Saturday 25 July 2020

திமுகவின் எதிரி அதிமுக அல்ல. வதந்தியும் பொய்களும்தான். - டான் அசோக்

திமுகவின் எதிரி அதிமுக அல்ல. வதந்தியும் பொய்களும்தான். - டான் அசோக்

அமேசான் நடத்திய கிண்டில் போட்டியில் நெடும் பிரிவில் தனது ஆர்.எஸ்.எஸ் லவ் ஸ்டோரி கதைக்காக பரிசு பெற்ற எழுத்தாளர் டான் அசோக் அவர்கள் திராவிட வாசிப்பின் கேள்விக்கு அளித்த பதில்கள்:

கிண்டில் போட்டியில் கலந்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்பட்டது?

டான் அசோக்: நாவல் எழுத வேண்டும் என்கிற நீண்ட நாள் எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ள ஒரு உந்துதலாக இந்த போட்டி அமைந்தது. போட்டி இல்லை என்றால் பெரும்பாலும் எழுதி இருக்க மாட்டேன். அதனால் ஜெயிக்கவேண்டும் என்பதையெல்லாம் தாண்டி நாவல் எழுத ஒரு காரணமாக, ஒரு ஊக்கமாக இந்தப் போட்டியைப் பயன்படுத்திக்கொண்டேன்.

ஆர். எஸ். எஸ் லவ் ஸ்டோரி என தலைப்பிட்டது ஏன்?

டான் அசோக்: நாவலுக்கு இந்தத் தலைப்பை வைக்கவில்லை. இந்த தலைப்புக்குத்தான் ஒரு நாவல் எழுதினேன். பெயர் வைத்துவிட்டு குழந்தை பெற்றுக்கொள்வதைப் போல. இந்தியாவில் காதலுக்கு எதிரி எது? மதம், சாதி. இரண்டுக்கும் இப்போது ஊக்கம் அளித்து வளர்ப்பது எது? RSS. அதனால் இரண்டையும் சேர்த்தால் என்ன என தோன்றியதன் வெளிப்பாடுதான் இந்தத் தலைப்பு.

தமிழில் இந்த மாதிரியான பிளாக் ஹ்யுமர் வகை புத்தகங்கள் வந்திருக்கிறதா என்றுக்கூட தெரியவில்லை. ஆனால், அதை இவ்வளவு சிறப்பாக எழுதி வெற்றியும் பெற்று இருக்கிறீர்கள். இதை எப்படிப்பார்க்கிறீர்கள்?

டான் அசோக்: தீவிரமாக அரசியல் பேசுவதால் நான் ரொம்ப சீரியசான ஆளாகப் பார்க்கப்படுவதில் எனக்கு ஒரு வருத்தம் உண்டு. நிஜத்தில் நான் அப்படி இல்லை. பள்ளி, கல்லூரி முதல் இப்போதுவரை நான் இருக்குமிடத்தில் எப்போதும் சிரிப்புச் சத்தம் இருக்கும். என் நெருங்கிய வட்டத்துக்கு அது தெரியும். எனது அந்த முகத்தைத்தான் நீங்கள் நாவலில் பார்த்தீர்கள்.  மற்றபடி சோமசுந்தரம் நம் எல்லோருக்குள்ளும் இருக்கிறான். எழவு வீட்டிற்குப் போகிறோம் என்றால் நம் மனம் 24*7 சோகத்திலேயே இருக்காது. நாம் அழுது நிமிரும்போது ஒரு அழகான பெண் நம்மைக் கடந்துபோனால் அவளைப் பார்ப்போம். அதனால் நாம் சோகமாக இல்லை என அர்த்தமில்லை. அதேபோல் வேறு எதையாவது பார்த்தால் வேடிக்கையான எண்ணங்கள் மனதில் தோன்றும். எழவு வீட்டில் மிக நெருங்கிய சொந்தத்தை இழந்து துக்கத்தின் உச்சத்தில் இருப்பவர்கள் கூட அவ்வப்போது சிரிப்பதையும் பிறகு மீண்டும் அழுகைக்குள் போய்விடுவதையும் நான் பார்த்திருக்கிறேன். இதுதான் யதார்த்தம். மனிதன்தான் பெர்ஃபெக்‌ஷனுக்கு அலைவான். எல்லா சூழலிலும் பெர்ஃபெக்ட்டான மனநிலைகளை வெளிப்படுத்த வேண்டும் என நினைப்பான். மனித மனம் அப்படியல்ல. அது ஏராளமான குறைகள் உள்ள அழகான, சோகமான, காமடியான இடம். அப்படி ஒரு மனதைத்தான் நாவலில் வாசித்தீர்கள்.

நீங்கள் ஏற்கனவே அச்சு புத்தகங்கள் எழுதி இருக்கிறீர்கள். சமூக ஊடகங்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறீர்கள். இன்றைய   தொழில்நுட்ப வளர்ச்சியை எப்படிப்பார்க்கிறீர்கள்? புத்தக வாசிப்பை இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி வளர்க்குமா? தடுக்குமா?

டான் அசோக்: கண்டிப்பாக வாசிப்பை வளர்த்துள்ளது. முன்பு 10% பேர் புத்தகம் வாசிப்பார்கள். இப்போது 100% பேர் வாசிக்கிறார்கள். ஆனால் புத்தகத்துக்குப் பதிலாக டிவீட்டையும், வாட்சப்பையும், முகநூலையும் வாசிக்கிறார்கள்.  அவர்களை புத்தகம் வாசிக்க வைக்க வேண்டும் என்றால் புத்தகம் சிறியதாக இருப்பதும், சுவையாக இருப்பதும் அவசியம். புத்தகமும் இன்று கிண்டில், ஆடியோபுக் போன்ற தொழில் நுட்பவளர்ச்சிக்கு ஆட்பட்டுவிட்டதால், தொழில்நுட்ப வளர்ச்சி புத்தக வாசிப்பை தடுக்கும் என சொல்ல முடியாது. உதவிபுரியவே செய்யும். ஆனால் வளர்ச்சியின் வேகத்துக்கு ஈடுகொடுக்க இந்தத் தலைமுறைக்கான புத்தகங்களை எழுத்தாளர்கள் எழுத வேண்டும்.  எதையும் அழகாகச் சொல்லலாம் தப்பில்லை. ஆனால் சுத்திச் சுத்தி சொன்னால்தான் இலக்கியம் என்ற முன்முடிவில் இருந்து பழைய எழுத்தாளர்கள் வெளிவந்தே ஆகவேண்டும். இல்லையென்றால் புதிய வாசகர்கள் கிடைக்க மாட்டார்கள். நான் மாஸ்டர், நீ ஸ்டூடண்ட், நீ பி. டி மாஸ்டர் என எதையாவது உளறிக்கொண்டு குண்டுச்சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்ட வேண்டியதுதான். இந்த கிண்டில் போட்டியையே எடுத்துக்கொள்ளுங்கள். தமிழ்நாட்டில் கிண்டில் சாதனம் பரவலாக இல்லை. அதனால் கிட்டத்தட்ட 95% பேர் மொபைலில் தான் படைப்புகளைப் படிக்கப் போகிறார்கள் என்பது தெரிந்தும் ஒரு இலக்கியவாதி 350க்கும் அதிகமான பக்கங்களில் ஒரு நூல் எழுதியிருந்தார். அது அவர் விருப்பம். ஆனால் அத்தனை பக்கங்களை மொபைலில் யார் படிக்க முடியும்?  முன்யோசனை இல்லாமல் எழுதிவிட்டு, பிறகு மற்ற நூல்கள் போல விற்கவில்லையே, யாரும் படிக்கவில்லையே என ஒப்பாரி வைத்தால் என்ன செய்வது?  நான் எழுதுவதுதான் இலக்கியம் நீ படித்தே ஆகவேண்டும் என பிடிவாதம் பிடித்தால் வாசகர்கள் நம்மைக் கண்டுகொள்ளாமல் போய்விடுவார்கள். பிறகு புதிய எழுத்தாளர்களைத் திட்டியோ கேலி செய்தோ பலனில்லை. ஆக, எல்லா துறையையும் போல இதிலும் யாரெல்லாம் அப்டேட் ஆகிறார்களோ அவர்கள் வாசிக்கப்படுவார்கள். அவ்வளவுதான்.

சமூக ஊடகத்தினால் உங்களை வடிமைத்துக்கொண்டதாக ஒருமுறை சொல்லி இருக்கிறீர்கள். சமூக ஊடகத்தில் ஒருவர் எப்படி இயங்க வேண்டும். எப்படி தங்களை வளர்த்துக்கொண்டு சமுகத்திற்கும் பங்களிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

டான் அசோக்: முன்பு தனித்திறமையை நிரூபித்து ஒரு துறையில் முன்னேறுவது கடினம்.  அங்கு ஏற்கனவே உச்சத்தில் உள்ளவர்கள் சாமானியர்களையும், அறிமுகம் இல்லாதவர்களையும் உள்ளே விடவே மாட்டார்கள். ஒரு பத்திரிக்கையில் கதை எழுத வேண்டுமென்றால் ஆயிரம் சல்லித்தனங்களைச் செய்யவேண்டும். காலில் விழுக வேண்டும். ஆனால் சமூகவலைதளங்கள் வந்தபின் நிலைமை அப்படி இல்லை. எல்லோருக்கும் தங்கள் திறமையை நிரூபிக்கவும் வெளிக்காட்டவும் அதன் மூலம் வளரவும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதைச் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சதாசர்வகாலமும் தனிநபர்களைத் திட்டிக்கொண்டே இருப்பவர்கள் உருப்பட முடியாது. காணாமல் போய்விடுவார்கள். சமூகவலைதளங்களை நேர்மறையாக பயன்படுத்தத் தெரிய வேண்டும். இன்று ஊடகம், சினிமா, இலக்கியம் என பல தளங்களிலும் சமூகவலைதளங்களின் மூலம் வளர்ந்தவர்கள் பெரிய இடங்களில் இருக்கிறார்கள். இது நல்ல விஷயம்.

உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்கள் யார்? புத்தகங்கள் எது?

டான் அசோக்: பிடித்த எழுத்தாளர்கள் ஆங்கிலத்தில் பி.ஜி. உட்ஹவுஸ், சார்ல்ஸ் புகோவ்ஸ்கி. தமிழில் கலைஞர், அண்ணா, கு. அழகிரிசாமி, எஸ். ராமகிருஷ்ணன். அழகிரிசாமியின் ’ராஜா வந்திருக்கிறார்’, அண்ணாவின் ‘பூபதியின் ஒருநாள் அலுவல்’ போன்ற கதைகளும், கலைஞரின் ‘பாயும்புலி பண்டாரக வன்னியன்’ என்கிற நாவலும் எனக்கு மிகவும் பிடித்தமானவை. 

திராவிட இயக்கம், பெரியார், திமுக, கலைஞர், இன்றைய தலைவர் முக ஸ்டாலின் குறித்து பல்வேறு தவறான தகவல்கள், அவதூறுகள் வந்தவண்ணம் இருக்கிறது. இதை நம்புவர்களுக்கும் இருக்கிறார்கள். இதை எப்படி அணுக வேண்டும்? 

இது காலம்காலமாக நடப்பதுதான். திமுகவின் எதிரி அதிமுக அல்ல. வதந்தியும் பொய்களும்தான். சமூகவலைதளங்கள் வந்தபின் இது மிகவும் அதிகமானது. ஆனால் இப்போது திமுக தரப்பில் உண்மையைச் சொல்ல ஏராளமான ஆட்கள் வந்துவிட்டதால் ஓரளவுக்கு மட்டுப்பட்டிருக்கிறது. ஆனால் மக்களுக்கு நான் சொல்லவிரும்புவது ஒன்றுதான். இரண்டு தட்டுகளில், ஒரு தட்டில் நல்ல உணவையும் இன்னொரு தட்டில் உணவைப் போலவே தோற்றமளிக்கும் அசிங்கத்தையும் வைத்தால் உடனே சாப்பிட்டுவிடமாட்டீர்கள். அதில் எது உண்மையான உணவு என பரிசோதித்து, பகுத்தறிவை உபயோகித்து, பிறகுதான் உட்கொள்வீர்கள். அதே கவனம் எதைப் படிக்கிறோம், எதை நம்புகிறோம் என்பதிலும் வேண்டும். ஏனெனில் செய்திகள், தகவல்கள் என்பவை மூளைக்கு உணவு. அதில் அசிங்கத்தை நிரப்பக்கூடாது. எனவே ஒரு பொய்யை நம்புகிறீர்கள் என்றால் ஒருவன் உங்களை முட்டாள் ஆக்கிவிட்டான் எனப் பொருள். அதற்கு இடம்கொடுக்கக் கூடாது.

உங்களது மற்ற புத்தகங்களை குறித்து சொல்லுங்கள்.

டான் அசோக்: நாட்டைவிட்டுப் போகிறேன் என்பது என் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட என் பதிவுகளின் தொகுப்பு. நாட்டை விட்டுப் போகமாட்டேன் என்பது என் கட்டுரைகளின் தொகுப்பு. இவற்றின் அடுத்தடுத்த பாகங்கள் சில ஆண்டுகளில் வெளிவரலாம். இரண்டுமே உயிர்மை பதிப்பத்தின் மூலம் வெளியிடப்பட்டவை.

அடுத்து எதைக் குறித்து எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள்? எதிர்கால திட்டம் என்ன?

டான் அசோக்: அடுத்தும் நாவல்தான். எதிர்காலத்தில் நடக்கும் ஒரு காமடி நாவல். ஏற்கனவே திரைப்படங்களுக்கு எழுதிக்கொண்டிருக்கிறேன். அதோடு சேர்த்து இனி நாவல், சிறுகதைகள் என புனைவு நூல்களின் பக்கம் அதிகமாகக் கரையொதுங்க வேண்டும் என்பதுதான் எதிர்கால திட்டம்.

உங்களது வெற்றியின் ரகசியமாக/ பலமாக நீங்கள் எதைக்கருதுகிறீர்கள்?

டான் அசோக்: எதையும் யாருக்கும் எளிதாகப் புரியவைக்க முடியும் என்பதைதான் என் பலமாகக் கருதுகிறேன். முதல் படத்தில் வேலை செய்தபோது, வசனத்தோடு சேர்த்து சினிமா சம்பந்தமான போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் சிலவற்றையும் பார்த்தேன். அப்போது என்னைக் கவனித்த சீனியர் இணை இயக்குனர் ஒருவர், “எந்த வேலை செஞ்சாலும் ரொம்ப வருஷம் அதை செஞ்ச மாதிரி செய்றீங்க சார்,” என்று வாழ்த்தினார். அதைத்தான் என் ரகசியமாக நினைக்கிறேன். நான் எதையும் சீக்கிரம் கற்றுக்கொள்வேன்.

டான் அசோக் எழுதிய புத்தகங்களை வாசிக்க: https://amz.run/3K6t



No comments:

Post a Comment