Tuesday 29 September 2020

அன்றாடம் வாழ்வில் பெரியாரியல் (பகுதி -5) - கனிமொழி ம.வீ

 அன்றாடம் வாழ்வில் பெரியாரியல் (பகுதி -5) - கனிமொழி ம.வீ  


பெரியாரியாரியத்தில் முக்கிய பகுதியாக நாம் கருதவேண்டியது சடங்குகள் - சம்பிரதாயங்கள் மறுப்புதான். பெரியார் பல்பொருள் அங்காடி அங்கு நமக்கு வேண்டும் பொருட்களை எடுத்துக்கொள்ளலாம் என வாய்ச்சொல் விளையாட்டைக் கொண்டு முக்கியமான அவர் கொள்கைகளைப் புறந்தள்ளிவிட இயலாது. ஜாதி ஒழிப்பு தான் பெரியாரின் முக்கியமான கொள்கை என்று ஆணித்தரமாகக் கூறிவிட்டு அந்த ஜாதியத்தை  நிலைநிறுத்திடும் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் மரபு என்ற பெயரில் பின்பற்றுவது ஒருபோதும் ஜாதிகளை ஒழிக்கப் பயன்படப்போவதில்லை.

இந்தியக் கட்டமைப்பைப் புரிந்துகொண்டால் சடங்குகள் என்பது இங்கே ஜாதியின் அடிப்படையில் தான் இயங்குகின்றது என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். நீங்கள் அதற்குத் தமிழ் மரபு சாயல் பூசினாலும் , பௌத்த சாயம் பூசினாலும் இது தான் நிலை.

இது பண்பாடு - இதனைத் தவிர்க்க முடியாது என்று கூறிக்கொண்டு பெரியாரியலை நேர்மையாகப் பேசிட முடியாது.

தொ . ப போன்றவர்கள் நாட்டார் தெய்வ வழிபாடு  தமிழர்களின் கடவுள்கள் அதனால் அதைப் பின்பற்றலாம் என்று கூறுவது அறிவிற்கு ஏற்புடையதா?

முதலில் தெய்வம் - கடவுள் என்பதை ஆரியக் கடவுள் - தமிழர் கடவுள் என்று நாம் வேண்டுமானால் பிரித்து வைத்துக்கொள்ளலாம் ; ஆனால் எந்தக் கடவுளும் அறிவிற்குப் பொருந்தா சிந்தனை தான். மேலும் நாட்டார் கோயில் வழிபாடுகளில் சமூகத்தில் எம்மாதிரி ஜாதி படிநிலைகள் பின்பற்றப்படுகின்றதோ அவற்றை அப்படியே பிரதிபலிக்கும் ஒரு அமைப்பாகத் தான் உள்ளது. இன்னன்ன ஜாதிக்குத்  குலதெய்வம் என்பதே இங்கு நிலைபெற்றுள்ளது. அதில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது, பெண்ணடிமை கடைப்பிடிக்கப்படுகிறது - இப்படி இருக்கும் ஒரு அமைப்பிற்குத் தமிழர் மரபு என்ற சாயத்தைப் பூசுவதே அயோக்கியத்தனம் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னும் சிலர் கடைக்கோடி மக்களுக்கு கடைத்தேற கடவுளும் - மதமும் தேவை என்று புளித்த அரவையை அரைக்கின்றனர் . கடைக்கோடி மக்களின் வாழ்க்கைத்தரம் ஏன் உயரவில்லை என்று ஆராயாமல் - அதற்கான வழியைக் கண்டுபிடிக்காமல் கடவுளையும் - மதத்தையும் சரணடைந்து கொள்ளுங்கள் என்பது அவர்களைக் கடைநிலையில்  தான் இறுதி வரை வைத்திருக்கும். நம் சமூக இழிவிற்கு என்ன காரணம் ? சமூக நிலையில் உள்ள கீழ் நிலை அமைப்பை எவ்வாறு உடைப்பது ? எந்த தத்துவம் இதை நிலைநிறுத்துகிறது ?என்று ஆராயாமல் -இந்த கேள்விகளை மட்டுப்படுத்தி தலைவிதி தத்துவம் நிலைபெற அவர்கள் அதே கீழ்நிலையில் தொடர கடவுளையும் மதத்தையும் இட்டு நிரப்புவது புரட்சிக்கு ஒருபோதும் வழிவகுக்காது.

நம் உற்றார் உறவினர் ஆயிற்றே ;அவர்கள் மனம் புண்படுமே என்று சடங்குகள் செய்கிறோம் ;  இந்த வாதம் சரியா? ஏனென்றால் குடும்பம் என்ற தனித் தனித் தீவுகளே  இங்குச் சமூகத்தை உருவாக்குகின்றது. குடும்பங்களில் நம்மால் நம் பகுத்தறிவை நிலைநிறுத்த முடியவில்லை என்றால் எவ்வாறு சமூகத்தில் அது நிலைபெற உழைக்க முடியும்?

அதே போல , இறைமறுப்பு வேறு இந்தச்  சடங்குகள் எல்லாம் பகுத்தறிவானது என்று யாரெனும்  கூற முற்படுவார்கள் எனின் அவர்களைப்  போல , தெளிவற்ற சிந்தனைக் கொண்டோரைத் தெளிவாக்குவது முக்கியம். இறைமறுப்பு வேறு தான். அது பகுத்தறிவின் இறுதி நிலை - முதிர்ச்சி அடைந்த நிலை. ஆனால் பகுத்தறிவு என்பது சடங்குகளை ஏற்றுக்கொண்டு பயணிப்பது அல்ல. அறிவிற்குப் பொருந்தாத சடங்குகள் சம்பிரதாயங்கள் - கடவுள் சங்கதிகளைக் கேள்வி எழுப்புவதே பகுத்தறிவு.

உறவு  -குடும்பம் என்று வந்தாலும் சமரசமற்ற பகுத்தறிவாளராக எப்படி பெரியாரால் இயங்க முடிந்தது ? 


பெரியார் வாழ்வில் நடந்த தனிப்பட்ட இழப்புகளை எப்படி கையாண்டார் என்பதில் இருந்தே பாடம் கற்கலாம்; 

அன்னை நாகம்மையார் மறைவு - அவருக்குத் தனிப்பட்ட அளவில் மிகப்பெரிய இழப்பு ஆனால் அந்த இழப்பைப் பற்றியே நினைத்துக்கொண்டு இருக்காமல் அடுத்த நாளே ஒரு திருமணத்தை நடத்தி வைக்கப் பயணமானார். எந்த அளவிற்கு மன உறுதியும் - பகுத்தறிவு சிந்தனையும் வைத்திருந்தால் இழப்புகளைத் தாங்கிக்கொண்டு பயணித்திருப்பார் ? அம்மையாரின் இறுதி நிகழ்விற்கு வந்த தோழர்களைக் கூட அழுது புரளக் கூடாது , என்று
இறுதி நிகழ்ச்சியை நடத்தியவர் தந்தை பெரியார்.

தன் அண்ணன் மறைந்தபோதும் , தன் தாயார் மறைந்தபோதும் அய்யா பெரியார் எழுதியவை இவை.

ஊருக்கு மட்டும் உபதேசம் இல்லாமல் - எந்த வகை சோகம் தாக்கிய போதும், அவர்களுக்காக- இவர்களுக்காக என்று தன் கொள்கையில் சமரசம் இன்றி வாழ்ந்த பெரியாரைப் பின்பற்றுவதாகக் கூறுவோர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவரே எடுத்துக்காட்டு.

“நீங்கள் இவ்வளவு பெருந்திரளாகக்கூடி எங்கள் குடும்பத் தலைவர் பெரியார் ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்களின் மறைவுக்காக அனுதாபத் தீர்மானம் நிறைவேற்றியதற்காக உள்ளபடியே நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறோம். சாதாரணமாகக் கவனிக்கப் போனால், இதற்காக நாம் துக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்பதோடு, இம்மறைவில் அதிசயப்படத்தக்கதும் ஏதும் இல்லை. ஏனெனில், அவர் இளம் வயதில் மறையவில்லை. 73 வயது தாண்டி 74ஆம் வயதில்தான் மறைத்துள்ளார். இது இந்நாட்டினரின் சராசரி வயதுக்கு மூன்று மடங்காகும். பெரும்பாலான மக்கள் 30 வயதிற்குள்ளாகவே இந்நாட்டில் இறந்துவிடுதல் மிகச் சாதாரணமாகும். எனவே, இந்தவகையில் நாம் அதிகம் வருந்துவதற்கில்லை. காலமாறுதல்களும், பஞ்சமும் மற்றும் பல கொடிய நோய்களும் மக்களை வாட்டி வதைத்து வரும் இக்காலத்தில் 70வயது வரை உயிர் பிழைத்திருந்ததுதான் அதிசயமே ஒழிய மாய்வதொன்றும் அதிசயமே இல்லை. (விடுதலை 07-02-1950)

”95 வயது காலம் சுகமே வாழ்ந்து, சுகமா இருந்து வந்த எனதருமைத் தாயார் சின்னத்தாயம்மாள் 28.07.1936 ஆம் தேதி செவ்வாய் நள்ளிரவு 12மணிக்கு முடிவெய்தினார். அம்மையார் இந்திய மக்களின் சராசரி வயதுக்கு 4 பங்கு காலம் அதிகமாகவே வாழ்ந்துவிட்டார். தானாக நடக்க, இருக்க, மலஜலம் கழிக்கச் சவுகரியமுள்ள காலம் அவ்வளவும் வாழ்க்கை நடத்தி விட்டு, சவுகரியம் குறைந்த 2 மணி நேரத்தில் முடிவெய்திவிட்டார். 28ம் தேதி இரவு 9.30 மணிக்கு அம்மையிடம் அனுமதி பெற்றே ஜோலார்பேட்டை பிரச்சாரத்துக்குச் சென்றேன். 12 மணிக்கு ஆவி போக்குவரத்து நின்றுவிட்டது. காலை 9 மணிக்கு வந்து சேர்ந்தேன்.
எனக்கு அவர் முடிவெய்தியது பற்றி உண்மையிலேயே மகிழ்ச்சி உண்டாயிருக்கிறது. அந்தம்மாளுடைய கோரிக்கை எனக்கு ஒரு கலியாணம் செய்து வைத்துவிட்டுச் சாக வேண்டுமென்பதே. எனது கோரிக்கை எனக்கு முன்னதாகவே அம்மையார் முடிவெய்திவிட வேண்டுமென்பதே. (குடி அரசு 2-08-1936)”

சோகத்தில் பகுத்தறிவு கரையும் தருணம் வரும்போதெல்லாம் பெரியாரின் இந்த வாழ்க்கை நிகழ்ச்சிகள் - அவர் எழுத்துக்கள் உரமூட்டடும் !!

No comments:

Post a Comment