Saturday, 25 July 2020

பேரிடர் காலங்களில் குழந்தைகள் – இனியன்

பேரிடர் காலங்களில் குழந்தைகள் இனியன்

ரு கட்டுரைக்கான தலைப்பு என்பது அவை எழுதப்படும் காலமும் அனுபவங்களும் தான் தீர்மானம் செய்கிறது. அப்படியான காலத்தில் உலகம் நின்று கொண்டிருக்கின்ற இந்நிலையில் பேரிடர் காலங்களில் குழந்தைகள் என நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

அதுவொரு மாலைமங்கும் நேரம். 2015 சென்னை பெருவெள்ளம் காலமும் கூட. சென்னைக்கு அருகே மிகவும் பாதிக்கப்பட்ட கிராமப்பகுதி. உள்ளே நுழைகிறோம் நண்பர்களோடு.

வெள்ளம் ஒரு பக்கமாக வடிந்து ஓரளவு வீடுகளில் மக்கள் வாழத் துவங்கியிருந்தனர். உடன் வந்திருந்த நண்பர்கள் நிவாரணப் பொருட்கள் கொடுக்கத் துவங்க, அங்கிருக்கும் குழந்தைகளை ஒன்றிணைத்து விளையாடத் துவங்கினேன். வழக்கமான ஆரம்பக்கட்ட விளையாட்டுகள் தான் என்றாலும் அவர்கள் ஓரளவு இயல்பிற்கு வருவதை உணர முடிந்தது.

பிறகு கதைகளுக்குள் சென்றோம். நான்கைந்துக் குழந்தைகள் வரை கதைகள் சொல்லினர். அனைவருமே அவர்கள் வெள்ளத்தில் இருந்து மீண்டக் கதைகளையே சொல்லிக் கொண்டிருந்தனர் அவரவர் அனுபவங்களிலிருந்து. அதில் ஒருவர் முடிக்கும் போது இப்படி முடித்தார் வாழ்நாள் முழுக்க எனக்கு நிறையத் தண்ணீர்ன்னா பயம் வந்திடும் போலஎன்று.

அதை அவர் சொல்லிக் கொண்டிருந்த பொழுது அவரது உடல் முழுவதும் நடுங்கிக் கொண்டிருந்தது. அந்த நடுக்கத்தை என்னால் நன்றாக உணரவும் முடிந்தது. ஏனென்றால் அவர் எனது மடியில் அமர்ந்துதான் கதை சொல்லிக் கொண்டிருந்தார். ஐந்து வருடங்களுக்குப் பிறகு இப்போது அதனை நினைத்துக் கொண்டிருக்கும் போதும் நிச்சயம் அக்குழந்தை அந்தப் பயத்தில் இருந்து மீண்டு வந்திருப்பார் என நம்புகிறேன்.

சமீப காலத்திற்கு முன்பாக நம் அனைவரையும் பாதித்த காணொளி ஒன்று, 2018 கஜாப் பெரும்புயல் பேரிடருக்குப் பிறகான நாட்களில் தன்னார்வளர்களின் உணவு வண்டியின் பின்னால் உணவுக்காகக் கையேந்தியப் படியே ஓடிய மற்றும் உணவுக்காக ஆற்றைக் கடக்க நீந்திய சிறுவர்களின் காணொளி தான் அவை. அவர்களின் மனோநிலை என்னவாக இருந்திருக்கும் அந்தத் தருணத்தில். அவர்கள் தற்போது என்ன செய்து கொண்டிருப்பார்கள். ஒருவேளை அவர்கள் வளர்ந்து அதே காணொளிகளைப் பார்க்க நேர்ந்தால் அவர்களது மனோநிலை என்னவாக இருக்கும் என்றெல்லாம் அவ்வபோது சிந்திப்பது உண்டு. அச்சிந்தனை ஒருவித அச்சத்தையும் கூடக் கொடுக்கும்.

இதெல்லாம் நடந்து முடிந்தக் காலம். உதாரணத்திற்காக மேலே சொல்லிய சம்பவங்களும் அதில் இடம் பெற்றிருந்த குழந்தைகளும் நிகழ்காலத்தில் நாம் சிந்திப்பதுக்கு மாறாக நிச்சயம் திடம் பெற்றிருப்பார்கள் எனத் திடமாக நம்புவோமாக.

இவையல்லாம் சமீபத்திய கடந்தகால அனுபவங்கள். அவற்றில் சொல்லப்படாமல் இன்னும் இன்னும் பல சம்பவங்கள் நம் ஒவ்வொருவருக்கும் அவ்வளவு ஏன் நமக்குமே சிறுவயதில் ஏற்பட்ட அனுபவங்கள் இருக்கத்தான் செய்கிறது. அவையனைத்தும் கடந்தகாலங்களில் முடிந்து விட்டிருக்கிறது.

தற்போது நிகழ்காலத்திற்கு வருவோம். நாம் மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமும் எங்கு நின்று கொண்டிருக்கிறோம் என்பதை அனைவரும் உணர்ந்துதான் இருக்கிறோம். அப்படியான ஒரு நோய் பேரிடர் காலத்தில் நம் குழந்தைகள் என்னவாக இருக்கிறார்கள் என்பதை நாம் சிந்திக்கிறோமோ?

ஏன் இந்தக் கேள்வி என்றும் கூடத் தோன்றாலாம். ஆனால் கேட்கப்பட வேண்டிய அத்தியாவசியம் இருக்கிறது என நம்புகிறேன். அனைவருக்குமான பேரிடர் காலம் என்பது அனைவருக்குமான ஒன்றாக இருக்கிறதா? என்னும் அடுத்தக் கேள்வியுடன் முந்தைய கேள்வியைத் தொடர்பு படுத்த விரும்புகிறேன்.

ஒட்டுமொத்த உலகமும் முற்றடைப்புக் காலத்தில் இருந்து கொண்டிருக்கும் நிலையில் குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிலும் குறிப்பாகப் பாலியல் வன்முறைகள் குறித்தான பொதுச் சமூகப் பார்வை என்னவாக இருக்கிறது. அவற்றை எப்படி நாம் அனைவரும் எதிர்கொண்டு வருகிறோம் என்பதை ஆழ்ந்து சிந்திக்க முயற்சி செய்கிறேன்.

ஒவ்வொரு பேரிடர் காலங்களிலும் முதலில் நிர்வாணமாக்கப்படுவது குழந்தைகள் தான் என்பதைக் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். புயல், மழை, வெள்ளம், தீ, வறட்சி, பஞ்சம் என எதுவாக இருந்தாலும் முதல் நிர்வாணம் குழந்தைகளுக்கான ஒன்றாகவே இருக்கிறது என்பதை மீண்டும் மீண்டும் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இந்த நிலப்பரப்பில் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.

ஏனென்றால் இங்குத்தான் ஒவ்வொரு பேரிடர் கால நிவாரணங்களிலும் குழந்தைகளுக்கு என எந்தவொரு திட்டமிடலும் இல்லாத நிலையிலேயே கட்டமைக்கப்படுகிறது ஒருவித அலட்சியத்துடன். ஆனால், அந்த அலட்சியப் போக்குதான் எதிர்கால உளவியல் ஆபத்துகளுக்குத்ப் துணைப் போகிறது என்பதை மறந்து.

அதிலும் குறிப்பாகப் பெண்கள், பதின்பருவத்துக் குழந்தைகளுக்கான சிக்கல்களை இந்தப் பேரிடர் காலங்களில் நாம் இன்றும் முழுவதுமாகப் புரிந்து கொள்ளவே இல்லை என்னும் கட்டமைப்பில் தான் காலங்களைக் கடத்திக் கொண்டிருக்கிறோம். இதற்கு உதாரணமாக இரண்டு சம்பவங்களை நினைவுபடுத்திக் கொள்கிறேன்.

பத்தாம் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் தன்னுடைய 15 வயது பெண் குழந்தைக்கு நாப்கின் வேண்டும் எனக் கேட்கும் தந்தையின் குரலை பதிவு செய்யும் அளவுக்கும், எட்டாம் வகுப்பு படிக்கின்ற மாற்றுதிறனாளி குழந்தை ஒருவர் தான் பருவநிலையை அடைந்துவிட்டேன். என்னால் இனி வெளியிடங்களுக்கு எங்கும் செல்ல இயலாத சூழல். பள்ளிகள் திறந்தாலாவது அங்கு அனைத்தையும் முடித்துக் கொள்வேன். இப்போது எதுவும் இயலாத நிலையில் வீட்டின் கொல்லைப்புறத்தில் கழிப்பறையும், குளியல் அறையும் தயார் படுத்திக் கொடுக்க முடியுமா?” என ஆசிரியர் ஒருவரிடம் கேட்கபட்ட கோரிக்கையும் நமக்கு உணர்த்தும் விஷயங்களில் ஒற்றுமையாக இருப்பதின் தீர்வு அவர்களது தேவையைப் பூர்த்திச் செய்வது மட்டுமே. அதிலும் குறிப்பாகப் பெற்றவர்கள் இருவரில் ஒருவரை பிரிந்து வாழும் குழந்தைக்கு நம்மால் இயன்றதை செய்யவேண்டும் எனப் பதில் சொன்னார் ஆசிரியத் தோழி ஒருவர்.   
இம்மாதிரியிலான சிக்கல் நிறைந்த நிலையில் தான் நான்கு வயது முதல் 15 வயது வரையிலான பெண் குழந்தைகள் அதிக அளவிலான பாலியல் வக்கிர வன்முறைகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. என்னளவில் அவையனைத்தையும் அத்தனை பேரிடர் காலங்களிலும் தொடர் நிகழ்வாகவே இருந்து வருகிறதோ என்னும் எண்ணம் இருக்கிறது.

இவற்றை எப்படிப் புரிந்து கொள்வது?

ஒரு பேரிடர் என்பது அது நிகழும் நிலத்தின் வறட்சியைத் தீர்மானம் செய்யக் கூடியது. அது குறுகியக் காலமோ அல்லது நீண்டக் காலமோ என்றெல்லாம் கணக்கிடப் படாமல் வறட்சியை வறட்சி என்றே கணக்கிடும் போதுதான் அதன் நிலைத் தன்மையைத், நமக்குப் புலப்படும். அப்படியான வறட்சி நிலையில் பாதுகாக்க முடியாதவர்களாகக் குழந்தைகள் தான் இருக்கிறார்கள் என்பது தான் தவிர்க்க முடியாத உண்மையாக இருக்கிறது.

இப்படியான சூழலில் பேரிடர் காலக் குழந்தைகள் பாதுகாப்புத் தொடர்பான புரிதலை எங்கிருந்துத் துவங்க வேண்டும் என்னும் கேள்வியும் எழுகிறது.

வழக்கம் போல் கல்வியில் இருந்து என்பதுதான் பதில். ஆம், பாலியல் கல்வி, சமூக நீதி கல்வி, வாழ்வியல் கல்வி, கலையியல் கல்வி என்று எதெல்லாம் அவசியம் எனக் கருதிக் குரல்கொடுத்துக் கொண்டிருகிறோமோ அந்தப் பட்டியலில் "பேரிடரியல் கல்வியும்" அவசியம் தேவை என்னும் நிலையில் இருக்கிறோம். ஆனால் மேலே சொன்ன எவையும் இங்கு இன்னும் நிறைவேற்றப் படாதநிலையில் பேரிடரியல் கல்வியெல்லாம் பெருங் கனவு மட்டுமே.

இத்தனை சிக்கல்கள் இருந்தாலும் பேரிடர்க் காலங்களைக் குழந்தைகள் அவர்களது போக்கில் இயல்பாய்க் கடந்துதான் வருகிறார்கள். கடக்கவும் செய்வார்கள்தான். அத்திறனைக் குழந்தைகளுக்கு இயற்கை வழங்கிக் கொடுத்தான் இருக்கிறது.

இருப்பினும் இவ்வகையான பேரிடர் காலங்களை எதிர்கொள்வதில் அல்லது பேரிடர் காலத்திற்குப் பிறகான வாழ்வியல் முறையில் சமத்துவ வாழ்வு இங்குக் கட்டமைக்கபடுகிறதா என்றால் இல்லை என்பதுதானே பதிலாக இருக்கிறது.

அப்போ நாம் என்ன செய்ய வேண்டும்?

நிச்சயம் இனிவரும் காலங்கள் என்பது பேரிடர்களின் காலங்கள் தான். அவை இயற்கைப் பேரிடராக இருந்தாலும் சரி, செயற்கை பேரிடராக இருந்தாலும் சரி அதற்கான தயார் நிலை அல்லது நிகழ்வுக்குப் பிறகானச் செயல்பாடுகள் குறித்த புரிதல்களை அடுத்தத் தலைமுறையினருக்கு கடத்தி பயிற்சிகள் மூலம் குழந்தைகளைத் தயார் படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அந்தத் தயாரிப்புகள் மட்டுமே அனைத்துவித பேரிடர்களில் இருந்து நம்மைக் காத்து தகவமைத்துக் கொள்ள உதவும்.

No comments:

Post a Comment