றவாறும் புரிந்துக்கொள்ள முடியும். அதாவது, இந்துத்துவம் பலமாக வேரூன்றி இருக்கும் இக்காலத்தில், காந்தி எவ்வித பார்வையைக்கொண்டிருந்தார் என்பதை புரிந்துக்கொள்ள இந்த புத்தகம் உதவுகிறது. பெரியாரிய, அம்பேத்காரியவாதிகள் காந்தி மீது எழுப்பப்படும் விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும், காந்தி வாழ்ந்த காலகட்டத்தில் அவர் ஆதரித்த, எதிர்த்த கருத்தியல்கள் எது, மனிதர்கள் யார்? யார் பக்கம் அவர் கடைசிவரை நின்றார் என்பதையும், அவர் ஏன் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதையும் புரிந்துக்கொள்ள இந்த புத்தகம் உதவும். இந்த புத்தகத்தின் முதல் கட்டுரையாக "ராமராஜ்யம்" என்பது இருக்கிறது. 58 பக்கங்கள் கொண்ட இந்த கட்டுரை மிகமுக்கியமானது. காந்தியின் வாழ்வை இது பருந்து பார்வையில் அலசுகிறது. காந்தி, மதங்கள் குறித்து கொண்ட பார்வைகள், திறந்த மனதுடன் அவர் எல்லா மதங்களையும் அணுகியது, இந்து மதப்பற்று, தீண்டாதார் பிரச்சனை, இந்து முஸ்லீம் கலவரங்கள், நாட்டு பிரிவினை, காந்தி கொலை என பல்வேறு விஷயங்களை தொட்டு அதில் காந்தியின் நிலைப்பாடுகளையும் சொல்லி எழுதப்பட்டிருக்கும் கட்டுரை இது. இதை வாசித்து முடிக்கும் போது, காந்தியை நம்மால் சிறிதளவேனும் உணர முடிகிறது என்பதே இக்கட்டுரையின் வெற்றி என சொல்லலாம்.

இப்போது கட்டுரையில் சொல்லப்பட்டிற்கும் சில பகுதிகளை பார்ப்போம்:

வேதகாலத்திருந்த பண்டைய வருணாசிரம தர்மத்தில் எனக்கு நம்பிக்கையுண்டு. தற்காலத்தில் அர்த்தமற்ற முறையில் அனுஷ்டிக்கப்படும் வர்ணாசிரம தர்மம் என்பது தர்மமல்ல

வேதங்களுக்கு மட்டும் தனித்து ஈஸ்வரத்தன்மை உண்டு என்று நான் கருதுவதில்லை. வேதங்களுக்கு எவ்வளவு ஈசுவரத்தன்மை உண்டோ அவ்வளவு ஈசுவரத்தன்மை கிறிஸ்துவ வேதமாகிய பைபிளுக்கும், முகமதியர் வேதமாகிய குர் ஆனுக்கும், பாரசீகரின் வேதமாகிய ஜெண்டவஸ்தாவுக்கும் உண்டு என்று நான் கருதுகிறேன்.

நான் ஒரு சீர்திருத்தக்காரன், ஆயினும் ஹிந்து தர்மத்தின் ஆணிவேராயுள்ள தத்துவங்களை ஒருபோதும் மீறி நடக்கமாட்டேன். விக்ரக ஆராதனையில் எனக்கு அவநம்பிக்கை. ஆயினும் எதோ ஒரு விக்ரகத்தைப் பார்த்தமட்டிலே பக்தி உணர்ச்சி பெருகும் அனுபவமும் எனக்கு ஏற்பட்டதில்லை. ஆனால் மனித இயற்கையோடு ஒட்டியது விக்ரக ஆராதனை. உருவத்தை தேடி அலைவது தான் மனித சுபாவம்.

தீவிர வைஷ்ணவராக இருந்த காந்தியின் பெற்றோர் விஷ்ணு கோவிலுக்கு போவது மாதிரியான பக்தியுடன் சிவன் கோவிலுக்கும் சென்றார்கள். ராமர் கோவிலுக்கும் போனார்கள். ஜைனர்கள் காந்தியின் வீட்டில் வந்து சாப்பிடுவார்கள். இதே போல காந்தியின் அப்பாவுக்கு முஸ்லீம், பார்சி நண்பர்களும் உண்டு. "மற்ற சமயங்களிடம் சகிப்புத்தன்மையுடன் நடந்துக்கொள்ளும் பண்பை இவைகளெல்லாம் சேர்ந்தே என்னும் வளர்த்தன" என்கிறார் காந்தி.

மனுஸ்ருமிதி குறித்து குறிப்பிடுகையில் " படைப்பைப் பற்றியும் அதுபோன்ற விஷயங்களைக் குறித்தும் அதில்  கூறப்பட்டிருந்த கதை எனக்கு அவ்வளவாக நம்பிக்கை ஊட்டுவதாயில்லை. இதற்கு மாறாக நாஸ்திகத்தை நோக்கி ஓரளவுக்கு என்னைச்  சாயும்படி அதை செய்தது”.

காந்தி படித்த சில நூல்கள்:  பகவத்கீதையை மொழிபெயர்த்த ஸர் எட்வின் அர்னால்டுக்கு எழுதிய “ஆசிய ஜோதி” என்ற புத்தகம் காந்திக்கு தரப்பட்டது. பிளாவட்ஸ்கி அம்மையார் எழுதிய “பிரம்மஞான திறவு கோல் படித்தார். அன்னிபெசன்டை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த போது, பிரம்ம ஞான சங்கத்தில் சேர மறுத்தார் காந்தி. பைபிள் படிக்க ஆரம்பித்தார். பழைய ஏற்பாட்டில் ஈடுபாடு ஏற்படவில்லை. புதிய ஏற்பாட்டில் 'மலை பிரசங்கம்' வாசகம் காந்திக்கு உணர்ச்சி ஏற்படுத்தியது. "கீதை, ஆசிய ஜோதி, மலைபிரசாங்கம் ஆகிய மூன்றும் ஒன்றே என்று கருத என் இளம் மனது முயன்றது. முகமது நபியை  பற்றி கார்லைல் எழுதிய நூலையும் படித்தார். பிரட்லாவின் நாத்திக நூலையும் வாசித்தார். பிராட் லா இறந்த போது அவரது இறுதி சடங்கில் காந்தி கலந்துக்கொண்டனர்.

வெளிநாட்டிலிருந்து திரும்பும் காந்தியை சாதியில் சேர்க்கக்கூடாது என்று ஒரு அணி தீவிரமாக இருந்தது. மூத்த சகோதரர் காந்தியை நாசிக் அழைத்துச் சென்று புண்ணியநதியில் நீராடக் செய்து தீட்டுக் கழித்தார். "இதெல்லாம் எனக்கு பிடிக்கவே இல்லை" என்கிறார் காந்தி.

எல்லாரும் சமத்துவமாக இருக்கும்படி செய்யவேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் தர்மம். இம்மாதத்தில் சேருவகிறவர்களெல்லோரும், உலகத்தில் வேறு எந்த சமயமும் அளிக்காத வகையில், சமத்துவத்தை அது அளித்தது...முகமதிய மதத்தை பின்பற்றியவர்கள் இந்தியாவின் மீது திடீரென்று தாக்கிய போது, ஹிந்து சமயம் திகைத்து போய்விட்டது. எல்லாவற்றையும் மிஞ்சக்கூடிய சக்தி இஸ்லாமுக்கு இருப்பதாகவும் தோன்றியது. சாதி வித்தியாசங்கள் மிகுந்து கிடந்த பொழுது மக்களுக்கு, சமத்துவம் என்ற தத்துவம் கவர்ச்சிகரமானதாக இல்லாதிருக்க முடியாது. இஸ்லாமிருந்த இயல்பான இந்தப் பலத்துடன் வாளின்  பலமும் சேர்ந்ததுக்கொண்டது.


ஹிந்து தர்மத்தில் நம்பிக்கையுள்ள நீங்கள் பூணூல் அணியாமலும், உச்சியில் குடுமி இல்லாமலும் இருக்கிறீர்கள்? என்று ஆச்சாரிய ராம தேவ்ஜி கேட்கிறார்.

இன்னொரு மதத்தை விட தன மதமே உயர்வானது என்று காட்டுவதற்கு அது பயன்படுமாயின் அப்பொழுது அச்சின்னம் புறக்கணிப்படுவதற்கே ஏற்றதாகும் என்கிறார் காந்தி.

காசி விசுவநாதசாமி கோவிலுக்கு சென்றுவிட்டு, அங்கு கோவில் சரியாக பாராமரிக்கப்படாததை பார்த்து, ஒரு கோவிலை கூட வைத்துக்கொள்ள நமக்கு இயலவில்லை, அப்போது நமது சுயராஜ்யம் எப்படி இருக்கும் என்று கேட்கிறார்.

காந்தியின் சில கருத்துகளை பகிர்ந்தால் அவரை புரிந்துக்கொள்ள நிச்சயம் முடியும் என்பதால் அப்படியே தர விரும்புகிறேன்.

ஹிந்துவாகிய நான், முஸ்லிம்களின் பிரச்சனையைக் குறித்து சிரத்தை எடுத்துக்கொள்வானேன் என்று கேட்கலாம். நீங்கள், என் வீட்டுக்காரர்கள். என் நாட்டினர். உங்கள் துயரத்தில் பங்குகொண்டாக வேண்டியது என் கடமை.

முஸ்லிம்கள் காங்கிரசில் சேருவதில்லை. சுயராஜ்ய நிதிக்குப் பணம் கொடுப்பதில்லை என்று ஹிந்துக்கள் புகார் செய்வதை அடிக்கடி கேட்கிறோம். அவர்கள் அழைக்கப்பட்டார்களா என்பதே இயல்பாக எழும் கேள்வியாகும். ஒவ்வொரு ஹிந்துக்கள் தங்கள் அக்கம் பக்கத்திலுள்ள முஸ்லிம்களை சேர்க்க விசேஷ முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். எனது முஸ்லீம் நண்பர்களுக்கு நான் ஒரே வார்த்தை தான் சொல்வேன். பொறுப்பற்ற அல்லது அறிவற்ற மதவெறி பிடித்த இந்துக்களின் செயல்களால் அவர்கள் மிரண்டுவிடக்கூடாது. கோபமூட்டினாலும் அடக்கத்துடன் இருப்பவனுக்குத்தான் சண்டையில் வெற்றி கிடைக்கும்.

ரத்தம் கொதிக்கும் சமயம், மனிதன் மிருக நிலைக்கு அந்த, மிருகம் போலவே நடக்கிறான். அவன் ஹிந்து, கிருஸ்துவனும், முஸ்லீம் அல்லது வேறு எந்த பெயர் கொண்டவனாயினும் சரி, இது தான் உண்மை.

அகிம்சையை நான் அதன் தீவிர நிலையில் நம்புவதாலும் பரப்புவதால் எனக்கு ஹிந்து மாதத்தில் இடமளிக்கவும் மறுக்கின்றனர். நான் மாறுவேடத்தில் உள்ள ஒரு கிறிஸ்துவின் என்று கூட சொல்லுகின்றனர். பெரும் காவியமாகிய கீதை கலப்பற்ற அகிம்சையையே போதிக்கிறதென நான்சொல்லும் போது, அது கீதையைத்திரித்து கூறுவதாகும் என்று அவர்கள் எனக்கு சொல்கிறார்கள். சில சமயங்களில் கொலை செய்வது கடமையாகும் என கீதை போதிப்பதாகச் சில ஹிந்து நண்பர்கள் சொல்லுகின்றனர்.

நான் ஒரு ஹிந்துவானால், ஹிந்து சமூகம் முழுவதுமே என்னைப் புறக்கணித்தாலும் நான் ஹிந்து அல்ல என்று ஆகிவிடமாட்டேன். இருப்பினும் எல்லா மதங்களின் முடிவும் அகிம்சையே என்பது தான் நான் கூறுவதாகும். 

இந்த காலக்கட்டத்தில், இந்துத்துவா தனது கோரமுகத்தை காந்தி மீது அதிகம் காட்ட ஆரம்பித்தது. ஆரிய சமாஜ்ஜியத்தை சேர்ந்தவர்களால் காந்தி கடுமையாக காயப்படுத்தப்பட்டார். இந்து மதத்தை குறுகிய எல்லைக்குட்படுத்தியவர் தயானந்த சரஸ்வதி என்பது காந்தியின் கணிப்பு. ஆரிய சமாஜிகளின் வேதபுத்தகமாக சொல்லப்படும் சத்தியார்த்தப் பிரகாசம் என்ற நூலை எரவாடா சிறையில் காந்தி படித்தார். இந்த புத்தகம் தனக்கு ஏமாற்றத்தைத் தந்தாக காந்தி விமர்சித்தார். மற்ற மதங்கள் இந்த புத்தகத்தில் திரித்து கூடப்பட்டதை காந்தி கேலி செய்தார்.

"குறுகிய நோக்கம் சச்சரவிடும் வழக்கமும் இருப்பதால் அவர்கள் (அதாவது ஆரிய சமாஜிகள்) மற்ற மதத்தினர்களுடன் சண்டைபோட்டுக்கொண்டிருப்பார்கள். "

காந்தி எதிர்பார்த்தது போல ஆரிய சமாஜிகளால் கண்டிக்கப்பட்டார். "சகிப்புத்தன்மையற்ற எதிர்ப்பு" என்ற தலைப்பில் மீண்டும் தனது எதிர்ப்பை காந்தி பதிவு செய்தார். ஆரிய சமாஜிகளின் கண்டன கடிதங்களை யங் இந்தியாவில் வெளியிட முடியாது என்று வெளிப்படையாக அறிவித்தார். 

பொது மனிதர்களும் பொது ஸ்தாபனங்களும் தொட்டால் சிணுங்கிகளாக இருக்கக்கூடாது. குறைகளை எடுத்துக்காட்டுவதை பெருந்தன்மையுடன் ஏற்க வேண்டும். குறுகிய வழி என எனக்குத் தோன்றியதை அவர்கள் விசாலமாக்குவார்களேயானால் சமாஜ்யத்திற்கு எதிர்காலம் மகத்தானதாக இருக்கும்.

ஆரிய சாமாஜிகள் காந்தியை விடவில்லை. கடிதங்கள் மேலும் மேலும் வந்துக்கொண்டே இருந்தது. முஸ்லிம்களின் பக்கம் காந்தி சாய்ந்துவிட்டார் என்றும், வேதங்களைப் பற்றி படிக்காமலேயே கருத்து சொல்கிறார் என்றும் காங்கிரி குருகுல தலைமைப் பேராசிரியர் ராமதேவர் எழுதிய கடிதத்தை யங் இந்தியாவில் காந்தி பிரசுரம் செய்தார். தயானந்தர் பற்றி பேரறிஞர்கள் சொன்னதை ஒரு மகாத்மா தனது கூற்றினால் புறக்கணித்துவிடமுடியுமா என்று கேட்டது இந்தக்கடிதம். இதை பிரசுரத்திவிட்டு குறிப்பு எழுதிய காந்தி, "தங்கள் நாட்டினர் என்னைச் சற்றும் சகிப்புத்தன்மையே இல்லாதவன் என்று வைத்துக்கொள்ளட்டும். ஆனால் நான் சொன்ன அபிப்பிராயங்களை கைவிடாமல் என்னிடமே வைத்துக்கொள்ளுகிற சுதந்திரத்தை மட்டும் அவர்கள் எனக்கு அளிக்கட்டும்"

இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக பேச்சும் எழுத்தும் பயன்தராது என்று சரோஜினி தேவி எழுதியது தான் உண்ணாவிரதம் இருக்க காந்தியைத் தூண்டியது. "மக்களின் அபார சக்தியைக் கிளப்பிவிடுவதற்கு காரணமாக இருந்த நான், அச் சக்தி தன்னையே அழிக்கும் போலிருந்தாள் பரிகாரம் கண்டுபிடிக்க வேண்டியதும் நான் தான்" என்று அவருக்கு பதில் எழுதினார்.

கலவரங்களுக்குள் எந்த விதத்திலும் தொடர்பில்லாத காந்தி, பிராயச்சித்தமாக உண்ணாவிரதம் இருக்கக்கூடாது என்று மகாதேவ தேசாய் கேட்டுக்கொண்டார்.

முஸ்லிம்களுடன் நட்புரிமை கொள்ளும்படி தான் இந்துக்களைக் கேட்டுக்கொண்டது இந்துக்களுக்கு துரோகம் செய்வதாக குற்றம் சாட்டப்படுகிறது என்று காந்தி பதிலளித்தார்.

நிலைமை இன்று நம்மை மீறிவிட்டது. அது ஆறு மாதங்களுக்கு முன் நம் கைக்குள் இருந்தது. (இன்று) நான் சொல்வதை யார் கேட்கிறார்கள்? என்று கேட்டார்.

1924 டிசம்பர் மாதத்தில் கர்நாடக மாநிலம் பெல்காமில் காங்கிரசின் 39 மாநாடு நடந்தது. காந்தி தலைமை வகித்தார்.

இந்து, முஸ்லீம் சமூகத்தினரின் மனதில் வேற்றுமை விதை பலமாக விதைக்கப்பட்டுவிட்டதை இம்மாநாட்டில் காந்தி ஒப்புக்கொண்டார். சமூகப் பொறாமைகளும் பாரபட்சங்களும் மறைந்தொழியும் வரை சிறுபான்மையினரின் விருப்பப்படி பெரும்பான்மையினர் நடக்க வேண்டும் என்றும் பெரும்பான்மையோர் தன்னலத் தியாகம் செய்து உதாரணம் காட்டவேண்டும் என்றும் இந்துக்களுக்கு காந்தி அறிவுரை கூறினார்."

இது அவர் மீது தீவிர இந்துக்களுக்கு கோபம் ஏற்படுத்தியது. காந்திக்கு கண்டன கடிதங்கள் மீண்டும் வர ஆரம்பித்தது. எல்லா விஷயத்திலும் முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்தால் என்ன நடக்கும் என்பதை உணர்ந்தீர்களா? என்று கேட்டது ஒரு கடிதம். இதற்கு தெளிவான பதிலை காந்தி எழுதினார்.

"அநேக விஷயங்கள் அசாத்தியமானவை. ஆனால் அவை மட்டுமே சரியானவை. சீர்திருத்தம் விரும்புகிறவனுடைய வேலை, தன் நடத்தையில் அதைச் செய்ய முடியும் என்று கண்கூடாக செய்துகாட்டி அசாத்தியதை சாத்தியமாக்குவதே. நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ளவர்களுடன் பேசுதல் சாத்தியமென்று எடிசனுக்கு முன் யார் நினைத்திருப்பார்கள்? மார்க்கோனி இன்னும் ஒரு அடி முன் சென்று, கம்பியில்லாச் செய்தி தொடர்பு வைத்துக்கொள்ளுவதை சாத்தியமாக்கினார். நேற்று அசாத்தியமாக இருந்தவை இன்று சாத்தியமாகும் விந்தையை நாம் தினசரி கண்டு வருகிறோம். இயற்கைத் தத்துவதை போலவே தான் மனத் தத்துவமும். "

சைத்தானின் தந்திரம் தான் தீண்டாமை என்றார் காந்தி. தீண்டாமைக்கு வேதங்களில் ஆதாரம் இல்லை என்று காந்தி சொன்னதை கண்டித்தும் வேதங்களில் இருக்கும் ஆதாரத்தை பட்டியலிட்டும் திருநெல்வேலியை சேர்ந்த ஆர். கிருஷ்ணஸ்வாமி ஐயர், யங் இந்தியாவுக்கு கடிதம் எழுதினார். தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் (1921) காந்தி சுற்றுப்பயணம் செய்தபோது தீண்டாமைக்கு எதிராகவும் கடுமையாகவும் பேசினார்.

சூத்திரர்கள் வேதங்களைக் கற்கக்கூடாது என்ற தடையை நான் ஆதரிக்க முடியாது. நாம் அந்நியருக்கு அடிமைகளாக இருந்து வரும் வரையில் நாமெல்லோருமே உண்மையில் தற்போது சூத்திரர்கள் தான் என்பது என் அபிப்பிராயமாகும்.

திருவாங்கூரிலிருந்து வந்த கடிதத்தில், பிராமணர்கள் அகிம்சையை கடமையாக கருதுவதாகும் மிருகங்களை கொல்வோர், மாமிசம் தின்பொருடன் சம்பந்தம் வைத்துக்கொள்வது கூட பாவமாக பிராமணர்கள் கருதுவதாகும் கூறப்பட்டிருந்தது. கறிக்கடைக்காரர், மீனவர், கள் இறக்குவோர், மாமிசம் சாப்பிடுபவர்கள், மது அருந்துபவர்கள் அருகில் வருவதையும் தொடுவதையும் தீட்டாக கருதி ஸ்நானம் செய்கிறோம். இந்த ஆதாரங்களின் மீதே தீண்டாமையும் நெருங்காமையும் விதிக்கப்படுகிறது. எனவே, இவை தான் அகிம்சா தர்மம் என்று அந்தக் கடிதம் கூறியது. இதற்கான காந்தி பதில் கிண்டலாக இருந்தது.

பிராமணர்கள் சைவ உண்போர் என்று கூறுவது ஓரளவு தான் உண்மை. அதாவது தென்னிந்தியா பிராமணர்கள் சம்பந்தப்பட்ட வரையில் தான் அது உண்மையாகும். மற்ற இடங்களில் பிராமணர்கள் தங்குதடையின்றி மீன் சாப்பிடுகிறார்கள். வங்காளத்திலும் காஸ்மீரகத்திலும் பிராமணர்கள் மாமிசமும் சாப்பிடுகிறார்கள்.

தவிர தென்னிந்தியாவில் மீன் சாப்பிடுவோர், மாமிசம் சாப்பிடுவோர் யாவரும் நெருங்காதவர் அல்ல. தீண்டாதவர் அல்லது நெருங்காதவர் என்று சட்டப்பூர்வமாக கருதப்படும் ஒரு குடும்பத்தில் பிறந்தவர் என்பதற்காக, பரிசுத்தமாக இருக்கும் நெருங்காதரைக்கூட சாதி பிரஸ்டராகவே கருதுகிறார்கள்.

மாமிசம் சாப்பிடும் பிராமணரல்லாதார் உயர்ந்த பதவிகளில் இருப்பார்களாயின், அவர்களுடன் பிராமணர்கள் தோளோடு தோள் இடித்துக் கொள்வதில்லையா? மாமிசம் தின்னும் ஹிந்து ராஜாக்களுக்கு பிராமணர்கள் மரியாதை செலுத்துவதில்லையா? 

பிராத்தனையின் போது குரானிலிருந்து ஓதக்கூடாது என்று காந்திக்கு கடிதம் வந்தது. இப்படி ஆட்சேபனை தெரிவிப்பவர்கள் இருக்கிறார்களாக என்று கேட்டார். ஆம் என்பதன் அடையாளமாக சிலர் கையை தூக்கினர். அப்படியானால் பிராத்தனையே நடத்துவதில்லை என்றார் காந்தி.

நான் பிராத்தனைக் கூட்டம் நடத்துவதை எதிர்ப்பவர்களை கூட்டத்திற்கு வரவேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன். அப்படியே வந்தாலும் அவர்கள் மாத்திரம் வந்து விரும்பினால் என்னை கொன்று விடட்டும். நான் கொல்லப்பட்டாலும் கூட ராமா, ரகீம் என்ற பெயர்களை உச்சரிப்பதை நான் விட மாட்டேன். எனக்கு அவ்விரண்டும் ஒரே கடவுளின் பெயர்கள் தான். இந்தப்பெயர்களை உச்சரித்திக்கொண்டே நான் சந்தோசமாக இறப்பேன்.

பிரார்த்தனை ஆரம்பமாகி குரான் வாசிக்கப்பட்டபோது,
"ஹிந்து தருமத்திற்கு ஜே" என்று இரண்டுபேர் முழக்கமிட்டார். கைதான அவர்களை விடுதலைச் செய்யச்சொன்னார் காந்தி. "சுலோகங்களை கோஷிப்பதால் மாத்திரம் ஹிந்து மதம் உயர்ந்துவிடாது. இப்போது நாம் கண்டா காட்சி இந்தியாவைப் பற்றிக்கொண்டிருக்கும் அடையாளமாகும்.”

முஸ்லிம்களிடம் மாத்திரமே எனக்கு அனுதாபம் உண்டு என்றும் அவர்களுக்கு ஆதரவாகவே நான் உண்ணாவிரதம் மேற்கொண்டிருப்பதாகவும் சிலர் என்னை நையாண்டி செய்கிறார்கள். அவர்கள் கூறுவது சரியே. சிறுபான்மையாருக்காகவும் தேவைப்படுவோருக்காகவும் என் ஆயுள் முழுவதும் நான் ஆதரவு அளித்து வந்திருக்கிறேன். ஒவ்வொருவரும் அப்படிதான் அளித்து வரவேண்டும். சுய நம்பிக்கையை இழந்து எந்த வகுப்பினரையும் வைத்திருப்பதால் ஒரு தேசம் பலவீனம் அடைந்துவிடுகிறது.

அன்று அவரது பிரார்த்தனையில் வெடிகுண்டு வெடித்தது.

ஜனவரி 20ம் தேதி மாலை பிரார்த்தனைக்கு பின் வெடிகுண்டு வெடித்ததை பற்றி காந்தி பேசும்போது,

இந்து மதத்தை பாதுகாப்பதற்கு இது வழியல்ல. நான் கூறும் வழியை அனுசரித்தால் மாத்திரமே ஹிந்து மதத்தை காப்பாற்ற முடியும். சிறு வயதிலிருந்தே நான் ஹிந்து மத முறைகளை பயின்று வந்திருக்கிறேன். பின்னர் கிருஸ்தவர்கள், முஸ்லிம்கள் முதலிய மற்ற மதத்தினருடன் நான் தொடர்புகொண்டேன். மற்ற மதங்களை ஓரளவு நன்கு ஆராய்ந்த பின், ஹிந்து மதத்திலேயே உறுதியுடன் இருந்து வருகிறேன். எனது குழந்தைப்பருவத்தில் எனக்குள்ள நம்பிக்கை இருந்ததோ அவ்வளவு உறுதியாக இன்றும் இருந்து வருகிறது. நான் நேசிக்கும் போற்றி பேணும் நடைமுறையில் அனுசரித்து வரும் மதத்தைப் பாதுகாப்பதற்கு கடவுள் என்னை ஒரு கருவியாகச் செய்வாரெனே நான் நம்புகிறேன். 

பானு பகுதியில் இருந்து 40 அகதிகள் பிர்லா மாளிகை வந்து காந்தியை பார்த்தார்கள். தங்களது துயரத்தை அவர்கள் சொல்ல சொல்ல கண்கலங்கியபடி காந்தி கேட்டார். அதில் ஒருவர் காந்தியை கோபப்பட்டார்.

"இவ்வளவுக்கும் நீங்கள்தான் காரணம். எங்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் நீங்கள் எங்காவது இமயமலைக்கு போய்விடுங்கள்" என்று அவர் சொல்ல... "யாருடைய கட்டளைப்படி நான் இமயமலைக்கு போகவேண்டும்" என்று காந்தி பதிலுக்கு கேட்டார். அவர்களை அனுப்பிவைத்துவிட்டு பிரார்த்தனைக்கு வந்த காந்தி,

இமயமலைக்குச் சென்று அங்குள்ள அமைதியை ஆனந்தமாக அனுபவிப்பதில் நான் அக்கறை கொள்ளவில்லை. இந்தக்கொந்தளிப்பான சூழ்நிலையிலிருந்து நான் எவ்வளவு அமைதியைப் பெற முடியுமோ அதைக்கண்டு நான் திருப்தி அடைவேன். எனவே நான் உங்கள் மத்தியிலேயே தங்கியிருக்க விரும்புகிறேன். நீங்கள் எல்லோரும் இமயமலைக்கு சென்றால், உங்களுடைய ஊழியனாக நான் உங்களை பின் தொடர்ந்து வரலாம் என்று உருக்கமாகச் சொல்லிக்கொண்டார்.

மறுநாள் 30ம் தேதி வெள்ளிக்கிழமை...மாலை வழக்கம் போல் பிரார்த்தனைக்கூட்டத்துக்கு காந்தி சென்று கொண்டிருந்தார். காத்தியவாரில் இருந்து இரண்டு தொழிலாளர்கள் அவரை பார்க்க வந்திருப்பதாக சொன்னார்கள். காந்தி சொன்னார்.

"பிரார்த்தனைக்குப் பிறகு பார்ப்பதாக அவர்களிடம் சொல்லுங்கள். நான் உயிருடன் இருந்தால், பிரார்த்தனை முடிந்த பின் அவர்களை பார்க்கிறேன்"

அப்போது காந்தியைப் பார்க்க, தரிசிக்க, சுட கோட்ஸே காத்திருந்தான்.  

இந்த கட்டுரையை குறித்த விரிவான காணொலிகளை கீழ்காணும் சுட்டிகளில் பார்க்கலாம்: