Saturday 25 July 2020

சளைக்காமல் உண்மைகளை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்! - கோவி. லெனின்

சளைக்காமல் உண்மைகளை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்! - கோவி. லெனின்


அமேசான் நிறுவனம் நடத்திய கிண்டில் போட்டியில், குறும் படைப்புகள் பிரிவில் பத்திரிக்கையாளர், எழுத்தாளர் கோவி. லெனின் அவர்களின் “2K Kid திருவள்ளுவர் ஆண்டு” புத்தகம் முதல் பரிசை பெற்று இருக்கிறது. அவரிடம் திராவிட வாசிப்பு சார்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:

திராவிட வாசிப்பு: கிண்டில் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்பட்டது?

கோவி.லெனின்: இதுவரை எந்தப் போட்டிக்கும் புத்தகங்களை அனுப்பியதில்லை. விருதுகள் பெற வேண்டும் என்ற எண்ணத்திலும் எழுத மாட்டேன். என் புத்தகங்களுக்கான வெளியீட்டு விழாவிலும் கூட எனக்கு ஆர்வம் கிடையாது. திராவிட இயக்கம் சார்ந்த சிந்தனைகளுடன் எழுதுவது மட்டுமே என் வேலை. அதனை ஒரு கடமையாக-பொறுப்பாக-நன்றியுணர்வாகக் கருதிச் செயல்படுகிறேன். அதைக் கிண்டில் தளத்தில் செயல்படுத்துங்கள் என இளைய திராவிடர்களான அரக்கர்கள் அன்புடன் அழைத்தார்கள். அவர்கள் அழைப்பில் இருந்த நியாயத்தையும், திராவிட இயக்கத்தைப் புதிய தளங்களில் எடுத்துச் செல்வதற்கானத் தேவையையும் உணர்ந்து எழுதினேன். போட்டிக் களத்திற்குள் என் புத்தகத்தைத் தள்ளியவர்கள் அவர்கள்தான். 2K kid புத்தகம் பரிசு பெற்றது என்றால் அதற்கான காரணம், இளைய திராவிடர்கள்தான்.

திராவிட வாசிப்பு: ‘2 K Kid -திருவள்ளுவர் ஆண்டு’ என தலைப்பிட்டது ஏன்?

கோவி.லெனின்: இளைய தலைமுறைக்கு சொல்ல வேண்டிய-செல்ல வேண்டிய அரை நூற்றாண்டுகால வரலாற்றைச் சொல்லும்போது அதன் தலைப்பு இன்றைய தலைமுறைக்கும் ஈர்ப்பாக இருக்கவேண்டும். வரலாற்றோடும் இணைந்திருக்க வேண்டும். ஆங்கில நாள்காட்டி என்று நாம் சொல்கின்ற கிரிகோரியன் காலண்டரில் உள்ள ஆண்டுடன், 31 ஆண்டுகளைக் கூட்டினால் அது திருவள்ளுவர் ஆண்டு. தற்போதைய ஆங்கில ஆண்டு 2020+31 = 2051 என்பதுதான் திருவள்ளுவர் ஆண்டு. 31ஐக் கழித்தால் ஆங்கில ஆண்டு.

இந்தக் கதையில் உள்ள 2K என்பது ஆங்கில நாள்காட்டியின் 2000ஆம் ஆண்டை மட்டும் குறிக்கவில்லை. திருவள்ளுவர் ஆண்டின் 2000த்தையும் சேர்த்தே குறிக்கிறது. அதாவது, ஆங்கில நாள்காட்டியின் 2000ஆம் ஆண்டிலிருந்து 31ஐக் கழித்தால் 1969. அதுதான் திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கின் 2000ம் ஆகும். நான் பிறந்த ஆண்டும் அதுதான். “கடைசியில், அந்தக் குழந்தையே நீங்கதான் சார்” என்பதுபோல, திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கின்படியான 2K  Kidஆன எங்களில் தொடங்கி, ஆங்கில நாட்காட்டிப்படியான 2K Kid வரையிலான கதையாக அரை நூற்றாண்டு காலத்தைப் பதிவு செய்ததால் அந்தத் தலைப்பை வைத்தேன். 

திராவிட வாசிப்பு: தமிழ்நாட்டின் சமூகநீதி வளர்ச்சியை ஒரு கதையில் சொல்லி, அதில் வெற்றியும் பெற்று இருக்கிறீர்கள். இதை திராவிடத்தின் வெற்றி என்று சொல்லலாமா?

கோவி.லெனின்: திராவிட இயக்கமும் பொதுவுடைமை இயக்கமும் செழித்து வளர்ந்த காவிரி டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பதால் இயல்பாகவே இரண்டு இயக்கங்களின் தாக்கமும் எனக்குள் இருக்கும். கீழத்தஞ்சை மாவட்டத்தில், பொதுவுடைமை இயக்கம் ஒரு பிரச்சினையை முன்வைத்து போராடும் போது, அதன் சமூக  ரீதியான தாக்கத்தை திராவிட ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டு, மக்களுக்குப் பயனளிக்கும் திட்டமாக நடைமுறை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது வழக்கம். சமூக நீதிக் கண்ணோட்டத்தில் சமூக நலத் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்திய மாநிலம் தமிழ்நாடு. திராவிட இயக்கத்தின் பயணம் என்பது அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து (Inclusive), அனைத்து  நிலைகளிலுமான வளர்ச்சியை நோக்கிக் கொண்டு செல்வதாகும். அது, இந்தக் கதையிலும் அது எதிரொலிக்கிறது என நீங்கள் கருதினால், அது திராவிடத்தின் வெற்றியே. 

திராவிட வாசிப்பு: நீங்கள் ஏற்கனவே நிறைய ஆச்சு புத்தகங்கள் எழுதி இருக்கிறீர்கள். சமூக ஊடகங்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறீர்கள். இன்றைய   தொழில்நுட்ப வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்? புத்தக வாசிப்பை இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி வளர்க்குமா? தடுக்குமா? 

கோவி.லெனின்: அறிவுத் தேடல் என்பது மனித இயல்பு. அதற்கானத்  தளங்கள் காலந்தோறும் மாறிக் கொண்டிருக்கும். திராவிட இயக்கங்கள் உருவாக்கிய படிப்பகங்களில் நாளிதழ்களை, வார இதழ்களைப் படித்திருக்கிறேன். கைகளால் அச்சுக்கோர்த்து, டிரெடில் மெஷினில் அச்சிட்ட அந்த இதழ்களுக்கும், தற்போது கணினி முறையில் வடிவமைத்து, நவீன இயந்திரங்களில் அச்சாகி வீட்டு மேசைக்கு வரும் இதழ்களுக்கும் ஏராளமான மாற்றங்களும் முன்னேற்றங்களும் இருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சிதான் இதனை சாத்தியமாக்கியது. சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. அவர்கள் எதைப் படிக்கிறார்கள் என்பதில் மாறுபாடு இருக்கலாம். ஒரு செய்தியை-கருத்தை விரைந்தும்-விரிவான அளவிலும் கொண்டு சேர்க்க புதிய தளங்கள் பயன்படுகின்றன.  விரிவாகவும் ஆழமாகவும் படிக்க விரும்புவோர் அதற்குரிய புத்தகங்களை அச்சு இதழாகவோ மின்னிதழாகவோ தங்கள் வசதிக்கேற்ப தேர்வு செய்யும் சூழல் உருவாகி வருகிறது. எனவே தொழில்நுட்ப வளர்ச்சியையும்-படிக்கின்ற பழக்கத்தையும் எந்த வகையில் ஒன்றிணைத்து எடுத்துச் செல்கிறோம் என்பதைப் பொறுத்தே எதிர்காலம் அமையும்.

திராவிட வாசிப்பு: திராவிட இயக்கம் குறித்து, திராவிட அரசியல் குறித்தும், குறிப்பாக திமுக, கலைஞர் குறித்து பல தவறான தகவல்கள் இணையங்களில் வலம் வருகிறது. இவற்றை நம்புவர்களுக்கும் நிறைய பேர் இருக்கிறார்கள்.  இவற்றை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

கோவி.லெனின்: இன்றைய 2K kid, 90s Kidகளுக்கு மட்டுமல்ல, திருவள்ளுவர் ஆண்டு கணக்கின் அடிப்படையிலான 2K kidsஆன எங்களின் சிறுவயதிலும் திராவிட இயக்கம் பற்றியும், கலைஞர் பற்றியும் நிறைய கட்டுக்கதைகளை பொய்ப் பிரச்சாரங்களை அவிழ்த்து விட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். பெரியார்  தனது வீட்டுக்குள் அலமாரியில் ஒரு பிள்ளையாரை வைத்து ரகசியமாக வழிபடுவார் தெரியுமா என்று அந்தப் பொய்ப் பிரச்சாரம் ஆரம்பிக்கும். ஐம்பெரும் தலைவர்களை ஓரங்கட்டிவிட்டு கலைஞர் முதல்வரானார் என்றும் எம்.ஜி.ஆர்தான் அவரை முதல்வராக்கினார் என்றும் அந்தப் பிரச்சாரம் தொடரும். எல்லாரையும்போல அதை மட்டும் நம்பியிருந்தால், எம்.ஜி.ஆர். ரசிகனான நானும் அதே பாணியில்தான் பதிவிட்டுக் கொண்டிருப்பேன்.

திராவிட இயக்கம் குறித்த ஆதரவு-எதிர்ப்பு புத்தகங்களைப் படித்தும், திராவிட இயக்கத்தின் பயணத்தினைக் கவனித்தும், பல கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்குச் சென்றும் பெற்ற கருத்துகளிலிருந்து, உண்மை வரலாற்றை நோக்கிப் பயணிக்க முடிந்தது. அதனைப் பதிவிடும் வாய்ப்பும் அமைந்தது. அத்தகையப் பதிவுகளைக் காலந்தோறும் தொடர வேண்டும். ஏனென்றால், கீறல் விழுந்த ரிகார்டு போல- ஒரே டெம்ப்ளட்டில் அப்போது  சொன்ன பொய்களையே இப்போதும் சொல்லிக்கொண்டிருக்கும் கூட்டத்திடம், சளைக்காமல் உண்மைகளை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

பொய் மட்டுமல்ல, வதந்தியையும் சேர்த்தே அவர்கள் பரப்புவார்கள். உங்களைப் போன்றவர்களுக்கு விவரம்  தெரிந்தே கலைஞரின் மரணம் பற்றிய வதந்தி பல முறை பரப்பப்பட்டுள்ளது. 1990களின் தொடக்கத்திலிருந்து அந்த வதந்தி பரவியது என்றாலும், 2018ல்தான் கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்தார். அதற்கு முன்பாகவே, வதந்தி பரப்பியவர்களின் விருப்பத்திற்குரிய தலைவர்கள்-பிரமுகர்கள் பலர் போய்ச் சேர்ந்துவிட்டார்கள். ஆனாலும் பழைய பொய்களும் புதிய வதந்திகளும் பரவிக்கொண்டேதான் இருக்கும். இத்தகையப் பொய்ப் பிரச்சாரங்களால் திராவிட இயக்கத்தை வீழ்த்திவிட முடியவில்லை என்ற வரலாற்று உண்மையையும் மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.

இதிகாச-புராணங்கள் எப்படி காலத்திற்கேற்ப ஓலைச்சுவடியில், தெருக்கூத்து மேடையில், நாடக அரங்கில், திரைப்படத்தில், தொலைக்காட்சித் தொடரில், காணொலிகளில் ஒவ்வொரு  தலைமுறையிடமும் கொண்டு செல்லப்படுகிறதோ அதுபோலவே, திராவிட இயக்கத்திற்கு எதிரான புருடாக்களும் பரப்பப்படுகின்றன. இதனை எப்படி எதிர்கொள்வது என்பதற்கும் நம் தலைவர்கள் வழிகாட்டியிருக்கிறார்கள். பெரியாரின் இந்து மத பண்டிகைகள், அண்ணாவின் நீதிதேவன் மயக்கம், புலவர் குழந்தையின் இராவண காவியம் போன்றவற்றைப் படித்தால் நாம் எப்படி செயல்படவேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

திராவிட வாசிப்பு: உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்கள் யார்? புத்தகங்கள் எது?

கோவி.லெனின்: திருவாரூரில் லெனின் புத்தக நிலையம் என்ற கடையை அப்பா நடத்தினார்.  அதனால் அவர் பெயரே ‘லெனின்’ கோவிந்தராசன் என்றானது. எனக்கும் லெனின் என்றே பெயர் வைத்தார். வீட்டில் நிறைய புத்தகங்களை அப்பா அடுக்கி வைத்திருப்பார். அதில், அண்ணா எழுதிய புத்தகங்கள்தான் சின்ன சின்னதாக இருக்கும். சிறுவயதில் அவற்றின் மீது ஆர்வம் வந்தது. அண்ணாவின் ’சந்திரோதயம்’தான் நான் படித்த முதல் புத்தகம். அதுபோலவே சின்ன புத்தகமாக இருந்த பெரியாரின் ‘உயர் எண்ணங்கள்’ புத்தகத்தைப் படித்தேன். வீட்டுக்கு நாள்தோறும் வரும் முரசொலியைப் படித்தபோது, கலைஞரின் எழுத்து மீது ஈர்ப்பு வந்தது. இவர்கள்தான் என் எழுத்துகளுக்கு அடித்தளம். பள்ளிப் பருவத்தில் பாரதியார், பாரதிதாசன் எனக் கவிதைகள் மீது விருப்பம் ஏற்பட்டது. அப்துல்ரகுமான், மு.மேத்தா, நா.காமராசன், வைரமுத்து என விரும்பிப் படிப்பேன். கலைஞரின் கவியரங்கக் கவிதை வரிகள் பலவும் மனப்பாடமாக இருக்கும். புதினங்களில் ஜெயகாந்தன், சுஜாதா, பிரபஞ்சன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோரைப் பிடிக்கும். மக்சிம் கார்க்கியின் தாய் உள்பட ரஷ்ய நாவல்களும் படிப்பேன். பொதுவாக புனைக் கதைகளைவிட வரலாறு-கட்டுரைகள் மீதுதான் எனக்கு ஆர்வம் அதிகம். ராகுல சாங்கிருத்தியாயனின் வால்காவிலிருந்து கங்கை வரை, பேரறிஞர் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம், சாமி சிதம்பரனாரின் தமிழர் தலைவர், கலைஞரின் சங்கத் தமிழ் ஆகியவை எப்போதும் பிடித்த நூல்கள்.

திராவிட வாசிப்பு: புதிதாக எழுத வருபவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

கோவி.லெனின்: தம்மின் தம் மக்கள் அறிவுடைமை என்பதுபோல, தலைமுறைகள் மாறும்போது  எழுத்தின் வீச்சும் அதிகமாகும். புதிய படைப்பாளிகளிடம் அதனைக் காண முடிகிறது. அறிவுரைகள் எனும் கயிற்றில் கட்டி யாரையும் ஆற்றில் இறக்கிவிட முடியாது. அவரவர் அனுபவமே, எழுத்தாற்றல் வெள்ளத்தில் எதிர்நீச்சல் போடுகின்ற வலிமையைக் கொடுக்கும். திராவிட இயக்கப் படைப்பாளிகள் அதைத்தான் செய்தார்கள். அவர்களிடமிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது, நிறைய படியுங்கள். நுணுக்கமாகப் படியுங்கள். மாற்றுக் கருத்துகளையும் தெரிந்துகொள்ளுங்கள். அதில் மாட்டிக்கொள்ளாத  வகையில் தெளிவாக இருங்கள். மறைக்கப்பட்ட உண்மைகளை நோக்கிய தேடல் தொடரட்டும். காலத்திற்கேற்ற படைப்புகளை புதிய முறையில் படைத்து, மக்களிடம் கொண்டு சேருங்கள். புதிய வாசகர் பரப்பை உருவாக்குங்கள். அது இயக்கத்தின் ரத்தநாளமாக மாறிடவேண்டும்.

திராவிட வாசிப்பு: உங்களது மற்ற புத்தகங்களை குறித்து சொல்லுங்கள்..

கோவி.லெனின்: பத்திரிகைப் பணியில் இருப்பதால் ஒவ்வொரு நாளும் எழுதித்தான் ஆகவேண்டும். அதற்கான நேரம் போக, ஏதேனும் அவசியத்  தேவை இருந்தால் அது குறித்து புத்தகம் எழுதுவேன். ‘சமூக நீதியின் ஒளிவிளக்கு வி.பி.சிங்’ தொடங்கி, ‘தமிழக முதல்வர்கள் வரிசை: ஓ.பன்னீர்செல்வம்’ என்ற தலைப்பு வரை பலர் குறித்தும் எழுதியிருக்கிறேன். சினிமா ரசிகர் மன்றம் குறித்த ‘உய்.. உய்..’, சிலைகள் கடத்தல் தொடர்பான ‘சிவன் சொத்து’ உள்ளிட்ட புத்தகங்களும் எழுதியிருக்கிறேன். 4 கவிதைத் தொகுதிகள், சிறுவர் கதைகள், மாணவர்களுக்கான கையேடு, போட்டித் தேர்வுகளுக்கானக் கட்டுரைகள் என பதிப்பகத்தாரின் தேவை சார்ந்தும் புத்தகங்கள் வெளிவந்துள்ளன. அந்த வகையில், ‘எமக்குத் தொழில் அரசியல்’ என்ற தலைப்பில் வந்த கட்டுரைத் தொகுப்புக்குப் பிறகுதான் தொடர்ச்சியாக அரசியல் சார்ந்த புத்தகங்கள் வெளியாயின. நண்பர் தாகம் செங்குட்டுவன் கேட்டதால், 85 வயது கலைஞரும், 25 வயது கலைஞரும் உரையாடுவது போன்ற ‘கலைஞரிடம் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது?’ என்ற புத்தகத்தை 2007ல் எழுதினேன். ஃபேஸ்புக் நண்பர்கள் இன்பாக்ஸில் கேட்ட கேள்விகளின் எண்ணிக்கை அதிகமானதால் அவற்றுக்கு இயன்ற அளவு பதில் சொல்லும் வகையில், “திராவிடர் இயக்கம்: நோக்கம்-தாக்கம்-தேக்கம்” புத்தகத்தை 2012ல் எழுதினேன். 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக மோடி என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டபோது, அதன் உண்மைத் தன்மையை விளக்கும் வகையில் “நமோ நாமம்” என்ற புத்தகத்தை எழுதினேன். மோடி, திருமணமானவர் என்பதும் அவரது மனைவி ஒரு பள்ளியில் வேலை பார்ப்பது குறித்தும், அவரை குஜராத் அரசு அணுஅணுவாக கண்காணிப்பது பற்றியும் தமிழில் முதலில் பதிவு செய்தது அந்தப் புத்தகம்தான். 
கலைஞர் முதல்வராக இருந்தபோது அவரிடம் சொல்லியதற்கிணங்க அவரது கலைப்படைப்புகளை ஆவணப்படமாக எடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு தடைப்பட்டதால், அதனை ‘கலைக்கோட்டம்’ எனும் புத்தகமாக அச்சிட்டு, 2017ல் அவருடனான கடைசி சந்திப்பில் வழங்கினேன். செல்வி.ஜெயலலிதா ஆட்சியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கண்டுகொள்ளப்படாத நிலையில், ‘எம்.ஜி.ஆர் அகம்-புறம்’ என்ற கேள்வி-பதில் வடிவிலான புத்தகத்தை எழுதினேன்.  புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தில் ‘கலைஞரின் பேனா’ என்ற தலைப்பில் பேசியதை விரிவாக்கி,  தனித்தனிக் கட்டுரைகளாக எழுதி புத்தகமாக்கினேன். கவிதைகளில் தொடங்கி கட்டுரை, வரலாறு, கதை என எழுத்துப் பயணம் தொடர்கிறது. என் வேலை, எழுதுவது. அவற்றைப் படித்தவர்கள்தான் அந்தப் புத்தகங்களை மதிப்பிட வேண்டும்.

திராவிட வாசிப்பு: அடுத்து எதைக் குறித்து எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள்? எதிர்கால திட்டம் என்ன?

கோவி.லெனின்: ‘திராவிட வாசிப்பு’ கேட்ட கேள்விகளுக்கான பதிலை எழுதிக்கொண்டிருக்கிறேன். எதிர்காலத் திட்டம் என்பதைவிட, எதிர்ப்படும் சூழல்களைப் பொறுத்து, செய்ய வேண்டிய பணிகளை நிச்சயம் செய்வேன். 
                                                       
திராவிட வாசிப்பு: உங்களது வெற்றியின் ரகசியமாக/ பலமாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?

கோவி.லெனின்: ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. தாகம் உள்ளோர் குடிநீராக்கிக் கொள்வார்கள். தேவை உள்ளோர் வேளாண்மைக்குப் பயன்படுத்துவார்கள். காலைக் கடன்கள் முடித்து கால் கழுவுபவர்களும் இருப்பார்கள். ஆற்றில் வாய்க் கொப்பளித்து அதன் மீது எச்சில் துப்புகிறவர்களும் உண்டு. ஆறு எதற்கும் கலங்காது. கடலில் கலக்கும் வரை அதன் ஓட்டமும் நிற்காது. அதற்கு வெற்றி-தோல்வி, பலம்-பலவீனம் எதுவும் தெரியாது. அதனிடம் ரகசியமும் கிடையாது. 

2K Kid: திருவள்ளுவர் ஆண்டு புத்தகத்தை வாசிக்க: https://amz.run/3K5J

No comments:

Post a Comment