Wednesday 19 August 2020

கலைஞர் குறித்து ஆளுமைகள்

 கலைஞர் குறித்து ஆளுமைகள்


கலைஞரின் காதலன் கண்ணதாசன்

“எனக்குமோர் காதல் உண்டு இதயத்தின் உள்ளே  தூங்கும்

வனக்கிளி  அவளை  இன்னும்  மறக்கவே முடிய வில்லை!

நினைக்கையில் இனிக்கும்  அந்த நெய்வாசக்  குழலி  இன்று

எனக்கொரு கவிதையானாள் இதுதான் நான் கண்ட இன்பம் !”

“கன்னியின் பெயரைக் கேட்டேன் கருணையின் நிதியம் என்றாள்

மன்னிய உறவைக் கேட்டேன் மந்திரி குமாரி என்றாள் !

பன்னி நான்  கேட்டபோது பராசக்தி வடிவமென்றாள் !

சென்னைதான் ஊரா என்றேன் திருவாரூர்  நகரம் என்றாள்”

இப்போது  கொஞ்சம் புரிந்திருக்கும்

அந்த கவிதை  மேலும் தொடர்கிறது இப்படி

“தந்திரம் அறிவாள், மெல்ல சாகசம் புரிவாள், - மின்னும்

அந்திவான்  மின்னல்போல அடிக்கடி சிரிப்பாள்  - நானும்

பந்தயம் போட்டுப் பார்த்துப் பலமுறை தோற்றேன், - என்ன

மந்திரம் போட்டாளோ என் மனதையே சிறையாய் கொண்டாள்”

-       கவியரசு கண்ணதாசன்

 ***

 

தானே எழுத்தாகி, தானே சொல்லாகி, தானே பொருளாகி, தானே யாப்புமாகி, தானே அணியுமாகி, மொழியாய், மொழி வளமாய், கவிதையாய் தன்னை தானே எழுதிக்கொண்ட அழகான கவிதை கலைஞர்!

 

-இளையராஜா

 

 

திராவிட இயக்கத்தின் செயல்பாடுகள் மீது மிகுந்த மதிப்பு கொண்டவன் நான். இந்த மண்ணில் சாதி, மத அடையாளங்களை எல்லாம் கடந்து நாம் அனைவரும் உணர்வால், 'தமிழர்' என்று உணரவைத்த இயக்கம் அது. இதில் கலைஞரின் பங்கு மகத்தானது.

 

-    ஏ.ஆர்.ரஹ்மான்

 

தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும், ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் ஆன்மிகவாதிகள் என்ன கருத்து சொல்கிறார்களோ அதை அப்படியே ஏற்றுக்கொள்பவர் கலைஞர்.

 

-    குன்றக்குடி அடிகளார்

 

கலைஞரைப் பாராட்ட பல விஷயங்கள் உண்டு. நானும் கலைஞரைப் பாராட்டியிருக்கிறேன். "எட்டு முறை தி.மு.க. தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றால், அது ஏதோ அதிர்ஷ்டத்தினால் கிடைத்த உயர்வு அல்ல; அவருடைய திறமைகளின் காரணமாக தான்.

 

சிறந்த பேச்சாற்றல், ஆதாரபூர்வமான புள்ளி விவரங்களிலிருந்து, அடுக்குமொழியில் அள்ளி வீசப்படுகிற அரசியல் வாதங்கள் வரை, கூர்மையான கிண்டலும், நயமான நகைச்சுவையும் உட்பட, பல சுவைகள் அவருடைய பேச்சில் கொட்டிக்கிடக்கும். இதற்கெல்லாம் ஏற்ற ஒரு குரலையும் இறைவன் அவருக்குத் தந்திருக்கிறான். கம்பீரம், எகத்தாளம், கண்டிப்பு, கேலி, கிண்டல், தெளிவு என்று பலவகைப்பட்ட அம்சங்களைக் கேட்போரிடம் கொண்டுசெல்லக்கூடிய குரல் அது. இத்துடன் அபார ஞாபக சக்தியும் சேர்ந்திருப்பதால், அவருடைய பேச்சு ஒரு ஆயுதமாகவே திகழ்கிறது.

 

அவருடைய உழைப்பைப் பற்றியோ, கேட்கவே வேண்டாம். 'ஒரு மனிதனால், தொடர்ந்து, இத்தனை ஆண்டு காலம் இவ்வாறு உழைக்க முடியுமா? என்ற மலைப்பை ஏற்படுத்துகிற உழைப்பு. இவருடைய உழைப்பின் முன்னால், மற்ற பலரின் உழைப்பு, வெறும் பொழுது போக்கே. உழைப்பு பொதுவாக எல்லோருக்கும் ஒரு கடமை; கலைஞருக்கோ அது தான் உயிர் மூச்சு. 

 

இப்படி ஒரு உழைப்பு இருந்ததால் தான், சுமார் பதின் மூன்று ஆண்டு காலம் தொடர்ந்து பல தோல்விகளைச் சந்திக்க நேர்ந்த போதும், தன்னுடைய உழைப்பையே நம்பி, இவரால் அரசியல் நடத்த முடிந்தது. வேறு ஒருவரால் அந்த நிலையில் ஒரு கட்சியைக் கட்டிக் காப்பாற்றி இருக்க முடியுமா என்பது சந்தேகமே. இரண்டுமுறை டிஸ்மிஸ் ஆகியும் கூட, மீண்டும் ஒரு கட்டத்தில் தி.மு.க வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததற்கு கலைஞரின் இந்த உழைப்பு தான் காரணம்.

 

- சோ

(கலைஞர் காவியம் - காவியக்கவிஞர் வாலி அவர்களின் புத்தகத்தின் முன்னுரையிலிருந்து)

 

 ***

அவர் முதல் முறையாக முதலமைச்சரானபோது கோகலே மண்டபத்தில் அவருக்கு ஒரு பாராட்டுவிழா நடந்து. தந்தை பெரியாரும் அந்த விழாவிற்கு வந்திருந்தார். விடுதலை பத்திரிக்கையில் தன்னிடத்தில் வேலை செய்தவர்தான் கருணாநிதி என்று கருதாமல் அவர் முதலமைச்சர் என்பதற்காக விழா மேடையில் கலைஞர் முதலில் உட்காரட்டும் என்று நினைத்து அந்த தள்ளாத வயதிலும் பெரியார் நின்று கொண்டிருக்க கலைஞரோ பெரியார் முதலில் அமரட்டும் என்ற எண்ணத்தில் அவரும் நின்று கொண்டிருக்க, இப்படியே மூன்று நிமிடங்களாயின.

 

 கடைசியில் கலைஞரே பெரியாரிடத்தில் சென்று அவரை கைப்பிடித்து இருக்கையில் அமர வைத்துவிட்டு தன் இருப்பிடத்திற்கு வந்தார்.

 

இவரெல்லவோ தலைவர்!

 

- வலம்புரி ஜான்!

***

உலகமே உங்களை கலைஞரே! என்று அழைத்தாலும்
உணர்வுப்பூர்வமாக உங்களை
அண்ணா என்று வாஞ்சையோடு அழைத்து
உங்களுடன் பழகிய அந்த நாட்களை
எண்ணி வியக்கிறேன், விம்முகிறேன்.
தள்ளாத வயதிலும் ஓய்வுக்கே ஓய்வு!
என்பதன் அர்த்தத்தை 'உழைப்பு'
என்று மாற்றிக்காட்டிய ஒப்பற்ற தலைவரே!

அந்தி சாயும்பொழுது ஒரு சூரியன் மறைவது இயற்கை.
ஆனால் 07.08.2018 அன்று மாலை 6.10 மணியளவில்
இரு சூரியன் ஒரு சேர மறைந்ததோ!
என்று என்னும் வண்ணம், இவ்வுலகையே இருட்டாக்கியது
போன்ற ஒரு உணர்வை தந்து சென்றவரே!

உங்கள் உடல் இவ்வுலகை விட்டு பிரிந்தாலும்,
உங்கள் சரித்திரம் சகாப்தமாய்
என்றும் எங்களுடனேயே இருக்கும்
உங்களை வணங்குகிறேன்.

உங்களின் நினைவாக என்றென்றும்...

தமிழன் என்று சொல்லடா!
தலை நிமிர்ந்து நில்லடா!

என்ற உங்கள் வாசகத்துடன்.

- இப்படிக்கு உங்கள் விஜி என்னும் விஜயகாந்த்.

 

***

காது கொடுத்து கேள்நீ என்றான்

கருணாநிதி எனுமரிய கழகக் கம்பி!

ஏதுமறியாதத் தமிழர் தூய வாழ்வை

எனக்குப் பின் சீர்படுத்தும் மறவன் நீதான்!

 

- 'தம்பி கேள்' எனும் தலைப்பில் பேரறிஞர் அண்ணா எழுதிய கவிதை 

***

கையெழுத்துப் பிரதியில் தொடங்கி, கல்வெட்டுப் பிரதியாக வாழ்க்கையைச் செதுக்கிக் கொண்டவர் கலைஞர். தமிழுக்காக இவர் தலை கொடுத்த தண்டவாளத்தின் மேல்தான் திராவிட இரயில்

ஓடிக்கொண்டிருக்கிறது.

 

- எழுத்தாளர் பிரபஞ்சன்

 

சமத்துவபுரத்தில் ஒவ்வொரு செங்கலும்

உன் பெயர் சொல்லும் - வள்ளுவன் கூட

அறம் பொருள் இன்பம் என்று மூன்று தந்தார்

ஒழியவில்லை ஜாதி - நீயோ அறம் பொருள்

இன்பத்தோடு வீடு தந்தாய் ஒழிகிறது ஜாதி

 

நீ ஒரு குறிஞ்சிப்பூ! பன்னிரெண்டாண்டுகளுக்கு

ஒரு முறையல்ல - ஒரு நூற்றாண்டுக்கு ஒரு

முறை பூக்கும் பூ

 

- கவியரசு வைரமுத்து முரசொலி, பொங்கல் மலர், 1999

No comments:

Post a Comment