Saturday 25 July 2020

குழந்தைகள் வாசிக்கத் தயார்தான் – இனியன்

குழந்தைகள் வாசிக்கத் தயார்தான் – இனியன்

ன்முகத் தன்மையோடு இருக்கும் ஒரு நிலப்பரப்பில் பொதுவாக்கப்படாத கலைகள் பல காலங்காலமாக இருந்து கொண்டேதான் இருக்கிறது. அவற்றின் அடிப்படைகளைக் கூட இன்றளவும் பொதுமையாக்கப்படாமல் வைத்திருக்கிறோம். அந்த வரிசையில் முதன்மையாகக் கருத வேண்டிய கலை ஒன்று இருக்கிறது என்றால் அது வாசிப்புதான்.
தொழில்நுட்பத்தினால் விரல்நுனியில் வாசிப்பு வசப்பட்டுக் கொண்டிருக்கிறது எனப் பெருமைப் பேசிக் கொண்டிருக்கும் அதேவேளையில் தான், வாசிப்பே இல்லை என்னும் குற்றச்சாட்டுடனும் பயணிக்கிறோம். எழுதப்படும் அனைத்தையும் அனைவரால் வாசிக்கப்பட்டுவிடுமா? என்றால் நிச்சயம் கிடையாது. முடியவும் முடியாது. பிறகு ஏன் இந்தக் குற்றச்சாட்டுகள்? எங்கிருந்து எழுகிறது அவை?
உரையாடினால், பலரும் அது குழந்தைகளிடமிருந்தே என்று துவங்குகின்றனர். இன்னும் உன்னிப்பாகக் கவனித்து உள்ளே சென்றால் ஆசிரியர்கள் கூட இதே போன்ற குற்றச்சாட்டைச் சுமத்திக் கொண்டே வருகின்றனர்.
எந்த இடத்திலும் அக்குற்றச்சாட்டைச் சொல்பவர்கள் அது சரிதானா? என்றும், குற்றம் சுமத்துவதற்கு முன் நாம் என்ன செய்திருக்கிறோம்?’ என்றாவது சிந்தித்துப் பார்க்கிறார்களா? என்னும் கேள்வி பலகாலமாக இருக்கிறது.
அதனால் என்ன நிகழ்கிறது, அனைத்திற்கும் அடிப்படையான வாசிப்பு என்னும் கலை எலைட் சமூகத்தோடு தொடர்புடைய ஒன்றாகவே ஒரு கட்டமைப்பு உருவாகியிருக்கிறது.
இப்படிச் சொல்வதற்கு நிறையக் காரணங்கள் இருக்கிறது. அதில் என் குழந்தை பாடப் புத்தகங்கள் தவிர மற்றவை நிறைய வாசிக்கிறான்/ள்” எனச் சொல்கிற பெற்றோர்களில் பெரும்பான்மையானோர் தங்களது மேட்டிமைத் தனங்களைப் பகிர்ந்து அடையாளப்படுத்திக் கொள்பவர்களாக மட்டுமே இருந்து, குழந்தையையும் ஒருவித அடையாளச் சிக்கலுக்குள் ஆளாக்கி விடுகிறார்களோ, என அவ்வப்போது தோன்றுகிறது. அதேநேரம் சில பெற்றோர்கள் தங்களது குழந்தையின் வாயிலாக ஒரு சமூக இணக்கத்தையும் கலையின் வடிவத்தையும் பொதுமைப்படுத்தும் நிலையை நோக்கி நகர்த்தவும் செய்கிறார்கள். ஆனால் எண்ணிக்கையில் மிகமிகச் சொற்பமான அளவே இவை.
ஆனால் இதெல்லாம் என்னவென்றே தெரியாத ஒரு பெரும் சமூகக் கூட்டமே நாம் வாழும் இதே நிலப்பரப்பில் தான் வாழ்கிறார்கள். அதில் வாழும் குழந்தைகளை விடப் பெற்றோர்களுக்கு நாம் மிகப்பெரிய விளக்கங்களைக் கொடுக்க வேண்டியது இருக்கிறது. ஒருமுறை அவர்களுக்குப் புரிந்து விட்டால் வாழ்நாளுக்கும் அதனைத் தொடர அவர்கள் அரும்பாடு படுகிறார்கள் என்பது எனது அனுபவம்.
இதற்கு முந்தைய கட்டுரைகளில் கூட இதனைத் தொடாமல் எழுத முடியவில்லை. அதுதான் COVID-19. முற்றடைப்புக் காலத்தில் குழந்தைகள் நிலைப் பற்றியும் தொட்டுத்தான் பேச வேண்டியிருக்கிறது. அதன் தொடர்ச்சிதான் இது.
பத்து நாட்களுக்கு முன்பாக அழைப்பு ஒன்று. சதீஷ் அழைத்திருந்தான். எட்டாம் வகுப்பு முடித்து ஒன்பதாம் வகுப்புக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருப்பவன். அவனது குடும்பத்தில் ஒன்பதாம் வகுப்பு நோக்கி அடியெடுத்து வைப்பவர்களில் முதல் நபர். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரம் மூன்று மாநிலங்களின் எல்லைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மலைக் கிராமம். அங்கிருந்து அழைத்து “மாமா, நீங்க கொடுத்த புத்தகங்கள் அனைத்தும் படித்து முடித்துவிட்டேன். இன்னும் புத்தகங்கள் வேண்டும்” எனச் சொல்லிப் பேசினான். அடுத்த ஓரிரு நாளில் அதே எண்ணிலிருந்து அவனது அம்மா அழைத்துப் பேசினார். “சார், நீங்கக் கொடுத்த புத்தகத்தை எல்லாம் படிச்சிட்டு ஊரில் உள்ள எல்லாப் புள்ளையோள்களையும் கூப்பிட்டுக் கதைச் சொன்னுச்சி இன்று. ரொம்பச் சந்தோசம் சார்.” ன்னு
அதன் பிறகுதான் சிந்தித்தேன் சதீஷ்க்கு எங்கே, எப்போது, எத்தனை புத்தகங்கள் கொடுத்தேன்? எனச் சொல்லி. “குழந்தைகளுக்கான கலை இலக்கியக் கொண்டாட்டம் – தருமபுரி” நிகழ்விற்காக அவனிடம் கொடுக்கப்பட்டப் புத்தகங்கள் அவை.
அதே நிகழ்வில் பங்கேற்ற பெல்லுஅல்லி கிராமத்திலிருந்து (இது தருமபுரியைச் சேர்ந்த மலைக் கிராமம்) கோமதி கடிதம் எழுதுகிற போது “நீங்கள் கொடுத்த புத்தகங்கள் அனைத்தும் படித்துவிட்டேன். எனக்கு நிறையத் தன்வரலாற்றுப் புத்தகங்கள் வாங்கி அனுப்புங்கள் மாமா” எனக் கேட்டு.
அதன் பிறகு யாருக்கெல்லாம் புத்தகங்களைக் கொண்டு சேர்த்திருக்கிறோம் எனச் சொல்லிக் கணக்கிட்டால் அதில் கிட்டத்தட்ட 98% குழந்தைகளுக்கு அதுவரை பாடத் திட்டங்களைக் கடந்த மற்ற புத்தகங்கள் அதிலும் சிறார் இலக்கிய வகைமைக்குள் இருக்கும் புத்தகங்கள் பற்றிய அறிமுகங்கள் எதுவுமில்லாமல் தான் இருந்தனர். அதில் குறைந்தது 65% குழந்தைகளாவது கொடுக்கப்பட்ட புத்தகங்களை வாசித்து இருந்தனர். ஆனால் வாசிப்பை இன்றைய தேதியில் தொடர்கிறார்களா என்பதுதான் சிந்தனையை உறுத்தும் விசையம். தற்போது அவர்களால் இயலாவிட்டாலும், அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் நிச்சயம் எதிர்காலத்தில் வாசிப்பு என்னும் கலையின் சுவையை உணர்ந்து தொடர்வார்கள் என்னும் நம்பிக்கை இருக்கிறது.
இதில் சதீஷ் மற்றும் கோமதி போன்றவர்கள் சிறு உதாரணங்கள் மட்டுமே. இவர்களைப் போன்று பல கதைகள் இருக்கிறது.
இங்கு எழும் மிகப்பெரிய கேள்வி எப்படி இவையெல்லாம் சாத்தியமாகின? அதிலும் உங்களுக்கெல்லாம் வாசிக்க வராது. இவர்களுக்கு எதற்கு வாசிப்பு? இதெல்லாம் எதற்கு? இவர்களெல்லாம் உருப்படியாப் பாடத்தையே படிக்க மாட்டிங்கிதுங், இதுங்களுக்கு எதுக்கு? என வசைமொழிகள் பொழிந்து பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகப் புறக்கணிக்கப் பட்டே வரும் இனத்திலிருந்து வருவதால் இன்றும் இதேபோன்ற வசைகளுடன் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் இக்குழந்தைகளை வாசிக்க வைத்தது எது? என்பதுதான்.
அதற்கு விடை. அவர்களுக்குத் தேவையான, அவர்கள் உணரக் கூடிய சுதந்திர சிந்தனையுடன் கொண்டாட்டமான மனோநிலையில் உங்களுக்காகத்தான் இப்படியான புத்தகங்கள் எழுதப் பட்டுக் கொண்டிருக்கிறது என்பதனை உணர்த்தி அறிமுகப்படுத்தி வைத்தாலே போதுமான ஒன்றாக இருக்கிறது அவர்கள் உணர்ந்துகொள்ளவும் தெரிந்து கொள்ளவும்.
ஒரு நாளுக்கே இப்படியான அணுகுமுறைகள் இவர்களுக்குக் கிடைக்கிறது என்றால். ஒவ்வொருநாளும் அவர்களின் ஒடுக்குதலிலிருந்து விடைபெற்று சுதந்திர உணர்வையும், உரிமைகளையும் உணர்த்திச் சமூகப் புரிதலுடன் வாசிப்பு என்னும் கலையையும், குறைந்தபட்சம் அதன் அடிப்படையையாவது உணரும் வகையில் ஒட்டுமொத்தச் சமூகத்தின் செயல்திட்டங்களும் இருந்திடல் வேண்டும்.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க என்று ஒதுக்கி வைத்துவிடாமல், இங்கு நாம் பேச வேண்டிய இன்னொரு மிகமுக்கியமான விசையமாகக் கருதுவது, தொழில்நுட்பச் செயலிகள் மூலம் உருவாக்கிக் கொண்டிருக்கும் சிறார் புத்தகங்கள் பற்றி.
நண்பர் ஒருவரிடம் இது தொடர்பாகப் பேசிக் கொண்டிருந்த பொழுது, “திரையின் வாயிலாகக் குழந்தைகள் அல்லது சிறார்கள் புத்தக வாசிப்பிற்கு எத்தனை தூரம் உள்ளே செல்கிறார்கள், அவற்றை அவர்கள் விரும்புகிறார்களா? அல்லது திரையில் காணொளி  காண அதிகம் விரும்புகிறார்களா?” என்னும் கேள்விகளை முன் வைத்தேன்.
நிச்சயம் அம்மாதிரியான புத்தக வாசிப்பு மிகவும் குறைவுதான். அதேநேரம் காலத்தின் கட்டாயம் அதனை நோக்கித் தள்ளுகிறதே! பாடங்கள் உட்பட அப்படியான தொழில்நுட்பத்தில் வரும்போது நாம் என்ன செய்வது என்றார்.
சரி, பாடங்கள் அதில் அதில் வரும் போது அதில் சமத்துவம் இங்கு இருக்கிறதா என்றேன்.
நிச்சயமாக இல்லை என்றார்.
ஆம், நிச்சயமாக இல்லை தான் இன்னும் அச்சுப் புத்தகங்களிலேயே சமத்துவப் போக்கைக் கையாளத் தெரியாத மற்றும் கொண்டு போய்ச் சேர்க்க முடியாத நிலையில் இருக்கும் பெரும்பான்மைச் சமூகத்தை வைத்துக் கொண்டு தொழில்நுட்பம் நோக்கி நகர சொல்லியும் அதனைக் குழந்தைகளிடம் திணித்தும் நாம் என்ன செய்யப்போகிறோம். மீண்டும் மீண்டும் சமத்துவமில்லாச் சமூகக் கட்டமைப்பிற்குள் தான் இழுத்து வரப் போகிறோம் நம் காலத்தின் குழந்தைகள் மட்டுமல்லாது எதிர்காலத்தின் குழந்தைகளையும் கூட.
ஒருமுறை தற்காலத்தின் தேவைக் கருதி சிறார் எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் சங்கம் ஒன்று ஒருவாக்கும் முயற்சியில் மூத்த எழுத்தாளர்கள் உட்பட அனைவரும் முயற்சி செய்ய அதில் இப்படியான கருத்தைப் பதிவு செய்தேன் சிறார்களுக்கான புத்தகங்கள் தொடர்ந்து எழுதப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஆனால், தற்கான வாசிப்பாளர்கள் யார்? யார்? என்னும் பட்டியலை நாம் என்றாவது எடுத்தது உண்டா. ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களைத் தாண்டி எத்தனை சதவிகிதம் பரவலாகப் புத்தகங்கள் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் அப்படிச் சேர்க்கப்படத் தேவை தற்போது உருவாகி இருக்கிறது. உதாரணமாகச் சொல்லப்போனால் அறிவொளி இயக்கம் மற்றும் திராவிட இயக்கப் படிப்பகங்கள் காலத்தின் அடுத்த கட்டப் பரிணாம வளர்ச்சியாக இதனை நாம் கொண்டு சேர்க்க வேண்டும். அதற்கான செயல்திட்டங்கள் அரசாங்க அளவில் உருவாக்கி பயணத்தை ஒவ்வொரு கிராமங்கள் தோறும், ஒன்றியங்கள் தோறும் கொண்டு சேர்க்க வேண்டும். அவ்வாறான வடிவங்கள் சமத்துவக் கொண்டாட்ட வடிவில் இருக்க வேண்டும். அப்படியான கொண்டாட்டங்களை நாம் அறிமுகப் படுத்த வேண்டும்.” என்றேன்.
அப்படியான அறிமுகங்களின் வாயிலாகக் குழந்தைகள் வாசிக்கத் தயாராகத்தான் இருக்கிறார்கள் நாம் தான் அதனை இன்னும் சரிவர உணரவில்லையோ என்பதை உணர்ந்த ஒரு நபராக மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்கிறேன் “குழந்தைகள் வாசிக்கத் தயாராகவே உள்ளனர்.

-பயணங்கள் தொடரும்


No comments:

Post a Comment