Saturday 25 July 2020

கிண்டில் எனக்கான சுயமரியாதை, என் எழுத்திற்கான அங்கீகாரம். - வியன் பிரதீப்

கிண்டில் எனக்கான சுயமரியாதை, என் எழுத்திற்கான அங்கீகாரம். -  வியன் பிரதீப்

2018 ல் நண்பர் அஷாருதீன் அவர்கள் தன்னுடைய "இறகுகளினாலான பொழுதுகள்" என்ற புத்தகத்தின் லிங்கை அனுப்பி அமேசான் கிண்டில் பென் டூ பப்லிஷ் 2018 போட்டியில் தான் கலந்துகொண்டிருப்பதாகக் கூறி கிண்டிலில் புத்தகத்தைப் படித்துப் பார்க்கச் சொல்லியிருந்தார். அப்போது எனக்குக் கிண்டில் பற்றிப் பெரிதாக அறிமுகம் இல்லாதிருந்த நேரம், அவரிடம் அந்தப் போட்டிபற்றித் தெரிந்து கொண்டேன். அவரே என்னிடம் நீங்களும் எழுதலாம் என்று அதற்கான விளக்கங்களுடன் ஒரு லிங்க் அனுப்பியிருந்தார். அப்போது எனக்கு நேரம் இல்லை, காரணம் போட்டி முடியும் தருவாயிலிருந்தது அதனால் கலந்து கொள்ளவில்லை ஆனால் அப்போதே அடுத்த முறை முயன்று பார்த்துவிட வேண்டுமென முடிவு செய்திருந்தேன்.

2019 ல் அமேசான் கிண்டில் பென் டூ பப்லிஷ் போட்டிக்கான அறிவிப்பு வந்த நேரத்தில்தான் மருத்துவரும் எழுத்தாளருமான சென்பாலன் அறிமுகமானார் கூடவே திராவிட வாசகர் வட்டத்தின் அறிமுகமும் கிடைத்தது. சென் பாலன் அவர்கள் 2018ல் நடந்த போட்டியின் வெற்றியாளர், 2019ல் எனக்குச் சக போட்டியாளர், ஆனால் அதெல்லாம் தள்ளிவைத்து விட்டு நிறைய ஆலோசனைகள் சொன்னார் அதெல்லாம் எனக்குப்
பெரும் உதவியாக இருந்தது
       
பிறகு 3 மாதங்களில் கதையெழுதி முடித்தேன். கதையெழுதி முடித்திருந்தாலும் அதற்குத் தலைப்பு
வைக்கவில்லை மேலும் கிண்டிலுக்கு ஏற்ற வகையிலும் எழுதியிருக்கவில்லை. ஏனெனில் நான் சிறுகதை உலகிற்குப் புதிது அதற்கு முன்பு கவிதை எழுதிக் கொண்டிருந்தவன் என்பதும் ஒரு காரணம். அப்போதுதான் மருத்துவர் ஆசான் பூபதி அவர்கள் சரியான நேரத்தில் சரியான ஆலோசனை சொன்னார். அவரே வழ வழவென நீண்டதாக எழுதியிருந்த நான்  கிண்டிலுக்கு ஏற்றார் போல 20 ஓவர் கிரிக்கெட் போலப் பரபரப்பாக எழுதவைத்தார்.  

ஒரு வழியாகக் கதையும் எழுதி முடித்தாகிவிட்டது. என்ன தலைப்பு வைக்கலாமென யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் ஜெயமோகன் அவர்கள் கிண்டில் போட்டிபற்றி அதெல்லாம் குப்பை, நாலாந்தர எழுத்து என விமர்சித்து இருந்தார். அதில் எழுதும் எழுத்தாளர்களையும் விமர்சித்திருந்தார். அப்போதுதான் இதையே தலைப்பாக வைத்தாலென்ன என முடிவு செய்து சும்மா தலைப்பாக வைத்தால் அது வெற்று விமர்சனமாக இருக்குமேயென அந்தத் தலைப்பில் ஒரு கதையையும் எழுதி அந்தத் சிறுகதைத் தொகுப்பிற்கு நாலாந்தர எழுத்து என்றே வைத்துவிட்டேன்.

சரி கதைக்கு அணிந்துரை வேண்டுமென முடிவுசெய்து உடனடியாக எனக்கு மனதில் தோன்றியது ராஜராஜன் அண்ணன்தான். சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நேரத்திலேயே ராஜராஜன் அவர்கள் எனக்கு நன்கு அறிமுகமான அண்ணன். சும்மா பேசிக் கொண்டிருந்த காலத்திலேயே அண்ணா பின்னாளில் நான் புத்தகம் எழுதினால் நீங்கள் ஒரு அணிந்துரை எழுதித் தரவேண்டுமெனக் கேட்டிருந்தேன்.

அண்ணனும் சரியெனச் சொல்லியிருந்தார் பின்னாளில் கேட்டபொழுது சிறப்பான ஒரு அணிந்துரையை எழுதிக் கொடுத்தார். என்னுடைய கதையைப் படித்துப் புரிந்து கொள்ளாதவர்கள் கூட அண்ணனின் அணிந்துரையைப் படித்துப் புரிந்து கொள்ளும் அளவிற்குத் தெளிவானதொரு அணிந்துரையது. நான் என்ன எழுதி இருக்கிறேன், வாசகர்கள் எப்படிப் படிக்க வேண்டுமென அவரே மிக அழகாக எழுதிக் கொடுத்திருந்தார். என் புத்தகத்திற்கு கிடைத்த முதல் பரிசது.

அதே போல எனக்குக் கிடைத்த மற்றொரு பரிசு மருத்துவரும், ஓவியருமான நண்பர் கெளதம் அம்பேத்கார் அவர்களின் ஓவியம். கிண்டிலில் வெளியாகியிருந்த என்னுடைய கவிதைப் பதிப்பான கொஞ்சம் கவிதை நிறைய காதல் புத்தகத்தின் கவிதைகளைப் படித்து அதில் சில கவிதைகளுக்கு ஓவியம் வரைந்து அனுப்பியிருந்தார். அது அருமையாகவும் கவிதைக்கு வேறொரு பரிமாணத்தையும் கொடுத்தது
அப்போதே கதையெழுதும்பொழுது இவர் ஓவியம் கண்டிப்பாக என் புத்தகத்தில் இடம்பெற வேண்டுமென முடிவு செய்திருந்தேன். அதே போல நாலாந்தர எழுத்துக் கதைக்குப் பல பரிமாணங்களில் ஓவியம் வரைந்து கொடுத்திருந்தார். நான் படித்தவரைக்   கிண்டில் புத்தகத்தில் பெரிதாக ஓவியங்கள் இடம் பெற்றிருக்காது. நாலாந்தர எழுத்தில் அதற்குப் பின் வந்த பல புத்தகங்களில் ஓவியங்கள் இடம் பெற நண்பர் கௌதமின் ஓவியங்களும் ஒரு காரணம். அவரே நிறைய இடங்களில் கதையின் பிழை திருத்தத்திற்கும் உதவினார்.              .

புத்தகம் வெளிவந்த நேரத்தில் ராஜேஷ் தேவ்தாஸ், நித்தியானந்தம், திராவிட சிவபாலா போன்றோர் எல்லாம் ஆரம்ப காலத்தில் புத்தகத்தைப் படித்து விமர்சனங்கள் கொடுத்தார்கள்.  மேலும் பல நண்பர்களும் உதவி செய்தார்கள், யாருடைய பேரையாவது விட்டிருந்தால் அன்புகூர்ந்து மன்னித்து விடவும்.
அண்ணன் நித்யானந்தம் அவர்கள் நான் என்ன போஸ்ட் போட்டாலும் அதற்கு உடனடியாக முகநூலில் லைக் விட்டுவிடுவார். அவருக்கு நன்றி செலுத்த நினைத்திருந்தேன் அதனால் அவரையும் லைக்ஸ் கமெண்ட் என்னும் பெயரிலேயே ஒரு முன்னுரை எழுதித் தரச் சொல்லி, அதற்குத் தயங்கிய அண்ணனை அன்பால் வற்புறுத்திக் கடைசியாக அவர் எழுத்தையும் புத்தகத்தில் இணைத்து விட்டேன்.

புத்தகம் வெளிவந்த நேரத்தில் எனக்குப் பல நண்பர்கள், புத்தக
விளம்பரத்திற்கு உதவிசெய்தார்கள். அவர்களெல்லாம் முகநூலில் அறிமுகமான நட்புகளே. இளந்தமிழன், பிரபாகரன், அட்லீ நாகேந்திரன் மீம் மூலமாகவும், தோழர் அகிலா செல்வராஜ் தன்னுடைய தமிழ் திண்ணை என்ற யூடூப் சேனலில் இன்டெர்வியூ மூலமாகவும் மற்றும் முகம் தெரியாத பல நண்பர்கள் புத்தகம் வாங்கியும், விமர்சனங்கள் எழுதியும், ஷேர்செய்தும் உதவினார்கள்.

புதிதாக எழுத வந்த எனக்கு, கதைக்குக் கலவையான விமர்சனங்களே வந்தன. மொத்தமாக யாருக்குமே பிடிக்கவில்லையென யாரும் சொல்லவில்லை. ஒரு சிலருக்குப் பிடிக்கவில்லையென்றால் பலருக்குப் பிடித்திருந்தது. இந்தப் புத்தகம்மூலம்
பலர் எனக்குப் புதிய நண்பர்கள் ஆனார்கள். சிலர் எனக்கு ஆலோசனைகள் சொன்னார்கள், தொடர்ந்து எழுத ஊக்கம் கொடுத்தார்கள். இன்று வரை  அடுத்த கதை எப்பொழுது எழுதுவீர்கள் என அன்பாகக் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இதில் முக்கியமாக நான் இதைச் சொல்லியே ஆக வேண்டும், நான் கிண்டிலுக்கு, சிறுகதை உலகிற்குப் புதிதென்றாலும் என்னையும், என் எழுத்தையும் நம்பி அந்த நேரத்தில் பெரிய பெரிய எழுத்தாளர்களுக்கே கிடைத்திருந்த அங்கீகாரம் என் புத்தகத்திற்கும் கிடைத்தது ஆமாம் சுமார் 130க்கும் மேலான கமெண்ட்கள் கிடைத்தது அதில் பெரும்பாலும் விரிவான விமர்சனங்களாக, பாராட்டுக்களாக இருந்தன.
இதில் எந்தப் பொய்யும், குளறுபடியும், சதியுமில்லை. ஏனெனில் அமேசான் கட்டுப்பாடு படி, அமேசானில் அவர்கள் சொல்லியிருந்த கணக்கின் படி பொருட்கள் வாங்கியிருந்தாலோ அல்லது கிண்டிலில் தொடர்ந்து புத்தகங்கள் வாங்கியிருந்தாலோ அல்லது ஆங்கிலத்தில் இருந்தாலோதான் கமெண்ட்கள் அமேசானால் ஏற்றுக் கொள்ளப்படும் இதில் எந்தச்சதியுமில்லை.                            

அதே போல எந்தக் கட்சியும் எனக்கு எந்தவித உதவியும் செய்யவில்லை முழுக்க முழுக்க நண்பர்களும் வாசகர்களின் ஆதரவினாலும்தான் என் புத்தகம் ரீச் ஆனதே தவிர அதில் எந்தவித கோல்மால்களும் கிடையாது. நீங்கள் உண்மையாகவும், படைப்பில் வாசகர்களுக்குப் பிடித்த மாதிரியும் எழுதியிருந்தாலும், உங்கள் உழைப்பைக் கொடுத்தாலும் உங்களுக்கான இடம் கிடைத்தே தீரும் அதை யாரும் பறிக்க முடியாது என்பதை நான் அனுபவத்தில் தெரிந்து கொண்டேன். மற்றவர்கள் சொல்வது போலக் கிண்டிலை யாரும் சும்மா கைப் பற்றிவிட முடியாது, அது உழைப்பால்தான் வசமாகும். அப்படிச் சொல்பவர்கள் உங்கள் முன்னேற்றத்திற்குத் தடையானவர்கள். அவர்கள் எந்த நிலையிலிருந்தாலும், எவ்வளவு பெரிய அறிவாளியானாலும், எவ்வளவு பெரிய வாசகர் வட்டத்தை வைத்திருந்தாலும் காரணம் இல்லாமல் பொத்தம் பொதுவாக விமர்சனம் செய்பவர்கள், மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் எல்லோருமே நமக்கும், மொழிக்குமான முன்னேற்த்தின்
தடைகள். அவர்களை அறமும், காலமுமே பார்த்துக் கொள்ளும், படிப்பினையைக் கற்றுத் தரும். அதனால் புதிதாக எழுத வருபவர்கள் யாரும் இதை ஒரு பெரிய விசயமாக நினைக்காமல் தொடர்ந்து எழுதுங்கள்.                      .

இந்தப் புத்தகத்தால் எனக்குப் புதிய நண்பர்கள், உதவிகள் எல்லாம் கிடைத்ததெனச் சொன்னேனே அதேபோல விமர்சனங்களும் வந்தது காரணத்தோடு வந்த விமர்சங்களை நான் ஏற்றுக் கொண்டேன். காரணத்தோடு வந்த விமர்சனங்களெல்லாம் உங்கள் எழுத்துக்கும், உங்களுக்குமான முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும். நல்ல விமர்சனங்கள் என் எழுத்தை, என்னை மெருகேற்றியிருக்கிறது. காரணம் இல்லாமல் உள்நோக்கத்தோடு வந்த விமர்சனங்களை நான் கண்டுகொள்ளவில்லை. அதெல்லாம் நமக்குக் கால விரயங்கள். அப்படி என் கூடப் பயணித்த   நண்பர் ஒருவரே இந்தப் புத்தகதிற்கான விமர்சனத்தைப் பொதுவில் வைக்காமல் அல்லது என்னிடம் நேரிடையாக வைக்காமல் எனக்குப் பின்னாலிருந்து வசைமாரிப் பொழிந்தார், எள்ளி நகையாடினர் ஆனால் நான் அதைப் பெரிதாகக் கண்டுக்கவில்லை காரணம் உண்மையான விமர்சனத்தோடு அணுகியவர்கள் பலர் அவர்களிடம் ஒரு அறமிருந்தது இவரிடம் அறம் தவிர எல்லாமிருந்தது. கூடவே இந்த வெற்றுக் கூச்சல்கள் என்னை என் புத்தகத்தை எந்த அளவிலும் பாதிக்கவில்லை. எப்போது உங்கள் நோக்கத்தில் தெளிவும் உண்மையும் இருக்கிறதோ அப்போது உங்கள் வாசகர்களே உங்களை உயர்ந்த இடத்தில் வைப்பார்கள். அதனால் நண்பர்களே நம்பிக்கையுடன் எழுதுங்கள் உங்களுக்கான ஆதரவு கிடைத்தேதீரும்.                                    

நான் எழுத வந்த நேரத்தில் பலர், உங்கள் எழுத்து எளிதாக இருந்தது நானும் எழுதலாமென முடிவெடுத்திருக்கிறேன் என்றார்கள். அடுத்த முறை அவர்களும் என் சக போட்டியாளர்களாக வருவார்கள் அவர்களை வரவேற்க நான் காத்திருக்கிறேன். திறமையிருந்தும்
தயங்கிய சிலரை போட்டி முடிந்த பின்பும் கூட நான் எழுத வைத்துள்ளேன் அவர்களெல்லாம் இன்று புத்தகம் வெளியிட்டிருக்கிறார்கள்.
எழுத்து, மொழி, புத்தகமெல்லாம் எந்த ஒருவருக்கும் மட்டும் சொந்தமில்லை. அதனால் உங்களுக்கு எழுதும் ஆர்வமிருந்தால் துணிந்து எழுதுங்கள், எழுத வாருங்கள். உங்கள் எழுத்து நல்லதா, நல்லதில்லையா என்பதை வாசகர்கள் தீர்மானிக்கட்டும். கிண்டில் போட்டியின்போது நான் பார்த்த இன்னொரு ஆரோக்கியமான விசியம் சில போட்டியாளர்கள் தவிர பெரும்பாலான போட்டியாளர்கள் சக போட்டியாளர்களின் படைப்புகளையும் ஆதரித்துப் பரப்பினார்கள். புதிய பெண் எழுத்தாளர்கள் எழுத வந்திருந்தார்கள். எழுத்துலகில் இது ஒரு நல்லவிசியம், கூடவே படைப்பாளிகளின் ஒற்றுமையுணர்வு அந்த மொழிக்கான நன்மையும் கூட, அது பல படைப்புகளை இந்த உலகிற்குத்தரும்.

மேலும் எனக்குக் கிண்டில் புத்தகம்மூலம் உலகின் பல பகுதிகளில் வாழும் மக்களும் நண்பர்கள் ஆனார்கள், என் படைப்பும் உலகை வலம் வந்தது. அமேசானும் என்னைச் சுயமரியாதையுடனே நடத்தியது. என் படைப்பிற்கான ராயல்டி தொகையை அது சிறியதோ பெரியதோ சரியான நேரத்தில் கொடுத்தது, கொடுத்துக் கொண்டிருக்கிறது. கிண்டிலில் புத்தகம் வெளியிடுவது சுலபமானது கொஞ்சம் உழைப்பைக் கொடுத்தால் போதுமானது. நான் பதிப்புப் புத்தகத்தை வெளியிட ஏற்கனவே முயற்சி செய்த அனுபவத்தில் சொல்கிறேன், கிண்டில் என்னை ஏளனமாக நடத்தவில்லை, நான் புத்தகம் வெளியிட என் பிறப்பையோ, திறமையையோ சந்தேகிக்கவில்லை, என் புத்தகம் வெளியிட என்னிடம் பெரிதாகப் பணம் எதையும் கேட்கவில்லை, என் வளர்ச்சியைத் தடுக்க வில்லை.
கிண்டில் கால மாற்றத்தின் நன்மை, எனக்கான அங்கீகாரம், என் சுயமரியாதை. வாருங்கள் நண்பர்களே தயக்கம் வேண்டாம் எழுதுங்கள், எழுதுங்கள், எழுதுங்கள்.                                .

என்றும் அன்பு மற்றும் நன்றியுடன்,                             

-        வியன் பிரதீப்

வியன் ப்ரதீப் எழுதிய புத்தகங்களை வாசிக்க: https://amz.run/3K6p

No comments:

Post a Comment