Tuesday 29 September 2020

நவீன தமிழகத்தின் தந்தை - ரௌத்திரன். (த. ஹரி பாரதி, முதுகலை சமூகவியல், லயோலா கல்லூரி)

நவீன தமிழகத்தின் தந்தை - ரௌத்திரன். (த. ஹரி பாரதி, முதுகலை சமூகவியல், லயோலா கல்லூரி)

ருவரை நினைவுகூருவதற்கு பொதுவாக அவரது வாழ்க்கை வரலாற்றினைப் பற்றிப் பேசுவர். ஆனால் நான் இதிலிருந்து சிறிது வேறுபடலாம் என எண்ணுகிறேன். ஒருவரை நினைவுகூர அவரின் கருத்துக்களையும் கொள்கைகளையும் அவர்தம் சாதனைகளையும் பேசுவதே சிறப்பென நம்புகிறேன். ஆனால் பெரியாரின் வாழ்வின் கொள்கைகள் சாதனைகளைப் பற்றி பேசினால் பேசிக்கொண்டே போகலாம், பக்கம் பக்கமாக எழுதலாம். இதற்கு ஒருவழி யாரிடம் பேச போகிறோம் என்பதை முடிவு செய்வதே! பெரியாரைப் பற்றி முதன்முதலில் கேள்விப்படுபவருக்கு கூறுவதாக இக்கட்டுரையை இயற்றுகிறேன்.  இது மிகவும் சுருக்கமான பார்வை (Reductionist view).


பெரியாரின் மொத்த வாழ்க்கைப் போராட்டத்தையும் இரண்டே வார்த்தைகளில் கூற முற்பட்டால், அந்த இரண்டு வார்த்தைகள் இவை தான்.


பகுத்தறிவு மற்றும் சுய மரியாதை!


இவை இரண்டும் கூட முற்றிலும் வேறுபட்டவையல்ல. ஒன்றுகொன்று ஆழ்ந்த தொடர்பு கொண்டது. பகுத்தறிவு இருந்தால் தான் சுயமரியாதையின் தேடல் துவங்கும். சுயமரியாதையின் தேடல், நம்மை சிந்திக்க விடாமல் விலங்கு பூட்டியிருக்கும் சமூக கட்டமைப்பை உடைக்க பகுத்தறிவைத் தூண்டும்! பெரியார் இந்த தொடர்பை நன்கு உணர்ந்தவர். பெரியார் பழங்கால கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றில் மூழ்கிப்போன ஒரு பிற்போக்கான பழந்தமிழகத்தைக் காண்கிறார். தன் சமூக விதிமுறைகளை சமூக கட்டமைப்பை பற்றி ‘ஏன்?’ என்று கூட கேள்வி கேட்க எண்ணாத மக்களைக் காண்கிறார். ‘இவையெல்லாம் தன் முன்ஜென்ம வினையினால், கர்மாவினால் நடக்கிறது. இந்த பிறவிக்கான தர்மத்தினை சரியாக செய்தால் அடுத்த பிறப்பில் உயர்ந்த சாதியில் பிறந்து விடுதலை அடையலாம்’ என்பதை நம்பிக்கொண்டு இருந்தனர் மக்கள். கடவுள் தந்ததாக கூறிய ‘சாதிய அமைப்பை’ ஏற்றுக்கொண்ட தமிழகத்தை காண்கிறார்.

இது வெறுமனே ஒரு கருத்தியல் மட்டும் அல்ல. சமூக பொருளாதார கட்டமைப்புகள் இதன் அடிப்படையில் தான் அமைந்திருந்தன. நம் அனைவருக்கும் மிகவும் தெரிந்த ஒரு உதாரணமே இதற்க்கு போதுமானது. 1920களுக்கு முன் 3 முதல் 5 சதவிகிதமே இருந்த பார்ப்பன சமூகம் 95 சதவிகிதத்திற்கும் அதிகமான அரசாங்க வேலைகளைக் கொண்டிருந்தது. இது தவிர பிற சமூக, பொருளாதார, அரசியல் தளங்களிலும் பார்பனரல்லாதோரின் பிரதிநிதித்துவம் மிகவும் சொற்பமாக இருந்தது. இதன் அடிப்படையைப் புரிந்து கொண்டார் பெரியார்.


விடுதலை போராட்டம் உச்சத்தை நெருங்கும் வேளையிலும் கூட இந்த சமூக சமமின்மை குறித்து எவரும் பேசுவதற்கு தயாராய் இல்லை. இந்திய விடுதலைக்காக தீவிரமாக இறங்கிய இந்திய தேசிய காங்கிரசும் கூட இது பற்றி பேசவில்லை, பேசவும் அனுமதிக்கவில்லை. அரசியல் விடுதலையே காங்கிரசின் நோக்கம் என்று முழங்கியது அக்கட்சி! ìஇது விடுதலையே அல்ல!î என்று மறுத்தார் பெரியார். ìஅந்நியர்களிடம் உள்ள அதிகாரத்தை உயர் சாதியினர் பெறுவதற்கு பெரும்பான்மை மக்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இப்படி அதிகார மாற்றமாகிய சுதந்திரமே தேவையில்லைî என்று காங்கிரஸில் இருந்து விலகினார். 

இந்த சமூகம் சுமத்தும் இத்தனை அடிமைத்தனத்தையும் அவமரியாதையையும் ஏற்க பழக்கிவைக்கப்பட்டிருக்கும் இந்த கருத்தியலில் இருந்து விடுதலை வேண்டும். அதற்கு சுயமரியாதை வேண்டும். தன்னை, தன் உடலை, தன் உழைப்பை மக்கள் மதிக்க வேண்டும். ஆங்கிலேயரிடம் இருந்து கிடைக்கும் அரசியல் விடுதலையை விட, ஆதிக்க சாதிகள் வர்ணங்களிடம் இருந்து சமூக விடுதலை வேண்டும். அதுவே உண்மை விடுதலை என்று உணர்ந்த பெரியார், அதை அடைவதற்கான வழியாக ‘பகுத்தறிவை’ கண்டுகொண்டார்.

காங்கிரஸில் இருந்து வெளியேறிய பின் 1925இல் ‘சுயமரியாதை இயக்கத்தைத்’ துவங்கினார் பெரியார். அந்த சுயமரியாதையை அடைய தடையாய் இருக்கும் அனைத்தையும் கேள்வி கேட்டார். கடவுள், கலாச்சாரம், ஆதிக்கம், பாவம், புண்ணியம், கர்மா என்று அனைத்து சங்கிலிகளையும் உடைத்து எறிந்தார். இவர் கை படாத ஒரு கருத்து இல்லவே இல்லை எனலாம். இது போன்ற அடிப்படையற்ற நம்பிக்கைகள், அந்த நம்பிக்கையை அடித்தளமாய் கொண்ட ஆதிக்கம் குறித்து தமது குடியரசு, விடுதலை போன்ற இதழ்களில் பக்கம் பக்கமாக எழுதி குவித்தார்.


சாதிய எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு, ஆணாதிக்க எதிர்ப்பு என்ற அவரது அனைத்து எழுத்துக்களிலும் அவர் எதிர்த்தது ஆதிக்கத்தை தான். ìஆதிக்கமே என் எதிரி!î என்றும் பறைசாற்றியிருக்கிறார். 


‘சாதிய ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட ஒரு ஆணும், தன் மனைவியின் மீது ஆதிக்கம் செலுத்துகிறான். உனக்கு சுய மரியாதை உண்டு என்பதைப் போல் அவளுக்கு இல்லையா?’ என்று கேள்வி எழுப்பினார். பெண்ணியம் பற்றி பேசுகையில், ‘ஒரு பெண்ணுக்கு எந்த காலத்திலும் ஒரு ஆணால் விடுதலை கிடைக்காது. பெண்கள்தான் அதற்கு போராட வேண்டும்’ என்றிருக்கிறார். அவரது ‘பெண் என் அடிமையானாள்?’ என்ற புத்தகம் இன்று வரை தமிழ் சமூகத்தில் பெண்ணியத்திற்கான ஆரம்ப புள்ளியாக படிக்கப்படுகிறது. கற்பு, பெண்ணுடல், சமூக கட்டுமானங்கள் என்று அவர் அந்த புத்தகத்தில் தொட்டிருக்கும் தலைப்புகள் உலகின் பிற இடங்களில் அந்த காலத்தைய பெண்ணிய இலக்கியங்களில் கூட பேசப்பட்டவையல்ல. பெண் விடுதலையில் தன் காலத்திற்கு முந்தியவராக இருந்தார் பெரியார்.


எழுத்தில் மட்டும் அல்ல, தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மேடைகளில் கூட்டங்களில் பேசியிருக்கிறார். மறைவதற்கு 5 நாட்களுக்கு முன்பு கூட தனது 94வயதில் குடலிரக்கத்தால் வலியில் உயிர் போக கத்திக்கொண்டு, மூத்திர சட்டியை தூக்கிகொண்டு ‘உங்களையெல்லாம் சூத்திரனாகவே விட்டுவிட்டு போகிறேனே’ என்று ஒரு கூட்டத்தில் பேசிவிட்டு தான் மறைந்தார். போகும் இடமெல்லாம் எதிர்க்கப்பட்டார், தாக்கப்பட்டார். செருப்பினால், கற்களினால், மலத்தால் கூட தாக்கப்பட்டிருக்கிறார். ஆனால் இதையெல்லாம் அவர் பொருட்படுத்தவும் இல்லை, பேசுவதை நிறுத்தவும் இல்லை. இவர் சாக வேண்டி யாகமெல்லாம் நடத்தப்பட்டிருக்கிறது!


பேசுவதற்கு முன் துண்டு சீட்டு கொடுத்துப் பேசப் போகும் தலைப்பை பற்றி வாசிக்க வைத்துவிட்டு பேசும் வழக்கத்தையும், பேசி முடித்தபின்பு கேள்வி கேட்கும் கலாச்சாரத்தையும் தமிழகத்தில் கொண்டு வந்தார் பெரியார். இது ஒரு அறிவுப்புரட்சியை தமிழகத்தில் நிகழ்த்தியது. வாசகர் வட்டங்கள், படிப்பு வட்டங்கள் தமிழகம் முழுதும் தோன்றின. சலூன் கடைகளில், தேநீர் கடைகளில், விளையாட்டு மைதானங்களில் செய்தித்தாள் வாசிக்கும் வழக்கம் வந்தது. இவரது காலத்தில் பிராந்தியமொழி நாளிதழ்கள் விற்பனை சில உச்சங்களைத் தொட்டது. அதற்கு பெரியார் ஓர் முக்கிய காரணம்.


அரசியல் தளத்தில் பெரியாருக்கு முன்பே நீதிக்கட்சி பார்பனரல்லாதோருக்கான போராட்டத்தை துவங்கியிருப்பினும், அதன் அடிப்படையை துல்லியமாய் கண்டுகொண்டு, அதனை வெகுஜனப் படுத்தியவர் பெரியார். இதனை ‘பகுத்தறிவு’ என்னும் ஆயுதம் கொண்டு நிறைவேற்றியும் காட்டினார். பின்னர் நீதிக்கட்சி மற்றும் சுயமரியாதை இயக்கம் இரண்டும் ஒன்று சேர்ந்து ‘திராவிடர் கழகம்’ பிறந்தது! பண்பாட்டு தளத்தில் திராவிடர் கழகம் செய்த புரட்சியைத் தனி கட்டுரையாகத்தான் எழுத வேண்டும். இந்த பண்பாட்டு புரட்சியின் வடிவமாக ‘இந்தி ஆதிக்க எதிர்ப்பை’ கையிலெடுத்து வட இந்தியாவின் பண்பாட்டு ஆதிக்கத்திற்கு எதிர் நின்றது கழகம். இன்றும் தமிழர்கள் ஏன் இந்தியை ஏற்பதில்லை என்று மொத்த வட இந்தியாவும் குழம்பிக்கொண்டு இருக்கிறது. திராவிடர் கழகத்திலிருந்து பிற்காலத்தில் பல பிராந்திய கட்சிகள் தோன்றின. ஆனால் இவை கழகத்திற்கோ தமிழகத்திற்கோ கேடாக அமையவில்லை. மாறாக தேசிய கட்சிகளை விரட்டி விட்டு, இங்கு திராவிட கருத்தியலை வேர்கொள்ள வைத்துள்ளது. இன்று இதன் காரணமாக தமிழகம் பல வளர்ச்சி குறியீடுகளில் இந்தியாவிலேயே முன்னணியில் நிற்கிறது. 


இதற்கெல்லாம் அடிப்படை பெரியாரின் புரட்சி! தமிழகத்தில் பெரியாரின் இந்த அறிவுப் புரட்சி, பதினாறாம் நூற்றாண்டு ஐரோப்பிய மறுமலர்ச்சியுடன் (Renaissance) ஒப்பிடத்தக்கது! அது மதத்தை சமூக மையமாக வைப்பதிலிருந்து மாற்றி மனிதர்களை வைத்துப்பார்க்கும் ஒரு பார்வையை உலகிற்குக் கொடுத்தது. அதைப் போன்றதோர் அறிவியல் புரட்சியை தமிழகத்தில் ‘பகுத்தறிவு மற்றும் சுயமரியாதை’ எனும் முழக்கத்துடன் நிகழ்த்திக் காட்டினார் பெரியார். “நான் தான் கடவுள் அல்லது நான் கடவுளினால் அனுப்பப்பட்டவன், அதனால் என்னை நம்பு!îஎன்ற குரல்கள் எங்கும் கேட்கும் இந்த உலகில் ìநான் கூறினேன் என்று எதையும் நம்பாதே! நான் ஒரு சாதாரண மனிதன். உன் அறிவை உபயோகித்து சிந்தித்துப் பார். சரி எனப்படுவதை ஏற்றுக்கொள். பிறவற்றை விட்டுவிடு!î என்றவர் பெரியார். 

இந்த வார்த்தைகளினால் தான் காலங்கள் கடந்து இன்றும் நம் இதயங்களில் வாழ்கிறார். அவரால் தான் இருபதாம் நூற்றாண்டு தமிழகத்தின் ‘சுயமரியாதை நூற்றாண்டாக’ மாறியுள்ளது. நவீனமாகியுள்ளது! ‘நவீன தமிழகத்தின் தந்தையான’ நம் பெரியாரின் இந்த 142ஆவது பிறந்தநாளில் அவர் ஏற்றிவைத்துச் சென்ற ‘பகுத்தறிவுச் சுடர்’ அணையாமல் பார்த்துகொள்வோம்.


வாழ்க பெரியார்! ஈரோடு வேங்கடப்ப ராமசாமி ‘பெரியார்’!

No comments:

Post a Comment