Saturday 25 July 2020

ஒரு விசாவுக்கு காத்திருத்தல் - அண்ணல் அம்பேத்கார்

ஒரு விசாவுக்கு காத்திருத்தல் - அண்ணல் அம்பேத்கார்

ண்ணல் அம்பேத்கர் அவர்களின் புத்தகங்களில் முக்கியமான ஒரு புத்தகம் "ஒரு விசாவுக்கு காத்திருத்தல்". அண்ணல் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாற்று படமான "பாபாசாகேப் அம்பேத்கார்" என்பது மிக முக்கியமான திரைப்படம். இந்திய மக்கள் அனைவரும் பார்க்கவேண்டிய திரைப்படம் அது. அந்த படத்தின் மூலம் அண்ணல் அம்பேத்காரின் வாழ்க்கை வரலாறோடு இந்திய சாதிய மதவாத சமூகத்தையும் நாம் புரிந்துக்கொள்ளலாம்.

பாபாசாகேப் அம்பேத்கார் திரைப்படத்தில் இடம்பெறும் சில காட்சிகளை தான் அம்பேத்கார் இந்த "ஒரு விசாவுக்கு காத்திருத்தல்" புத்தகத்தில் தன் கைப்பட எழுதி இருக்கிறார். இந்த புத்தகம் 1990 தான் வெளியாகிறது. இந்த புத்தகத்தை ஏன் எழுத வேண்டிய தேவை வந்தது? என்பதை அம்பேத்கார் சொல்லும்போது, மேலை நாட்டினார், இந்தியாவில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறார்கள். அவர்களுக்கு, இங்கு நடக்கும் தீண்டாமை கொடுமைகளை புரிந்துக்கொள்வதற்காக, சில அனுபவங்களை பகிர்ந்தால் அவர்களால் புரிந்துக்கொள்ள முடியும் என்ற நோக்கத்தினால் தான் இந்த புத்தகத்தை எழுதியதாக சொல்கிறார்.

இந்த புத்தகத்தில் அண்ணல் அம்பேத்கார் வாழ்வில் இருந்து நான்கு நிகழ்வுகளையும், மற்றவர் வாழ்வில் இருந்து இரண்டு நிகழ்வுகளையும் சொல்கிறார். அனைத்துமே இந்திய சாதிய சமூகத்தின் உண்மை முகத்தை அப்பட்டமாக காட்டுவதாக இருக்கிறது. தீண்டாமை எத்தனை கொடியது என்பதையும் விளக்குகிறது.  

முதல் நிகழ்வு:

அண்ணல் அம்பேத்கார் அவர்களின் 9 வது வயதில் நடந்த ஒரு சம்பவம். 1901 ஆண்டு, அண்ணல் அம்பேத்கார் தன் தந்தையை பார்க்கச்செல்லும் போது ஏற்படும் அனுபவமே இந்த சம்பவம். அண்ணல் அம்பேத்காரின் தந்தை ராணுவத்தில் சுபேதாராக இருந்தார். வசதியான குடும்பமாக தான் அவர்கள் இருந்திருக்கிறார்கள். அவரின் தந்தை பக்கத்தில் ஒரு ஊரில் பணியில் இருக்கிறார். கோடை விடுமுறையில், பிள்ளைகளை அவர் இருக்கும் ஊருக்கு வருமாறு கடிதம் எழுதுகிறார். எங்கு வரவேண்டும், எப்படி வரவேண்டும், எந்த ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும், அங்கிருந்த அழைக்க ஒரு ஊழியரை அனுப்புகிறேன் என கடிதத்தில் குறிப்பிடுகிறார். அதற்கு அண்ணல் அம்பேத்காரின் அண்ணன் ஒரு தேதியை குறிப்பிட்டு வருவதாக பதிலும் எழுதுகிறார். அப்பாவை காணப்போகிறோம், அதிலும் ரயிலில் போகப்போகிறோம் என மிகுந்த ஆவலுடன் கிளம்புகிறார். அண்ணல் அம்பேத்கார், அவரது அண்ணன், அவரது அத்தை மகன்கள் இருவர் என அனைவரும் ரயில்நிலையம் வந்தடைகிறார்கள். ரயிலேறி அவரது தந்தை சொன்ன ரயில் நிலையத்தை மதியம் மூன்று மணிபோல வந்துவிடுகிறார்கள்.

ஆனால், அப்பாவின் கடிதத்தில் குறிப்பிட்ட மாதிரி, எந்த ஊழியரும் அழைக்க வரவில்லை. மணியாகிறது யாருமே வரவில்லை. அங்கே நான்கு சிறுவர்கள் தனியாக இருப்பதைப்பார்த்து அந்த ரயில்நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர் அவர்களிடம் வந்து, யார் நீங்கள் யாருக்காக காத்திருக்கிறீர்கள் என்று கேட்கிறார். அவர்கள் சொல்கிறார்கள். அவர்களுக்கு எதாவது உதவலாம் என நினைக்கிறார். நீங்கள் இந்துக்களாக? இந்துக்களில் யார்? என்று கேட்கிறார். 9 வயதான அம்பேத்கார், நாங்கள் மகர்கள் என்கிறார். உடனே, அந்த ஸ்டேஷன் மாஸ்டரின் முகம் மாறிவிடுகிறது. அதுவரை உதவ நினைத்தவர், உள்ளே சென்று விடுகிறார். சிறுவர்கள் மீண்டும் தனியாக நிற்கிறார்கள். அம்பேத்கார் சொல்கிறார். அதுவரை எனக்கிருந்த அந்த சந்தோச மனநிலை உடனே போய்விட்டது என்கிறார்.

உள்ளே சென்ற ஸ்டேஷன் மாஸ்டர் இன்னும் சில மணிநேரம் கழிந்து மீண்டும் வருகிறார். நீங்கள் எங்கே சொல்லவேண்டும் என்று கேட்கிறார். சிறுவர்கள் சொல்கிறார்கள். அங்கே செல்ல வேண்டும் என்றால் நீங்கள் குதிரை வண்டியில் தான் செல்லவேண்டும். ஆனால், இங்கிருக்கும் குதிரை ஓட்டிகள் யாரும் உங்களை ஏற்றமாட்டார்கள் என்கிறார். அவர்கள் மகர்கள் என்கிற விஷயம் அங்கிருக்கும் அனைவருக்கும் தெரிந்து விடுகிறது. கடைசியாக ஒரு தீர்வை ஸ்டேஷன் மாஸ்டர் சொல்கிறார். உங்களில் யாராவது ஒருவர் குதிரை ஓட்டவேண்டும், குதிரை ஒட்டி உங்களோடு வண்டியில் வரமாட்டார். அவர் தனியாக நடந்து வருவார் என்கிறார்கள். இதற்கு ஒத்துக்கொண்டு சிறுவர்கள் கிளம்புகிறார்கள். ஏற்கனவே நேரமாகிவிட்டது. வண்டி கிளம்பிய சில நேரத்தில், ஒரு இடத்தில் சாப்பிட நிறுத்துகிறார்கள். குதிரைவண்டிக்காரன் கொஞ்சம் காசை வாங்கிக்கொண்டு ஊருக்குள் சாப்பிட செல்கிறான். சிறுவர்கள் கையில் கொண்டுவந்த உணவை சாப்பிடுகிறார்கள். தண்ணீர் தாகம் அடிக்கிறது. கையில் தண்ணீர் இல்லை. பக்கத்தில் ஒரு குட்டை இருக்கிறது. ஆனால், தண்ணீர் மிக அசுத்தமாக இருக்கிறது.

அவர்கள் தண்ணீர் குடிக்காமல் இருக்கிறார்கள். வண்டிக்காரன் திரும்ப வர நேரம் ஆகிறது. ஒருவழியாக வருகிறான். மீண்டும் பயணம் தொடர்கிறது. ஒரு கட்டத்தில் குதிரைவண்டிக்காரனே வண்டி ஏறி ஒட்ட ஆரம்பிக்கிறான். பல மணி நேரம் வண்டி செல்கிறது. ஆனால், கண்ணுக்கு எட்டின தூரம் வரை எந்த வெளிச்சமும் இல்ல. கும்மிருட்டாக இருக்கிறது. சிறுவர்கள் இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது என்று கேட்கிறார்கள். வண்டிக்காரன் பதில் சொல்லவில்லை. ஒரு கட்டத்தில், சிறுவர்கள், நம்மை கடத்தி கொலை செய்யபோகிறானோ? உடம்பில் தங்க நகைகள் இருக்கிறதே என்றெல்லாம் யோசித்து பயந்து அழ ஆரம்பித்து விட்டார்கள் அந்த சிறுவர்கள். பிறகு, அந்த வண்டிக்காரன் சொல்கிறான். கொஞ்சம் பக்கத்தில் ஒரு சுங்கச்சாவடி இருக்கிறது. அதில் தங்கிவிட்டு நாளை காலை செல்லலாம் என்று. பல மணிநேர பயணத்திற்கு பிறகு அவர்கள் அந்த சுங்கச்சாவடியை அடைகிறார்கள். மீண்டும் பசிக்கிறது. இன்னொரு புறம் தண்ணீர் குடிக்காததால் தாகம் அப்படியே இருக்கிறது. அம்பேத்கார் தண்ணீர் கிடைக்குமா என்று அந்த குதிரைக்காரனிடம் கேட்கிறார். நீங்கள் மகர்கள் என்று தெரிந்தால் கொடுக்கமாட்டார்கள். இஸ்லாமியர் என்று சொல்லி கேட்டுப்பார் என சொல்கிறான். அவர் தனக்கு தெரிந்த உருதுவில் பேசி தண்ணீர் கேட்டுப்பார்க்கிறார். ஆனால், தண்ணீர் இல்லை. தண்ணீர் இல்லாமல் சாப்பிடவும் முடியாமல் சிறுவர்கள் தாகத்தோடே அந்த இரவை கடக்கிறார்கள். அடுத்த நாள், அண்ணல் அம்பேத்காரின் தந்தையை அடைகிறார்கள். அவர்கள் அனுப்பிய கடிதத்தை அவருக்கு சேர்க்காமல் விட்ட ஊழியரின் பிழையினால் தான் இந்த குழப்பம் என தெரிகிறது. ஆனால், அண்ணல் அம்பேத்கார் எழுதுகிறார். நான் சிறுவயதில் தீண்டாமையை அனுபவித்து இருக்கிறேன். பள்ளியில் தனியாக சாக்குப்பையில் உட்கார வைக்கப்பட்டிருப்பேன். அந்த சாக்கு பையை தினமும் எடுத்து வந்து வகுப்பை முடித்து மீண்டும் எடுத்து செல்ல வேண்டும். பள்ளியில் வேலை செய்யும் வேலைக்காரன் நான் உட்கார்ந்த சாக்கு துணியை தொடமாட்டான்.

மற்ற குழந்தைகளுக்கு தண்ணீர் தாகமெடுத்தால் ஆசிரியரின் அனுமதி வாங்கினால் போதுமானது. ஆனால், நான் குடிக்கவேண்டுமானால், ஆசிரியரின் அனுமதியுடன், ஓர் தீண்டத்தக்கவர்கள் குழாயை திறக்க வேண்டும். அவர்கள் இல்லாவிட்டால், தாகத்துடன் இருக்கவேண்டியது தான். இந்த மாதிரி வேலைகளுக்கு ஒருவரை ஆசிரியர் பயன்படுத்திவந்தார்.

எங்கள் வீடுகளில் அவரவர் துணிகளை நாங்களே, எங்கள் சகோதரிகளே சலவை செய்வார்கள். எங்களுக்கு வசதி இருந்தாலும், எங்கள் துணிகளை எங்கள் ஊர் சலவை தொழிலாளர்கள் எடுத்துக்கொள்ளமாட்டார்கள். அதே போல தான் முடிதிருத்துவதும். எங்களின் முடியை எங்கள் குடும்பத்தாரே திருந்துவார்கள். ஏனெனில், முடிதிருத்துபவர்கள் தீண்டத்தகாதவர்களுக்கு முடித்திருந்த சம்மதிக்க மாட்டார்கள்.

இப்படியான தீண்டாமை நிகழ்வுகள் எனக்கு தெரிந்திருந்தாலும், எனது ஒன்பதாவது வயதில் தான் தீண்டாமை என்பது எவ்வளவு கொடிய விஷயம் என்பதை தெரிந்துக்கொண்டேன்.

நாங்கள் தீண்டத்தகாதவர்களாக இருந்ததால் எங்களுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை என்பது என் மனதில் ஓர் அழியாத தழும்பை ஏற்படுத்திவிட்டது.

இந்த நிகழ்வுக்கு முன்பு தீண்டத்தக்கவர்களும் தீண்டத்தகாதவர்களும் இருந்து வருவது சாதாரணமான ஒரு விஷயம் தான் என்று எண்ணியிருந்த நான் தீண்டாமையைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினேன்.

இப்போது நேராக இந்த புத்தகத்தில் அம்பேத்கார் சொல்லும் மூன்றாவது நிகழ்வுக்கு செல்வோம்.

இது 1929 ஆம் ஆண்டு. இப்போது அண்ணல் அம்பேத்கார் இந்தியாவிலேயே மிக உயரிய படிப்பை அமெரிக்கா கொலம்பியா பல்கலைக்கழகத்தில், இலண்டனில் படித்தவர். அதுமட்டுமில்லாமல், பம்பாய் அரசின் பாரிஸ்டர்.

பம்பாய் மாகாணத்தின் தீண்டத்தகாதவர்களின் குறைகளைக் குறித்து விசாரிக்க அமைத்த குழுவில் உறுப்பினராக இருக்கிறார். அதையொட்டி ஒரு கிராமத்தில் தீண்டத்தகாதவர்களின் பிரச்சனை ஒன்றை விசாரிக்க செல்கிறார். விசாரித்துவிட்டு பம்பாய் திரும்புவதாக தான் அவரது பயணத்திட்டம் இருக்கிறது. ஆனால், அந்த ஊர் மக்கள், இரவு தங்களுடன் வந்து தங்கி செல்லுமாறு வேண்டுகோள் விடுகிறார்கள். அதனை தட்டாமல், அண்ணல் அம்பேத்கார் வந்த வேலையை முடித்துவிட்டு, மீண்டும் ரயில் நிலையம் வருகிறார். அங்கு அவரை வரவேற்க மக்கள் காத்திருக்கிறார்கள். அவருக்கு மாலையிட்டு மரியாதை செய்கிறார்கள். அந்த இடத்தில் இருந்து அந்த மக்கள் தங்கியிருக்கும் மார்வாடாவிற்கு செல்ல இரண்டு கிலோமீட்டர் தான். நடந்தே சென்று விடலாம். ஆனால், வெகுநேரமாயினும் ஒன்று நடக்காமல், அங்கேயே அவர் நின்றுக்கொண்டு இருக்கிறார். ஒரு வழியாக ஒரு குதிரைவண்டி வந்து நிற்கிறது. அவர் ஏறி உட்காருகிறார். குதிரைவண்டி கிளம்பிய சில நொடிகளில் பெரிய விபத்து ஒன்று நிகழ்வது போல ஒரு வண்டியுடன் மோத செல்கிறது. ஆனால், தப்பித்துவிடுகிறார்கள். அண்ணல் அம்பேத்காருக்கு குழப்பமாக இருக்கிறது. இந்த குதிரை ஓட்டிகள் சாதாரணமாக ஓட்டுவார்களே ஏன் இந்த தடுமாற்றம் என்று.

மகர் வாடாவை சென்று சேர ஒரு வாய்க்கால் பாலத்தை கடக்க வேண்டும். அந்த பாலத்தை கடந்து ஒரு செங்குத்தான பாதையில் திரும்பினால் மார்வாடா வந்துவிடும். அந்த பாலத்தை அடைகிறார்கள். அந்த பாலத்தில், ஓரமாக சுவர்கள் இல்லை. அந்த குதிரை வண்டி, அந்த பாலத்தின் முதல் கட்டையிலேயே இடித்து அண்ணல் அம்பேத்கார் தூக்கி வீசப்படுகிறார். அவரது கால் முறிகிறது. பலத்த காயம் ஏற்படுகிறது. மயக்கம் அடைகிறார். அவரை வண்டியில் ஏற்றி குறுக்கு வழியில் நடந்து சென்றவர்கள், ஊர் மக்கள், பெண்கள் எல்லாம் பதறி அடித்துக்கொண்டு ஓடிவருகிறார்கள். அழுது புலம்புகிறார்கள். அவரை தூக்கிக்கொண்டு சென்று மருத்துவம் செய்கிறார்கள்.

அண்ணல் அம்பேத்கார் என்ன நடந்து என்பதை சில நாட்கள் பிறகு தான் அறிகிறார். ரயில் நிலையத்தில் அவரை வரவேற்க காத்திருந்தவர்கள், அவரை மகர் வாடாவிற்கு அழைத்து செல்வதற்கு குதிரை வண்டியை ஏற்பாடு செய்ய நினைத்திருக்கிறார்கள். தங்கள் தலைவரை நடத்தி அழைத்துச்செல்வது அவருக்கான மரியாதையாக இருக்காது என்பது அவர்களது சிந்தனை. ஆனால், அங்கே இருந்த எந்த குதிரையோட்டியும் ஒரு தீண்டத்தகாதவரை எங்கள் வண்டியில் ஏற்றமாட்டோம் என்று சொல்கிறார்கள்.

அதாவது இந்தியாவிலேயே மிகப்பெரிய படிப்பை படித்தவர், ஒரு மிகப்பெரிய தலைவர், ஒரு மாகாணத்தின் பாரிஸ்டர். இருப்பினும், ஒரு படிக்காத, வருமானமே இல்லாத குதிரை ஓட்டி, அவரை தன்னை விட கீழானவராக நினைக்கிறான். காரணம் சாதி. 

அண்ணல் அம்பேத்கார் எழுதுகிறார்... அந்த குதிரை ஓட்டிகள் யாரும் வரவில்லை என்பதால் தான் தாமதம் ஆகிறது. கடைசியாக ஒரு ஒப்பந்தம் ஆகிறது. குதிரைவண்டிக்கான காசை கொடுத்துவிடுவதும், ஆனால், குதிரை அவர்கள் ஓட்டமாட்டார்கள் என்பதும் தான் ஒப்பந்தம். காசு கிடைக்கிறது என்றதும் குதிரை ஓட்டி சம்மதிக்கிறார். வண்டியை மகர்களில் ஒருவர் ஓட்டுகிறார். அவருக்கு வண்டி ஓட்ட தெரியாது. ஏனெனில், அது அவரது தொழிலில்லை. என்னை நடத்தி செல்வது மரியாதை குறைவு என்று நினைத்தவர்கள், என் உயிருக்கு ஆபத்து என்பதை உணரவில்லை என்று எழுதுகிறார்.

எழுதிவிட்டு, அண்ணல் அம்பேத்கார் இப்படி முடிக்கிறார்...

“அப்பொழுது தான் புரிந்தது ஓர் இந்து டோங்காவாலா (குதிரை வண்டிக்காரன்), ஒரு கடைநிலை வேலைக்காரனைப் போன்ற நிலையிலிருந்தால், தான் மற்ற எல்லா தீண்டாதாகவர்களையும் விட ஏன் பாரிஸ்டரையும் விடக்கூட உயர்ந்தவன் என்ற எண்ணம் கொண்டவன் என்பதைத் தெரிந்துக்கொண்டேன்.  “

இதுபோன்ற இன்னும் நான்கு சம்பவங்கள் இந்த புத்தகத்தில் இருக்கிறது. அது இந்திய சாதிய சமூகத்தின் கொடூர முகத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

 அவசியம் ஒவ்வொரு இந்தியரும் படிக்கவேண்டிய புத்தகம். புத்தகத்தை கிண்டிலில் வாசிக்கலாம்.

லிங்க்: https://amz.run/3PRd

இந்த கட்டுரையை ஒட்டிய விரிவான காணொலிகளை காண:




பாபாசாகேப் அம்பேத்கார் திரைப்படம்: https://www.youtube.com/watch?v=qwjXMrJ_pCQ



No comments:

Post a Comment