Tuesday 29 September 2020

திமுகவின் தேவை - ச.கணபதி சங்கர்

 திமுகவின் தேவை - ச.கணபதி சங்கர் 


ரு இயக்கத்தின் தேவை எதன் பொருட்டு அவசியமாகிறது?  அது சார்ந்த நிலப்பரப்பு, சமூகம், அதன் அடிப்படைக் கொள்கை, மொழி, மதம், இனம், வர்க்கம், தேசியம், சாதியம், பாலினம் போன்ற கூறுகளின் உரிமை, பாதுகாப்பு, என பல்வேறு காரணிகளைக் கொண்டு அமையப்பெறுகிறது. 


எந்தவொரு இயக்கத்திற்கும் காலவோட்டத்தில் மாற்றங்களும், பரிணாமங்களும் தவிர்க்க முடியாதவை, ஓரளவுக்கு இயல்பானவையும் கூட. இருப்பினும் அந்த மாற்றங்கள் இயக்கத்தின் அடிப்படை நோக்கங்களுக்கு முரணாக  அமைந்துவிடக் கூடாது. 


இயக்கங்களைக் காட்டிலும், ஓட்டரசியல் கட்சிகளுக்கு இதன் நெருக்கடிகளும், இது குறித்த அழுத்தங்களும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும். திமுக போன்ற பிராந்திய கட்சிகளைப் பொறுத்தவரையில், தேசியம் என்றும், மதவாதம் என்றும் ஒற்றைவாத, அடிப்படைவாத அரசியல் நம்மை அச்சுறுத்தும் இக்காலத்தில்  இன்றியமையாத ஒன்றாக இக்கேள்வி எழுகிறது. 


பிராமணரல்லாதோதார் இயக்கம்,  நீதிக்கட்சி, திராவிடர் கழகம், தோன்றிய காலத்தின் நிலைதான் இன்றும் சமூகத்தில்  நிலவுகிறதா என்பதின் புள்ளியில் இருந்தே இதனைப் பார்க்கலாம். சுவாரஸ்ய முரணாக ஆர்எஸ்எஸ் இயக்கமும் அந்தக் காலக்கட்டத்திலேயே துவங்கப்பட்டிருக்கிறது.  


நூற்றாண்டு பின்னோக்கி பார்த்தால் இன்று நாம் கடந்து வந்த தூரமும், பாதையும் மகத்தானவை. எனில் இதனைச் சாத்தியப்படுத்தியதில் மக்கள் அரசியல்படுத்தலும், கருத்துருவாக்கமும், பகைமுரண் - நட்புமுரண் தெளிவும், தேர்தல் அரசியல் - கொள்கை அரசியல் புரிதலும் மிக முக்கியக் காரணிகள். 


வெறும் கடவுள் மறுப்பு - மூட நம்பிக்கை என்று தட்டையான பரப்புரைகள் இல்லாமல், சமூக நீதி, சுரண்டல், மனுதர்மம், சாஸ்திரங்கள், மதம், கடவுள் என்று தெளிவான பார்வையும், தீர்க்கமான அணுகுமுறையும், சமரசமில்லாத முன்னெடுப்புகளுமே இதனை சாதித்திருக்கிறது.


இன்று பார்க்கும்போது திராவிட இயக்கம் - திமுகவின் தேவை, அல்லது அது தொடங்கப்பட்ட காரணங்கள் அதே நிலையில் இருக்கிறதா என்றால், நிச்சயமாக இல்லை. சொல்லப்போனால், நமது எதிர் கருத்தியல் இன்னும் வலுவாக, நுட்பமாக, மாயத்தோற்றத்துடன் இருக்கிறது. 100 ஆண்டுகளில் எத்தனையோ மாறியிருக்கிறது. உலகமயமாக்கலும், முதலாளித்துவமும் வலுப்பெற்றிருக்கும் அதே நேரம், பிற்போக்குத்தனங்கள், சாதியப் பெருமிதங்கள்,  தங்களைப் புத்துருவாக்கம் செய்வதும் நடக்கிறது. தொழில்நுட்பம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வளர்ந்திருக்கிறது. 


கட்சியின் முகங்கள் மாறியிருக்கிறது, தேர்தல் களங்கள், போராட்ட முறைகள், வெற்றி வியூகங்கள், கூட்டணிக் கணக்குகள் என எல்லாமே மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. 


மக்களின் சிக்கல்கள், அவலங்கள் மாறவில்லை, நூறு ஆண்டுக்கு முந்தைய நிலைமை மீண்டும் நம் கண் முன்னே காணப்பெறுகிறது. வேலைவாய்ப்பில், மொழி ஆதிக்கத்தில், கல்வியில், சித்தாந்தத்தில், நம் கண் முன்னே நம் உரிமைகள் பறிக்கப்பட்டு, நமது அடையாளங்கள், வரலாறுகள் திரிக்கப்பட்டு வருகிறது.


ஆனால் இது நுட்பமாக, திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது. மதம், கடவுள், உணர்வுகளைத் தூண்டி மக்களின் அடிப்படைச் சிக்கல்கள், சிதையும் வாழ்வாதாரங்கள் குறித்து கவனம் கொள்ளவிடாமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது. நமக்கான நம்பிக்கைகளான இருக்கும் ஊடகம், நீதிமன்றம், தேர்தல் ஆணையம் போன்றவை வளைக்கப்பட்டும், அச்சுறுத்தப்பட்டும், மௌனமாக்கப்படுகின்றன. சமூக ஊடகங்களைக் கையகப்படுத்தும் முயற்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.


அசுர பலத்துடன் இருக்கும் இந்துத்துவம், தனக்கான அரசியல் இருப்பை, அதிகார இருப்பை, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுவாக உறுதி செய்திருக்கிறது. எனில், தமிழ்நாட்டில் ஒரு தேர்தல் வெற்றி என்பது அவர்களால் கைக்கொள்ள முடியாத ஒன்றில்லை. ஊடகமும், ஓட்டு இயந்திரங்களும் அவர்கள் கைப்பாவையாக இருக்கும் நிலையில் அவர்கள் தொடர் பரப்புரைகள், செயல்திட்டங்கள், மாற்று அரசியல் முன்னெடுப்புகள் என்று அலட்டிக்கொள்ளத் தேவையே இல்லை.


இருப்பினும் எது அவர்களை ரஜினி, அண்ணாமலை, முருகன், கிருஷ்ணசாமி, இந்து அறநிலையத்துறை, என்று கிடைக்கின்ற எந்த ஒரு வாய்ப்பையும்  தங்களுக்கானதாக மாற்றிக்கொள்ளத் தூண்டுகிறது என்ற கேள்வி மிக முக்கியமானது. 


எத்தனை பகடிக்குள்ளானாலும், நோட்டாக்களால் வீழ்த்தப்பட்டாலும் அவர்கள் சளைப்பதே இல்லை. அவர்களின் நோக்கம், அரசியல் வெற்றி மட்டுமே இல்லை, அதனையும் தாண்டி கருத்தியலில், சமூகக்கட்டமைப்பில், மனநிலையில், பொதுப்புத்தியில்,  ஊடுருவி தன்வயப்படுத்துவதே அவர்கள் நோக்கம்.


பார்ப்பனீயமும், முதலாளித்துவமும் கைகோர்த்து வேட்டையாடும் ஒரு கொடுங்காலத்தில் இருக்கிறோம். நெருப்பாக நம் பகை நம்மைச் சுற்றிச் சூழ்ந்திருக்கிறது. 


திமுக போன்ற ஒரு இயக்கம் அதன் வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு,  முக்கியத்துவம் பெறுகிறது. சமரசமில்லாத எதிர்ப்பு, பன்மைத்தன்மை, சகோதரத்துவத்துவம்,  சமூகநீதி, மொழி உரிமை, கூட்டாட்சித் தத்துவம் என்று ஒரு மாநிலத்தின் உயிர்க்கூறுகளை தன்னகத்தே ஓரளவுக்கேனும் கொண்டிருக்கும் இயக்கமாக திமுக இருக்கிறது. பிரதிநிதித்துவ தேர்தல் அரசியல் இல்லாத நிலையில், பெரும்பான்மை வெற்றியே அடிப்படை என்ற பார்வையில் திமுகவின் இருப்பும், வெற்றியும் மிக முக்கியமாகப்படுகிறது. 


திமுகவின் தேவை தமிழ்நாட்டுக்கு எவ்வளவு முக்கியமோ, அதே போல திமுக தன்னை, தன் நிலைப்பாட்டில் உறுதிப்படுத்திக் கொள்வதும் மிக முக்கியம். 2019 பாராளுமன்றத் தேர்தல் அதனை கட்டியம் கூறி தெளிவுபடுத்தியிருக்கிறது. தமிழ்நாடு எதனை பகையாக நினைக்கிறது, எதனை சமரசமில்லாமல் எதிர்க்கிறது, எதனை அடியோடு வெறுக்கிறது, எதனை வேரூன்றத் தடுக்கிறது என்று இதனை விடத் தெளிவாக ஒரு தேர்தல் புரிய வைத்திருக்க முடியாது. 


தேர்தல் கட்சியாகவும், சமூக இயக்கமாகவும், கருத்தியல் ரீதியாகவும் திமுக தனது உயிரான சித்தாந்தங்களை உயர்த்திப்பிடிக்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டின் நிலைப்பாடு. இதில் நட்புமுரண் களைந்து, பகைமுரண் உணர்ந்து, மக்கள் இயக்கங்களோடு இணைந்து செயல்பட வேண்டும். 


திராவிடம் சமூக நீதிக்கான சிந்தனை, சொல், செயல் என்பதை இன்னுமொருமுறை வரலாற்றில் உறுதியாகப் பதிவு செய்வோம். பகை வென்று, நீதி காப்போம்.


No comments:

Post a Comment