Tuesday 29 September 2020

சிந்துவெளியும் தமிழர் நெறியும்: ஒரு நாகரிகத்தின் தடம் - திலீபன் பகுத்தறிவு

 சிந்துவெளியும் தமிழர் நெறியும்: ஒரு நாகரிகத்தின் தடம் - திலீபன் பகுத்தறிவு


லக நாகரிகங்களில் இன்றும் தனித்த பெருமை கொண்டதாக இருப்பது சிந்துவெளி நாகரிகம். சர். ஜான் ஹுபர்ட் மார்ஷலால் அறிவிக்கப்பெற்ற அந்நாகரிகத்தின் கூறுகள் கிடைத்த நாள் முதற்கொண்டு திராவிட கருதுகோளும் தலை கொண்டுவிட்டது. நெடுங்காலமாக ஆய்வுலகில் தனது இருப்பை நிலை நிறுத்தி, தகுந்த அறிவியல் சான்றுகளால் தன்வலி காட்டி நிற்கும் இஃதே அப்பண்பாட்டின் அடித்தளத்தை அமைக்கிறது. ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்போலா போன்ற நம் கால அறிஞர்களும் சிந்து பண்பாட்டின் திராவிட அடித்தளத்தின் போக்குகளை தமது பல ஆய்வுகளின் மூலமாக வெளிக்கொணர்ந்துள்ளனர். 


இந்திய துணைக்கண்டத்தின் முதல்குடி, மூத்தக்குடியாக சிந்துவெளி மக்கள் இல்லாமல் கூட இருக்கலாம்! எதிலும், முதல் என்பது மட்டுமே பெருமை இல்லை. சிந்துவெளி நாகரிகத்தின் பெருமை அதன் தனித்த பண்பாட்டிலும் சமூக அமைப்பிலும் நாகரிக உச்சத்திலும் தான் பிணைந்திருக்கிறது. அந்தப் பண்பாட்டு எச்சங்களின் தொடர்ச்சியை தமிழர் வாழ்வியல் தாங்கி நிற்பது, ஒரு நாகரிகத் தொடர்ச்சியின் தடம் காண உதவுகிறது.


பன்மியமெனும் வேர்:

அரப்பா நாகரிகமானது தனது பன்மிய சாரத்தாலேயே முதிர்ந்த நாகரிகமாக கருதப்படுகிறது. பன்மியம் நிலைகொள்ள ஒரு சமூகத்தில் பாகுபாடற்ற பரந்த மனப்பான்மை அவசியம். தீண்டாமை அச்சாரமாய் உள்ள ஒரு பண்பாட்டை பன்மியம் தீண்டுவதுமில்லை. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று சங்க இலக்கியம் சொல்கிற நெறி ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும்’ பண்பாட்டின் அடையாளம். ஒருசார் வயிற்றுக்கு மட்டும் சோறிடச்சொல்வது அச்சமூகத்தில் ஏற்கத்தக்கதும் இல்லை. 


கைபர், போலன் கணவாயிலிருந்து குஜராத் வரை நில வழி, கடல் வழி என சிந்துவெளியின் வணிகம் பரந்திருந்தது. லபிஸ் லசூலி உட்பட பல வகை கற்களும் கைவினை மற்றும் விளை பொருட்களும் கிரேக்கம், சுமேரியம், எகிப்து என பல மேலை தேசங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதை ஒத்த வணிகச் சிறப்பை பட்டினப்பாலையும் பதிவு செய்கிறது. பூம்புகார் என்ற துறைமுக நகரின் காட்சியை விவரிக்கும் போது, பல மொழி பேசும் பல தேசத்து மாந்தர்கள் வணிகம் செய்து ஒன்றுகூடி மகிழ்ந்து இருப்பதாக கூறப்படுகிறது. 


ìமொழி பல பெருகிய பழி தீர் தேஎத்துப் 

புலம் பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும், 

முட்டாச் சிறப்பின் பட்டினம்.î (பட்டினப்பாலை 216-218)


ஒற்றை அடையாளம் என்பதற்கு நேர் எதிரான மரபு இந்த பன்முகத்தன்மையை போற்றுவது. அதற்கு நெடும் நாகரிக தொடர்ச்சி இன்றியமையாதது. 


சமன் செய்யும் சமத்துவம்:

சிந்துவெளி நகரங்களின் வடிவமைப்பு ஒரு முறை கொண்டது. மேல் – மேற்கும், கீழ் – கிழக்கும் என இரு கூறுகளாக அமையப்பெற்றது. மேற்கு பகுதி சற்று மேடாக இருக்கும். அரண் கொண்டதாகவும் இருக்கும். பொதுவாக, அந்தப் பகுதியே நிர்வாக மையமாக இருந்ததாக கருதப்படுகிறது. இருப்பினும், மேல் – கீழ் என்றவுடன் உயர்வு - தாழ்வு என்ற இன்றைய கால சாதி பாகுபாடுகள் மனதில் எழுவது எதார்த்தம். 


ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியன் என்ற பாண்டிய மன்னன் எழுதிய புறப்பாட்டின் துணை கொண்டு, மேல் – கீழ் என்பதாக மக்களிடையே இருக்கக்கூடிய தகுதிகள் மாற்றத்திற்குட்பட்டது (பகுதிகளாக இருந்த போதும்) என்று அறியலாம்.


ìவேற்றுமை தெரிந்த நாற்பால்* உள்ளும்,

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,

மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே.” (புறநானூறு 183)

*— ìதுடியன், பாணன், பறையன், கடம்பன் என்று இந்நான்கு அல்லது குடியும் இல்லைî, என்று புறநானூறு பாடல் (335) விளக்குகிறது.


சங்க காலத்தில் தமிழர்கள் பிறப்பால் பாகுபாடு காணாத ஒரு பண்பட்ட வாழ்வு வாழ்ந்துள்ளனர். வேத மரபின் கோட்பாடுகள் அறிமுகமாகியிருந்தாலும் (இங்கும் அங்கும் உள்ள குறிப்புகள் வாயிலாக அறிவது) அதனிருந்து விலகி ஒரு சீர்மரபை பழந்தமிழர் பேணியுள்ளனர். அது சங்க இலக்கியம் முழுவதும் இழையோடுகிறது, திருக்குறளில் வெளிப்படையாகவே பயணிக்கிறது.


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்:

ìபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.î (திருக்குறள் 972)

அனைத்து உயிர்களுக்கும் பிறப்பு ஒன்றே என்ற போதிலும் செய்யும் தொழிலை அடிப்படையாக கொண்டு சிறப்பு என பிரிப்பது சிறப்பிற்கு ஒவ்வாதது என்கிறார் திருவள்ளுவர். 

ìமேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்

கீழல்லார் கீழல் லவர்.î (திருக்குறள் 973) 

எனும் குறள் கூட “பெருமை” என்ற அதிகாரத்தில் தான் வருகிறது. தமிழ் நெறியில் ‘பெருமை’ என்பது ‘பெருமிதம் இன்மை.’ 


கல்வியும் சிறப்பும்:

மேல் சொன்ன ‘அவன்கண் படுமே’ என்ற சொல்லை மிக எளிதாக கடந்துவிட முடியவில்லை. அது ஒரு நிலைமாற்றப் பரவலை குறிக்கிறது. 

ìஇதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்.î (திருக்குறள் 517)

என்பதில் அது தெளிவுபெருகிறது. 


‘அனித்தாக்களும் இங்கே அதிசயங்கள் ஆகலாம்’ என்ற சீர்வாய்ப்பை அது தருவது மட்டுமின்றி, ‘அறிஞர்கள் மீதும் பொறுப்பேற்றுகிறது.’ தரப்படுத்தப்பட்ட சமத்துவமின்மை (Graded Inequality) அச்சமூக வெளியில் சாத்தியமற்றதாக ஆகிறது. 


மொழி ஒரு தொடர்பு சாதனம் மட்டுமன்று, அது பண்பாட்டின் தொடர்ச்சியை தாங்கி நிற்கும் வாழ்வியல். இன்னார்தான் புலவர் என்ற ஏகபோகம் ஏதும் இல்லாமல் பல தரப்பினரும் (பெண்கள் உட்பட) கல்வி அறிவோடு இருந்துள்ளனர் என்பதற்கு சங்க இலக்கியமே அகச் சிறந்த சான்றாகும். சிந்தின் பானைகளும், கீழடி பானைகளும் கொண்டுள்ள கீறல்கள் சமூகத்தில் பரவியிருந்த கல்வி அறிவை காட்டும் தரச் சான்றாக ஆய்வாளர்களால் நம்பப்படுகிறது. பரவலான மொழியறிவு என்பது சமூகநீதியின் வெளிப்பாடு. ‘கற்க கசடற’ என்பதே தமிழ்த் தொல்குடியின் புரிதல். புலவர்கள் கூடிய சங்கங்கள் பகுத்தாய்ந்து அறிவதுதான் கல்வி என்பதற்கு ஆதாரமாக இருந்திருக்கிறது. 


நீளும் தடம்:

சிந்துவெளி ஆய்வாளரான ரெ. பாலகிருஷ்ணன் அவர்கள், “சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றேî என்ற கருதுகோளை முன்வைத்து தனது முப்பது ஆண்டுகால ஆய்வை ஒரு புத்தகமாக (Journey of a Civilization – Indus to Vaigai.) வெளியிட்டுள்ளார். சங்க இலக்கியத்தில் வரும் நிலவியல் சிந்துவெளி இடத்தோடு பொருந்துவதையும், திராவிட குஜராத், திராவிட மகாராஷ்டிரா என ஒரு நெடிய கருப்பு - சிவப்பு பானைத் தடத்தையும் அதன்வாயிலாக நிறுவுகிறார்.


சிந்துவெளி வரி வடிவமும், முத்திரையும் இன்றும் படித்து முடிக்கப்படாதவை. இருந்தபோதும், நவீன மரபணு ஆராய்ச்சிகள் அதை திராவிட நாகரிகம் என உறுதி செய்கிறது. மேலும், இடப்பெயர் ஒப்பாய்வுகளும், கொத்துக் கொத்தாய் சிந்துவெளியில் கிடைக்கும் தமிழ் பெயர்களும், கீழடி போன்ற தென்கோடி அகழ்வாய்வில் கிடைக்கும் தமிழ் பிராமி (தமிழி) மற்றும் சிந்துவெளி ஒத்த கீறல்கள் உள்ள பானை ஓடுகளும் என பல்வேறு வகையான சான்றுகள் தமிழையும் சிந்துவெளியையும் பிரிப்பதற்கு இடமின்றி பிணைக்கிறது.


இயற்கை வழிபாடு, தாய்த்தெய்வ வழிபாடு, நடுகற்கள் போன்ற நம்பிக்கைகளும், ஏறுதழுவுதல், இருபகடை உருட்டல் போன்ற விளையாட்டுகளும், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களும் என வேறு எந்த பண்பாட்டையும் விட தமிழும் சிந்தும் சேர்ந்தே உள்ளது.


வந்தாரை வாழவைத்தது:

எல்லாவற்றிற்கும் மேலாக, சிந்துவெளியில் கிடைக்காத ஒன்று ஆயுதக்கிடங்கு. பன்மியத்தை விரும்பி ‘வந்தாரை வாழவைக்கும்’ ஒரு சமூகத்திற்கு அது தேவையற்றதாகவும் இருந்திருக்கலாம். ஆயுதங்கள் சில கிடைத்திருந்தாலும், அரண் போன்ற பாதுகாப்புக் காரணிகளை கைக்கொண்டிருந்தாலும் சிந்துவெளியில் கிடங்குகளும் ஆயுதக்குவியல்களும் கிடைக்காதது குறிப்பிடத்தக்கது. அதற்கு காரணமாக எல்லை விரிவாக்கம், பிறன் நாட்டைச் சுரண்டல் போன்ற எண்ணங்கள் அச்சமூகத்தில் இல்லாதிருந்ததாகத்தான் கொள்ளவேண்டியுள்ளது. தமிழிழுள்ள கனகன், விசயன் கதைகளும் அவ்வட மன்னர்களை தமிழ் மன்னன் சிறைப்படுத்தியதை சொல்கிறதேயன்றி நாடுபிடித்த கதைகளாக அவை இல்லை. வெற்றி கொண்ட அந்த நிலப்பரப்பை தானோ தன் சந்ததியினரோ ஆண்டதாகவும் கதைகள் இல்லை. தன்மான உணர்ச்சிக்கும், தான் என்ற அகந்தைக்கும் உள்ள வேறுபாட்டையும், எல்லா உயிர்களையும் சமம் என போற்றும் ஒரு வாழ்வியல் நெறியையும் இது புரிந்துகொள்ள உதவுகிறது. புரட்டும், பாகுபாடும் தமிழர் வாழ்வு கண்ட அறமல்ல. தமிழ் அறம் என்பது சமத்துவம். 


பாவேந்தர் பாரதிதாசன் தமிழுணர்ந்த ஒரு வரலாற்று உண்மையை இவ்வாறு கூறுகிறார்,

ìதமிழனுக் குலகம் நடுங்கியதுண்டு - அங்குத்

தன்னாட்சி நிறுவிட எண்ணியதுண்டா? 

தமதே என்று பிறர் பொருள் கொண்டு 

தாம் வாழ எண்ணினோர் எங்குளார் பண்டு!î

(புலிக்கு நாய் எந்த மூலை!)


மேலுள்ள வரிகள் வெறும் வார்த்தை இல்லை. அது ஒரு நெடிய பண்பாட்டின், நாகரிகத்தின் முதிர்ச்சி. ‘வந்தாரை வாழவைக்கும் தமிழகம்’ என்று இன்றுவரை முதுமொழி ஒன்று நிலவுகிறது. ‘பெருநிலத்தார் எல்லோரும் ஒருதாயின் மக்கள்’ என்ற பன்மியமே சிந்துவெளியும் தமிழ்நெறியும் கண்ட உயர்வாகும். சமத்துவமும் சகோதரத்துவமும் அதன் விழுதுகள். அந்தப் பழம்பெரும் பன்முகத்தன்மைதான் இன்றும் இந்திய நிலத்தில் நீக்கமற நிறைந்துள்ளது என்றால் அது மிகை இல்லை. வருங்கால தொல்லியல் ஆய்வுகளும் அதன் முடிவுகளும் நமது புரிதலை மேலும் செப்பனிடலாம்.

No comments:

Post a Comment