Tuesday 29 September 2020

பெரியார்-அண்ணா-சட்ட எரிப்பு - கெளதம்

 பெரியார்-அண்ணா-சட்ட எரிப்பு - கெளதம் 


[வடசென்னை திரைப்பட பாணியில் படிக்கவும்], ஏன்னா  இது பெரியாருக்காக அண்ணா சட்டமன்றத்தில் செய்த சம்பவம்.  
பெரியார் முன்னெடுத்த போராட்டங்களால் பல சட்டங்கள் இயற்ற பட்டுள்ளன பல சட்ட திருத்தங்கள் மேற்கொள்ள பட்டுள்ளன. இதில் மக்கள் நலன்  சார்ந்த பிரச்சனைகளுக்கு என்று இயற்றப்பட்ட சட்டங்கள் தான் அதிகம். 


பெரியாருக்கு என்றே இயற்ற பட்ட சட்டம் தான் "தேசிய கௌரவ அவமதிப்புத் தடுப்புச் சட்டம்". பெரியார் அரசியலமைப்பு சட்டத்தை எரித்து நடந்த போராட்டத்திற்கு பிறகு 11-11-57 அன்று சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.


இந்த தகவலை சொல்வதற்கு முன்னால் ஒரு சிறு  வரலாறை நினைவுப் படுத்த கடமைப்பட்டுள்ளேன் , 1949ல் அண்ணா பெரியாரை விட்டு விலகி திமுக வை தொடங்குகிறார், 1957இல் முதல் தேர்தலை சந்திக்கிறது திமுக, அந்த தேர்தலில் பெரியார் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்கிறார். காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சி அமைகிறது காஞ்சிபுரம் தொகுதியில் வெற்றிபெற்று சட்டமன்றம் செல்கிறார் அண்ணா.


சரி கதைக்கு வருவோம், சட்ட எரிப்பை எதிர்த்து சட்டம் இயற்ற விவாதம் நடைபெறுகிறது, கம்பிரமாக எழுந்து அண்ணா பேசுகிறார் “தேசியக் கொடி அவமதிக்கப்பட்டால் அது தன் நெஞ்சில் புண்ணை ஏற்படுத்தும் என்று அமைச்சர் அவர்கள் கருதுவதுபோல், பெரியாரை அடக்குவதற்காக நீங்கள் கடுமையான சட்டம் கொண்டுவந்தால் மனம் புண்படுபவர்கள், இன்று தமிழகத்தில் இலட்சக்கணக்கில் இருக்கிறார்கள் என்பதை அமைச்சரவை தயவுசெய்து தெரிந்துகொள்ள வேண்டுமென்று நான் பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்”.


அந்த சமயங்களில் பெரியார் திமுகவை "கண்ணீர் துளிகள்" என்று தான் விமர்சிப்பார், ஆனால் அண்ணாவோ விளையாட்டாக மட்டும் தான் பெரியாரை சீண்டி பார்ப்பார், எப்பொழுதும் யாருக்காகவும் பெரியாரை விட்டு கொடுத்ததில்லை. அவர்களிடையலான உறவு என்றும் தந்தை மகனுக்கிடையிலான உறவு தான்.


அந்த விவாதத்தில் சட்டம் இயற்றுவதை எதிர்த்து கடுமையாக அரசை விமர்சிக்கிறார், ஒரு இடத்தில்   “உங்களுக்கு இருக்கிற அதிகாரங்களை வைத்துக் கொண்டு - சந்தர்ப்பத்தை வைத்துக்கொண்டு - அதிகார பலத்தை வைத்துக்கொண்டு நீங்கள் சட்டத்தை நிறைவேற்றலாம்; ஆனால், அது உங்களுடைய பலவீனத்தைக் காட்டுமே தவிர, உண்மையான பலத்தைக்காட்டாது. 


மேலும் அந்த  இடத்தில அம்பேத்கர் சொன்னதையும்  மேற்கோள் காட்டுகிறார் “. இந்திய அரசியல் சட்டத்தின் கர்த்தாவாகிய காலஞ்சென்ற டாக்டர் அம்பேத்கார் அவர்கள் வெளிப்படையாகச் சொன்னார் - இந்த அரசியல் சட்டத்தில் பல்வேறு கோளாறுகள் இருக்கின்றன’ - என்று இது எரிக்கத்தக்கது’ - என்று! நீர்தானே இந்தச் சட்டத்தைச் செய்தவர்’ என்று சிலர் அவரைக் கேட்க, ‘நீங்கள் சொல்லி செய்யப்பட்டதே தவிர, ஏற்றுக்கொள்ள முடியாத, மனதிற்கு ஒவ்வாத பல கருத்துக்கள் இருக்கின்றன’ - என்று சொன்னார்கள்” 


இந்த விவாதத்தின் முடிவில் அப்போதைய காவல்துறை அமைச்சர்  "பெரியார் உங்களுடைய மாஜி தலைவர், மாஜி தோழர் என்கிற முறையிலாவது அவரை அணுகுவது சரியான கொள்கை தான் என்று நான் கருதுகிறேன்" என்று அவரை வேடிக்கையாக சொல்ல அதற்கு அண்ணா சொன்னார் "“உண்மையில் நான் அவரைப் போய் இந்தக் காரணமாக சந்திப்பதனால் இலாபம் ஏற்படும் என்றால் திரும்பவும் நாங்கள் அவரோடு ஒட்டிக்கொள்ள முடியும் என்றால் மகன், தந்தை செய்ததை மறந்து, திரும்பவும் அவரிடத்தில் சென்று ஒட்டிக்கொள்வது குற்றங்களில் ஒன்றல்ல குணங்களில் ஒன்று என்பதை அமைச்சர் அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன் -” அவர் உதாசீனப்படுத்தினாலும் நான் சென்று பேசுகிறேன்; அது வரையில் இந்தச் சட்டத்தை ஒத்திவையுங்கள். சட்டத்தை நிறைவேற்றிவிட்டு நான் போய்ப் பேசினால் அவர் என்ன சொல்லுவார் என்பது எனக்குத் தெரியும்; எனக்கு எண்பது வயதாகிவிட்டது; மூன்று வருடம் சிறையில் கிடந்தால் என்ன -முப்பது வருடம் சிறையில் கிடந்தால் என்ன? எனக்காக யாரும் ஆக்கப்படவேண்டாம்' எனத்தான் சொல்லுவார் என்பது எனக்குத் தெரியும். ஆகையால் இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ள விரும்கிறேன்-இப்போது வேண்டியது சிந்திப்பு; சந்திப்புத் தேவையே தவிரச் சட்டம் தேவை இல்லை என்று கடைசியாகவும் வலியுறுத்திக் கொண்டு முடித்துக் கொள்கிறேன்."


இப்படி முடிந்தது அந்த நிகழ்வு.


பல இடங்களில் பெரியாரின் விமர்சனங்கள்  திமுகவை  வளர்த்தெடுக்க தான் உதவியுள்ளது அதை உணர்ந்து தான் அண்ணா இறுதி வரை பயணித்தார். அதன் வெளிப்பாடு தான் "நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர், பெரியார்" என்று அண்ணா முழங்கியது .


பெரியார் மற்றும் அண்ணாவின் பிரிவு மங்காத்தா படத்தில் வரும் விநாயக்- ப்ரித்வி கூட்டணி போல தான். எதிரிகள் அனைவரும் ராஜாஜி ஆக்கப்பட்டார்கள். 


-கெளதம் 


No comments:

Post a Comment