Wednesday 19 August 2020

இந்திய வரலாறு தெற்கில் தொடங்க வேண்டும் - கலைஞர் கருணாநிதி (கலைஞர் கட்டுரைகள்)

 கலைஞர் கட்டுரைகள் 

இந்திய வரலாறு தெற்கில் தொடங்க வேண்டும் - கலைஞர் கருணாநிதி

 

ஆரியருக்கு முற்பட்டது உண்மை வரலாறு

 

பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள் யாத்துத் தந்த ஒரு கருத்து; வரலாறு இந்தியாவிலே எப்படி எழுதப்பட வேண்டும் என்பது பற்றியது. அவர் குறிப்பிடும்போது,

 

"... இந்தியா - விந்தியத்திற்குத் தெற்கே இருக்கும் இந்தியா தீபகற்ப இந்தியா அதுதான் இன்னும் தொன்மையான இந்தியாவாக இருந்து வருகிறது. இங்குதான் பெரும்பான்மையான மக்கள் இன்னும் ஆரியருக்கு முற்பட்ட மரபுகளையும் ஆரியருக்கு முற்பட்ட மொழிகளையும் சமுதாய அமைப்புகளையும் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, இந்தியாவின் வரலாற்றை அறிவியல் முறைப்படி ஆராய விரும்பும் வரலாற்று ஆசிரியர்கள் தங்களது ஆய்வினைக் கிருஷ்ணா நதிப் பள்ளத்தாக்கிலிருந்தோ அல்லது வைகை நதித் தீரத்திலிருந்தோ தொடங்க வேண்டும். நெடுங்காலமாக இருந்து வரும் சம்பிரதாயத்தையொட்டி கங்கை நதிதீர்க்கத்திலிருந்து இந்திய வரலாற்றைத் தொடங்கக்கூடாது" என்று சொல்லியிருக்கிறார்.

 

இந்தக்கருத்தை ஏற்றுக்கொண்டு, வரலாற்று ஆசிரியர் வின்சென்ட் ஸ்மித் இந்திய வரலாறு எழுதும் போது அவர் தன்னுடைய வேதனையை வெளிப்படுத்துகின்றார். அதில் அவர்

 

"சுந்தரம்பிள்ளை அவர்களுடைய கருத்து செழுமையான கருத்து என்றாலும், அந்தக் கருத்தை செயற்படுத்துகின்ற காலம் இன்னும் கனியவில்லை. அப்படி அந்தக்காலம் கனியாத காரணத்தினால் ஏற்கெனவே இருக்கிற சம்பிரதாயத்தையொட்டியே நான் இந்திய வரலாறை எழுதத் தொடங்குகிறேன்." என்று வின்சென்ட் ஸ்மித் குறிப்பிட்டுவிட்டு,

 

"இந்திய நாட்டின் ஆதி வரலாறைப் பெரிய அளவில் எழுதும் இலட்சியம் நிறைவேற வேண்டுமென்றால் சுந்தரம்பிள்ளையின் கருத்தை ஏற்றுக்கொண்டு, வரலாற்று ஆராய்ச்சியைத் தெற்கிலிருந்து தொடங்கவேண்டுமென்று குறிப்பிடுகிறார்."

 

இந்திய வரலாறு தெற்கில் தொடங்க வேண்டும்

 

ஏன் இந்திய வரலாறு தெற்கிலிருந்து தொடங்கப்பட வேண்டுமென்றால் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா என்று சொல்லப்படுகின்ற பகுதி தமிழ் நிலமாகத்தான் இருந்திருக்கிறது. வளம்பெற்ற தமிழ் இனம் ஒளிவிட்டுக் கொண்டிருந்த காலத்தில் சிந்து சமவெளியோ, கங்கைச் சமவெளியோ கிடையாது. ஏன் இமையமலைகூடச் சிறுசிறு மண் திட்டுக்களாகக் கரடு முரடான பாறைகளாகக் கடலுக்கு அடியில் இருந்தது. அவை எல்லாம் கடல் வற்றி எழுந்து நிமிர்ந்து நின்று எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆயிற்று. அதற்கு முன்பு இருந்தது நம்முடைய தமிழ் நிலம்.

 

எனவே தான் இந்தியாவின் வரலாறு எழுதப்பட வேண்டுமேயானால் கங்கையாற்றுத் தீரத்திலிருந்து அந்த வரலாற்றை தொடங்காமல் காவேரி நதி தீரத்திலிருந்து தொடங்க வேண்டுமென்றும் சுந்தரம்பிள்ளை அவர்கள் குறிப்பிட்டது எவ்வளவு பொருத்தமுடையது என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ளலாம்.

 

இதைத்தான் பேரறிஞர் அண்ணா அவர்கள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் "ஆற்றோரம்" என்ற தலைப்பில் உரையாற்றிய போது அழகாக 'இந்திய வரலாறை காவிரியிலிருந்து தொடங்கப்படவேண்டும்; கங்கையிலிருந்து தொடங்கப்படக்கூடாது' என்று அழுத்தந் திருத்தமாகக் குறிப்பிட்டார்.

 

 

புதிய வரலாற்றை உருவாக்க வேண்டும்

 

காலம் கனியவில்லை, ஆகவே நான் இந்திய வரலாற்றைப் பழைய சம்பிரதாயத்தையொட்டியே தீட்டுகிறேன் என்று வின்சென்ட் ஸ்மித் அன்று தொடங்கினார் என்றாலும் அதே ரீதியில் வரலாறு எழுதப் புகுகின்ற அத்தனை பேரும் காலம் கனியவில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தால் நாம் எண்ணுகின்ற - எதிர்பார்க்கின்ற வரலாறு எங்கேயிருந்து தொடங்கப்படவவேண்டுமென்று கருதுகிறோமோ, அந்த எண்ணம் நிச்சயமாக ஈடேற முடியாமல் போய்விடும்.

 

எனவே காலத்தை நாம்தான் உருவாக்க வேண்டும்; காலம் வரும், காலம் வரும் என்று நாம் காலத்திற்காகத் காத்துக்கொண்டிருக்கக்கூடாது? காலங்கள் எப்படி உருவாகின்றன? நம்மால் தான் உருவாக்கப்பட்டிருக்கின்றன. எனவே, அந்தக் காலத்தை நாம் உருவாக்க வேண்டும். அப்படிப்பட்ட காலத்தை உருவாக்கும் வரலாற்று ஆசிரியர்கள் பச்சையப்பன் கல்லூரியிலிருந்து - இந்த மாணவர்கள் மத்தியிலிருந்து தோன்ற வேண்டும் என்கிற என்னுடைய விருப்பத்தை இந்த வரலாற்றுப்பேரவையில் விழாவிலே தெரிவித்துக்கொள்வது என்னுடைய கடமையென்று கருதுகிறேன்.

 

அறிஞர் அண்ணா அவர்கள் இந்துக்கல்லூரியில் படித்த காலத்தில் அண்ணாவிற்கு வரலாற்றுப் பேராசிரியராக இருந்தவர் டி.ஆர். சேஷ அய்யங்கார்.

 

அண்ணா அவர்கள் திராவிட இனஉணர்வு பற்றி எடுத்துச் சொல்லவும், இந்தியாவின் வரலாற்றைப் பற்றிப் புரிந்துக்கொள்ளவும், அந்த வரலாற்றின் அடிப்படையில் ஒரு பேரியக்கத்தை உருவாக்கி நடத்திடவும், அந்த வரலாற்றின் அடிப்படையில் இலக்கியங்களைச் சமைக்கவும் ஆற்றலைப் பெற்றிருந்தார்.

 

அதற்கு ஒரு பெரிய அணிவகுப்பை அமைக்கக்கூடிய திறமையைப் பெற்றிருந்தார் என்றால் அதற்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர் டி.ஆர். சேஷ அய்யங்கார் என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது.

 

டி. ஆர். சேஷ அய்யங்கார் தாம்"திராவிடியன் இண்டியா" என்கிற ஒரு வரலாற்று நூலை எழுதியவர், அந்த வரலாற்று நூலின் பிரதிகள் இப்போது கிடைப்பது அரிதாகிவிட்டது. எனவே நான் பச்சையப்பன் கல்லூரி முதல்வரை கேட்டுக்கொள்வேன். உரிய நேரத்தில், உரியவர்களிடத்தில் இதுபற்றி நீங்கள் எடுத்துச்சொல்லி, அந்த வரலாற்று நூலை மீண்டும் பதிப்பிக்க, முயற்சி எடுக்கவேண்டும்.

 

கோயில் வரலாற்றில் காட்டுகிற சிரத்தையைவிடத் தமிழ்நாடு வரலாற்றை அதுவும் அண்ணாவிற்கு ஆசிரியராக இருந்த சேஷ அய்யங்கார் எழுதிய அந்த 'திராவிடயன் இண்டியா' என்கிற வரலாற்று நூலை நீங்கள் மீண்டும் புதிப்பித்து, மாணவர் சமுதாயத்திற்கும் மக்களுக்கும் வழங்குவீர்களேயானால், பச்சையப்பன் கல்லூரியின் பல்வேறு சாதனைகளில் அதுவும் பெரும் சாதனையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அதைச் செய்ய வேண்டுமென்று உங்களை எல்லாம் நான் கேட்டுக்கொள்கிறேன்.

 

திராவிடியன் இண்டியா புத்தகத்தை வாசிக்க:

https://archive.org/details/in.ernet.dli.2015.277165

 

வரலாற்றுக்கு மெய்யான வரலாறு வேண்டும்

 

பன்மொழிப்புலவர் அப்பாதுரையார் ஒருமுறை அழகாகக் குறிப்பிட்டதைப்போல வரலாற்றுக்கு ஒரு வரலாறு உண்டு. வரலாறு எப்படி எழுகிறது? வரலாறு எப்படி உருவாகிறது? வரலாறுகள் தொடக்க காலத்தில் கதைகளாக, புராணங்களாக, இதிகாசங்களாக உருவாகின; அதற்கடுத்து மன்னனின் புகளைப் பாடக்கூடியதாக அவை உருவாகியின; ஆனால், உண்மையான வரலாறு ஒரு நாட்டினுடைய வளர்ச்சி, அந்த நாட்டினுடைய பண்பாட்டில் ஏற்படுகிற தளர்ச்சிகள் - வளர்ச்சிகள் இடையே ஏற்படுகிற தொய்வு, அதற்குப்பிறகு ஏற்படுகிற சமுதாயத்தின் வரலாறு எப்படி வளைந்தும் நெளிந்தும் நிமிர்ந்தும் நடைபோடுகிறது என்பதைக் காட்டுகின்ற வகையில் வரலாற்றைத் தீட்டுவது தான் மூன்றாவது கட்டமாகும்.

 

முதல்கட்டம் கதைகளாக இருக்கின்ற கட்டம்; அடுத்த கட்டம் மன்னர்களுடைய புகழைப் பாடுகின்ற பெருமையை எடுத்துச் சொல்கின்ற கட்டமாக ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியைப் பற்றி, வாழ்க்கை நெறியைப்பற்றி, அந்தச் சமுதாயத்தின் முன்னேற்றத்தைப்பற்றி, அந்த நாட்டிலே எழுகின்ற, காணுகின்ற பண்பாடுகள் பக்கத்தில் உள்ள நாடுகளை எந்த அளவிற்குப் பாதிக்கின்றன என்பதை பற்றிய அந்த வரலாறுகள் உருவாக வேண்டும். அந்த முயற்சியில் நாம் ஈடுபட்டாக வேண்டும். நாம் எழுதுகின்ற வரலாறுகள், உருவாக்கும் வரலாறுகள், இன்றைக்கு மாத்திரமல்லாமல், எதிர்காலத்தில் நாட்டிற்குப் பயன்படுகிற வரலாறுகளாக அமைந்திட வேண்டும். அப்படி அமையாமல் புராண இதிகாசங்களை மாத்திரம் நாம் வரலாறுகளாகக் கொண்டு எதிர்காலத்தில் மறுமலர்ச்சியுடைய ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியுமா என்றால் முடியாது.

 

அலெக்சாண்டர்

 

"இந்தியாவின் சரித்திர புருஷன் யார்" என்றால் வரலாற்று ஆசிரியர்கள் அலெக்சாண்டர் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்து தன் தந்தை பிலிப்ஸ் இறந்த பிறகு அவர் எங்கெங்கே படையெடுக்க வேண்டுமென்று கருத்தியிருந்தாரோ, அங்கேயெல்லாம் படையெடுத்துச் சென்றான் என்றும், இந்தியாவில் நுழைந்து ஜீலம் நதிக்கரையில் வெற்றிவாகை சூடி வந்தான் என்றும் பின்னர் ஜீலம் நதிக்கரையில் பேரரசு மன்னனுடன் பொருது, அந்தப்போராட்டத்தில் பேரரசைத் தோற்கடித்தான்.

 

இதற்கு மேல் எங்களால் போரிட முடியாது என்று அவனுடைய வீரர்கள் சொல்லிவிட்ட பிறகு ஏறத்தாழ இருபத்தைந்து வயதைக்கொண்ட அந்த வீர வாலிபன், அதனை வெற்றிகளுக்கும் பிறகு ஊர் திரும்புகையில் வழியில் காய்ச்சல் ஏற்பட்டு மறைந்தான் என்பது வரலாறு. இந்தியாவின் சரித்திர புருஷன் அலெக்சாண்டர் என்று சுட்டிக்காட்டுகின்ற வகையில் அமைந்தது. அதற்கு என்ன கரணம் என்றால் அவன் படை எடுத்து வருகின்ற நேரத்திலேயே அவனோடு வரலாற்று ஆசிரியர்களையும் அழைத்து வந்தான்.

 

வரலாற்று ஆசிரியர்கள் படையெடுப்புகளை பற்றி - எதிரிகளைப்பற்றி எல்லாம் எழுதி இருந்தார்கள் அவை எல்லாம் இன்று பயன்படுகின்றன. "பார், பார் இவன் வரலாற்று ஆசிரியர்களை எல்லாம் கூட அழைத்து போகிறான்" என்று யாரவது அவனுடைய தலைநகரத்தில் கேலி பேசியிருந்தால், அதற்கு அவன் தலை சாய்த்திருந்தால், அலெக்சாண்டர் வரலாறு, அவன் எந்தெந்தப் பகுதியில் படையெடுத்தான்? யாரை வென்றான் என்கின்ற விவரங்கள் எல்லாம்கூடக் கிடைக்காமல் போயிருக்கக்கூடும்.  

 

தமிழ் மன்னர் போரில் புலவர்கள்

 

நம்முடைய மன்னர்களும்‌ சென்றார்கள்‌. அப்படி சென்றவர்கள்‌ அவர்களுக்குப்‌ பின்னால வரலாற்று ஆசிரியர்களை அழைத்துச்‌ செல்லவில்லை; புலவர்‌ பெருமக்களை அழைத்து ‌சென்றார்கள்‌. அவர்கள்‌ எழுதிய இலக்கியங்களதாம்‌ நமக்கு வரலாறுகளாகத்‌ தெரிகின்றன. அவர்கள் வரலாற்று குறிப்புகளை எழுதவில்லை. புலவர்‌ பெருமக்கள்‌ மன்னர்களுடன் செல்கிற நேரத்தில்‌ எந்த மன்னன்‌ ஆட்சியில்‌ இருக்கிறானோ அந்த மன்னனுக்குத்‌ தகுந்தவாறு எழுதினார்கள்‌. எந்த மன்னர்கள் வெற்றி பெறுகிறார்களோ அதற்குத்‌ தகுந்தவாறு எழுதினார்கள்‌.

 

நான்‌ எல்லாப்‌ புலவர்களையும்‌ சொல்லவில்லை. சிலரைத் தான்‌ சொல்கிறேன்‌. அந்த வகையில்‌ எழுதப்பட்ட இலக்கியங்களை வைத்துக்‌ கொண்டுதான்‌ நாம்‌ வரலாற்றுக்‌ குறிப்புகளை எடுக்க

வேண்டியவர்களாக இருக்கிறோம்‌. ஏன்‌ இதைச்‌ சொல்கிறேன் என்றால்‌, இருபது அம்சத்‌ திட்டம்‌ பற்றிக்கூடத்‌ திருக்குறளில் சொல்லப்பட்டிருக்கிறது (சிரிப்பு) என்று சொன்ன புலவர்களை எல்லாம் ‌நான் அறிவேன்‌. அந்தக்‌ காரணத்தால்‌ சொல்கிறேன். இருபது அம்சத்‌ திட்டத்தைப்‌ பாராட்டுவதைப்பற்றி கவலையில்லை, அதற்காகத்‌ திருக்குறளை இழிவுபடுத்த தேவையில்லை என்பதுதான்‌ என்னுடைய கருத்தாகும்‌.

 

மன்னர்கள்‌ வரலாற்று ஆசிரியர்களை அழைத்துச்‌ செல்லாமல் புலவர்களை அழைத்துச் சென்றார்கள்‌. அதில்‌ பல புலவர்கள் நல்ல வரலாற்று குறிப்புகளைத்‌ தந்தார்கள்‌. மன்னர்களைப்‌ பற்றிய வீரம் செறிந்த விழுமிய கருத்துகளைத்தான் தந்தார்கள். போர்முறைப்பற்றி தந்தார்கள். இப்படி மன்னர்களைப்‌ பற்றிப்புகழ்ந்து பாடுவதற்கே தங்களுடைய காலத்தைச் செலவழித்தார். உண்மையான வரலாறுகளைக் குறித்துச் சொல்ல தவறி விட்டார்கள். ஆனாலும் எழுதிவைத்துக் கிடைத்திருக்கின்ற இலக்கியங்களைக் கொண்டு தான் நம்மடைய வரலாற்றுக்கு குறிப்புகளைத் தேட வேண்டியிருக்கிறது.

 

தமிழர் - வரலாறு வடமொழி புராணமாயின

 

"வரலாறானாலும் இலக்கியங்களானாலும் அல்லது வடமொழியில் வருகிற புராண இதிகாசங்களானாலும் அவை எல்லாம் கூட ஒருகாலத்தில் தமிழ்ப் பேரிலக்கியங்களிலிருந்து பறிக்கப்பட்டுப் பிறகு அந்தத் தமிழ்ப் பேரிலக்கியங்கள் அழிக்கப்பட்டன. அதாவது அந்த இலக்கியங்களை வடமொழியாளர்கள் மொழிபெயர்த்துக்கொண்டு தங்களுடைய எண்ணத்திற்குத் தேவையான அளவிற்கு மாற்றிக்கொண்டு, அமைக்கப்பட்ட அவை எல்லாம் புராணங்களாக மாறிவிட்டன"என்று பாதர் ஈராசு அவர்கள் மிகத்திட்டவட்டமாக எடுத்துக்காட்டியிருக்கிறார்கள்.

(கட்டுரை: புதிய வரலாறு படைத்திடுவீர், புத்தகம்: கல்வி நிலையங்களில் கலைஞர், நன்றி: முரசொலி 28.10.1977)

 

இனத்தால் திராவிடர்

 

இந்த கையிலேதான் 1938 - ஆம் ஆண்டு புலி - வில் - கயல் என்று மூன்று சின்னங்களும் பொறித்த தமிழ்க்கொடி ஏந்திக்கொண்டு 'இந்தியை திணிக்கக் கூடாது; கட்டாய இந்தியை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்' என்று திருவாரூர் வீதியில் பள்ளிச் சிறுவனாக நான் பவனி வந்தேன்.ஏறத்தாழ 14 வயது சிறுவனாக இருந்த காலத்திலே, அன்றைக்கு ஏந்திய 'இந்தித் திணிப்பை எதிர்ப்போம்' என்ற அந்தக் கொடி இன்னமும் என்னுடைய கையிலேயிருந்து கீழே போடவில்லை என்பதையும், என்றைக்கும் இந்தக்கொடி தாழாது என்பதையும் தமிழ் வாழ - தமிழ்ச் சமுதாயம் செழிக்க - தமிழ் இலக்கியங்கள் போற்றி பாதுகாக்கப்பட - தமிழர்களுடைய வரலாறு மங்காமல் மறையாமல் என்றும்  நிலைத்து நின்றுக் கருணாநிதி அன்றைக்குத் தூக்கிய அந்தக்கொடி என்றென்றும் தமிழ்நாட்டுப் பெருங்குடி மக்கள் தங்களுடைய கையிலே ஏந்தி அதற்கெனத் தங்களுடைய வாழ்வை அர்ப்பணித்து நாம் மொழியால்  தமிழர்; இனத்தால் திராவிடர் - நாட்டால் இந்தியர் என்கின்ற அந்த உணர்ச்சியோடு, உலகத்தால் மனிதர் என்கின்ற அந்த மனிதாபிமான எண்ணத்தோடு நீங்கள் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

 

நன்றி: முரசொலி 3.6.1980  

 

இருப்பது ஓர் உயிர்

 

அண்ணா அவர்கள் உடல் நலிவுற்று அவர்கள் இனி உயிர் வாழ்வார்களா? என்ற ஐயப்பாட்டிற்குரிய ஒன்றாக ஆகி அந்தக்காலகட்டத்திலே சென்னை இராஜ்யத்தினுடைய பெயர் மாற்றத்தைத் கொண்டாட வேண்டும் என்பதற்காக ஒரு மண்டபத்திலே விழா ஏற்பாடு செய்து அந்த விழாவிற்கு அண்ணா அவர்கள் அழைக்கப்பட்டார். அப்பொழுது மருத்துவர்கள் எல்லாம், இந்த உடல் நிலையோடு நீங்கள் செல்லக்கூடாது என்று தடுக்க, அப்பொழுது அண்ணா அவர்கள் சொன்னார்கள்; "இருப்பது ஓர் உயிர், அது போகப்போவதும் ஒரு தடவை; ஒரு நல்ல காரியத்திற்காகப் போகட்டுமே" என்று சொல்லிவிட்டு, "என்னுடைய மன்னுக்குத் தமிழ்நாடு என்கின்ற பெயர் வைக்கின்ற நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளாவிட்டால் அந்த உயிர் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? நான் சென்றே தீருவேன்" என நிகழ்ச்சிக்கு வந்தார்கள்.

 

'ஐந்து நிமிட நேரமாவது பேசுவார்களா? அந்த அளவிற்கு உடல் நலிவு ஏற்படாத தளர்வுற்று இருக்கிறார்களே' என்று எண்ணிக் கொண்டிருந்தோம், நீண்ட நேரம் பேசினார்கள்.

 

பேசியபொழுது சொன்னார்கள்: தன்னைப் பற்றித் தன்னிலை விளக்கம் அளித்தார்கள். அண்ணாதுரை என்ன செய்தான் என்று கேட்கிறார்கள். அண்ணாதுரை நீண்ட காலம் ஆள முடியுமா என்றெல்லாம் மிரட்டுகிறார்கள். அண்ணாதுரையினுடைய ஆட்சி எவ்வளவு காலம் என்றெல்லாம் சொல்கிறார்கள்."

 

"நான் அப்படிக் கேட்கின்ற என்னுடைய அன்புற்குரிய மாற்றார்களுக்குச் சொல்லுவேன்" என்று அண்ணா சொன்னார். "நீங்கள் என்னுடைய ஆட்சியை மாற்றிவிடலாம். என்னுடைய ஆட்சியை இல்லாமல் ஆக்கிவிடலாம். அண்ணாதுரை இனி ஆளவில்லை என்கிற நிலையை நீங்கள் உருவாக்கிவிடலாம்." 

 

“ஆனால், ஒன்றை மறந்துவிடாதீர்கள். என்னுடைய ஆட்சிக்காலத்தில் நான் ஏற்படுத்தியிருக்கின்ற "இரு மொழித்திட்டம்", "இந்தித் திணிப்புக்கு இங்கு இனி இடமில்லை" என்ற அந்தத்திட்டம், சென்னை இராஜ்யத்திற்குத் "தமிழ்நாடு" என்று பெயர் வைத்திருக்கிறேனே - அந்தக்கொள்கை வெற்றி, சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டப்படி செல்லுபடியாக்க முடியும்" என்று ஆக்கிக்காட்டியிருக்கிறேனே - ஆகிய இந்தத் தீர்மானங்களை எல்லாம் நீங்கள் நிச்சயமாக மாற்ற முடியாது."

 

"நான் இல்லாவிட்டாலும்கூட, என்னுடைய ஆட்சியே இல்லாவிட்டாலும்கூட, என்னுடைய கட்சியினுடைய ஆட்சியே இல்லாவிட்டாலும் கூட, இருமொழித்திட்டத்தையோ - தமிழ்நாடு என்று வைக்கப்பட்ட பெயரையோ அல்லது சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற நிலையையோ யாராலும் மாற்றமுடியாது. அதை மாற்றிவிட்டுத் தமிழ்நாட்டில் எவரும் ஆட்சி செலுத்த முடியாது" என்று அண்ணா அவர்கள் சொன்னார்கள்.

 

சொல்லிவிட்டு இன்னொன்றையும் குறிப்பிட்டார்கள், "அந்த நிலை இருக்கிற வரையில் அண்ணாதுரை வாழ்ந்துக்கொண்டே இருப்பான்" என்று குறிப்பிட்டார்கள்.

 

அவருடைய பெயர் இருக்கும் என்று அண்ணா அவர்கள் அறுதியிட்டுச் சொன்னார்கள். அந்த நிலைதான் இன்றைக்கும்.

 

(முரசொலி, 15.10.1980)

 

பெரியாரிடம் கற்றவன், அண்ணாவிடம் பெற்றவன்

 

இந்த மண்ணில் நான் பல ஆண்டுகாலம் உலவி இருக்கின்றேன். தந்தை பெரியார் அவர்களுடைய பயிற்சிப்பள்ளியில் - அவருடைய அலுவலகத்திலே பணியாற்றுகின்ற வாய்ப்பைப் பெற்றேன். ஏறத்தாழ இரண்டாண்டுக்குக் காலம் அவரோடு குடியரசு அலுவலகத்தில், அவருடைய மாலிகாளையில் அவருக்கு அருகில் அமர்ந்து உண்ணுகின்ற வாய்ப்பைப் பெற்றேன். அவர் தருகின்ற ஊதியத்தைப் பெற்றேன். தந்தை பெரியாரோடு அவர் நடத்திய குடியரசு பத்திரிக்கையின் துணையாசிரியன் என்கின்ற பொறுப்பைப் பெற்று - பயின்றவன் - பகுத்தறிவு பெற்றவன் - என்னுடைய நண்பர்கள் எல்லாம் அடிக்கடி சொல்லுவது போலத் துணிவை அவரிடத்திலே இருந்து கற்றவன். கனிவை காஞ்சிபுரத்திலே இருந்து பெற்றவன்.

 

அப்படிப்பட்ட பெரும் தலைவர் - உண்மையிலேயே புரட்சி செய்த தலைவர் சமுதாயத்திலே - அரசியலிலே - பெரும் புரட்சியை உருவாக்கிய தலைவர் - அந்தத் தலைவருடைய காலடி பட்ட மண்; அந்தத் தலைவருடைய குரல் ஒலித்த மண்; அந்தத்தலைவர் பிறந்த மண். அந்த மண்ணிலே நின்றுகொண்டு நான் உங்களுக்கு சொல்லுகின்ற செய்தி சமுதாயத்திலே நாம் எந்த அளவுக்குத் தாழ்ந்து கிடைக்கிறோம் என்பதை எண்ணிப்பாருங்கள்.

 

இதுதான், இந்த மாணவர் பேரவையினுடைய திறப்பு விழாவில் உங்களுக்கு நான் தருகின்ற மிக முக்கியமான செய்தியாக இருக்க முடியும்.

 

தாழ்ந்து, தாழ்த்தும் தாழ்ந்து போய்விட்ட ஒரு சமுதாயத்தைத் தலை நிமிர்த்துகின்ற பெரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்தாம் தந்தை பெரியார் அவர்கள் ஆவார்கள்.

 

பொருளாதாரம் என்பது பொன்மயமான ஒரு மாளிகையாகக் கூட இருக்கலாம்.

 

அரசியல் என்பது, அந்தப் பொன் மாளிகையின் மீது அமைக்கப்பட்ட வைரம் பதித்த கலசங்களாகக்கூட இருக்கலாம்.

 

ஆனால், பொருளாதாரம் என்கின்ற பொன் மாளிகைக்கு அதன் மீது அழகு ஒளியைச் சிந்திக் கொண்டிருக்கின்ற வைரக் கலசங்களுக்குப் பாதுகாப்பும் வலிவும் அளிக்க வேண்டுமேயானால் சமுதாயத் சீர்திருத்தம் என்கின்ற அடித்தளம் இருந்தால்தான் பொருளாதாரம் - அரசியல் என்கின்ற இரண்டும் நிலைக்க முடியும். இதைத்தான் பெரியார் அவர்கள் அழுத்தந் திருத்தமாக எடுத்துச் சொன்னார்கள்.

 

(முரசொலி, 6-11-1980)

 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

 

நான் உங்களுக்குச் சொல்ல வேண்டுமேயானால் இன்றைக்கு நான் பேசுகிற தலைப்புக்கூட 'பிறப்பொக்கும்' என்ற அந்தத்தலைப்பில் தான் நான் உங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். இதேபோலப் - பலர் - பல்வேறு தலைப்புகளில் பேசியிருக்கக்கூடும். நான் பேசுகிற தலைப்பு 'பிறப்பொக்கும்' என்பதாகும். 'பிறப்பொக்கும்' என்கிற இந்த ஒரு சொல்லில் ஆரம்பிக்கிற குறள் - வள்ளுவர் பெருமானால் அவர் வாழ்ந்த கால ஓட்டத்தில் - எவ்வளவு மனத்துயரத்தோடு வெளியிடப்பட்ட கருத்து என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

 

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.'

 

என்றார் வள்ளுவர்.

 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றார். பிறப்பால் எல்லா உயிர்களும் ஒன்றுதான். அதிலே உயர்வு தாழ்வே கிடையாது என்று சொல்லுகிறார்.

 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வள்ளுவர் இப்படிப்பட்ட ஒரு கருத்தைச் சொல்ல வேண்டிய அவசியத்திற்கு ஆளாகியிருக்கிறார். அப்போதே பல்வேறு சாதிகள் துளிர்விட்டு இருந்தன என்பதும், பெயரால் உயர்வு, தாழ்வு உணர்வுகள் படர்ந்து இருந்தன, அந்தப் படர்ந்த கொடியின் வேரை அறுத்திட 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று எடுத்துச் சொல்லியிருக்கிறார் என்று நாம் எண்ணிப் பார்க்க வேண்டிய பேருண்மையாகும். 

 

இடஒதுக்கீடு நியாயம்

 

சாதி ஒழிய வேண்டுமென்று சொல்லுகின்ற அதே நேரத்தில் - நானும் சரி அல்லது தமிழகத்தில் இருக்கின்ற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுடைய நன்மைக்காகப் பாடுபடுகின்ற, போராடுகின்ற ஓர் அணியினரும் சரி - இடஒதுக்கீடு வேண்டும் என்று கூறுகிறோம்.

 

இன்று இந்தியாவில் குஜராத்தி மாநிலத்தில் இடஒதுக்கீடு பிரச்சனையின் அடிப்படையில் நடைபெறுகின்ற அமளிகளை நீங்கள் ஏடுகளில் பாக்கிறீர்கள். குஜராத்தி மாநிலத்தில் இருக்கின்ற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுக்கு கல்லூரிகளில் - வேலைவாய்ப்புகளில் - தங்களுடைய எண்ணிக்கைக்கு ஏற்றவாறு - சாதி அடிப்படையில், சமுதாய அடிபப்டையில் தங்களுக்கு இட ஒதுக்கீடு தேவை என்று போராடுகிறார்கள்.

 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இடஒதுக்கீட்டிற்க்காக ஆரம்ப காலத்தில் போராடிய கட்சி நீதிக்கட்சி; தென்னிந்திய நல உரிமைச்சங்கம்; திராவிடர் கழகம்; திராவிட முன்னேற்ற கழகம்; இன்றளவும் போராடிக்கொண்டிருக்கின்ற திராவிடர் இயக்கம்; இதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

 

குசராத்திலே இன்றைக்கு அந்தப் பிரச்சனை எழுந்திருக்கிறது. நாடாளுமன்றம் வரையில் அந்தப் பிரச்சனை எடுத்துச்செல்லப்பட்டு, நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிக்காரர்களும் - கட்சி மாறுபாடு இல்லாமல் இட  ஒதுக்கீடு இருந்தாக வேண்டும் என்பதை ஒத்துக்கொண்டிருக்கிறார்கள்.

 

திருமதி. இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் மிக ஆழமாகத் - தெளிவாக - திட்டவட்டமாக - "எப்படி இந்தி பேசாத மக்கள் விரும்புகிறவரை ஆங்கிலம் நீடிக்கும் என்று என்னுடைய தந்தையார் நேரு அவர்கள் உறுதி அளித்திருந்தார்களோ - அதேபோல் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் விரும்புகிற இடஒதுக்கீடு முறை நீடிக்கும் "என்ற உறுதியை அளித்திருக்கிறார்கள்.

 

"இடஒதுக்கீடும் இருந்து - அதே நேரத்தில் சாதி ஒழியும் என்று கனவு காண்கிறீர்கள், அது நியாயமா?" என்று சிலர் கேட்கிறார்கள். மேலுழுந்தவாரியாக இந்தக் கேள்வியைப்பார்க்கும் போது இந்தக்கேள்வியை பார்க்கும்போது இந்தக்கேள்வியில் பொருத்தம் இருப்பதைப்போலவும் நியாயம் தட்டுப்படுவதை போலவும் தோன்றும். ஆனால், உண்மை அதுவல்ல.

 

இடஒதுக்கீடு கூடாது என்று இன்றைக்கு வாதாடுகிறார்களே, நான் அவர்களை பார்த்துக்கேட்கின்ற கேள்வி எல்லாம் - கல்லூரிகளிலே - மருத்துவக்கல்லூரியிலே, பொறியியல் கல்லூரியிலே சேருவதற்காகவும் - அரசாங்க வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்காகவும் - தகுதி, திறமை வேண்டும் என்று வாதிடுகின்ற உயர்த்த குலத்துப் பெரியவர்களை நான் கேட்கின்றேன்.

 

உச்சநீதிமன்றத்துக்குப் போன சனாதனிகள்  

 

பொறியியல் கல்லூரிக்குத் தகுதி திறமை வேண்டும் என்கிறீர்கள்; அதைப்போலவே மருத்துவக் கல்லூரிக்குத் தனித்தகுதி, திறமை வேண்டும் என்கிறீர்கள். சரி, அப்படியானால் ஓர் ஆலயத்தில் இருக்கின்ற ஆண்டவனைப் பூசை செய்கிற - அருச்சனை செய்கிறவருக்கு தகுதி திறமை வேண்டாமா? அந்தத்தகுதி திறமையை மாத்திரம் அடிப்படையாக வைத்துதான் நாம் எந்தச் சாதியை சேர்ந்தவனாக இருந்தாலும் - அவன் பிராமண குலத்திலே பிறந்திருந்தாலும் அல்லது அவன் செட்டியாராக இருந்தாலும், முதலியராக இருந்தாலும், அல்லது அவன் பிள்ளைமாராக இருந்தாலும் அல்லது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவனாக இருந்தாலும் - ஒரு மாணவன் ஆண்டவனை அருச்சிப்பதற்குரிய மந்திரங்களைக் கற்று அதற்கான தேர்வில் தேறியிருந்தால் - அவன் இந்தச் சாதியைச் சேர்ந்தவனாக இருந்தாலும் தகுதி அடிப்படையில் - அவனுக்கு ஆண்டவனை அருச்சனை செய்கின்ற உரிமை வேண்டும் என்ற சட்டத்தினைத் திமுக அரசு தமிழகத்தில் நிறைவேற்றியது.

 

அந்தச் சட்டத்தின் கதி என்ன? அந்தச் சட்டம் என்னவாயிற்று உச்சநீதி மன்றத்தில் சில சனாதனிகள் வாதாடி, உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு அளித்திருக்கிறது தெரியுமா?

 

அரசியல் சட்டம் இதற்கு இடம் தராது? எனவே, தகுதி திறமை அடிப்படையில் ஆண்டவனை அர்ச்சிப்பது கூடாது. சாதி அடிப்படையில்தான் அது நடைபெற வேண்டும்; உயர்சாதிக் காரர்களுக்குத்தான் ஆண்டவனைப் பூசிப்பதற்குத் தகுதி உண்டு" என்றால் - நான் கேட்கிறேன், அங்கே மாத்திரம் உயர்சாதி வரலாம்; ஆனால், கல்லூரிகளில் - அரசு வேலை வாய்ப்புகளில் வேண்டும் என்று கேட்கிற நேரத்தில், இல்லை, இல்லை, தகுதி திறமை வேண்டுமென்று வாதிட்டால் குழப்பாக இல்லையா? முரண்பாடாக இல்லையா?

 

ஒன்று தகுதி திறமைதான் முதல் இடம் என்றால் - முதலிலே ஆண்டவனைப் பூசிக்கின்ற அந்த உரிமையிலே எல்லாச் சாதிக்காரர்களுக்கும், அது யாராக இருந்தாலும், எந்தச் சாதியாக இருந்தாலும் அவன் ஆதி திராவிட வகுப்பிலே பிறந்திருந்தாலும் - அல்லது உயர்ந்த சாதி என்று சொல்லிக்கொள்ளுகிற பிராமணக் குலத்திலே பிறந்திருந்தாலும் - யாராக இருந்தாலும் - அவன் அருச்சனை செய்வதற்குரிய பரிட்சையினை எழுதித் தேர்வு பெற்று, அந்தத் தகுதியை அடைந்தால் - அவன் ஆண்டவனைத் தொட்டு வணங்கலாம்.

 

ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்யலாம்; ஆண்டவனைப் பூசிக்கலாம் என்ற தகுதியைத் தருவதற்கு இந்த நாட்டிலே உள்ள பெரியவர்கள் முன்வருவார்களே யானால் - நாட்டில் சாதி ஒழியும்; அப்படிச் சாதி ஒழிந்துவிடுமானால் - கலப்புத் திருமணங்கள் பெருகுமேயானால் - உயர்ந்த சாதிக்காரர்கள் தங்களுடைய ஆதிக்கத்தை விட்டுத் தங்களை விடுவித்துக் கொல்வார்களையேயானால் - தாழ்ந்த சாதிக்காரர்கள் என்று கருதப்படுபவர்கள் தங்களுடைய பலவீனத்தை விட்டுவிட்டுப் - பய உணர்ச்சியை விட்டுவிட்டு - அவர்களும் இந்த நாட்டில் வாழும் மனிதர்கள் தாம்; மண்அன்று என்ற அந்த உரிமைக் குரலை எழுப்புவார்களேயானால், அப்படிச் சாதியற்ற சமுதாயம் என்று இந்த நாட்டில் உருவாகின்ற அந்தக்காலகட்டத்தில் தான் இட ஒதுக்கீடு என்பது சமுதாய அடிப்படையிலே தேவையில்லை. வகுப்பு அடிப்படையிலே தேவையில்லை. அப்பொழுது பொருளாதார அடிப்படையில் பார்த்துக்கொள்ளலாம்.

 

நன்றி: முரசொலி, 6.4.1981

 

- கலைஞர் கருணாநிதி

 

 

 

 

"உலகத்தினைத் தெரிந்துக்கொள்ள ஆங்கிலம் என்கிற பெரிய துளை இருக்கிற நேரத்தில், இந்தி என்கிற இந்த சின்ன துளை தேவைதானா? இதைத்தான் கேட்டோம்."

 

-    கலைஞர்

 

No comments:

Post a Comment