Wednesday 19 August 2020

கலைஞரும் இடஒதுக்கீடும் – உதயமாறன் கண்ணன்

 கலைஞரும் இடஒதுக்கீடும் உதயமாறன் கண்ணன் 

ம் எல்லோருக்கும் தெரிந்ததுதான் பார்ப்பனீய ஆதிக்கத்துக்கு எதிரான ஓர் வலுவான ஆயுதம் என்பது இடஒதுக்கீடு அல்லது இடப்பங்கீடு எனும் கருவி. பார்ப்பனரல்லாத இயக்கத்தின் மகாசாசனம் எனப்படும் Non Brahmin Manifesto இந்த வகுப்புவாரி உரிமையைத்தான் வலியுறுத்தியது.

 

ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சி இந்த இடப்பங்கீடு எனும் போர்வாளை மிக லாவகமாக பார்ப்பன ஆதிக்க எதிர்ப்புப் போரில் சுழற்றி வெற்றிகண்டது. இந்த இடப்பங்கீடை அன்றைய காங்கிரஸும் ஆதரித்திருந்தால் அய்யா பெரியார் அந்த இயக்கத்தை விட்டு வெளியேறி இருக்கமாட்டார். இந்திய துணைக்கண்டத்தின் அரசியலும் வேறு மாதிரியாக மாறி இருந்திருக்கும்.

 

இந்த இந்திய பூபாகத்தில் எத்தனையோ சீர்திருத்தவாதிகள் பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிரான போரில் தோல்வியுற்றதற்கும் நீதிக்கட்சியின் வழித் தோன்றலான திராவிடர் இயக்கங்கள் வெற்றி பெற்றதற்கும் இந்த இடப்பங்கீடு போர்வாள் ஓர் முக்கிய காரணி என்றால் மிகையாகாது.

 

அப்படி நீதிக்கட்சியால் அமல்படுத்தப்பட்ட இடப்பங்கீடை , நாடு விடுதலை பெற்றபின் அமலாகிய அரசியல் சட்டத்தைக் காரணம் காண்பித்து அழித்துவிட முனைந்தனர் இந்திய அரசியலின் சாணக்கிய மூளைகளான பார்ப்பனர்கள்.   (கலைஞர் சொன்னார் ஓர் முறை; சாணக்கியன் என்பது வாழ்த்தொலி அல்ல வசைமொழி என்று).

 

திக, திமுகவால் அரசியல் மயப்படுத்தப்படிருந்த தமிழ்சமூகம் போர்க்கோலம் பூண்டது அந்த அநீதிக்கு எதிராக. டெல்லி மிரண்டது. காமராசர் நேருவிடம் பேசப்போனார். தமிழ்நாட்டின் போர்ச் சூழலைச் சொல்லி இந்த இடப்பங்கீடுக்கு ஆதரவாக திருத்தம் வேண்டும் எனும் திராவிடர் இயக்கத்தின் குரலை அங்கே எடுத்துரைத்தார்.

 

இதிலே சுணக்கம் காட்டினால் காங்கிரஸுக்கு தமிழகத்தில் கல்லறை எழுப்ப வேண்டி இருக்கும் என நன்கு உணர்ந்திருந்தார் காமராசர். போராட்டக் குரலுக்குச் செவி சாய்த்தது தில்லி சர்க்கார். பார்ப்பனர்கள் போட்ட திட்டம் இந்த நாட்டின் வெகு மக்களைத் திரட்டி திராவிடர் இயக்கம் நடத்திய சமரினால் தூள்தூளாக ஆக்கப்பட்டது. பின்னர் அந்தச்சட்டத்தில் எந்த மாறுதல்களும் செய்யப்படவில்லை. இடப்பங்கீடின் நோக்கமே சாதிகளால் அழுத்தப்பட்ட மக்களில் கல்விபெற்றோர் எத்தனை பேர், அரசு பதவிகளில் உள்ளோர் எத்தனை பேர் என்பதாக இருக்கவேண்டும் என்பதை மய்யப்படுத்தித்தான். ஆனால் காங்கிரஸ் இந்த சட்டம் அமலாக்கப்பட்டகாலத்தில் இருந்து திமுக ஆட்சிக்கு வரும் வரை அதிலே எந்த மாற்றத்தையும் கொண்டுவரவே இல்லை. கொண்டு வரும் நோக்கமும் அவர்களுக்கில்லை. ஏன் எனில் அன்றைய காங்கிரஸ் இன்றைய பாஜக. அதனாலே தான் அவர்களுக்கு அதிலே எந்த நாட்டமும் இருக்கவில்லை.

அண்ணா ஆட்சிப் பொறுப்பேற்ற நேரம் தமிழ்நாடு பஞ்சத்தில் சிக்கிக்கிடந்தது. அதனாலே அரசின் வேலைகளெல்லாம் அதைச் சீர்படுத்தி மக்களின் வாழ்வினில் வளம் காணவைக்கும் நோக்கிலேயெ செயல்பட்டது. திடுமென அண்ணா மறைந்தார். வாராது வந்த மாமணி தமிழருக்கு அவர்.

அவருக்கு பின்னர் ஆட்சிப் பொறுப் பேற்ற கலைஞர் அதுவரை அமலில் இருந்த இடப்பங்கீட்டு முறையில் என்ன நடந்துள்ளது? எந்தச் சமூகங்கள் விடுபட்டுள்ளன? எந்தச் சமூகம் பலன் பெற்றுள்ளது? என்பதைத் தெரிந்துகொள்ள சட்டநாதன் தலைமையிலான கமிசனை அமைக்கிறார்.

அந்த பரிந்துரைகளில் அவர் முக்கியமாக எடுத்துக்கொண்ட சேதி

சில சமூகங்கள் அதிக பலனைப் பெற்றுள்ளதாகவும் அப்படிப் பெற்றுள்ள சமூகத்தின் மக்கட்தொகையை விட அதிக பிரதிநிதித்துவத்தை அவர்கள் எட்டியுள்ளதாகவும் சொன்னதைத்தான்

இதற்கு சட்டநாதன் சொன்ன பரிந்துரை

அப்படி அதிகமாக பலன் பெற்ற சமூகத்தை பட்டியலை விட்டு எடுத்துவிட்டு வேறு சமூகங்களைச் சேர்க்கவேண்டும் என்பதே.

 

அப்படிச் செய்தால் அந்தசமூகத்தில் இருந்துவரும் இளைஞர்கள் இனி எந்த பலன்களையும் பெறமுடியாது என்பதே சமுகவியலாளரான கலைஞரின் பார்வை. அதேநேரம் இதுவரை பிரதிநிதித்துவப் படுத்தபடாத சமூகங்களை சேர்த்தாக வேண்டும் என்பதும் அவர் கவனத்தில் இருந்தது. அப்போது தான் சமூகத்தில் மக்கட்தொகை அடிப்படையில் பெரும் எண்ணிக்கையில் இருந்த கொங்குவேளாள சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்கிறார் கலைஞர்.

இப்படிசெய்ததன்மூலம்

1. மக்கட்தொகையில் சிறு எண்ணிக்கையில் இருந்து அரசுப்பதவிகளில் பெரும் எண்ணிக்கையில் இருப்போரை அந்தப்பட்டியலில் இருந்து எடுத்திடாமல் அவரவர்கள் சமூகத்துக்கு உரியபங்கை அவரவர்கள் பெறும் வகைசெய்தார்.

2..  மக்கட்தொகையில் பெரும் எண்ணிக்கையில் இருந்தும் அதுவரை அரசுபதவிகளில் பிரதிநிதித்துவம் பெறமுடியாத சமூகங்களுக்கும் இடப்பங்கீடு பலன் கிடைக்குமாறு செய்தார்.

இடஒதுக்கீடு சட்டத்தை போரட்டங்களின் மூலம் அமல்படத்திய காலத்திலிருந்து திமுக ஆட்சிக்காலம் வரை இருந்த இடப்பங்கீடு விவரம்

பொதுப்பட்டியல் - 59%, பிற்படுத்தப்பட்டோர் - 25%, தாழ்த்தப்பட்டோர் - 16%

இருக்கின்ற இந்த 25% எத்தனை சாதிகளைச் சேர்த்தாலும் பலன் அதிகம் கிடைக்காது என அறிந்திருந்ததால்

 

பொதுப்பட்டியல் - 51%  பிற்படுத்தப்பட்டோர் - 31%  தாழ்த்தப்பட்டோர் -  18%

என மாற்றிஅமைத்தார்.

உச்சநீதிமன்றம் அதிகபட்ச இடஒதுக்கீடு 50% தாண்டலாகாது எனத் தந்திருந்த தீர்ப்பினை 49% கொண்டுவந்து நிறுத்தினார் தந்தை பெரியாரின் அறிவுறுத்தலின்படி.

திராவிட சிறகுகளுக்கு பேட்டி அளித்த கொமதே கட்சியின் தலைவர் ஈஸ்வரன் அளித்த பேட்டி தலைவரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஓர்சான்று.

அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் இந்த சாதிவாரிப் பிரதிநிதித்துவம் என்பதை மாற்றி பொருளாதார அடிப்படை எனக் கொண்டுவந்த எம்ஜிஆரின் முடிவை எதிர்த்து அரசியல் களத்தை அதிரவைத்தவர் தலைவர் கலைஞர். தி.கவும் நம் தலைவரோடு நின்றது. இதையே அடுத்துவந்த நாடாளுமன்றத் தேர்தலில் பேசுபொருளாக்கி எம்ஜிஆரின் அதிமுகவை மண்ணைக் கவ்வவைத்தார் கலைஞர்அதன் விளைவு எம்ஜிஆர் தன் தவறைத் திருத்திக்கொண்டு இடப்பங்கீடை 69% ஆக உயர்த்தினார்.

எதிர்க்கட்சியில் இருந்தபோதும் இடப்பங்கீட்டில் நடந்த மாற்றத்துக்கும் தலைவர் கலைஞரே காரணமானார்.

எம்ஜிஆர் மறைவுக்குப் பின் நடந்த தேர்தலில் ஆட்சிப் பொறுப்பேற்ற கலைஞர் திரும்பவும் இருக்கின்ற இடஒதுக்கீட்டில் தன்பார்வையைச் செலுத்தினார். எம்ஜிஆரின் ஆட்சிக்காலத்தில் போராட்டம் நடத்தி உயிர்களை இழந்தும் பெறமுடியாத மிகவும் பிற்படுத்தப்ப்பட்டோர்  இடஒதுக்கீட்டை 108 சாதிகளைச்சேர்த்து கொண்டுவந்தார். இந்தசாதிகள் அதுவரை இருந்த பிற்படுத்தப்பட்டோர் தொகுதியில் இருந்தும் உரிய பிரதிநிதித்துவம் பெறாத சாதிகள்.

இதிலே வேதனை என்ன என்றால்? அதிலே சேர்க்கப்பட்ட பலசாதிகளின் பிரதிநிதிகளாக நாட்டில் சுற்றிய பலருக்கு இந்த செயலின் முக்கியத்துவம் புரியாமல் இருந்ததுதான். அதனாலேதான் 96 ல் நடந்த சாதிக் கலவரங்களின் போது ஒருசாதியினர் எங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் எனச் சொன்ன கொடுமையும் அரங்கேறியது.

இந்த மாதிரியான ஆட்களைத் தங்கள் சாதியின் காவலராகப் பார்த்திடும் போக்கை இந்த மக்கள் நிறுத்தவேண்டும். தங்கள் சமூகம் படிக்க வேலைவாங்கிட உதவிடும் இடப்பங்கீடை யார் தமக்கு அளித்தார்களோ அவர்களைப் போற்றிட வேண்டும்.

இதை அடுத்து கிராமப்புறத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கும் குடும்பத்தில் முதல்தலைமுறை பட்டதாரிகளாக வரும் மாணவர்களுக்கும் ஐந்து மதிப்பெண்கள் அவர்களின் cut-off ல் சேர்த்துக்கொள்ளவும் வகைசெய்தார்.

அந்த ஆட்சி கலைக்கப்பட்ட பின் சாணக்கிய மூளைகள் கோர்ட்டை நாடி இவ்விரண்டையும் செயலிலக்கச் செய்துவிட்டனர்

அடுத்தமுறை ஆட்சிக்கு வந்தபோது எப்படி பிற்படுத்தப்பட்ட தொகுப்பில் பலனடையாதசாதிகளைச் சேர்த்து ஓர்ஒதுக்கீடைக் கொடுத்தாரோ அதைப் போலவே பட்டியல் சமூகத்தில் பலன்பெறாத அருந்ததியர்களுக்கு ஓர் உள்ஒதுக்கீட்டினைச் செய்தார். இஸ்லாமியர்களுக்கும் பிற்படுத்தப்பட்ட தொகுப்பினில் ஓர் உள்ஒதுக்கீடை செய்தார்.

ஏதோ இடமாம் பங்கீடாம் என இருந்திடாமல் தொடர்ந்து அந்த இடப்பங்கீடினில் மாற்றங்களைச் செய்து அதிகம் பலனடையாத சமூகமக்களின் வாழ்வினில் ஒளியேற்றி வளம்பெறச் செய்தத மிழினத்தலைவர் கலைஞரை நாம் என்றென்றும் நினைவுகூர்வோம்.

இந்தக்கட்டுரையை என் பழையபதிவு ஒன்றோடு முடித்துக்கொள்கிறேன் .

விருதுநகர் மாவட்டத்தின் முக்கியமான ஊர் இராஜபாளையம். பெயர்தான் நகரம். ஆனால் சாதிவாரியாக தெருக்கள் இருக்கும் நகரம்.

தெய்வமான மாரியம்மனுக்கும் திரௌபதிஅம்மனுக்கும் திருவிழா எடுப்பதில் கூட சாதிவாரியாக விழாக்கள் நடக்கும். அந்த ஊரில் உள்ள ஒரு தெரு வடக்குக் காவல் நிலையத்தில் மிகுந்த பெயர்பெற்றது.

ஊரில் சாதிக் கலவரமேகங்கள் சூழின் காவல்துறை முதலில் நுழையும் தெரு அது. சாதியின் இளந்தாரிகள் எல்லாம் ஊர்ச்சாவடியில் ஒரு BA, BSc, Diploma எனப் படித்துவிட்டு வேலைவெட்டி இல்லாது கார்த்திக்கும், பிரபுவுக்கும் இரசிகர் மன்றம் வைத்துக்கொண்டு யார் சுத்தரத்த சாதிக்காரன் எனச் சண்டை வளர்த்துக் கொண்டிருந்த காலம். அக்னி நட்சத்திரம் படம் வெளியானபோது கட்டி உருண்டு சண்டைபோட்ட இளந்தாரிகள் நிறைந்ததெரு அது.

 

89ல் கலைஞர் ஆட்சி அமைந்த பின் மிகவும்பிற்படுத்தப்பட்டோர் (MBC) இடப்பங்கீடை உருவாக்குகையில் இந்தச் சாதியையும் சேர்க்கின்றார் அப்பங்கீட்டில் Denotified community என ஆங்கிலத்தில் குற்றப்பரம்பரையின் எச்சசொச்சமாக இருந்த பெயரையும் சீர்மரபினர் என மாற்றி அப்பங்கீட்டில் நுழைத்த பின்னாலே தான் அச்சாதியில் இருந்து பெருவாரியான இளைஞர்கள் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் வாசலை மிதிக்கமுடிந்தது.

இத்தனைக்கும் 90 களில் தமிழகத்தின் மொத்த பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 33 34 தான். இந்த இடஒதுக்கீட்டின் விளைவால் முதல் செட் இளைஞர்கள் உள்நுழைந்து பின்னால் வந்த இளைஞர்களுக்கு உதாரணமாய்த் திகழ்ந்தனர்.

இன்றைக்கும் ஊரில் சாதிஉள்ளது. காவல்நிலையம் உள்ளது. ஆனால் அந்தத்தெரு இளந்தாரிகள் பல்வேறு நகர்களில் நல்ல நல்ல வேலைகளில் இருக்கின்றனர்.

திராவிடம் சாதித்தது என்ன என நாக்கூசாமல் கேட்போருக்குப் பதிலாக தமிழகத்தின் ஒவ்வோர் ஊரிலும் இதுபோலல் உள்ள தெருக்களும் அந்தத் தெருக்களில் இருந்து பட்டதாரிகளாகிப் போன இளைஞர்களும் சாட்சிகளாக இருக்கின்றனர்.

நானும்ஓர்சாட்சி.

- உதயமாறன் கண்ணன்

No comments:

Post a Comment