Saturday 25 July 2020

ரோஹித் வெமுலா மற்றும் Dr.அனிதா அவர்களின் படங்கள் வரைவது மிகவும் பெருமையாக இருந்தது - மருத்துவர். கௌதம் அம்பேத்கர்

ரோஹித் வெமுலா மற்றும் Dr.அனிதா அவர்களின் படங்கள் வரைவது மிகவும் பெருமையாக இருந்தது - மருத்துவர். கௌதம் அம்பேத்கர்


ணக்கம் நண்பர்களே.  Kindle Pen to Publish 2019 வெற்றியை கொண்டாடும் விதமாக வெளியிடப்படும் இந்த சிறப்பு திராவிட வாசிப்பு இதழில் என்னுடைய அனுபவ பயணத்தை எழுத வாய்ப்பளித்தமைக்கு நன்றி.  நான் ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவன்.  திராவிடத்தின் பயனால் விளைந்த ஒரு நற்செயல், நான் மருத்துவம் பயின்றது.  சிறு வயதிலிருந்தே எனக்கு ஓவியம் வரைந்து அதற்கு வண்ணம் தீட்டுவது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.  அதுமட்டுமல்லாமல் நிறைய பொம்மை படங்களை தொலைக்காட்சியில் CARTOON NETWORK, NICKELODEON, POGO ஆகிய சேனல்கள் வாயிலாக பார்ப்பது பிடிக்கும்.  நிறைய அனிமேஷன் படங்கள் விரும்பி பார்ப்பதும் உண்டு. ஓய்வு நேரங்களில் படங்கள் வரைவது, அவற்றுக்கு வண்ணம் தீட்டுவது எனது வழக்கம். பல்வேறு ஓவிய போட்டிகளில் பங்குபெற்று பரிசுகளும் நிறைய வாங்கியதுண்டு.  ஆனால் காலப்போக்கில் எனது மருத்துவ படிப்பை மேற்கொள்ளும் பொருட்டு, ஓவியம் வரைவதை சற்றே ஒதுக்கிவைக்க வேண்டியதாயிற்று.  முதலாம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பில் உடர்கூறுயியல் (human anatomy) பாடத்தில் மனித உடலின் பாகங்களை உடற்கூறு செய்து, அதை வண்ணமயமாக வரைந்து பாராட்டு பெற்றிருக்கிறேன்.  அவ்வப்போது ஓவியம் மற்றும் கோலப்போட்டிகளிலும் பங்கெடுப்பது உண்டு.  கடைசியாக தலைவர் தளபதி அவர்கள் நடத்திய CAA எதிர்ப்பு கோலப்போட்டியில் பங்கெடுத்து மூன்றாம் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது.
     சரி விஷயத்திற்கு வருவோம்.  சென்ற ஆண்டு கின்டில் பென் டு பப்ளிஷ் போட்டியில் இரண்டு கதை தொகுப்பு நூல்களுக்கு கோட்டோவியங்கள் வரைய வாய்ப்பு கிடைத்தது.  நண்பர் வியன் பிரதீப் அவர்களின் நாலாந்தர எழுத்து மற்றும் அண்ணன் ராஜராஜன் அவர்களின் பாகிஸ்தானில் என்ன பேசிக்கொள்கிறார்கள்.  இவர்கள் இருவரின் புத்தகத்தில் என்னுடைய கலை படைப்புகள் இடம்பெறுவது மூலம் இவர்களுடன் கைகோர்த்து இந்த அருமையான அனுபவத்தில் நானும் ஒருவனாக பங்குபெற்றேன் .  அதற்கு எனது நட்பு கலந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
     2019 நாடாளுமன்ற தேர்தலின் போது தோழர் உமா மகேஸ்வரன் பன்னீர்செல்வம் முகநூல் மூலம் ஒரு WhatsApp குழு ஒன்றை திமுகவின் சாதனைகளை பற்றி பரப்புவதற்காக உருவாக்கினார்.  அதில் நான், வியன் மற்றும் இன்னும் பிற முகநூல் நண்பர்கள் எங்களை இணைத்துக்கொண்டோம்.  அவ்வபோது கட்சியின் பணிகளை அங்கே பேசுவோம் .  தேர்தல் வெற்றி பெற்ற பின்பும் , தற்பொழுது அந்தகுழு திமுகவின் செயல்பாடுகளை எடுத்து கூறுவதற்காக  இயங்கி கொண்டிருக்கிறது.  அங்கு சந்தித்து உரையாட ஆரம்பித்து, பின்பு ஒரு நாள் நண்பர் வியன் தன்னுடைய கொஞ்சம் கவிதை நிறைய காதல் கவிதை தொகுப்பை எனக்கு அனுப்பி வைத்து, அதை படித்துவிட்டு என்னுடைய விமர்சனத்தை கூறுமாறு கேட்டுக்கொண்டார்.  நான் அதனை வாசித்துவிட்டு, எனது எண்ண ஓட்டங்களை ஒரு காகிதத்தில் பால் பாயின்ட் பேனா கொண்டு கோட்டோவியமாக வரைந்து அனுப்பி வைத்தேன்.  அது அவருக்கு மிகவும் பிடித்துப்போக, பின்பு என்னிடம் தான் கிண்டில் பென் டூ பப்ளிஷ் போட்டிக்காக நாலாந்தர எழுத்து எனும் சிறுகதை தொகுப்பை எழுதி கொண்டிருப்பதாகவும் அதற்கு வரைந்து தருமாறு கேட்டுக் கொண்டார் .  எனக்கு என்னுடைய வேலைபலுவினால் ஏற்படும் சோர்வை போக்குவதற்கு இது ஒரு நல்ல பொழுதுபோக்காக அமையும் என்று ஒப்புக்கொண்டேன்.  படிப்பதற்கு மிக அருமையாகவும், நாம் அன்றாட  வாழ்க்கையில் காணும் நபர்களையும் காட்சிகளையும் அதில் கதையாக எழுதியிருந்தார். எனக்கு அவற்றை உருவகப்படுத்தி வரைவதற்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது.  குறிப்பாக அதில் எனக்கு மிகவும் பிடித்தவையாக விருதும் ஒரு ரூபாய் இட்லியும், யார் அவர், பிரியாணி ஆகிய கதை மாந்தர்களை கூறலாம்.  பிறகு அந்த படங்கள் பிடித்துப்போக, நாலாந்தர எழுத்தின் அணிந்துரை நாயகனான அண்ணன் ராஜராஜன் தன்னுடைய பாகிஸ்தானில் என்ன பேசிக்கொள்கிறார்கள் புத்தகத்திற்கு அட்டைப்படம் மற்றும் கதைகளுக்கு வரைய கேட்டுக்கொண்டார் . இவ்வாறு வரைவதன் மூலம், அவர்கள் தங்கள் புத்தகங்களை கிண்டிலில் வெளியிடுவதற்கு முன்னரே அதை படித்துவிடும் வாய்ப்பும் எனக்கு பிரத்யேகமாக கிடைத்துவிடும் .  அவ்வாறாக இந்த புத்தகங்களின் உருவாக்கத்தில் நானும் ஒருவனாக ஒன்றிவிடுவேன் .  இவர்கள் இருவருமே எனக்கு என்னுடைய கற்பனைத்திறனை முழுவதுமாக வெளிப்படுத்துவதற்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல், ஒரு கலைஞனுக்கான முழு சுதந்திரத்தை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.  இதனால் எங்கள் நட்பு மேலும் வலுவடைந்தது.

     பாகிஸ்தானில் என்ன பேசிக்கொள்கிறார்கள் புத்தகம் எனக்கு பல நிஜ உலக மாந்தர்களையும், வரலாற்று சிறப்பு அடையாள சின்னங்களையும், இடங்களையும் வரையும் ஒரு அறியவாய்ப்பை தந்தது. குறிப்பாக கதரகாமா வில் நான் வரைந்த கலைஞரின் அண்ணா நூற்றாண்டு நூலகம், மாநில அரசு பேருந்துகளின் உட்புற காட்சி, கலைஞரின் மாணவர்களுக்கான இலவச பேருந்து பயண சீட்டு ஆகியன, என் மனதிற்கு மிகவும் நெருக்கமானவை.  மற்றும் வெமுலாவின் கனவு கதையில் சனாதன எதிர்ப்பு போராளிகளான ரோஹித் வெமுலா மற்றும் Dr.அனிதா அவர்களின் படங்கள் வரைவது மிகவும் பெருமையாக இருந்தது.  அந்தபுத்தகத்தின் தலைப்பை பல்வேறு பார்ப்பனீய எதிர்ப்பு குறியீடுகள் வைத்து வடிவமைப்பது ஒரு வித நல்ல கலை அனுபவத்தை எங்களுக்கு வழங்கியது.  கதைகளுக்கு கிடைத்த review கமெண்டுகளில் அவ்வபோது சிலர் எனது ஓவியங்கள் பற்றி பாராட்டி குறிப்பிடும்போது  நாம் அந்த ஓவியங்கள் மூலம் எடுத்து கூறவந்த  விஷயத்தை அவர்கள்  புரிந்துகொண்டனர் என்பதை உணரும்பொழுது மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும்.
     இந்தவொரு நல்வாய்ப்பினை எனக்கு அளித்த நண்பர் வியன் பிரதீப் மற்றும் அண்ணன் ராஜராஜன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.  மேலும் எங்களை ஊக்குவித்த அனைத்து சமூகவலைத்தள நண்பர்களுக்கும் குறிப்பாக தோழர். நித்தியானந்தம், தோழர் யூசுஃப் பாசித் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் .  இனி வரும் ஆண்டுகளில் நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் பங்குபெற்று, பல்வேறு பரிசுகளை பெற்று மென்மேலும் அவர்கள் தங்களுடைய எழுத்துலக பயணத்தில் வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்தி, எனது அனுபவ உரையை முடித்துக் கொள்கிறேன் . நன்றிகள் பல ! வணக்கம் !


- மருத்துவர். கௌதம் அம்பேத்கர்

No comments:

Post a Comment