Saturday 25 July 2020

கிண்டில் நமதே! - ரவிசங்கர் அய்யாக்கண்ணு

கிண்டில் நமதே! - ரவிசங்கர் அய்யாக்கண்ணு

2019 பிப்ரவரி. இரண்டாம் வாரம் ஏதோ ஒரு தேதி. 

சென் பாலன் அந்தத் தகவலைச் சொன்ன போது அதிர்ச்சியாக இருந்தது. 

அவர் அமேசான் கிண்டில் நடத்தும் Pen to Publish 2018 போட்டியில் கலந்து கொள்வதற்காக, 

பரங்கிமலை ரயில் நிலையம் என்று ஒரு துப்பறியும் கதை எழுதி இருந்தார். 

அது விற்பனை வரிசையில் அனைத்து இந்திய அளவில் Top 100 பட்டியலில் இருப்பதாகச் சொன்னார். 

என்னது? 

ஒரு அறிமுக எழுத்தாளர் சொந்தமாகப் புத்தகம் பதிப்பித்து தன்னுடைய இரண்டாவது நாவலிலேயே இத்தகைய உயரத்தை எட்டிப் பிடிக்குமா?

ஜெயமோகன், எஸ்ரா, சாரு நிவேதிதா மற்றும் பல அறியப்பட்ட எழுத்தாளர்கள் புத்தகங்கள் எல்லாம் விற்பனை வரிசையில் என்ன தர வரிசையில் இருக்கிறது என்று தேடிப் பார்த்தேன். 

எல்லாம் பல ஆயிரங்களுக்குக் கீழ்!

ஆச்சர்யமாகவும் இருந்தது. அதே வேளை, அதிர்ச்சியாகவும் இருந்தது. 

அடடா, இவர்கள் எல்லாம் பெரிய எழுத்தாளர்கள் என்று நினைத்தோமே! இல்லையா! நம் ஆட்கள் முயன்றால் இவ்வளவு இலகுவாக இடத்தைப் பிடிக்க முடியும் என்றால், ஏன் இத்தனை நாட்களாக இந்தக் கோட்டைகளைக் கைப்பற்றாமல் விட்டோம் என்று அப்போது தான் பொறி தட்டியது. 

போட்டி முடிய 2, 3 வாரங்களே இருந்தன. 

எல்லோரும் ஆதரவு தாருங்கள், நம்ம ஆள் ஒருவர் வெல்ல வேண்டும் என்று முகநூலில் எழுதினேன். அந்த ஆர்வம் எல்லோருக்கும் தொற்றிக் கொண்டது. எல்லோரும் தாங்களே நூல் எழுதியது போல் சென்னுக்காகக் களம் இறங்கினார்கள். ஆளுக்கு 2,3 புத்தகங்கள் வாங்கியதுடன், நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் வாங்கச் சொன்னார்கள். வாங்கி விட்டு Screenshot போட்டார்கள். 

மே மாதம் முடிவு வந்தது. 

சென் வெற்றி!

கலைஞர் பராசக்தி படைத்தது போல் இது ஒரு திருப்புமனை வெற்றி என்று மருத்துவர் புருனோ கூறினார். அது மிகையில்லை. 

சென் தனக்கு எல்லோரும் ஆதரவு தருமாறு வெறுமனே கோரவில்லை. "எனக்கு உதவுங்கள், நான் அறிந்ததை உங்கள் எல்லோருக்கும் கற்றுத் தருகிறேன்" என்று வாக்குறுதி அளித்து இருந்தார். 

எல்லோருக்கும் இந்த மனம் வாரது. மனம் இருந்தாலும் நேரம் ஒதுக்கி அதை நிறைவேற்ற மாட்டார்கள். 

சொன்ன சொல்லை நிறைவேற்றும் வகையில் திராவிட எழுத்தாளர்கள் என்ற குழுமம் தொடங்கினோம். 

யார் யாருக்கு எல்லாம் கிண்டிலில் புத்தகம் எழுதும் ஆர்வம் இருக்கிறதோ, யார் அடுத்த ஒரு மாதம் அதற்கு ஒதுக்கத் தயாரோ அவர்கள் விண்ணப்பியுங்கள் என்று கேட்டிருந்தோம். 

நூற்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்தன. முதல் முறை என்பதால் ஒவ்வொருவருக்கும் தனிக் கவனம் கொடுக்கும் வகையில் 30 பேரை மட்டும் சேர்த்துக் கொண்டோம். 

தலைப்பு வைப்பது எப்படி, Writers block தவிர்ப்பது எப்படி என்பது தொடங்கி, கிண்டிலில் புத்தகம் வெளியிடுவதற்கான தொழில்நுட்பக் குறிப்புகள் அனைத்தும் அக்குழுவில் பகிர்ந்து கொண்டோம். அது ஒரு எழுத்தாளர் பயிற்சிப் பட்டறையாகவே திகழ்ந்தது. 

சூன் இரண்டாம் வாரம் சென்னுக்குப் பாராட்டு விழா நடத்தினோம். 

அதே நாள் திராவிட எழுத்தாளர்கள் குழுமத்தில் இருந்து முதல் கிண்டில் நூல் வெளியானது. 

அதே பாராட்டு விழாவில் அடுத்த ஆண்டு நடக்கும் கிண்டில் போட்டியில் இன்னும் பலர் பங்கேற்க வேண்டும், கிண்டில் நமதே என்று முழங்கினோம். 

கூடிய விரைவிலேயே அடுத்த ஆண்டுக்கான கிண்டில் போட்டி அறிவிப்பு வந்தது. 

இந்த முறை குறும்பிரிவு, நெடும்பிரிவு இரண்டிலும் தலா மூன்று பரிசுகள் என மொத்தம் ஆறு பரிசுகள் அறிவித்து இருந்தார்கள். 

சூப்பர்!

நிறைய பரிசுகள் என்றால் இன்னும் நிறைய பேர் உற்சாகமாகப் பங்கு கொள்ளலாமே!

இந்த முறை திராவிட எழுத்தாளர்கள் கைவண்ணத்தில் 50 புத்தகங்களாவது வெளியிட வேண்டும் என்று எண்ணினோம். 

50 போன்ற எண் சொல்வதற்கு roundஆக இருக்கிறது என்று நினைத்து விடுகிறோமே தவிர, இது எட்டக்கூடிய இலக்கு தானா என்று பலருக்கு ஐயமாக இருந்தது. 

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் என்று காரியத்தைத் தொடங்கி விட்டோம். 

சென்னை வேளைச்சேரியில் கணியம் அமைப்பு ஒருங்கிணைத்த பயிற்சிப் பட்டறை எல்லாம் நடந்தது. 40 பேருக்கு மேல் கலந்து கொண்டார்கள். 

பரங்கிமலை வாசகர் வட்டம், கிண்டில் தமிழ் எழுத்தாளர்கள் குழுமம் போன்றவை களை கட்டின. நாளும் பல கேள்விகள். 

சென் மட்டும் 300 பேருக்கு மேல் இன்பாக்சில் உதவியிருப்பேன் என்று சொன்னார். 

வெறும் போட்டிக்கு மட்டும் புத்தகங்கள் எழுதுவதாக இருக்கக் கூடாது, முக்கியக் கருத்துகள் கிண்டிலில் இடம்பெற வேண்டும் என்ற நோக்கில் வழக்கறிஞர் அருள்மொழி, மருத்துவர் எழிலன் நாகநாதன், பேராசிரியர் சுப.வீ போன்றவர்களை எல்லாம் அணுகி அவர்கள் சிந்தனைகளும் கிண்டிலில் இடம்பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டோம். 

அரியலூர் திமுக மாவட்ட செயலாளர் எஸ். எஸ். சிவசங்கர் அண்ணன், நக்கீரன்
இணையாசிரியர் கோவி. லெனின் அண்ணன் போன்றோரையும் போட்டியில் கலந்து கொள்ள வேண்டினோம். அவர்கள் மன மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்கள். 

இதற்கு இடையே பல வழக்கமான இலக்கிய தாதாக்களும் போட்டியின் ஓட்டத்தைக் கவனித்துக் கருத்து சொன்ன வண்ணம் இருந்தார்கள். 

அண்ணாவும் கலைஞரும் எழுதியது எல்லாம் பிரச்சார இலக்கியம் என்றவர்கள் கிண்டிலில் வருவது எல்லாம் குப்பை என்றார்கள். 

திமுகவினர் கிண்டிலைக் கைப்பற்றி விட்டார்கள். கட்சிக்காரர்கள் ஆயிரக்கணக்கில் download செய்கிறார்கள் என்றார்கள். 

அனைத்தின் உச்சமாக, 

அண்ணன் சிவசங்கர் நாவல் வெளிவந்த போது, 

"அமேசானுக்குப் பாடை கட்டலாம்" என்றார்கள். 

இது இலக்கியத் தீண்டாமை. இதனை உடைத்தெறிய வேண்டும் என்ற வேகம் பிறந்தது. 

அக்டோபர் கடைசி வாரம் தீபாவளி அன்று சென் பாலன் எழுதிய மாயப் பெருநிலம் நூல் வெளிவந்தது. திரைப்படங்கள் தாம் தீபாவளிக்கு வெளியாகும். அதே போல் ஒரு கொண்டாட்டமான மன நிலையோடு, Trailer எல்லாம் வெளியிட்டு மாயப் பெருநிலம் வெளியானது. 

Blockbuster hit. 

தமிழில் குறைந்த காலத்தில் 100 கருத்துகளைப் பெற்ற நூல் என்ற பெருமையைப் பெற்றது. 

திரைப்படங்களுக்கு 100 கோடி வசூல் கிளப் இருப்பது போல், அடுத்து நூல் வெளியிட்டவர்களுக்கு எல்லாம் இது ஒரு மைல்கல் ஆனது. 

ஆரோக்கியமான போட்டி நிலவியது. 

முகநூலைத் திறந்தாலே எங்கும் கிண்டில் எதிலும் கிண்டில் என்கிற அளவுக்கு எல்லோரும் கதறத் தொடங்கினார்கள். 

எப்படி டிசம்பர்/மார்கழி மாசம் இசை சீசன் என்கிறார்களோ அது போல் இனி திசம்பர் மாதம் என்பது மின் புத்தகங்களின் காலம் என்பது போல் கொண்டாட்ட மனநிலை தொற்றிக் கொண்டது. 

Commentகளிலும் Inboxகளிலும் அமேசான் புத்தக இணைப்புகள் நிரம்பி வழிந்தன. 

புத்தகத்தின் அட்டைப் படம் வெளியிடுவது எல்லாம் திருவிழாக்கோலம் கண்டது. 

புத்தகம் வெளி வந்த நாளிலேயே அசால்ட்டாக 100 படிகளுக்கு மேல் விற்றன. 

மாயப் பெருநிலம், தோழர் சோழன் எல்லாம் இந்தி, ஆங்கிலப் புத்தங்களைத் தாண்டி அனைத்து இந்திய அளவில் விற்பனையில் முதலிடம் பிடித்தன. 

தோழர் சோழன் இது வரை சொல்லாத அரியலூர் வட்டார மக்களின் வரலாற்றைப் பேசியது. தமிழ்த் தேசியப் போராளி தமிழரசனின் கதையைச் சொன்னது. 

இந்தக் கதையை எல்லாம் எழுதாமல் தமிழ் இலக்கியவாதிகள் இத்தனை ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற கேள்வியையும் மனதில் எழுப்பியது. 

அந்தத் தமிழரசன் வாழ்ந்த ஊரில், அந்த ஊர் மக்களைக் கொண்டே சிவசங்கர் அண்ணன் புத்தகத்தை வெளியிட்டார். 

காடு மேடில் உள்ளவர்கள் எல்லாம் கிண்டிலில் புத்தகங்களைப் பதிவிறக்கப் படிக்கத் தொடங்கினார்கள். 

பொதுவாக, தமிழனுக்கு வாசிப்புப் பழக்கம் இல்லை என்று மட்டம் தட்டிக் கொண்டே இருப்பார்கள். 

என்னால் மிக உறுதியாகச் சொல்ல முடியும். 

அமேசான் மட்டும் புள்ளி விவரங்களைப் பொதுவில் வைத்தால் இந்தியாவிலேயே தமிழ் நூல்களுக்கு அதிகம் வாசகர்கள் இருப்பதைக் காண முடியும். 

அப்படி இருப்பதால் தான், 

ஆங்கிலம், இந்திக்கு அடுத்து தமிழில் மட்டும் இந்தப் போட்டியை நடத்துகிறார்கள். 

எது இலக்கியம், நூலின் ஆசிரியர் புத்தகம் விற்கலாமா கூடாதா, எப்படி புத்தகத்தை வெளியிடுவது, விளம்பரப்படுத்துவது என்பது குறித்து இங்கு தேவையில்லாமல் நிலவிய பல கற்பிதங்களைக் கிண்டில் போட்டியும் அதில் திராவிட எழுத்தாளர்களின் பங்கேற்பும் சுக்கு நூறாக உடைத்து எறிந்தது. 

திசம்பர் 20, 2019. சென்னை அன்பகத்தில் முதல் மின்னூல் கண்காட்சி நடந்தது. 

சொன்னது போலவே 50 மின்னூல்களை வெளியிட்டோம். அத்தனை எழுத்தாளர்களையும் மேடையேற்றி பேச வைத்தோம். மதுரை, பெங்களூர், சிங்கப்பூர், வளைகுடா நாடுகள் என்று உலகின் பகுதிகளில் இருந்தும் எழுத்தாளர்கள் குவிந்தார்கள். 

சுமார் 300க்கு மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டார்கள். 

கூட்டத்தில் முதலில் பேசிய சுபகுணராஜன் திராவிட வாசகர் வட்டம் என்ற பெயரைக் காணவே நெகிழ்ச்சியாக இருக்கிறது என்று தழுதழுத்தார். 

எப்பேர் பட்ட அவமானம்! 

50 ஆண்டுகளாகத் தமிழகத்தைத் திராவிடக் கட்சிகள் ஆள்கின்றன!

ஆனால், பண்பாடு, இலக்கியம், ஊடகம் என்று பல துறைகளில் திராவிடத்தின் மீது தீண்டாமையே தொடர்கிறது. 

அதற்கு இது போல் புத்தகங்கள் படைப்பது உதவும் என்று உறுதியாக நம்பினோம். 

துப்பறியும் கதை, காதல் கதை, இவ்வளவு ஏன் மருத்துவ நூலில் கூட நுணுக்கமான அரசியல் கருத்துகள் திராவிடப் பார்வையில் படைக்கப்பட்டது ஒரு தரமான சம்பவம்!

அதனால் தான் இத்தனை நாள் இந்த இடங்களை அடைத்துக் கொண்டிருந்தோர் கதறுகிறார்கள். 

நிற்க!

திராவிட வாசிப்பு ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ராஜராஜன் சில கேள்விகளை அனுப்பி பதில் தருமாறு கேட்டிருந்தார். 

மேலே உள்ள  முன்கதைச் சுருக்கம் சொல்லாமல் என்னால் அக்கேள்விகளுக்குள் புக முடியவில்லை. இப்போது பதில்களைப் பார்ப்போம். 

கிண்டில் போட்டியில் கலந்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்பட்டது?

பதில்: போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை விட ஒரு நூலையாவது சோம்பேறித் தனம் இல்லாமல் உட்கார்ந்து எழுதி விட வேண்டும் என்பது தான் என்னுடைய நோக்கமாக இருந்தது. இதற்கு முன்பும் பின்பும் என்னுடைய மின்னூலாக்க முயற்சிகள் எல்லாம் ஏற்கனவே எழுதிய வலைப்பதிவு, முகநூல் பதிவுகள் தொகுப்புகளாகவே அமைந்து இருந்தன. எனவே, என்னை ஒரு நேரடி நூலை எழுத வைத்த அமேசான் ஓனர் ஜெப் பெசோசுக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். 

எல்லோருக்கும் கிண்டில் தொடர்பாக அறிவுரை சொல்கிறாரே, இவர் ஏன் போட்டியில் குதிக்கவில்லை என்று யாராவது கேட்பார்கள் என்ற பயமும் இருந்தது :) அதனால் போட்டி முடிவதற்கு இரண்டு நாட்கள் முன்பு ஒரு வழியாக எழுதி முடித்துப் போட்டியில் குதித்தேன். 

இன்னொரு முக்கியக் காரணத்தையும் சொல்லலாம்: 

இறுதிச் சுற்றுக்குச் செல்கிற அனைத்து நூல்களும் திராவிடச் சார்பு நூல்களாக இருக்க வேண்டும் என்று எண்ணினோம். இல்லாவிட்டால், நம் ஆட்கள் எழுதுவது எவ்வளவு சிறப்பான நூலாக இருந்தாலும் ஏதேனும் சாக்குப் போக்குச் சொல்லி பரிசு கொடுக்காமல் விட்டு விடுவார்கள் என்று எண்ணினோம். 

அதே போல் இறுதிச் சுற்றுக்குச் சென்ற 10ல் 7ம், வெற்றி பெற்றதில் 6ல் 5ம் திராவிடச் சார்பு எழுத்தாளர்களாக அமைந்தது மிக்க மகிழ்ச்சி. 

கடமை கண்ணியம்  கட்டுப்பாடு  என தலைப்பிட்டது ஏன்?

பதில்: நான் புத்தகத்தை எழுதி விட்டுத் தலைப்பிடவில்லை. தலைப்பை முடிவு செய்து விட்டுத் தான் புத்தகமே எழுதத் தொடங்கினேன். 

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே Stoicism என்று சொல்லப்படுகிறத நெஞ்சுறுதி இயல் பற்றி ஆர்வமாகப் படித்து வருகிறேன். அது என்னுடைய வாழ்வில் வரும் சோதனைகளை எதிர்கொள்ளவும் என் உறுதிப்பாட்டை மேம்படுத்திக் கொள்ளவும் மிகவும் உதவியாக உள்ளது. 

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக கிரேக்க, ரோம் நாட்டு அறிஞர்கள் கருத்துகள் கூறிய கருத்துகள் தமிழ் இலக்கியங்களில் காணப்படுவதைக் கண்டு வியந்தேன். 

இந்த ஒப்பீடுகளை யாரும் சுட்டிக் காட்டவில்லை என்று தோன்றியதால், இந்த அடிப்படையில் புத்தகம் எழுத வேண்டும் என்று எண்ணினேன். 

இந்தக் 1) கடமை 2) கண்ணியம் 3) கட்டுப்பாடு என்பது தான் நெஞ்சுறுதி இயலின் அடிப்படை என்பதைப் பல நூல்களைப் படித்துப் புரிந்து கொண்ட பிறகு, அதையே தன் தொண்டர்களுக்கான தாரக மந்திரமாக அண்ணா விட்டுச் சென்றுள்ளது எவ்வளவு பெரிய அறிவுக் கொடை என்பது புரிந்து சிலிர்த்துப் போனேன். அண்ணா ஏதோ இதை எதுகை மோனைக்குச் சொல்லிச் சென்றதாகவே பலர் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவரது வாழ்வும் வாக்கும் அவர் ஒரு தத்துவ ஞானியாகவே வாழ்ந்தா் என்பதைச் சுட்டுகிறது. பேரறிஞர் என்ற சொல்லுக்கு மிகவும் பொருத்தமானவர் அண்ணா. 

இவ்வளவு பெரிய இயக்கத்தைக் கட்டமைத்தவரை நம்முடைய அறிவு ஜீவி உலகமும் ஊடகங்ளும் முழுக்க இருட்டடிப்புச் செய்து விட்டார்கள் என்பது வேதனை. 

அவரது படத்தை அட்டையில் தாங்கி, அவரது தத்துவத்தை விளக்கி, அவர் வாக்கினைத் தலைப்பாக வைத்து என் முதல் புத்தகத்தை எழுதினேன். அத 300 பேர் கலந்து கொண்ட உலகளாவிய போட்டியில் பரிசும் வென்றது என்பதை நினைத்து உண்மையிலேயே பெருமிதம் கொள்கிறேன். 

இன்றைய இணைய  உலகில் பல முன்னெடுப்புகளை செய்பவராக நீங்கள் இருக்கிறீர்கள். கிண்டிலில் பலர் எழுதுவதற்கும் நீங்கள் உந்துசக்தியாக இருக்கிறீர்கள். உங்களது நோக்கம் என்ன? இதன் பின்னால் எதுவும் அஜெண்டா இருக்கிறதா?

பதில்: முன்கதைச் சுருக்கத்திலேயே விரிவாகக் கூறிவிட்டேன் என நினைக்கிறேன். 

நீங்கள் விக்கிப்பீடியா, பிளாக்  போன்றவற்றிலும் சமூக ஊடகங்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறீர்கள். இன்றைய  தொழில்நுட்ப வளர்ச்சியை எப்படிப்பார்க்கிறீர்கள்? புத்தக வாசிப்பை இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி வளர்க்குமா? தடுக்குமா?

பதில்: தொழில்நுட்ப வளர்ச்சி கட்டாயம் புத்தக வாசிப்பை அதிகரிக்கும். நாம் பெரும்பாலான நேரம் நம்முடைய வசதியான நிலையில் இருந்தே உலகை அணுகுகிறோம். பார்வையற்ற ஒருவரை எண்ணிப் பாருங்கள். அவரால் கிண்டில் புத்தகங்களை ஒலிக்க விட்டு, யாருடைய உதவியும் இல்லாமல் புத்தகங்களை வாசிக்க முடியும். இது தொழில்நுட்பம் தந்த கொடையா இல்லையா?

தொழில்நுட்பம் மட்டும் இல்லாவிட்டால், இன்று இத்தனை வகையான கதைகள் அச்சில் வந்திருக்கா. விகடனிலும் குமதத்திலும் இந்து தமிழிலும் நீங்கள் எந்த அளவு திராவிடச் சார்பான புத்தங்களை எழுதி விட முடியும் என்று நினைக்கிறீர்கள்? ஆனால், இன்று இதை வாசிக்க ஆயிரக்கணக்கானோர் கூடியுள்ளார்களே? இத்தனை நாள் நாம் தானே நமக்கு ஒவ்வாத அரசியல் சிந்தனைகள் உடைய நூல்களைக் காசு கொடுத்து வாங்கிக் கொண்டிருந்தோம்?

நான் கடந்த 10 ஆண்டுகளில் 4 நகரங்கள் மாறி விட்டேன். பல வீடுகள் மாறி விட்டேன். புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு திரிய முடியவில்லை. இருந்த புத்தகங்களை நன்கொடையாகக் கொடுத்து விட்டேன்.  கிட்டத்தட்ட அச்சு புத்தகங்கள் வாங்குவதை நிறுத்தி விட்டேன். படித்த புத்தகங்கள் மறந்து விடுகின்றன. 

இவற்றுக்கு எல்லாம் மின் நூல்கள் நல்ல தீர்வு. படித்த பகுதிகளைக் குறித்து வைக்க முடியும். மற்றவர்கள் அதிகம் எதனை highlight செய்திருக்கிறார்கள் என்று பார்க்க முடியும். Goodreads reviews, quotes, summary எல்லாம் ஒரு நூல் படித்த உணர்வையே தருகின்றன. தேவையில்லாத நூல்களை வாங்கும் தலைவலியைத் தவிர்க்க முடிகிறது. 

ஆகவே, தொழில்நுட்பம் வாசிப்பை வளர்க்கும் என்பதே நடுவரின் தீர்ப்பு :)

புதிதாக எழுத வருபவர்களுக்கு என்ன கூறவிரும்புகிறீர்கள்?

பதில்: எழுதுங்கள் :) இது நன்றாக இருக்கிறதா இல்லையா, மற்றவர்கள் படிப்பார்களா அவர்களுக்குப் பிடிக்குமா என்றெல்லாம் கவலைப்படாமல் எழுதுங்கள். உங்கள் போன புத்தகத்தை விட இந்தப் புத்தகம் உங்களுக்குப் பிடித்து இருந்தால், தொடர்ந்து எழுதுங்கள். இசை, நடனம் போல் எழுத்தும் ஒரு கலை தான். அதைப் பயிலும் போது அதில் நமக்கு இன்பம் இருக்க வேண்டும். மற்றவர்களை மறக்க வேண்டும். அதற்குப் பிறகு தான் மற்ற எல்லாமே. இசையோ நடனமோ முதல் நாளிலேயே சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை. எழுத்தும் அது போல் எழுதி எழுதிப் பயில்வதற்குரிய ஒரு கலை தான். தொடர்ந்து எழுதிக் கொண்டே இருங்கள். 

அடுத்து எதைக் குறித்து எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள்? எதிர்கால திட்டம் என்ன?

இட ஒதுக்கீடு பற்றி முகநூலில் எழுதிக் குவித்திருக்கும் பதிவுகளை ஒழுங்குபடுத்தித் தொகுக்க வேண்டும். என்னுடைய புரிதலை மேம்படுத்தும் வகையில் தொடர்புடைய நூல்களைத் தேடிப் படித்து இன்னும் எழுத வேண்டும். இது தான் உடனடித் திட்டம். என்னுடைய பல பதிவுகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்குமாறு கேட்கிறார்கள். கடமை கண்ணியம் கட்டுப்பாடு இரண்டாம் பாகம் வருமா என்கிறார்கள். இவை எல்லாவற்றையும் செய்ய வேண்டும். நான் பொதுவாகவே கூடி உழைப்பவன். எனவே, தனிப்பட்டு நான் என்ன செய்ய வேண்டும் என்பதை விட ஒரு சமூகமாக நாம் செய்ய வேண்டியவை குறித்த கனவுகள் நிறையவே உள்ளன. நாம் ஒரு அறிவார்ந்த சமூகமாக மாற வேண்டும். 10, 15 பல்கலைக்கழகங்கள் முழு நேரம் ஆய்வு, ஆவணப்படுத்தல் என்று இயங்குவதற்குரிய தேவைகள் உள்ளன. கனவு மெய்ப்பட வேண்டும். 

உங்களது வெற்றியின் ரகசியமாக/ பலமாக நீங்கள் எதைக்கருதுகிறீர்கள்?

போட்டி முடிய இரண்டு நாட்கள் முன்பு தான் புத்தகத்தை வெளியிட்டேன். பெரிதாக விளம்பரமும் செய்யவில்லை. ஆனாலும், என்னுடைய நூல் அதிகம் விற்றது. இத்தனை ஆண்டுகளாக என்னுடைய சமூக ஊடகச் செயற்பாட்டைக் கவனித்தவர்கள், நான் பங்கு கொண்ட கூட்டு முயற்சித் திட்டங்களைப் பார்த்தவர்கள், நான் ஏதேனும் வகையில் உதவி செய்தவர்கள், இந்தப் புத்தகத்தை வாங்கி எனக்கு ஆதரவு அளித்ததாகவே பார்க்கிறேன். இவன் ஒரு புக் எழுதினா ஏதாச்சும் விசயம் இருக்கும் என்று நம்பி வாங்கும் அளவுக்கு என் செயற்பாடு இருந்திருக்க வேண்டும். இது தான் ரகசியம், பலம் என்று நினைக்கிறேன் :) அவர்களுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாகத் தொடர்ந்து செயற்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.

-        ரவிசங்கர் அய்யாக்கண்ணு

No comments:

Post a Comment