Wednesday 19 August 2020

கலைஞரின் நெருக்கம்! - 'கவிமாலை' சிங்கப்பூர் புதுமைத்தேனீ மா. அன்பழகன்

 கலைஞரின் நெருக்கம்! - 'கவிமாலை' சிங்கப்பூர் புதுமைத்தேனீ மா. அன்பழகன்

 

டாக்டர் கலைஞர் அவர்களுக்கும் புதுமைத் தேனீ மா. அன்பழகனுக்குமான நெருக்க நிகழ்வுகள்.

 

முத்துவேலர் கருணாநிதி திருக்குவளையில் பிறந்து வளர்ந்த போது, அதே பஞ்சாயத்திற்கு உட்பட்ட பக்கத்து ஊரான காரைக்குடியில் அன்பழகனின் அத்தை வீடு உள்ளது. அங்கு அவருடைய சிறுவயதில் "அப்ளா" குடுமியுடன் பால் வாங்குவதற்காக வந்து வாசலில் நிற்பாராம்.

 

1971 இல் முதல்வரானதும் அன்பழகனின் அண்ணன் திரு மா. மீனாட்சிசுந்தரம் வேதாரண்யம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆகி விட்டார். அப்போது அன்பழகனின் திருமணம் கலைஞர் தலைமையில் எம்ஜிஆர் முன்னிலையில் சென்னையில் நடைபெற்றது.

 

இந்திரா காந்தியால் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட நேரம் திமுகவின் பல முன்னாள் அமைச்சர்கள், முன்னணி தலைவர்கள் வெளியே வரத் தயங்கினர்; சிலர் கைது செய்யப்பட்டனர். அன்பழகன் உடைய நண்பர் க. ராசாராம் மட்டும்தான் காங்கிரஸ் இயக்கத்துடனும் மத்திய அதிகாரிகளுடனும் ஒரு புரிந்துணர்வுடன் விளங்கினார். அதனால் ராசாராம் ஒருவர்தான் கலைஞரை சென்று தினமும் பார்ப்பதும் அவருடன் ஆலோசிப்பதும் இயக்க நண்பர்களுக்கு உதவுவதுமாக இருந்தார்.

 

கலைஞர் எங்கிருந்தாலும் ஒற்றர்கள் கலந்து நிற்பர். அதனால் மெரினா கடற்கரை கலங்கரை விளக்கத்திற்கு அருகேயுள்ள மணற்பரப்பில் மாலை 7 மணிக்கு மேல் 10 மணி வரை முக்கிய மாணவர்களுடன் அமர்ந்து ஆலோசனை செய்வது வழக்கம். இராசாராம் அங்கு செல்லும்போது சில நாட்களில் அன்பழகனும் உடன் செல்வார். அவர்கள் பேசிக்கொள்வதை யாரும் செவிமடுக்க முடியாத தூரத்தில் பெரிய வளையமாக விலகி நின்று யாரையும் உள்ளே அனுமதிக்காமல் இயக்கத் தோழர்கள் பார்த்துக்கொள்வார்கள். அப்போது கலைஞருக்கு ஏதாவது கொரிக்க வேண்டும் என ஆசை ஏற்பட்டால் வேர்க்கடலை வாங்கி வரச் சொல்வார். இரண்டு மூன்று முறை அன்பழகன் தான் தலைகால் புரியாத ஆனந்தத்தோடு ஓடிச் சென்று வாங்கி வந்து கையில் வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்ததைப் பெருமையாக இன்றும் நினைவு கூறுகிறார்.

 

1965இல் அன்பழகன் யாரையும் அழைக்காமல் தனியே சென்று கலைஞரிடம் தன் நூல் வெளியீட்டு விழாவுக்கு வரவேண்டும் என அழைக்கிறார். எந்தத் தேதி வேண்டும் என்று கலைஞர் கேட்டவுடன் அன்பழகன் மகிழ்ச்சியில் அதிர்ந்து போய்விட்டார். தேதியைச் சொல்லிவிட்டு வந்துவிட்டார்.

 

கலைஞர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நேரம். நாட்கள் நெருங்கின; அழைப்பிதழ் அச்சடித்து கலைஞரிடமும் அன்பு கொடுத்துவிட்டார். அப்போது புலவர் கோவிந்தன் மரணத்தை ஒட்டி செய்யாறு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது.  எதிர்பாராத தோல்வி ஏற்பட்டு விட அந்த மாதத்தில் கலைஞர் தன் உதவியாளர் சண்முகநாதனை அழைத்து அன்பழகன் நிகழ்ச்சியைத் தவிர தன்னுடைய பிற அனைத்து நிகழ்ச்சிகளையும் இரத்து செய்யச் சொல்லிவிட்டார். உதவியாளர் வியப்புடன் கலைஞரைப் பார்க்கிறார். அவர் பார்வையின் கேள்வியை புரிந்து கொண்ட கலைஞர் "பாவம் அன்பழகன் குடும்ப விழா போல அழைப்பிதழ் அனைவருக்கும் கொடுத்து விட்டான். ஏற்பாடுகளை எல்லாம் செய்து விட்டான்" என்றாராம். சண்முகநாதன் பின்னர் அதைச் சொன்னவுடன் அன்பழகன் நெகிழ்ந்து போய்விட்டார்.

 

சொன்னதுபோல் அதே தேதியில் வருகை புரிந்து அன்பழகனின் ஐந்து நூல்களைக் கலைஞர் வெளியிட்டு உரை நிகழ்த்தினார். அதன்பின் திமுக தலைமை இலக்கிய அணியின் பொருளாளராகக் கலைஞரால் நியமிக்கப்படுகிறார். அப்பொறுப்பின் காரணமாக அன்பழகன் தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர் ஆகிறார்.

 

இடையிடையே அன்பழகன் எப்போது கலைஞரை பார்க்கப் போனாலும் 'செல்லப்பிள்ளை' என ஆற்காடு வீராசாமி கிண்டல் செய்கிற அளவுக்கு எளிதில் உள்ளே சென்று கலைஞரைச் சந்திப்பார். ஒருமுறை முன்னாள் அமைச்சர் கோ. சி. மணி உள்ளே கலைஞருடன் பேசிக் கொண்டிருக்கிறார். அன்பழகன் வந்துள்ளதாக இராசாத்தி அம்மாள் கலைஞரிடம் சொல்ல, மணி அவர்களை சற்று நேரம் வெளியில் போய் உட்கார சொல்லிவிட்டு அன்புவை அழைத்துப் பேசினார். அந்த அளவுக்குக் கலைஞரிடம் நெருக்கம்.

 

ஒருமுறை நாகை மாவட்ட திமுக செயலாளர் தேர்தல் நடந்தது. கழகத் தேர்தலில் வெளி மாவட்டத் தலைவர்கள் தலையிடக் கூடாது என்பது கழக விதி. அன்பழகன் அண்ணன் மீனாட்சிசுந்தரம் போட்டியிட்டார். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கோ.சி. மணிக்கு மீனாட்சி வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதில் பல காரணங்களால் குறியாய் இருந்தார். மணி அவர்கள் மாவட்ட செயலாளராகப் பல காலம் இருந்ததால் கட்சியினரிடையே செல்வாக்கு இருந்தது. அதைப் பயன்படுத்தி வேறு ஒருவரை மீனாட்சிக்கு எதிராகப் போட்டியிட வைத்து ரகசியமாக ஆதரவு திரட்டினார். இதை அறிந்து மீனாட்சிசுந்தரம் சென்னையிலிருந்த அன்பழகனிடம் சொல்ல, உடனே அன்பு கலைஞரிடம் சென்று முறையிட்டார். மீனாட்சி வெற்றி பெற வேண்டும் என்று கலைஞரும் விரும்பினார். உடனே அன்பழகனைத் தன் படுக்கை அறைக்கு அழைத்துச்சென்று பக்கத்திலேயே வைத்துக்கொண்டு தொலைபேசியை எடுத்து மணி அவர்களைக் கண்டிப்பதற்காக அழைத்தார். ஆனால் மணி அப்போது கிடைக்காததால் அவர் மனைவியிடம் தன் கண்டனத்தைத் தெரிவித்தார். இருந்தாலும் மணியின் செல்வாக்கால் தன் அண்ணன் வெற்றி பாதித்து விடக்கூடாது என்று பயந்த அன்பழகன் கலைஞரிடம் தேர்தலை நாகையில் வைத்துக்கொள்ளாமல் சென்னையில் நடத்தலாம் என ஒரு யோசனையைச் சொன்னார். உடனே "நீ அவ்வாறு விரும்பினால் சொல்" என்றார். "ஆமாம்" என்று சொன்னவுடன் அங்கிருந்தவாறே முரசொலிக்கு அழைத்து அப்படியே செய்தி அறிவிக்கும் படிச் செய்தார். பின்னர் அத்தேர்தலில் அன்பழகன் அண்ணனே வெற்றி அடைந்தார் என்பது வரலாறு.

இராசாத்தி அம்மாள் ஒருமுறை அன்பழகனிடம் கனிமொழிக்கு ஏற்ற மாப்பிள்ளை இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்க, இவரும் அவர்களின் தகுதிக்கு ஏற்ற இரண்டு வரன்களைச் சொல்லியிருக்கிறார். ஆனால் அவை ஆரம்பக் கட்டத்திலேயே தொடராமல் நின்று போனது.

 

கலைஞரின் "சங்கத்தமிழ்"ப் பாடலுக்கு அன்பழகன் பின் வீட்டுக்காரரும் நண்பருமான இசையமைப்பாளர் டி. ஆர். பாப்பா இசை அமைக்க, வழுவூர் ராமையா பிள்ளை மகன் சாம்ராஜ் உதவியுடன் ஒலிப்பேழை தயார் செய்ய வேண்டிய பொறுப்பையும், வெளியீட்டு விழாவை நடத்திக் கொடுக்கும் பொறுப்பையும் அன்பழகனிடம் கலைஞர் கொடுக்கிறார். இவ்விழாவை அரசியல் கலப்பு இல்லாமல், கலை இலக்கியத் துறையை மட்டும் அழைத்து கலைவாணர் அரங்கில் நடத்தும்படி அறிவுறுத்துகிறார். அது தொடர்பாக ஒரு முறை தொலைபேசியில் அழைத்தார். அன்பழகன் மனைவி திலகவதி எடுத்து யார் எனக் கேட்டுவிட்டு கொல்லைப் புறத்தில் இருந்த கணவரிடம் சொல்ல, இவரும் எந்தக் கருணாநிதியோ (எதிர்பாராததால் அதே பெயருடைய வேறு யாராகவும் இருக்கலாம் என்ற எண்ணத்துடன்) என்ற நினைப்புடன் சென்று யார் எனக்கேட்க கலைஞர் குரலை கேட்டவுடன் ஆடிப் போய்விட்டார்.

 

கலைஞர் விழைந்தவாறு கே. பாலச்சந்தர், மனோரமா, ஏ. எல். நாராயணன் போன்ற கலை, இலக்கியத் துறையினரை அழைத்து வெற்றிகரமாக கலைஞர் மனநிறைவு எழுதிடும் அளவுக்கு விழாவை அன்பழகன் நடத்திக் கொடுத்தார்.

 

கலைஞரின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கு முந்திய நாளில் இலக்கிய அணியின் சார்பில் கலைஞரின் பிறந்த நாளைக கொண்டாடுவது வழக்கம். பட்டிமன்றம், கவியரங்கம் அல்லது கருத்தரங்கம் நடத்தப்படும். அன்பழகன் பொருளாளர் பொறுப்பில் இருந்த காலத்தில் துணைச் செயலாளர் கவிஞர் தஞ்சை கூத்தரசனும், அன்பழகனும் இணைந்து கலைஞரைச் சந்தித்து ஆலோசனைகளைப் பெற்று விழாக்களை நடத்துவார்கள்.

 

பின்னர் அன்பழகன் புலம்பெயர்ந்து சிங்கை வந்து விட்டார். கலைஞர் முதல்வராக இருந்தபோது சிங்கப்பூர் வருகை தந்தார். அப்போது அன்பழகன் சென்று பார்த்தார். ஆண்டுகள் பல கடந்து விட்டதால் கலைஞருக்கு நினைவு இல்லாமல் இருக்கலாம் என எண்ணிக் கொண்டு சென்ற அன்பழகனைக் காட்டி தன் அருகில் நின்ற இராசாத்தியிடம் "அன்பழகனைத் தெரிகிறதா" என்று கேட்டாராம்.

 

2005இல் அன்பழகன் தன் மகன் திருமணத்தின் அழைப்பிதழைக் கொண்டுபோய் அறிவாலயத்தில் கலைஞரச் சந்தித்துக் கொடுத்தார். அழைப்பிதழின் அழகைப் பார்த்துப் பாராட்டி விட்டு மணமக்களுக்கான வாழ்த்தையும் தெரிவித்தார்.

 

கனிமொழி சிங்கப்பூரைச் சேர்ந்த அரவிந்தன் என்பவரை திருமணம் செய்ய விரும்புகிறார் என்பதை அறிந்து, அந்தப் பையன் "யாரோ, எவரோ?" எனக் கலைஞர் கவலையுற்றார்.

 

திரு இராம அரங்கண்ணலைக் கலைஞர் அழைத்து, சிங்கப்பூரில் இருக்கும் அன்பழகனிடம் அரவிந்தனைப் பற்றிய தகவலை விசாரிக்கக் கேட்டிருக்கிறார். சிங்கப்பூர் வருகை புரிந்த திரு டி. ஆர். பாலுவிடமும் அதேபோல் அன்பழகனிடம் விசாரித்து வரும்படிப் பணித்திருக்கிறார்.  இருவருக்கும் அன்பழகன் தான் விசாரித்து அறிந்ததைத் தெரிவித்திருக்கிறார். ஆனால் கனிமொழியின் காதல்தான் இறுதியில் வெற்றி பெற்றது.

 

இப்படியான நெருக்கத்தில் இருந்த உறவையும், கொள்கைத் தலைவனிடம் கொண்டிருந்த அன்பையும் அன்பழகனால் மறக்க முடியவில்லை. இன்று கலைஞர் செயல்பட இயலாத நிலையை அன்பழகன் மிகப்பெரிய இழப்பாக கருதிக் கொண்டு இருக்கிறார். தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் கலைஞர் செய்த பணிகளும் செய்த தியாகங்களும் அளப்பரியது.

 

இழப்பு என்பது அன்பழகனுக்கு மட்டுமல்ல.

 

தமிழ்ச் சமுதாயத்திற்கேதான்!

 

-       சிங்கப்பூர் புதுமைத்தேனீ மா. அன்பழகன்

 

No comments:

Post a Comment