Saturday 25 July 2020

சிறு கூட்டங்களிடம் சிக்கித் தவித்த புத்தக உலகம் இன்று தொழில்நுட்ப வளர்ச்சியால் பொது மக்களிடம் வந்து சேர்ந்துள்ளது. - பா. ச. பாலசிங்

சிறு கூட்டங்களிடம் சிக்கித் தவித்த புத்தக உலகம் இன்று தொழில்நுட்ப வளர்ச்சியால் பொது மக்களிடம் வந்து சேர்ந்துள்ளது. - பா. ச. பாலசிங்

அமேசான் நடத்திய கிண்டில் போட்டியில், பயணம் (இல்லை) பணயம் என்ற புத்தகத்திற்க்காக பரிசினை பெற்றிருக்கும் பாலாசிங் அவர்களிடம் சில கேள்விகள்:


கிண்டில் போட்டியில் கலந்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்பட்டது?

சென்ற ஆண்டு கிண்டில் போட்டியில் வென்ற சென் பாலன் அவர்களுக்கு திராவிட வாசகர் வட்டம் சார்பாக பாராட்டு விழா எடுக்கப்பட்டது. அவ்விழாவில் கலந்துக் கொண்ட எனக்கும் இப்போட்டியில் நாமும் கலந்துக் கொள்ளலாமே என்ற இயல்பான சிறு எண்ணம் தோன்றியது. ஆனால், அதுவரை நான் முகநூலைத் தாண்டி வேறு எங்கும் எழுதியிருக்கவில்லை.

பாராட்டு விழாவில் சந்தித்துக் கொண்ட நண்பர்கள் அடுத்தாண்டு பெருமளவில் திராவிட சிந்தனையாளர்களை போட்டியில் கலந்துக் கொள்ள செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தோம்.

இவ்வாண்டு போட்டி தொடங்குவதற்கு முன்பிருந்தே எனக்கு தெரிந்தவர்களிடம், முகநூலில் அருமையாக எழுதுபவர்களிடம், போட்டியில் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன். ஆனால், அனைவரும் பல காரணங்களை சொல்லி போட்டியில் கலந்துக் கொள்ளவில்லை.

பலரையும் போட்டியில் கலந்துக் கொள்ள வைக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டு என் சார்பாக ஒருவரைக் கூட போட்டியில் கலந்துக் கொள்ள வைக்க இயலவில்லையே என்ற விரக்தியிலேயே நானே எழுத்தாளர் அவதாரம் எடுத்துப் போட்டியில் கலந்துக் கொண்டேன்.

பயணம் (இல்லை) பணயம், இந்த கதையை எழுதியது ஏன்?

இக்கதை உண்மையில் நடந்த நிகழ்வின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். மார்ச் 8, 2014ல் மலேசியா விமானம் காணாமல் போன அன்றுதான் நானும் என் அலுவலக சக பணியாளர்களும் ப்ரான்ஸ் நாட்டிற்கு போய் சேர்ந்தோம். அதிலிருந்து இரண்டாவது வாரம், ப்ரான்ஸில் எங்கள் நிறுவன பணியாளர்களுக்கு மகிழுந்து வாடகை குறைவு என்பதால், மகிழுந்து எடுத்துக் கொண்டு இரண்டு நாள் சுற்றுலா சென்றோம்.

ஜிபிஎஸ் இல்லாமல், மொழி தெரியாமல், இடதுப் பக்கம் மகிழுந்து ஒட்டிப் பழக்கமில்லாமல் மேற்கொண்ட பயணம் பல இன்னல்களை கொண்டு வந்தது. மிகப் பெரிய பிரச்சினையில் செய்வதறியாது இருந்தப் பொழுது அந்நாட்டை சேர்ந்த ஒருவர் ஆபத்துதவியாக உதவ வந்தார். மெய்சிலிர்க்கும் நிகழ்வுகள் நடந்தேறியது. அந்நிகழ்வுகள் நடக்கும் பொழுதே நான் மிகவும் இரசித்தேன்.

தைரியத்திற்காகவும், தன்னம்பிக்கைக்காகவும், மனித நேயத்திற்காகவும் கட்டாயம் சொல்லப்பட வேண்டிய கதையாகவே அந்நிகழ்வுகளை நான் பார்த்தேன். அந்நிகழ்வுகளை எழுத்தில் (ஆங்கிலத்தில்) கொண்டு வந்து உலகுக்கு சொல்லிட பல முறை முயன்று தோற்றேன்.

கிண்டில் போட்டியில் முதல் கட்டத் தேர்வின் வெற்றி மக்களின் மனதை வெல்வதிலேயே உள்ளது என்று உணர்ந்ததால், என்னை மெய்சிலிர்க்க வைத்த மேற்கூறிய பயண நிகழ்வுகள் நிச்சயம் மக்களுக்கு பிடிக்கும், ஆதரிப்பார்கள் என்று நம்பி பல நாள் கைக் கூடாத கதையை எழுதி மக்கள் மன்றத்தில் வைத்தேன்.

பிரபல எழுத்தாளர் என்று உங்களை சொல்கிறார்களே? எப்படி வந்தது இந்த பட்டம்?

ஒருமுறை திராவிட வாசகர் வட்டத்தை சேர்ந்த இரவிஷங்கர் அய்யாக்கண்ணு அவர்களுடன் நடந்த உரையாடலில் ஒரு படைப்பு சிறந்த படைப்பா? தரம் உள்ள படைப்பா? என்பதை பிரபல எழுத்தாளர்கள் / இலக்கியவாதிகள் கூட்டமே முடிவு செய்வார்கள் என்றார்.

அது என்ன அவர்கள் மட்டும் பிரபல எழுத்தாளர்கள்? யார் தந்த பட்டம்? பிரபல எழுத்தாளர் என்று கூறுவதற்கான விதிகள் என்ன? போன்ற கேள்விகள் என் முன் எழுந்தது. அதற்கு விடையாக நான் கண்டது பிரபலம் என்பதே வெங்காயம்தான். மக்களுக்காக உழைக்கும் ஐஏஸ், ஐபிஎஸ், எம். எல். ஏ, எம்பிகள், முதல்வர்கள், அதிபர்களை யாரும் பிரபலம் என்று கொண்டாடுவது இல்லை.

யாரை பிரபலம் என்று அழைக்கிறார்கள் என்று உற்று நோக்கியப் பொழுது நான் அறிந்தது - மக்கள் எங்கெல்லாம் ஒரு துறையின் நேரடி நுகர்வாளர்களாக இருக்கிறார்களோ அத்துறையினரே பெரும்பாலும் பிரபலம் என்று அழைக்கப்படுகிறார்கள். எ.டு. பிரபல ஜோதிடர், பிரபல நடிகர், பிரபல மருத்துவர், பிரபல கோயில், பிரபல முடிவெட்டும் நிபுணர். அவ்வளவு ஏன் மக்கள் பயப்படும் பெரிய ரவுடியை பிடித்தோம் என்று கூறிக்கொள்வதற்காக பிரபல ரவுடி என்று காவல்துறையே அழைக்கும் ஊர்தான் நம் ஊர்.

இந்த பிரபலங்களால் சமூகத்துக்கு ஒரு பயனும் கிடையாது. சமூகத்தால் இவர்களுக்குதான் பயன் என்று அறிந்துக் கொண்டேன்.

பிரபல எழுத்தாளர் என்று கூறிக்கொண்டால் கூடுதலாக பத்து பிரதிகள் விற்கும். பிரபலம் என்பதால் சமுகத்துக்கு பயன் இல்லாததுப் போல், பாதகமும் இல்லை. ஆகையால், என் புத்தகத்தை விற்பதற்காக என்னையே பிரபல எழுத்தாளர் என்றுக் கூறிக் கொண்டேன். பின்பு மக்களும் அவ்வாறே அழைக்கத் தொடங்கினர்.

கூடுதலாக, மதுமலர் கார்த்திகேயன் அவர்கள் "பிரபல எழுத்தாளர்" என்று பட்டமே குடுத்தார். அன்புமணி பெருமாள் என்பவர் ஒருப்படி மேலாக "பிரபல எழுத்தாளர் மற்றும் சிந்தனையாளர்" என்றழைக்கத் துவங்கினார்.

நீங்கள் சமூக ஊடகங்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறீர்கள். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியை எப்படிப்பார்க்கிறீர்கள்? புத்தக வாசிப்பை இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி வளர்க்குமா? தடுக்குமா?

இந்திய சமூகம் சாதிய சமூகமாக இருந்து நிலத்தின் வழியாக மட்டும் அதிகாரங்களை தீர்மானிக்கவில்லை, தகவல்களையும் ஒரு சாதிக்குள் அடக்கி அதிகார மையத்தை தங்களுக்குள்ளேயே வைத்துக் கொண்டார்கள்.

தொழில்நுட்ப வளர்ச்சியும், அதன்வழி வந்த தகவல் புரட்சியும் ஒரு சாதிக்குள், ஒரு கூட்டத்திற்குள் மட்டும் உலாவிய தகவல்களை பலருக்கும் கொண்டு சேர்த்துள்ளது.

சமூகங்களுக்கிடையிலான உரையாடல்கள் தொடங்கியுள்ளது. இவைகள் பெரும் வளர்ச்சியை, பரந்துப்பட்ட வளர்ச்சியை நமக்கு கொண்டு வரும் என்று எண்ணுகிறேன். அவ்வகையில் தொழில்நுட்ப வளர்ச்சியை பெரும் வரமாக பார்க்கிறேன்.

புத்தக வாசிப்பை நிச்சயம் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி ஊக்குவிக்கவே செய்யும். ஏனெனில், நாம் படிக்கும் முறை மட்டும் மாறிடவில்லை, எழுத்தாளர் முதல் வாசகர் வரை உள்ள மொத்த சங்கிலித் தொடரையும் தொழில்நுட்ப வளர்ச்சி புரட்டிப் போட்டுள்ளது.

சிறு கூட்டங்களிடம் சிக்கித் தவித்த புத்தக உலகம் இன்று தொழில்நுட்ப வளர்ச்சியால் பொது மக்களிடம் வந்து சேர்ந்துள்ளது.

எழுத்தாளர்களுக்கு யார் வேண்டுமானாலும் எழுதலாம், எளிதாக புத்தகம் வெளியிடலாம், 35% முதல் 70% வரை ராயல்டி பெறலாம் போன்றவை சாதகமானது. அதேப் போல் வாசகர்களுக்கு புத்தகத்தை பணம் செலுத்தி வாங்காமலேயே படிக்கலாம், உட்கார்ந்த இடத்தில் இருந்தே படிக்கலாம் போன்றவை லாபகரமானது. இவைகள், தொழில்நுட்பத்தாலேயே சாத்தியமானது, நிச்சயம் வாசிப்பை வளர்த்தெடுக்கவே கூடியது.

சமூக ஊடகத்தில் ஒருவர் எப்படி இயங்க வேண்டும். எப்படி தங்களை வளர்த்துக்கொண்டு சமுகத்திற்கும் பங்களிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

உலக வரலாற்றில் முதல் முறையாக சாதி, மதம், இனம், மொழி, பாலினம், நாடு, வர்க்கம் கடந்த உரையாடல்களை சமூக ஊடகம் சாத்தியப்படுத்தியுள்ளது. பல போர்களே மொழிப் பிரச்சினை மற்றும் தகவல் பரிமாற்றத்தில் எழுந்த குறைப்பட்டால் ஏற்பட்டுள்ளது என்ற பின்னணியில் அணுகினால் சமூக ஊடகத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் உணரலாம்.

இவ்வளவு வலிமையான சமூக ஊடகத்தை நாம் கவனத்துடன் பயன்படுத்திட வேண்டும். தகவல் திணிப்புகளை தவிர்த்து உரையாடல்களை ஊக்குவித்து நம் கற்றலை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். தனி மனித தாக்குதல்களை மறந்தும் மேற்கொள்ளக் கூடாது.

கருத்து பரிமாற்றத்தின் முலமாக ஒத்த கருத்துடையவர்களை அடையாளம் கண்டுக்கொண்டு அவர்களுடன் களத்தில் இணைந்து இயங்கும் வழிமுறைகளை கண்டுணர்ந்து சமுக பங்களிப்பை கூட்டு முயற்சியாக வழங்கிட வேண்டும். தனி நபராக இயங்குவதைவிட கூட்டு முயற்சியே நீண்ட நாள் பலனைத் தரும் என்று நம்புகிறேன். சமூக ஊடகம் அக்கூட்டு முயற்சிக்கு வழிவகை செய்கிறது. பயன்படுத்திக் கொள்வோம்.

உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்கள் யார்? புத்தகங்கள் எது?

பிடித்த எழுத்தாளர்கள், பிடித்த புத்தகங்கள் என்று குறிப்பிட்டு எதுவும் கிடையாது.
எழுத்து என்றாலே பிடிக்கும். பத்து வயதிலிருந்து கிடைக்கும் எழுத்துகள் அனைத்தையும் படித்து வருகிறேன். வாசிப்பு பழக்கமற்ற சுற்றத்தில் இருந்து வருவதால் என் வாசிப்புகள் முறைப்படுத்தப்படாத ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. அண்ணாவை படிக்க ஆரம்பித்ததற்கு பின்பு அவரின் எழுத்து நடைக்காகவும், என் பேச்சுப் பயிற்சிக்காகவும் கிட்டத்தட்ட அவரின் அனைத்து புத்தகங்களையும் தேடிப் படித்துள்ளேன். அவ்வகையில் அண்ணாவை பிடித்த எழுத்தாளர் எனலாம்.

வரலாற்றின் அடிப்படையில் எழுதப்பட்ட புத்தகங்கள் பொதுவாகவே பிடிக்கும் எனலாம்.

திராவிட இயக்கம், பெரியார், திமுக, கலைஞர், இன்றைய தலைவர் முக ஸ்டாலின் குறித்து பல்வேறு தவறான தகவல்கள், அவதூறுகள் வந்தவண்ணம் இருக்கிறது. இதை நம்புவர்களுக்கும் இருக்கிறார்கள். இதை எப்படி அணுக வேண்டும்?

அவதூறுகளை கடந்து செல்வதுதான் நான் பின்பற்றும் அணுகுமுறை. என் மேல் இதுவரை வைக்கப்பட்ட எந்தவொரு அவதூறுக்கும் நான் இதுவரை பதிலளித்தது இல்லை. அவதூறு என்று தெரிந்ததற்கு பின்பு அதற்கு ஏற்றார் போல் நாம் ஏன் நடனமாட வேண்டும்?

நாம் செய்ய வேண்டியதும், அவதூறுகளுக்கு பதிலளிக்க வேண்டிய முறை என்பதும், ஆக்கப்பூர்வ செயல்களில் கவனம் செலுத்தி, அதன் வெற்றியை பரப்புவதேயாகும். இந்த பரப்புதலில் எல்லா அவதூறுகளும் தானாகவே பொசுங்கிவிடும்.

நாம் நிராகரிக்கவே முடியாத செயல்களை செய்துவிட்டால் எந்த அவதூறும் நம்மை அசைத்துப் பார்க்க முடியாது.

இன்னும் சொல்லப் போனால், அவதூறுகளை சமர்த்தியாக நம் ஆக்கப்பூர்வ செயல்களின் பரப்புதலுக்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நம் மேல் அவதூறு சொல்வதற்கே எதிரிகள் பயப்பட வேண்டும். இந்த முறைகளை பயன்படுத்தி நான் வெற்றிப் பெற்றுள்ளேன்.

கிண்டில் போட்டியில் கூட என்னை கிண்டல், கேலி செய்தவர்களின் பதிவுகளையே என் புத்தக விளம்பரத்துக்காக பயன்படுத்திக் கொண்டேன் என்பதை இந்த இடத்தில் நீங்கள் பொருத்திப் பார்க்கலாம்.

உங்களது மற்ற புத்தகங்களை குறித்து சொல்லுங்கள்.

முதல் புத்தகம் - "நாடார் வளர்ச்சிக்கான உரிமை, இட உரிமை",  https://www.amazon.in/dp/B07ZY7JZG2, இட உரிமைத் தொடர்பான என் முகநூல் பதிவுகளைத் தொகுத்து "செளந்திரப்பாண்டியனார் சமூக நீதிப் பேரவை" யின் சார்ப்பில் வெளியீடப்பட்டது. இட உரிமை என்றாலே SC / ST பிரிவினருக்கானது என்ற பொய் பிம்பத்தை உடைப்பதற்காக, சாதிப் பெயர் போட்டு வெளியிடப்பட்டது. பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இரண்டாவது புத்தகம் - முதல் கதைப்புத்தகமாக வெளியானதுதான் "பயணம் (இல்லை) பணயம்", https://www.amazon.in/dp/B07ZMHZXYY.

மூன்றாவது புத்தகம் - "வா தமிழா! பொருளாதாரம் பயில்வோம்...",  https://www.amazon.in/dp/B07ZTTNGQ9, அடிப்படை பொருளாதாரக் கோட்பாடுகளை எளிய தமிழில் விளக்கி, "இந்தி திணிப்பு எதிர்ப்பு", "தமிழ் நாடு வேலை தமிழ் நாட்டினருக்கே" போன்ற சில பிரபல பிரச்சினைகளில் உள்ள பொருளாதார கோணத்தை விளக்கி எழுதிய புத்தகம். என் புத்தகங்களிலேயே மிகப் பெரிய வெற்றிப் பெற்று விற்பனையில் சாதனைப் படைத்து வருகிறது. கிண்டில் போட்டியில் எனது இரண்டாவது புத்தகமாக பங்குப் பெற்று, ஒரு ஆசிரியரின் ஒரு புத்தகமே இறுதிப் போட்டியில் பங்குப் பெற இயலும் என்ற விதியால் மட்டுமே இறுதிச் சற்று வாய்ப்பை இழந்த புத்தகம்.

நான்காவது புத்தகம் - "உரிமைகளின் காவலன்...", https://www.amazon.in/dp/B083WLJ72C, என் புத்தகங்களிலேயே நீண்ட நாள் தயாரிப்பிலிருந்த புத்தகம். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள். முதல் புத்தகமாக வெளி வர வேண்டியது. கிட்டத்தட்ட 100 அடிப்படை அரசியல் கேள்விகளுக்கு எளிய முறை பதிலளிக்கப்பட்டுள்ளது. பிஜேபி / இந்துத்தூவா ஆதரவாளர்களுக்கு பரிசளிக்க ஏற்ற புத்தகம்.

ஐந்தாவது புத்தகம் - "பாண்டியப் பேரரசு", https://www.amazon.in/dp/B086J5PW1X, அண்ணா நினைவு சிறுவர் சிறுகதைப் போட்டிக்காக எழுதிய புத்தகம். வரலாற்றைத் தொட்டு, நிகழ்வு அரசியலை தடவி, கதையில் அண்ணாவின் திராவிட நாட்டை அமைத்துள்ளேன்.

இந்த 5 புத்தகங்களுமே ஆறு மாத காலத்திற்குள் கிண்டிலில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து எதைக் குறித்து எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள்? எதிர்கால திட்டம் என்ன?

மக்கள் கேட்டுக் கொண்டதற்காக "வா தமிழா! மார்க்கெட்டிங் பயில்வோம்..." என்ற புத்தகத்தை எழுத ஆரம்பக் கட்ட வேலைகள் தொடங்கிவிட்டன.

அதன் பிறகு, என் கிண்டில் வெற்றிப் பயணத்தையும் ஆவணப்படுத்தி, கொஞ்சம் விரிவுப்படுத்தி என் சுயசரிதையாகவும் எழுதலாம் என்று எண்ணியுள்ளேன். தன்னம்பிக்கை கதையாக மலரும்.

இவை இரண்டையும் தவிர்த்து எழுத வேண்டும் என்றால் அதனை மக்களின் தேவையே முடிவு செய்யும். எழுத்துப் பணியை என் அரசியல் பணியின் ஒரு பிரிவாகத்தான் பார்க்கிறேன் அன்றி நான் முழுமையான எழுத்தாளர் கிடையாது.

நிகழ்காலம், எதிர்காலத் திட்டம் எல்லாம் அரசியல்தான்.

உங்களது வெற்றியின் ரகசியமாக/ பலமாக நீங்கள் எதைக்கருதுகிறீர்கள்?

கூச்சமோ, தயக்கமோயின்றி நேற்று பழக்கமானவர்களிடம் கூட உதவிகளை கேட்டுப் பெறுவதுதான் என் வெற்றியின் ரகசியமாக / பலமாக நான் கருதுகிறேன்.

No comments:

Post a Comment