பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னாரா? - சௌம்யா
பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னாரா?
பெரியார், இந்தக் கருத்தைச் சொன்னதற்கான காரணங்கள் வேறு.
தமிழ் மொழியில் அக்காலத்தில் இருந்த புராண, இலக்கிய நூல்களைக் கருத்தில் கொண்டே இவ்வாறு அவர் கூறினார். அறிவியல் சார்ந்த எழுத்துக்கள், மொழி பெயர்ப்புகள் அதிகம் இருக்க வேண்டுமென்று பெரியார் விரும்பினார்.
பெரும்பான்மையான நூல்கள் பார்ப்பனியத்தை பரப்புவதாகவும், அவற்றை ஆதரித்து கருத்து கூறுவதாகவும் இருந்தன. பார்ப்பனியத்தை உயர்த்திப் பிடிக்கும் நூல்களை எல்லாம் தமிழன் புனிதம் என்று கூறிக் கொண்டிருக்கிறானே என்கிற ஆற்றாமையின் வெளிப்பாடாகவும் தான் தமிழ் மொழியை அவ்வாறு சாடியிருக்கிறார்.
அது மட்டுமன்றி, உலகம் வேகமாக அறிவுத்தளத்தில் முன்னேறி வரும் போது தமிழில் அதிகம் புனிதமாகக் கருதப்பட்ட இலக்கியங்களுக்கு நேரம் செலவிடுவது மற்றும் தங்கள் உழைப்பைச் செலவு செய்வது, இல்லாத கடவுளை நோக்கி தங்கள் சிந்தனைகளைத் திருப்பி மண்டியிட்டுக் கிடப்பதையே இவ்வாறு சொல்கிறார்.
தமிழில் வெறும் வார்த்தைகளை வெட்டி ஒட்டி, தமிழைக் காட்டுமிராண்டி மொழி என பெரியார் கூறியது, தமிழ் மேல் கொண்ட காழ்ப்பின் காரணமாக என்று கூறுவது சரியன்று.
சரி இதெல்லாம் வெறும் சமாளிப்பு வார்த்தைகள், பெரியார் நிஜமாகவே தமிழை வெறுத்தார் என்று தோன்றுகிறதா?
ஒரு மொழி வளர்ச்சி பெறவும், அது காலம் காலமாய் நிலைத்து நிற்கவும், காலத்துக்கு ஏற்றார்போல் அது சிறு சிறு மாற்றங்களை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். இல்லையெனில் லத்தீன் போல, சமஸ்கிருதம் போல, வெறும் எழுத்து மொழியாகவே தேங்கி விடும். மக்கள் புழங்க வேண்டுமெனில், மாற்றங்கள் இருக்க வேண்டும்.
அதில் பேச்சு வழக்கில் நிகழும் மாற்றங்கள் மக்களால் நிகழ்ந்து கொண்டே இருக்கும். எழுத்துச் சீரமைப்புகள் முன்னெடுத்து செய்பவையாக இருக்கும். இப்படி ஒரு மாற்றத்தை பெரியார் தன்னுடைய நாட்களில் செய்தார்.
எழுத்து சீரமைப்பு தேவை என்று வலியுறுத்திய பெரியார், அதனை 1935 முதல் தம்முடைய விடுதலை ஏட்டில் செயல்படுத்தத் தொடங்கினார். 1978ல் தமிழக அரசு பெரியாரின் எழுத்து வடிவ மாற்றத்தினை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது.
தமிழை வெறுக்கும் எவராவது, அம்மொழி உயிரோடு இருக்க வேண்டும் என்பதற்காக செய்ய வேண்டிய செயலை செய்வாரா?
உலக அரங்கில் எத்தனையோ மொழிகளில் நவீன இலக்கியங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றாலும், அவை அனைத்தும் கடந்த 200 ஆண்டுகளுக்குள் எழுதப்பட்டவையே. தமிழ் மட்டுமே 2,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி, 20ம் நூற்றாண்டு வரை என தனக்கான உயர்ந்த இடத்தைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. காலம் தோறும், இம்மொழி ஏற்றுக்கொண்ட மாற்றங்கள் இதற்கு மிக முக்கிய காரணமாகும்.
தமிழின் சிறந்த புத்தகமான திருக்குறளை பெரியார் பழித்தார் என்று கூறுகின்றனர். இது உண்மையா?
தமிழில் உள்ள பிற்போக்கு எண்ணம் கொண்ட எழுத்துக்கள் காரணமாகத் தமிழை திட்டியது போல, ஆரிய கருத்துக்களை ஆதரிக்கும் கருத்துக்கள் கொண்ட காரணத்தால் திருக்குறளில் பல இடங்களில் பெரியாருக்கு கருத்து வேறுபாடு உண்டு. அதனால் தேவையற்றதை விலக்குவதே சிறந்தது என்று கூறுகிறார்.
எடுத்துக்காட்டாக, கடவுள் வாழ்த்து, பெண் அடிமைத்தனம் போன்றவற்றை ஆதரித்து எழுதப்பட்ட குறள்கள் மீது அவருக்கு ஒவ்வாமை உண்டு.
• தெய்வம் தொழாள்! கொழுநன் தொழுதெழுவாள்!
பெய்யெனப் பெய்யும் மழை!
வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்
• தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
இறைவனின் நிழலை அடைந்தாலே தவிர, மனக்கவலைகள் மாறாது.
எங்கும், யார் சொல்வதையும் பிரித்தறிந்து புரிந்து கொள்ள விரும்பும் நமக்கு, அதே பாடத்தைத் தான் பெரியார் கூறிச் சென்றார். 1949ல் அவர் திருக்குறள் மாநாடு நடத்தி இருக்கிறார். கருத்து வேறுபாடு கொண்ட அவர் ஏன் அதற்கு மாநாடு நடத்த வேண்டும்?
திருக்குறளில் சிற்சில ஆரிய கருத்துக்கள் கொண்ட குறள்கள் இருந்தாலும், நிறைய பயனுள்ள, நல்ல கருத்துக்களும் இருக்கின்றன.
ஆரியத்தின் ஆணிவேர் போன்ற கருத்து, சாதி வாழ்வியலாகும். பார்ப்பனரே தலையில் உதித்தவரென்றும், அவர்களே சிறந்தவர் என்றும், வணங்கத்தக்கவர் என்றும் பார்ப்பனியம் கூறுகிறது. ஆனால் திருக்குறள் இதற்கு தலைகீழான கருத்தைக் கூறுகிறது.
• உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.
உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர், எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவர்
இங்கு உழவரே சிறந்தவர் என்று கூறுகிறது. இங்கு சாதி பாகுபாடு எதுவுமில்லை. உணவு கிடைக்க காரணமாயிருப்பவன் உயர்ந்தவன் என்பதே கருத்து.
பார்ப்பனிய தர்மம் பிறப்பில் உயர்வு தாழ்வு சுட்டிக்கொண்டிருக்கும் போது, வள்ளுவர் பிறப்பால் அல்ல செயல்களாலேயே உயர்வு தாழ்வு வரும் என்று கூறுகிறார்.
• பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
எல்லா மக்களும் பிறப்பால் சமமே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்.
திருக்குறளிலும் ஆரியக் கொள்கைகள் கலந்துவிட்டன என்றாலும், அதை விலக்கி, நற்கருத்துக்களை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், அதை பரப்ப வேண்மென்றும் பெரியார் விரும்பினார். இதில் திராவிடக் கொள்கையாளர்கள் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டுமென்று அழைப்பு விடுத்தார்.
1949ம் ஆண்டு நடந்த திருக்குறள் மாநாட்டில் பேசிய பெரியார், திருக்குறள் மக்களைப் போய்ச் சேரவேண்டும் என்பது முக்கியம். அதோடு அதன் உண்மையான விளக்கம் சொல்லவேண்டியது மிக முக்கியம் என்ற கருத்தை முன்வைத்தார் திருக்குறளுக்குப் புதிய உரைகள் எழுதுமாறு தமிழ் அறிஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். திரு.வி.கலியாணசுந்தரனார் தலைமையில் திருக்குறள் உரைக்கான குழு ஒன்றையும் அப்போதே அமைத்தார்.
தமிழை அழிக்க விரும்புபவரா இப்படிச் செய்வார்? திரும்பத் திரும்ப எங்காவது சொன்ன ஒற்றை வரியை எடுத்துக்கொண்டு வந்து பெரியார் தமிழுக்கு எதிரி என்று சொன்னால், அது விதண்டாவாதமே அன்றி வேறில்லை.
- சௌம்யா
No comments:
Post a Comment