Wednesday 19 August 2020

எம்.ஜி. ஆர். - கலைஞர் - பாடல் அனுபவங்கள்

 எம்.ஜி. ஆர். - கலைஞர் - பாடல் அனுபவங்கள்

 

‘எங்கள் தங்கம்’… எம்.ஜி. ஆரை ரசிகர்கள் இப்படி அழைப்பதற்கு காரணமான அவர் நடித்து மேகலா பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட படம். மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்தின் கடனை ‘எங்கள் தங்கம்’ படத்தின் மூலம் கிடைத்த லாபத்தால் அடைத்ததாக அதன் வெற்றி விழாவில் முரசொலி மாறன் குறிப்பிட்டார்.

 

படத்தின் பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட். என்றாலும் இரண்டு பாடல்கள் ரசிகர்களுக்கு மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தும். ஒன்று.. எம்.ஜி.ஆரின் கொள்கைப் பாடலான ‘நான் செத்துப் பிழைச்சவன்டா…. ’

 

மற்றொன்று ஜெயலலிதாவுடன் எம்.ஜி. ஆர். பாடும் டூயட் ‘நான் அளவோடு ரசிப்பவன்…’ இந்த இரண்டு பாடல்களுக்கும் ரசிகர்கள் முக்கியத்துவம் கொடுக்கக் காரணம் அதில் உள்ள சிறப்பான வரிகள். இரண்டு பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வாலி.

 

‘நான் அளவோடு ரசிப்பவன்…’ பாடலுக்கான முதல் வரியை எழுதி விட்டார் வாலி. என்ன காரணமோ தெரியவில்லை, அன்று அவருக்கு அடுத்த வரி உடனடியாக வரவில்லை. அப்போது மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு கலைஞர் வந்தார். வாலியைப் பார்த்து ‘பல்லவி எழுதி விட்டீர்களா?’ என்று கேட்டார்.

 

‘நான் அளவோடு ரசிப்பவன்….’ முதல் வரியை சொன்னார் வாலி.

 

‘எதையும் அளவின்றி கொடுப்பவன்….’ இரண்டாவது வரி வந்தது கலைஞரிடம் இருந்து.

 

எம்.ஜி. ஆரின் வள்ளல்தன்மையை மனதில் கொண்டு கலைஞர் கூறிய இந்த வரிக்குப் பிறகு பாடல் கிடுகிடுவென எழுதி முடிக்கப்பட்டு அன்று மாலையே ஒலிப்பதிவும் ஆகிவிட்டது.

 

பாடல் எம்.ஜி. ஆருக்குப் போனது. ஆனால், இரண்டாவது வரியை வாலிக்கு கலைஞர் எடுத்துக் கொடுத்த விஷயம் எம்.ஜி. ஆருக்குத் தெரியாது. சில நாட்கள் கழித்து வாஹினி ஸ்டூடியோவில் வேறு ஒரு படத்தின் படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி. ஆரை சந்தித்தார் வாலி.

 

அவரை வரவேற்று ‘‘வாங்க ஆண்டவனே. (தனக்கு நெருக்கமான வர்களை எம்.ஜி. ஆர் இப்படி அழைப்பது வழக்கம்) ‘அளவோடு ரசிப்பவன்’ பாட்டு பிரமாதம். அதிலும் அந்த இரண்டாவது வரி அருமை’’ என்று கூறிய எம்.ஜி.ஆர். அன்பின் மிகுதியால் வாலியை கட்டி அணைத்து நெற்றியில் முத்தமிட்டார்.

 

‘‘அண்ணே, நீங்க இந்த முத்தத்தை கலைஞருக்குத்தான் கொடுக்கணும்’’ – வாலியின் ரியாக் ஷன்.

 

‘‘ஏன்?’’ எம்.ஜி. ஆர். புரியாமல் கேட்டார்.

 

விஷயத்தை வாலி சொன்னதும் சிந்தனையில் ஆழ்ந்தார் எம்.ஜி.ஆர். அதன் எதிரொலி சில நாட்களுக்குப் பின் அவரிடம் இருந்து வெளிப்பட்டது.

 

‘நான் செத்துப் பிழைச்சவன்டா... எமனைப் பார்த்து சிரிச்சவன்டா…’ பாடலின் பல்லவியை எழுதி எம்.ஜி. ஆரி டம் காட்டினார் வாலி. துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் எம்.ஜி. ஆர். உயிர்பிழைத்த பிறகு வெளியான இந்தப் பாடல் அவருக்கு கச்சிதமாக பொருந்தியது.

 

திருப்தியடைந்த எம்.ஜி.ஆர். வாலியிடம் சொன்னார்: ‘‘ஆண்டவனே, இரண்டாவது சரணத்திலே இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது கலைஞர் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தது பற்றி நாலு வரியிலே நறுக்குன்னு எழுதிடுங்க.’’

 

இதையடுத்துப் பிறந்த வரிகள்தான்…

 

‘ஓடும் ரயிலை இடைமறித்து

 

அதன் பாதையில் தனது தலைவைத்து

 

உயிரையும் துரும்பாய்தான் மதித்து

 

தமிழ் பெயரைக் காத்த கூட்டமிது’

 

தனது கொடை உள்ளத்தை ‘அளவின்றி கொடுப்பவன்…’ என்று புகழ்ந்து அடியெடுத்துக் கொடுத்த கலைஞரின் போர்க் குணத்துக்கு எம்.ஜி.ஆரின் பதில் மரியாதை.

 

நன்றி: பத்திரிக்கை. காம்

No comments:

Post a Comment