Saturday 25 July 2020

பொருளாதாரம், அறிவியல், வரலாறு தொடர்பான நிறைய நூல்கள் வரவேண்டும் - மருத்துவர். ப்ருனோ

பொருளாதாரம், அறிவியல், வரலாறு தொடர்பான நிறைய நூல்கள் வரவேண்டும் - மருத்துவர். ப்ருனோ

அமேசான் நடத்திய கிண்டில் போட்டியில் நெடும்பிரிவு படைப்புகளில் முதலிடம் பெற்ற பேலியோ உணவின் அறிவியலும் உளவியலும்: Science and Psychology of Paleo Diet

புத்தகத்தை எழுதிய மருத்துவர். ப்ருனோ அவர்களிடம் திராவிட வாசிப்பு இதழுக்காக எடுக்கப்பட்ட பேட்டி:

1) கிண்டில் போட்டியில் கலந்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்பட்டது? அனைவரும் புனைவு, கதைகள் என எழுதிய போது, நீங்கள் அறிவியல் குறித்த ஒரு புத்தகம் எழுதிய காரணம் என்ன?

இலக்கியம் என்பது கவிதை, நாடகம், புனைவு, அபுனைவு என்று வகைப்படும். ஆனால் தமிழில், அதிலும் கடந்த மூன்று நான்கு தசாப்தங்களாக இலக்கியம் என்பது புனைவு என்பது மட்டும் என்பது போலும், இலக்கியவாதி என்றால் அவர் நாவல் / சிறுகதை எழுதவேண்டும் என்பது போலும் ஒரு செயற்கை கட்டமைப்பு உருவாகியுள்ளது.

இதனால் பொருளாதாரம், விஞ்ஞானம், சமூக வரலாறு என்று வாழ்க்கைக்கு தேவையான  விஷயங்களை கூட நம் மக்கள் புனைவில் இருந்து பிழையாக கற்று, அதை நம்பி, இந்த தவறான பொருளாதாரம் கோட்பாடுகள், தவறான அறிவியல் செய்திகளின் அடிப்படையில் தங்கள் வாழ்க்கை தொடர்பான முடிவுகளை கூட தவறாக எடுத்து அவஸ்தைபட்டு வருவதை உறவினர்கள், உடன்பயின்றோர், நண்பர்கள் வட்டத்தில் பார்த்து வருகிறேன்

இதை மாற்ற வேண்டுமென்றால் அபுனைவு நூல்கள் வரவேண்டும், முக்கியமாக பொருளாதாரம், அறிவியல், வரலாறு தொடர்பான நிறைய நூல்கள் வரவேண்டும், அவை துறை சார்ந்த நிபுணர்களால் எழுதப்படவேண்டும்

பாறைகளில் எழுதியது, களிமண்மாத்திரைகளில் எழுதியது, தோலில் எழுதியது, ஓலைகளில் எழுதியது, காகிதங்களில் எழுதியது என்ற வரலாற்றில் எப்படி அச்சு இயந்திரம் ஒரு முக்கிய மாற்றமோ, அதே போல் மின்னூல் என்பதும் ஒரு வரலாற்று திருப்புமுனை. எனவே இந்த வாய்ப்பில் தமிழில் அபுனைவு நூல்கள், சரியான தகவல்களை அளிக்கும் நூல்கள், வர இந்த போட்டில் ஒரு சிறந்த வாய்ப்பு என்று நினைத்தேன். அதனால் பங்கு பெற்றேன்

2) தமிழில் எழுதப்பட்ட ஒரு அறிவியல் புத்தகத்திற்கு முதல்  பரிசு கிடைத்திருக்கிறது. இதையெப்படி பார்க்கிறீர்கள்?

மருத்துவம் மட்டுமல்லாது, அனைத்து துறைகளிலும் அறிவியல் நூல்கள் எழுதப்பட இது தூண்டுகோலாக இருக்கும் என்று நினைக்கிறேன்


3) பேலியோ குறித்து  ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்பட்டது?

நான் நூலில் குறிப்பிட்டிருந்தபடி தமிழகத்தில் உள்ள பிரச்சனை என்னவென்றால், தமிழகம் வளர்ந்ததைப் போல் அதே அளவு வளர்ந்த பல நாடுகளில், மாநிலங்களில் அதிகரித்த சர்க்கரை நோயளிகளின் எண்ணிக்கையை விட தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் பாஸ்ட் புட் மட்டுமே, இதற்கு காரணம் உடற்பயிற்சியின்மை மட்டுமே போன்ற தவறான கருத்துக்களும் பரவியுள்ளன. மேலும் இதை உடற்பயிற்சி மூலம் மட்டுமே சரி செய்து விடலாம் என்றும் சிலர் அறியாமல் கூறுகிறார்கள்

இது மிகவும் கவலைக்குரிய விஷயம். மற்றும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் எதனால் இந்த மாற்றங்கள் நடந்துள்ளன என்பதை புரிந்து கொள்ளாமல் இதை மாற்ற நடவடிக்கை எடுக்க முடியாது. இது குறித்த சரியான புரிதல் பலருக்கும் இல்லை. மேலுல் சிலர் இந்த பிரச்சனையை ஒற்றை பரிமாணத்தில் மட்டுமே அணுகுவதால் தவறான முடிவிற்கு வருகிறார்கள்

தமிழகத்தில் உடற்பருமன் மற்றும் நீரிழிவு நோய்களின் மிக அதிகமான எண்ணிக்கை மற்றும் சதவீதத்தை அறிந்து கொண்டு, புரிந்து கொண்டு, ஏற்றுக்கொண்டு, இதன் பின் உள்ள காரணங்களை அறிவியல் ரீதியாக அணுகினால் மட்டுமே இதற்கான தீர்வை அடைய முடியும். நமக்குப் பிடித்த தீர்வை மட்டுமே வற்புறுத்துவதாலோ, நமக்கு எளிதாக தோன்றும் தீர்வை முன்னிறுத்துவதாலோ, அல்லது பிரச்சனையை அறிவியல் ரீதியாக அணுகாமல் குத்துமதிப்பாக தீர்வை சொல்வதாலோ பிரச்சனை தீராது. மேலும் மோசமடையவே செய்யும் 

இந்த மாற்றங்களுக்கான காரணம் என்ன எப்படி சென்னை இந்தியாவின் சர்க்கரை நோய் தலைநகரம் என்ற பெயரைப்பெற்றது இந்த நிலையை மாற்றுவது எப்படி இந்த கேள்விகளுக்கு முற்றிலும் அறிவியல் பூர்வமாக, நவீன மருத்துவ அடிப்படை கோட்பாடுகளின் அடிப்படையில் மட்டுமே விடை கூற வேண்டிய அவசியம் இருந்தது. அதனால் தான் இந்த நூல்

4) நீங்கள் வெகுநாட்களாக சமூக ஊடகங்களிலும்அச்சு பதிப்புத்துறை, ஆன்லைன் பதிப்புத்துறையில்  ஈடுபட்டு வருகிறீர்கள்.  இன்றைய   தொழில்நுட்ப வளர்ச்சியை எப்படிப்பார்க்கிறீர்கள்? புத்தக வாசிப்பை இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி வளர்க்குமா? தடுக்குமா?

மாற்றம் ஒன்றுதான் மாறாதது, மாறுவதெல்லாம் உயிரோடு, மாறாததெல்லாம் மண்ணோடு

தொழிற்நுட்ப வளர்ச்சி என்பது புத்தக வாசிப்பை கண்டிப்பாக அதிகரிக்கும். மேலும் கிண்டில் அன்லிமிடட் போன்ற வசதிகள் மூலம் குறிப்பிட்ட கட்டணத்தில் எத்தனை நூல்களை வேண்டுமானால் படித்துக்கொள்ளலாம் என்ற வசதிகள் இருப்பதால் ஒருவர் வாசிக்கும் நூல்களின் எண்ணிக்கை கண்டிப்பாக அதிகரிக்கும்

5) தமிழ்நாட்டின் மருத்துவ கட்டுமானம் குறித்து நீங்கள் தொடர்ந்து எழுதிவருபவர். இன்றைய நவீன மருத்துவம் குறித்தும், தமிழ்நாட்டு மருத்துவர்கள், மருத்துவ கட்டுமானம் குறித்தும் பல தவறான தகவல்கள் இணையங்களில் வலம் வருகிறது. இவற்றை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

எந்த துறை குறித்தும் தவறான தகவல்கள் வலம் வர இரு வகையான காரணங்கள் உள்ளன
1.                அறியாமை
2.               பொறாமை / காழ்ப்புணர்ச்சி / வன்மம் / வக்கிரம்

இதில் அறியாமையால் வலம் வரும் தவறான தகவல்களை சரியான தகவல்களை கூறுவதன் மூலம் சரி செய்து விடலாம். எனவே நிறைய பேர் எழுதவேண்டும். நிறைய எழுதவேண்டும். தொடர்ந்து எழுத வேண்டும்

சரியான தகவல்கள் நிறையபேரை சென்று அடைந்தால், அவர்கள் உண்மையை புரிந்து கொண்டால், அவர்கள் தவறான தகவல்களை பகிர மாட்டார்கள். எனவே இரண்டாம் வகை பரவுவதும் நின்று விடும். மந்தை நோய் தடுப்பாற்றல் போல் தான் இதுவும்


6) உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்கள் யார்? புத்தகங்கள் எது?

அம்புலிமாமா, பால மித்ரா, ரத்னபாலா, பூந்தளிர், பூந்தளிர் அமர்சித்ர கதைகள், சிறுவர் மலர், Chandamama என்று தான் ஆரம்பித்தது வாழ்க்கை. சிறுவயதில் பரிசு பெற்ற Land of Sunbeam Bunnies கதை நினைவில் இருக்கிறது. பிடித்த எழுத்தாளர்கள் நிறைய பேர் உள்ளார்கள். ஆனால் ஒருவரை மட்டும் தான் கூறவேண்டும் என்று கேட்டால் தயங்காமல் வாண்டுமாமா பெயரைத்தான் சொல்வேன். வரலாறு, அறிவியல் என்று பூந்தளிரில் அவர் எழுதிய ஒவ்வொறு கட்டுரையும் பொக்கிஷம். எனக்கு புனைவை விட அபுனைவு அதிகம் பிடித்ததற்கு காரணம் அவர் தான் என்று நினைக்கிறேன்

பிறகு குமுதம், ஆனந்தவிகடன், குங்குமம், கல்கண்டு, தேவி, ரானி, இதயம் பேசுகிறது, சாவி, ரானி காமிக்ஸ், லயன் காமிக்ஸ், Indian Express, Hindu, Sportstar, Competition Success, Competition Success GK, என்று பொழுது போனது. விகடனில் பூக்குட்டி, ஆ தொடர்கள் படித்த ஞாபகம் உள்ளது. குமுதத்தில் சிட்னி ஷெல்டனின் தாரகையும் லாராவும் படித்தது ஞாபகம் உள்ளது

இது தவிர பள்ளி நூலகத்தில் இருந்த நூல்கள், இது தவிர அம்மா நூலகத்தில் இருந்து எடுத்து வந்து தரும் நூல்களும் வாசித்தேன். அதில் பிடித்தது ஷெர்லாக் ஹோம்ஸ். பள்ளியில் வருடந்தோறும் நடக்கும் ரஷ்ய நூலக கண்காட்சியில் வாங்கிய நூல்களை எல்லாம் திரும்ப திரும்ப வாசித்துள்ளேன். முக்கியமாக Dunno கதைகள். 107 Short Stories above Chemistry பல முறை படித்து வியந்த நூல். அறிவியல் குறித்து இவ்வளவு சுவாரசியமாக எழுத முடியுமா என்ற ஆச்சரியம் தரும் நூல் அது.

இது தவிர ஷெர்லாக் ஹோம்சின் 4 நாவல்கள் மற்றும் 56 சிறுகதைகளையும் பல முறை படித்ததால் பிரச்சனைகளை அனைத்து  ஆராயும் மனது வந்தது என்று நினைக்கிறேன்.  


ராகி ரங்கராஜனின் தாரகையால் கவரப்பட்டு Sydney Sheldonஆங்கில நூலை வாசிக்க ஆரம்பித்து. தூத்துக்குடி Harini Lending Libraryல் சேர்ந்து Jeffrey Archer, Michael Crichton, Frederick Forysth, Alistair Maclean, Colin Forbes என்று போனது. அத்துடன் ராஜேஷ்குமர், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் இந்திரா சௌந்திரராஜனின் பாக்கெட் நாவல்கள். ரூத்ரவீணை எல்லாம் வெளிவந்த போதே வாசித்தேன்.

மருத்துவத்துறையை பொருத்தவரை, எனக்கு பிடித்தது சௌத்ரியின் உடலியக்கவியல், அவரின் மருந்தியல், ஹார்பரின் உயிர்வேதியல் கேனாங்கின் உடலியக்கவியல், கைடனின் உடலியக்கவியல், பெய்லி அண்ட் லவ், ஆடம்ஸ் நரம்பியல், லிப்பின்காட் உயிர்வேதியல், சாட்டர்ஜி உயிர்வேதியல், சாட்டர்ஜி ஒட்டுண்ணியியல் ஆகிய நூல்கள்.

இது தவிர அதுல் கவாண்டே, சித்தார்த முகர்ஜி ஆகியோரின் நூல்களும் எனக்கு பிடிக்கும். அறிவியலை புனைவுடன் மட்டுமல்லாது பொருளாதார பின்புலத்துடன் வழங்குவதில் மைக்கேல் கிரைட்டனின் பாணி மிகவும் சுவாரசியமானது. அவரது கேஸ் ஆப் நீட், ஜூராசிக் பார்க், ஸ்டேட் ஆப் பியர் என்று எந்த நூலை எடுத்தாலும் அதில் விஞ்ஞானமும் பொருளாதாரமும் எப்படி பினைந்துள்ளன என்றும் அவற்றை எப்படி சீர் தூக்கி பார்க்க வேண்டும் என்றும் தெளிவாக கூறப்பட்டிருக்கும். பலரும் அவரது நூல்களில் உள்ள அறிவியலை மட்டும் புரிந்து கொண்டு பொருளாதாரத்தை சாய்சில் விட்டு விடுகிறார்கள். அரசு மருத்துவத்துறை, தனியார் மருத்துவத்துறையில் இருக்கும் பல பிரச்சனைகளுக்கான காரணங்களை அவர் நூல்களில் இருந்து எளிதில் புரிந்து கொள்ளலாம்.

அரசு ஏன் இப்படி செயல்படுகிறது. அரசு அதிகாரிகள் ஏன் அப்படி செயல்படுகிறார்கள், அரசியல்வாதிகள் எதை நோக்கி செல்கிறார்கள் என்பதை தொடர்ந்து ஆராயும் நூல்கள் பிரடெரிக் பார்சித்தின் புனைவுகள். அவர் ஐரோப்பியா குறித்து எழுதினாலும், அவற்றை நம் நாட்டுடன் பொருத்தி பார்ப்பது கடினமல்ல. அவரது நூல்களை வாசித்த பிறகு நான் அரசியல்வாதிகளையும் அரசு அதிகாரிகளையும் அவர்கள் செய்யாத தவறுகளுக்கு எல்லாம் குறை கூறுவது நிறுத்திக்கொண்டேன். பிரச்சனை எங்கு உள்ளது என்று எளிதில் புரிந்தது. இதே வரிசையில் உள்ள மற்றொரு நூல் மரிய புசோவின் காட்பாதர். படம் நல்ல படம் தான். ஆனால் நூலில் உள்ள விஷயங்களில் 10 சதம் தான் படத்தில் உள்ளது.

தனிப்பட்ட வாழ்வில் நாம் சந்திக்கும் நபர்களில் யாருமே கெட்டவர்கள் அல்ல. அவர்கள் நல்லவர்கள் தான். ஆனால் சில நேரங்களில் தெரிந்தோ, தெரியாமலேயோ அவர்கள் சில பல தவறுகளை செய்துவிடுகிறார்கள் என்ற புரிதலை ஏற்படுத்தியது ஜே.கே. ரவுலிங்கின் ஹாரி பாட்டர் நூல்கள்.

இப்பொழுதும் எனது கிண்டிலில் பயணங்களின் போதும், சாப்பிடும் போதும் (சாப்பிடும் போது வாசிப்பது நல்ல பழக்கமா என்று தெரியாது J  )  நான் திரும்ப திரும்ப வாசிப்பது ஷெர்லாக் ஹோம்ஸ், ஹாரி பாட்டர், பிரடெரிக் பார்சித்தான். ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் புதிதாக ஏதாவது தகவல் கிடைக்கும். அல்லது சமீபத்தில் நடந்த விஷயம், அல்லது கேள்விப்பட்ட விஷயத்துடன் பொருத்தி பார்த்து தெளிவு கிடைக்கும்


7) புதிதாக எழுத வருபவர்களுக்கு நீங்கள் சொல்லவிரும்புவது என்ன?

என்ன எழுதுவது என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்
1.                புனைவா, அல்லது அபுனைவா ?
2.               புனைவு என்றால் முற்றிலும் கற்பனையா அல்லது ஏதாவது சம்பவத்தின் அடிப்படையிலா ?
3.               அபுனைவு என்றால் யாருக்கு எழுதுகிறீர்கள்
a.              பள்ளி மாணவர்களுக்கா ?
b.              துறையில் இருப்பவர்களுக்கா ?
c.               பொது மக்களுக்கா ?
இந்த புரிதல் மற்றும் தெளிவு அவசியம்


8) உங்களது மற்ற புத்தகங்களை குறித்து சொல்லுங்கள்..

மருத்துவமாணவர்களுக்காக எழுதியது
  1. TargetPG TNPSC 3rd Edition 1995 to 2009
    • TargetPG TNPSC 1st Edition 1995 to 2003
    • TargetPG TNPSC 2nd Edition 1995 to 2007
  1. TargetPG TNPSC Interview Buster
  2. TargetPG TNPG 2002 to 2006
  3. Firstest Orthopaedics
  4. Zulfi Raj’s Pre PG Medicine Handbook : 4th Edition
·      Zulfi Raj’s Pre PG Medicine Handbook : 3rd Edition
  1. RxPG TargetPG All India 2004
  2. RxPG TargetPG All India 2005
  3. RxPG TargetPG All India 2006
  4. RxPG TargetPG All India 2008
இது தவிர பல நூல்களில் அத்தியாயங்கள் எழுதியுள்ளேன். ரிசெப்டார் என்ற மருத்துவ மாணவர்களுக்கான இதழின் ஆசிரியர் குழுவில் இருந்துள்ளேன்.

இயற்கை விவசாயம், வீகனிசம், தடுப்பூசி எதிர்ப்பு, வீட்டில் பிரசவம், நவீன மருத்துவம் குறித்த அவதூறு, சிக்கன் சாப்பிட்டால் கெடுதி என்ற செய்தி எல்லாம் தற்செயலா, அல்லது யாராவது திட்டமிட்டு பரப்புகிறார்களா என்பது குறித்தம் மாற்று மருத்துவம், இயற்கை விவசாயம் ஆகியவற்றால் மனித குலத்திற்கு நன்மையா, தீமையா என்பது குறித்த ஒரு சிறுகதையை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளேன்

·      ஆங்கிலத்தில் : Artificial Intelligence and Natural Stupidity : Organic Eugenics): http://www.pgmed.org/oee   
·      தமிழில் : ஆர்கானிக் யூஜெனிக்ஸ்: செயற்கை நுண்ணறிவும் இயற்கை மூடத்தனமும்  http://www.pgmed.org/oe   

தமிழில் மட்டும் எழுதியது

  1. 1.          பன்றிக் காய்ச்சல் ஐஎஸ்பிஎன் 9788184932393 பதிப்பகம்    மினி மேக்ஸ் கட்டுமானம்   சாதா அட்டை (பேப்பர் பேக்)  https://dialforbooks.in/writer/bruno/ 
  2. 1615 ஒரு காதல் கதை Khusrau குஸ்ரூ A Love Story http://www.pgmed.org/khs   முகலாய இளவரசர், ஜஹாங்கீரின் புதல்வர், ஷாஜஹானின் சகோதரர் குஸ்ரூவின் கதை. Story of Khusrau, Son of Jahangir and Brother of Shajahan . காதலுக்காக அரச பதவியை துறந்தவர்கள் பலர் உள்ளனர். காதலுக்காக உயிரை விட்டவர்கள் பலர் உள்ளனர். காதலுக்காக பதவி, உயிர், இரண்டையும் துச்சமென மதித்த குஸ்ரூவின் கதை இது. மேன்மை, வீரம், துரோகம், சோகம் என்று அனைத்தும் கலந்தது தான் குஸ்ரூவின் வாழ்க்கை. அதில் பரிசுத்தமான காதலிற்கும் இடமுண்டு. ஆனால் பாபர், ஹூமாயூன், அக்பர், ஜகாங்கீர், ஷாஜகான், அவுரங்கசீப் என்ற 6 முக்கிய முகலாய மன்னர்களின் வரிசையில் சரித்திரம் குஸ்ரூவிற்கு இடமளிக்க வில்லை. அவரால் ஒரு நாள் கூட முகலாய ஆட்சிபீடத்தில் அமர முடியவில்லை. ஆனால் அவரது காலத்தில் மக்களின் மனங்களில் இடம் பிடித்தார். இந்த கதையை படித்த பின்னர் உங்களின் மனதில் கூட இடம்பிடிக்கலாம்.
  3. புருனோவின் பயணங்கள் : பாகம் 1 Payanangal : Bruno's Tamil Blog Part I  http://www.pgmed.org/p1   மருத்துவர் புருனோவின் கட்டுரைகள் : முதல் தொகுதி தமிழ்மணம் நட்சத்திரமாக இருந்த போது (20 அக்டோபர் முதல் 27 அக்டோபர் 2008 வரை) எழுதிய இருபது கட்டுரைகள்.

  1. தர்மாஸ்பத்திரி (அரசு மருத்துவமனை) ஊசி: GH (Government Hospital) Injections http://www.pgmed.org/ghi   “கொஞ்சம் ஏமாந்து இருந்தாலும் ஊசி போடாம அனுப்பிருப்பாரு அந்த சின்ன டாக்டர். நம்ம பெரிய டாக்டர் தான் ஊசி எழுதி தர சொன்னார். கவருமண்டு ஊசி குடுத்தா இவங்க கை காச குடுக்குற மாதிரி ரொம்பப் பண்றாங்க. மாத்திரை யாருக்கு வேணும்? இந்த மாத்திரைய எப்பவாது காய்ச்சல், தலைவலி வரும் போது போட்டுக்கலாம் கைல இருக்கட்டும். இப்ப ஊசி போடுங்கனா கேக்க மாட்றாங்க." என்ற ஒரு சராசரி பொதுஜனத்தின் கருத்தின் பின்னால் உள்ள உளவியல் என்ன ? அரசு திட்டங்களை சலுகையாக பார்ப்பவர்களுக்கும், அதை உரிமையாக பார்ப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன ? ஆகிய கேள்விகளுக்கு உங்களை விடை தேட வைக்கும் உரையாடல்கள் உள்ள சிறு நூல்அரசு திட்டங்களை சலுகையாக பார்ப்பவர்களுக்கும், அதை உரிமையாக பார்ப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்ற கேள்விக்கு விடை.
  2. பேலியோ உணவின் அறிவியலும் உளவியலும்: Science and Psychology of Paleo Diet http://www.kumaniko.com  தவறான உணவு பழக்கம் மூலம் உடற்பருமன், நீரிழிவு, தைராய்டு பிரச்சனை, ஆண்மைக்குறைவு, மலட்டுத்தன்மை ஆகியவை எப்படி ஏற்படுகிறது என்றும் அவற்றை சரியான உணவின்  மூலம் அறிவியல் அடிப்படையில் எப்படி சரி செய்யலாம் என்றும் தமிழில் விளக்கும்  நூல். 2019ஆம் ஆண்டு தமிழில் வெளியான சிறந்த ஐந்து நூல்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டது (Winner of the 2019 Kindle PentoPublish Contest conducted by Amazon)


9) அடுத்து எதைக் குறித்து எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள்? எதிர்கால திட்டம் என்ன?

1990களில் இந்திய பொருளாதாரம் நோயுற்று இருந்த சமயம் அந்த நோய்க்கு மருந்தாக தனியார்மயம், உலகமயம், தாராளமயம், நவீனமயம் ஆகிய நான்கு கோட்பாடுகள் முன்னிறுத்தப்பட்டன.

எவ்வளவு சிறப்பான மருந்து என்றாலும் அதை சரியான அளவில் கொடுக்கவேண்டும். அளவு குறைந்தால் மருந்து வேலை செய்யாது. அளவு கூடிவிட்டால் மருந்தே விஷமாகி விடும். விஷம் என்பது அளவிற்கு அதிகாமான அளவில் இருக்கும் மருந்துஎன்பதும் மருந்து என்பது சரியான அளவிலான விஷம்என்பதும் மருத்துவத்தில் பால பாடம். காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும், அனைத்து கடைகளிலும் கிடைக்கும் பாராசிட்டமால் மாத்திரைகளை கூட ஒரே நேரத்தில் 40 மாத்திரைகளை மொத்தமாக விழுங்கினால் மரணம் தான். உலகின் கொடிய விஷமான பொட்டுலின் விஷம் கூட குறைவான அளவில் சரியான அளவில் மருந்தாக பயன்படுகிறது. அதே போல் மருந்து என்பதை தகுந்த கால அளவில் அளிக்க வேண்டும். ஐந்து நாட்கள் மூன்று வேலை கொடுக்கவேண்டிய மருந்தை ஒரே நாள் ஒரு மணிநேர இடைவேளையில் கொடுத்தால் விளைவுகளை விட பின்விளைவுகளே அதிகமாக இருக்கும்.

எனவே தனியார்மயம், உலகமயம், தாராளமயம் ஆகியவை கூட அளவிற்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டாலோ, அல்லது சமூக வளர்ச்சிக்கு போதிய கால அவகாசம் அளிக்காமல் வெகு விரைவாக கடைபிடிக்கப்பட்டாலோ அதனால் பிரச்சனைகள் வரலாம் 

தற்சமயம் கொரொனாவைரசினால் உலகம் முழுவதுவும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதிலிருந்து மீண்டு வர நாம் என்ன செய்யவேண்டும் ? கடந்த 30 ஆண்டுகளாக நாம் செய்த சாதனைகள் என்ன ? நாம் செய்ய தவறுகள் யாவை ? கடந்த காலத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளவேண்டும். அடுத்த 20 ஆண்டுகள் நாம் பொருளாதாரத்தில் முன்னேற என்னசெய்யவேண்டும் ? என்ன செய்யக்கூடாது ? என்று பல கேள்விகள் நம்முன் உள்ளன.

இவற்றிற்கு விடை தேடும் நோக்கில் ஒரு நூலை எழுதலாம் என்று நினைக்கிறேன்

10) உங்களது வெற்றியின் ரகசியமாக/ பலமாக நீங்கள் எதைக்கருதுகிறீர்கள்?

எந்த போட்டி என்றாலும்
விதிமுறைகளை நன்றாக வாசிக்க வேண்டும்
நம்மால் அந்த விதிமுறைகளின் படி விளையாட முடியுமா என்று பார்க்க வேண்டும்
முடியாது என்றால் ஒன்று ஒதுங்கி நின்று விசிலடிக்கலாம்
அல்லது
வெல்ல மாட்டோம் என்று தெரிந்து கொண்டே, பங்கு பெறும் உற்சாகத்திற்காக மட்டுமே பங்கு பெற வேண்டும்

எனது வெற்றியின் ரகசியமாக / பலமாக நான் கருதுவது என்னவென்றால்
  1. எந்த மைதானம் எனக்கு வசதியாக உள்ளதோ, எந்த விதிமுறைகள் எனக்கு சாதகமாக உள்ளதோ, அந்த போட்டியில் தான் சென்று விளையாடுவேன் :)
  2. சற்றே பெரிய நட்பு வட்டம்
  3. உழைப்பு


பேலியோ உணவின் அறிவியலும் உளவியலும்: Science and Psychology of Paleo Diet புத்தகத்தை வாசிக்க: https://amz.run/3K6S

No comments:

Post a Comment