Wednesday 19 August 2020

கலைஞர் குறித்து பல்வேறு தமிழ்க்கவிஞர்கள்

  

தமிழ் வாழ்த்தும் கலைஞர்

 

 

 

 

தமிழிடம் முகவரி கேட்டேன் அது மு.க என்றது - அப்துல் ரகுமான்

 

என் கவிதை உனக்கு பூச்சொரியும்:

… ஏனெனில் நீ எனக்கு ஆச்சரியம்.

 

முதுகு வலிக்கிறது உனக்கு..

வலிக்காதா…

 

எத்தனை காலம்தான்

எங்களை சுமக்கிறாய்.

 

ஒரு நாள்

தமிழிடம் முகவரி கேட்டேன் –

அது மே/பா மு.கருணாநிதி என்றது.

 

- அப்துல் ரகுமான்

 


 

தமிழாற்றுப்படை (கலைஞர்) - வைரமுத்து

 

கவிப்பேரரசு எழுதிய தமிழாற்றுப்படையில் கலைஞர் குறித்த கட்டுரையில் இருந்து சில பகுதிகள்.

 

அண்ணா பேரரறிஞர்‌. ஆங்கிலத்திலும்‌ கரைகண்டவர்‌.

ஆங்கிலத்‌ திரைப்படங்களில்‌ தீராக்‌ காதலுடையவர்‌. அவரது

"ஓர்‌ இரவு'க்கு “It happend one Night” என்ற ஆங்கிலப்‌ படம்‌:

உந்து சக்தியாயிருந்திருக்கலாம்‌. 'வேலைக்காரிக்கு “The Count of Monte Cristo” என்ற ஆங்கிலப்படம்‌ சாயல்‌ தந்திருக்கலாம்‌.

 

ஆனால்‌, முறைசார்ந்த பெருங்கல்வியோ ஆங்கிலப்‌

பேரறிவோ இல்லாத கலைஞர்‌, திரைத்தமிழை உலக மொழியின்‌

உயரத்திற்கு அழைத்துச்‌ சென்றது எப்படி என்பதே என்‌

திகைப்புக்கு இன்னும்‌ தீனி போடுகிறது.

 

1950இல்‌ தமது 26ஆம்‌ வயதில்‌ 'மந்திரி குமாரியில்‌' அவர்‌ எழுதிய ஒரு காதல்‌ உரையாடலை மேற்கோள்‌ காட்டுகிறேன்.

 

ஜீவரேகா: நேற்றிரவு நீங்கள்‌ வராததால்‌ என்னால்‌

பெளர்ணமியின்‌ அழகையே ரசிக்க முடியவில்லை

 

வீரமோகன்‌ : எதற்கெடுத்தாலும்‌ நிலவுதான்‌. ஏன்‌?

அமாவாசை அழகாயில்லை?

 

ஜீவரேகா : நீங்கள்‌ இருட்டைக்கூட ரசிப்பீர்களா?

(இங்கே வினைப்படுகிறது கலைஞரின்‌

கவிதைக்‌ குறும்பு)

 

வீரமோகன்‌: ஆம்‌. சித்திரத்தை அழகுபடுத்தும்‌

நிழல்கோடு போல, உன்‌ கண்ணின்‌:

கடைக்கூட்டில்‌, கனி இதழின்‌

ஓரத்தில்‌, கன்னத்துச்‌ சரிவுகளில்‌:

ஒளிந்துகொண்டிருக்கும்‌ இருளை நான்‌

ரசிக்கிறேன்‌ ஜீவா...

 

கவிதைகளைப்‌ புறமுதுகிடச்‌ செய்யும்‌ வசனமிது.

 

கலைஞரின்‌ திட்டமிடாத ஒரு தீர்க்க சிந்தனையை நான்‌

பெரிதும்‌ போற்றுகிறேன்‌. 1950களில்‌ தமிழ்நாட்டின்‌ மக்கள்‌

தொகை 3.1 கோடிதான்‌. அதில்‌ கற்றவர்களின்‌ விகிதாசாரம்

20.9 விழுக்காடுதான்‌...

 

பாரதி மொழியில்‌ பாமரராய்‌ விலங்குகளாய்க்‌ கிடந்தவர்கள்‌.

கலைஞர்‌ மொழியில்‌ பொட்டுப்‌ பூச்சிகளாய்‌, புன்மைத்‌

தேரைகளாய்‌ இருந்த காலம்‌ அது. இந்தக்‌ கூட்டத்திற்கு

புரியுமா என்று கருதாமல்‌, புரிவார்கள்‌ அல்லது புரிந்து

கொள்ளட்டும்‌ என்று கலைஞர்‌ எடுத்த இலக்கிய முடிவு

அற்புதமானது.

 

“யாம்‌ பெற்ற இன்பம்‌ பெறுக இவ்வையகம்‌” என்ற

பெரு நோக்கில்‌ தாம்‌ பெற்ற தமிழறிவை சமூகத்தோடு

பகிர்ந்துகொண்டது அவரது புலமையின்‌ பொதுவுடைமையாகும்‌.

 

“எகிப்தியப்‌ பேரழகி கிளியோபாட்ரா தமிழ்நாட்டு

முத்துக்களைச்‌ சாராயத்தில்‌ போட்டுக்‌ குடித்தாளாம்" - இது

பராசக்தி.

 

“மிருக ஜாதியில்‌ புலி மானைக்‌ கொல்லுகிறது. மனித

ஜாதியில்‌ மான்‌ புலியைக்‌ கொல்லுது” இது மருதநாட்டு இளவரசி

 

“வேலின்‌ கூர்மையைச்‌ சோதித்த விரல்கள்‌: வஞ்சகியின்‌

(விரலை அல்லவா ரசித்துக் கொண்டிருக்கின்றன !" - இது

மனோகரா.

 

“மனச்சாட்சி உறங்கும்போது மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது” - இது பூம்புகார்‌.

 

“அவன்‌ அழகை வர்ணிக்க ஆயிரம்‌ நாவுபடைத்த

ஆதிசேசன்கூட கம்பனிடம்‌ ஒன்றிரண்டு கடன்‌ வாங்க

வேண்டும்‌" - இது புதுமைப்பித்தன்‌..

 

சுதந்திர இந்தியாவில்‌ ஓர்‌ ஊராட்சி ஒன்றியமாய்‌

வடிவமைக்கப்பட்ட தமிழ்நாடு, நிதியிலும்‌ நீதியிலும்‌

புறக்கணிக்கப்பட்டு வந்ததால்‌. *வடக்கு வாழ்கிறது தெற்கு

தேய்கிறது! என்ற முழக்கத்தை அண்ணா முன்வைத்தார்‌.

 

இரண்டாவது ஐந்தாண்டுத்‌ திட்டத்தில்‌ தமிழகத்தில்‌ 19

இலட்சம்‌ பேர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படுவதாய்ப்‌

பேச்சு. ஆனால்‌ சற்றொப்ப 2 இலட்சம்‌ பேர்களுக்கு மட்டுமே.

வாய்ப்புக்‌ கிட்டுமாறு வடிவமைக்கப்பட்டது. காரணம்‌ விதி.

அல்ல நிதி. அன்று, தமிழகம் கேட்டது 394 கோடி. கிட்டியதோ 200 கோடி. அதில் தொழில் ‌ துறைக்கு ஒதுக்கப்பட்டதோ

வெறும்‌ 42 கோடி. தெற்கு தேயுமா தேயாதா?

 

பராசக்தியில் தமிழ்நாட்டு எல்லைக்குள்‌ குணசேகரன்‌

கால்‌ வைத்தவுடன்‌ “ஐயா பிச்சை போடுங்கய்யா” என்பான்‌.

ஒரு பிச்சைக்காரன்‌. “சரிதான்‌ போ! தமிழ்நாட்டின்‌ முதல்‌ குரலே ரொம்ப நல்லாயிருக்கே” என்று வேதனையோடு குணசேகரன்‌ அவனுக்குப்‌ பிச்சையிடுவான்‌.

அந்த பேதங்கள்‌ நீங்க ஆளும்‌ உரிமையை நாமே பெறவேண்டும் என்றுதான்‌ திராவிட நாடு என்ற கருத்துருவம்‌ உயர்த்திப் பிடிக்கப்பட்டது. இதையெல்லாம்‌ உள்வாங்கிக்‌கொண்டுதான்‌ காஞ்சித்‌ தலைவனில்‌ கலைஞர்‌ பாட்டெழுதுகிறார்.

 

"மகிமை கொண்ட மண்ணின் மீது எதிரிகளின் கால்கள்

மலர் பறிப்பதில்லையடா வீரர்களின் கைகள்"

 

பிச்சைக்காரர்களுக்குப்‌ பரிந்தெழுதிய அதே பேனாவில்‌:

பிச்சைக்காரர்‌ மறுவாழ்வுத்‌ திட்டத்துக்குக்‌ கையொப்பமிட்ட

பெருமை கலைஞர்‌ என்ற படைப்பாளிக்கும்‌ போராளிக்கும்‌

கிடைத்த வரலாற்றுப்‌ பெருமையாகும்‌.

 

கல்வியிலும்‌ - பொருளாதாரத்திலும்‌ தமிழர்கள்‌.

தலையெடுப்பதற்கு முன்பு மானமுள்ள சமுதாயமாய்‌

வாழவேண்டும்‌ என்பதுதான்‌ திராவிட இயக்கங்களின்‌.

உயிர்த்‌ துடிப்பாக இருந்தது. வீரம்‌ விவேகத்தைத்‌

துணைக்கழைத்துக்கொள்வதற்கு மானமே பிரதானம்‌ என்ற.

லட்சியத்தின்‌ வல்லோசை கலைஞரின்‌ எழுத்துக்கடையே

எப்போதும்‌ ஊடாடி ஒலிப்பதை, செவி உள்ளவர்கள்‌ கேட்கக்‌கடவர்‌.

 

பெண்‌ கொடுக்க மறுத்ததற்காக மாற்றான்‌ படையெடுத்து,

வருகிறான். அவனை மணந்து கொள்ளுமாறு மருதநாட்டு இளவரசியிடம்‌ மன்னன்‌ கெஞ்சுகிறான்‌. “மகளே எனக்காக நீ இந்தத் தியாகம் கூடவா செய்யக்கூடாது?" உடனே இளவரசி எதிர்வினை புரிகிறான்‌. "தங்களுக்காக உயிரை தியாகம் செய்கிறேன்‌. மானம்‌ தியாகம் செய்யும்‌ பொருளல்ல

தந்தையே”.

 

மொழியின்‌ மானங்காக்க உடலுக்குத்‌ தீமூட்டி உயிரைத்‌ தியாகம் செய்த தமிழர்களை உருவாக்கியதில்‌

இந்த வசனங்களுக்கும்‌ கணிசமான பங்குண்டு என்றே கருதத்‌தோன்றுகிறது.

 

தந்தை பெரியாரைத்‌ தமிழ்நாட்டின்‌ சாக்ரடீஸ்‌ என்று

பாராமல்‌, சாக்ரடீஸை கிரேக்கத்தின்‌ பெரியார்‌ என்று பார்த்தவர்‌ கலைஞர்‌. அதன்‌ பின்னால்‌ ஒரு நுண்ணரசியல்‌ உண்டு.

 

மூதறிஞர்‌ ராஜாஜி சாக்ரடீஸ்‌ குறித்து 'சோக்ரதர்‌' என்ற நூலை எழுதியிருந்தார்‌. அதற்கு எதிர்வினையாகத்தான்‌ சாக்ரடீஸ்‌ நாடகத்தைக்‌ கலைஞர்‌ படைத்தார்‌.

 

“மூதறிஞர்‌ ராஜாஜி சோக்ரதர்‌ என்னும்‌ நூலில்‌ சாக்ரடீசை

சங்கராசாரியார்‌ போன்ற ஆஸ்திகப்‌ பழமாக்கியிருப்பார்.

நானோ அறிவுலக ஜோதியாக இந்தச்‌ சிறு நாடகம்‌ மூலம்

இங்கே சித்தரித்திருக்கறேன்‌” இது கலைஞரின்‌ வாக்குமூலம்!‌

 

நஞ்சருந்தி சாகுமாறு தண்டிக்கப்பட்ட சாக்ரடீஸிடம்‌

கடைசிக்‌ கேள்வி கேட்டிறான்‌ நண்பன்‌ ஒரிட்டோ. 'உன் சவத்தை எப்படி அடக்கம்‌ செய்ய வேண்டும்‌?”

 

சாக்ரடீஸின் உதடுகள் கடைசி வார்த்தைகளை முணுமுணுக்கின்றன:

 

புதைப்பதாயிருந்தால் இந்த நாட்டில் உலவும் புளுகு மூட்டைகளையும் என்னோடு சேர்த்து புதைத்துவிடு.

"எரிப்பதாயிருந்தால் ஏமாற்றுக்காரர்களின் சுவடிகளையும் என்னோடு சேர்த்துச் சுட்டுச் சாம்பலாக்கித் தண்ணீரில் கரைத்துவிடு”

 

அறிவுஜீவிகளின்‌ எல்லாக்‌ கல்லறைகளுக்கும்‌ இந்த

வார்த்தைகளே பொருந்தும்‌.

 

காலமெல்லாம்‌ உயர்த்திப்பிடித்த பகுத்தறிவை தள்ளாடும்‌

வயதிலும்‌ தளரவிடாதவர்‌ கலைஞர்‌.

 

ஊர் அறியாத ஓர்‌ உண்மையைச்‌ சொல்லி இந்தக்‌

கட்டுரையின்‌ கண்‌ சாத்துகிறேன்‌.

 

முதுமையிலும்‌ கலைஞரைப்‌ பேணிவந்த அவரின்‌

அணுக்கத்‌ தொண்டர்‌ நித்யானந்தம்‌ என்னும்‌ நித்யா ஓர்‌ ஆத்திகர்‌. கலைஞர்‌ நலமுற வேண்டுமென்ற நல்லாசையிலும்‌ அவருக்கிருந்த நம்பிக்கையிலும்‌ அழுது தொழுது கலைஞர்‌ நெற்றியில்‌ இருநீறு பூசியிருக்கறார்‌. சற்று நேரத்தில்‌ திரும்பிப்‌ பார்த்தால்‌ 'நெற்றி' இருக்கறது: "நீறு இல்லை. துடைக்கப்பட்ட

திருநீறு கலைஞரின்‌ கரத்தில்‌ இருக்கிறது.

 

பழுத்த முதுமையிலும்‌ நினைவுகள்‌ சற்றே நழுவும்‌ கணங்களிலும்‌ தான்‌ பெரியார்‌ வழிவந்த மானமிகு தொண்டன்‌ என்பதை மறக்காத அந்தக்‌ கலைஞரைத்‌ தமிழ்நாடு மறக்காது:

தலைமுறை மறக்காது.

 

 

வடக்கு வழிபடும் தெற்கு! - காவியக்கவிஞர் வாலி

 

ய்யனே!

ஆருக்கு வரும் - இத்தகு

அன்பு மனம்?

அறிவு மனம்?

அழகு மனம்?

அகல மனம்?

ஆதலால் - உனக்கில்லை

அஸ்தமனம்!

நீ -

மேற்கு இல்லாத கிழக்கு;

வடக்கு வழிபடும் தெற்கு!

 

-    காவியக்கவிஞர் வாலி

 

***

 

ருந்தமிழே!

ஏறுக அரியாசனம்!

 

வாழ்த்திசை - பாடுது

கீழ்த்திசை;

வந்தது

விடிவு;

அய்ந்தாண்டு கால

அமாவாசைக் கான முடிவு;

அரியணை ஏறி

அமர்கின்றது - எமது

அன்னைத் தமிழின்

ஆண் வடிவு!

 

*

 

அரசியல் பண்டிதர்

அளந்தனர் பக்கம் பக்கமாக.

இங்கங்கெனாது - எங்கும்

இலை அலை என்று;

திருப்பிப் போட்டுத்

தீர்ப்புச் சொன்னது தேர்தல் -

இலை அலை என்பதை

அலை இலை என்று!

 

-    

 

இது

இடம்பெயர்ந்த கண்ணகி

இட்ட சாபம்; சிறைப்

பட்ட கோபம்!

 

கோபத்தில்

கோவலன் மனைவி -

அன்று திருகி எறிந்தது முலை;

இன்று திருகி எறிந்தது இலை!

 

*

கலைஞர் கோவே! தொல்

காப்பியப் பூங் காவே!

கதாநாயகன் ஆனது - உன்

கட்சியின் தேர்தல் அறிக்கை!

 

அதற்குக் காரணம் -

அதை வரைந்தது உன் நெறிக்கை;

அந்தத் தாள் -

ஆனது வாள்;

வில்லன்கள்

விலா எலும்புகள் தூள்!

 

*

 

புறங்கண்டாய்

புல்லாட்சி;

நல்க வந்தனை

நல்லாட்சி;

உன்

உயர்வை -

உள்ளது

உள்ளபடி -

ஏற்றப் போற்ற - என்னிடம்

ஏது போதிய சொல்லாட்சி?

 

*

 

தாடியில்லாத பெரியார்;

பொடியில்லாத அண்ணா;

இருவரும் உன் வடிவில்

இருக்கின்றார் ஒண்ணா!

 

எந்தையே!

ஏறுக அரியாசனம்;

உலகமிசை

உண்டோ -

உனது

உன்னதத்தை அறியா சனம்?

 

-  காவியக்கவிஞர் வாலி

(24-05-2006)

 

 

 

சூரியனை சாப்பிட்ட குழந்தை! - கவிஞர் நா. முத்துக்குமார்   

 

ல்லாக் குழந்தைக்கும்

நிலாவைக் காட்டித்தான்

சோறூட்டுவார்கள்!

திருக்குவளையில் மட்டும்

ஒரு குழந்தைக்குச்

சூரியனைக் காட்டிச்

சோறூட்டினார்கள்!

 

அந்தக் குழந்தை

சோறு சாப்பிடவில்லை!

சூரியனையே சாப்பிட்டது!

 

அந்த நெருப்பு

படைப்பானது!

நெருப்பை எப்படிப்

பொட்டலம் கட்ட முடியும்?

 

கலைஞரின் எழுதுகோல்

தலை குனிந்த

போதெல்லாம்

தமிழன் தலை நிமிர்ந்தான்!

 

கி. மு - கி.பி என்பது போல்

தமிழ்த் திரைப்பட வசனங்களையும்

இரண்டாகப் பிரிக்கலாம்.

 

ப. மு - ப.பி!

பராசக்தி முன்பு!

பராசக்தி பின்பு!

 

தென்றலிடம் தாள் வாங்கி,

புயலிடம் பேனா வாங்கி,

எரிமலையை எழுத்தில் வடிக்கும்

செப்படி வித்தை

எப்படி நடந்தது?

 

எல்லோரும்

தமிழை

'அ' னா 'ஆ' வன்னாவிலிருந்து

கற்றுக்கொள்ள ஆரம்பிப்பார்கள்.

 

நாங்கள் 

'ப' னா 'ம' னாவிலிருந்து

கற்றுக்கொள்ள ஆரம்பித்தோம்!

ஆம்!

'பராசக்தி'

'மனோகரா'

வசனங்களில் இருந்து...!

 

-       கவிஞர் நா. முத்துக்குமார்  


எல்லோருக்கும் விபத்து மயிரிழையில் நடக்கும். தமிழனுக்கு மட்டும் நூலிழையில்...எச்சரிக்கை...எச்சரிக்கை! - பாவலர் அறிவுமதி

 

இன்றைய செய்தி நாளைய வரலாறு என்ற தலைவர் நேற்றைய செய்தி இன்றைய வரலாறு என்று மாறியிருக்கும் கண்ணீர் மிகு தருணத்தில் எழுத்தாளர்களாகிய நாங்கள் எங்கள் தமிழை தர வரிசைக்கட்டி அமர்ந்திருக்கிறோம். எனக்கு திராவிட இயக்கம், தி.மு. கழகம் என்ன தந்தது என்பதை சொல்லவேண்டும். நான் வீராணம் ஏரிக்கரையில் வாழைக்கொல்லை என்ற ஊரில் என் அம்மாவை பெற்றவன். வெள்ளிமலையில் இருந்து கச்சிராபாளையம் வழியே இறங்கிவருகிற மணிமுத்தாற்றங்கரையில் என் அப்பாவை பெற்றவன். அங்கேயும் என் உறவுகள் உங்கள் உறவுகள். என் ஊரிலும் சி. கீரனூர் என்கிற அம்மக்கள் உங்கள் மக்கள். எனவே இந்த இடத்தில் என் வரலாற்றை சொல்லுகிற போது அது நம் கழக வரலாறாகவும் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். என் அப்பாவுக்கும் என் அம்மாவுக்கும் நான்கு குழந்தைகள். நான் கடைசி பிள்ளை. அவர்களுக்கு கிடைக்காதது எனக்கு கிடைத்தது. என் பெரியக்காவின் பெயர் ருக்குமணி, என் சின்னக்காவின் பெயர் சீதா. என் அண்ணனின் பெயர் ராமசுவாமி. எனக்கு கிடைத்த பெயர் மதியழகன். என் இரண்டு அக்காக்களுக்கும், என் அண்ணனுக்கும் புராண பெயர்கள். எனக்கு தமிழ் பெயராக கிடைத்த வரலாறு, 1949ல் நான் பிறந்தேன். கழகம் பிறந்தது. எனவே கழகத்தின் வரலாறும் என் வரலாறும் வெவேறானது அல்ல.

 

தாய் மொழி தமிழில், என் தாய்க்கு சாகிற வரை கையெழுத்து போடத்தெரியாது. இங்கே அமர்ந்திருக்கிற பலருக்கு இத்தகைய அம்மாக்களுக்கு பிறந்தவர்களாக இருக்கலாம். நான் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்த போது நான் எழுதிய கடிதங்களை என் அம்மா படிக்க முடியாது. தெருவில் போகிற படித்த பிள்ளைகளை படிக்கச்சொல்லி அந்த தமிழில் மகனின் முகம் பார்த்த அம்மா என் அம்மா.

 

எனவே திராவிட இயக்க வரலாறு என்பது கைநாட்டு பேர்வழிகளை கையெழுத்தாக்கிய வரலாறு என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. இன்னும் எத்தனை மேடைகளில் என்னை நீங்கள் ஏற்றினாலும் எனக்கு தமிழை கொடுத்தது திராவிட இயக்கம், திராவிட இயக்கம் என்பதை அழுத்திச்சொல்வேன். சாதாரணமல்ல, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்த நாவலராக இருந்தாலும், பேராசிரியராக இருந்தாலும், மதியழகனாக இருந்தாலும் இவர்களெல்லாம் நடந்து போய் பல திருமணங்களை நடத்தி வைத்த பட்டதாரிகள். அவர்களுக்கு சற்றும் குறைவில்லாத, அதிகம் படிக்காத, அய்யா கலைஞர் அவர்கள் எல்லோரையும் தாண்டி, தன் வாழ்வின் நீளத்தில், தமிழின் நீளத்தையும், தமிழ் வரலாற்று நீளத்தையும் நமக்கு உழைத்து கொடுத்தவர் கலைஞர் அவர்கள்.

 

ஒரு நிகழ்ச்சி. எனது 1949 ல் தனது கொட்டகையை வள்ளுவர் படிப்பகமாக நடத்தியவர். அன்று ஒவ்வொரு தலைவர்களும் பேச்சாளர்களாக இருந்தார்கள். ஒவ்வொருவரும் பத்திரிக்கை நடத்தினார்கள். எங்கள் வீட்டில் பதினைந்து பத்திரிக்கைகள் இருக்கும். அப்பா படித்துக்கொண்டிருப்பார்.  அந்த வள்ளுவர் பதிப்பகத்தில் இருந்த நூல்கள் தான் என்னை இனஉணர்வு உள்ளவனாக, கவிஞனாக நிறுத்தி இருக்கிறது. 

 

இந்த சூழ்நிலையில் எனது தந்தை வாங்க திரைப்படம் பார்க்க போகலாம் என்று விருத்தாசலத்திற்கு அழைக்கிறார். பத்துகிலோமீட்டர். நானும் என் அண்ணனும் நடந்து செல்கிறோம். தங்கமணி பேலஸ் என்ற திரையரங்கம். மன்னாதி மன்னன் திரைப்படம் என நினைக்கிறேன். எம்.ஜி. ஆர் படம். நாங்கள் சென்ற போது அந்த திரையரங்கில் மின்சாரம் இல்லை. செயற்கை மின்சாரமும் இல்லை. அப்பா, வாங்க வீட்டுக்கு போகலாம் என்கிறார். நானும் அண்ணனும், ராஜேஸ்வரி என்ற திரையரங்கரம் இருக்கிறது. அங்கே படம் பார்க்கலாம் என்கிறோம். என்ன படம் என்றுக் கேட்கிறார்? ஆலயமணி என்று சொல்கிறோம். அந்த படத்திற்கு எல்லாம் கூட்டி செல்ல மாட்டேன் என்கிறார். ஏனப்பா, எங்களுக்கு படம் தானே பார்க்க வேண்டும். அந்த படம் இல்லையென்றால் என்ன, இந்த படத்திற்கு போகலாமே என்கிறோம். இல்லை, இல்லை, இது சிவாஜி நடித்த படம். அதை நான் காட்ட மாட்டேன் என்று சொல்லி, எட்டு கிலோமீட்டர் எங்களுக்கு பட்டாணி வாங்கி தந்து நடத்தி கூட்டி சென்றவர் என்னுடைய அப்பா.

 

இன்னொருமுறை, சில நாட்களுக்கு பிறகு, சேத்தியாத்தோப்பில் படம் பார்க்க அழைத்து சென்றார். அங்கே வாசவி திரையரங்கிற்கு செல்கிறோம். அங்கே பார்த்தால், வாசலில் சிவாஜி படம் ஒட்டப்பட்டு இருக்கிறது. என்னப்பா, 8 மைல் எங்களை சிவாஜி படம் பார்க்கக்கூடாது என்று தானே நடத்தி சென்றீர்கள். இங்கே அவர் படத்தை பார்க்கணும்ன்னு எங்களை அழைத்து வந்து இருக்கிறீர்களே என்று சொன்னபோது, என் தலைவர் கலைஞர் எழுதிய உரையாடல் உள்ள படம் பராசக்தி என்று சொன்னார். திராவிட இயக்கம் என்பது தலைவர்களின் இயக்கம் என்று சொல்லமாட்டேன். அது தொண்டர்களின் இயக்கம் என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.  அவர்கள் கொள்கை மாறாதவர்கள். தமிழ் பற்றில் என்றும் தடம் மாறாதவர்கள். அப்படிப்பட்ட அப்பாவிற்கு பிறந்த பிள்ளை நான்.

 

குமரிமுனையில் வள்ளுவருக்கு சிலை எடுக்கக்கூடிய நேரத்தில், அய்யா அவர்களுக்கு நான் ஒரு மடல் எழுதுகிறேன்.

 

அய்யா உங்கள் பிள்ளை அறிவுமதி பேசுகிறேன்.  ஒரு கற்புக்கெடாத திமுக செயலாளரின் பிள்ளை.

 

1949 ல் என் தந்தை திறந்த அந்த திமுக கொட்டகை வள்ளுவர் படிப்பகமாக இருந்ததால் நான் இன்று உங்கள் தமிழ் விரல்பிடித்து ஒரு கவிஞனாக, ஒரு எழுத்தாளனாக, ஒரு இன உணர்வு மிக்கவனாக இருக்கிறேன். நீங்கள் நாளை கன்னியாகுமரியில் சிலை திறக்கும் நேரத்தில், ஒரு 1330 ஊர்களில் வள்ளுவர் படிப்பகம் திறக்கிறேன் என்று அறிவித்தால், என்னை போல ஆயிரம் அறிவுமதிகளை அந்தந்த ஊரில் நீங்கள் உருவாக்கலாம் என்று மடல் எழுதுகிறேன். ஒரு தொண்டனின் பிள்ளை எழுதிய கடிதத்திற்கு மதிப்பளித்து அவர் செய்தது... 1330 ஊர்களில் அல்ல ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்தில் வள்ளுவர் படிப்பகம் உருவாக்குவேன் என்று அறிவித்தவர்.

 

பொங்கலுக்கு திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் 4 நாட்கள் விடுமுறை அளித்து இருந்தார்கள். அதை நுட்பமாக உணர்ந்தவர்கள் அடுத்த ஆட்சியில் அதில் இரண்டு நாட்களை பிடுங்கிக்கொண்டார்கள். அடுத்து கலைஞர் ஆட்சியை பிடிக்கிறார். நான் இரண்டு நாட்களில் அவருக்கொரு கடிதம் எழுதுகிறேன். அய்யா, உங்கள் ஆட்சியில், பொங்கலை ஒட்டிய தமிழ் நாட்களுக்கு நீங்கள் நான்கு நாள் விடுமுறை அளித்து இருந்தீர்கள். உங்களுக்கு அடுத்து வந்தவர்கள் அதனால் பல ஊர்களில் இருந்து, சேரிகளில் இருந்து, நகரம் சார்ந்து வாழ புறப்பட்ட தமிழர்கள், அந்த நான்கு நாட்களில் தங்கள் பிள்ளைகளை ஊர்களுக்கு அழைத்து போய் இது உன் தாத்தா வீடு, இது நான் நீச்சலிடித்த குளம், இது ஆடு, மாடு என தமிழ் அடையாளங்களை ஊட்டி கொண்டுவருகிற நாட்களாக அந்த நான்கு நாட்கள் பயன்பட்டது. அதை உணர்ந்தவர்கள் இரண்டு நாட்களை பிடிங்கி விட்டார்கள். அதிகாரிகளை கேட்டு அதை நீங்கள் மீண்டும் தந்தால் நன்றாக இருக்கும் என்று எழுதி காலை 8 மணிக்கு சண்முகநாதன் அவர்களிடம் மடல் கொடுக்கப்பட்டது. மாலை 7.30 மணிக்கு அரசு அதிகாரமாக நான்கு நாட்கள் மீண்டும் பொங்கலுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று கலைஞரால் தரப்பட்டது.

 

ஆனால், அடுத்த ஆட்சி மாறியது. ஓரிரு வாரத்தில் மீண்டும் 2 நாட்கள் பிடிங்கப்பட்டது. இதையெல்லாம் இன்றைய தலைவர் புரிந்துக்கொள்ளவேண்டும்.

 

நான் வள்ளுவனுக்கு 1330 ஊர்களில் இடம் கேட்ட போது ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் இடம் கொடுத்தவருக்கு தான் ஆறடி நிலம் கொடுக்க அழுதார்கள். பரவாயில்லை அப்படியாவது அவர்கள் அந்த தலைவனுக்கு அழுது இருக்கிறார்களே, அதற்கு நாம் நன்றி சொல்வோம்.

 

அந்த வெளியீட்டு மலரில் நான் எழுதிய கவிதை...

 

"இரண்டடி கொடுத்தால் தான் திருந்துவாய்

வாங்கிக்கொள் வள்ளுவனிடம்" என்று எழுதினேன்.

 

"எத்தனை முறை உரை ஊற்றி ஊற்றிப்பார்த்தாலும்

புளிக்காத பால், முப்பால்" என்று எழுதினேன்.

 

கலைஞர் வள்ளுவர் மீதும், இளங்கோ மீதும், சங்கத்தமிழ் மீதும் ஆழமான உள்ளார்ந்த அன்பை வைத்திருந்தார். இந்த இடத்தில், தலைவர்களுக்கு நான் சொல்ல எதுவுமில்லை...

 

தொண்டர்களே, இந்த இடத்தில் நாம் தவறக்கூடாது. திமு கழகத்தை, ஸ்டாலின் அவர்களை நாம் முதல்வராக உட்கார வைக்கவேண்டும் என்று கொளத்தூர் மணி என்கிற என் அண்ணனின் கருத்தை உள்வாங்கி சொல்கிறேன். நம்மை கழுகுகள் சூழ்ந்து இருக்கின்ற நேரம்.  

 

தமிழர்கள் நாம், நமது உணர்வுகளை அண்ணாவிடமும், கலைஞரிடமும் பெறுகின்ற வேளையில், இயக்க தோழர்கள், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அந்த இளைஞர்கள் கைபேசியில் காட்டிய வெளிச்சத்தையும் எச்சரிக்கையையும் உணர்ந்து இயக்க செயல்பாடுகளை விழிப்போடு கொண்டு வாருங்கள். இளைஞர்களின் இயக்கமாக திமுக இப்போது மாறி இருக்கிறது. அதற்குரிய தமிழுணர்வும், இனஉணர்வும் மிக்க ஒரு மிக சிறந்த செயல்பாடுகளை ஓடிஓடி உழைக்க வேண்டிய கடமை உங்களிடம் இருக்கிறது.

 

எல்லோருக்கும் விபத்து மயிரிழையில் நடக்கும். தமிழனுக்கு மட்டும் நூழிலையில். எச்சரிக்கை...எச்சரிக்கை!

- பாவலர் அறிவுமதி (கலைஞர் நினைவேந்தலில் பேசியது)  

 

 

நாதஸ்வரம் நினைவிடத்தில் இசைத்துப் பார்த்திருக்கிறீர்களா? - சாந்தி நாராயணன் முத்துராமானுஜம்

 

லைஞர் நினைவிடம், கலைஞரைப் போலவே

பலரின் மனத்தடைகளை உடைத்திருக்கிறது.

 

தங்களை எதோ ஒரு வகையில் தொட்டுவிட்டுப் போன

ஒரு தலைவனுக்காக

தங்கள் எண்ணம் போல் அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். மக்கள்!

 

கடவுளுக்கு பாடுவதற்கென

தமிழர்களிடம் இருந்து திருடப்பட்ட இசையை மீட்டு,

மனிதன் புதைத்த இடத்தில் இசைகிறார் ஒருவர்.

 

அங்கே தன் மகளையும்

மகளின் பிறந்த பிள்ளைகளையும் 

கொண்டுவந்து காட்டும் எளிய தாயிடம்

அது ஒரு இடுகாடு என்று யாரும் சொல்லமுடியவில்லை.

 

நள்ளிரவின் யாருமில்லா நேரத்தில், ஒரு மாற்றுத்திறனாளி தன் அஞ்சலியை செலுத்தி விட்டுப் போகிறார்.

 

நாதஸ்வரம் மங்கல இசை என்று

கட்டிவைத்த பிம்பத்தை உடைத்து, அதை 

உடல் அடங்கிய இடத்தில் வாசித்துப் போகிறார்கள்.

 

தன் பிள்ளையை கலைஞர் போல் துண்டணிந்து

நடந்து காட்டச்சொல்கிறார் இன்னொருவர்.

 

கலைஞரின் அன்பின் பிணைப்பில் எங்கோ அகப்பட்டுக்கொண்டவனின் அன்பு, பல புனிதக் கட்டமைப்புகளை உடைத்துப் போட்டிருக்கிறது

 

அதை நினைவிடம் என்று நீங்களும் நானும் சொல்லலாம்.

 

தமிழ் உள்ளவரை கலைஞரும் வாழ்கிறார்

என்று எண்ணுகிறவன்

கலைஞர் இறந்துவிட்டார் என்று முதலில் ஒத்துக்கொள்ள வேண்டுமே!

 

#KalaignarEverywhere

#எங்கெங்கும்கலைஞர்

 

-   சாந்தி நாராயணன் முத்துராமானுஜம்

No comments:

Post a Comment