Saturday 25 July 2020

காந்தியின் ராமராஜ்யம் - ப. திருமாவேலன்

காந்தியின் ராமராஜ்யம் - ப. திருமாவேலன் 

காந்தியை புரிந்துகொள்ள திருமாவேலன் அவர்கள் எழுதிய "காந்தியார் சாந்தியடைய" என்கிற புத்தகம் முக்கியமானது என நினைக்கிறேன். இதில் காந்தியை இக்காலத்திற்கு ஏற்றவாறும் புரிந்துக்கொள்ள முடியும். அதாவது, இந்துத்துவம் பலமாக வேரூன்றி இருக்கும் இக்காலத்தில், காந்தி எவ்வித பார்வையைக்கொண்டிருந்தார் என்பதை புரிந்துக்கொள்ள இந்த புத்தகம் உதவுகிறது. பெரியாரிய, அம்பேத்காரியவாதிகள் காந்தி மீது எழுப்பப்படும் விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும், காந்தி வாழ்ந்த காலகட்டத்தில் அவர் ஆதரித்த, எதிர்த்த கருத்தியல்கள் எது, மனிதர்கள் யார்? யார் பக்கம் அவர் கடைசிவரை நின்றார் என்பதையும், அவர் ஏன் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதையும் புரிந்துக்கொள்ள இந்த புத்தகம் உதவும். இந்த புத்தகத்தின் முதல் கட்டுரையாக "ராமராஜ்யம்" என்பது இருக்கிறது. 58 பக்கங்கள் கொண்ட இந்த கட்டுரை மிகமுக்கியமானது. காந்தியின் வாழ்வை இது பருந்து பார்வையில் அலசுகிறது. காந்தி, மதங்கள் குறித்து கொண்ட பார்வைகள், திறந்த மனதுடன் அவர் எல்லா மதங்களையும் அணுகியது, இந்து மதப்பற்று, தீண்டாதார் பிரச்சனை, இந்து முஸ்லீம் கலவரங்கள், நாட்டு பிரிவினை, காந்தி கொலை என பல்வேறு விஷயங்களை தொட்டு அதில் காந்தியின் நிலைப்பாடுகளையும் சொல்லி எழுதப்பட்டிருக்கும் கட்டுரை இது. இதை வாசித்து முடிக்கும் போது, காந்தியை நம்மால் சிறிதளவேனும் உணர முடிகிறது என்பதே இக்கட்டுரையின் வெற்றி என சொல்லலாம்.

இப்போது கட்டுரையில் சொல்லப்பட்டிற்கும் சில பகுதிகளை பார்ப்போம்:

வேதகாலத்திருந்த பண்டைய வருணாசிரம தர்மத்தில் எனக்கு நம்பிக்கையுண்டு. தற்காலத்தில் அர்த்தமற்ற முறையில் அனுஷ்டிக்கப்படும் வர்ணாசிரம தர்மம் என்பது தர்மமல்ல

வேதங்களுக்கு மட்டும் தனித்து ஈஸ்வரத்தன்மை உண்டு என்று நான் கருதுவதில்லை. வேதங்களுக்கு எவ்வளவு ஈசுவரத்தன்மை உண்டோ அவ்வளவு ஈசுவரத்தன்மை கிறிஸ்துவ வேதமாகிய பைபிளுக்கும், முகமதியர் வேதமாகிய குர் ஆனுக்கும், பாரசீகரின் வேதமாகிய ஜெண்டவஸ்தாவுக்கும் உண்டு என்று நான் கருதுகிறேன்.

நான் ஒரு சீர்திருத்தக்காரன், ஆயினும் ஹிந்து தர்மத்தின் ஆணிவேராயுள்ள தத்துவங்களை ஒருபோதும் மீறி நடக்கமாட்டேன். விக்ரக ஆராதனையில் எனக்கு அவநம்பிக்கை. ஆயினும் எதோ ஒரு விக்ரகத்தைப் பார்த்தமட்டிலே பக்தி உணர்ச்சி பெருகும் அனுபவமும் எனக்கு ஏற்பட்டதில்லை. ஆனால் மனித இயற்கையோடு ஒட்டியது விக்ரக ஆராதனை. உருவத்தை தேடி அலைவது தான் மனித சுபாவம்.

தீவிர வைஷ்ணவராக இருந்த காந்தியின் பெற்றோர் விஷ்ணு கோவிலுக்கு போவது மாதிரியான பக்தியுடன் சிவன் கோவிலுக்கும் சென்றார்கள். ராமர் கோவிலுக்கும் போனார்கள். ஜைனர்கள் காந்தியின் வீட்டில் வந்து சாப்பிடுவார்கள். இதே போல காந்தியின் அப்பாவுக்கு முஸ்லீம், பார்சி நண்பர்களும் உண்டு. "மற்ற சமயங்களிடம் சகிப்புத்தன்மையுடன் நடந்துக்கொள்ளும் பண்பை இவைகளெல்லாம் சேர்ந்தே என்னும் வளர்த்தன" என்கிறார் காந்தி.

மனுஸ்ருமிதி குறித்து குறிப்பிடுகையில் " படைப்பைப் பற்றியும் அதுபோன்ற விஷயங்களைக் குறித்தும் அதில்  கூறப்பட்டிருந்த கதை எனக்கு அவ்வளவாக நம்பிக்கை ஊட்டுவதாயில்லை. இதற்கு மாறாக நாஸ்திகத்தை நோக்கி ஓரளவுக்கு என்னைச்  சாயும்படி அதை செய்தது”.

காந்தி படித்த சில நூல்கள்:  பகவத்கீதையை மொழிபெயர்த்த ஸர் எட்வின் அர்னால்டுக்கு எழுதிய “ஆசிய ஜோதி” என்ற புத்தகம் காந்திக்கு தரப்பட்டது. பிளாவட்ஸ்கி அம்மையார் எழுதிய “பிரம்மஞான திறவு கோல் படித்தார். அன்னிபெசன்டை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த போது, பிரம்ம ஞான சங்கத்தில் சேர மறுத்தார் காந்தி. பைபிள் படிக்க ஆரம்பித்தார். பழைய ஏற்பாட்டில் ஈடுபாடு ஏற்படவில்லை. புதிய ஏற்பாட்டில் 'மலை பிரசங்கம்' வாசகம் காந்திக்கு உணர்ச்சி ஏற்படுத்தியது. "கீதை, ஆசிய ஜோதி, மலைபிரசாங்கம் ஆகிய மூன்றும் ஒன்றே என்று கருத என் இளம் மனது முயன்றது. முகமது நபியை  பற்றி கார்லைல் எழுதிய நூலையும் படித்தார். பிரட்லாவின் நாத்திக நூலையும் வாசித்தார். பிராட் லா இறந்த போது அவரது இறுதி சடங்கில் காந்தி கலந்துக்கொண்டனர்.

வெளிநாட்டிலிருந்து திரும்பும் காந்தியை சாதியில் சேர்க்கக்கூடாது என்று ஒரு அணி தீவிரமாக இருந்தது. மூத்த சகோதரர் காந்தியை நாசிக் அழைத்துச் சென்று புண்ணியநதியில் நீராடக் செய்து தீட்டுக் கழித்தார். "இதெல்லாம் எனக்கு பிடிக்கவே இல்லை" என்கிறார் காந்தி.

எல்லாரும் சமத்துவமாக இருக்கும்படி செய்யவேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் தர்மம். இம்மாதத்தில் சேருவகிறவர்களெல்லோரும், உலகத்தில் வேறு எந்த சமயமும் அளிக்காத வகையில், சமத்துவத்தை அது அளித்தது...முகமதிய மதத்தை பின்பற்றியவர்கள் இந்தியாவின் மீது திடீரென்று தாக்கிய போது, ஹிந்து சமயம் திகைத்து போய்விட்டது. எல்லாவற்றையும் மிஞ்சக்கூடிய சக்தி இஸ்லாமுக்கு இருப்பதாகவும் தோன்றியது. சாதி வித்தியாசங்கள் மிகுந்து கிடந்த பொழுது மக்களுக்கு, சமத்துவம் என்ற தத்துவம் கவர்ச்சிகரமானதாக இல்லாதிருக்க முடியாது. இஸ்லாமிருந்த இயல்பான இந்தப் பலத்துடன் வாளின்  பலமும் சேர்ந்ததுக்கொண்டது.


ஹிந்து தர்மத்தில் நம்பிக்கையுள்ள நீங்கள் பூணூல் அணியாமலும், உச்சியில் குடுமி இல்லாமலும் இருக்கிறீர்கள்? என்று ஆச்சாரிய ராம தேவ்ஜி கேட்கிறார்.

இன்னொரு மதத்தை விட தன மதமே உயர்வானது என்று காட்டுவதற்கு அது பயன்படுமாயின் அப்பொழுது அச்சின்னம் புறக்கணிப்படுவதற்கே ஏற்றதாகும் என்கிறார் காந்தி.

காசி விசுவநாதசாமி கோவிலுக்கு சென்றுவிட்டு, அங்கு கோவில் சரியாக பாராமரிக்கப்படாததை பார்த்து, ஒரு கோவிலை கூட வைத்துக்கொள்ள நமக்கு இயலவில்லை, அப்போது நமது சுயராஜ்யம் எப்படி இருக்கும் என்று கேட்கிறார்.

காந்தியின் சில கருத்துகளை பகிர்ந்தால் அவரை புரிந்துக்கொள்ள நிச்சயம் முடியும் என்பதால் அப்படியே தர விரும்புகிறேன்.

ஹிந்துவாகிய நான், முஸ்லிம்களின் பிரச்சனையைக் குறித்து சிரத்தை எடுத்துக்கொள்வானேன் என்று கேட்கலாம். நீங்கள், என் வீட்டுக்காரர்கள். என் நாட்டினர். உங்கள் துயரத்தில் பங்குகொண்டாக வேண்டியது என் கடமை.

முஸ்லிம்கள் காங்கிரசில் சேருவதில்லை. சுயராஜ்ய நிதிக்குப் பணம் கொடுப்பதில்லை என்று ஹிந்துக்கள் புகார் செய்வதை அடிக்கடி கேட்கிறோம். அவர்கள் அழைக்கப்பட்டார்களா என்பதே இயல்பாக எழும் கேள்வியாகும். ஒவ்வொரு ஹிந்துக்கள் தங்கள் அக்கம் பக்கத்திலுள்ள முஸ்லிம்களை சேர்க்க விசேஷ முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். எனது முஸ்லீம் நண்பர்களுக்கு நான் ஒரே வார்த்தை தான் சொல்வேன். பொறுப்பற்ற அல்லது அறிவற்ற மதவெறி பிடித்த இந்துக்களின் செயல்களால் அவர்கள் மிரண்டுவிடக்கூடாது. கோபமூட்டினாலும் அடக்கத்துடன் இருப்பவனுக்குத்தான் சண்டையில் வெற்றி கிடைக்கும்.

ரத்தம் கொதிக்கும் சமயம், மனிதன் மிருக நிலைக்கு அந்த, மிருகம் போலவே நடக்கிறான். அவன் ஹிந்து, கிருஸ்துவனும், முஸ்லீம் அல்லது வேறு எந்த பெயர் கொண்டவனாயினும் சரி, இது தான் உண்மை.

அகிம்சையை நான் அதன் தீவிர நிலையில் நம்புவதாலும் பரப்புவதால் எனக்கு ஹிந்து மாதத்தில் இடமளிக்கவும் மறுக்கின்றனர். நான் மாறுவேடத்தில் உள்ள ஒரு கிறிஸ்துவின் என்று கூட சொல்லுகின்றனர். பெரும் காவியமாகிய கீதை கலப்பற்ற அகிம்சையையே போதிக்கிறதென நான்சொல்லும் போது, அது கீதையைத்திரித்து கூறுவதாகும் என்று அவர்கள் எனக்கு சொல்கிறார்கள். சில சமயங்களில் கொலை செய்வது கடமையாகும் என கீதை போதிப்பதாகச் சில ஹிந்து நண்பர்கள் சொல்லுகின்றனர்.

நான் ஒரு ஹிந்துவானால், ஹிந்து சமூகம் முழுவதுமே என்னைப் புறக்கணித்தாலும் நான் ஹிந்து அல்ல என்று ஆகிவிடமாட்டேன். இருப்பினும் எல்லா மதங்களின் முடிவும் அகிம்சையே என்பது தான் நான் கூறுவதாகும். 

இந்த காலக்கட்டத்தில், இந்துத்துவா தனது கோரமுகத்தை காந்தி மீது அதிகம் காட்ட ஆரம்பித்தது. ஆரிய சமாஜ்ஜியத்தை சேர்ந்தவர்களால் காந்தி கடுமையாக காயப்படுத்தப்பட்டார். இந்து மதத்தை குறுகிய எல்லைக்குட்படுத்தியவர் தயானந்த சரஸ்வதி என்பது காந்தியின் கணிப்பு. ஆரிய சமாஜிகளின் வேதபுத்தகமாக சொல்லப்படும் சத்தியார்த்தப் பிரகாசம் என்ற நூலை எரவாடா சிறையில் காந்தி படித்தார். இந்த புத்தகம் தனக்கு ஏமாற்றத்தைத் தந்தாக காந்தி விமர்சித்தார். மற்ற மதங்கள் இந்த புத்தகத்தில் திரித்து கூடப்பட்டதை காந்தி கேலி செய்தார்.

"குறுகிய நோக்கம் சச்சரவிடும் வழக்கமும் இருப்பதால் அவர்கள் (அதாவது ஆரிய சமாஜிகள்) மற்ற மதத்தினர்களுடன் சண்டைபோட்டுக்கொண்டிருப்பார்கள். "

காந்தி எதிர்பார்த்தது போல ஆரிய சமாஜிகளால் கண்டிக்கப்பட்டார். "சகிப்புத்தன்மையற்ற எதிர்ப்பு" என்ற தலைப்பில் மீண்டும் தனது எதிர்ப்பை காந்தி பதிவு செய்தார். ஆரிய சமாஜிகளின் கண்டன கடிதங்களை யங் இந்தியாவில் வெளியிட முடியாது என்று வெளிப்படையாக அறிவித்தார். 

பொது மனிதர்களும் பொது ஸ்தாபனங்களும் தொட்டால் சிணுங்கிகளாக இருக்கக்கூடாது. குறைகளை எடுத்துக்காட்டுவதை பெருந்தன்மையுடன் ஏற்க வேண்டும். குறுகிய வழி என எனக்குத் தோன்றியதை அவர்கள் விசாலமாக்குவார்களேயானால் சமாஜ்யத்திற்கு எதிர்காலம் மகத்தானதாக இருக்கும்.

ஆரிய சாமாஜிகள் காந்தியை விடவில்லை. கடிதங்கள் மேலும் மேலும் வந்துக்கொண்டே இருந்தது. முஸ்லிம்களின் பக்கம் காந்தி சாய்ந்துவிட்டார் என்றும், வேதங்களைப் பற்றி படிக்காமலேயே கருத்து சொல்கிறார் என்றும் காங்கிரி குருகுல தலைமைப் பேராசிரியர் ராமதேவர் எழுதிய கடிதத்தை யங் இந்தியாவில் காந்தி பிரசுரம் செய்தார். தயானந்தர் பற்றி பேரறிஞர்கள் சொன்னதை ஒரு மகாத்மா தனது கூற்றினால் புறக்கணித்துவிடமுடியுமா என்று கேட்டது இந்தக்கடிதம். இதை பிரசுரத்திவிட்டு குறிப்பு எழுதிய காந்தி, "தங்கள் நாட்டினர் என்னைச் சற்றும் சகிப்புத்தன்மையே இல்லாதவன் என்று வைத்துக்கொள்ளட்டும். ஆனால் நான் சொன்ன அபிப்பிராயங்களை கைவிடாமல் என்னிடமே வைத்துக்கொள்ளுகிற சுதந்திரத்தை மட்டும் அவர்கள் எனக்கு அளிக்கட்டும்"

இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக பேச்சும் எழுத்தும் பயன்தராது என்று சரோஜினி தேவி எழுதியது தான் உண்ணாவிரதம் இருக்க காந்தியைத் தூண்டியது. "மக்களின் அபார சக்தியைக் கிளப்பிவிடுவதற்கு காரணமாக இருந்த நான், அச் சக்தி தன்னையே அழிக்கும் போலிருந்தாள் பரிகாரம் கண்டுபிடிக்க வேண்டியதும் நான் தான்" என்று அவருக்கு பதில் எழுதினார்.

கலவரங்களுக்குள் எந்த விதத்திலும் தொடர்பில்லாத காந்தி, பிராயச்சித்தமாக உண்ணாவிரதம் இருக்கக்கூடாது என்று மகாதேவ தேசாய் கேட்டுக்கொண்டார்.

முஸ்லிம்களுடன் நட்புரிமை கொள்ளும்படி தான் இந்துக்களைக் கேட்டுக்கொண்டது இந்துக்களுக்கு துரோகம் செய்வதாக குற்றம் சாட்டப்படுகிறது என்று காந்தி பதிலளித்தார்.

நிலைமை இன்று நம்மை மீறிவிட்டது. அது ஆறு மாதங்களுக்கு முன் நம் கைக்குள் இருந்தது. (இன்று) நான் சொல்வதை யார் கேட்கிறார்கள்? என்று கேட்டார்.

1924 டிசம்பர் மாதத்தில் கர்நாடக மாநிலம் பெல்காமில் காங்கிரசின் 39 மாநாடு நடந்தது. காந்தி தலைமை வகித்தார்.

இந்து, முஸ்லீம் சமூகத்தினரின் மனதில் வேற்றுமை விதை பலமாக விதைக்கப்பட்டுவிட்டதை இம்மாநாட்டில் காந்தி ஒப்புக்கொண்டார். சமூகப் பொறாமைகளும் பாரபட்சங்களும் மறைந்தொழியும் வரை சிறுபான்மையினரின் விருப்பப்படி பெரும்பான்மையினர் நடக்க வேண்டும் என்றும் பெரும்பான்மையோர் தன்னலத் தியாகம் செய்து உதாரணம் காட்டவேண்டும் என்றும் இந்துக்களுக்கு காந்தி அறிவுரை கூறினார்."

இது அவர் மீது தீவிர இந்துக்களுக்கு கோபம் ஏற்படுத்தியது. காந்திக்கு கண்டன கடிதங்கள் மீண்டும் வர ஆரம்பித்தது. எல்லா விஷயத்திலும் முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்தால் என்ன நடக்கும் என்பதை உணர்ந்தீர்களா? என்று கேட்டது ஒரு கடிதம். இதற்கு தெளிவான பதிலை காந்தி எழுதினார்.

"அநேக விஷயங்கள் அசாத்தியமானவை. ஆனால் அவை மட்டுமே சரியானவை. சீர்திருத்தம் விரும்புகிறவனுடைய வேலை, தன் நடத்தையில் அதைச் செய்ய முடியும் என்று கண்கூடாக செய்துகாட்டி அசாத்தியதை சாத்தியமாக்குவதே. நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ளவர்களுடன் பேசுதல் சாத்தியமென்று எடிசனுக்கு முன் யார் நினைத்திருப்பார்கள்? மார்க்கோனி இன்னும் ஒரு அடி முன் சென்று, கம்பியில்லாச் செய்தி தொடர்பு வைத்துக்கொள்ளுவதை சாத்தியமாக்கினார். நேற்று அசாத்தியமாக இருந்தவை இன்று சாத்தியமாகும் விந்தையை நாம் தினசரி கண்டு வருகிறோம். இயற்கைத் தத்துவதை போலவே தான் மனத் தத்துவமும். "

சைத்தானின் தந்திரம் தான் தீண்டாமை என்றார் காந்தி. தீண்டாமைக்கு வேதங்களில் ஆதாரம் இல்லை என்று காந்தி சொன்னதை கண்டித்தும் வேதங்களில் இருக்கும் ஆதாரத்தை பட்டியலிட்டும் திருநெல்வேலியை சேர்ந்த ஆர். கிருஷ்ணஸ்வாமி ஐயர், யங் இந்தியாவுக்கு கடிதம் எழுதினார். தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் (1921) காந்தி சுற்றுப்பயணம் செய்தபோது தீண்டாமைக்கு எதிராகவும் கடுமையாகவும் பேசினார்.

சூத்திரர்கள் வேதங்களைக் கற்கக்கூடாது என்ற தடையை நான் ஆதரிக்க முடியாது. நாம் அந்நியருக்கு அடிமைகளாக இருந்து வரும் வரையில் நாமெல்லோருமே உண்மையில் தற்போது சூத்திரர்கள் தான் என்பது என் அபிப்பிராயமாகும்.

திருவாங்கூரிலிருந்து வந்த கடிதத்தில், பிராமணர்கள் அகிம்சையை கடமையாக கருதுவதாகும் மிருகங்களை கொல்வோர், மாமிசம் தின்பொருடன் சம்பந்தம் வைத்துக்கொள்வது கூட பாவமாக பிராமணர்கள் கருதுவதாகும் கூறப்பட்டிருந்தது. கறிக்கடைக்காரர், மீனவர், கள் இறக்குவோர், மாமிசம் சாப்பிடுபவர்கள், மது அருந்துபவர்கள் அருகில் வருவதையும் தொடுவதையும் தீட்டாக கருதி ஸ்நானம் செய்கிறோம். இந்த ஆதாரங்களின் மீதே தீண்டாமையும் நெருங்காமையும் விதிக்கப்படுகிறது. எனவே, இவை தான் அகிம்சா தர்மம் என்று அந்தக் கடிதம் கூறியது. இதற்கான காந்தி பதில் கிண்டலாக இருந்தது.

பிராமணர்கள் சைவ உண்போர் என்று கூறுவது ஓரளவு தான் உண்மை. அதாவது தென்னிந்தியா பிராமணர்கள் சம்பந்தப்பட்ட வரையில் தான் அது உண்மையாகும். மற்ற இடங்களில் பிராமணர்கள் தங்குதடையின்றி மீன் சாப்பிடுகிறார்கள். வங்காளத்திலும் காஸ்மீரகத்திலும் பிராமணர்கள் மாமிசமும் சாப்பிடுகிறார்கள்.

தவிர தென்னிந்தியாவில் மீன் சாப்பிடுவோர், மாமிசம் சாப்பிடுவோர் யாவரும் நெருங்காதவர் அல்ல. தீண்டாதவர் அல்லது நெருங்காதவர் என்று சட்டப்பூர்வமாக கருதப்படும் ஒரு குடும்பத்தில் பிறந்தவர் என்பதற்காக, பரிசுத்தமாக இருக்கும் நெருங்காதரைக்கூட சாதி பிரஸ்டராகவே கருதுகிறார்கள்.

மாமிசம் சாப்பிடும் பிராமணரல்லாதார் உயர்ந்த பதவிகளில் இருப்பார்களாயின், அவர்களுடன் பிராமணர்கள் தோளோடு தோள் இடித்துக் கொள்வதில்லையா? மாமிசம் தின்னும் ஹிந்து ராஜாக்களுக்கு பிராமணர்கள் மரியாதை செலுத்துவதில்லையா? 

பிராத்தனையின் போது குரானிலிருந்து ஓதக்கூடாது என்று காந்திக்கு கடிதம் வந்தது. இப்படி ஆட்சேபனை தெரிவிப்பவர்கள் இருக்கிறார்களாக என்று கேட்டார். ஆம் என்பதன் அடையாளமாக சிலர் கையை தூக்கினர். அப்படியானால் பிராத்தனையே நடத்துவதில்லை என்றார் காந்தி.

நான் பிராத்தனைக் கூட்டம் நடத்துவதை எதிர்ப்பவர்களை கூட்டத்திற்கு வரவேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன். அப்படியே வந்தாலும் அவர்கள் மாத்திரம் வந்து விரும்பினால் என்னை கொன்று விடட்டும். நான் கொல்லப்பட்டாலும் கூட ராமா, ரகீம் என்ற பெயர்களை உச்சரிப்பதை நான் விட மாட்டேன். எனக்கு அவ்விரண்டும் ஒரே கடவுளின் பெயர்கள் தான். இந்தப்பெயர்களை உச்சரித்திக்கொண்டே நான் சந்தோசமாக இறப்பேன்.

பிரார்த்தனை ஆரம்பமாகி குரான் வாசிக்கப்பட்டபோது,
"ஹிந்து தருமத்திற்கு ஜே" என்று இரண்டுபேர் முழக்கமிட்டார். கைதான அவர்களை விடுதலைச் செய்யச்சொன்னார் காந்தி. "சுலோகங்களை கோஷிப்பதால் மாத்திரம் ஹிந்து மதம் உயர்ந்துவிடாது. இப்போது நாம் கண்டா காட்சி இந்தியாவைப் பற்றிக்கொண்டிருக்கும் அடையாளமாகும்.”

முஸ்லிம்களிடம் மாத்திரமே எனக்கு அனுதாபம் உண்டு என்றும் அவர்களுக்கு ஆதரவாகவே நான் உண்ணாவிரதம் மேற்கொண்டிருப்பதாகவும் சிலர் என்னை நையாண்டி செய்கிறார்கள். அவர்கள் கூறுவது சரியே. சிறுபான்மையாருக்காகவும் தேவைப்படுவோருக்காகவும் என் ஆயுள் முழுவதும் நான் ஆதரவு அளித்து வந்திருக்கிறேன். ஒவ்வொருவரும் அப்படிதான் அளித்து வரவேண்டும். சுய நம்பிக்கையை இழந்து எந்த வகுப்பினரையும் வைத்திருப்பதால் ஒரு தேசம் பலவீனம் அடைந்துவிடுகிறது.

அன்று அவரது பிரார்த்தனையில் வெடிகுண்டு வெடித்தது.

ஜனவரி 20ம் தேதி மாலை பிரார்த்தனைக்கு பின் வெடிகுண்டு வெடித்ததை பற்றி காந்தி பேசும்போது,

இந்து மதத்தை பாதுகாப்பதற்கு இது வழியல்ல. நான் கூறும் வழியை அனுசரித்தால் மாத்திரமே ஹிந்து மதத்தை காப்பாற்ற முடியும். சிறு வயதிலிருந்தே நான் ஹிந்து மத முறைகளை பயின்று வந்திருக்கிறேன். பின்னர் கிருஸ்தவர்கள், முஸ்லிம்கள் முதலிய மற்ற மதத்தினருடன் நான் தொடர்புகொண்டேன். மற்ற மதங்களை ஓரளவு நன்கு ஆராய்ந்த பின், ஹிந்து மதத்திலேயே உறுதியுடன் இருந்து வருகிறேன். எனது குழந்தைப்பருவத்தில் எனக்குள்ள நம்பிக்கை இருந்ததோ அவ்வளவு உறுதியாக இன்றும் இருந்து வருகிறது. நான் நேசிக்கும் போற்றி பேணும் நடைமுறையில் அனுசரித்து வரும் மதத்தைப் பாதுகாப்பதற்கு கடவுள் என்னை ஒரு கருவியாகச் செய்வாரெனே நான் நம்புகிறேன். 

பானு பகுதியில் இருந்து 40 அகதிகள் பிர்லா மாளிகை வந்து காந்தியை பார்த்தார்கள். தங்களது துயரத்தை அவர்கள் சொல்ல சொல்ல கண்கலங்கியபடி காந்தி கேட்டார். அதில் ஒருவர் காந்தியை கோபப்பட்டார்.

"இவ்வளவுக்கும் நீங்கள்தான் காரணம். எங்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் நீங்கள் எங்காவது இமயமலைக்கு போய்விடுங்கள்" என்று அவர் சொல்ல... "யாருடைய கட்டளைப்படி நான் இமயமலைக்கு போகவேண்டும்" என்று காந்தி பதிலுக்கு கேட்டார். அவர்களை அனுப்பிவைத்துவிட்டு பிரார்த்தனைக்கு வந்த காந்தி,

இமயமலைக்குச் சென்று அங்குள்ள அமைதியை ஆனந்தமாக அனுபவிப்பதில் நான் அக்கறை கொள்ளவில்லை. இந்தக்கொந்தளிப்பான சூழ்நிலையிலிருந்து நான் எவ்வளவு அமைதியைப் பெற முடியுமோ அதைக்கண்டு நான் திருப்தி அடைவேன். எனவே நான் உங்கள் மத்தியிலேயே தங்கியிருக்க விரும்புகிறேன். நீங்கள் எல்லோரும் இமயமலைக்கு சென்றால், உங்களுடைய ஊழியனாக நான் உங்களை பின் தொடர்ந்து வரலாம் என்று உருக்கமாகச் சொல்லிக்கொண்டார்.

மறுநாள் 30ம் தேதி வெள்ளிக்கிழமை...மாலை வழக்கம் போல் பிரார்த்தனைக்கூட்டத்துக்கு காந்தி சென்று கொண்டிருந்தார். காத்தியவாரில் இருந்து இரண்டு தொழிலாளர்கள் அவரை பார்க்க வந்திருப்பதாக சொன்னார்கள். காந்தி சொன்னார்.

"பிரார்த்தனைக்குப் பிறகு பார்ப்பதாக அவர்களிடம் சொல்லுங்கள். நான் உயிருடன் இருந்தால், பிரார்த்தனை முடிந்த பின் அவர்களை பார்க்கிறேன்"

அப்போது காந்தியைப் பார்க்க, தரிசிக்க, சுட கோட்ஸே காத்திருந்தான்.  

இந்த கட்டுரையை குறித்த விரிவான காணொலிகளை கீழ்காணும் சுட்டிகளில் பார்க்கலாம்:




No comments:

Post a Comment